July 11, 2007

சைவநன்மணி நா. செல்லப்பா காலமானார்

சைவ அறிஞரும் நூலாசிரியருமான சைவநன்மணி நா. செல்லப்பா கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தி இன்றைய தினக்குரல் நாளிதழில் வெளிவந்திருக்கிறது.


இவர் அரச சேவையில் சௌக்கியப் பரிசோதகராகக் கடமையாற்றிய போது, புலமைப் பரிசில் பெற்று ஜெனீவா சென்று உலக சுகாதார ஸ்தாபனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி சௌக்கிய போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆன்மீக சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல சமய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது சமயப் பணியைப் போற்றும் வகையில் இந்து சமய அலுவல்கள் திணைக்களம் "சைவநன்மணி" என்ற பட்டத்தையும் உலக சைவப் பேரவை "கௌரவ கலாநிதி"ப் பட்டத்தையும் அளித்து கௌரவித்திருந்தன. இவர் பல சமய சிந்தாந்த நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை ஒப்பு நோக்கி ஆய்வு ரீதியில் எழுதியிருக்கிறார். கொழும்பில் சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடத்தி வந்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகளுக்கு அவரது குருவான செல்லப்பா சுவாமிகள் அருளிய மகா வாக்கியங்களான:

1. எப்பவோ முடிந்த காரியம்
2. நாம் அறியோம்
3. ஒரு பொல்லாப்பும் இல்லை
4. முழுதும் உண்மை

ஆகியவற்றுக்கு அருமையான விளக்கங்களை காலஞ்சென்ற சைவநன்மணி நா. செல்லப்பா தந்திருக்கிறார். இவ்விளக்கங்களை டாக்டர் கி. லோகநாதன் அவர்கள் பிரதியெடுத்திருக்கிறார். விரும்பியவர்கள் எனது தளத்துக்கு சென்று வாசித்து மகிழலாம்:

யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்


July 09, 2007

நவாலி நரபலி 1995

அதிகாலை விழிதிறந்த போது
எமன் ஊருக்குள் புகுந்தான்.
அசுரப்பறைவைகள்
இரை தேடி வானத்தில் அலைந்தன.
பீரங்கி பூட்டிய இயந்திர யானைகள்
குருதி வடியும் பற்களுடன் நிலமுழுது வந்தன.


கையில் எடுத்தவை மட்டுமே எடுத்தவையாக
ஊர்துறந்து ஓடியது ஒரு கூட்டம்.
பின்னாற் துரத்தி வந்தன எறிகணைகள்.
வாயுலர்ந்து போனது
நீருக்குத் தவித்தன நாக்குகள்.


ஆயினும் வேகத்தைக் குறைக்கவில்லை கால்கள்.
கூடுகலைந்த குருவிகள் " நவாலி" வந்தடைந்தன.
வரவேற்றது "சென் பீற்றர்ஸ் தேவாலயம்".
இனிக் கொஞ்சம் ஆறலாமென
சுவாசம் சீரானது.
"வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
நானுங்களுக்கு ஆறுதல் தருவேன்" என்றது அசரீரி.


வாருங்கள் என்று அகலத் திறந்து கிடந்தன
தெய்வத் திருச்சபையின் கதவுகள்.
அச்சமில்லை அமருங்களென்று
கட்டளையிட்டது கூரைச்சிலுவை.
"பேதுருவானவரே!
நாம் செய்த தவறென்ன?
ஏனெங்கள் கூடு கலைந்து போனது?
என்றபடி எல்லோரும் ஆறியிருந்த போதுதான்
அது நடந்தது.


இரைச்சலிட்டபடி வந்த கொலைப்பறவை
ஆறுகுண்டுகளைப் பீச்சிவிட்டுப் போக
"ஐயோ!" புழுதி மேகத்துள்ளே
உலகத்தை உலுக்கியது கதறல் உணர்வு
திரும்பிய போது உலகமே இருண்டு கிடந்தது.
குப்பென்றடித்தது பிணவாடை.
நொடிக்குள் நூறு உடல்கள் குதறப்பட்டு
சிதறிக்கிடந்தன அவயவங்கள்.


அந்தச் சதைக் குவியலுக்குள்ளேதான்
ஒரு தாமரைப் பூவும் கிடந்தது.
புழுதி பூசப்பட்டு குருதி வழிந்தபடி
அழகிய கவிதையொன்று கிடந்தது.
பஞ்சுப் பொதி போன்ற பிஞ்சொன்று
பிளந்து கிடந்தது.


கருப்பை வாசல் கடந்து வந்து
ஆறுமாதங்கள் கூட ஆகாத "கற்பகப்பூ"
கருகிக் கிடந்தது.
உலகமெங்கும் அரசோச்சும்
மனித உரிமைகளின் மனச் சாட்சிகளே!
என்ன செய்யும் உத்தேசம்?
ஏவிவிட்ட பாவி இன்னும் இருக்கின்றாள்.
"ரீவி" யில் முகம் காட்டுகின்றாள்.
குளிர்ந்த நிலவின் பெயர் அவளுக்கு
அவளும் கருப்பை சுமந்தவள்.
அடையாளம் தெரிகிறதா?
அவளுக்கு என்ன தீர்ப்பு எழுதுவீர்?


புதுவை இரத்தினதுரை

1995 ஆண்டு ஜூலை 9 இல் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 141 பேர் கொல்லப்பட்டனர். பார்க்க: விக்கிபீடியா கட்டுரை

March 10, 2007

பேராசிரியர் எலியேசர் நினைவு நாள் இன்று

பேராசிரியர் மாமனிதர் சி. ஜே. எலியேசர் அவர்களின் நினைவு தினம் இன்றாகும் (மார்ச் 10, 2001). இலங்கையில் கல்வி கற்கும் காலங்களில் இவரது கணித நூல்களை (குறிப்பாக பிரயோக கணிதப் பயிற்சி நூலை) பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவரது "எலியேசர் தேற்றம்" பௌதிகவியலில் பயன்படுத்தப்படுகிறது.


கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் (Christie Jeyaratnam Eliezer) 1918 ஆம் ஆண்டில் ஈழத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி ("'PhD'') பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் புகழ்பெற்ற விஞ்ஞானி போல் டிராக் (''Paul Dirac'') அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (''DSc'') பட்டமும் பெற்றார்.

எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக ''அமைதிக்காக அணு சக்தி'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.

1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (''La Trobe'') பல்கலைக்கழகத்தில் பயன்முகக் கணிதத்தில் (Appied Maths) பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்து 1983இல் இளைப்பாறினார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோறியா மாநில 'இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்' தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் ''Order of Australia'' விருது 1996இல் வழங்கப்பட்டது.

1997 ம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எலியேசரின் புகழ்பெற்ற தேற்றம்:

புரோத்தன் (நேர்மின்னி) ஒன்றின் மின்புலத்தினூடாக இலத்திரன் (எதிர்மின்னி) அந்த புரோத்தனின் மையத்தை நோக்கிச் (''radially'') செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த இலத்திரன் லோரன்ஸ்-டிராக் (''Lorentz-Dirac'') சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல புரோத்தனால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது இலத்திரனில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் 'எல்லை அடைவாக அதிகரிக்கும்' (''asymptotically'') ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது ''எலியேசரின் தேற்றம்'' எனப்படுகிறது.
[Eliezer, C.J., ''The hydrogen atom and the classical theory of radiation'', Proc. Camb. Phil. Soc. 39, 173_ (1943)]

விக்கிபீடியாவில் பேராசிரியர் சி. ஜே. எலியேசர்.

February 27, 2007

அருளரின் "லங்கா ராணி"

ஈரோஸ் அருளர் எழுதிய லங்கா ராணி என்ற நாவல் பற்றிய பார்வை ஒன்று அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்கள் ஜனவரி 1981 அமுதசுரபி சஞ்சிகைக்காக எழுதியது இந்த விமரிசனம். 70-களின் பிற்பகுதியில் முதற் பதிப்பாக வெளிவந்த போது லங்கா ராணியை வாசித்திருக்கிறேன். மிகவும் விறுவிறுப்புடன் நல்ல நடையில் உண்மைச் சம்பவங்களைக் கற்பனைப் பாத்திரங்களுடன் அருளர் புனைந்திருந்தார். இந்நாவல் மீண்டும் இரண்டு தடவைகள் மறுபதிப்புச் செய்யப்பட்டதாக அறிகிறேன்.

அகிலனின் பார்வையில் "லங்கா ராணி"

(இது அகிலன் அவர்களால் 1981-இல் எழுதப்பட்டது என்பதை நினைவில் நிறுத்தவும்)

1977 ஆகஸ்டில் இலங்கையில் இனக்கலவரம் நடந்ததல்லவா? அதில் பாதிக்கப்பட்ட 1200 தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, இரண்டு நாட்களில் பருத்தித்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது.

இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட உயிர்த் துடிப்புமிக்க கதை. இரண்டே நாட்களில் நடக்கும் கதையைப் போலத் தோன்றினாலும், இதில் அங்கங்கே 2500 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இலங்கை எப்படி இருந்தது? விடுதலை பெற்ற பிறகு - ஏன் 1958ல் ஒரு பயங்கரமான இனக் கலவரமும், பிறகு 1977 ஆகஸ்டில் ஓர் இனக்கலவரமும் அங்கே ஏற்பட்டன. கலவரங்களின் விளைவுகளை மறந்து, தமிழர்களும், சிங்களவர்களும் இனி எதிர்காலத்தில் அங்கு இணைந்து வாழ முடியுமா? இவை போன்ற பல அடிப்படைப் பிரச்சனைகள் இந்த நாவலில் அலசி ஆராயப்படுகின்றன.

இந்த நூலின் ஆசிரியர் அருளர், வெறும் உணர்ச்சித் துடிப்புமிக்க இளைஞராகத் தோன்றவில்லை. காரிய காரணங்களை மிகவும் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். நாட்டு நடப்பைக் கூர்ந்து நோக்கியிருக்கிறார். வகுப்புக் கலவரங்களுக்குள்ள அடிப்படைக் காரணம், இந்த அரசியல் அமைப்பு - இதன் அரசியல் கட்சிகள் - தேர்தலில் இனவெறியைத் தூண்டிவிட்டு, மறு இனத்தைப் பகைக்கச் செய்து ஓட்டு வாங்கும் முறை என அவர் சான்றுகளுடன் கூறும் போது, நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

சரவணன், குமார், தவன் மூவரும் கொழும்பு இந்துக் கல்லூரி அகதிகள் முகாமில் தொண்டர்களாகப் பணியாற்றிய இளைஞர்கள். அவர்களுடன் கப்பலில் ஒரு வெள்ளை வேட்டி இளைஞனும் சேர்ந்து கொள்ளுகிறான். இவர்களோடு பலதரப்பட்ட வாழ்க்கை நிலையில் உள்ள தமிழ் அகதிகளும் கப்பலில் வருகிறார்கள். கலவரங்கள் எங்கெங்கே எவ்வளவு கொடூரமாக நடைபெற்றன எனும் சோகக் காட்சிகள் கண்முன்னே நடைபெறுபவைபோல் வருணிக்கப்படுகின்றன.

இளைஞர்களின் உரையாடல்களின் வாயிலாகவே காரிய காரணங்கள் நமக்கு விளக்கப்படுகின்றன.

1958-ல் நடந்த முதல் கலவரத்தை அடுத்து 1961-ல் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். அதற்கு முன்பாக யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், தோட்டங்களிலே வேலை செய்த இந்தியத் தமிழர்களிடமிருந்து பிரிந்து, உயர்ந்தும் ஒதுங்கியும் வாழத் தலைப்பட்டது மல்லாமல் தொழிலாளர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் காரணமாக இருந்தார்கள் எனக் கேள்வியுற்றேன். இந்தப் போக்கு அவர்களையே மிகச் சிறுபான்மையோராக மாற்றி விட்டது. இப்போது தமிழர்களுக்கிடையே வேற்றுமை குறைந்து வருவதாகத் தெரிகிறது. இலட்சிய ஆவேசங் கொண்ட புதிய தலைமுறை இளைஞர்கள் அங்கே தோன்றியிருக்கிறார்கள்.

அண்மைய வரலாற்று நிகழ்ச்சிகள் நிறைந்த ஓர் அற்புதப் படைப்பு இது. ஈழத்து விடுதலைப் புரட்சியாளர்களின் சிந்தனையும் செயலும் சரியானவைதாமா என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை அப்படி உருவாக்கி விட்ட பின்னணி நிகழ்ச்சிகளை நம்மால் மறந்துவிட முடியாது.

படித்து முடித்தபின் நம்மை உணர்ச்சி வயப்படுத்தும் நாவல் இது, சிந்திக்கச் செய்யும் நாவல் இது; செயல்படத் தூண்டி ஒரு நல்ல முடிவு காணும் உந்துதலை ஏற்படுத்தத் தூண்டும் நாவல் இது.

January 10, 2007

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது. அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்." - பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்1974 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3 ஆம் நாளன்று யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆமாம், நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்துவதற்கான எற்பாடுகள் அனைத்தும் மிகவும் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டைத் தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மகா நாட்டு மண்டபத்தை இலவசமாக உதவுவதாக முன்னர் அறிவித்திருந்த சிறிமாவோ அம்மையாரின் அரசோ, இப்போது மகா நாட்டு ஏற்பாடுகளையே குழப்பும் எத்தனத்தில் இறங்கியது.

பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டதும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டதுமான வீரசிங்கம் மண்டபத்தினதும் மற்றும் அரசு ஆதரவாளர் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ். திறந்த வெளியரங்கின் உபயோகமும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு முதலில் மறுக்கப்பட்டது. அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் அவ்வாறே மறுக்கப்பட்டன. எனவே, மாற்று ஒழுங்காக தனியார் மண்டபங்களை மாநாட்டு அமைப்பாளர்கள் எற்பாடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

மேலும், மாநாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமையால் பொதுத் தொடர்பு ஊடகங்களான பத்திரிகைகளும், வானொலியும் மாநாடு நடைபெறாது எனும் ஐயப்பாட்டையே தோற்றுவிக்கத் தலைப்பட்டன. அரசு ஏற்படுத்த முனைந்த பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் "1974 , தை 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ். நகரில் இடம்பெறும் எனும் வாசகம் மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் பேரம்பலம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கட்டணம் அறவிடாதே இத் தீவு பூராவும் இருந்த தமிழ் திரைப்படமாளிகைகளின் காட்சிகள் தோறும் அவற்றின் திரைகளில் காண்பிக்கப்பட்டன. அரசின் இருட்டடிப்பு முயற்சி இவ்வாறே வெற்றிகொள்ளப்பட்டது.

அந்நிலையில் செய்வதறியாது திகைத்த அரசு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தீவுக்கு வருகைதந்திருந்த அறிஞர்களையும், பார்வையாளர்களையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே நாடு கடத்தியது. அவ்வாறு நாடு கடத்தப்பட்ட தமிழ் அறிஞர்கள், பார்வையாளர்கள் அவரவர் நாட்டுத் தலைநகரங்களில் வைத்து சர்வதேச பத்திரிகையாளர்களிடம் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவாறு தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்குப் பறைசாற்றினர்.

இருப்பினும், சென்னையில் இருந்தே வருவாரென எதிர்பார்க்கப்பட்ட பார்வையாளரான உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜனர்த்தனன் மட்டும் விதிவிலக்காக நாட்டினுள் பிரவேசிக்க முடிந்தது. மலேயா சென்று சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த டாக்டர் ஜனார்த்தனன், மலையகத் தமிழ் பகுதிகளில் தமது விஜயத்தை முடித்துக்கொண்ட பின்பே யாழ்ப்பாண மாநாட்டை வந்தடைந்தார்.

தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த நாளுக்கு மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த போதே மாநாட்டை நடத்துவதற்கான அங்கீகாரம் அரசினால் வழங்கப்பட்டது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையையே ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன.

யாழ். நகரோ சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் இந்திர விழாக் கோலம் காட்டி நிற்க, 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை மாநாடு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

முடிவடைந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அயல் நாட்டு அறிஞர்களுக்கான வழியனுப்பு விழா மறுநாள் 10 ஆம் திகதி யாழ். திறந்த வெளியரங்கில் நடைபெற்றிருத்தல் வேண்டும். ஏற்பாடுகளின்படி யாழ். திறந்தவெளியரங்கு அதற்கெனத் தயார்நிலையில் இருந்துள்ள போதும், அதன் புறப்படலைகளோ பூட்டப்பட்டிருந்தன. யாழ். மாநகர முதல்வர் ஏ. ரி. துரையப்பாவிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே அரங்கின் புறப்படலைகள் திறக்கப்படும் என்று அரங்கின் காப்பாளர் தெரிவித்திருந்தார். யாழ். மாநகர சபை மேயர் தெரிவு இடம் பெறும் சந்தர்ப்பங்களில் சபை உறுப்பினர்கள் காணாமற் போவது வழமையே. அப்போதோ மாநகர முதல்வரே தலைமறைவாகி விட்டார். அவரது இருப்பிடம் அறியப்படாத நிலையில் வீரசிங்கம் மண்டபத்திலே மேற்படி வழி அனுப்பு விழாவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

வழியனுப்பு விழாவிற்குத் திரண்டு வந்திருந்த ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்களை, மண்டத்தில் உள்ளடக்க இயலாத நிலையில் மண்டபம் முன்பாக அதற்கும் தெருவிற்கு இடைப்பட்ட நிலத்தில் நிறுவப்பட்ட திடீர் மேடையில் வழியனுப்பு விழா ஆரம்பமாக தெருவிற்கு மறுபக்கத்தில் புல்தரையில் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

போக்குவரவுக்குத் தெரு மூடப்பட்டிராத போதும் மேடைக்கும் பொது மக்களுக்கும் இடையே பயணிக்க வேண்டாமென்று இரு புறத்தும் பணிபுரிந்த தொண்டர்களால் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில், ஊர்திகள் யாவும் மாற்றுப் பாதையையே உபயோகித்தன. அதே பாதையால் மோட்டார் சைக்கிளில் வந்த போக்குவரவுப் பொலிஸ் அதிகாரி சேனாதிராஜாவும் பார்வையாளர்களுக்கும் மேடைக்கும் குறுக்கே பயணியாது சுற்று வீதியூடாக யாழ்.பொலிஸ் தலைமையகம் சென்றடைந்தார்.

அதனையொரு சாட்டாக எடுத்துக் கொண்டு, அப்போதுதான் அனுராதபுரத்தில் இருந்து வந்தடைந்த கலகம் அடக்கும் பொலிஸார் பார்வையாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர். வெண்கலக் கடையில் புகுந்த யானைகளின் அட்டகாசம் போன்று, விழா நிகழ்வுகளை அமைதியாக செவிமடுத்து கொண்டிருந்த அப்பாவிப் பொது மக்கள் மீது காரணமின்றி கலகம் அடக்கும் பொலிஸார் குண்டாந்தடியடிப் பிரயோகம் செய்து, வகை தொகையின்றி கண்ணீர்குண்டுகளையும் எய்து உச்சவலு மின் கம்பிகள் அறுந்து விழும்படியாக துப்பாக்கிக் குண்டுகளையும் தீர்த்தனர். சம்பவித்த அசம்பாவிதத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது.

உச்சவிசை மின் கம்பிகளில் சிக்குண்ட ஒன்பது தமிழர் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டனர். யாழ்.மத்திய பஸ் நிலையம் வரை அடித்து விரப்பட்ட மக்கள், ராணி படமாளிகையில் அடைக்கலம் தேட முற்பட்ட போதும் படமாளிகைக்குள்ளேயும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்டன.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கும் ஓர் எத்தனம் மேற்கொள்ளப்பட்டதாயினும், ஒரு கிறீஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்த்தனன் தலைநகர் கொழும்பு சென்றடைய இந்திய தூதுவரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்திர விழாக்கோலம் பூண்டிருந்த யாழ் நகரம், ஒரே நொடிப்பொழுதில் சோகமயமாகியது. முழு யாழ்ப்பாணமும் துக்கம் அனுட்டித்ததனால் அவ்வாண்டு தை முதல் நாளில் எந்தவொரு இல்லத்திலும் பால் பொங்கவில்லை, மாறாகத் தமிழர் உள்ளங்கள்தாம் கொதித்துப் பொங்கின. தமிழாராய்ச்சித் தியாகிகள் நினைவாக நிறுவப்பட்ட ஒன்பது நினைவுத் தூண்கள் இன்றும் யாழ்.வீரசிங்க மண்டபம் முன்பாக மேற்படி அனர்த்தத்தை நினைவுபடுத்துவனவாக அமைகின்றன. இந்த நினைவுச் சின்னத்தை ஸ்ரீலங்கா இராணுவம் பல முறை சிதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் தமிழர்கள் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியைத்தானும் அரசின் தலையீடு இல்லாது தாமே சுதந்திரமாக நடத்தவியலாதவாறு ஒடுக்கப்பட்டு வருதலை, உலகின் மனச்சாட்சிக்கு உறுத்திய முதல் வரலாற்றுப் பதிவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இப்பதிவின் தகவல்கள் திரு. சா.ஆ. தருமரத்தினம் அவர்கள் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. 4வது தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவராக இருந்த மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் பற்றிய எனது முன்னைய பதிவு இங்கே.