December 15, 2006

*இசைக்கலைஞர்களின் அங்க சேஷ்டைகள்

கருநாடக இசைக்கலைஞர்கள் சிலர் பாடும்போது அங்க சேஷ்டைகள் செயவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளில் சில ரசிக்கக் கூடியதாக இருக்கும். சில அளவுக்கதிகமாகப் போய் விடும். அனேகமாக சகிக்கவே முடியாதபடி இருக்கும். பெரிய வைத்தியநாத ஐயர் என்னும் பிரபல கருநாடகப் பாடகர் ஒருவர் சிவகெங்கைச் சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தவர். இவரைப் பற்றி உ. வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் சுவையான தகவல்களைத் தருகிறார். தமக்கே உரிய நடையில் நகைச்சுவையும் கலந்து எழுதியுள்ளார்.



பெரிய வைத்தியநாதையரின் சங்கீதத் திறமை மிக்க வன்மையானது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும்போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்குமாம்.

பாடும்போது பல வகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார். ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேட்டைகளும் அதிகரிக்கும்.

நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடுப்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்து விடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகள் உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உற்சாகத்தின் அறிகுறிகள்.

வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார்.

இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம்பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உற்சாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர்வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார்.

இவருக்குப் பொடி போடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு போடுவார். பின்பு கையை உதறுவார். அப்பொடி அருகிலுளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.

இப்படியாக ஒரு நாள் எட்டயபுரம் ஜமீனில் ஒரு பெரிய விருந்து நிகழ்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.

அங்கே வந்திருந்த ஜில்லா சர்ஜன் ஒரு வெள்ளைக்காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன. சர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.

வைத்தியநாதருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவதுபோல் இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக் கொண்டார்கள்; இவற்றையெல்லாம் சர்ஜன் பார்த்தார்; "சரி, சரி, இவர் பாடவில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட்டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீதமென்று எண்ணி இந்த மனுஷனைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது" என்று எண்ணினார்.

வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பித் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும் போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல சர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை. தம் கைக்கடியாரத்தை எடுத்தார். கலெக்டரை நோக்கினார். "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்போது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாகவில்லை.

அதிகாரி மெல்ல வித்துவான் அருகில் சென்று பக்குவமாக, இன்னும் சில வித்துவான்கள் பாடவேண்டும். அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். உயர்ந்த சன்மானத்தையும் அளித்தார். ஐயரும் ஒருவாறு தமது பாட்டை முடித்துக் கொண்டு மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

பெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்!

இவ்வாறு குறிப்பிடுகிறார் உ. வே. சாமிநாதையர் அவர்கள்.

உ. வே. சாமிநாதையரும் ஈழத்து சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்கள். இவர்களது உறவு குறித்தும் பின்னர் எழுந்த விரிசல்கள் பற்றியும் முன்னர் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். இது குறித்து மேலதிக சில தகவல்களுடன் முழுமையான பதிவொன்று இடும் எண்ணம் உண்டு.


13 comments:

said...

கற்ற வித்தை, கலக்கிய சேஷ்டை - கண்
உற்ற வெள்ளையர் உதவிடச் சென்றதை
நற்றமிழில் உணர்த்திய நல்லோன் வாழக - பதிவில்
குற்றமின்றிச் சொன்ன கனகனார் வாழ்க!

said...

அப்துல்லா,
//hihihaaaaaaaahuuua//
வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

said...

ஒரு மணி நேரத்துக்கும் ஒரே வரியை,

"ராமனே நீ போதகா"ன்னு பாடிட்டு கிடப்பாய்ங்களே அதைச் சொல்றீங்களா?

Anonymous said...

நல்ல பதிவு, பாடகரை முதன் முறையாக கேள்விப்படுகிறேன், நன்றி.

said...

மிக நல்ல நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.இணையத்தில் மிகப் பழைய படங்களைப் பார்க்கும் போது;அதன் உண்மை புலப்படுகிறது.
இதே வேளை மேற்கத்தைய இசைத்துறையினரும் இந்த "வலிப்பு" வியாதியில் குறைந்தவர்கள் இல்லை.99 விழுக்காடு.....இங்கே காட்டுக்கத்தலும் வலிப்பும் தான்....அது பாடுபவர் பவரொட்டியாக இருக்கலாம்;பார்பரா கென்ரிஸ் ஆக இருக்கலாம்;ஜேர்சி நொர்மனாக இருக்கலாம்...
இது என் கருத்து
யோகன் பாரிஸ்

said...

பதிவை வாசிக்கும் போது பலே பாண்டியாவில் வரும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" பாடலில் அபிநயிக்கும் எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் நினைவுக்கு வருகின்றார்கள்.

said...

சுப்பையா,
//கற்ற வித்தை, கலக்கிய சேஷ்டை - கண்
உற்ற வெள்ளையர் உதவிடச் சென்றதை
நற்றமிழில் உணர்த்திய நல்லோன் வாழக - பதிவில்
குற்றமின்றிச் சொன்ன கனகனார் வாழ்க!//

நன்றி ஐயா. நல்லோன் உவேசா அவர்கள் மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்.

said...

விடாது கறுப்பு, வாருங்கள். வணக்கம்.
//ஒரு மணி நேரத்துக்கும் ஒரே வரியை,
"ராமனே நீ போதகா"ன்னு பாடிட்டு கிடப்பாய்ங்களே அதைச் சொல்றீங்களா?//

ம்ம்ம்..அதை விட இது கொஞ்சம் கூட:))

said...

அனானி,
//பாடகரை முதன் முறையாக கேள்விப்படுகிறேன், நன்றி//

இக்கட்டுரையின் நாயகர் பெரிய வைத்தியநாதையர் சோழ நாட்டின் தேவூரில் பிறந்தவர். வைத்தியநாதையர் என்று வேறு பல வித்துவான்கள் இருந்திருக்கின்றனர். சின்ன வைத்தியநாதையர், மஹா வைத்தியநாதையர், வீணை வைத்தியநாதையர், இப்படிப் பலர்.

வருகைக்கு நன்றிகள்.

said...

யோகன்,
//மேற்கத்தைய இசைத்துறையினரும் இந்த "வலிப்பு" வியாதியில் குறைந்தவர்கள் இல்லை.99 விழுக்காடு.....இங்கே காட்டுக்கத்தலும் வலிப்பும் தான்...//

இப்போது உள்ள கருநாடக இசைக்கலைஞர்களில் ஓ. எஸ். அருண் இப்படிப் பாடுவார். ஆனால் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

said...

இதை சிரிப்புப் பதிவு என்பதா? இல்லை சிந்தனைப் பதிவு என்பதா? அழகாகச் சொல்லியுள்ளீர்கள் Kanags! அதுவும் மார்கழி சீசனில் உவேசா வின் கட்டுரை தந்தது அருமை!

யோகன் அண்ணா சொன்னது போல் மேற்கத்திய இசையில் சேஷ்டைகள் என்னும் அதிகம் தான்! ஆனால் அவை எல்லாம் ஸ்டைல் என்றே பார்க்கப்படுகின்றன!
இந்திய இசை (இந்துஸ்தானி, கர்நாடகம், எல்லாம் தான்) மென்மை மற்றும் ஆன்மீகம் கலந்த ஒன்றாகவே இருப்பதால், அதன் சாயலைப் பாடுபவரிடமும் எதிர்பார்ப்பது ஒரளவு நியாயமே!

said...

கானா பிரபா,
//பதிவை வாசிக்கும் போது பலே பாண்டியாவில் வரும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" பாடலில் அபிநயிக்கும் எம்.ஆர்.ராதாவும் சிவாஜியும் நினைவுக்கு வருகின்றார்கள்.//

நல்ல உதாரணம் சொன்னீர்கள். புகழ் பெற்ற அந்தப் பாடல் காட்சியை போனஸ் இணைப்பாக இணைத்திருக்கிறேன். நன்றி.

said...

கண்ணபிரான்,
//இந்திய இசை (இந்துஸ்தானி, கர்நாடகம், எல்லாம் தான்) மென்மை மற்றும் ஆன்மீகம் கலந்த ஒன்றாகவே இருப்பதால், அதன் சாயலைப் பாடுபவரிடமும் எதிர்பார்ப்பது ஒரளவு நியாயமே!//

ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். பாடுபவர்களும் இசையுடன் ஒன்றிப்போய் விடுவார்கள். சிலரைக் கட்டுப்படுத்தமுடியாது. நன்றிகள்.