December 18, 2017

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் (திசம்பர் 18, 1822 - திசம்பர் 5, 1879) அவர்களின் 194-வது பிறந்தநாள் இன்று 2017 திசம்பர் 18.

தமிழகத்தில் இருந்து வெளியான 1939 ஆம் ஆண்டின் "சக்தி" இதழில் இக்கட்டுரை வெளிவந்தது.
 
 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
1822-1878

(ஸ்ரீ ஸி. எஸ். ஜகதீசசுந்தரம் பிள்ளை)


ழநாட்டின்கண் செம்மை நிறைந்த, புலமை மலிந்த, சைவம் பழுத்த, தமிழ் வளர்த்த சைவப் பெரியார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரே. தமிழர்கள் மாண்பினையும், நிலையினையும், வாழ்க்கையினயும் உயர்த்திச் சமயப் பற்றுள்ளவர்களாக்கின உத்தமத் தமிழ்நாவலர் இவரே. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற மூதுரையைத் தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு நம் தமிழ் நாட்டிற்காக உழைத்த மகான், நாவலர் பெருமான் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

உரைநடை நூல்கள் மிகக் குறைவாயிருந்த அக்காலத்தில் - எடுத்த தெல்லாம் செய்யுள் வடிவிலேயே அமைந்து கிடந்த அக்காலத்தில், சிறுவர் வகுப்புக்குப் புத்தகங்களெழுதிச் சிறுவர்களையும், சொல்வன்மை பொருள் வன்மை மிகுந்த நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் முதலிய புராணங்களைக் கத்திய ரூபமாக்கிப் பெரியோர்களையும் மகிழச் செய்து தமிழை வளர்த்துவந்தார். இம்மட்டோ இறந்துபட்டொழியவிருந்த ஏட்டுப் பிர திகளிலுள்ள அநேக நூல்களைப் பரிசோதித்து வெளியிட்டார். அன்றியும் அநேக நூல்களுக்கு எளிதிற் பொருள் விளங்கப் புத்துரை செய்தும் சைவ மதத்தை வளர்த்தற்கு ஆவசியகமான நூல்களைத் தாமே இயற்றியும் வெளிப்படுத்தினார்.

ஆங்கில பாஷையிலே காணப்படுகிற கமா, ஸெமிகோலன், கோலன், டாஷ், புல்ஸ்டாப் முதலிய, வாக்கிய லக்ஷணத்திற்கு மிகவும் இன்றியமையாத, குறியீடுகளை முதன்முதலில் தமிழ் வசன நடையில் நன்கு உபயோகப் படுத்தினவர் இப் பேரறிஞரே. நாவலர் காலத்துக்கு முன்னர் குறியீட்டிலக்கணங்கள் தமிழ் வசனங்களிலே செவ்வனே இடம் பெறாதிருந்தன. வி. கோ. குரியநாராயண சாஸ்திரியாரும் தமது 'தமிழ் மொழி வரலாறு' என்னும் நூலின் கண்ணே,

''ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளிலே மிகவும் பிரயோசனமுற்றதாகக் காணப்படுகிற குறியீட்டிலக்கணம் தமிழின்கண் முழுதுந் தழுவிக் கொள்ளப்படுதல் வேண்டும். அதனால் பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியு முண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த நூலின்கண் ஆர்வமுண்டாகின்றது. இக் குறியீட்டிலக்கண மெல்லாம் வசனநடை கைவந்த வள்ளலாராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களாலே முன்னரே மேற்கொண்டு வழங் கப்பட்டுள்ளன'' என்று நாவலரவர்கள் வசனச் சிறப்பினைச் சிறப்பித்துப் போந்தார்.

நம் நாவலர் இயல்பான ஆற்றொழுக்காகச் செல்லும் உரைநடை கைவரப் பெற்றவர். அவர் உரை நடை புல்லறிவாளரும் எளிதில் வாசித்து உணர்ந்து கொள்ளும்பொருட்டுச் சந்தி விகார மின்றிச் சொற்கள் பிரிக்கப்பட்டிருக்கும். அவருடைய தீஞ்சுவைத் தமிழ்நடையை என்னென்பது!

சந்தானகுரவர் நால்வரும் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபஃது, சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய சைவசித்தாந்த சாத்திரங்களை அருளிச் செய்து, எல்லாச் சமயங்களையும் கடந்து நின்றது சித்தாந்த சைவ சமயமென்று சாதித்தார்கள்.
அதன் பின்னர், நமச்சிவாய தேசிகர், சிவஞான முனிவர், மாசிலாமணித் தேசிகர், ஞானப்பிரகாச முனிவர், குமரகுருபர சுவாமிகள் முதலிய மகான்கள் பஞ்ச கிருத்தியங்களையுஞ் செய்யும் கர்த்தாவாகிய சிவபெருமானே சர்வலோக நாயகரென்றும், அவரை வழிபடு மார்க்கமே முத்திமார்க்க மென்றும் அவரை வழிபடும் அடியார்களே மெய்யடியார்களென்றும் தெளிந்து, அவருடைய பெருமையைத் தங்கள் நூல்களாலும் உரைகளாலும் உணர்த்தி அடியார்களுக்குப் போதித்துச் சென்றனர்.

நாவலர் காலத்தில் சைவ சமயிகளுட் சிலர் பரமத நூல்களைக் கற்றுத் தங்கள் வாணாட்களை வீணாட்களாகக் கழித்து ‘கண்டதே காட்சி கொண்டதே கோலமாக’ இருந்து வந்தனர். இதனைக் கண்ட நாவலர் பெருமான் மனம் பொறாது அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த வெண்ணி, பரசமயிகளோடு சமய வாதங்கள் செய்து வென்றார். பரசமயத்திலே புகுந்தவர்களுக்கும், புகவெண்ணியவர்களுக்கும் உண்மைச் சமயமாகிய சைவ சமயத்தைப் போதித்து அவர்களைத் திருத்தினார். இதுவுமன்றி, பற்பல விடங்களுக்குச் சென்று பல்லோர் நிறைந்த அவைக் களத்தின்கண், சபைக்குப் பணிவுடைமையும் கம்பீரமும் முகத்திற் றோன்ற, இனிய ஓசையுடன் சொற்சுவையும் பொருட்சுவையும் தொடை நயமும் அமைய, எதுகை, மோனை, மடக்கு முதலிய செய்யுளி லிலக்கணங்களை இடையிடையே செறித்து, அமிர்ததாரை வர்ஷித்தது போலச் சைவசித்தாந்த உண்மைகளைப் பிரசங்கித்தார்; தேவாலயந் தோறும் புராணப் பிரசங்கமுஞ் செய்தார். இவருடைய முதல் பிரசங்கம் பிலவங்க வருடம் மார்கழி 18உ (ஜனவரி 1848) சுக்கிரவாரத்தில் வண்ணார்பண்ணையிலுள்ள சிவாலயத்திலே நடந்தது. அன்று முதல் ஒவ்வொரு சுக்கிரவாரமும் நியமமாகச் சைவப் பிரசங்கஞ் செய்து வந்தார்.

கேட்டார் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

என்ற பொய்யாமொழியை பொய்யாமொழியாகச் செய்துள்ளார்.

நாவலர் காலத்தில் தென்னிந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களெல்லாம் ஒவ்வொரு உபாத்தியாயரால் தெருத் திண்ணைகளிலும் கொட்டில்களிலும் வைத்துப் பிள்ளைகளின் சம்பளம் பெற்றுக்கொண்டு படிப்பிக்கு மிடங்களாயிருந்தன. படிப்பிக்கப்படும் நூல்களோ ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களும் சேந்தன் திவாகரம், எண்சுவடி முதலிய கருவி நூல்களுமேயாம். கற்பிக்கும் ஆசிரியர்களோ உபாத்தியாயரின் பிரதிநிதிகளாகிய சட்டாம்பிள்ளைகளே யாவர். சைவசமய வொழுக்க நூல்கள் அங்கே கற்பிக்கப் படவில்லை. சைவ சமயிகள் சைவ நூல்களைக் கற்பதில்லை. கற்றறிந்த சிலர், யாவரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி சமயாசாரங்களைப் பிறருக்கு இலகுவில் கற்பிப்பதில்லை. சிறுவராயிருக்கும் போது இவைகளை யெல்லாம் அனுபவித்துணர்ந்த இப்பெருந்தகையாளர், தமிழ் நாடெங்கும் பாடசாலைகளைத் தாபித்து, பிள்ளைகளுக்குச் சமய நூல்களையும், அவைகளுக்கு வேண்டும் உப நூல்களையும், லைகீக நூல்களையும் கற்பித்தல் அவசியமென்றெண்ணி, கற்றறிந்த பெரியோர்களை உபாத்தியாயராக நியமித்து, யாழ்ப்பாணத்திலே வண்ணார்பண்ணையில் இலவச வித்தியாசாலை யொன்றைத் தாபித்தார். அது சைவப் பிரகாச வித்தியாசாலை யென்னும் பெயருடன் விளங்குவதாயிற்று. அச்சமயத்தில் வர்த்தகசாலை யொன்று விற்பனைக்கு வந்தது. அதனைத் தம்முடைய வித்தியாசாலையின் அபிவிருத்திக்காக வாங்க விரும்பினார். கையில் போதிய பணம் இல்லை. அதனால் மனம் வருந்திப் பூசையிலே தமது உடையவரை நோக்கி யழுது,

"மணிகொண்ட கடல்புடைகொ ளிந்நாட்டி
      லுன்சமய வர்த்தன மிலாமை நோக்கி
மகிமை பெறு நின்புகழ் விளங்குவான் கருதியிம்
      மைப்பொருட் பேறோழித்தே
கணிகொண்ட வித்தியா சாலைதா பித்திவ்வூர்க்
      கயவர்செயு மிடர்கள் கண்டுங்
கல்லூரி யதைநடாத் தப்பொருட் டுணைசெயக்
      கருதுவோ ரின்மை கண்டும்
அணிகொண்ட சாலைய தொழிப்பினஃ
      துனையிகழு மந்நிய மதத்தர்சாலை
யாமென நினைந்தெனெஞ் சற்பகற்
      றுயருற லறிந்து மொரு சிறிதுமருளாத்
திணிகொண்ட நெஞ்சவினி நின்முன்றா
      னுயிர்விடுத றிண்ணநீ யறியாததோ
சிறியேன தன்பிலர்ச் சனைகொளழ
      கியதிருச் சிற்றம் பலத்தெந் தையே."

என்றொரு செய்யுளைச் சொன்னார், என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர் அழுது புலம்பின அன்றே உதாரகுணம் படைத்த பிரபுவாகிய நன்னித்தம்பி முதலியார் என்பவர் இவ் வித்தியாசாலைக்காக அனுப்பியிருந்த நானூறு ரூபாயும் வந்து சேர்ந்தது. அப் பணத்தைக் கொண்டு வர்த்தகசாலையை விலக்கு வாங்கினார், பின்னும் யாழ்ப்பாணத்தார் உதவிய பொருள் கொண்டு சிதம்பரத்திலும் ஒரு சைவப் பிரகாச வித்தியாசாலை ஏற்படுத்தினர். இவருடைய பெரு முயற்சியினாலே யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத் துறை, கந்த மடம், பருத்தித் துறை, மாதகல், இணுவில் முதலிய விடங்களில் வித்தியாசாலைகள் ஏற்படுத்தப் பட்டன. தமிழ் மக்களுக்கு இவரால் ஏற்பட்ட நன்மைகள் அளவில. சைவ சமயத்தின் உண்மைகளைப் போதித்தும், பிரசுரித்தும், பிரசாரஞ் செய்தும், மற்றும் பலவாறு தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்மக்கள் முன்னேற்றத்திற்குமாக இப்பெருந்தகையார் ஆற்றியுள்ள தொண்டுகள் கணக்கில்லாதனவாகும். இங்கனம் இப் பெருமகனார் தமிழுக்காக ஆற்றின தொண்டினை நினைக்குந்தோறும், தமிழன்னையின் தவப்புதல்வர் என்றும், சமயத்துக்காக உழைத்த உழைப்பினை உன்னுந் தோறும் சமய குரு என்றும் கொண்டாடுதல் கூடும்.

புலவர் கூற்று

நாவலரும் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் ஒரே காலத்தினர்; நட்புரிமையும் பூண்டவர்கள். ஒரு சமயம் நாவலர் தம் ஆர்வலராகிய பிள்ளையவர்களுடன் காவேரியில் ஸ்நானஞ் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது பொழுதோ அதிகாலை; காலமோ பனிக்காலம். பலருடைய தேகமும் குளிரினாலே விடவிட வென்று நடுங்கிற்று. நடுக்குறுதலைக் கண்ட பிள்ளையவர்கள் 'பனிக் காலம் கொடிது' என்று நாவலரைப் பார்த்து நவின்றனர். உடனே கலாவிநோதராகிய நாவலர் 'பனிக்காலம் நன்று' என்று விடையிறுத்தனர். இவருடைய வாக்கு நயத்தையும் விசேஷத்தையுமுணராத உடனிருந்த மாணவர்கள் இரு பிரிவினராகி, 'பனிக்காலம் கொடிது, ஜலகோஷத்தை உண்டாக்கும்' என்றனர் ஒரு சாரார். 'பனிக்காலம் நன்று, தேகத்தைக் குளிரச் செய்யும்; உஷ்ணத்தைத் தணிக்கும்’ என்றனர் மற்ருெரு சாரார். இங்ஙனம் அவர்கள் தத்தமக்குத் தோன்றிய அபிப்பிராயங்களைக் கூறி வாதிப்பதைக் கண்ட நாவலர் என்னென்று வினவ, மாணவர் தம் ஏதுக்களைக் கூறினர்கள். நாவலர், 'நானும் பிள்ளையவர்கள் கூற்றையே வலியுறுத்திக் கூறினேனன்றிப் பிறிதொன்று மில்லையென்று தாம் கூறிய பதத்தை, பனிக்கு-ஆலம்-நன்று” என்று பதம் பிரித்துக் கூறினர்.

பனிக்கு ஆலம் நன்று பனியை விட விஷம் நல்லது. நாவலர் பெருமான் ஹாசியமாகவும் கருத்தொத்தும் உடனுக்குடனே பதிலுரைப்பதில் வல்லுநர் என்பது இதனால் வியக்தமாகிறது.

1939 'சக்தி' இதழில் வெளிவந்தது.

மூலம்: பசுபதிவுகள்

எனது ஆறுமுக நாவலர் வலைப்பக்கம்

December 16, 2017

யார் இந்த கார்ல் பொப்பர் (Karl Popper)?


ருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞான அறிவுக் கொள்கையாளரான கால் பொப்பர் (1902 - 1994) தனது 92 வயதிற் காலமானார். இந்த நூற்றாண்டில் பொப்பரினது சிந்தனையின் ஆளுகைக்குட்படாத அறிவுத்துறையென எதுவுமே இல்லையெனலாம், கலை வரலாறு முதற்கொண்டு மருத்துவம் ஈறாகவுள்ள சமூக, இயற்கை விஞ்ஞானத் துறைகள் அனைத்திலும் பொப்பரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.

விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் தருக்கம் (The Logic of Scientific Discovery), திறந்த சமூகமும் அதன் எதிரிகளும் - (2 பாகங்கள்) (The Open Society and its Enemies), வரலாற்று நியதிவாதத்தின் வறுமை (The Poverty of Historicism), ஊகங்களும் நிராகரித்தலும் (Conjectures and Refutations), சார்பற்ற அறிவு (Objective Knowledge) என்பன பொப்பரால் எழுதப்பட்ட பிரதான நூல்களாகும், பெருந்தொகையான கட்டுரைகளையும் பொப்பர் எழுதியுள்ளார், இவற்றில் சில இவரது மாணவர்களால் தொகுக்கப்பட்டு மூன்று நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன, இம் மூன்று நூல்களும் பொப்பரின் முதனூலான விஞ்ஞான கண்டுபிடிப்பின் தருக்கம் என்பதில் முன்மொழியப்பட்ட வாதங்களிற்கு அனுசரணையாகத் தொகுக்கப்பட்டனவையாகும். "முடிவிலாத் தேடல்" (Unended Ouest) என்ற தலைப்பிலான சுயசரிதையொன்றும் பொப்பரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. இவை தவிர ஜே. சி. ஈசெல்ஸ் என்பாருடன் இணைந்து "உயிரும் அதன் மூளையும்" (The Self and its Brain) என்றதொரு நூலையும் இவர் எழுதியுள்ளார்.

கால் மார்க்ஸ், சிக்மன்ட் ஃபிராய்ட், ஐயன்ஸ்ரைன் என்ற மூவரதும் கண்டுபிடிப்புகளும் இளமை காலத்தில் தன்னை மிகவும் ஆர்கக்ஷவித்தவையாக இருந்தனவென்று தனது சுயசரிதையில் கூறுகிற கால் பொப்பர், இவர்களில் முதலிருவர்களதும் கொள்கைகளைக் காலப்போக்கில் தான் நிராகரித்து விட்டதாகவும், ஐயன்ஸ்ரைன் மட்டுமே உண்மையான விஞ்ஞான மனப்பான்மையுடைய
சிந்தனையாளராகக் காணப்பட்டாரெனவும் குறிப்பிடுகிறார். சமூகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி சில விதிகளின்படி இயங்குகிறதெனக் கருதிய கால் மார்க்ஸ், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கொள்கையை முன்மொழிந்தார். அதே போல சிக்மன்ட் ஃபிராய்ட் என்ற மருத்துவரும் தன்னிடம் நோயாளராக வந்தோரில் கணிசமான தொகையினர் உளநோயுடையவர்களாகவே இருப்பதைக் கண்டு, அவர்களின் உளநோயைத் தீர்க்கும் வகையில் ‘உளப்பகுப்பாய்வு' என்ற செல்வாக்குப் பெற்ற உளவியற் கொள்கையொன்றை உருவாக்கினார். கால் மார்க்ஸும் , ஃபிராய்ட்டும் தமது கொள்கைகள் உண்மையான விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களே என்பதை நிறுவுவதற்கான தமது ஊகங்களிற்குச் சாதகமான தரவுகளைத் திரட்டுவதிலேயே பெரு முயற்சியுடன் ஈடுபட்டனர். தமது கொள்கைகள் பொய்யாகவிருக்கலாம் என்று அவர்கள் கிஞ்சித்தேனும் சிந்திக்கவில்லை. இதுவே கால் மார்க்ஸும், ஃபிராய்ட்டும் விடுத்த பெருந்தவறென பொப்பர் குற்றம் சாட்டுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி எந்தவொரு விஞ்ஞானக் கொள்கையையும் அறுதியாக நிறுவலாமென கருதுவது தவறானது. மேலும் அது விஞ்ஞான மனப்பான்மைக்கு முற்றிலும் எதிரானதென பொப்பர் குறிப்பிடுகிறார்.

தொலமியின் புவிமையக் கொள்கையை நிராகரித்ததாலேயே கொப்பநிக்கசின் சூரியமையக்கொள்கை சாத்தியமாயிற்று. காலம் வெளி பற்றிய நியூட்டனது கருத்தை நிராகரித்ததாலேயே சார்புக் கொள்கை கண்டு பிடிக்கப்படலாயிற்று. புவிமையக் கொள்கையையோ அல்லது நியூட்டனின் காலம், வெளி பற்றிய கொள்கையையோ அறுதியாக நிறுவப்பட்ட உண்மைகளென விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தால் விஞ்ஞானம் இன்றைய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாது. பழைய கொள்கைகள் நிராகரிக்கப்பட்டதாலேயே புதிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு அதனூடாக விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து வருகிறது.

ஐயன்ஸ்ரைன் தனது கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்படலாமென ஏற்றுக் கொண்டிருந்தார். வானத்தின் தொலைதூரத்திலிருந்து வருகிற ஒளியில் சிவப்பு வரி விலகல் காணப்படுவதேன் என்கிற பிரச்சனைக்கு பாரிய வானத்துப் பொருட்களைக் கடந்துவர நேரிடுவதாலேயே ஒளியானது ஈர்ப்பு விசைக்குட்பட்டு வளைந்து வருகிறது. இதுவே திரிசியக் கோட்டில் சிவப்பு வரி விலகலுக்கு காரணமாயிருக்கலாமென ஐயன்ஸ்ரைன் ஊகித்தார். நீண்ட காலம் வெறும் விஞ்ஞான ஊகமாக இருந்து வந்த இவ்விளக்கம் 1919ல் நிகழ்ந்த பூரண கிரகணத்தின் பொழுது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. திரிசியக்கோட்டில் சிவப்பு வரி விலகலிற்கு ஈர்ப்பு விதி காரணமாக இல்லாதுவிடின் சார்புக்கொள்கையின் பொதுத் தத்துவம் தவறானதாக இருக்குமென ஐயன்ஸ்ரைன் எழுதினார். அவதானிக்கப்பட்ட நேர்வினடிப்படையில் தன்னால் மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கையையே நிராகரிக்கத் தயாராக ஐயன்ஸ்ரைன் இருந்தமையே விஞ்ஞான மனப்பாங்கென்று கூறுகிற பொப்பர் பழைய விஞ்ஞானக் கொள்கைகள் பொய்ப்பிக்கப்படுவதன் மூலம் புதிய கொள்கைகளை நாடி விஞ்ஞான அறிவு வளர்ச்சியுறுகிறதென வாதிடுகிறார்.

விஞ்ஞான ஆராய்ச்சி எப்பொழுதும் பிரச்சனைகளிலிருந்தே ஆரம்பமாகிறது. பிரச்சனைகளிற்கான தீர்வைக் காண வேண்டுமெனின் முதலில் அதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். விளக்கம் தீர்விற்கான முன் நிபந்தனையாகுமென கூறுகிற பொப்பர், விஞ்ஞானத்தின் நோக்கம் திருப்திகரமான விளக்கத்தைப் பெறுதலேயென எடுத்துக்காட்டுகிறார். உண்மையான விளக்கம் என்பதற்குப் பதிலாக திருப்திகரமான விளக்கம் என்ற பதத்தை பொப்பர் பயன்படுத்துவதேன் என ஒருவர் கேட்கலாம். பொப்பருடைய அபிப்பிராயப்படி விஞ்ஞான விளக்கங்கள் கொள்கைகள் அனைத்தும் தற்காலிக ஊகங்களேயாகும். எனவே தற்காலிக ஊகங்களை உண்மையான விளக்கம் என்பதிலும் பார்க்க திருப்திகரமான விளக்கமென்பதே மிகவும் பொருத்தமானதென இவர் கருதுகிறார்.

ஒரு விஞ்ஞானப் பிரச்சனைக்குத் தரப்பட்ட விளக்கம் திருப்திகரமான விளக்கமென எவ்வாறு தீர்மானிக்கலாமென்பதற்கு 'நம்பகத்தன்மையுடையதாயிருக்கிற விளக்கமே’ திருப்திகரமான விளக்கமாகுமென பொப்பர் பதிலளிக்கிறார். இதன்படி இன்று நம்பகத் தன்மையுடையதாகயிருக்கிறதொரு விஞ்ஞான விளக்கம் நாளை தனது நம்பகத் தன்மையை இழந்து விடலாம். இதனிடத்தை புதியதொரு விஞ்ஞான விளக்கம் பெறலாம். இவ்வாறே விஞ்ஞானக் கொள்கைகளும் அவதானிக்கப்பட்ட புதிய நேர்வுகளால் (தகவல்களால்) தம் நம்பகத் தன்மையை இழப்பதுடன் புதிய விஞ்ஞானக் கொள்கைகளிற்கு வழிவிடுவதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. இதுவே 'தவறுகளைக் களைவதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகிறதென’ பொப்பர் குறிப்பிடுவதன் தாற்பரியமாகும்.

தவறுகளை களைவதன் மூலமே விஞ்ஞானம் முன்னேறுகிறதெனில், இவ் வளர்ச்சியில் விஞ்ஞானியின் பங்கென்ன வென்பதற்கு, விஞ்ஞானியானவன் எச்சந்தர்ப்பத்திலும் எவ்விஞ்ஞானக் கொள்கையையும் நிறுவ வேண்டுமென முயற்சித்தல் கூடாதெனவும் மாறாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பொய்ப்பிக்கவே முயலுதல் வேண்டுமெனவும் பொப்பர் வாதாடுகிறார். நிறுவ லிற்குப் பதிலாக நிராகரித்தலை வற்புறுத்துவதன் மூலம் பிரான்ஸிஸ் பேக்கன் என்பவரால் தொடக்கி வைக்கப்பட்டு பாரம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த விஞ்ஞான முறைக்குப் பதிலாக பொய்ப்பித்தற்கோட்பாடு என்ற முற்றிலும் புதியதொரு விஞ்ஞான முறையை பொப்பர் முன்மொழிகிறார்.

பாரம்பரியமாக விஞ்ஞான முறையானது ஒன்றையொன்று தொடரும் ஆறு படிமுறைகளைக் கொண்டதாக எடுத்துக் காட்டப்பட்டது. முதலாவது படி நிலையில் நோக்கலும் பரிசோதனையும், இரண்டாவது படிநிலையில் தொகுத்தறிப் பொதுமையாக்கமும், மூன்றாவது படிநிலையில் கருதுகோள் உருவாக்கமும், நான்காவது படிநிலையில் கருதுகோளை வாய்ப்புப் பார்த்தலும் நடைபெற்று அதனடியாக விஞ்ஞான அறிவு பெறப்படுமெனக் கூறப்பட்டது. பொப்பர் இதற்குப் பதிலாக விஞ்ஞான முறையானது முதலாவது படிநிலையில் எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பமாகிறதெனக் கூறி, அப்பிரச்சனை வழக்கமாக ஏலவேயுள்ளதொரு கொள்கையை அல்லது எதிர்பார்க்கையை மறுதலிப்பதாகவே இருக்க வேண்டுமென்கிறார். இண்டாவது படி நிலையில் மறுதலிக்கப்பட்ட பழைய கொள்கைக்குப் பதிலாகப் புதிதாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கை இடம்பெற வேண்டுமென்றும், மூன்றாவது படிநிலையில் புதிதாக முன் மொழியப்பட்ட கொள்கையிலிருந்து பரிசோதிக்கக் கூடிய தரவுகளை உய்த்தறிதல் இடம்பெறவேண்டுமென்றும், நான்காவது படிநிலையில் பரிசோதனை- அதாவது மறுதலிக்கப்படவேண்டிய கொள்கையை, பெறப்பட்ட புதிய தரவுகளினடிப்படையில் நிராகரிக்க முயற்சிப்பது இடம் பெறவேண்டுமென்றும், ஐந்தாவது படிநிலையில் பழைய விஞ்ஞானக் கொள்கையைா அல்லது போட்டியிடும் புதிய விஞ்ஞானக் கொள்கையா எது ஏற்புடையதெனத் தீர்மானிக்கும் தீர்ப்புச் சோதனை இடம்பெற வேண்டுமென்றும் தனது விஞ்ஞான முறை பற்றிப் பொப்பர் விளக்குகிறார்.

விஞ்ஞான முறை பற்றிய பொப்பருடைய விளக்கம் - அதாவது பொய்ப்பித்தற் கோட்பாடு, தொகுத்தறிதலை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான முறை எதிர்நோக்குகிற பிரச்சனைகளைத் தீர்ப்பதுடன், விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுமெனவும் வாதிடப்படுகிறது.

தொகுத்தறிவு முடிவுகள் நிச்சயமான முடிவுகள் அல்லவென்றும், அவை வெறும் எதிர்பார்ப்புக்களே என்றும் டேவிட் கியூம் என்ற நவீனகால மெய்யியலாளர் எடுத்துக்காட்டினார். இவரது அபிப்பிராயப்படி தருக்க நிச்சயம் தொகுத்தறி முடிவுகளிற்கில்லை. அவை உளவியல்சார் நம்பிக்கையால் விளைந்த எதிர்பார்க்கையே. இவ்வாறு கியூமினால் எடுத்துக்காட்டப்பட்ட விமரிசனத்தை கருத்திற்கொண்ட தற்கால விஞ்ஞான முறையியலாளர்கள் நிகழ்தகவுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொகுத்தறி முடிவுகளின் நிகழ்திறத்தை அதிகரிக்க முயன்றனரெனினும், இம் முயற்சியினால் தொகுத்தறிதலிற்கெதிராக கியூமினால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அகற்ற முடியவில்லை. சான்றுகளின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க நிகழ்திறம் அதிகரித்துச் செல்லுமேயொழிய நிச்சயத்தன்மையை அது ஒரு பொழுதும் எய்துவதில்லை. ஒரு விஞ்ஞானக் கொள்கையை அது உண்மையேயெனக் காட்ட ஆயிரக்கணக்கான சான்றுகளைச் சேகரித்தாலும் அதனை ஒருபொழுதும் அறுதியாக நிறுவமுடியாதென்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொப்பர் இப்பிரச்சனை யிலிருந்து விடுபடுவதற்கு பொய்யாக்கற் தத்துவம் பயனுடையதென எடுத்துக்காட்டினார்.

ஒரு விஞ்ஞானக் கொள்கை ஏற்புடையதேயென நிறுவுதற்கு எத்தனை சான்றுகள் தேவைப்படுமென எவராலும் தீர்மானிக்க முடியாதென்பது உண்மையே. ஆனால் அக்கொள்கை பொய்யானதென நிராகரிப்பதற்கு அக்கொள்கையை மறுதலிக்கும் ஒரு சான்று உளதென்று எடுத்துக்காட்டுவதே போதுமானதென்பதால், விஞ்ஞானக் கொள்கையை நிறுவுதற்குப் பதிலாக நிராகரிக்க முயல வேண்டுமென்று கூறுவதன் மூலம் தொகுத்தறிதலிற் கெதிராக கியூமினால் எடுத்துக் காட்டப்பட்ட பிரச்சனையை பொப்பர் தீர்க்கிறார்.

பொப்பரின் அபிப்பிராயப்படி: விஞ்ஞான அறிவின் முன்னேற்றம் ஏலவேயுள்ள விஞ்ஞானக் கொள்கைகளை மறுதலிப்பதன மூலம் புதிய கொள்கைகள் உருவாதற்கு வழியமைத்துக் கொடுப்பதாலேயே சாத்தியமாகும். பழைய கொள்கைகள் நிராகரிக்கப்படாதவரை புதிய கொள்கைகளிற்கு இடமில்லையென்பதால் விஞ்ஞானிகள் தமது ஆய்வை பொய்யாக்கற் தத்துவத்தினடிப்படையிலேயே செய்ய வேண்டியதாகிறதெனக் கூறியதன் பின்னர், பொய்ப்பிக்கப்படுதலே விஞ்ஞானக்கொள்கைகளின் இலட்சணம் என்ற முடிவிற்கு வருகிறார். பொய்ப்பிக்க முடியாதிருக்கும் விஞ்ஞானக்கொள்கையென இதுவரை காலமும் எந்தவொரு கொள்கையும் இருக்கவில்லை. எனவே பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தலே விஞ்ஞானக் கொள்கைகளின் இயல்பெனறும், எந்தவொரு அறிவுத் துறையிலும் பொய்ப்பிக்க முடியாக் கொள்கைகள் உளதென ஒருவர் வாதிடுவராயின் அவ்வறிவுத்துறை விஞ்ஞானமேயல்ல எனறும் பொப்பர் வாதிடுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி மார்க்சிசம் பொய்ப்பிக்கமுடியாக் கொள்கை எனக் கூறப்படுவதால், அது விஞ்ஞானமல்ல (மார்க்சிசத்திற்கெதிரான பொப்பரின் விமரிசனம் ஏற்புடையதல்ல. மார்க்சிசம் என்றால் என்னவெனத் தான் விளங்கிக் கொண்டதொரு கொள்கையையே பொப்பர் விமர்சிக்கிறார். மார்க்சிசம் நியூட்டனதோ அல்லது ஐயன்ஸ்ரைனினதோ கொள்கைகளைப் போன்றதொரு விஞ்ஞானக் கொள்கையல்லவென்பதையும், அதுவோர் உலக நோக்காகவும், முறையியலாகவுமே இருக்கிறதென்பதையும் பொப்பர் உணரத்தவறிவிட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.) என்ற முடிவிற்கு வருகிறார். இதுபோலவே வரலாறும் விஞ்ஞானமல்லவென்பது அவரது நிலைப்பாடு.

விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தும் தத்துவமாக பொய்ப்பித்தற் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பொப்பர் இதனடிப்படையில் அறிவுக்கொள்கை யொன்றையும் விருத்தி செய்து கொள்கிறார். உண்மை எதுவென எவரும் அறியார், நாம் செய்யக் கூடியதெல்லாம் அறியாமையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்வதே. முடிவிலியாய்த் தொடரும் இப்பயணத்தை அறிவின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையென அழைப்பர். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய இப்பயணம் பிரச்சனை தீர்க்கும் முறையிலமைகிறதென்பது பொப்பரது வாதம். இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்.

P1—> TS —> EE —> P2

அறிதல் முயற்சி எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பமாகிறது. இதனை P1 குறிக்கிறது. TS என்பது முன்மொழியப்பட்ட தீர்வு முயற்சியையும், EE என்பது முன்மொழியப்பட்ட தீர்வில் காணப்படும் தவறுகளைக் களைதலையும் P2 என்பது தவறுகள் களையப்பட்டதன் பின்னர் உள்ள நிலையையும் குறிக்கிறது. P1 உம் P2 உம் சாராம்சத்தில் பிரச்சனைகளேயெனினும், P1 பிரச்சனையின் தொடக்கத்தையும், P முன்மொழியப்பட்ட தீர்வினடிப்படையில் தவறுகள் களையப்பட்ட நிலையையும் அதேசமயம் புதிய பிரச்சனையொன்றின் தொடக்கத்தையும் சுட்டுகிறது.


P1 —> TS —> EE —> P2 —> TS —> EE —> P3

என அறிவானது உண்மையை நோக்கி பிரச்சினை தீர்க்கும் முறையினூடாக வளர்ச்சியடைந்து செல்கிறது. பொதுவாக அறிவுலகத்தையும், குறிப்பாக விஞ்ஞான அறிவையும் பொறுத்தவரையில் முடிவிலியாய்த் தொடரும் இத்தேடலில் பழைய கொள்கைகள் (ஊகங்கள்) நிராகரிக்கப்பட்டு புதிய கொள்கைகள் (ஊகங்கள்) வந்தவண்ணமேயிருக்கின்றன. அறிவும் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. எந்தவொரு அறிவுத் துறையில் எக்கணத்தில் இவ்வளர்ச்சி தடைப்படுத்தப்பட்டு, இருப்பதுடன் திருப்தியடைய நேரிடுகிறதோ அக்கணத்தில் அவ்வறிவுத் துறை விஞ்ஞானம் என்ற அந்தஸ்தை இழந்து விஞ்ஞானமல்லாததாய், சித்தாந்தமாய்ப் போய்விடுகிறது.

ஊகமும் நிராகரிப்புமாக வளர்ந்து செல்வதே விஞ்ஞான பூர்வமான அறிவு என்ற நிலைப்பாட்டிலிருந்து கொண்டு நிர்ணயமில்வாதம் என்ற கோட்பாட்டைப் பொப்பர் முன்மொழிகிறார். நிர்ணயமில்வாதமென்பது நிர்ணயவாதத்திற்கு எதிரானது. இயற்கை விஞ்ஞானங்களிலும், சமூக விஞ்ஞானங்களிலும் நிர்ணயவாத மென்பது ஒரு அதிதக்கொள்கையாக (Meta theory) அதாவது அறிவைப் பெறுவதற்கு ஆதாரமாயிருக்கின்ற தத்துவமாக எண்ணப்பட்டது. காரணத்தைத் தேடுவதன் மூலம் காரியத்தை விளங்கிக்கொள்ளலாம் என்ற காரணக்கோட்பாடும் நிர்ணயவாதத்தையே ஆதாரமாகக் கொண்டது. நிர்ணயவாதத்தையும் காரணக்கொள்கையையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். அரிஸ்ரோட்டலின் காலத்திலிருந்தே காரணக்கொள்கை அறிவைப் பெறுவதற்கானதொரு திறவுகோலாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவந்தது. நியூட்டனின் விஞ்ஞானமும், நிறை போட்டிப் பொருளாதாரமும், திட்டமிடல் தொடர்பான கொள்கைகளும் உள்பொருளியலடிப்படையில் நிர்ணயவாதமாகவும் அறிவாராய்ச்சியல் அடிப்படையில் காரணக் கொள்கையாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிர்ணயவாதமும் காரணக்கொள்கையும் இயற்கை விஞ்ஞானங்களில் நியதிவாதத்திற்கும் சமூக விஞ்ஞானங்களில் விதிவாதத்தை ஆதரிக்கும் மூடுண்ட சமூக விஞ்ஞானக் கொள்கைகளுக்கும் இட்டுச் செல்லுமென எச்சரித்து, நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறார். இயற்கை விஞ்ஞானங்களில் ஒன்றான பெளதீகத்தில் ‘’குவாண்டும் மெக்கானிக்ஸ்’’ (சக்திச் சொட்டுக் கொள்கை) நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறதென்றும் நிர்ணயமில்வாதம் சமூகவிஞ்ஞானங்களில் குறிப்பாக அரசியலில் திறந்த சமூகத்திற்கு இட்டுச்செல்லுமென்றும் பொப்பர் குறிப்பிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி திறந்த சமூகமே நீதியான சமூகமாகும். பொப்பரின் வழியில் திறந்த சமூகத்தின் பொருளாதாரம் பற்றிச் சிந்தித்த பெருளியலாளர்களில் கயக் (Hyek) குறிப்பிடத்தக்கவர்.

திறந்த சமூகம் என்பது பொப்பருடைய அபிப்பிராயப்படி விமரிசனத்தை அனுமதிக்கிற, சகிப்புத்தன்மையுடன் தாங்கிக் கொள்கிற சமூகமாகும். சமூகம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இம்மாற்றம் எவரினதும தேவை கருதியோ அல்லது யாதேனுமொரு திட்டத்தின்படியோ நிகழ்வதில்லை. எனவே சமூக நிறுவனங்களை உருவாக்கும் பொழுதும், சமூகம் தழுவிய தீர்மானங்களை எடுக்கும் பொழுதும் அதனோடு தொடர்புடையவர்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாவர். அனைவர்க்கும் நன்மை பயக்குமெனக் கருதும் அரசியற் கொள்கைகள் அனைத்தையும் பொப்பர் நிராகரிக்கிறார். ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதவை இன்னவை என்ற திட்டத்துடன் அரசியலை அணுகுபவர்கள் சமூகத்தை ஆபத்தான பரிசோதனைக்கு உள்ளாக்குபவர்களாவர். விளைவுகளின் பலாபலன்களை முன்கூட்டியே அறியும் வல்லமை மனிதர்க்கில்லை. எதிர்காலத்தின் தேவைகள் பற்றிய இன்றைய கணிப்பீடு ஒருபொழுதும் சரியாக இருக்கமுடியாது.

மனிதனின் அறிவு வளர்ந்துகொண்டே போகிறது. சமூகத்தின் தேவைகளும் மாறிக்கொண்டே போகின்றன. எனவே எதிர்காலத் தேவைகள் எவையாக இருக்கலாமென்று தெரியாத நிலையில் எதிர்காலத்திற்காக நாம் இன்று எவ்வாறு திட்டமிடமுடியுமென பொப்பர் வாதிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி சமூகத்தை முழுமையும் ஒரேயடியாக மாற்ற முயலாது சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். விமரிசனத்தை அனுமதிப்பதன் மூலம் சீர்திருத்தங்களின் நன்மை தீமைகளை அறியமுடிகிறது, திருத்திக்கொள்ளவும் முடிகிறது. மேலும் நடைமுறைப்படுத்தப் பட்டதொரு சீர்திருத்தம் சமுதாயத்திற்கு தீங்கு பயக்குமெனக் கண்டுகொண்டால் குறைந்தளவு இழப்புடன் அதனைச் சீர் செய்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் முழுமையான மாற்றத்தை சமூகம் தழுவி நடைமுறைப்படுத்தும் பொழுது தீமைகளைத் தவிர்ப்பதற்கு சந்தர்ப்பமில்லாது போவதுடன், திருத்திக் கொள்ளவும் இடமில்லாது போய்விடுகிறது. அதிகளவு இழப்புக்களையும் சந்திக்க நேரிடுகிறது.

முழுமையான சமூகம் தழுவிய மாற்றங்களிற்குப் பதிலாக, படிப்படியான சீர்திருத்தக் கொள்கையை முன்மொழிகிற பொப்பர் அதனை எவ்வாறு நடைமுறைப் படுத்துவதென்பதற்கு 'சந்தர்ப்பத்தின் தருக்கம்’ (Logic of situation) என்ற கோட்பாட்டை முன்மொழிகிறார். எத்தகைய முற்கற்பிதங்களும் இல்லாது புத்திபூர்வமாக, தனித்தனியாக பிரச்சனைகளை அணுகுவதன் மூலம் பொருத்தமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே சந்தர்ப்பத்தின் தருக்கம்  என்பதன் தாற்பரியமாகும். முழுமைக்குமான சிபார்சுகள் அவை எக்காலத்திற்குமுரியவை என்றோ கருதாது ஒவ்வொரு சந்தர்ப்பமும் அதற்கேயுரிய சிறப்பியல்புகளுடன் அணுகப்படல் வேண்டும்.

சமூகம் என்றோ பிளோட்டோ முதல் மார்க்ஸ் ஈறாக சமூகம் பற்றிச் சிந்தித்தவர்களெல்லாம் தமது திட்டங்களுக்கியைய சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினர். இவர்களது இவ்விருப்பம் அரசியலில் அதிகாரம் செய்யும் சர்வாதிகாரிகளையே தோற்றுவிக்கும். தாம் விரும்பும் சமூக அமைப்பு எவ்வாறிருக்க வேண்டுமென்பதில் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே. மாற்றத்தை அதிகம் விரும்பாத பழமைவாதிகள், தாராண்மைவாதிகள், சோசலிஸ்டுக்கள் என மாறுபட்ட அரசியலார்வம் கொண்டவர்களை ஒரு சமூகத்திற் காணலாம். இக்குழுக்களின் தன்மை எதுவாயிருப்பினும், அரசியலதிகாரத்தைப் பெறும் பொழுது அவர்கள் தமது அரசியற் திட்டங்களையே நடைமுறைப்படுத்த விரும்புவர். ஒரு திறந்த சமூகத்தில் எதிர்க்கருத்துடையவர்களின் விமரிசனம் ஆட்சியாளர்களை விழிப்புடன் செயற்பட உதவும். முழுச் சமூகத்திற்கும் பொதுவான இலட்சியங்கள் என்ற கருத்தாக்கத்திற்கு திறந்த சமூகத்தில் இடமில்லை. கற்பனாவாத இலட்சியங்களை கொண்ட அரசியலோ முழுச்சமூகத்திற்குமான பொதுநோக்கென ஒன்றை அமுல்படுத்துவதாகக் கூறிக் கொண்டு சர்வதிகாரத்திற்கு வழி வகுக்கிறது.

பாரிய அளவிலான தீவிர புனரமைப்புகள் மிகவும் நீண்ட காலத்தை எடுக்கும். இவ்விடைக்காலத்தில் நோக்கங்களும், இலட்சியங்களும் மாறாமல் தொடக்கத்தில் இருந்தது போலவே இருக்குமென எவரும் எதிர்பார்க்கமுடியாது. நோக்கங்களும் இலட்சியங்களும் மாறமாற, அதற்கேற்ப மாற்றங்களும் எல்லையற்று நீண்டு கொண்டே போகும். முடிவில் துன்பமும் விரக்தியுமே மிஞ்சும். இலட்சிய சமூகம் எப்பொழுதும் இ ல ட் சி ய மா க வே இருப்பதால், அடையமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. மாற்றம் ஒரு பொழுதும் ஓய்ந்து விடுவதுமில்லை, மாற்றமுறாது எதுவும் இருப்பதுமில்லை. எனவே சமூகத்திற்கான மாற்றமுறா திட்டமென்பது அர்த்தமற்றதொன்றென பொப்பர் வாதிடுகிறார். சுதந்திரம் என்றால் என்ன? சமுத்துவம் என்றால் என்ன? சனநாயகம் என்றால் என்ன? என்பது போன்ற வினாக்களிற்கு ஒரு பொழுதும் முடிவான பதிலைக் கூற முடியாது. இத்தகைய வினாக்களிற்குரிய விடை, அடிப்படையில் சாராம்சவாதத்திற்கும் கற்பனா வாதத்திற்குமே இட்டுச் செல்லும். எனவே சமூகப் பிரச்சனைகளை அணுகும் பொழுது “இத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்” , “நீர் என்ன கருதுகின்றீர்?” என பரஸ்பர விமரிசனத்துடன் கூடிய வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படுத்துதல் வேண்டும். விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்படுவது போலவே அரசியலிலும் ஆட்சியாளர்களின் ஊகங்கள் பொய்யாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் விமரிசனத்தை வரவேற்றுச் செயற்படுதல் வேண்டும்.

இறுதியாக வரலாறு பற்றியதொரு குறிப்புடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாமெனக் கருதுகிறேன். 'திறந்த சமூகம் அதன் எதிரிகளும்' என்ற நூலின் இரண்டாம் பாகத்தின் இறுதியில் ‘’வரலாற்றிற்கு யாதேனுமொரு பொருளுண்டா’’ என்றதொரு கட்டுரை உளது. அக்கட்டுரையில் நாகரீகத்தின் வரலாறு, ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் முழுமையான வரலாறு என வரலாற்று அறிஞர்கள் கூறுவதை சுத்தமான அபத்தம் என பொப்பர் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் வரலாற்றை பண்பாட்டுக் கூறுகள் பலவற்றின் வரலாறாக, அரசியல் வரலாறாக, சாதியின் வரலாறாக, சமயத்தின் வரலாறாக வர்க்கங்களின் வரலாறாக பலவகையில் எழுதலாம். அவையனைத்தும் மெய்யான வரலாற்றின் நிரப்புக் கூறுகளாக இருப்பதுடன், வரலாற்றாசிரியர்களின் ஊகங்களாகவே இருக்கின்றன. கடந்த காலம் 'இவ்வாறு தான் இருந்ததென’ கூறுபவன் அக்காலம் பற்றிய தனது விளக்கத்தைத் தருகிறானே ஒழிய உண்மையை கூறுபவனாக ஒரு பொழுதும் இருக்கமாட்டான், அவ்வாறு இருக்கவும் முடியாது.

பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா (பெப்ரவரி 2, 1947 - மே 29, 2009)


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைப் பேராசிரியர். அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.

பண்பாடு 10வது சிறப்பிதழ் ஆனி 1995. வெளியீடு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு

நன்றி: நூலகம்.ஒர்க்

விக்கிப்பீடியாவில் கார்ல் பொப்பர், சோ. கிருஷ்ணராஜா.

May 03, 2017

'ஆவண ஞானி’ குரும்பசிட்டி கனகரத்தினம்

ஆவண ஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களுடனான நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் அருணகிரி அவர்கள்.

திருச்சியில் வசித்து வந்த குரும்பசிட்டி கனகரெட்ணம் அவர்களை 1.7.2012 அன்று  சந்தித்தேன். அவருடன் நேர்காணலைப் பதிவு செய்து, சங்கொலியில் வெளியிட்டேன். 2016 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார்.


அவருடனான நேர்காணல்:

அருணகிரி: ஐயா, உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

கனகரெட்ணம்:  எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் அருகே உள்ள குரும்பசிட்டி. நான் பிறந்தது 1934 ஆகஸ்ட் முதலாம் தேதி. என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். தகப்பனார் விவசாயி. எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள யாழ் மத்தியக் கல்லூரியில் படித்து, தொடக்கத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டு, பின்னர் கண்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றேன். அங்கே பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. என்னுடைய திருமணம் 1962 ஆம் ஆண்டு, ‘தமிழரசு தேசியத் திருமணம்’ என்று சொல்லி தந்தை செல்வா தலைமையில் நடந்தது.

அருணகிரி: தமிழரசு தேசியத் திருமணம் என்றால் என்ன? அது சுயமரியாதைத் திருமணமா?

கனகரெட்ணம்:  இது நல்ல கேள்வி. எங்கள் நாட்டில் ஒரு திருமணத்தை நடத்துவதற்கான திட்டங்களையெல்லாம் எழுதிக் கொண்டு போய்க் காட்ட வேண்டும். ஐயர் வைக்க வேண்டும் என்பது ஒரு பிரச்சினை. வயதானவர்கள், பெற்றோர், மாமன் மாமியார்களது கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாகப் போய் மோதக்கூடாது. எங்களுடைய திருமணம், நாங்களாகத் தீர்மானித்தது.

அப்போது, தந்தை செல்வா அவர்களிடம் கேட்டேன். ‘இந்தத் திருமணத்தில் சிங்களமும் ஒரு மொழியாக, ஒரு வாழ்த்து அட்டை போல வைத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று.
‘நிச்சயமாக இல்லை. அது இங்கே தேவை இல்லை’ என்றார்.   இத்தனைக்கும் அவருக்கு மலைநாட்டில் ‘கல்கந்து வத்தை’ என்ற தேயிலைத் தோட்டம் இருக்கின்றது. இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை.

நான் தந்தை செல்வா அவர்களைப் பற்றி, நான்கைந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கின்றேன். ‘25 லட்சம் மக்களின் தலைவர்; தமிழரசுத் தந்தை; செல்வாவின் சிந்தனைகள்’ என இப்படிச் சில புத்தகங்கள். ஒரு கூட்டத்தில் அவர் பேசி முடித்து உட்கார்ந்து இருந்தபோது, அவரிடம் ஒரு புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டு ‘நன்றி’ என்றார்.

எனது திருமணத்தில், மகன் வீட்டார் வரவேற்பைத் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. அமிர்தலிங்கம், நடராஜா (பொட்டல்) ஆகியோர் பேசினார்கள். திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் நாட்டுப் பாடல்கள் பாடினார். தந்தை செல்வா அவர்கள், தமிழரசுக் கட்சியின் அடையாளச் சின்னத்தை (பேட்ஜ்), மணமகன், மகளிடம் தந்தார்.  பிறகு ஐயர் தாலி எடுத்துக் கொடுத்தார்.

ஆனால் வெளியில் என்ன சொன்னார்கள்? ‘செல்வநாயகம்தான் மணமகளுக்குத் தாலி கட்டினார்’ என்றுகூடப் பேசினார்கள். அன்றைக்கு, அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கான கிராமமாக எங்கள் கிராமம்  இருந்தது.

சேர் பொன். இராமநாதன் அவர்களின் மருமகன் நடேசன். அவர், செல்வாவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அந்த ஊரில், நடேசன் ஆதரவாளர்கள்தாம் அதிகம். அங்கே, அமிர்தலிங்கம் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். அதற்கு முன்பு, பெரியவரை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வருகையில், அவரது கையைப் பிடித்துத் தடுத்தார்கள்.

‘இது நூற்றுக்கு நூறு வீதம் இந்துக்கள் வாழுகின்ற ஊர். இங்கே கிறித்துவரான செல்வா வரக்கூடாது’ என்றெல்லாம் சொன்னார்கள். இதெல்லாம் பழங்கதை. அப்படிப்பட்ட கிராமத்தில், அன்றைக்கு இளைஞர்களாக இருந்த நாங்கள், முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டு வந்து புகுத்தினோம். தமிழர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்; உயர்ந்த பொறுப்புகளுக்கு வர வேண்டும் எனத் தந்தை செல்வா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.

அருணகிரி: உங்களுக்கு எழுத்து ஆர்வம் எப்படி வந்தது?

கனகரெட்ணம்:  நூற்றுக்கு நூறு நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்ல மாட்டேன். அரசியல்வாதி என்றும் சொல்ல மாட்டேன். நான் ஒரு இனப்பற்றாளன். உலகத் தமிழர் நன்மையைக் கருதுபவன். தமிழருடைய வரலாற்று ஆவணங்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். காரணம், ‘இலங்கைத் தமிழர்களுக்கு என ஒரு தொடர் வரலாறு கிடையாது.  தங்களுடைய வரலாறை அவர்கள் சரியாக எழுதி வைக்கவில்லை. இலங்கைத் தமிழர் வரலாறு தொடர்பான குறிப்புகளைப் பார்க்க வேண்டும் என்றால், புத்த பிக்குகள் எழுதி வைத்து இருக்கின்ற ‘மகாவம்ச’ போன்ற நூல்களைத்தான் பார்க்க வேண்டியது உள்ளது. அவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதால், அந்த ஆவணங்களும் தமிழர்களுக்கு எதிரான, தவறான கருத்துகளையே கொண்டு உள்ளன. சில நல்ல செய்திகளும் உள்ளன. எல்லாளன் அநுராதபுரத்தை ஆண்டு கொண்டு இருந்தான் என்று சொல்கிறார்களே தவிர, வேறு எந்த உருப்படியான செய்திகளும் இல்லை.

என்னுடைய வரலாற்று ஆசிரியர் படிப்பிக்கும்போது அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பார். ‘நீங்கள் வரலாறு பாடம் படிக்கின்றீர்கள். நீங்கள் வாழ்க்கையில் நன்றாக முன்னேற முடியுமாக இருந்தால், நீங்கள் சரித்திரங்களை எழுதுங்கள். புத்தகமாக ஆக்கி வையுங்கள்’ என்று சொன்னார்.

நான் கண்டியில் இருந்தபோது, 1956 ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் நாள், ‘சிங்களம் மட்டும்’ என்ற சட்டத்தை, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகே கொண்டு வந்து திணித்தார்.

அதை எதிர்த்து, நாடாளுமன்றத்துக்கு எதிரில் உள்ள காலி முகத் திடலில் தமிழர்கள் சத்தியாகிரகம் செய்தார்கள். ‘கோஃல்’ என்றால் தமிழில் ‘காலி’ என்று சொல்லுவர். அப்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அடித்தனர். பலருக்கு மண்டை உடைந்தது. அடுத்த நாள் செய்தித்தாள்களில், இவையெல்லாம் செய்திகளாக வந்தன. அதைத்தான் நான் முதலில் கத்திரித்து, சேகரித்து வைத்தேன். அதுதான் எனது முதலாவது ஆவணம்.  அதற்குப்பிறகு, நிறைய செய்திகளைச் சேகரித்து வெட்டி எடுத்து அட்டைகளில் ஒட்டி வைத்துப் பாதுகாத்தேன். அதை பின்னர் புத்தகமாக ஆக்குவது ஒரு கலை. மிகவும் பொறுமை வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் நாங்கள் ஆவணங்களைச் சேகரித்து வைத்து இருக்கின்றோம். வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தனியாக உள்ளது. தமிழ்நாட்டுச் செய்திகளையும் தனியாகத் தொகுத்து வைத்து இருக்கின்றோம். பூம்புகார் பற்றிய கடல் ஆய்வுகள் நிறைய வெளியாகி இருக்கின்றன. அவற்றையெல்லாம் சேகரித்து வைத்து இருக்கின்றேன்.

பழைய பேப்பர் கடைகளுக்கெல்லாம் போய் செய்திகளைத் திரட்டினேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நித்தியானந்தன், 1890 முதல் உள்ள பத்திரிகைகளின் பிரதிகளைக் கொடுத்தார். அதையெல்லாம் திரட்டித்தான் மைக்ரோபிலிம் செய்தேன். 1964 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை என்ற இடத்தில்தான், எனது முதலாவது கண்காட்சியை வைத்தேன். தந்தை செல்வா அவர்கள் வந்து தலைமை ஏற்றார்கள்.

இரண்டாவதாக, 1974 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, நடந்தபோது அங்கே கண்காட்சி வைத்தேன். பாதர் தனிநாயகம் அடிகள் திறந்து வைத்தார்கள்.   அரசியல் சார்பு இல்லாததை, அரசாங்கத்தின் அனுமதியோடு கனடாவுக்குக் கொண்டு  சென்றேன். அங்கேதான், ‘ஆவண ஞானி’ என்ற பட்டத்தை எனக்குக் கொடுத்தார்கள்.

அங்கிருந்து ஆவணங்களை, கப்பல் மூலமாக நோர்வேக்குக் கொண்டு சென்று, அங்கே பல்கலைக்கழகத்தில் கண்காட்சி வைத்தேன்.  பேராசிரியர்கள் வந்து பார்த்துவிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அப்போதெல்லாம், நான் மைக்ரோபிலிம் செய்யவில்லை.

1998 ஆம் ஆண்டு, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘இலங்கையில் சிறுபான்மையினராகிய நாங்கள், இத்தகைய ஆவணப் பணிகளை மேற்கொண்டு உள்ளோம்.  இவற்றை மைக்ரோபிலிம் செய்வதற்கு நீங்கள் நிதி உதவி அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் நிதி உதவி அளிக்க ஒப்புக் கொண்டார்கள். அதனால்தான், ஒரு சாதாரண ஏழையாகிய நான், இந்த அளவுக்கு ஆவணங்களை மைக்ரோபிலிம் செய்ய முடிந்தது.

சென்னை தரமணியில் ரோஜா முத்தையா நூலகம் மைக்ரோபிலிம் பணிகளைச் செய்வது போல, கொழும்பில் அதற்காக ஒரு நிறுவனம் உள்ளது. அவர்கள் அங்கிருந்து ஒரு சிங்களவரை, கண்டியில் உள்ள என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மைக்ரோபிலிம் செய்தோம். இதை மைக்ரோபிலிம் செய்த சிங்களவரது நிறுவனம் ஒரு நாளைக்கு ஒரு மைக்ரோபிலிம் செய்தால் போதும் என்று சொல்லி இருந்தது. ஆனால், அவர் மூன்று மைக்ரோபிலிம்கள் செய்வார். ‘நீங்கள் ஒரு மைக்ரோபிலிமுக்குக் காசு தந்தால் போதும்; மற்ற இரண்டையும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதிக் காசை மட்டும் எனக்குத் தாருங்கள்’ என்றார். நானும் சரி என்றேன்.  அப்படித்தான் மேலும் இரண்டு பிரதிகள் கிடைத்தது.

80 வீதமான பணிகள் நிறைவு பெற்று விட்டன. அந்த நிலையில்தான், தமிழ்ச்செல்வன் என்னைக் கிளிநொச்சிக்கு வருமாறு அழைத்தார். ஒரிஜினல் மைக்ரோபிலிம் என்னிடம் இருந்தது. கிளிநொச்சிக்குக் கொண்டு போனது நகல்தான். சுவிட்சர்லாந்து நாட்டின் ஆர்கிவ்ஸ் என்ற நிறுவனத்துக்குக் கொடுத்ததும் மற்றொரு நகல்தான். நான் சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்று இருந்தபோது, யுனெஸ்கோ அமைப்பைத் தொடர்புகொண்டு, இந்த மைக்ரோபிலிம் பற்றிக் கூறினேன்.

அப்போது அவர்கள் சொன்னார்கள், ‘நீங்கள் இதற்காகப் பணம் எதுவும் கேட்காமல் இலவசமாக அளித்தால், அதை நாங்கள் பாதுகாத்து வைக்கிறோம்’ என்று சொன்னார்கள். அதற்குப்பிறகு நான் இலங்கைக்கு வந்து சுமார் 200 மைக்ரோபிலிம்களை, சுவிட்சர்லாந்துக்கு அனுப்பினேன்.

மைக்ரோபிலிம் செய்த சிங்களவரிடம், இதை கொழும்பு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று சொன்னேன். மொத்தம் ஏழு பெட்டிகள். அவன் ஆறு பெட்டிகளைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, மற்ற ஒரு பெட்டியைத் தன் வீட்டிலே கொண்டு போய் வைத்துக் கொண்டு, இராணுவம் பறித்துக் கொண்டு விட்டது என்று சொன்னான். அவர்களிடம் இருந்து திரும்பப் பெற வேண்டுமானால் 50000 ரூபாய் வேண்டும் என்றான். ஏற்கனவே இதைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு, இவனுக்கு 35000 ரூபாய் கொடுத்து இருந்தோம். இப்போது மேலதிகமாக 50000 கேட்டான். வேறு வழி இல்லை. எவ்வளவோ சிரமப்பட்டு அந்தப் பணத்தையும் திரட்டி அவனிடம் கொடுத்துத்தான், அந்த ஒரு பெட்டியையும் மீளப் பெற்றோம்.

எங்களிடம் எவ்வளவோ பழகியவன், இப்படிச் செய்து விட்டானே என்று வருத்தமாக இருந்தது. தமிழர்களிடம் காசு பறிப்பதே சிங்களவர்களின் நோக்கமாக இருக்கின்றது. கிளிநொச்சி பகுதி அருமையான நெல் விளையும் மண். அதையெல்லாம் இப்போது சிங்களவன் கைப்பற்றிக் கொண்டு விட்டான். என்னமாக இருந்த நாடு அது ஐயா? இப்படி ஆகி விட்டதே?

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.  உலகின் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் வந்து இருந்தனர். அப்போதுதான், ‘உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்’ என்ற அமைப்பை நான் நிறுவினேன். முதலில் இந்த அமைப்புக்கு ‘உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரைத்தான் தெரிவு செய்து இருந்தோம். ஃபிஜித் தீவுகளைச் சேர்ந்த அப்பா பிள்ளை என்ற தமிழ் அறிஞர்,  ‘பாதுகாப்பு’ என்றால் அதில் அரசியல் இடம் பெறக்கூடும்; அது பல நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்; எனவே, அதற்குப் பதிலாக ‘பண்பாட்டு இயக்கம்’ என்று வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு, அவ்வாறே பெயர் சூட்டினோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டில், அப்பா பிள்ளை அவர்களுடைய படத்தையும், பல தமிழ் அறிஞர்களின் படங்களையும் திறந்து வைத்தோம். விரைவில், புதுச்சேரியில் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் ஒரு கல்வி மாநாடு நடத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதில் அவருடைய படத்தையும் திறந்து வைக்க இருக்கின்றார்கள்.

பண்பாட்டு இயக்கத்துக்குச் சாலை இளந்திரையன் அவர்களை முதல் தலைவராக நியமித்துச் செயல்பட்டுக் கொண்டு இருந்தோம். 1977 ஆம் ஆண்டு, அந்த அமைப்பின் சார்பில் சென்னையில் ஒரு மாநாடு நடத்தினோம். எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து இருந்தார்கள். பின்னர், சாலை இளந்திரையன் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மலேசியாவைச் சேர்ந்த வீரப்பன் அவர்கள் தலைவராகப் பொறுப்பு ஏற்றுச் சில காலம் நடத்தினார். பின்னர் அவரும் இறந்து போனார். இப்போது கனடாவில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர் வேலுப்பிள்ளை அவர்கள், இந்த அமைப்பின் தலைவராக இருக்கின்றார். ஜெர்மனியில் வசிக்கின்ற கணேசலிங்கம் அவர்கள் செயலாளர் நாயகமாக இருக்கின்றார்.

மலேசியாவில் உதவிப் பிரதமராக இருக்கின்ற பினாங்கு இராமசாமி, கோவைக்கு வந்தபோது ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். ‘உலகத் தமிழர்களின் பாதுகாப்புக்காக ஒரு அமைப்பு தேவை; அதற்காக நான் பாடுபடுவேன்’ என்று.

இலங்கை மண், ஒரு வித்தியாசமான மண். 1970 ஆம் ஆண்டிலேயே இந்தக் கருத்தை நாங்கள் முன்வைத்து இருக்கின்றோம். ‘ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்’ என்று ஒரு புத்தகத்தை நான் அச்சிட உள்ளேன். அந்தப் புத்தகத்தில் இந்தச் செய்திகள் எல்லாம் இடம் பெறும்.

அருணகிரி: ஐயா, எப்போது தமிழகத்துக்கு வந்தீர்கள்?

கனகரெட்ணம்:   நான் கண்டியில் இருந்தபோது, தமிழ்ச் செல்வன் அவர்கள் என்னை அழைத்து, நீங்கள் சேகரித்து வைத்து இருக்கின்ற ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளிநொச்சிக்கு வந்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன்பேரில், அங்கே சென்றேன். அப்போது என்னிடம் இருந்த ஆவணங்களை எல்லாம் மூன்று பார வண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்றேன். என்னை அழைத்துச் செல்வதற்காக உதவிக்குச் சிலரையும் தமிழ்ச்செல்வன் அனுப்பி இருந்தார். என்னுடைய வீட்டில் ஒரு துண்டுப் பேப்பரைக் கூட விட்டு விடக்கூடாது என்று சொல்லி எடுத்து வரச் சொல்லி இருந்தார்.

2004 ஆம் ஆண்டு, சமாதான காலத்தின்போது, இராணுவ முகாம்கள் இருந்த வழியாகத்தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்றோம். கிளிநொச்சியில், தமிழ் ஈழ ஆவணக் காப்பகத்தின் பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். நான்கு பிள்ளைகள் எனக்கு உதவியாக இருந்தார்கள்.

அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் இருந்து முருகர் குணசிங்கம் என்னிடம் வந்தார். கொஞ்சம் காசு கொடுத்து, என்னிடம் இருந்து ஒரு படியை வாங்கிக்கொண்டு போனார். அதை இலண்டனுக்குக் கொண்டு சென்று கோவிலில் வைத்து இருந்தார். அப்போது, அந்த நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து இருந்தபடியால், அவர்கள் துப்பு அறிந்து, கோவிலுக்கு வந்து அந்த ஆவணங்களையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு போய்விட்டார்கள் என்று சொன்னார். அதற்குப்பிறகு, குணசிங்கம் மீண்டும் என்னிடம் வந்தார். இயக்கத்திடம் இருந்து ஒரு படியைப் பெற்றுக்கொண்டு சென்றார். அவரிடமும் இந்த ஆவணங்கள் உள்ளன.

கிளிநொச்சியில் நாங்கள் இருந்த இடம், சற்றுத் தொலைவில் உள்ள அக்கராயன் என்ற இடம். அந்தப் பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் முன்னேறி வந்தபொழுது, நாங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு முன்பு, தேசியத் தலைவரைக் காண வேண்டும் என்று எனக்கு விருப்பம். 2008 ஆம் ஆண்டு, தமிழ் ஈழக் காவல்துறைத் தலைவர் நடேசன் என்னை அழைத்துக் கொண்டு, தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தலைவரிடம் அனுமதி பெற்றுச் சென்றேன். அங்கே ஒரு வாரம் இருந்துவிட்டு இங்கே வந்தவன், திருச்சியிலேயே இருக்கிறேன். இலங்கைக்குப் போனால் என்னைக் கைது செய்யக் கூடும். ஒரு தலைமறைவு வாழ்க்கை போலத்தான் இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.

இங்கே உங்களுக்கு எந்தச் சிரமங்களும் இல்லை. அங்கே நாங்கள் கஷ்டப்பட்டுப் போராடிக் கொண்டுதான் இருந்தோம். இடைப்பட்ட காலங்களில் ஏழெட்டு முறை தமிழகத்துக்கு வந்து சென்ற நான், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இங்கேயே இருக்கின்றேன். தமிழ்நாடுதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். நாங்கள் தமிழகத்தில் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம்? வெறுமனே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அவ்வளவுதான்.

அருணகிரி:கிளிநொச்சிக்கு நீங்கள் கொண்டு சென்ற ஆவணங்கள் எல்லாம் என்னவாயிற்று?

கனகரெட்ணம்: அது ஒரு பெரிய கேள்வி. அவற்றையெல்லாம் அங்கே வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. 1839 ஆம் ஆண்டு முதலான ஆவணங்களை நான் சேகரித்து வைத்து இருந்தேன். அவற்றையெல்லாம் கிளிநொச்சியில் ஒரு கண்காட்சியாக வைத்தேன். நடேசன்தான் திறந்து வைத்தார். இராணுவம் நெருங்கி வந்தபொழுது, இயக்க ஆவணங்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. எனவே, வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வேறு இடங்களுக்குக் கொண்டு போனார்கள். அப்போது அதற்குப் பொறுப்பாக இருந்தவரும், அதை எடுத்துக் கொண்டு போனவரும் போராளிகள்தாம். அவர்களால் தொடர்ந்து வைத்து இருக்க முடியாமல் எரித்து விட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். இதில் பெரிய மனக்கஷ்டம் என்னவென்றால், இலங்கையில் தமிழில் வெளிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளின் ஒரு படியை நான் சேகரித்து வைத்து இருந்தேன். அது மட்டும் அல்ல. 1980 ஆம் ஆண்டு பண்பாட்டு இயக்க மாநாட்டுக்காக, மொரீஷியஸ் தீவுகளுக்குச் சென்று இருந்தேன். அப்போது, அந்த நாட்டில் வெளிவந்த தமிழ் சஞ்சிகைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தேன்.

உலகில் தமிழர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்றால், எல்லோருடைய கண்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர், கூடுதலாகச் சொன்னால் பர்மா என்றுதான் தெரிகிறது. ஆனால், குவாட்லோப் தீவிலும், கரீபியன் தீவுகளிலும் தமிழர்கள் இருக்கின்றார்கள். இங்கிருந்து ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள். கடற்கரையில் அவர்கள் வந்து இறங்கிய இடத்தில் ஒரு நினைவுத்தூணை  நிறுவி இருக்கின்றார்கள். அந்தப் படமெல்லாம் தமிழகத்தில் எந்த ஏட்டிலும் அச்சிடப்பட்டது இல்லை. நான் இணையத்தில் தேடி எடுத்தேன். இதை இந்தக் குரும்பசிட்டி கணகரெட்ணம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. உங்களாலும் செய்ய முடியும், ஈடுபாடு இருந்தால்!

ஃபிஜியில் அப்பா பிள்ளை இருந்தார். அங்கே, ‘சங்கம்’ என்று ஒரு பத்திரிகை. அதையும் எரித்து விட்டார்கள். அந்தத் தீவுகளில் உள்ள வட இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘நாம் எல்லோருமே இந்தியர்கள்தானே? நாம் ஒரே அமைப்பாக இருப்போம். நீங்கள் ஏன், தனியாக அமைப்பு வைத்துக் கொள்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். இப்படியாகத் தமிழர்களுடைய அடையாளத்தை அழிக்கின்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.

அருணகிரி: ஃபிஜி தீவுகளுக்குச் சென்று வந்த சிலர் எழுதிய தமிழ் நூல்களை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் படித்தேன். கோவை ம.ரா.பொ. குருசாமி அவர்களுடைய மூத்த சகோதரர், ஃபிஜி தீவுகளில் இந்து சங்க அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றார்.

கனகரெட்ணம்:  அங்கு மட்டும் அல்ல, வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களின் இப்போதைய தேவை என்னவென்றால், தமிழ் ஆசிரியர்கள்தான். தெற்கு ஆப்பிரிக்காவில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். உலகின் பல நாடுகளில் தமிழர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அண்மையில், ‘மொரீஷியஸ் தீவுகளுக்கு இந்தியர்கள் வந்து இறங்கிய 150 ஆவது ஆண்டு விழா’ என்று கொண்டாடினார்கள். ஒரு வாரமாகக் கொண்டாட்டங்களை நடத்தினார்கள். ஆனால், நமது பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த கங்கணமுத்து என்ற தஞ்சாவூர்க்காரர் சொன்னார்; ‘நீங்கள் 150 ஆண்டு விழா கொண்டாடுகிறீர்கள். தமிழர்களாகிய நாங்கள் இந்த மொரீஷியஸ் தீவுகளுக்கு வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன’ என்பதைச் சொல்லி, அதற்கான ஆவணங்களையும் கொடுத்தார்.  அதற்குப் பிறகு அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். நான் அவரைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவரது படத்தையும் வைத்து இருக்கின்றேன்.

நான் இப்போது இலங்கைத் தமிழன் என்ற முறையில் பேசிக்கொண்டு இருக்கவில்லை. உலகத் தமிழனாகத்தான் கருதிக் கொண்டு பேசுகிறேன். அப்படிப்பட்ட குட்டி நாடுகளில் இருக்கின்ற தமிழர்களுக்கு, தமிழகத்தில் இருந்து உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும், இரண்டு கார்கள் நின்றுகொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது. ‘தையல்நாயகி’ என்ற பெயரை ‘தாய்நாய்’ என்று அழைக்கின்றார்கள். அப்படித்தான் அங்கே தமிழ் பிழைத்து இருக்கின்றது.

குவாட்லோப் தீவுகளுக்குத் தந்தை தனிநாயகம் அடிகளார் சென்று பார்த்து, அவர்கள் தமிழ் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் பழங்காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். நளன் தமயந்தி, இராமாயணம், இரண்ய வதம் என அப்படிப்பட்ட நாடகங்கள் நடித்து, பாடிக் காட்டி இருக்கின்றார்கள். கோலாட்டம், கும்மியாட்டம் எல்லாம் ஆடிக்காட்டி இருக்கின்றார்கள். கரீபியன் தீவுகளில், மெட்னிக் தீவு என்று ஒரு தீவு இருக்கின்றது.  அங்கே, இன்றைக்கும், ‘வள்ளியம்மை பஸ் கம்பெனி’ என்று ஒரு கம்பெனி இருக்கின்றது. ஆனால், அவர்களுக்கும் தமிழ் தெரியாது. பிரெஞ்சு நாட்டில் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். பெண்கள்தாம் குடும்பத் தலைவர்களாக இருக்கின்றார்கள். அந்த முறையில், பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த அந்தத் தீவுகளில் உள்ள தமிழர்கள் அந்தப் பெயரை வைத்து இருக்கின்றார்கள்.

தமிழர்கள் எங்கே சென்றாலும், அங்கெல்லாம் வட இந்தியர்களின் நெருக்குதல் இருக்கின்றது. அந்தமானிலும் அப்படித்தான். அங்கே, சுப.கரிகாலன், ‘அந்தமான் முரசு’ என்ற தமிழ் நாளேட்டை நடத்திக் கொண்டு இருக்கின்றார். அங்கே தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தும் வடநாட்டவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இந்திக்குத்தான் முதல் இடம். அவர்களையெல்லாம் பாதுகாக்கக் கூடிய தலைநாடாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும். உலகத் தமிழர் நலனுக்காகத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஏராளமான திட்டங்கள் உண்டு. இப்போது தமிழர்கள் குடியேறி உள்ள நாடுகளில் கூட, தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க அவர் திட்டமிட்டு இருந்தார்.

அருணகிரி:போலத்தான் தமிழகத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பவர், தமிழில் வெளியான திரைப்படங்கள் குறித்த தகவல்கள், செய்திக் குறிப்புகள், துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் படங்களைத் தொகுத்து வைத்து இருந்தார். அதை நூலாக அச்சிடுவதற்குத் தமிழக அரசு ரூ 5 இலட்சம் நிதி உதவியும் வழங்கியது. தமிழ்த் திரைப்படங்கள் குறித்து அறிய விழைவோருக்கு அந்த நூல் ஒரு அருமையான கையேடு. விலை ரூ.500. அதுபோல, உங்கள் சேகரிப்புகளில் நீங்கள் எந்தவிதமான ஆவணங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருக்கின்றீர்கள்?

கனகரெட்ணம்:  அரசியல் செய்திகளுக்குத்தான் முதல் இடம். முழுக்கமுழுக்க, தமிழர், கலை, பண்பாடு குறித்த செய்திகள், அயல்நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களது பிரச்சினைகள் குறித்த தகவல்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளேன்.

அருணகிரி:உங்களைப் போல வேறு யாரேனும் ஈழத்தில் இதுபோன்ற ஆவண சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனரா?

கனகரெட்ணம்:  நான் பல பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று, ‘உங்கள் பத்திரிகைகள் அனைத்தையும் மைக்ரோபிலிம் செய்யுங்கள்; வருங்காலத் தலைமுறையினர் நமது வரலாறைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்’ என்று சொன்னேன். ஒருவருக்கும் அதில் அக்கறை இல்லை. இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு உணர்வு வேண்டும். நாமாக யாரையும் செய் என்று திணிக்க முடியாது. நீங்கள் இப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்து என்னைப் பேட்டி எடுப்பது போல, உங்கள் மகனோ, மகளோ செய்வார்களா?  உறுதியாகச் சொல்ல முடியாது.

அருணகிரி: ‘ஈரோட்டுப் பெரியாருக்கு வாரிசு, காஞ்சிபுரத்து அண்ணாதுரை என்பார்கள். அதுபோல, உங்களது ஆவண சேகரிப்புக்கு வாரிசு, வேறு எங்கிருந்தோதான் வருவார்.’

கனகரெட்ணம்:  நான் இந்தப் பணியில் மிகவும் துன்பப்பட்டு உள்ளேன். பணத்தைச் செலவழித்து உள்ளேன். அரசாங்க வேலையில் இல்லாததால்தான் என்னால் இந்த ஆவண சேகரிப்பு பணியைச் செய்ய முடிந்தது. இவற்றைக் கிளிநொச்சிக்குக் கொண்டு போனதற்கு இன்னொரு காரணம், கண்டியில், கிழமைக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு இரண்டு முறை, பத்துப் பதினைந்து போலீசார் என் வீட்டுக்கு வருவார்கள். உள்ளே நுழைந்து, என்ன ஏது தேடிப் பார்ப்பார்கள். ஒருமுறை ஆவணங்கள் அனைத்தையும் காவல்நிலையத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஒரு வாரம் வைத்து இருந்து சோதித்துப் பார்த்தார்கள். இதற்காகவென்றே கொழும்பில் இருந்து ஒரு சிங்கள அதிகாரி வந்தார். அவரும் பார்த்தார்.

அவர் சொன்னார்: ‘நான் ஒரு அரசாங்க அதிகாரி என்ற முறையில் அல்லாமல், தனிப்பட்ட முறையில் சொல்லுகிறேன்: நீங்கள் செய்வது ஒரு சிறந்த பணி. இதை விடாமல் செய்யுங்கள். எங்களைப் போன்றவர்கள் வந்து தொந்தரவு கொடுப்பார்கள். அதையெல்லாம் சட்டை செய்யாதீர்கள்’ என்றார். அப்படிப்பட்ட பாராட்டுகளும் வந்தன.

இதற்கு இடையில், என்னை ஒரு வாரம் ரிமாண்ட் கைதியாக வைத்து இருந்தார்கள். காரணம், என் வீட்டில் நான் வைத்து இருந்த ஒருபோட்டோ ஆல்பத்தில், எனக்கு நடைபெற்ற ஒரு பாராட்டு விழா படத்தை வைத்து இருந்தேன். அந்தப் படத்தில் தமிழ்ச்செல்வனும் இருந்தார். அந்த விழாவுக்கு அவரை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அந்த நேரத்தில் அவர் எங்களுக்குக் கடவுள் மாதிரி. இந்தப் படத்தைப் பார்த்த உடனே, ‘நீ எல்.டி.டி.ஈ. ஆள்தான்’ என்று என்னை முத்திரை குத்தி உள்ளே தள்ளி விட்டார்கள். மேலும் நான் தமிழர் வரலாறு குறித்த ஆவணங்களைச் சேகரிக்கிறேன் என்றால், அது சிங்களவர்களுக்கு எதிரான செயல் என்றே அவர்கள் கருதினார்கள்.  மனித உரிமைகள் அமைப்புகளைச் சார்ந்தவர்களிடம் என் மனைவி வேண்டுகோள் விடுத்ததன் பேரில் அவர்கள் வந்தார்கள். ‘கனகரெட்ணம் ஒன்றும் குற்றவாளி அல்ல. அவர் மீது கை வைக்காதீர்கள்’ என்றார்கள். சிறைக்குள் இருந்த  ஒரு வாரமும், சிமெண்ட் தரையில்தான் படுத்துக் கிடந்தேன். அந்தச் சிறிய அறைக்கு உள்ளேயே கழிப்பு அறை. சித்திரவதைதான். இலங்கையில், தமிழன் என்று சொன்னாலே சிறை, சித்திரவதை, அடி, உதை  இதுதான் நிலைமை.

அருணகிரி: நீங்கள் சேகரித்து வைத்து இருக்கின்ற ஒரு ஆவணத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு என்ற செய்தியையும் வைத்து இருக்கின்றீர்கள். இலங்கை அணியிலும் அப்படித்தானே?

கனகரெட்ணம்:  ஆமாம், அப்படித்தான். ஆனால், முத்தையா முரளிதரனை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அவர் கண்டிக்காரர். அவரது தந்தையார், ‘லக்கி லேண்ட்’ என்ற பிஸ்கெட் கம்பெனி நடத்துகிறார். அவர் மலைநாட்டு சமூகத்தவர். வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் பிரச்சினையில் அவர்களது நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. 

காணாமல் போனவர்களின் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம் பெற நான் விரும்பவில்லை. ஆனபடியால், சில செய்திகளைச் சொல்ல முடியவில்லை.

நான் சிறுகக் சிறுகப் பணத்தைச் சேகரித்து ஒரு வீட்டைக் கட்டினேன். அங்கே இப்போது ஆடு, மாடுகள் மேய்கின்றன. எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள், கனடாவின் டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் (மெடிசன்) பணி ஆற்றுகிறார். இரண்டாவது மகள், நோர்வே நாட்டில் வசிக்கிறார். ஒரு பொறியாளரைத் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.  ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர்.

கனடா, நோர்வே, சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், ரீ யூனியன் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்து உள்ளேன். மற்றபடி, ஆவணங்கள் சேகரிப்பிற்காகவே என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன்.  நாட்டு அபிமானம் வேறு; உலகத் தமிழர் மீதான அபிமானம் வேறு. அவையெல்லாம் இருப்பினும், நான் என்னுடைய சொந்த கிராமத்தின் மீது கொண்ட அபிமானத்தால்தான், என்னுடைய பெயரில் என் ஊரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு இருக்கின்றேன்.

அருணகிரி:அதில் தவறு இல்லை. வைகோ அடிக்கடி மேடைகளில் குறிப்பிடுவார். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று சொன்ன பூங்குன்றன்கூட, அவரது சொந்த ஊரின் கணியன் என்பதையும், தனது பெயரோடு சேர்த்துக் கொண்டார் என்று. அதுபோல, உங்களது நிலைப்பாடு சரிதான்.

கனகரெட்ணம்:  ஆமாம். சொந்த கிராமத்தின் மீதே பற்று இல்லாதவனுக்கு, நாட்டுப் பற்று எப்படி வரும்?

இந்தப் படங்களைப் பாருங்கள். குரும்பசிட்டியில் நாங்கள் கைவிட்டு விட்டு வந்த வீட்டில், இப்போது உள்ளுக்குள்ளேயே மரங்கள் வளர்ந்து விட்டன. இந்த வீட்டைக் கட்ட நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்? கண்டியில் வேலை செய்து கொண்டு இருந்த நான், ஒவ்வொரு வார இறுதியிலும், யாழ்ப்பாணத்துக்குப் போவேன். கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் 300, 350 மைல். சனிக்கிழமை அரை நாள் வேலை என்பதால், அன்றைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, வெள்ளிக்கிழமை இரவே அங்கிருந்து புறப்பட்டு அதிகாலையில் யாழ்ப்பாணத்துக்கு வந்து விடுவேன். மூன்று மூடை, நான்கு மூடை சிமெண்ட் வாங்கிக் கொண்டு போய், அதற்கு ஏற்ற வகையில் இரண்டு நாள்களும் நானே கட்டுவேன். பிறகு, திங்கள் கிழமை காலையில், கண்டியில் வேலைக்கு நிற்க வேணும். அப்படி, பல ஆண்டுகளாக, சொல்லப் போனால் பத்து ஆண்டுகளாக நான் பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த வீட்டை, ஒரே குண்டு போட்டு நொறுக்கி விட்டானய்யா. கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, பனங்காடுகள் வழியாக ஓடி உயிர் தப்பி ஓடி வந்தேன்.

குரும்பசிட்டி கிராமம் என்பது, பலாலி விமான தளத்துக்கு அருகாமையில் உள்ளது. எனவே, அதை விரிவாக்குவதற்காகத் திட்டமிட்டு, அங்கிருந்த மக்களை, இப்படிக் குண்டு போட்டு அச்சுறுத்தி விரட்டி அடித்தார்கள். ஒருகாலத்தில் அந்த விமான தளத்தில் இருந்து, திருச்சிக்கு விமானங்கள் வந்து சென்றன. அப்போது கட்டணமும் குறைவுதான். தமிழகத்துக்கு வந்து போவது சாதாரணமாக இருந்தது.

அருணகிரி: ஆமாம். எழுத்தாளர் யாழூர் துரை இதுபற்றிச் சொன்னார். திருச்சி-யாழ்ப்பாணம் விமானக் கட்டணம் 105 ரூபாய் என்றும், அப்படிப் பலமுறை அங்கிருந்து வந்து, டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி. ஸ்ரீ நிவாஸ், பி. சுசீலா உள்ளிட்ட பல திரைப்படக் கலைஞர்களை  பேட்டி எடுத்ததையும் பற்றி என்னிடம் சொன்னார்.

கனகரெட்ணம்: எங்கள் கிராமத்தில் முழுக்க முழுக்கத் தமிழர்கள்தான். ஒரு சிங்களவர் கூடக் கிடையாது. எப்போதாவது, பான் விற்பதற்காக ஒன்றிரண்டு சிங்களவர்கள் வீதிகள் வழியாகப் போவார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு அங்கேயும் சிங்கள ஆள்களைக் கொண்டு வந்து குடி அமர்த்துகிறார்கள். இப்போது வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற தமிழ் ஆள்களுடைய வீடுகளைக் குறிவைத்துக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள். அங்கே கொண்டு வந்து சிங்களவர்களைக் குடி வைக்கின்றார்கள். அது, மாவை சேனாதிராசாவினுடைய தொகுதி. அவரும் எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார். ஆனால், அவர்கள் எப்படியும் தமிழர்களின் நிலங்கள் வீடுகளைப் பிடுங்கி விட வேண்டும்; சிங்கள ஆள்களைக் கொண்டு வந்து திணித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள்.

அந்தக் காணியை வைத்துப் பாதுகாக்க முடியாது. எனவே, என் மனைவி அந்தக் காணியை விற்றுவிடலாம் என்கிறார். என்னால் முடிவு எடுக்க முடியவில்லை. ஏனென்றால், இப்போது நான் விற்றால், சிங்கள ஆள்கள் கூட வந்து வாங்குவார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால், அப்படியே வைத்துக் கொண்டு இருக்கின்றேன். இதையெல்லாம் சொல்வதால் எனக்குப் பிரச்சினைகள் வரலாம்.

அருணகிரி: கடைசியாக நாட்டை விட்டு எப்போது வெளியே வந்தீர்கள்?

கனகரெட்ணம்: 90 ஆம் ஆண்டிலேயே எங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அகதிகளாக, இரண்டு மூன்று கிராமங்களில், குண்டு வீச்சுகள் இல்லாத பகுதிகளுக்குப் போய் இருந்தோம். அங்கிருந்து கண்டிக்குப் போய், அங்கே என்னுடைய வீட்டில் இருந்தோம். பிறகு கிளிநொச்சிக்குச் சென்றேன். 2008 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தேசியத்தலைவரைச் சந்தித்தேன். அவரிடம் விடைபெற்றுக் கொண்டுதான், தெற்கு ஆப்பிரிக்க நாட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து இங்கே வந்தேன்.

அருணகிரி:திருச்சிக்கு எப்படி வந்தீர்கள்? இங்கே உறவினர்கள் இருக்கின்றார்களா?

கனகரெட்ணம்: இங்கே எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. ஆனால், இது எங்கள் ஊரைப் போல, என் மாமன் ஊரைப் போல. இந்த வீட்டுக்கு மாத வாடகை 5000 கொடுக்கின்றோம். சென்னையில் என்றால் 15000 கொடுக்க வேண்டியதிருக்கும். எனவே, இந்த ஊரைத் தேர்ந்து எடுத்து இங்கே வந்தேன்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் பெரும்பாலானவர்கள், இந்தத் திருச்சி வழியாகத்தான் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இன்னமும் நிறையப் பேர் திருச்சியில் வசிக்கின்றார்கள். எங்களுடைய பிள்ளைகள் அனுப்புகின்ற தொகையை வைத்துத்தான், இங்கே வாழ்க்கையைக் கடத்திக் கொண்டு இருக்கின்றோம். கனடாவுக்குப் போய்விடலாமா என்றும் ஒரு யோசனை இருக்கின்றது. இப்போது என்னிடம் மிச்சம் மீதி இருக்கின்ற ஆவணங்களை அங்கே கொண்டு போய்ப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் நினைக்கின்றேன். அல்லது மேலே இருந்து அழைப்பு வந்தால், மேலே போக வேண்டியதுதான். வயதாகி விட்டது இல்லையா?

அருணகிரி: ஐயா, நீங்கள் திரும்பவும் ஈழத்துக்குச் செல்ல விரும்புகின்றீர்களா?

கனகரெட்ணம்: அங்கே போனால் பிரச்சினைகள் வரக்கூடும் எனக் கருதித்தான் இங்கே இருந்து கொண்டு இருக்கின்றேன். இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று அழித்துவிட்ட அந்த நாட்டில் நான் போய் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? (விம்முகிறார்) இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா? என்று காசி ஆனந்தனிடம் கேட்டேன். அவர் சொன்னார்: ‘நம்பிக்கையோடு இருப்போம்; நமக்கும் ஒரு விடிவு வரும்’ என்றார்.

 நேர்காணல்: எழுத்தாளர் அருணகிரி

விக்கிப்பீடியாவில் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்.

January 30, 2017

அமரர் காந்திஜி விவரணத் திரைப்படம் (1948)

1948 ஆம் ஆண்டில் ஜுப்பிட்டர் நிறுவனம் வெளியிட்ட "அமரர் காந்திஜி" விவரணத் திரைப்படத்தின் முழு விளக்கவுரை.


January 26, 2017

தமிழரசுக் கட்சி அன்றும் இன்றும்


நன்றி: நூலகம்