August 17, 2019

நல்லூர் கந்தசுவாமி கோயில்


நல்லூர் கந்தசுவாமி கோயில்

யாழ்ப்பாணம் நாவலர் கோட்டம் வை. முத்துக்குமாரசுவாமி
- 1950 -



ழ நாட்டில் வடபகுதியில் உள்ள கோவில்களுள் சரித்திரப் பெருமையுடன் சிறந்து விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி கோவில்.

பழைய சரித்திர மூலநூல்களாகிய கைலாயமாலை, வைபவ மாலை முதலியன, இக்கோவில் ஏறக்குறைய ஒர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிங்கையாரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகிய புவனேகவாகு என்னும் பட்டம் தாங்கிய நீலகண்டன் என்னும் பிராமணனால் கட்டப்பட்டது எனப் பகருகின்றன, சமீபகாலத்துள்ள சரித்திர ஆசிரியர்களின் ஆராய்ச்சியின் பிரகாரம், அது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், நல்லூரைச் சூறையாடி ஆரியச் சக்கரவர்த்தியைத் துரத்திய திரிசங்கபோதி புவனேகவாகு என்னும் நாமமுள்ள செண்பகப் பெருமாள் அல்லது சப்புமால் குமாரய என்னும் கோட்டை மன்னன் மகனால் கட்டப்பட்டது. பிற்கூற்றே உண்மை என்பது ஆசிரியரின் கொள்கை.

கோபுரங்களுடனும், சிற்ப அலங்காரங்களுடனும் திகழ்ந்த கோவிலை போர்த்துக்கீசர் 1620-ல் தரைமட்டமாக்கினர். அது இடிக்கப்படுமுன் அதன் பாதுகாப்பாளனாக இருந்த சங்கிலி என்னும் சைவப் பண்டாரம் அக்கோவில் விதானங்கள் வரையப்பட்ட செப்புச் சாசனங்களையுந் திருஆபரணங்களையுங் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அக்கோவிற் குருக்கள்மார் அங்கிருந்த சிலர் விக்கிரகங்கள் தாமிர விக்கிரங்களைப் பூதராயர் கோவிலுக்குச் சமீபத்தில் உள்ள குளத்திலே புதைத்து விட்டு நீர்வேலிக்கு ஓடினர்.

அதன் பின்னர் சைவ முயற்சிகளுக்கு ஓர் நூற்றாண்டுகளுக்குமேல் இருள் சூழ்ந்திருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் வானில் ஓர் ஒளி தோன்றிற்று. 1793-ம் ஆண்டு நல்லூர் கிருஷ்ண ஐயர் என்பவர் ஒல்லாந்த அரசாட்சியாரின் அனுமதியுடன் ஓர் ஓலைக் கொட்டிலை அமைத்து வெள்ளி வேலாயுதத்தை வைத்துப் பூசித்து வந்தார். இது பழைய கோவில் இருந்த இடத்தில் தான் வைக்கப்பட்டதோ, அன்றேல் அதன் சமீபத்திலோ என்பது தெளிவாக அறியமுடியவில்லை. இக்கோவிற் குடிசையில் வெள்ளிக்கிழமைகள் தோறும் கந்தபுராணப் படிப்பு ஒழுங்காக நடந்து வந்தது. இப்படிப்பு நடத்தியவர்களுள் பிற்காலத்தில் வித்வ சிரோமணி ந. . பொன்னம்பலம்பிள்ளை சிறந்தவர். இந்துக்களின் உதவியால் அது சிறிது சிறிதாகத் திருத்தம் பெற்றது.

ஆங்கிலர் ஆட்சியின் தொடக்கத்தில் (1798-1805) நோர்த் பிரபு இலங்கைத் தேசாதிபதியாக இருந்தார். அவர் காலத்தில் கிருஷ்ண ஐயர் மகன் சுப்பையருக்கு நல்லூர்க் கந்தசுவாமிக் கோவிற் குருக்கள் என்னும் நியமனப் பட்டோலை தேசாதிபதியின் கைச்சாத்துடன் அளிக்கப்பட்டது. அவர் சந்ததியில் உள்ளவரும்  சுப்பையரின் பூட்டனின் மகனுமாகிய நல்லூர் சிவன் கோவில் தாபகர் ஸ்ரீ நா. பொ. கார்த்திகேயக் குருக்களிடத்தில் சந்ததி முறையாக வந்துள்ள வாளும் நியமனப் பட்டோலை முதலியனவும் இருந்தன. அக்குருக்களிடம் யான் சென்று 1938ல் இக்கோவிலைப் பற்றிய வரலாற்றைக் கேட்டபொழுது இவற்றைப் புலப்படுத்தினார். அவருடைய மகன் ஸ்ரீ கைலாசநாதக் குருக்கள், எம் ஏ. இலங்கைப் பல்கலைக்கழகத்து ஆசிரியராக விளங்குகின்றார். இவரிடம் நியமனப் பட்டோலை முதலியன உண்டு.

மாப்பாண முதலியார்

கி. பி. 1807-ல் டொனாசுவாம் இரகுநாத மாப்பாண முதலியார் கச்சேரிச்
சிறப்பராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவரே நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைக் கட்டுவித்தற் பொருட்டு, பல முயற்சிகள் செய்தனர். கோவிலுக்கு அண்மையில் முத்திரைச் சந்தை எனப்படும் சந்தை இருக்கிறது. அங்கு நெசவு செய்யும் கைக்கோளர்  இருந்தனர். மாப்பாண முதலியார் முத்திரை வருவாய்ப் பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்தார். புதிதாகச் செய்யப்படும் ஒவ்வொரு ஆடைக்கும் முத்திரை போடவேண்டி இருந்தது. மாப்பாணர் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் திருப்பணிக்கு என்று ஒவ்வொரு சேலைக்கு ஆறு சதவீதம் பணம் பெற்றார்.
பிரதம குருக்களுடன் மாப்பாண முதலியாரும் கோவிற் களஞ்சியத் திறவுகோலைப் பெற்றனர். கோவிலுக்கு இரண்டு திறப்புகள் இருந்தன. பின்னர் அத்திறப்புகள் இரகுநாத மாப்பாணர் வழியிலுள்ளவர்களுக்குக் கிடைத்தன.
அக் கோவிலுக்குத் தூபி இல்லாமல் இருந்தது. விதிப்படி மூல மூர்த்தி சிலையால் அமைக்கப்பட்ட சுப்பிரமணிய மூர்த்தியாய் இருத்தல் வேண்டும் என்று நாவலரையா கோவில் அதிகாரிகளுக்குப் போதித்தார். அவர்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை. பின்பு நாவலரையாவை அதிகாரிகள் கோவிலுக்கு அழைத்து பிரசங்கம் செய்வித்தனர். நாவலரையாவின் முயற்சியால் கோவிலைக் கட்ட ஒரு பொதுச்சபை கூட்டப்பட்டது. அச்சபையில் கோயிற் கட்டடத்திற்காக ஆறாயிரம் ரூபா வரையில் கையொப்பஞ் சேர்ந்தது. நாவலரையா கருவூரிலிருந்து மூவாயிரம் ரூபாவுக்குக் கருங்கற்களும் எடுப்பித்துக் கொடுத்தார்.


அக்கோவிற் தேர்த் திருவிழாவுக்கு முன் கோழி, ஆடு முதலியன பலி கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது, அதனை நிறுத்த நாவலரையா முயன்றார், அது பலிக்கவில்லை. சதுர் ஆட்டம் நல்லூரில் நடக்க்க் கூடாது என்பதுவும் பிற திருத்தங்களையும் செய்ய முயன்றும் முடியாது என்று கண்டார், பிறகு நல்லூர்க் கந்தசுவாமி கோவில் என்ற பத்திரிகைகளும் மித்தியாவாத நிரசனம் என்றொரு இடிமுழக்கக் கண்டனமும் எழுதி வெளியிட்டனர்.

சமீப காலத்தில் நாவலரையாவின் அபிலாஷைகளுள் இரண்டு நிறைவேறிபுள்ளன. 1929-ம் ஆண்டு ஜூன் மீ 10-ந் உ தொடக்கம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் பராமரிப்பவர்கள் காலத்துக்குக் காலம் கணக்குக் காட்டவேண்டும் என்று டிஸ்திரிக் கோட்டாரால் தீர்மானிக்கப்பட்டது. நல்லூரில் பலி கொடுத்தல் நிறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுடன் உள்ள தொடர்பு

தற்போதிருக்கும் கந்தசுவாமி கோவில் கட்டும் பொழுது ஒரு முஸ்லிம் பெரியாரின் சமாதி உள் வீதிக்குள் அகப்பட்டுவிட்டது. தமக்குத் தொழுவதற்கு வசதியின்மையாலே, கோவிலுக்கு மேல் பாகத்திலே இக்காலத்தில் குடியேறி இருந்த முஸ்லிம் மக்கள் கலகஞ் செய்தனர். பின்பு அக்கோவிலில் மேற்கு வீதியில் ஒரு வாசலில் வைத்துச் சமாதியை அணுகி வணங்கி வர அவர்களுக்கு இடங் கொடுக்கப்பட்டது. அங்கு இன்றும் உள்ள அந்த வாசற் கதவு அதற்குச் சாட்சியாக உண்டு. சில காலத்திற்கு முன் வரையும் அதன் அருகே உள்ள வெளிப் புறத்தில் பந்தல் இட்டு அங்குள்ள முஸ்லிம் மக்களால் தொழுகை நடத்தப்பட்டு வந்தது.

பண்டைச் சின்னங்கள்

இக் காலத்தில் உள்ள கந்தசுவாமி கோவில் மூலஸ்தானத்துக்குள் இருக்கும் இரண்டு தாமிர விக்கிரகங்கள் - வள்ளியம்மனும்  தெய்வயானை அம்மனும் ஆதிக் கோவிலில் இருந்தன, என்று ஸ்ரீ. கா. வெ, கார்த்திகேயக் குருக்கள் வாயிலாக அறிந்துள்ளோம். அவை வேலாயுதத்தின் இரு பக்கமும் நிறுத்தப்பட்டிருக்கின்றன, சிறப்பான விழாக் காலங்களில் அந்த விக்கிரகங்களையே இன்னொரு வேலாயுதத்துடன் கொண்டு பவனி செல்வர். அத்தாமிர விக்கிரகங்கள் சில காலத்துக்கு முன் பூதராயர் கோவிலுக்குச் சமீபத்தே உள்ள பூதராயர் வளவு என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டன, அது சட்டநாதர் கோவிலுக்குப் பின்புறத்தில் உண்டு.

புவனேகவாகுவின் பதக்கம்

ஆதிக் கந்தசுவாமி கோவிலைக் கட்டிய புவனேகவாகுவினதும், புவனேகவாகு என்னும் பெயர் வரையப்பட்டுள்ளதுமான ஓர் அரிய பழைய பதக்கம் இன்றும் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் உளது. தமக்குப் பிதிராசச்சிதமாகக் கிடைத்த இப்பொருளை பூதனாராய்ச்சியார் என்பவர் (பூதத்தம்பி என்னும் தமிழ் மந்திரியின் மகன்) நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்குக் கொடுத்தார்'  என ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறப்படுகிறது. பூதனாராய்ச்சி வளவு நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அப்பால் உள்ளது.

நல்லூர்க் கந்தசுவாமி மேல் புகழ் மாலை சாற்றிய புலவர்கள் பலர். வெண்பா, விருத்தம் கலித்துறை, அந்தாதி, முதலிய பலவகைப் பாடல்களைப் பாடிப் போற்றியுள்ளனர். அவைகளில் சிலவற்றை ஈண்டுக் குறிப்பாம்.

இற்றைக்கு 165 ஆண்டுகளுக்கு முன்னே விளங்கிய சந்திர சேகர பண்டிதர் நல்லூர்க் கந்தசுவாமி மீது ஒரு கிள்ளை விடுதூது பாடியுள்ளார். நாவலரையாவின் ஆசிரியர் சேனாதிராய முதலியார் நல்லூர் கந்தசுவாமியைத் தரிசனஞ் செய்யச் செல்லும் பொழுது வழியிலே பாடப்பட்டன நல்லை வெண்பா. உடுப்பிட்டி குமாரசுவாமி முதலியார் நல்லைக் கலித்துறையும், வடகோவை சபாபதி நாவலர் நல்லைச் சுப்பிரமணிய பதிகமும் பாடியுள்ளனர்.

புலோலி, வே, தா. தியாகராசபிள்ளை அவர்களின் திருநல்லூரலங்காரம் விருத்தப் பாவில் பாடப்பட்டது. நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நல்லூர் கந்தர் பதிகம், நல்லூரந்தாதி, நல்லூர் முருகன் திருப்புகழ் முதலியன இயற்றியுள்ளார்.

வண்ணை நெ. வை. செல்லையா அவர்கள் நல்லைச் சண்முக மாலையும் (1924),  நல்லைச் சுப்பிரமணியர் விருத்தமும் (1928)  பாடி வெளியிட்டனர். வண்ணை பொன்னுத்துரை ஐயர் நல்லூர்க் கந்தசுவாமி மீது நிரோட்டயமக அந்தாதி பாடியுள்ளார். வண்ணை வை. இராமநாதன் அவர்கள் நல்லூர்க் கந்தர் அந்தாதி, அகவல் முதலியன எழுதி நாவலர் அச்சுக்கூட அதிபரால் வெளியிடப்பட்டன. கரணவாய் செவ்வந்தி நாததேசிகர், நல்லைக்கோவை (1932) எழுதி பதிப்பித்துள்ளார், . . வேற்பிள்ளைப் புலவர் ஈழமண்டல சதகத்தில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப் பற்றிப் பாடிய தனிச் செய்யுள் பின்வருமாறு:

"மற்று மிந் நல்லைத் தலத்தின் விசேடங்கள் வாயில் வழங்க முடியுமோ
வருகால மாறினுந் திருவருள்விலாசமோ வஞ்சர் நெஞ்சையு முருக்கும்
உற்றவரை முன்னும் யாமுற்றுவோமேயெனவுள் நொந்திடச் செய்துமே
லுன்னியாங் குன்னிய வரங்களெல்லா முதவியுறுகிலாரையு முறுத்தும்
நற்றவத் தொண்டர் தமதழகுதோத்திர வழகு நாடவருமோ தமழகு
நந்தன வனத்தழகு நால் வீதி யழகேங்கி நளிர் பந்த ரழகி வைகளிற்
சற்றவத் திருவருள் விலாசமே காணலாஞ் சாந்த நாயகி சமேத சந்த்ர மௌலீ
சனே யைந்தொழில் விலாசனே சந்திர புரதல வாசனே.

எழுதியவர்: யாழ்ப்பாணம் வை. முத்துக்குமாரசுவாமி
மூலம்: ஸ்ரீலங்கா 1950 ஆகத்து இதழ்
நன்றி: நூலகம்.ஓர்க்
ஈழநாட்டுப் புலவர்களுள் ஒருவராய ஸ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்களின் வழித்தோன்றலாகிய திரு. முத்து குமாரசுவாமியவர்களும் வாழையடி வாழையாகத் தமிழ் நூல்களை வெளியிட்டு வ.ந்தவர். மாணவர்கட்கேற்ற சரித்திர பாட வாசகம் என்ற வரிசையை எழுதி வெளியிட்டுள்ளார். ஈழநாட்டுக் கோயில்களின் வரலாற்றாராய்ச்சியிலும் ஈடுபட்டவர்.