January 10, 2007

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது. அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்." - பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்



1974 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3 ஆம் நாளன்று யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆமாம், நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்துவதற்கான எற்பாடுகள் அனைத்தும் மிகவும் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டைத் தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மகா நாட்டு மண்டபத்தை இலவசமாக உதவுவதாக முன்னர் அறிவித்திருந்த சிறிமாவோ அம்மையாரின் அரசோ, இப்போது மகா நாட்டு ஏற்பாடுகளையே குழப்பும் எத்தனத்தில் இறங்கியது.

பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டதும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டதுமான வீரசிங்கம் மண்டபத்தினதும் மற்றும் அரசு ஆதரவாளர் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ். திறந்த வெளியரங்கின் உபயோகமும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு முதலில் மறுக்கப்பட்டது. அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் அவ்வாறே மறுக்கப்பட்டன. எனவே, மாற்று ஒழுங்காக தனியார் மண்டபங்களை மாநாட்டு அமைப்பாளர்கள் எற்பாடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

மேலும், மாநாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமையால் பொதுத் தொடர்பு ஊடகங்களான பத்திரிகைகளும், வானொலியும் மாநாடு நடைபெறாது எனும் ஐயப்பாட்டையே தோற்றுவிக்கத் தலைப்பட்டன. அரசு ஏற்படுத்த முனைந்த பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் "1974 , தை 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ். நகரில் இடம்பெறும் எனும் வாசகம் மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் பேரம்பலம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கட்டணம் அறவிடாதே இத் தீவு பூராவும் இருந்த தமிழ் திரைப்படமாளிகைகளின் காட்சிகள் தோறும் அவற்றின் திரைகளில் காண்பிக்கப்பட்டன. அரசின் இருட்டடிப்பு முயற்சி இவ்வாறே வெற்றிகொள்ளப்பட்டது.

அந்நிலையில் செய்வதறியாது திகைத்த அரசு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தீவுக்கு வருகைதந்திருந்த அறிஞர்களையும், பார்வையாளர்களையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே நாடு கடத்தியது. அவ்வாறு நாடு கடத்தப்பட்ட தமிழ் அறிஞர்கள், பார்வையாளர்கள் அவரவர் நாட்டுத் தலைநகரங்களில் வைத்து சர்வதேச பத்திரிகையாளர்களிடம் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவாறு தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்குப் பறைசாற்றினர்.

இருப்பினும், சென்னையில் இருந்தே வருவாரென எதிர்பார்க்கப்பட்ட பார்வையாளரான உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜனர்த்தனன் மட்டும் விதிவிலக்காக நாட்டினுள் பிரவேசிக்க முடிந்தது. மலேயா சென்று சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த டாக்டர் ஜனார்த்தனன், மலையகத் தமிழ் பகுதிகளில் தமது விஜயத்தை முடித்துக்கொண்ட பின்பே யாழ்ப்பாண மாநாட்டை வந்தடைந்தார்.

தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த நாளுக்கு மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த போதே மாநாட்டை நடத்துவதற்கான அங்கீகாரம் அரசினால் வழங்கப்பட்டது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையையே ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன.

யாழ். நகரோ சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் இந்திர விழாக் கோலம் காட்டி நிற்க, 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை மாநாடு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

முடிவடைந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அயல் நாட்டு அறிஞர்களுக்கான வழியனுப்பு விழா மறுநாள் 10 ஆம் திகதி யாழ். திறந்த வெளியரங்கில் நடைபெற்றிருத்தல் வேண்டும். ஏற்பாடுகளின்படி யாழ். திறந்தவெளியரங்கு அதற்கெனத் தயார்நிலையில் இருந்துள்ள போதும், அதன் புறப்படலைகளோ பூட்டப்பட்டிருந்தன. யாழ். மாநகர முதல்வர் ஏ. ரி. துரையப்பாவிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே அரங்கின் புறப்படலைகள் திறக்கப்படும் என்று அரங்கின் காப்பாளர் தெரிவித்திருந்தார். யாழ். மாநகர சபை மேயர் தெரிவு இடம் பெறும் சந்தர்ப்பங்களில் சபை உறுப்பினர்கள் காணாமற் போவது வழமையே. அப்போதோ மாநகர முதல்வரே தலைமறைவாகி விட்டார். அவரது இருப்பிடம் அறியப்படாத நிலையில் வீரசிங்கம் மண்டபத்திலே மேற்படி வழி அனுப்பு விழாவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

வழியனுப்பு விழாவிற்குத் திரண்டு வந்திருந்த ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்களை, மண்டத்தில் உள்ளடக்க இயலாத நிலையில் மண்டபம் முன்பாக அதற்கும் தெருவிற்கு இடைப்பட்ட நிலத்தில் நிறுவப்பட்ட திடீர் மேடையில் வழியனுப்பு விழா ஆரம்பமாக தெருவிற்கு மறுபக்கத்தில் புல்தரையில் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

போக்குவரவுக்குத் தெரு மூடப்பட்டிராத போதும் மேடைக்கும் பொது மக்களுக்கும் இடையே பயணிக்க வேண்டாமென்று இரு புறத்தும் பணிபுரிந்த தொண்டர்களால் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில், ஊர்திகள் யாவும் மாற்றுப் பாதையையே உபயோகித்தன. அதே பாதையால் மோட்டார் சைக்கிளில் வந்த போக்குவரவுப் பொலிஸ் அதிகாரி சேனாதிராஜாவும் பார்வையாளர்களுக்கும் மேடைக்கும் குறுக்கே பயணியாது சுற்று வீதியூடாக யாழ்.பொலிஸ் தலைமையகம் சென்றடைந்தார்.

அதனையொரு சாட்டாக எடுத்துக் கொண்டு, அப்போதுதான் அனுராதபுரத்தில் இருந்து வந்தடைந்த கலகம் அடக்கும் பொலிஸார் பார்வையாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர். வெண்கலக் கடையில் புகுந்த யானைகளின் அட்டகாசம் போன்று, விழா நிகழ்வுகளை அமைதியாக செவிமடுத்து கொண்டிருந்த அப்பாவிப் பொது மக்கள் மீது காரணமின்றி கலகம் அடக்கும் பொலிஸார் குண்டாந்தடியடிப் பிரயோகம் செய்து, வகை தொகையின்றி கண்ணீர்குண்டுகளையும் எய்து உச்சவலு மின் கம்பிகள் அறுந்து விழும்படியாக துப்பாக்கிக் குண்டுகளையும் தீர்த்தனர். சம்பவித்த அசம்பாவிதத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது.

உச்சவிசை மின் கம்பிகளில் சிக்குண்ட ஒன்பது தமிழர் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டனர். யாழ்.மத்திய பஸ் நிலையம் வரை அடித்து விரப்பட்ட மக்கள், ராணி படமாளிகையில் அடைக்கலம் தேட முற்பட்ட போதும் படமாளிகைக்குள்ளேயும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்டன.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கும் ஓர் எத்தனம் மேற்கொள்ளப்பட்டதாயினும், ஒரு கிறீஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்த்தனன் தலைநகர் கொழும்பு சென்றடைய இந்திய தூதுவரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்திர விழாக்கோலம் பூண்டிருந்த யாழ் நகரம், ஒரே நொடிப்பொழுதில் சோகமயமாகியது. முழு யாழ்ப்பாணமும் துக்கம் அனுட்டித்ததனால் அவ்வாண்டு தை முதல் நாளில் எந்தவொரு இல்லத்திலும் பால் பொங்கவில்லை, மாறாகத் தமிழர் உள்ளங்கள்தாம் கொதித்துப் பொங்கின. தமிழாராய்ச்சித் தியாகிகள் நினைவாக நிறுவப்பட்ட ஒன்பது நினைவுத் தூண்கள் இன்றும் யாழ்.வீரசிங்க மண்டபம் முன்பாக மேற்படி அனர்த்தத்தை நினைவுபடுத்துவனவாக அமைகின்றன. இந்த நினைவுச் சின்னத்தை ஸ்ரீலங்கா இராணுவம் பல முறை சிதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் தமிழர்கள் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியைத்தானும் அரசின் தலையீடு இல்லாது தாமே சுதந்திரமாக நடத்தவியலாதவாறு ஒடுக்கப்பட்டு வருதலை, உலகின் மனச்சாட்சிக்கு உறுத்திய முதல் வரலாற்றுப் பதிவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இப்பதிவின் தகவல்கள் திரு. சா.ஆ. தருமரத்தினம் அவர்கள் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. 4வது தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவராக இருந்த மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் பற்றிய எனது முன்னைய பதிவு இங்கே.

25 comments:

said...

காலமறிந்த பதிவு, நன்றிகள்
முன்னை இட்ட தீ....!

said...

தமிழர்தம் வரலாற்றில் கறை படிந்ததொரு
நிகழ்வைப் பதிந்தமைக்கு தந்தமைக்கு
நன்றிகள் பல..

said...

ஒரு நல்ல வரலாற்று மீள்பார்வைப் பதிவு. மிக்க நன்றி.

said...

பகிர்வுக்கு நன்றி,

said...

கானா பிரபா,

இவ்வாறான நிகழ்வுகளை அடிக்கடி நினைவுகூர வேண்டியது இன்றைய அவசியத் தேவையும் கூட.

சிறுவனாக இருக்கும்போது இந்த மாநாட்டின் முதல் மூன்று நாட்களும் வீரசிங்கம் மண்டபத்துக்கு சென்ற ஞாபகம் இன்னமும் பசுமையாக இருக்கிறது. மூன்று நாட்கள் மட்டுமே செல்ல முடிந்தது. பின்னர் கொழும்பு வந்து விட்டேன். முதல் நாள் நிகழ்வில் விசேட அழைப்பிதழுடன் தான் உள்ளே விட்டார்கள். என்னுடைய சிறிய தகப்பனார் ஒரு அழைப்பிதழ் மட்டுமே வைத்திருந்தார். அவருடன் சேர்ந்து ஒரு மாதிரி உள்ளே போக முடிந்தது.

மில்க்வைற் தாபனத்தினர் அன்று மாநாட்டு நினைவாக அச்சடித்த பிளாஸ்டிக் பாக் ஒன்று ஒவ்வொருவருக்கும் இலவசமாகக் கொடுத்தார்கள். நீண்ட காலம் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

கடைசி நாள் நிகழ்வுகள் பற்றி நான் கொழும்பில் இருந்தபோது தான் கேள்விப்பட்டேன். ஆமாம், அந்த நினைவுகள் மறக்க முடியாதவையே.

said...

சுதேசன்,
//தமிழர்தம் வரலாற்றில் கறை படிந்ததொரு
நிகழ்வைப் பதிந்தமைக்கு தந்தமைக்கு
நன்றிகள் பல..//

கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

said...

வெற்றி,
//ஒரு நல்ல வரலாற்று மீள்பார்வைப் பதிவு//

நன்றி.

said...

திலகன்,
//பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

said...

இப்படியான வரலாற்றுப் பதிவுகளை தொடர்ச்சியாக சுருக்கமாக எழுதுவது நல்லது. உங்களின் இத்தகைய முயற்சிகள் தொடர வழ்த்துக்கள்.
எனது இப்போதைய பணி ஒன்றுக்கு உங்கள் உதவி இருந்தால் நல்லது என என்ணுகிறேன். எனக்கு ஒரு தனிமடல் போடவும்.
someeth13@gmail.com

said...

நிகழ்வுகளை ஞாபகப்படுத்தலென்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்க வேண்டியது, அது இன்பத்துக்குரியதோ துன்பத்துக்குரியதோ.
காலமறிந்திட்ட பதிவுக்கு நன்றி.

Anonymous said...

சில விடயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்துவது கூட நல்லதுதான்.
தமிழரின் போராட்ட வரலாற்றின் முதலாவது படிக்கல்லினைப்பற்றிய
விபரங்களை தந்தமைக்கு நன்றி.
உங்அக்ளிடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கிறேன்.

said...

சோமி,
//இப்படியான வரலாற்றுப் பதிவுகளை தொடர்ச்சியாக சுருக்கமாக எழுதுவது நல்லது.//
கருத்துக்கு நன்றி. உங்களுக்குத் தனி மடல் போடுகிறேன்.

said...

வன்னியன், கரிகாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

இந்த சம்பவம் நடந்த முதல் நாள் மாநாட்டு ஊர்திகளை காண்பிக்க என்னை எனது பெற்றோர் அழைத்து சென்றிருந்தனர்.கண்கொள்ளா
காட்சியாய் இருந்தது.

கருணாநிதி அவர்களுக்கும் மாநாட்டுக்கு வர விசா மறுக்க பட்டிருந்தது.

காக்கி சட்டை முட்டாள்களுக்கு மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே மாநாடு நடை பெறுவது ஆத்திரத்தை கிளறியதாம்.

காக்கி சட்டை முட்டாள்கள் தமிழ்நாட்டிலிருந்த வந்தஇஸ்லாமிய அறிஞர்(பெயர் மறந்து விட்டேன்) பேசும் பொழுது தான் அவர் தான் உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் ஜனார்ததனம் என்று கைது செய்ய வந்தார்களாம்.

said...

சிறி!

நல்லதோர் நினைவுப்பதிவு. இம்மகாநாடு நடந்த காலத்தில் நிகழ்வுகளை திருமலையிலிருந்து பத்திரிகைகள் மூலமாக வாசித்தது மட்டுமே.

பகிர்தலுக்கு நன்றி.

said...

ஸ்ரீதரன்,
இது தனிப்பட்ட பார்வைக்கென்றபோதுங்கூட, பின்னூட்டமாக அனுமதிப்பதிலே ஏதும் சிக்கலில்லை.
உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். என்றாலுங்கூட, பேரா. வித்தியானந்தனின் மக்கள் தமிழாராய்ச்சி நிகழ்வினை மூன்று மணிநேரம் ஓடும் படமாக வைத்திருக்கின்றார்கள். 2004 ஆண்டிலே, பொஸ்ரன் தமிழ்ச்சங்கநிகழ்விலே ஒரு பத்து நிமிடநேரம் window media player இலே ஓடும்வண்ணம் மாற்றி ஓடவிட்டார்கள். அவர்களிலே ஒருவரிடம் பேசும் சந்தர்ப்பம் வாய்த்தபோது இதனை ஆவணப்படுத்தி எல்லோருக்கும் பொதுவாக வைக்கவேண்டிய தேவையைக் கூறினேன். சந்திக்கும்போதெல்லாம், செய்யவேண்டுமென்று நானும் செய்யலாமென்று அவரும் கூறுவதாகவே இருந்தது. அவரிடம் முன்னர் சென்ற ஆண்டும் நீங்களிட்ட பூலோகசிங்கத்தின் கட்டுரைச்சுட்டியினையும் கொடுத்திருந்தேன். அவர்களுக்கு ஏற்கனவே பூலோகசிங்கம் அவர்கள் கட்டுரையைத் தந்திருந்தாகச் சொன்னார். சுனாமியின் பின்னால், யாழ்ப்பாணம் சென்றபோது, வித்தியானந்தன் சம்பந்தப்பட்ட வேறு சில ஆவணங்களையும் கொணர்ந்ததாகச் சொன்னார். அவற்றினை ஒழுங்காக்கியபின்னால், ஏதாவது செய்யலாமென்றார். அதன் பிறகு, சொந்த வேலைகளிலே மூழ்கியதாலும் இடம் பெயர்ந்ததாலும் மேலும் தொடரவில்லை. மீண்டுமொரு முறை முயற்சித்துப் பார்க்கலாமெனத் தோன்றுகிறது. குறிப்பாக, youtube காலத்திலே இவ்வகை ஆவணங்கள் இணையத்திலே ஏறவேண்டும். குறைந்தபட்சம், ஈழத்தமிழ் ஒலியொளியாவணமாகவேனும் எங்காவது சேகரிக்கப்படவேண்டும்

said...

சின்னக்குட்டியர், உங்கள் நினைவுகளையும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

said...

மலைநாடான்,
//இம்மகாநாடு நடந்த காலத்தில் நிகழ்வுகளை திருமலையிலிருந்து பத்திரிகைகள் மூலமாக வாசித்தது மட்டுமே//

வருகைக்கு நன்றிகள்.

said...

ரமணிதரன்,
//உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். என்றாலுங்கூட, பேரா. வித்தியானந்தனின் மக்கள் தமிழாராய்ச்சி நிகழ்வினை மூன்று மணிநேரம் ஓடும் படமாக வைத்திருக்கின்றார்கள்//

இதுபற்றி எனக்குத் தெரியாது. இது கட்டாயம் நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஆவணமாக்கப்பட வேண்டியது. கட்டாயம் முயற்சி எடுங்கள். மாநாடு முடிந்த கையோடு இம்மாநாடு பற்றிய 5 - 10 நிமிட விவரணத் திரைப்படம் இலங்கைத் தியேட்டர்களில் காண்பித்ததாக ஞாபகம்.

வருகைக்கு நன்றி.

said...

இதுவரை இவ்வளவு விவரமாக இந்த வரலாற்று நிகழ்வை நான் படித்ததில்லை. இந்த நிகழ்வின் படம் அனைவரும் பார்க்கக் கிடைத்தால் நல்லது.

பதிவுக்கு மிக்க நன்றி.

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

சொ. சங்கரபாண்டி,
//இந்த நிகழ்வின் படம் அனைவரும் பார்க்கக் கிடைத்தால் நல்லது.//
கட்டாயம் பார்க்க வேண்டியது. அவற்றை வெளிக்கொணர ரமணி முயல்வார் என எதிர்பார்க்கலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

said...

சிட்னியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிவகத்தால் நூலக எரிப்பு நினைவுகூரல் இடம்பெறுவது உண்டு, என் அறிவிற்கு எட்டியவரை 2 வருடம் முன்னர் ஒளிப்படம் ஒன்று காட்டியதாக நினைவு, சம்பந்தப்பட்டவர்களிடமும் கேட்டுப் பார்க்கின்றேன்.

said...

நான் தற்சமயம் பொஸ்ரனிலே வதிவதில்லை. ஆனால், தொடர்பு கொண்டு வைத்திருப்பவர்களுக்குத் தனிப்பட அவற்றினை ஆவணப்படுத்தும் திட்டங்கள் இன்னமும் இல்லையெனில், முயற்சித்துப் பார்க்கிறேன்.

said...

அந்த ஒளிப்படங்கள் இருந்தால் அதனை நிச்சயமாக வெளிக்கொண்டு வாருங்கள்.என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்ய முடியும்.

பெயரிலி எனக்கு தனிமடலிடுங்கள் எனது மினஞ்சல் முகவரி இந்த பதிவுக்கான முன்னைய பின்னூட்டத்தில் உள்ளது.அவசியம் தொடர்புகொள்ளுங்கள்.ந்ச்சயம் வேறு சில ஒளிப்பதிவுகளுடன் இணைத்து ஒரு நல்ல ஆவணமாக தொகுப்பது நல்லது.

Anonymous said...

я так считаю: восхитительно!! а82ч