January 23, 2010

விண்கற்களின் நிறம் பூமியை அண்மிக்கும் போது மாறுவது ஏன்?

சிறுகோள்கள் பூமியை அண்மிக்கும் போது அல்லது அதனைத் தாண்டும் போது பூமி அதனை அதிரடையச் செய்வதால் அவற்றின் நிறமும் மாற்றம் அடைகின்றது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியில் விழும் விண்கற்களின் (''meteorites'') நிறம் விண்வெளியில் சிறுகோள்களின் (''asteroids'') நிறத்துடன் ஒத்துப்போகாதது இதுவரையில் அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராக இருந்து வந்தது.


951 காஸ்பிரா என்ற சிறுகோள்


விண்வெளியில் சூரியக் கதிர்வீச்சு சிறுகோள்களின் மேற்பரப்பைச் சிவப்பாக்குகின்றது என முன்னர் நடத்தாப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தன.
பூமியை அண்மிக்கும் போது அவை எப்படி தமது மேற்பரப்பை மாற்றியமைக்கின்றன என்பதை "நேச்சர்" (''Nature'') அறிவியல் இதழ் தற்போது வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் பேராசிரியர் ரிச்சார்ட் பின்செல் என்பவர் இவ்வாய்விற்குத் தலைமை தாங்கினார்.

தனது குழுவினர் விண்வெளியில் சிறுகோள்களின் நிறத்தையும், அச்சிறுகோள்களில் இருந்து பூமியில் விழும் விண்கற்களின் நிறங்களையும் ஒப்பிட்டு இவ்வாய்வை மேற்கொண்டிருந்தனர் என அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


நியூயோர்க்கில் அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு விண்கல்


"அநேகமான சிறுகோள்கள் இளம் சிவப்பு நிறம் கொண்டவை," என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார். சூரியக் காற்று அவற்றின் தாதுக்களைச் சேதப்படுத்தி அவற்றைச் சிவப்பாக மாற்றுகின்றன.

ஆனால், சில சிறுகோள்கள் பூமிய நெருங்கும் போது அவற்றின் நிறம் இளம் சிவப்பாக இருப்பதில்லை. இவற்றின் நிறம் பூமியில் அறிவியலாளர்களால் சேர்க்கப்பட்ட விண்கற்களின் நிறங்களுடன் ஒத்துப் போகின்றன, என்கிறார் பேராசிரியர் பின்செல்.

"பூமியை அவை நெருங்கும் போது பூமி அவற்றிற்கு ஒரு "நிலநடுக்கத்தை" எற்படுத்துகின்றது. இந்த நிலநடுக்கம் அவற்றின் மேற்பரப்பை மாற்றியமைக்கின்றது".

இந்த நிற மாற்றங்களில் இருந்து, சிறுகோள் ஒன்று பூமியை அண்மித்ததா இல்லையா என்பதைக் கண்டு கொள்ளலாம் என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார்.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.

January 15, 2010

இரண்டாவது மிகச் சிறிய புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது

மது சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியை விட நான்கு மடங்கு திணிவுடைய புறக்கோள் (extrasolar planet) ஒன்றைக் கலிபோர்னியா தொழிநுட்பக் கல்வி நிறுவனத்தை (Caltech) சேர்ந்த வானியலாளர்கள் ஹவாயில் உள்ள மவுனா கியா என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் நீள "கெக் 1" என்ற அதிஉணர்வுத் நூண்காட்டி மூலம் கண்டுபிடித்துள்ளதாக் அறிவித்துள்ளனர்.இக்கோள் HD 156668 என்ற தனது தாய்-விண்மீனை நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள 400 இற்கும் அதிகமான புறக்கோள்களில் இது இரண்டாவது மிகச் சிறியதாகும். இதற்கு முன்னர் பூமியை விட 1.94 மடங்கு கிளீசு 581 e என்ற புறக்கோள் 2009, ஏப்ரல் 21 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய புறக்கோள் பூமியில் இருந்து ஏறத்தாழ 80 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

2010, ஜனவரி 7 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட இப்புறக்கோளுக்கு HD 156668b எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் இருந்து பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரத்திற்கு அண்ணளவாக இப்புறக்கோளும் அதன் சூரியனும் இருப்பதால் இதில் உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

"பூமியை ஒத்த கோளின் கண்டுபிடிப்பு காரணமாக இது குறித்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு இன்னும் நிறைய வேலை உண்டு", என கால்ட்டெக்கின் வானியலாளர் ஜோன் ஜோன்சன் தெரிவித்தார். இவர் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்ட்ரூ ஹவார்ட், ஜெஃப் மார்சி, பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேசன் ரைட், யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெப்ரா பிஷர் ஆகியோருடன் இணைந்து இப்புறக்கோளக் கண்டுபிடித்தார்.

"மிகத் திறமையான சுற்றுவட்ட-வேகக் கருவி ஒன்றை நாளையே உருவாக்கினால், இன்னும் மூன்றாண்டுகளில் இதற்கான விடை கிடைக்கும். இன்னும் பத்தாண்டுகளில் பூமியை ஒத்த கோள்களின் மொத்தத் தொகையையும் நாம் அறியக்கூடியதாக இருக்கும்."

கெக் I (Keck I) தொலைக்காட்டி கெக் அவதானநிலையத்தின் ஒரு பகுதியாகும். இது கால்டெக் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஓரு கூட்டு முயற்சியாகும்.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.