August 22, 2006

தங்கத் தாத்தாவின் கத்தரி வெருளி


தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளிப் பாடலை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த அழகான பாடல் மழலைகள் பாடி அழகாக இசை அமைத்திருக்கிறார் கனடாவிலிருந்து கிரிதரன் அவர்கள். பாடலின் வரிகளை முதலில் பார்ப்போம்:

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நன்று
காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்!

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்! - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்!

வட்டமான பெரும் பூசனிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்! - தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

கட்டியிறக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்! - இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ?

வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே

நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.

பாடலை அழகாகப் பாடிய மழலைகள்: பைரவி (13வ), நீரோ (13வ), ரம்யா (6வ).

பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்:
கத்தரி வெருளி

இந்த மழலைகளின் வேறும் சில பாடல்களைக் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்:
tamilkids.tripod.com/music/


August 05, 2006

தெற்கிலங்கையின் சைவாலயங்கள்

ஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று விஷ்ணுகோயிலாக மாற்றப்பட்டு தென்னிலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயமாக விளங்குகின்றது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருந்த இந்த தொண்டேஸ்வரம் நம்மில் பலர் அறியாத ஒன்று. இவ்வாலயம் தற்போதய மாத்தறைப் பகுதியில் உள்ள தெவிநுவர என்ற இடத்தில் அமைந்திருந்தது. இது தேவந்துறை, தேவநகர, Dondra Head (தேவேந்திரமுனை) என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. தேவந்துறை என்பது இறைவன் இறங்கிய துறை எனப் பொருள்படும்.

திறந்தவெளிக் கோயிலாக அமைந்திருந்த இக்கோயில் பின்னர் சந்திரசேகரர் கோயிலாக உருமாறியது. மாத்தறைப் பகுதியில் விஜயன் சந்திரசேகரர் ஆலயத்தை அமைத்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

கி.பி. 150 ஆண்டுகளில் வாழ்ந்த தொலமி தனது குறிப்புகளில் இக்கோயில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 14ம் நூற்றாண்டில் இலங்கையில் பயணம் மேற்கொண்ட இபின் பட்டுட்ட என்ற அரேபியர் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் அங்கு நடைபெற்ற வருடாந்த விழா பற்றியும் விபரித்துக் கூறுகின்றார். இவரது குறிப்புகளின்படி அப்பகுதியில் பெருமளவில் இந்துக்கள வாழ்ந்தார்கள் எனவும், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வழிபாடு நடத்தியதாகவும், பொற்கொல்லர்கள், நடனமாதுக்கள் இருந்ததாகவும் அறியக் கூடியதாகவுள்ளது.

தெவிநுவரவில் 1998 நவம்பரில் தொண்டேஸ்வரம் நந்தி ஆகழ்ந்தெடுக்கப்பட்டதாக News Lanka என்ற லண்டன் வார இதழ் ஒன்று 5 நவம்பர் 1998 ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாத்தறைப் பகுதி மட்டுமன்றி காலி நகரில் இருந்து கதிர்காமம் வரை உள்ள பிரதேசம் சைவர்களின் ஒரு புண்ணிய பூமியாக விளங்கியது எனலாம். தமிழ்க்கடவுளான முருகனை அடைவதற்கென வள்ளி அவதாரம் செய்த வள்ளிமலை, முருகன் வேடனாக, வேங்கையாய் நாடகமாடிய கதிர்காமம், முருகனுடன் வள்ளியை விநாயகர் சேர்த்து வைத்த செல்லக்கதிர்காமம் ஆகியன இப்புண்ணியபூமியில் அடங்குவன.

புத்தசமயம் பிறப்பதற்கு பல காலத்துக்கு முன்பே கதிர்காமம் ஒரு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கியது. புத்தர் இலங்கையில் விஜயம் செய்த 16 இடங்களில் கதிர்காமமும் ஒன்று என்று பேராசிரியர் பரணவிதாரண குறிப்பிடுகின்றார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலம் தனது நூலில் இலங்கையில் முருக வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இருந்தது எனவும், எல்லாப் புத்தவழிபாட்டுத் தலங்களிலும் கொண்டாட்டங்களிலும் இது முக்கிய இடம் பெற்றது என்றும் 18ம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கனால் புத்தரது தந்தம் கண்டிப் பெரஹரவில் அறிமுகப்படுத்தும் வரை கண்டிப் பெரகரவில் கூட முருகன் முக்கிய இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த அனுமன் காலியில் இருந்த மீனாட்சிசுந்தரரை வணங்கினான் என்பது ஐதீகம். வேறு மலையொன்றும் அற்ற காலி நகரில் கடற்கரையில் கம்பீரமாக ஒரு மலை காணப்படுவதும் அம்மலை சிங்களத்தில் "உண வற்றுணா" (நோய் அகன்றது) என அழைக்கப்படுவதும் இதை உறுதி செய்கின்றன.

இன்று கதிர்காமம், தொண்டேஸ்வரம் இந்துக் கோயில்களாக இருந்தது என்பது பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மாறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

தொண்டேஸ்வரம் பற்றிய மேலதிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.