October 05, 2005

சி. வை. தாமோதரம் பிள்ளையும் உ. வே. சாமிநாதையரும்

டி. ஏ. ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 'தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும். இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்."

சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. அவர்கள் 1887-இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார். ஒரு சமயம் சிந்தாமணியை அச்சிடக் காகிதம் வாங்கக் காசில்லாமல் உ.வே.சா கஷ்டப்படும் போது, சி.வை.தா. தனக்குத் தெரிந்த ஒரு காகித வியாபாரி மூலம் கடனில் காகிதம் ஏற்பாடு செய்து தருகிறார். இருவருக்கும் இடையில் நல்லுறவும் நட்பும் நிலவின என்பதும் சமயம் நேரும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதும் இக்குறிப்புகளிலிருந்து நன்கு விளங்குகின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, சாமிநாதையர் முதுமைப் பருவம் அடைந்தபோது வெளிவந்த அவருடைய 'என் சரித்திரம்' எனும் நூலில், தாமோதரம் பிள்ளையை இழிவு படுத்தும் வகையில் சில செய்திகள் தரப்பட்டுள்ளன என்பது சிலர் கருத்து. 1930ஆம் ஆண்டுக்குப் பின் வெளிவந்த சாமிநாதையர் பதிப்புக்களில் அவருடைய திறமை மங்கிக் காணப்படுவதாகவும், அக்கால அளவில் சாமிநாதையருக்கு முதுமைப் பருவத்தால் அசதியும் மறதியும் தோன்றிவிட்டன என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, 'தமிழ்ச்சுடர் மணிகள்' (சென்னை, 1968) என்னும் நூலில் தெரிவித்துள்ளார். சாமிநாதையர் 1930க்குப் பிறகே தம் சுயசரிதத்தை எழுதத் தொடங்கினார். தம் முதுமை காரணமாகப் பிறர் உதவியுடன் அவர் எழுதி வந்த அக்காலத்தில், அவ்வாறு உதவியவர்களின் மனப்போக்கால் இத்தகைய தவறுகள் அந்நூலில் இடம் மெற்றுவிட்டன' என்பதாக பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் 'தற்காலத் தமிழ் முன்னோடிகள்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: தமிழ் வளர்த்த சான்றோர்கள், சென்னை 1997

2 comments:

said...

தங்கள் பதிவுகளுக்கு மதிப்பளிக்கிறேன். நன்கு செய்து வருகிறீகள். ----------முனைவர் இறையரசன்

said...

முனைவர் இறையரசு அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.