December 29, 2009

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மன்னனின் கல்லறை கண்டுபிடிப்பு

வட சீனாவை 1,700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட சாவோ சாவோ என்ற புகழ் பெற்ற மன்னனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


சாவோ சாவோ மன்னன் (கிபி 155–220)சீன தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8.000 சதுர அடி பரப்புள்ள கல்லறைத் தொகுதி ஒன்றில் இம்மன்னின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் ஆன்யாங் என்ற பழம்பெரும் தலைநகரத்திகுக் கிட்டவாக சிகாசூ என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கக் கல்லறைக்குச் செல்வதற்கு 130 அடி பாதை ஒன்றும் உள்ளது.


கல்லறையில் மூன்று மனிதர்களின் உடல்கள் உள்ளன. 60 அகவை மதிப்புடைய ஆண், 50 மற்றும் 25 அகவை மதிப்புடைய இரு பெண்களுடைய உடல்கள் அங்கு காணப்பட்டுள்ளன.


இவை அநேகமாக கிபி 220 ஆம் ஆண்டில் இறந்த சாவோ மன்னனின் உடல் எனவும், 230 ஆம் ஆண்டில் இறந்த அவனுடைய மனைவி, மற்றும் அவர்களின் தாதி ஆகியோருடையதாக இருக்கல்லாம் என தொல்பொருளியலாலர்கள் தெரிவித்துள்ளனர்.


சக்கரவர்த்தி சாவோ சாவோ (155–220) ஒரு கவிஞனாகவும் இருந்திருக்கிறான். ஹான் வம்சத்தின் வீழ்ச்சியின் பின்னர் வடக்கு சீனாவின் பெரும் பகுதியை இவன் கூட்டிணைத்து ஒற்றுமைப்படுத்தியிருந்தான்.


சென்ற ஆண்டு டிசம்பரில் இந்த இடம் அகழ்வாய்வுக்கு உட்படுத்தியதில் இருந்து இங்கு 250 இற்கும் மேற்பட்ட புராதனச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொன், மற்றும் வெள்ளியினாலான பாத்திரங்கள், மற்றும் பொருட்களும் அடங்கும்.


சாவோ காலத்து நிகழ்வுகளைக் குறிக்கும் கல் ஓவியங்களும் சாவோவின் தனிப்பட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


"இதுவரை கிடைக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து இக்கல்லறை சாவோ சாவோவினுடையது என நாம் திட்டவட்டமாகக் கூற முடியும்," என சீன அரசின் கலாச்சார மரபுப் பாதுகாப்புக்கான நிறுவனத்தின் பதில் தலைவர் குவான் கியாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.

October 13, 2009

தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்திகள்

தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி வகை ஒன்று பற்றிய தகவல்களை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.


"பகீரா கிப்லிங்கி" (Bagheera kiplingi) எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும், மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40,000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.


இது குறித்த ஆய்வுக் கட்டுரை "நடப்பு உயிரியல்" என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில், பென்சில்வேனியாவின் விலனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


பாயும் "சிலந்திதேள் வகுப்பு" (arachnid) வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலத்தியே வர வேண்டியிருக்கிறது.


இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் கறியின் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கறி இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், "தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே" எனத் தெரிவித்தார்.


"இவை பாயும் சிலந்திகளாதலால், தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை."


"அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை." இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் ராபர்ட் கறி.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.

August 04, 2009

தமிழில் விக்கிசெய்தி - நீங்களும் செய்தி எழுதலாம்


விக்கிசெய்தி என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை வெளியிடும் விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு சகோதரத் திட்டம். இது இப்போது தமிழிலும் கிடைக்கிறது.


விக்கிசெய்தி உங்களால் எழுதப்பட்ட சுயாதீன செய்தி மூலம். இங்கு நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற ஒருவரால் எழுதப்பட்டவையே. இங்குள்ள எந்த ஒரு கட்டுரையையும் நீங்கள் திருத்த முடியும், அல்லது விரிவாக்க முடியும்.

இரு வகை செய்திக் கட்டுரைகளை நீங்கள் எழுதலாம்:


1. ஒரு செய்தி தொடர்பாக பல்வேறு நம்ப தகுந்த ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை வைத்து ஒரு தொகுப்பு செய்திக் கட்டுரையை எழுதலாம். ஊடகங்களை மேற்கோள்காட்டுவது அவசியமாகும்.


2. ஒரு செய்தி நிகழ்வைப் பற்றி நீங்கள் நேரடியாக பதிவு செய்யலாம். இயன்றவரை தகுந்த ஆதரங்களை வழங்குங்கள்.


இத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு செய்திகளை எழுத ஆர்வமுள்ளோரை அழைக்கிறேன். உங்களுக்கு விரும்பிய ஒரு துறையில் செய்திகளை எழுதலாம். சட்டமும் ஒழுங்கும், பண்பாடு, பேரிடர் மற்றும் விபத்து, பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவம், அரசியல், அறிவியல், ஆன்மிகம், விளையாட்டு இப்படி எத்துறையிலும் செய்திகளை எழுதலாம்.


செய்தியாளராக வருவதற்கு விருப்பமிருக்கிறதா? வாருங்கள் விக்கிசெய்திகளுக்கு.

http://ta.wikinews.org/

அண்மையில் எழுதப்பட்ட சில செய்திகள்:

1. மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை
2. உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி கனாரி தீவுகளில் அமைக்கப்பட்டது
3. இந்தியாவில் புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது
4. டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு?
5. நிலநடுக்கம் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா நோக்கி நகர்த்தியது
6. வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது

May 01, 2009

சிட்னி மாநகரில் சாலை மறிப்புப் போராட்டம் - 1 மே 2009

இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மே 1 வெள்ளிக்கிழமை பிற்பகல் சிட்னி தமிழ் இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்போராட்டம் சாலை மறிப்புப் போராட்டமாக மாறியது. சிட்னியின் நகர மையத்தில் அமைந்துள்ள சன நெருக்கடி மிகுந்த நகர மண்டபத்துக்கு முன்னால் ஜோர்ஜ் வீதியின் குறுக்கே மக்கள் அமர்ந்து சாலை மறிப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனால் ஒன்றரை மணி நேரம் ஜோர்ஜ் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

காணொளி: Sydney Protesters blocked George Street

April 17, 2009

கான்பராவில் வரலாறு காணாத பேரணி; உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது

வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராக சிட்னி, மெல்பேண் இளையோர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுத்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் 2009 ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்திற்கு கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிட்னி, மெல்பேர்ண், கான்பரா ஆகிய நகரங்களில் இருந்து கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தெய்வீகன், சுதா, பிரதீபன் ஆகியோர் வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரிகளுடன் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கலந்துரையாடினர். இச்சந்திப்பு தொடர்பாக பஞ்சலிங்கம் தெய்வீகன் தெரிவிக்கையில், தமது தன்னிச்சையான முடிவுகளைக் காட்டிலும் தமது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானங்களை எடுப்பது வழமை என்றும் இருந்த போதிலும் அதற்கு தமது நாடு தன்னாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர்கள் உறுதியளித்ததாக கூறினார்.

இதனையடுத்து உண்ணாநிலைப் போராட்டம் பழச்சாறு கொடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

முழுமையான செய்திகள்:

Canberra hunger strike ends on an assurance from DFAT Officials

Emotions run high at Canberra rally

புதினம்

April 08, 2009

சிட்னியில் மீண்டும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கையில் உடனடியானதும் நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி சிட்னி மாநகரப் பகுதியில் எலிசபத் வீதியில் உள்ள கைட் பாக் மைதானத்தில் இன்று 2009 ஏப்ரல் 08 புதன்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரையில் தமிழ் இளையோர் ஒழுங்கு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கு பற்றி தமது ஆதரவைத் தெரிவித்தனர். சிட்னியின் மக்கள் நெருக்கடி மிகுந்த எலிசபெத் வீதியின் (மார்க்கெட் வீதிக்கும் பார்க் வீதிக்கும் இடைப்பட்ட) பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. காவற்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் எமது மக்களின் எழுச்சிப் போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களான தொலைக்காட்சி சேவை 9, சேவை 10, சேவை 7, சிறப்பு தொலைக்காட்சிச் சேவை, ஏபிசி மற்றும் சிட்னி மோர்னிங் எரால்ட், வானொலி சேவை 2யூஈ ஆகிய ஊடகங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. "தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்" என்று முழங்கியபடி மாலை 6:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.
சிட்னி மோர்னிங் எரால்ட் பத்திரிகைச் செய்தி (காணொளியுடன்)

March 28, 2009

சிட்னியில் மாபெரும் உரிமைக்குரல் பேரணி

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னி மாநகரில் சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணி இன்று 2009 மார்ச் 28 சனிக்கிழமை மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. இதில் ஆறாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11:00 மணிக்கு மார்ட்டின் பிளேசில் இருந்து புறப்பட்ட இப்பேரணியானது எலிசபெத் வீதியூடாக பார்க் வீதியை அடைந்து அங்கிருந்து ஜோர்ஜ் வீதி வழியாக நகர சபை தொடருந்து நிலையத்தை தாண்டி நகர சபை மண்டபத்தின் வெளிப்புறத்தை அடைந்தது.

சோசலிச கூட்டமைப்பு எனும் அமைப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்கும் வகையிலான செயற்பாடுகளைச் செய்தனர்.


நிகழ்வின் இறுதியில் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த ஜானு, ஏட்றியன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த மயில்வாகனம் தனபாலசிங்கம், அவுஸ்திரேலிய தமிழர் மருத்துவ நிதியத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி மனமோகன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் அனைத்து மக்களும் ஒருமித்து விண்ணதிர முழக்கங்களை எழுப்பி "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனக்கூறி நிகழ்வு நிறைவடைந்தது.

மேலும் சில படிமங்களை பிக்காசா இணைய ஆல்பத்தில் பார்க்கலாம்.