December 17, 2006

*மாமனிதர் சிரித்திரன் சுந்தர் நினைவுகள்

தமிழ் மண நட்சத்திர வாரத்தில் எனது கடைசிப் பதிவு. எனது அபிமான சிரித்திரன் சஞ்சிகை ஆசிரியர் "மாமனிதர்" சி. சிவஞானசுந்தரம் அவர்களின் நினைவாக அவரைப்பற்றிய சில வரிகளும் நீங்களும் சிரித்து மகிழ அவரது ஆக்கங்களிலிருந்து சிலவற்றையும் இங்கு பதிவாக்க முனைந்துள்ளேன்.
'செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1964ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் அவர்கள். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். அன்றைய தினகரனில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது. அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் (சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான்) அவர் தனது சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

முதன்முதலில் கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 1964 இல் சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். அச்சடித்த சஞ்சிகைகளை தனியே வீதி வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவாராம். "குமுதம், கல்கண்டு, விகடன் எல்லாம் வெளிவருகுது. உன்ரை சஞ்சிகையை யார் வாசிக்கப் போறாங்கள்" என்று தன்னைக் கேட்டவர்களும் உள்ளனர் என்று சுந்தர் சொல்லிச் சிரிப்பாராம். 7 வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார்.

சிரித்திரனை சமூகப் பணிகளில் ஈடுபடவைத்து பயன்படுத்தியது மில்க்வைற் நிறுவனம். மில்க்வைற் க கனகராசா அவர்கள் இவ்வாறு நினைவு கூறுகிறார்: "சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா." க. கனகராசா சுந்தருக்குக் கூறுவாராம், "நான் இறந்தால் மக்கள் மட்டும் தான் அழுவார்கள். மறந்து விடுவார்கள். நீங்கள் இறந்தால் மரங்கள் கூட அழும். அவை நன்றி மறவா".

சிரித்திரன் சஞ்சிகை மூலம் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் இன்று உலகில் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் இப்படிப் பல. அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல் ஆகியன புகழ் பெற்றவை.

இலங்கையில் புதுக்கவிதையை முன்தள்ளி ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு. கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து பிரசுரிப்பார். திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றார்கள்.

"சிரித்திரன் சுந்தரின் மனைவியும் ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது" என்று நினைவு கூருகிறார் திக்குவல்லை கமால்.

அதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார்.

சிரித்திரனின் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றில் சமய உண்மை ஒன்று இங்கு சிரிப்பாக வெளிப்பட்டது. ஒரு கடா ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: "எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே" என்கின்றது.

பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்."

சவாரித் தம்பர், மெயில் வாகனத்தார் எல்லாம் நெஞ்சை விட்டு நீங்காத அற்புதமான பாத்திரங்கள். சவாரித்தம்பரும் அவரது சகபாடியான "சின்னக்குட்டியும்" உறவினர் ஒருவருக்குப் பிள்ளை பிறந்த செய்தி கேடு அங்கு செல்கின்றனர். பிறந்த பிள்ளை பெண்ணா அண்ணா என்று வினவுகின்றனர். பிள்ளை பெற்றவளோ, "ஆயா.. எனக்குப் பிறந்தது "போய் பேபியா, கேர்ள் பேபியா" எனக் கேட்கின்றாள்.

பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலத்தில் வந்த சித்திரம் இன்றும் பொருந்தக்கூடியது:)

ஒரு மத்தியதர வர்க்கத்தின் பொருளியலை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி ஒரு சித்திரம்: ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. "அவள் காதில் என்ன சொன்னாள்? "உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்".

வெளிநாட்டு மோகம் - தாய் தந்தை சோகம். இதனைச் சுட்டிக்காட்டி சுந்தரின் சுவையான பகிடி: "என் மூத்தவன் கனடாவில், நடுவிலான் லண்டனில், இளையவன் துபாயில்.. நான் பாயில்" என்று சவாரித்தம்பர் கூறுகிறார்.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனங்கல்லு என்பதை மெயில்வாகனத்தார் வடமராட்சிப் பேச்சு வழக்கில் கூறுகிறார். "தாய் மூன்று மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க".

மக்களை ஏமாற்றி வாய்ச்சவால் வழங்கும் அரசியல்வாதிக்கு அவன் காதருகே ஒலிபெருக்கியை உரத்துப் பேசவைத்து எமலோகத்தண்டனை வழங்கினார் ஒரு கார்ட்டூனில்.

ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம் அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை உண்டு பண்ணியது. முதலில் மித்திரனிலும், பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் 20ஆம் நூற்றாண்டு வாலிப உலகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்."

சிரித்திரன் சுந்தரின் மகுடி பதில்கள் நறுக்கு, வித்துவத்தனம், நகைச்சுவையினூடு கலந்திருக்கும் கருத்தாழம், புதுக் கவிதை போல் முகத்திலறையும் வேகம் நிறைந்திருக்கும். மகுடி பதில்கள் என்ற என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டவர் சுந்தர். இந்நூல் வெளி வந்த போது சிரித்திரனில் ஒரு போட்டி அறிவித்திருந்தார். நூலில் இடம்பெற்ற கேள்வி-பதில்களில் சிறந்த பத்தினைத் தெரிவு செய்து அனுப்பும்படி. இப்போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தது என்பதை இன்று கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பரிசு பத்து ரூபாவை மறக்காமல் அடுத்த வாரமே அம்மாமனிதர் தனது கையொப்பத்தில் காசோலையாக எனக்கு அனுப்பியிருந்தார். இந்நிகழ்வு என்னால் மறக்க முடியாதது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் சிரித்திரன் சுந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிரித்திரனில் வெளிவந்த காலத்தால் அழியாத கேலிச்சித்திரங்களுக்கு யார் நூலுருக்கொடுக்க யாராவது முன்வரவேண்டும். சுந்தரைப் பற்றி மேலதிக தகவல்கள் (பிறந்த தேதி, மறைந்த தேதி உட்பட) தெரிந்தவர்கள் அவற்றைத் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நட்சத்திர வாரத்தில் இது எனது கடைசிப் பதிவு. இந்நேரத்தில் என்னையும் மதித்து என்னை தமிழ்மண நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஒரு வாரகாலமும் எனது பதிவுகளைப் படித்தவர்களுக்கும், படித்ததோடு பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக தவறாமல் தினமும் வந்து குறும்பா மூலம் பின்னூட்டமிட்டு ஊக்குவித்த சுப்பையா அவர்களுக்கு எனது விசேட நன்றிகள். இறுதியாக இந்த நட்சத்திர வாரத்திலே மறைந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

December 16, 2006

*கூலிக்கு மாரடிப்போர்

அழகு சுப்பிரமணியம் - ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஈழத்தவர். பரிஸ்டர் பட்டம் பெற்றவர். நீண்டகாலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் "இன்டியன் றைற்றிங்" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். தனது கடைசிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்தவர். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். 'The Mathematician' என்ற சிறுகதை 'உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள்' என்ற ஆங்கிலத் தொகுப்பில் (ஹைடல்பேர்க் நகரில் வெளியானது) இடம்பெற்றுள்ளது. இவரது "மிஸ்டர் மூன்" நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியானது.

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் பால்ரர் அலன் அழகு சுப்பிரமணியத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: "இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆங்கில வாழ்க்கைப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையில் இவர் கதைகளை எழுதியுள்ளார்."

இலக்கிய விமரிசகர் கா. சிவத்தம்பி இவ்வாறு கூறுகிறார்: "1920 - 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்."

1915 மார்ச் 15 யாழ்ப்பாணத்தில் பிறந்த அழகு சுப்பிரமணியம் 1973 பெப்ரவரி 15 இல் உடுப்பிட்டியில் காலமானார்.

இவரின் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து "நீதிபதியின் மகன்" என்ற பெயரில் வெளியிட்டவர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தன் அவர்கள். அந்நூலில் இருந்து ஒரு சிறுகதையை எனது நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கூலிக்கு மாரடிப்போர்

அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான்.

பறையொலியும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.

"நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்" என்று தனக்குத்தானே பலமாய்ச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

மணல் ஒழுங்கைகளூடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப்பாதைகளூடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு நடந்தேன்.

"ஓ, அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்படாதை."

சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம். சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்து கொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக் கொண்டிருந்தனர்.

"டேய்! நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே," மாமனார் கோபத்தோடு கத்தினார்.

"இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே, எல்லோரும் அங்கை நடவுங்கோடா."

"எங்களுக்குத் தெரியாது ஐயா! 'நாம்' கோபிக்கப்படாது, நாங்கள் இப்பவே வாறம்" வலைகளைப் போட்டுவிட்டுப் பௌவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.

அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன.

"அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்" என்றார் மாமனார்.

ஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.

"என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்?" மாமனார் பொரிந்து தள்ளினார்.

"நயினார் கோபிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத்தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்" அவர்களில் ஒருத்தி சொன்னாள்.

"மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்?"

"இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர் தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேற ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு."

"சே! கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்?"

"உதிலை கிட்டத்தான் நயினார்"

"எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு"

அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.

"நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவையின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?"

"மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாதேயின்ர செத்தவீட்டுக்கு ரெண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும்? அவ ஆரெண்டு தெரியுமெல்லே" மாமனார் சீறி விழுந்தார்.

"நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்" அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். "சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ."

மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஓடிச் சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவரக்ளுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.

"மடப்பயலே! இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், போலீஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டி அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்?"

அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். "நயினாற்ரை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்தவீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்."

"கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேணுமெண்டு விரும்பிறியோடீ. அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்" கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார்.

"நயினார்! கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்"

அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.

பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம். அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக் கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு 'ஓ...'வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.

பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.

"வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் வளத்தினைச் சொல்லனணை
கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் கதையைச் சொல்லனணை
"

அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர் குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார். மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார். அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.

அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.

அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக 'அலுவல்' பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார்.

நன்றாக வியர்த்துக் களைத்து, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்து வைத்தபோது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப்பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குபுறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருக்ஷையின் பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.

மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை

"ஏழையள் எம்மை விட்டு எங்கை போனாய் ஏந்திழையே
ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய்
எங்கதாயே
"

அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச் சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துத் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் பேல் தலையைப் புதைத்து அழுதார்.

"எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி.." தம்பு உணர்ச்சி வசப்பட்டு ஓலமிட்டார்.

மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.

"அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ?
அசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்
ஓ........
கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா
கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா
ஓ........

வாயைத் திறவன்னம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
உன் வளத்தினைச் சொல்லனம்மா
கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
உன் கதையளைச் சொல்லனம்மா."

December 15, 2006

*இசைக்கலைஞர்களின் அங்க சேஷ்டைகள்

கருநாடக இசைக்கலைஞர்கள் சிலர் பாடும்போது அங்க சேஷ்டைகள் செயவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளில் சில ரசிக்கக் கூடியதாக இருக்கும். சில அளவுக்கதிகமாகப் போய் விடும். அனேகமாக சகிக்கவே முடியாதபடி இருக்கும். பெரிய வைத்தியநாத ஐயர் என்னும் பிரபல கருநாடகப் பாடகர் ஒருவர் சிவகெங்கைச் சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தவர். இவரைப் பற்றி உ. வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் சுவையான தகவல்களைத் தருகிறார். தமக்கே உரிய நடையில் நகைச்சுவையும் கலந்து எழுதியுள்ளார்.



பெரிய வைத்தியநாதையரின் சங்கீதத் திறமை மிக்க வன்மையானது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும்போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்குமாம்.

பாடும்போது பல வகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார். ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேட்டைகளும் அதிகரிக்கும்.

நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடுப்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்து விடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகள் உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உற்சாகத்தின் அறிகுறிகள்.

வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார்.

இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம்பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உற்சாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர்வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார்.

இவருக்குப் பொடி போடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு போடுவார். பின்பு கையை உதறுவார். அப்பொடி அருகிலுளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.

இப்படியாக ஒரு நாள் எட்டயபுரம் ஜமீனில் ஒரு பெரிய விருந்து நிகழ்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.

அங்கே வந்திருந்த ஜில்லா சர்ஜன் ஒரு வெள்ளைக்காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன. சர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.

வைத்தியநாதருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவதுபோல் இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக் கொண்டார்கள்; இவற்றையெல்லாம் சர்ஜன் பார்த்தார்; "சரி, சரி, இவர் பாடவில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட்டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீதமென்று எண்ணி இந்த மனுஷனைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது" என்று எண்ணினார்.

வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பித் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும் போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல சர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை. தம் கைக்கடியாரத்தை எடுத்தார். கலெக்டரை நோக்கினார். "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்போது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாகவில்லை.

அதிகாரி மெல்ல வித்துவான் அருகில் சென்று பக்குவமாக, இன்னும் சில வித்துவான்கள் பாடவேண்டும். அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். உயர்ந்த சன்மானத்தையும் அளித்தார். ஐயரும் ஒருவாறு தமது பாட்டை முடித்துக் கொண்டு மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

பெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்!

இவ்வாறு குறிப்பிடுகிறார் உ. வே. சாமிநாதையர் அவர்கள்.

உ. வே. சாமிநாதையரும் ஈழத்து சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்கள். இவர்களது உறவு குறித்தும் பின்னர் எழுந்த விரிசல்கள் பற்றியும் முன்னர் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். இது குறித்து மேலதிக சில தகவல்களுடன் முழுமையான பதிவொன்று இடும் எண்ணம் உண்டு.


December 14, 2006

*இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி

அன்று சிலோன் அன்றழைக்கப்பட்ட இலங்கையில் அன்றைய ரயில்வே இலங்கை மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருந்தது. இலங்கை முழுவதையும் ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலை தோட்டங்களுக்கும் மற்றைய ஏற்றுமதிப் பொருட்கள் விளையும் முக்கிய இடங்களுக்கும் கொழும்பை மையமாக வைத்துப் புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில்வே பற்றி சில சுவாரசியமான செய்திகளைப் பகிரலாம் என்றிருக்கிறேன்.


இங்கிலாந்தில் நீராவிப் புகையிரதம் கண்டுபிடிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதலாவது நீராவிப் புகையிரதம் 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து தனது முதலாவது சேவையை ஆரம்பித்தது. இது அன்று அம்பேபுச வரையில் சென்றது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன. இவை அனைத்தும் அகலப் பாதையில் (அதாவது 5 அடி 6 அங்) அமைந்தவை.

முதலாவது குறுகிய (2 அடி 6 அங்) ரயில் பாதை 1900 ஆம் ஆண்டில் மருதானையிலிருந்து அவிசாவளை வரை அமைக்கப்பட்டது. இது அப்போது மட்டுமல்ல இன்றும் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே கருதப்படுகிறது. இப்புகையிரதம் எப்படி இலங்கைக்கு அறிமுகமானது?

இந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் கவர்னராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.

மிக மெதுவாகவே இப்புகையிரதம் செல்லும். இந்தப் புகையிரதப் பாதை பின்னர் 1912 இல் இரத்தினபுரி வரையில் விஸ்தரிக்கப்பட்டது. (நான் தினமும் 153 இலக்க பஸ்சில் பாடசாலைக்குப் போகும்போது இந்தப் புகைவண்டியை தெமட்டகொட புகையிரதக் கடவையில் அநேகமாக சந்திப்பது வழக்கம். ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் காத்து நிற்போம். அவ்வளவுக்கு மெதுவாகச் செல்லும்).

(யாழ்ப்பாணத்தில் ரயில் பாதை அமைக்கும் வேலைகள் 1905 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது)

அன்றைய புகையிரதங்களில் உணவகங்கள் அற்புதமானவை. ஒரு முழுப் பெட்டியே உணவகமாக மாற்றப்பட்டிருக்கும். சமையலறை, இருந்து உண்ண மேசைகள், சீருடை அணிந்த சேவகர்கள்.( 30, 40 களில் Sir Donatus Victoria's Catering Service என்ற நிறுவனமே இந்த உணவகங்களைப் பராமரித்து வந்தது). யாழ்ப்பாண இரவு மெயில் வண்டியில் இந்த உணவகம் மிகவும் பிரசித்தம். மதுபான வகைகள், சிற்றுண்டி வகைகள், தேநீர் அனைத்தும் கிடைக்கும்.


அக்காலத்தில் புகையிரத ஓட்டிகள் பலர் பிரித்தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டனர். நீராவி இயந்திரத்தில் இருந்து ஓட்டுனர் வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் வழமை. (இன்று Thomas The Tank Engine இல் இக்காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்). இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அப்போது எரிவிறகுகளே புகையிரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இலங்கை சரித்திரத்தில் அக்காலத்தில் நடந்த ஒரு பயங்கர ரெயில் விபத்து 1928 இல் மார்ச் 12 இல் நடந்தது. களுத்துறையில் இருந்து 2 மைல் தூரத்தில் கட்டுக்குருந்தை என்ற இடத்தில்.

மாத்தறையிலிருந்து புறப்பட்ட கடுகதி (வழக்கம் போலவே நிறைந்திருந்தது). இதன் ஓட்டுனர் David Henry Cowe. இது இரவு மலைநாட்டு தபால் புகையிரதத்தைச் சந்திக்க வேண்டும். சிவனொளிபாத மலையில் அப்போது விசேடமான நாட்கள். பலர் மூட்டை முடிச்சுகளுடன் யாத்திரை கிளம்பியிருந்தனர்.

எதிரே வந்து கொண்டிருந்தது மருதானையிலிருந்து அளுத்கமைக்குப் புறப்பட்ட புகையிரதம். கொழும்பில் வேலை முடித்து பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன் ஓட்டுனர் Percy Bennet.

மாத்தறை கடுகதி சில நிமிடங்கள் தாமதமாகியதால், அளுத்கமை புகையிரதத்தை லூப் லைனுக்கு மாற்ற முடிவு செய்தனர். புகையிரத நிலையத்தில் Tablet கொடுப்பதில் ஏற்பட்ட சில சிக்கலில் ஓட்டுனர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு புகையிரதத்தை எடுத்துவிட்டார்.

சில நிமிட நேரங்களில் தவறு நடந்து விட்டது புகையிரத நிலைய ஊழியர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டு புகையிரதங்களும் நேருக்கு நேரே மோதிக் கொண்டன. மோதல் சத்தம் மூன்று மைலுக்கப்பாலும் கேட்டதாம். கடுகதியின் எஞ்சின் முற்றாக சேதமடைந்தது. இரண்டு எஞ்சின் ஓட்டுனர்கள் உட்பட 28 பேர் இறந்தனர். 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒரு கொள்ளைச் சம்பவம் 1945 ஜுலை 27 இல் நடந்தது. கொழும்பிலிருந்து தலைமன்னாருக்குப் புறப்பட்ட இரவு தபால் வண்டியில் நடந்த கொள்ளைச் சம்பவம்.
எஸ். செல்லத்துரை என்பவர் கார்டாக (under guard) இருந்தார். அவர் இருந்த பெட்டி எஞ்சினுக்குக் கிட்டவாக இருந்தது. இப்பெட்டியில் நிறைய தபால் பொதிகள் இருந்தன.

நடுநிசி நேரம் கல்கமுவைக்கு சமீபமாக இப்பெட்டிக்குள் புகுந்தனர் கொள்ளையர்கள். பெட்டி முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும், இரத்தக் கறைகளும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இது நடந்தது ஓட்டுனருக்கோ பயணிகளுக்கோ தெரியவில்லை.
புகையிரதம் அநுராதபுரம் வந்த பிறகே விபரீதம் நிகழ்ந்ததைக் கண்டுபிடித்தனர். செல்லத்துரையைக் காணவில்லை. பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு மெயிலின் ஓட்டுனருக்கு, மாகோ வரை மெதுவாக செலுத்தும் படியும் இரண்டு பக்கமும் கவனமாகப் பார்க்கும்படியும். அப்படியே செல்லத்துரையின் சடலம் கல்கமுவையில் பாதைக்குப் பக்கமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அப்பாவி ஓட்டுனரும் அச்சடலத்தை எடுத்து மாகோவுக்குக் கொண்டு சென்றுவிட்டார். (இதனால் கையடையாளங்கள் மற்றும் தடயங்கள் அழிந்துபோனதாக பொலீசார் தெரிவித்தனர்).

ஆச்சரியம் என்னவென்றால் பெரிதாக கொள்ளை எதுவும் போனதாகத் தெரியவில்லை. நான்கு தபால் பொதிகள் ம்ட்டும் திறந்து பார்க்கப்பட்டிருந்தது.அவை யாவும் போலீஸ் அதிகாரிகளின் தபால் பொதிகள். இச்சம்பவம் ஏன் நடைபெற்றது என்பது கடைசிவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்படி சில சம்பவங்களைத் தவிர அன்றைய ரயில் பிரயாணம் அநேகமாக சொகுசானது மட்டுமல்ல மிகவும் பாதுகாப்பானதுமாக இருந்தது. இப்படியாக ஒரு காலத்தில் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து கொண்டிருந்த ரயில்வேயின் இன்றைய நிலை சொல்லத் தேவையில்லை.

(தகவல்கள் பெற்றுக் கொண்டது The Ceylon We Knew வி. வாமதேவன் எழுதிய நூலில் இருந்து)

சிரித்திரன் சுந்தரின் ஒரு பகிடி இந்த நேரம் ஞாபகம் வருகிறது:

கே: தூங்கிக்கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பியது யார்?

மகுடி: அநுராதபுரத்தில் ரயிலில் ஏறிய சிங்களப் பிரயாணி.


December 13, 2006

*சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..
இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே
பூமணக்கப் போற பெண்ணே
உன்னழகைக் கண்டவுடன்
கோமணங்கள் துள்ளுதடி
இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

பின்னர் சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை வானொலியில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது போடுவாரகள்.
தமிழில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்குப் புதிய கலைஞர்கள் தோன்றாமையும் தொலைக்காட்சியின் அறிமுகமும் தான் என்கிறார் நித்தி.

அவர் சொன்ன ஒரு சம்பவம்:

"மலேசியாவில் 45வது சுதந்திர தின விழாக் காட்சிகளை மலேசியாவில்
நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம் தமிழ் மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றாதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். எங்கோ பிறந்த பாடல், எங்கெங்கோ சென்று மக்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறது".

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் மதுவிலக்கு மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பான பாடல் நித்தியின் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே".

ரஜனியின் அவசர அடி ரங்கா, எஸ்பியின் சிவரஞ்சனி, விஜயகாந்தின் ரமணா படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இதற்காக நித்திக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை).

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

மகிழ்ச்சியான ஒரு விடயம்: என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.


சின்னமாமி பாடல் வரிகளை வாசித்து விட்டு பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழலும் பெடியெளெல்லாம்
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா
என்மகளை நினைத்து விட்டாய்
இடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே

ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே
ஏனணை மாமி அவளெனக்கு
தெவிட்டாதவள் எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை - சின்ன மாமியே



மக்கள் மயப்பட்டவை நித்தியின் பாடல்கள். எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கப்போகின்றன.

December 12, 2006

*இலங்கையில் தென்னாபிரிக்க யுத்தக்கைதிகள்

இலங்கையில் தென்னாபிரிக்க யுத்தக்கைதிகள். நிச்சயம் இது இன்றைய சம்பவமல்ல. சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வரலாறு. திரும்பிப் பார்ப்போம்.

தென்னாபிரிக்காவில் 1899 க்கும் 1902 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரித்தானியருக்கும் டிரான்ஸ்வால், ஒரேஞ் சுயாதீன மாநிலம் ஆகியவற்றில் குடியேறியிருந்த டச்சுக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போர் "போவர் யுத்தம்" என அழைக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் டச்சு மக்கள் போவர்கள் (Boers - டச்சு மொழியில் கமக்காரர்) என அழைக்கப்பட்டனர். தமது சுதந்திரத்தைப் பேண முனைந்த போவர்கள் மேல் பிரித்தானியர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். இதனால் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. இந்தச் சண்டைக்கு பிரித்தானியாவுக்கு ஆதரவாக பிரித்தானியக் கொலனிகளான அவுஸ்திரேலியா, இலங்கை ஆகியன தமது துருப்புக்களை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பியிருந்தன.

போவர் யுத்த காலத்தில் தம்மிடம் பிடிபட்ட யுத்தக் கைதிகளை பிரித்தானிய வல்லரசு தமது கொலனி நாடுகளுக்கு நாடு கடத்தியது. அப்படியாக 1900 இல் இலங்கைக்கும் போவர் யுத்தக் கைதிகள் நாடு கடத்தப்பட்டனர். அப்படி அனுப்பப்பட்டவர்களின் 5000 பேரைக் கொண்ட தொகுதி ஒன்று ஓகஸ்ட் 1900 இல் எஸ்.எஸ்.மோஹாக் (SS Mohawk) கப்பலில் இலங்கை வந்திறங்கியது. இவர்கள் இலங்கையில் தியத்தலாவை, அம்பாந்தோட்டை பகுதிகளில் விசேட குடியமர்வுத் திட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டனர். இப்பகுதி Happy Valley Reformatory என அழைக்கப்பட்டது. தியத்தலாவை முகாம் அமைந்திருந்த பகுதி கீழே உள்ள படத்தில் காணலாம்.

இவர்களைப் பராமரிப்பதில் உள்ளூர் அதிகாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். உள்ளூர்ச் சட்டங்களுக்குப் பணிய மறுத்தனர். இதனால் இவர்களுக்கெனத் தனியே தியத்தலாவ, வெலிமடை, அப்புத்தளை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. போவர்கள் உள்ளூர் மக்களுக்கு சட்ட விரோதமாக உருளைக்கிழங்கிலிருந்து சாராயம் வடிக்கும் முறையினைக் கற்றுத்தந்தனர். இது அக்காலத்தில் உள்ளூர் மக்களால் அல சுதிய (அல என்றால் சிங்களத்தில் கிழங்கு, சுதிய என்றால் என்ன??) என அழைக்கப்பட்டது. (இந்த அல சுதியவிலிருந்து பின்னர் கசிப்பு போன்ற பயங்கரக் குடிவகைகளை இலங்கைக் குடிமக்கள் கண்டுபிடிப்பதற்கு அதிகம் சிரமமமிருக்கவில்லை).

தியத்தலாவை முகாமில் இருந்த யுத்தக்கைதிகள் பலரும் பின்னர் ராகமை (Plague Camp), கல்கிசை, உருகஸ்மண்டிய முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த உருகஸ்மண்டிய முகாம் 10 ஏக்கர் காணியில் அமைந்திருந்தது. இம்முகாமில் இருந்தவர்கள் உள்ளூர் பெண்களுடன் கலந்ததனால், இக்கிராமத்தில் இன்றும் பல வெள்ளைத் தோல், நீலக் கண்களைக் காணலாம். தியத்தலாவை முகாமில் யுத்தக்கைதிகளின் அறையொன்றைக் கீழே காணலாம்:


தென்னாபிரிக்காவில் மே 31, 1902 இல் யுத்தம் முடிந்தவுடன் போவர் கைதிகள் பலரும் அன்றைய ஏழாம் எட்வேர்ட் மன்னனுக்கு அடிபணிந்து தென்னபிரிக்கா திரும்பிச் சென்றனர். சிலர் மன்னனுக்கு அடிபணிய மறுத்து இலங்கையிலேயே ஒளித்திருந்தனர். இவர்களில் ஒரு சிலர் பின்னர் தப்பி பர்மா சென்றனர். சிலர் இலங்கையிலேயே தங்கி விட்டனர்.

இப்படித் தங்கியிருந்தவர்களில் ஒருவர் தான் எங்கெல்பிரெக்ட் (Engelbrecht) என்பவர். இவர் பின்னர் யாலை காட்டுப்பகுதிக்கு முதலாவது வார்டனாக (Game Ranger) நியமிக்கப்பட்டார். இவரது கடைசிக் காலங்களில் முதலாம் உலகப் போர் வெடித்திருந்தது. அப்போது ஜேர்மனிய நாசகாரக் கப்பலான எம்டன் இந்து சமுத்திரத்தில் பெரும் நாசங்களைச் செய்து கொண்டிருந்தது. எம்டன் கப்பல் மாலுமிகளுக்கு இரகசிய உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர் கண்டியில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் இக்குற்றச்சாட்டுக்கள் என்றுமே நிரூபிக்கப்படாமல் ஓகஸ்ட் 25, 1922 இல் இறந்தார்.

(இந்த எம்டன் கப்பல் பின்னர் 9 நவம்பர் 1914 இல் அவுஸ்திரேலிய யுத்தக் கப்பலான "எச்.எம்.எஸ் சிட்னி"யினால் கொக்கோஸ் தீவுகளில் மூழ்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் எம்டன் என்ற சொல் வழக்கு இன்றும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்).

இலங்கையில் தங்க நேர்ந்த பல போவர்கள் தமது பென்ஷன் பணத்தை நாட்டின் பல்வேறு கச்சேரிகளில் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாம். போவர்களைத் தமக்குள்ளே ஒன்று கூட விடாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான நடைமுறை இருந்தது. ஒரு சிலர் யாழ்ப்பாணம் வரை சென்று யாழ் கச்சேரியில் பென்ஷன் பெற்றனராம். சிலர் மட்டக்களப்புக்கும் செல்லவேண்டியிருந்தது. இப்படியாக இந்த போவர்கள் காலப்போக்கில் நாட்டின் சிறுபான்மையாயிருந்த பேர்கர் (burghers) சமூகத்துடன் ஒன்றிணைந்தனர். இவர்களின் பெயர்களைக் கொண்டே போவர்களை இன்று அடையாளம் காணக்கூடும்.

குறிப்பு: போவர் யுத்தத்தில் மொத்தம் 75,000 பேர் இறந்தனர். இவர்களில் 22,000 பேர் பிரித்தானிய போர் வீரர்கள், 7,000 போவர் துருப்புக்கள், 28,000 போவர் மக்கள், 20,000 கறுப்பின ஆபிரிக்கர்கள.

December 11, 2006

*பாரதிக்கு வணக்கம்

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். எனது முதலாவது வலைப்பதிவினை பாரதிக்கு அர்ப்பணித்திருந்தேன். இன்று பாரதி பிறந்த நாளில் எனது முதலாவது நட்சத்திர பதிவைப் பதிவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதை சொல்லத் தேவையில்லை.

இன்று பாரதியார் இருந்தால் அவருக்கு வயது 124 இருக்கும். ஆனால் அவர் வாழ்ந்தது ஆக 39 ஆண்டுகளே. தனது 5வது வயதிலேயே தந்தை கணக்குச் சொல்லிக் கொடுத்த்போது, "கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு" என்று கவிதையிலேயே அடுக்கியவர். அவர் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் கவிஞராக மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த இதழாளனாக, பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். பாரதியாரின் பத்திரிகைத் துறை ஈடுபாட்டை மட்டும் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

இளசைச் சுப்பிரமணியன் 1904 இலிருந்து 1921 வரை ஒரு பத்திரிகையாளராகப் பவனி வந்தவர். 1904, நவம்பரில் சுதேச மித்திரன் இதழுக்கு இரண்டு ஆண்டுகள் துணை ஆசிரியராக பத்திரிகைத் தொழிலை ஆரம்பித்தார். தொடக்கத்தில் மெய்ப்புத் திருத்தல், பின்னர் செய்தி மொழிபெயர்த்தல். இப்படியாக இரண்டாண்டுகள். அதற்கிடையில் சக்கரவர்த்தினி என்ற பெண்கள் மாத இதழில் ஆசிரியரானார். (சக்கரவர்த்தினி இதழின் முன்பக்கத்தில் ஆங்கிலத்தில் Indian Ladies என்றும் அதனையே தமிழில் தமிழ்நாட்டு மாதர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது). "இளமை மணம், சதி, வரதட்சணை, கைம்பெண் கொடுமை, ஆகியவற்றை எதிர்த்தும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளியிட்டார். சுதேச மித்திரனில் எழுத முடியாததை எழுதச் சக்கரவர்த்தினி பயன்பட்டது" (முனைவர் பா. இறையரசன்).

"சக்கரவர்த்தினி"யில் இருந்து விலகிய பாரதி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார். 4-05-1906இல் ஆரம்பமாகியது இந்தியா இதழ். அன்று ஈழத்தில் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த இந்துசாதனம் என்ற இதழ் தனது 1906 ஆம் ஆண்டின் இதழொன்றில் "இந்தியா"வைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தது:

"இந்தியா - இது சென்னைப் பிரமவாதின் அச்சியந்திரசாலையில் வாரத்துக்கொரு முறை 16 பக்கங்கள் கொண்ட 'கிறௌன் போலியோ" சயிஸ் காகிதத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும் ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிகை. பெரிய இங்கிலீஷ் பத்திரிகைகளில் என்னென்ன விஷயங்கள் எழுதப்படுகின்றனவோ அந்த விஷயங்களெல்லாம் இந்தப் பத்திரிகையிலும் எழுதப்பட்டு வருகின்றன. இதனை வாசிப்போருக்கு இராஜாங்க விஷயங்களில் நல்லறிவும் தேசாபிமானமும் உண்டாகும்."

1909 ஜூலை 7 இந்தியா (புதுவை) இதழில் யாழ்ப்பாணத்தில் சீதன வழக்கத்தின் கெடுதி பற்றி பாரதி இவ்வாறு எழுதுகிறார்:

"சிலோன் நாட்டு, கொழும்பு நகரத்து நோறீஸ் றோட்டு 68 நெ. வீடு ஸ்ரீ க.ண.கோ.பாலப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள விளம்பரம் நமது பார்வைக்கு வந்தது. அதில் சீதன வழக்கத்தால் உண்டாகும் கெடுதிகளைப் பல யுக்தி அனுபவங்களால் விளக்கிக் காட்டியிருக்கிறார். இந்த வழக்கத்தால் பெண்கள் கற்புக்கும் புருஷன் ஊக்க முயற்சிக்கும் வெகு சுலபமாய்க் கேடுகள் உண்டாகின்றன என்று நாட்டியிருக்கின்றார். இந்த வியாஸம் 22 பாராக்களில் அடங்கியிருக்கிறது. இதை அவசியம் யாழ்ப்பாணவாசிகள் கவனித்து நடந்தால் மெத்த நலமே."

இந்தியா இதழைத் தொடர்ந்து சென்னை பாலபாரதா (1906), புதுவையிலிருந்து வெளியான இதழ்களான விஜயா (1909), கர்மயோகி (1910), தர்மம் (1910), சூரியோதயம், பாலபாரதா ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார் நமது இதழியல் முன்னோடி சுப்பிரமணிய பாரதி.

பாரதியாருக்கு பாரதி பட்டம் யாரால் வழங்கப்பட்டது என்ற தகவல் எந்த நூலிலும் காணப்படவில்லை. தற்செயலாக குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் பாரதியாரின் பால்ய நண்பனாயிருந்த சோமசுந்தர பாரதியார் பற்றிக் குறிப்பிடும்போது சோமசுந்தரத்துக்கும், சுப்பிரமணியனுக்கும் பாரதி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது ஒரு யாழ்ப்பாணத்துப் புலவர் என்பதைத் தெரிவித்திருந்தார். அவரும் அந்தப் புலவரின் பெயரைத் தரவில்லை. ஆனால் ஒரு யாழ்ப்பாணத்துப் புலவரே இப்பட்டத்தை இருவருக்கும் எட்டயபுரத்து சந்நிதானத்தில் புலவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அறிந்தவர்கள் யாராவது இங்கு வந்து தகவலைப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகையாளர்களைப் பற்றிக் கூறிய கருத்து ஒன்றை இங்கு தருகிறேன். நிருபர் ஒருவரின் கேள்வியும் மகாத்மாவின் பதிலும்:

கே: "பத்திரிகையாளராகிய எங்களுக்கு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலக்கு தருகிறீர்களே, நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம் என்பது உங்கள் எண்ணமா?"

ப: "அப்படியில்லை. பத்திரிகைகளில் நீங்கள் பணி புரிவதே தியாக வாழ்க்கை தான். அதனால்தான் விதிவிலக்கு."

இன்று ஈழத்தில் எத்தனை பேர் பத்திரிகைகளில் பணிபுரிந்து தியாகிகளாக, மாமனிதர்களாக ஆகிவிட்டார்கள். மகாத்மாவின் அந்தக் கூற்று காலத்தால் அழியாததே.

ஆதார நூல்: இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்.

November 29, 2006

என்னெஸ்கே நினைவுகள்


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். 49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து காட்டியவர். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். 150 படங்களுக்கு மேல் நடித்து சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். "பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்; பாலில்லாமல் சிசு பதறுவதைப் பார்" போன்ற கருத்துக்களைக் கூறியவர். அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது நினைவாக சில அரிய புகைப்படங்களும் "சகுந்தலை" படத்தில் செம்படவர்களாக நடிக்கும் கிருஷ்ணனும், டி. எஸ். துரைராஜும் பாடும் பாடல் வரிகளும் உங்கள் பார்வைக்கு:



வெகு தூரங் கடல் தாண்டி போவோமே
மீன் பிடிப்போமே
கட்டு மரம் கட்டிக்கடல் எட்டு மட்டும்
நெட்டித் தள்ளிப்போய்
சுழற் காற்றடித்தாலும் கருமேகம்
கூடி மழை யோடிடித்தாலும்
மிக நஞ்செனவே மிஞ்சி இருள்
தானிருந்தாலும்
அதில் கொஞ்சமுமே நெஞ்சினிலே
அஞ்சிட மாட்டோம்

எனதண்ணன்மாரே இனிவேகமுடன்
கூடி வலை வீசிடுவோமே
நல்ல தூண்டில் முள்ளோடு பல
கயிறோடே தூக்கியெறிந்தே இழுத்தோடும்
நல்ல குறா சுறா உள்ளான் முதல் கெளுத்தி மீனோடு
கடு விரலால் இரால் வாளை எல்லாம் வளைத்திழுத்தோடி
இப்போ கொண்டு வந்தே விலை
கூறி விற்றே காலமதை நாம் கழிப்போமே.




October 22, 2006

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி! - மேமன்கவி

அண்மையில் காலமான ஈழத்துக் கல்விமானும் பத்திரிகையாளருமான ஏ. ஜே. கனகரட்னா அவர்கள் பற்றிய எனது நினைவுப் பகிர்வு ஒன்றில் ஈழத்துக் கவிஞர் மேமன்கவி அவர்கள் இட்ட பின்னூட்டத்தைத் தனியே ஒரு பதிவாக இங்கு இட்டிருக்கிறேன்.

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி!

ஆளுமைமிக்க ஆகிருதி
ஒன்றின் மரணம் தரும்
மௌனம்-

அது அதன்
உடலின் நிரந்தர உறக்கம்
அதுவே விழிப்பாகி....
விரிந்த மேசையின் பரப்பில்
ஒடுங்கிய புத்தக அடுக்குகளில்
இணைய உலாவிகளின் முடக்கங்களில்
உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது!

"எதற்குமே உரிமைக் கோராத
ஞானம்" பெற்ற
ஆகிருதியின் ஆக்கங்களுக்கே
அது சாத்தியம்.
அதன்-
திறன்களின் மீது
பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும்
புலர்வு
அருகே இருந்த மூளைகளில்....

பேசும் வார்த்தைகள் மௌனமாகிப் போக-
எழுதிய வார்த்தைகள் போல்
வாழ்ந்து போன வாழ்வு
அந்த புலரவின் பிரகாசத்தில்
உரத்து வாசிக்கப்படும்.

"ஏ.ஜே" எனும்
மறையாத ஆளுமை
மிக்க
ஆகிருதியும்
அதுவான ஒன்றுதான்!

- மேமன்கவி

அமரர் ஏ. ஜே. கனகரத்னா விக்கிபீடியாவில்.


October 15, 2006

ஏ.ஜே. பற்றிய நினைவுப்பகிர்வு- கா. சிவத்தம்பி

ஈழத்து இலக்கிய செழுமைக்கு பணிபுரிந்த விமர்சக அறிஞன் ஒருவனின் மறைவு
-பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி-

சென்ற வாரம் ஏ.ஜே.கனகரத்னா கொழும்பில் தனது சகோதரர் இல்லத்தில் காலமானார். நீண்ட காலம் சுகவீனமாக இருந்த அவர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக வந்த பின்னர், தான் விரும்பியபடி யாழ்ப்பாணம் செல்ல முடியாது கொழும்பிலேயே காலமானார். அவரது வேண்டுகோளை நிறைவேற்ற விரும்பிய அவரது குடும்பத்தினர் மிகுந்த அமைதியான சூழலிலே இறுதிக் கடன்களை செய்ய விரும்பினர். உண்மையில் சில நண்பர்களின் வாய்மொழி மூலமாகவே தகவல் பரப்பப்பெற்றது. ஒருவர் மற்றவருக்கு கூறி பரவிய செய்தி தமிழ் வானொலிகளிலும் தமிழ் அச்சு ஊடகங்களிலும் ஆங்கில அச்சு ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்ட ஒரு செய்தியாக மாறிற்று. ஏ.ஜே.கனகரத்னாவின் பணிகள் வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய சமூக பிரக்ஞையே ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏ.ஜே. கனகரத்னாவுக்கு இலங்கையின் தமிழ் இலக்கிய வட்டாரங்களிலும் ஆங்கில இதழியல் வட்டாரங்களிலுமுள்ள தன் மதிப்பின் இயல்பான வெளிப்பாடாகும். ஏறத்தாழ கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துலகில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லையெனினும், அவர் பற்றிய சமூக மதிப்பீடு எத்துணை உண்மையானதாகவும் ஆழமானதாகவுமிருந்தது என்பதை இது காட்டுகின்றது.

தன் திறமைகளை தானே தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள முயன்ற ஒரு நுண்ணிய நெஞ்சினை மிகச் சரியான முறையில் தமிழ் இலக்கிய உலகு மதிப்பிட்டிருந்தது. இந்த சம்பவத்தினால் தெரிய வந்தது. இந்த மதிப்பின் தளமாக அமைந்த அவரது சாதனைகள் யாவை? அவைபற்றிய விபரிப்பில் இறங்குவதற்கு முன்னர் அவர் தொழிற்பட்ட காலம் அந்தப் பணிகளின் வீச்சு பற்றி ஓர் அறிமுக குறிப்பு அவசியமாகின்றது.

ஏறத்தாழ 1960களில் மலரத் தொடங்கிய ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பல்துறைப்பட்ட வளர்ச்சி வரலாற்றில் ஏ.ஜே. கனகரட்னா என்பது ஒரு முக்கியமான பெயராகும். அந்தக் காலத்து வரலாறு எழுதப்படும் பொழுது கரகரத்னாவின் பணிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் அந்த வரலாற்றையே நிறைவு செய்ய முடியாது. அந்த இலக்கிய வளர்ச்சிகளின் முக்கிய உந்து சக்திகளில் ஒருவராக அவர் விளங்கினார்.

இன்று பின்நோக்கி பார்க்கும் பொழுது ஏ.ஜே.கனகரத்னாவின் மிகப் பெரிய பங்களிப்பு, அவர் வளரும் ஈழத் தமிழ் இலக்கியத்தின் செழுமையை ஆங்கிலம் மூலமாக உலகறியச் செய்தார். அதேவேளையில், தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கிய உலகின் வளர்ச்சிகளை தமது எழுத்துகளின் மூலமும் தமது கலந்துரையாடல்கள் மூலமும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்தப் பணியினை, குறிப்பாக இரண்டாவது பணியினை அவர் நடத்திய முறைமை அவரை அக்காலத்தில் நிலவிய இலக்கிய விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாலான ஒருவராக வைத்திருந்தது. உண்மையில் வேறுபடும் கருத்து நிலையினர் ஒவ்வொருவரும் அவரை தம்பக்கத்து ஆள் என்றே கூறிக் கொண்டனர். இதற்கு நல்ல உதாரணமாக அமைவது `மல்லிகை' வழியாக ஜீவாவுடனும் அவரது நண்பர்களுடனும் வைத்திருந்த தொடர்புகளும் எஸ்.பொ., இளம்பிறையுடனும் அவருக்கிருந்த தொடர்புமாகும்.

அவருடைய ஒரே ஒரு பிரசுரமாக இன்றுள்ள `மத்து' கட்டுரைத் தொகுதி எஸ்.பொ.வே முன்னின்று வெளியிட்டிருந்தார். ஆனால், ஏ.ஜே. யோ இந்த சர்ச்சைகளுக்கு அப்பாலானவராய், முகில்களுக்கு மேலேயுள்ள மலை விளக்குப்போல பிரகாசித்துக் கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பாக இப்பொழுது மேல் நாடுகளிலே உள்ள சில இலக்கிய ஆர்வலர்களும் புரவலர்களும் அவரை முற்போக்கு வாதத்தின் எதிர்நிலை விமர்சகராக காட்டுவதில் மிகுந்த சந்தோசப்பட்டனர்.

மேலே கூறியதைப் போல இந்த முகில்கள் அந்த சூரியனை பாதிக்கவில்லை.

பிற்காலத்தில் அவர், குறிப்பாக இளைப்பாறியதன் பின்னர் ஈழத்து இலக்கிய படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்துள்ளார். நண்பர் மு.பொ.வின் `பொறிக்குள் அகப்பட்ட தேசம்' என்ற நீண்ட அற்புதமான கவிதையை அவர் ஆங்கிலத்திலே மொழி பெயர்த்துள்ள முறைமை அந்த மொழியின் பண்பாட்டுக் கூடாக மு.பொ.வின் கருத்தை, கவித்துவத்தை வெளிக்கொணர்வதாகவுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இவருடைய எழுத்துக்கள் ஒன்று சேர்க்கப்படவில்லை. `மத்து' தொகுதியை கொண்டு வந்ததற்காக எஸ்.பொ. போற்றப்பட வேண்டும். அவருடைய தமிழ் எழுத்துகளை தொகுப்பது ஒரு புறமாக, மறுபுறத்தில் அவர் செய்த ஆங்கில மொழி பெயர்ப்புக்களை ஒரு தொகுதியாக்கி பிரசுரிக்க வேண்டுவது அவசியமாகும். கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இத்துறை ஆர்வலர்கள் ஈடுபட வேண்டுமென்பது எனது பெரு விருப்பமாகும்.

ஏ.ஜே.பற்றி வெளிவரவிருந்த மலர் ஒன்று இதுவரை எனது கைக்குக் கிட்டவில்லை. அதற்கு நான் எழுதிய கட்டுரை பற்றியும் பின் தகவல்கள் எதுவுமில்லை.

பரந்து நின்ற ஆலமரம் விழுந்ததன் பின்னர் அது நிறைந்திருந்த இடம் `வெளி'யாக தெரிவதுபோன்று ஏ.ஜே.யின் மறைவு அவருடைய முக்கியத்துவத்தை இப்பொழுது உணர்த்துகின்றது.

ஏ.ஜே.யின் இலக்கிய ஆளுமைக்குள் முக்கியத்துவம் அவரது ஆசிரிய பணிக்கும் உண்டு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 15 வருடங்களுக்கு மேல் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்கும் ஆங்கில போதனாசிரியராக அவர் கடமையாற்றினார். அவரது வகுப்புகளை மாணவர்கள் பெரிதும் விரும்பினர். அவருடைய பிரிவுக்கு சாராதவர்கள் கூட அவரது வகுப்புக்கு செல்வதுண்டு. உண்மையில் அவரது ஆங்கில மாணவர்கள் பலருக்கு அவருடைய இலக்கிய ஆளுமை பற்றித் தெரியாது. அவரையொரு தலைசிறந்த ஆசிரியராக கருதினர். பெரு மதிப்பும் வைத்திருந்தனர். தொழில் நிலையில் அவர் ஆசிரியராகவும் இதழியலாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.

இவருடைய சிறப்புக்கான தளம் இவருக்கு இருந்த ஆழமான ஆங்கில அறிவும் தமிழ் இலக்கிய பரிட்சயமும் ஆகும். தன்னுடைய ஆங்கில அறிவை தமிழிலே தமிழ் நிலைப்பட எடுத்துக் கூறும் ஆற்றல் அவரிடத்து இருந்தது.

இதனால் அவர் வழியாக ஆங்கில இலக்கிய பரிச்சயம் தமிழ் மொழி வழிவந்த எழுத்தாளர்களுக்கு கிட்டிற்று. இந்த எடுத்துரைப்பும் தொடர்பாடலும் இத்துணை நேச நிலைப்பட்டதாகவும் நட்பிறுக்கம் கொண்டதாகவும் அமைந்தமைக்கு காரணம் அவரது ஆளுமையின் இயல்பே ஆகும்.

ஏ.ஜே.கனகரத்னா என்றுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவரல்ல. தன் பாதையிலே போவார். ஆனால், அதற்காக எந்த விதமான புறவெளிப்பாடுகளையும் காட்டிக் கொள்ள மாட்டார்.

அவரிடத்து மிகுந்த அபிமானம் கொண்டவர்களே அவரது நண்பர்களாகினர். மிகச் சிறிய ஒரு தொகையினரே அவரது நண்பர்களாக விளங்கினர். அவருக்காக பல பணிகளைச் செய்தவர்கள், அவரை தமது பெற்றோரைப் போல பாதுகாத்து வந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் அவர்கள், அந்த அளவில் ஏ.ஜே.புண்ணியம் செய்தவரும் கூட. தனி மரமாக நின்ற அவரை கிருஷ்ணகுமார் தம்பதியினர் நன்கு பராமரித்தனர். அவரது மிக நெருங்கிய இன்னொரு நண்பர் ஆங்கிலத் துறையில் கடமையாற்றும் சிவகுருநாதன் ஆவார். சிவகுருநாதன் இல்லாவிட்டால், ஏ.ஜே.எப்பொழுதோ பல்கலைக்கழக பணியைக் கூட விட்டெறிந்திருப்பார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவரை ஆங்கில இலக்கிய துறைக்கான விரிவுரையாளராக நியமிக்க முடியாது போனமை உண்மையில் பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட ஒரு நஷ்டமாகும். நியமன விதிகள் தடை செய்தன. ஆனால், அங்கு ஆங்கில இலக்கியம் கற்பித்த செல்வா கனகநாயகம் முதல் சுரேஷ் கனகராஜா வரை பலர் அவரது ஆங்கில அறிவை மெச்சிப் போற்றியவர்களாவர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏ.ஜே.க்கு இருந்த இந்த இடம் பல அசௌகரியங்களை ஏற்படுத்திற்று. அவருடைய நண்பர்கள் பலர் பேராசிரியர்களாகவும் அவரது புலமையால் பயன் பெற்ற பலர் விரிவுரையாளர்களாகவும் கடமையாற்ற இவர் ஆங்கில போதனாசிரியர் என்ற நிலைக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு உலவி வந்தார். ஏ.ஜே.யிடமிருந்த மிகப் பெரிய பலவீனம் அவர் தன்னைத் தான் மறைத்துக் கொள்வத்றகுப் பயன்படுத்திய பழக்கம் ஆகும். ஏ.ஜே.யின் நீராகார பழக்கம் பிரசித்தமானது. அவர் தன்னை அதற்குள் மறைத்துக் கொண்டாரா அல்லது அது அவரை மறைத்துக் கொண்டதா என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. நான் அறிந்த வரையில் இரண்டுமே நடைபெற்றன. ஆனால், எக்காலத்திலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

`டெயிலி நியூஸ்'ஸில் உதவி ஆசிரியராக இருந்த பொழுது அவருக்கு ஒரு திடீர் பதவியேற்றம் வழங்கப் பெற்றது. அனுபவ பதவியேற்றம் வழங்கப்பெற்றது. அனுபவஸ்தர்களான பல பத்திரிகையாளர்களுக்கு மேலே அவர் நியமிக்கப் பெற்றார். ஏ.ஜே.தான் அந்தப் பதவியை வகிக்க முடியாதென்று கூறினார். இறுதியில் இருந்த பதவியையும் இராஜிநாமா செய்து விட்டு `லேக் கவுஸு'க்கு வெளியே வந்தார்.

ஏ.ஜே.யின் அறிவுப்புலமையில் நிலவிய தன்னடக்கம் மிகப் பெரியது. ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பிலே இத்தகைய ஒருவரைக் காண்பது அரிது.

ஏ.ஜே.க்கும் எனக்கும் மிகுந்த நட்புறவும் புலமை ஊட்டம் பற்றி குறிப்பிடுவது என் நிலையில் முக்கியமாகவே படுகின்றது.

எனக்கு ஏ.ஜே.யை. பேராதனைப் பல்கலைக்கழக காலத்திலிருந்தே (1953-56) தெரியும். அவர் எங்களுக்கு ஜூனியர். ஆங்கிலத்தை சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தார். அக்காலத்து ஆங்கில சிறப்பு மாணவர்கள் சிங்களம், தமிழிலே பேசவே மாட்டார்கள். ஆனால், ஏ.ஜே.முற்றுமுழுதான விதிவிலக்கு. மெய்யியல் சிறப்புத் துறை மாணவர் கனகரத்னத்துக்கும் இவருக்கும் தெரியாத கந்தானை குடிநீர் நிலையங்கள் இல்லையென்றே கூறலாம். அத்தனையும் சுதேசிய மாத்திரமல்ல உள்ளூர் கலப்புத் தயாரிப்புகள். கனகரத்னாவின் உறவுகள் தமிழினை நிராகரிப்பனவாக அமையவில்லை.

இவர் `டெயிலி நியூஸ்'ஸில் கடமையாற்றிய பொழுது ஈழத்து தமிழ் சிறுகதைகளை வழக்கத்திலே மொழி பெயர்க்குமாறு என்னை ஊக்குவித்துள்ளார். டானியலின் `தண்ணீர்'க் கதையை நான் மொழி பெயர்த்தது இப்பொழுதுபோல இருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நான் கடமையாற்ற சென்றதிலிருந்துதான் (1978) அவருடனான எனது உறவு இறுக்கமானது.

நான் ஆங்கிலத்தில் எழுதிய அத்தனை நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்து பார்ப்பதற்கும் மெய்ப்புப் பார்ப்பதற்கும் நான் அவருடைய உதவியையே நாடுவதுண்டு. இதனை நான் எனது நூல்களில் எடுத்துக் கூறியுள்ளேன். உண்மையில் எனது பண்டைய தமிழ் நாடகம் பற்றிய ஆங்கில ஆராய்ச்சி நூலிலே காணப்பெற்ற அச்சுப் பிழைகளை தொகுத்து திருத்தி தந்தவர் அவரே. அது மாத்திரமல்லாமல், ஆங்கில இலக்கியத்தின் அவ்வக்கால வளர்ச்சிகள் பற்றி அவருடன் கலந்துரையாடும் வழக்கத்தினை தவறாமல் மேற்கொண்டிருந்தேன். என்னுடன் அவர் தமது புலமைத்துறைகள் பற்றி மனம் திறந்து உரையாடியதுண்டு. தன்னுடைய விமர்சனங்களையும் வாழ்த்துகளையும் அவர் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் நான் ஏ.ஜே.யை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நமது காலத்தில் புலமைத் தூண்களில் ஒன்றாகவே மதித்து வந்துள்ளேன். போற்றிவந்துள்ளேன். அந்தளவில் நம்மிருவரிடையேயும் ஓர் ஆள்நிலை ஊட்டம் நிலவி வந்தது. நான் கொழும்புக்கு வந்த பின்னர் தடைப்பட்டுப் போயிருந்த அந்த உறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. தொலைபேசியில் பேசிக் கொள்வேன். கடந்த ஒன்றரை மாதங்களாக பேசவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

ஏ.ஜே.யினுடைய அறிவுத் திறத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. அவர் ஐ.சி.ஈ.எஸ்.க்காக பதிப்பித்துள்ள றெஜி சிறிவர்தனாவின் எழுத்து திரட்டின் முதலாம் பாகமாகும். அந்நிறுவனத்தின் பொறுப்பாளரான திரு. தம்பிராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க ஏ.ஜே. அந்தப் பதிப்பு பணியை மேற்கொண்டார். அத்தொகுதிக்கு அவர் எழுதியுள்ள பதிப்பாசிரியர் உரை மிகச் சிறந்ததொன்றாகும். திரு.தம்பிராஜா அவர்களுக்கு ஆங்கில தமிழ் இலங்கை இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது.

அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா என்ற அவரது முழுப்பெயர் விபரம் பலருக்குத் தெரியாத ஒன்றாகும். ஆனால், ஏ.ஜே. என்ற முதலெழுத்துக் குறுக்கமோ எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. இது ஓரளவுக்கு அவரது ஆளுமையின் இயல்பினைக் காட்டுகின்றது. தன்னைப் பற்றி அதிகம் சொல்லாமல் அதேவேளையில் பிறருடைய சுக துக்கங்களில், நலன்களில் அவர் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தார்.

ஏ.ஜே.யை மறப்பது சுலபமே அல்ல. அவரோடு ஊடாடியவர்களுக்கு அது முடியாத காரியம். ஏனென்றால், தான் ஊடாடியவர்களின் ஆளுமைகளில் அவரின் செல்வாக்கு நிறைய உண்டு. தன்னைத்தான் மறைத்துக் கொள்ள விரும்பியவனை, இலக்கிய உலகம் மறக்கவில்லை. இனியும் மறக்காது.

இக்கட்டுரை இன்றைய தினக்குரலில் இருந்து பிரதியெடுக்கப்பட்டது.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கானா பிரபாவுக்கு வழங்கிய நேர்காணலின் ஒலி வடிவம் இங்கே.

மேலும் தகவல்கள்: விக்கிபீடியாவில்

October 11, 2006

ஏ. ஜே. கனகரத்னா காலமானார்


பிரபல கலை இலக்கிய விமரிசகர் ஏ. ஜே. கனகரத்னா அவர்கள் இன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தி இன்று எனது மின்னஞ்சலுக்கு வந்தது. 60கள் முதல் 90கள் வரை ஈழத்து இலக்கியத்தில் வலுவான இடத்தை அடைந்தவர் ஏஜே. குறிப்பாக அவரது மொழிபெயர்ப்புகளும் விமரிசனக்களும் சிறப்பு வாய்ந்தவை. பல ஈழத்து, தமிழக எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பல ஆங்கிலக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்.

யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித்துறையில் கடமையாற்றினார். கடைசி வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்த இவர் கடுமையாக நோய் வாய்ப்பட்ட போது கொழும்பில் தங்கி கடந்த ஒன்றரை வருடகாலம் சிகிச்சை பெற்று வந்தார்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஏஜேயின் "மத்து" கட்டுரைத் தொகுதி பற்றிய பார்வையை யமுனா ராஜேந்திரன் இங்கு பதிந்திருக்கிறார்:
பதிவுகள் இணையத்தளம்

ஏஜேயின் செங்காவலர் தலைவர் யேசுநாதர் கட்டுரை மதியின் தளத்தில் உள்ளது:
செங்காவலர் தலைவர் யேசுநாதர்


விக்கிபீடியாவில்: ஏ. ஜே. கனகரத்னா

சக வலைப்பதிவர்களின் நினைவுப்பதிவுகள்:

October 01, 2006

சிட்னியில் குறுந்தொகை நாட்டிய நாடகம்

அன்பின் ஐந்திணையை ஆராதித்த சங்ககால இலக்கியமான குறுந்தொகை அகத்திணைப் பாடல்கள் அண்மையில் சிட்னியிலும் கன்பெராவிலும் நாட்டிய நாடகமாக ஆனந்தவல்லி அவர்களின் நெறியாள்கையில் அரங்கேறியது. நாடகம் பற்றிய தனது பார்வையை திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் அழகு தமிழில் இங்கு தருகிறார்.



யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாங் கலந்தனவே


உன்னுடைய அன்னையும் என்னுடைய அன்னையும்
ஒருவருக்கு ஒருவர் எப்படிச் சொந்தம்?
உன்னுடைய தந்தையும் என்னுடைய தந்தையும்
எப்படி உறவினர் ஆகினர்?
நீயும் நானும் ஒருவரை ஒருவர்
எப்படி அறிந்தோம்?
செம்மண் தரையிலே விழும் மழைநீர்
அம்மண்ணுடன் இரண்டறக் கலப்பது போல
எமது நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டனவே.

இந்த அழகிய பொருள் செறிந்த பாடலை சங்க இலக்கியமான குறுந்தொகையில் பார்க்கிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழி சிறந்த கவி வளத்துடன் விளங்கியதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. எழுத்து, சொல், யாப்பு, அணி என்ற நான்கு பிரிவுகளுக்குள் ஏனைய மொழி இலக்கண ஆசிரியர் நின்றுவிட, தமிழ் இலக்கண நூலார் மட்டும் யாப்பில் பொருளுக்கும் இலக்கணம் வகுத்தார்கள்.

உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதல். எனவே அதை அகம் என்றும், அகம் அல்லாததைப் புறம் என்றும் இலக்கணம் வகுத்து, அகத்திணை, புறத்திணை என மக்கள் வாழ்க்கையையே பொருளாக அமைத்து, இலக்கியம் படைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்.

அந்தச் சான்றோரின் புலமை நுணுக்கத்தைக் காட்டும் குறுந்தொகை அகத்திணைப் பாடல்கள், லிங்காலயம் ஆனந்தவல்லியால் நாட்டிய நாடகமாக உயிர் பெற்ற போது மனதில் பல எண்ணங்கள் தோன்றின. புராணக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதாபாத்திரங்களையும், கடவுளரையுமே, பரதநாட்டியத்திலே பார்த்துப் பார்த்துப் பழகியவர்களுக்கு, சங்கப் பாடல்களுக்கும் இசை அமைத்து, ஆடல் வடிவம் கொடுக்கமுடியும் என்பது நல்லதொரு சிந்தனையாகத் தெரிந்தது.

தமிழ் மக்களின் வாழ்வில் அகப் பொருள் என்னும் காதல் அல்லது மணவாழ்க்கை, அன்பினைந்திணை எனப்பட்டது. இது புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என தூய காதல் ஒழுக்கங்களாகச் சிறப்பிக்கப்பட்டு, செய்யுளுக்குப் பொருளாக அமைந்தது. பண்டைய தமிழகத்தில் மக்கள் வாழ்ந்த நிலங்களான மலைப்பிரதேசம், காட்டுப் பிரதேசம், நீர் வளமும் நில வளமும் உள்ள வயல்கள், கடற்கரைகள், தண்ணீரற்ற வரண்ட நிலம் என ஐந்து வகையான இயற்கைப் பிரிவுகளுக்கு முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் தாவரப் பெயர்கள் வழங்கப்பட்டன. இவை நாளடைவில் அந்த அந்த இடங்களில் வாழ்ந்த மக்களின் காதலொழுக்கத்தைக் குறிக்க விசேடமாகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு நிலத்தில் எந்த ஒழுக்கம் சிறப்பாக இருந்ததோ அதனை அந்த நிலத்துக்கு உரியதாகக் கொண்டு சங்கச் சான்றோர் பாடல்களைப் பாடினார்கள். இதனால் குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும், நெய்தலுக்கு இரங்கலும், பாலைக்குப் பிரிதலும் காதல் ஒழுக்கங்களாக வந்தன.

மக்களுடைய ஒழுக்கமும், மனோபாவமுமே செய்யுளுக்குப் பொருளாக அமைந்த காரணத்தால், ஒழுக்கத்திற்கே முதலிடம் கொடுத்து இயற்கையின் அழகையும் இணைத்துப் பாடினார்கள். இந்தப் பாடல்கள் புலவர்களின் கூற்றாக அமையாது, தலைவன், தலைவி, தோழி, தோழன், செவிலித்தாய் போன்றோர் பேசுவது போல நாடகத் தன்மையோடு அமைந்திருக்கும். இதனால் அகத்திணைச் செய்யுள்கள், உலகியல் வழக்கத்தையும் நாடக இயல்பையும் கொண்டு அழகுடன் அமைந்திருந்தன.

இந்தவகையில், குறுந்தொகை இலக்கியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அன்பினைந்திணையைக் காட்டும் ஐந்து பாடல்களுக்கு இந்த நடனம் அமைந்திருந்தது. ஆறு பெண்களும், ஒரு ஆணும் மாறி மாறி, தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் என நடனமாடினார்கள். நடன அமைப்பு, பாடல், வர்ணனை என்பன கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தன.

நெய்தல் நிலத்துப் பெண்கள் தண்ணீரில் கால்களை நனைத்து விளையாடிய காட்சி இயற்கையோடு இணைந்து இரசிக்கும்படியாக இருந்தது. தண்ணீரில் தவறி விழுந்த பெண்ணை, தலைவன் காப்பாற்றியதும், அவர்களுக்குள் காதல் அரும்புவதும், தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் சந்திப்பதும், தலைவன் பிரிவால் தலைவி வருந்துவதும், இதனை விரும்பாத தாயார் மகளைக் கண்டிப்பதும் நடனத்தில் அழகாக அமைந்திருந்தன.

தலைவனைப் பிரிந்து வருந்திக் கொண்டிருந்த தலைவிக்கு, தலைவனிட மிருந்து தோழன் நல்ல செய்தியைக் கொண்டுவந்து மகிழ்ச்சியளிக்கிறான். தோழனைப் பார்த்து “நீ உண்மையில் அவனைப் பார்த்தாயா” என்று தலைவி கேட்டதும், “இந்தச் செய்தியைக் கொண்டுவந்த உனக்கு கிடைத்தற்கரிய வெள்ளை யானையையே பரிசாகத் தரவேண்டும"; என்று அபிநயித்ததும் சிறப்பான காட்சி. பரத்தையர் ஒழுக்கத்தைக் கூறும் பொழுது “தலைவன் மீது நான் சுலபமாக மயங்கி விட்டேன். அவன் இப்பொழுது தனது குடும்பத்துடன் சேர்ந்து விட்டானே” என்று பரத்தையாக வருபவர் தன் மீது கோபங் கொள்ளுவதாக உணர்தியது மிகவும் இயல்பாக அமைந்திருந்தது.

Image Hosted by ImageShack.us
சேரன் சிறீபாலன், தான் ஒரு சிறந்த கலைஞர் என்பதைக் காட்டிவிட்டார். தலைவனாகத் தோன்றி, பலவித பாவங்களைக் காட்டியபோது பளிச்சென்று தனித்துவமான முத்திரையுடன் பிரகாசித்தார். நடனமாடிய ஸ்வேதா ராமமூர்த்தி, ஸ்வாதி பத்மநாபன், ஜெனிஃபர் வைட், அபிராமி ஸ்ரீகாந்தா, சாய்பிரியா பாலா, கவிதா சுதந்திரராஜ் என எல்லாப் பெண்களுமே, தனித்தனியாகவும், இணைந்தும் அழகாக ஆடினார்கள். ஆஹார்ய அபிநயமும் அவர்களுடைய நடனத்திற்கு மெருகூட்டியது. ஆனந்தவல்லியின் கற்பனைத் திறமை, அழகிய நடனக் கோர்வைகளும் பார்த்து இரசிக்கும்படி இருந்தன.

பண்டைத் தமிழரின் திருமணமும் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், குறுந்தொகை எழுந்த காலத்தில் தமிழ்ப் பண்பாட்டில் அக்கினி வளர்த்தல், அக்கினியை வழிபட்டு வலம் வருதல் முதலிய ஆரிய வழக்கங்கள் கலந்து பரவாத காலம் என்பதையும் கருத்திற் கொண்டு, இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஐவகை நிலத்திலும் காணப்பட்ட இயற்கை வளங்களைப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக இணைத்தது நல்லதொரு நாடக உத்தியாக இருந்தபோதும் நெய்தலில் தொட்டுக் காட்டியது போல ஐவகை நிலங்களையும் ஆடலின் ஊடாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அசையும் காட்சிகளாலும், அவற்றுக்கான ஒளி அமைப்பாலும், ஆடலில் தோன்றும் பாவங்களையும் பார்க்க முடியாமல் பலதடைவை பார்வையாளரின் கவனம் சிதறிவிட்டது என்றே கூறவேண்டும். ஐவகை நிலத்திற்கே உரிய தாவரம், பறவை, விலங்கினங்களும் பொருத்தமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.

ஐந்து பாடல்களும், துண்டு துண்டாகத் தனித்து நிற்காமல், அவற்றுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தால் மேலும் இரசிக்கும்படியாக இருந்திருக்கும். தலைவன் தலைவி சந்திப்பது, பிரிவது, தாயார் கண்டிப்பது, பிரிந்ததால் இரங்குவது, பின்னர் சேருவது, திருமணம், பரத்தையர் உறவு என்று தொடர்பு படுத்தி இருக்கலாம்.

மறைந்த கவிஞர் A. K. ராமானுஜன் அவர்கள் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றை Interior Landscapes என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஓவ்வொரு காட்சியின் முன்னரும், இடையில் பாத்திரங்கள் வாயிலாகவும், ஆங்கிலத்திலே அவருடைய பாடல் வரிகளைக் கூறியதும், பேசியதும் சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது.

குறுந்தொகைப் பாடல்களுக்கு சீதாராம சர்மா இசை அமைத்திருந்தார். அருணா பார்த்திபன் (பாடல்), கோவிந்தராஜுலு (புல்லாங்குழல்), வரலக்ஷ்மி ஸ்ரீதரன் (வீணை), ரகுராம் சிவசுப்பிரமணியம் (மிருதங்கம்), பாலசங்கர் (தபேலா) ஆகியோர் இசை வழங்கினர். நடனம் முடியும் போது “செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்னும் வரிகள் அமைந்த அழகிய பாடலை இசைத்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

ஓர் இனத்தின் தொன்மைச் சிறப்பை விளக்குவதற்கு அவ்வினத்தின் தொன்மையான இலக்கியத்தைவிட வேறென்ன இருக்கமுடியும், என்ற எண்ணம் மனதை நிறைத்தது.
இவ்வேளையில், ஐவகை நிலங்களுக்கும் உரிய தொன்மையான ஆடல், பண் ஆகியவற்றுக்கான தேடலை தமிழ் அரங்கு இன்று வேண்டி நிற்கின்றது என்பதை உணரமுடிகிறது.

-பராசக்தி சுந்தரலிங்கம்

September 25, 2006

பத்மினிக்கு அஞ்சலி

நாட்டியப் பேரொளி பத்மினி நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

மேல் படம்: 1951ஆம் வருடத்தைய குண்டூசி தீபாவளி மலரில் இருந்து.
கீழ் படம்: 1951ஆம் வருடத்தைய பேசும் படம் இதழில் இருந்து.




September 09, 2006

கலாயோகியின் நினைவுகள்

கீழைத்தேயக் கலைகளுக்கும் அவற்றின் ஊடுபொருளாக அமைந்த இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர் கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்கள். இறைவனின் பஞ்சகிருத்தியத்தைப் பிரதிபலிக்கும் சிவநடனத்தை எழுதியவர். அவருடைய நினைவு நாள் இன்றாகும் (செப்டம்பர் 9).


சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஏக புத்திரன் ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி. கொழும்பிலே பிறந்து, தாயாருடன் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றவர். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பிற் சித்தியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற எதெல் மேரி (Ethel Mary) என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார்.

எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906 டிசம்பர் வரை இலங்கையிற் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் நாடு திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணைத் மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.

அந்தக் காலத்தில் சுதேசிய உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்த சங்கத்தை (1905) தாபித்து, அதன் சார்பில் Ceylon National Review என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகச் சேவையாற்றினார். 1907 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கலா முயற்சிகளில் ஈடுபட்டார். 1911 ஆம் ஆண்டில் அலகபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்குப் பொறுப்பு வகித்தார்.

இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார்.

இறைவனின் பஞ்சகிருத்தியத்தைப் பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912 இலே 'சித்தாந்த தீபிகை'யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற சஞ்சிகையில் 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை வழங்கினார்.

1917 முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டிற் பொஸ்ரன் நகரில் அமைந்திருந்த நுண்கலை நூதனசாலையிற் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார். இங்கு அவர் Dona Lusa என்னும் ஆர்ஜண்டீனா பெண்மணியைச் சந்தித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ராமா என்னும் பெயர் கொண்ட ஆண்குழந்தை பிறந்தது. ராமா பின்னர் இந்தியாவின் ஹரித்வாரில் உள்ள Gurukul பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று அமெரிக்காவின் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் வைத்தியசாலையில் வைத்தியராக பயிற்சி பெற்று அமெரிக்காவில் வைத்தியராகத் தொழிலாற்றுகிறார். (Dr/Fr Rama Ponnampalam Coomaraswamy அண்மையில் ஜூலை 19, 2006 அன்று அமெரிக்காவில் காலமானார். இவரைப்பற்றிய தகவலை அவரது வலைத்தளத்தில் காணலாம்).

1877 ஓகஸ்ட் 22 இல் பிறந்த ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் 1947 செப்டம்பர் 9 இல் அமெரிக்காவில் பொஸ்ரன் நகரில் காலமானார்.

விக்கிபீடியாவில் உள்ள கட்டுரையை பார்க்க.

September 03, 2006

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு வேண்டுகோள்!

கலைஞர் கருணாநிதி தொல்காப்பியர் விருது பெறுவதை சாத்தியமாக்கியவர் சி.வை. தாமோதரம்பிள்ளையே!

மிழ் இலக்கியத் துறையில் சிறப்பான தொண்டாற்றியவர்களுக்கு இந்த ஆண்டு (2006) முதல் தொல்காப்பியர் விருது வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்து இதன்படிமுதல் ஆண்டு விருதை பாமரரும் புரிந்து கொள்ளும் இலகு தமிழில் தொல்காப்பிய பூங்கா எழுதிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு வழங்குவதெனவும் முடிவு செய்திருத்தல் தெரிந்ததே!.

சென்னை கலைவாணர் அரங்கில் செப்டெம்பர் 4 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் இஸ்லாமியத் தமிழரும், தமிழ் அறிஞருமாகிய இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இவ்விருதினை வழங்குகிறார். ரூபா ஒரு இலட்சம் ரொக்கமும், தொல்காப்பியர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும், வெள்ளியில் ஆன பட்டயமும் இவ்விருதில் அடங்கும்.

வழக்கமாக தகுதிச் சான்றிதழை எழுத்துக்களில் வடித்துப் பட்டயம் வழங்கும் முறையை மாற்றி ஓவிய வடிவில் பட்டயம் வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமரரும் புரிந்து கொள்ளும் இலகு தமிழில் தொல்காப்பியப் பூங்கா எழுதிய தமிழக முதல்வர் கருணாநிதி இவ்வாறு பாராட்டப்படுவதாக ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம வீரப்பன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஆயினும், இராம வீரப்பன் இங்கு குறிப்பிடத் தவறிய தகவலும் ஒன்றுண்டு. பாண்டிய மன்னன் கைகளுக்கே கிட்டாததாக வழக்கில் இல்லாது அருகிவிட்டதாகக் கருதப்பட்டு வந்த தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைத் தமது அரும் பெரும் முயற்சிகளினால் தேடிக் கண்டடைந்து ஒப்பிட்டுப் பரிசோதித்து மீள்வித்துத் தந்ததுடன், தொல்காப்பியத்தின் ஏனைய பாகங்களுடன் அதனை முழுமையாக நூலுருவில் தந்ததன் மூலம் தொல்காப்பியர் விருது பெறும் நல்வாய்ப்பினை தமிழக முதல்வர் கருணாநிதிக்குச் சாதகமாக்கித் தந்திருப்பவர் தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் என்பதே இராம வீரப்பன் குறிப்பிடத் தவறிய அத்தகவலாகும்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தொல்காப்பியர் விருது வழங்கும் வைபவத்திலேனும் தொல்காப்பியத்திற்கே வாழ்வளித்த தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் தாம் தொல்காப்பிய பூங்கா எழுதியதால் தமிழக முதல்வர் கருணாநிதி சம்பந்தப்பட்ட விருதினைப் பெறுவதையும் சாத்தியப்படுத்தியவர் எனும் தகவல் பகிர்ந்து கொள்ளப்படுமா?

தமிழக முதல்வர் கருணாநிதி தொல்காப்பிய பூங்காவினை எழுதுவதன் மூலம் மேற்படி விருது பெறுதலைச் சாத்தியப்படுத்துவதாக முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்துக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் அறிமுகத் தொடர்பினைத் தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை.தாமோதரர் எங்ஙனம் ஏற்படுத்தித்தந்திருந்தார் எனும் வரலாற்று உண்மை பகிரங்கப்படுத்தப்படுமா?

விருது வழங்கும் நிகழ்வையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதியில் இருந்தேனும் தமிழக முதல்வர்கள் சி.வை.தா.வின் பிறந்த நாட்களில் அன்னாரைக் கௌரவிக்கும் சிறப்புச் செய்தியை வெளியிடும் புதிய வரலாற்றினை தொல்காப்பியப் பூங்கா விருது பெறும் கலைஞர் மு.கருணாநிதி ஆரம்பித்து வைத்தல் வேண்டும்.

சென்னை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் போது தமிழ் வளர்த்த பெரியார்களுக்கு சிலைநிறுவிப் பெருமைப்படுத்திய கருணாநிதி, தாமோதரரை அப்போது தவறவிட்ட குறையைத் திருத்திக் கொள்வதற்கு ஏனைய வேறு வழி கிடையாது. ஆகவே , தாமோதரர் பிறந்த நாளான செப்டெம்பர் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.கருணாநிதி தொல்காப்பியத்தை மீள்வித்துத் தந்த தாமோதரரைப் போற்றும் சிறப்புச் செய்தி வெளியிடுதல் வேண்டும்.

நன்றி: தினக்குரல்


August 22, 2006

தங்கத் தாத்தாவின் கத்தரி வெருளி


தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளிப் பாடலை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த அழகான பாடல் மழலைகள் பாடி அழகாக இசை அமைத்திருக்கிறார் கனடாவிலிருந்து கிரிதரன் அவர்கள். பாடலின் வரிகளை முதலில் பார்ப்போம்:

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நன்று
காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்!

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்! - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்!

வட்டமான பெரும் பூசனிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்! - தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

கட்டியிறக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்! - இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ?

வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே

நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.

பாடலை அழகாகப் பாடிய மழலைகள்: பைரவி (13வ), நீரோ (13வ), ரம்யா (6வ).

பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்:
கத்தரி வெருளி

இந்த மழலைகளின் வேறும் சில பாடல்களைக் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்:
tamilkids.tripod.com/music/


August 05, 2006

தெற்கிலங்கையின் சைவாலயங்கள்

ஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று விஷ்ணுகோயிலாக மாற்றப்பட்டு தென்னிலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயமாக விளங்குகின்றது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.



இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருந்த இந்த தொண்டேஸ்வரம் நம்மில் பலர் அறியாத ஒன்று. இவ்வாலயம் தற்போதய மாத்தறைப் பகுதியில் உள்ள தெவிநுவர என்ற இடத்தில் அமைந்திருந்தது. இது தேவந்துறை, தேவநகர, Dondra Head (தேவேந்திரமுனை) என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. தேவந்துறை என்பது இறைவன் இறங்கிய துறை எனப் பொருள்படும்.

திறந்தவெளிக் கோயிலாக அமைந்திருந்த இக்கோயில் பின்னர் சந்திரசேகரர் கோயிலாக உருமாறியது. மாத்தறைப் பகுதியில் விஜயன் சந்திரசேகரர் ஆலயத்தை அமைத்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

கி.பி. 150 ஆண்டுகளில் வாழ்ந்த தொலமி தனது குறிப்புகளில் இக்கோயில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 14ம் நூற்றாண்டில் இலங்கையில் பயணம் மேற்கொண்ட இபின் பட்டுட்ட என்ற அரேபியர் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் அங்கு நடைபெற்ற வருடாந்த விழா பற்றியும் விபரித்துக் கூறுகின்றார். இவரது குறிப்புகளின்படி அப்பகுதியில் பெருமளவில் இந்துக்கள வாழ்ந்தார்கள் எனவும், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வழிபாடு நடத்தியதாகவும், பொற்கொல்லர்கள், நடனமாதுக்கள் இருந்ததாகவும் அறியக் கூடியதாகவுள்ளது.

தெவிநுவரவில் 1998 நவம்பரில் தொண்டேஸ்வரம் நந்தி ஆகழ்ந்தெடுக்கப்பட்டதாக News Lanka என்ற லண்டன் வார இதழ் ஒன்று 5 நவம்பர் 1998 ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாத்தறைப் பகுதி மட்டுமன்றி காலி நகரில் இருந்து கதிர்காமம் வரை உள்ள பிரதேசம் சைவர்களின் ஒரு புண்ணிய பூமியாக விளங்கியது எனலாம். தமிழ்க்கடவுளான முருகனை அடைவதற்கென வள்ளி அவதாரம் செய்த வள்ளிமலை, முருகன் வேடனாக, வேங்கையாய் நாடகமாடிய கதிர்காமம், முருகனுடன் வள்ளியை விநாயகர் சேர்த்து வைத்த செல்லக்கதிர்காமம் ஆகியன இப்புண்ணியபூமியில் அடங்குவன.

புத்தசமயம் பிறப்பதற்கு பல காலத்துக்கு முன்பே கதிர்காமம் ஒரு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கியது. புத்தர் இலங்கையில் விஜயம் செய்த 16 இடங்களில் கதிர்காமமும் ஒன்று என்று பேராசிரியர் பரணவிதாரண குறிப்பிடுகின்றார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலம் தனது நூலில் இலங்கையில் முருக வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இருந்தது எனவும், எல்லாப் புத்தவழிபாட்டுத் தலங்களிலும் கொண்டாட்டங்களிலும் இது முக்கிய இடம் பெற்றது என்றும் 18ம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கனால் புத்தரது தந்தம் கண்டிப் பெரஹரவில் அறிமுகப்படுத்தும் வரை கண்டிப் பெரகரவில் கூட முருகன் முக்கிய இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த அனுமன் காலியில் இருந்த மீனாட்சிசுந்தரரை வணங்கினான் என்பது ஐதீகம். வேறு மலையொன்றும் அற்ற காலி நகரில் கடற்கரையில் கம்பீரமாக ஒரு மலை காணப்படுவதும் அம்மலை சிங்களத்தில் "உண வற்றுணா" (நோய் அகன்றது) என அழைக்கப்படுவதும் இதை உறுதி செய்கின்றன.

இன்று கதிர்காமம், தொண்டேஸ்வரம் இந்துக் கோயில்களாக இருந்தது என்பது பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மாறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

தொண்டேஸ்வரம் பற்றிய மேலதிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.