December 29, 2021

விபுலானந்தர் மறைவுக்கு விலாபம் - சோமசுந்தர பாரதியார்

 

விபுலானந்தர் மறைவுக்கு விலாபம்

நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் -

 றிஞர் விபுலானந்த அடிகள் இயல்பால் அறவர்; உணர்வால் உண்மைத் தமிழ்த் துறவி; அவர் மறைவு தமிழ்க்கிழவு. அப் பெரியாரோடு பழகி நட்புரிமை உற்றேன். அதனால் அவர் பண்புணர்ந்து பாராட்டும் பரிசும் பெற்றேன். பல்காலும் அவர் அரிய நல்லியல்பென் இல்லத்தில் எல்லார்க்கும் சொல்லி மகிழ்வேன். அதன் பயனாய் அவர் பிரிவே எமரின்று தமர் இழவாய் எண்ணி மிக இரங்குகின்றார். இவ் வித்தகர் மறைவை ஒரு பத்திரிகையில் பார்த்து, சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி என் மகள் - தன் பரிவுணர்த்தி எனக்கெழுதிய குறிப்பு, எம்மவர் இவர்பால் கொண்டுள பெரு மதிப்பை விளக்க உதவும். அதுவன்றி, இங்கு நான் எழுதுவது முகமன் அன்று, அடிகளிடம் நான் வியந்து தயந்த பல மெய்ப்பெருமைச் சால்புணர்வே என்பதற்கும் அக் குறிப்புச் சான்றாகும். ஆதலினால், அதை இதன் கீழ்த் தனிக் குறிப்பாய்த் தருகின்றேன்.

அடிகள் மயில்வாகனராய், மதுரைக் தமிழ்ச் சங்கப் பண்டிதராய்த் தேறிய நாள் முதல் அவரைத் தெரியலானேன். சங்க விழாத்தோறும் அவர் புலவர் மாநாடுகளில் பங்கெடுத்து வரலானார். ஆங்கிலப் பேரரசின் தலைநகரக் கலைக் கழகச் சோதனையில் விஞ்ஞானப் பண்டிதராய்ப் பட்டம் பெற்று விளங்குமவர், பழைய தமிழ் நூல்களையும் விரும்பி ஆராய்ந்து துருவி வரும் பரிசறிந்து வியப்புற்றேன். நெருங்க அவரியல்பறிய ட்புறவை நயந்து பெற்றேன். அவர் அரிய நுண்மதியும், அகன்றாழ்ந்த நூலறிவும், தண்ணளியும், தருக்கறியா நல்லியல்பும் என் உளத்தில் முன் எழுந்த நன்மதிப்பை வளர்க்கலான.

இகலறியா இன்ப உறவிவர் இயல்பு. எல்லார்க்கும் இன்சொல்லர். எப்போதும் நகை அரும்பும் அருள் முகத்தர். யார்மாட்டும் பகைமை இலர். சினம் விளையா, மனப்பாங்கும் வினைத்திறமும் ஒருங்குடையார். நடுநிலையில் தன் அறிவால் எப்பொருளும் யாரியல்பும் தானளந்து காணும் இயல் பேணுபவர். நன்றன்றித் தீதறியாப் பெருமையொடு, நெஞ்சறிந்த உண்மைகளை அஞ்சாமல் ஓம்பும் உள உரனுடையார். கண்ணோட்டம் மிக்குடையார்; என்றாலும், யார் சொலினும் நேர்மை தவிராத மனத்திண்மையினர்.

கலைக் கடல் நீர் குடைவதிலே களிப்புடையார். ஆங்கிலத்தும் தமிழினிலும் அகன்றாழ்ந்த புலமையொடு, ஆரியமும் பயின்றான்ற சான்றோராவர். முத்தமிழில் வித்தகர். இயற்றமிழில் மயக்கறுக்கும் ஆய்வுரைகள் பல எழுதி வழங்கியவர். நாடக நல் இயல் விளக்கி மதங்க சூளாமணி" என்னும் நூல் தொகுத்துத் தமிழ்க்குத் தந்தார். இழந்த தமிழ் இசைச் செல்வம் கண்டெடுத்துத் திரட்டி நமக்கீந்த பெரும் வள்ளலாவார்.

இன்னும் இவர் சில சொல்லிப் பல தேரச்செய்யும் அரும் திறலமைந்த காவலர்; உளம் குளிர உணர்வொளிர வளம் பொலி தீஞ்சுவை மலியும் கவிகள் தரும் பாவலர். அருளேபோல் தெருளறிவுச் சிறப்பு மிகு சிந்தைச் செல்வர். அறவாழி அந்தணன் தாள் மறவாத வாழ்க்கையினர். அனவரதம் தனை மறந்து பிறர்க் கருளும் பெருமிதத்தில் திளைத்துவப்பர். பாசம் அறுத்தறன் ஆற்றும் ஆசையினால் பிறர்க்குழைக்கத் துறவு பூண்டோர்.

அடுத்து மிகச் சுடும் சுடரும், இரவல் ஒளி மறு மதியும் தொழும் மாந்தர், நெடு விசும்பில் தூரத்துப் பேரொளியார் நாண்மீனின் பெருமையினை அறிய ஒல்லார். அதுபோல, தற்காலத் தமிழ்வானில் தன்னொளிகால் தனிச்சுடராய் இலங்கி மறைந்தவர் அருமை தமிழர் பலர் அறியகில்லார். பரவெளியில் அளவறியாத் தூரத்து வளர் சுடரைச் சேய்மை தெளி பளிங்கினால் தேர்பவர் போல், சால்பாயும் சிந்தையினால் நாளடைவில் இவர் பெருமை நயந்தாய்வோர் தெளித்து தேர்வார்.

அடிகளுயிர் கடவுளடி நிழலில் இனிதமர்ந்து அமைதி உறுவதாக. அவர் புரிந்த அரும் செயலின் பயன் பெருகத் தமிழும் வாழ்க.

(அடிகள் பிரிவாற்றாமல் என் மகள் எழுதும் கடிதப் பகுதி)

சென்னை,

2-8-47.

அன்புள்ள அப்பா அவர்களுக்கு, வணக்கம்,

இங்கு லம்; தங்கள் நலமறிய ஆவல்.

விபுலாநந்தர் இறந்தார் என்ற விஷ யம் இன்றுதான் ஒரு Magazine-ல் வாசித்தேன், ஆனால் கூட என்று இறந்தார் என்பது இன்றும் தெரியவில்லை. எனக்கு என்னமோ யாரோ சொந்தக்காரர் இறந்துவிட்டார்போல வருத்தமாய் இருக்கிறது. அழுகை அழுகையாய் வருகிறது. ஏனென்று தெரியவில்லை. நான் விபுலானந்தரோடு பழகாவிட்டாலும், உங்களிடம் பேசிக்கொள்வதிலிருந்து அவரிடம் அபாரமான மதிப்பு வைத்திருந்தேன். இப்போது என்னவோ போலிருக்கிறது. அவர் நூல் முடிவதற்காகவே கடவுள் அவரை இதுவரை உயிரோடு வைத்திருந்தார் போலிருக்கிறது. மாளவியா இறந்த அன்றே நீங்கள் அவருக்காக வீட்டில் துக்கம் கொண்டாடவில்லை என்று வருத்தப்பட்டீர்கள், அதனால் நீங்கள் கட்டாயமாக இவர் இறந்ததற்கு வீட்டில் என்னவாவது செய்திருப்பீர்களென்று நினைக்கிறேன். தயவு செய்து என்றிறந்தார் என்ற செய்தி முழுவதும் எழுதி அனுப்புங்கள்.

நம் மக்களுக்கு ஒன்றிலுமே கவனம் இருப்பதில்லை. நாடு மொழி எது எக்கேடு கெட்டாலும் பரவாயில்லைப்போலிருக்கிறது. இங்கேயிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களுக்கு, விபுலானந்த ரென்றால் யாரென்று கூடத் தெரியவில்லை .

நல்ல வேளை நான் உங்கள் மகளாகப் பிறந்தேனேயென்று மகிழ்ச்சியடைகிறேன். இல்லா விட்டால் இவர்களைப் போல் நானும் மக்காகத் தானே இருப்பேன். யாரோ ஒரு பர்மா Leader இறந்து விட்டார் என்று எங்களுக்குக் காலேஜில் எல்லோருக்கும் (Black Flag) கறுப்புக் கொடி கொண்டு வந்து கொடுத்தார்கள், விபுலானந்தர் இறந்து விட்டார் என்று இரண்டு பேர் பேசிக் கொள்வதைக்கூட நான் இதுவரை கேட்கவில்லை, தமிழ் என்றால் ஒருத்திக்கு என்ன என்று கூடத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தான் தமிழ்ப் பெண்ணாக இருப்பதால் தமிழுக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் சிறிதுண்டு . அவள் மட்டும். A great Tamil Scholar is dead' என்று நான் சொன்ன உடன், "So sad' என்றாள். வேறே ஒருத்தருக்கும் அது கூடச் சொல்லத் தெரியவில்லை........ தமிழுக்கு ஆக்க வேலை ஒருவரும் செய்ய முயற்சிப்பது கூட இல்லை. நான் திருக்குறள் வாசிப்பதைப் பார்த்து விட்டு ஒருத்தி , "Is it a prayer Book like Bagavatgita?") இதைபோல் பிரார்த்தனைப் புத்தகமா இது? என்று கேட்கிறாள், இங்கே தமிழ்ப் பெண்கள் திருக்குறளை இப்படிக் கேட்கும் நிலையிலிருக்கிறார்கள்...

உங்கள் அன்புள்ள மகள்,

(ஒப்பம்) லலிதா.

2-08-1947

மூலம்: ஈழமணி  இதழ் தை - மாசி 1948




December 19, 2021

நாவலர் மீண்டும் வரவேண்டும்!

 நாவலர் மீண்டும் வரவேண்டும்!

 - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை -

1985 திசம்பர் 4 "நாவலர் குரல்" இதழில் வெளிவந்த கட்டுரை:

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித்தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் அதேயிடத்தில் இருந்து கொண்டே சொல்லிக்கொண்டே இருப்பாரேயானால், நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும். இவ்வாறு நாவலர் மரபின் கொழுந்தாக வாழ்ந்த தவமுனிவர் பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரகேசரி வாரமலரில் எழுதிய கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிதமணி ஐயா அக் கட்டுரையில் பின்வருமாறு தொடர்கிறார்:

“நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமுண்டா?' என்ற தலைப்பில் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் 13-10-85 ஞாயிறு வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையில் எனது பெயர் பல இடங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில்,

''தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பவனி சென்று தம் இஷ்ட தெய்வத்தின் சந்நிதியிலே தான் திருவாவடுதுறை ஒதுவார்களைக் கொண்டு தேவார பாராயணமும் மாகேசுர பூசையும் நடத்துவித்த தெற்கு வீதியிலே எழுந்தருளி இருந்த நாவலர் பெருமானை - ஐந்தாங்குரவரை - தமிழ்ப் பேரறிஞரை - தேசியத் தலைவரை எந்தவிதமாக அப்புறப்படுத்தினார்கள் என்பதைக் கேட்க இன்று யாரும் இல்லையோ? நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமில்லை என்று எல்லோரும் மௌனம் பூண்டுவிட்டார்களா?

இந்நிகழ்ச்சியை அறிந்த ஒரு பேருள்ளம் திருநெல்வேலியிலே நிச்சயமாக அழுது கொண்டிருக்கும். அவ்வுள்ளம் நாவலர் உள்ளம். இன்றைய நிலையிலே அவ்வுள்ளம் வாய்விட்டு யாது கூறுமோ? நாவலர் பெருமானை எங்களுக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தது அவ்வுள்ளம்" - என்ற பகுதி என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. அதன் காரணமாக யான் சில கருத்துக்களையேனும் வெளியிட வேண்டிய நிலையில் உள்ளேன்.

நாவலர் காவியப் பாடசாலையில் உண்டியும் உறையுளும் பெற்று வளர்ந்தவன், வாழ்ந்தவன் என்ற பாக்கியத்தினால் நாவலர் சிலை திறப்பு விழாவை ஒட்டிய பெருவிழாவைத் தொடக்கிவைக்கும் ஒரு சந்தர்ப்பம் 1969 யூன் 26 இல் எனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதினேன்.

குறித்த விழாவின் தொடக்க உரையில் “நம்மிடம் சிறிதே தவம் இருந்ததனாற் போலும் நாவலர் பெருமானின் ஆத்மசக்தி நமக்கிரங்கி நமக்கு வழிகாட்டும் பொருட்டு, நம் முன்னிலையில் உதயஞ் செய்கிறது. உயர்ந்த இராஜோபசாரங்களுடன் இலங்கைத் தலைநகரிலிருந்து புறப்பட்டு வீதிகள் தோறும் திருவுலாச் செய்து, புஷ்பாஞ்சலிகளும் புகழ்மாலைகளும் பெற்று இங்கே எழுந்தருளியிருக்கிறது.

தமிழரசர்கள் அரசுபுரிந்த யாழ்ப்பாணத்தில் எழுந்தருளியிருக்கிறது. தமிழரசர்களின் இராஜதானியாய் விளங்கியதும் நாவலர் பெருமான் அவதரித்ததும் தமிழ்முருகு அரசு வீற்றிருப்பதுமான நல்லூரை நோக்கி எழுந்தருளியிருக்கின்றது.

நல்லைக் கந்தன் திருவீதியிலே ஆறுமுகப்பெருமானின் திருக்கோயில் நோக்கியவாறே அப்பெருமானை அஞ்சலி செய்து கொண்டே நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் அமர்ந்திருப்பார்.

வேலும் மயிலும் துணை என்கின்ற அருமந்த வாக்கியத்தைக் கந்தபுராணம் முற்றுப் பெறுகின்ற இடத்தில் அமைத்து, கந்தபுராணத்தையும் கச்சியப்பப் பெருமானையும் உச்சிமேல் வைத்துப் பூசிக்கச்செய்த நாவலர் பெருமான் அழகுக்கு அழகுசெய்யும் கலைப் பொக்கிஷமான மணி மண்டபத்தில் நமக்கு என்றும் வழிகாட்டியாய் நம் நோக்கங்கள் முளை கொண்டு வளர அபயம் அளித்து அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

நாவலர் பெருமான் நல்லூர்க் கந்தசாமி கோயில் அமைப்பையும் சில நடைமுறைகளையும் எதிர்த்தவரேயன்றி (ஆறுமுநாவலர் பிரபந்தத்திரட்டு, நல்லூர்க் கந்தசாமி கோயில்) நல்லூர்க் கந்தசுவாமியரை எதிர்த்தவரல்லர். கோயிலாரை வேண்டுமென்றே எதிர்த்தவருமல்லர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில், மணி மண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித் தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் மீண்டும் அதேயிடத்திலிருந்து சொல்லிக் கொண்டு இருப்பாரேயானால் நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும்.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

1985 திசம்பர் 4 நாவலர் குரல்


November 08, 2021

1980 மொசுகோ ஒலிம்பிக் போட்டி

1980 சூலை 24 லெனின் விளையாட்டரங்கில் தடகள விளையாட்டும், 1980 சூலை 25 தினாமோ விளையாட்டரங்கில் காற்பந்துப் போட்டியும் பார்த்த நுழைவுச் சீட்டுகள், என்னுடைய "திரங்குப் பெட்டியில்" இருந்து கண்டெடுத்தவை.







November 04, 2021

விபுலாநந்தரும் கலைச் சொல்லாக்கமும்

சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

திருவாங்கூர் திவான் சேர் சி. பி. இராமசாமி ஐயர் இம்மாநாட்டைத் தொடக்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன.

சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார்.

கொழும்பு கல்வித்துறையில் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய கீ. சி. இராமசாமி ஐயர் கணிதக் கலைச்சொல் நூற்குழுத் தலைவராக இருந்தார்.





July 17, 2021

சோழ மண்டலத்துத் தமிழும் ஈழ மண்டலத்துத் தமிழும் - விபுலாநந்தர்

சோழ மண்டலத்துத் தமிழும் ஈழ மண்டலத்துத் தமிழும்

- சுவாமி விபுலாநந்தர் -

கலைமகள் 1941 சனவரி இதழில் வெளிவந்த கட்டுரை.