
தென்னாபிரிக்காவில் 1899 க்கும் 1902 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரித்தானியருக்கும் டிரான்ஸ்வால், ஒரேஞ் சுயாதீன மாநிலம் ஆகியவற்றில் குடியேறியிருந்த டச்சுக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போர் "போவர் யுத்தம்" என அழைக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் டச்சு மக்கள் போவர்கள் (Boers - டச்சு மொழியில் கமக்காரர்) என அழைக்கப்பட்டனர். தமது சுதந்திரத்தைப் பேண முனைந்த போவர்கள் மேல் பிரித்தானியர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். இதனால் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. இந்தச் சண்டைக்கு பிரித்தானியாவுக்கு ஆதரவாக பிரித்தானியக் கொலனிகளான அவுஸ்திரேலியா, இலங்கை ஆகியன தமது துருப்புக்களை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பியிருந்தன.
போவர் யுத்த காலத்தில் தம்மிடம் பிடிபட்ட யுத்தக் கைதிகளை பிரித்தானிய வல்லரசு தமது கொலனி நாடுகளுக்கு நாடு கடத்தியது. அப்படியாக 1900 இல் இலங்கைக்கும் போவர் யுத்தக் கைதிகள் நாடு கடத்தப்பட்டனர். அப்படி அனுப்பப்பட்டவர்களின் 5000 பேரைக் கொண்ட தொகுதி ஒன்று ஓகஸ்ட் 1900 இல் எஸ்.எஸ்.மோஹாக் (SS Mohawk) கப்பலில் இலங்கை வந்திறங்கியது. இவர்கள் இலங்கையில் தியத்தலாவை, அம்பாந்தோட்டை பகுதிகளில் விசேட குடியமர்வுத் திட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டனர். இப்பகுதி Happy Valley Reformatory என அழைக்கப்பட்டது. தியத்தலாவை முகாம் அமைந்திருந்த பகுதி கீழே உள்ள படத்தில் காணலாம்.

இவர்களைப் பராமரிப்பதில் உள்ளூர் அதிகாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். உள்ளூர்ச் சட்டங்களுக்குப் பணிய மறுத்தனர். இதனால் இவர்களுக்கெனத் தனியே தியத்தலாவ, வெலிமடை, அப்புத்தளை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. போவர்கள் உள்ளூர் மக்களுக்கு சட்ட விரோதமாக உருளைக்கிழங்கிலிருந்து சாராயம் வடிக்கும் முறையினைக் கற்றுத்தந்தனர். இது அக்காலத்தில் உள்ளூர் மக்களால் அல சுதிய (அல என்றால் சிங்களத்தில் கிழங்கு, சுதிய என்றால் என்ன??) என அழைக்கப்பட்டது. (இந்த அல சுதியவிலிருந்து பின்னர் கசிப்பு போன்ற பயங்கரக் குடிவகைகளை இலங்கைக் குடிமக்கள் கண்டுபிடிப்பதற்கு அதிகம் சிரமமமிருக்கவில்லை).
தியத்தலாவை முகாமில் இருந்த யுத்தக்கைதிகள் பலரும் பின்னர் ராகமை (Plague Camp), கல்கிசை, உருகஸ்மண்டிய முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த உருகஸ்மண்டிய முகாம் 10 ஏக்கர் காணியில் அமைந்திருந்தது. இம்முகாமில் இருந்தவர்கள் உள்ளூர் பெண்களுடன் கலந்ததனால், இக்கிராமத்தில் இன்றும் பல வெள்ளைத் தோல், நீலக் கண்களைக் காணலாம். தியத்தலாவை முகாமில் யுத்தக்கைதிகளின் அறையொன்றைக் கீழே காணலாம்:

தென்னாபிரிக்காவில் மே 31, 1902 இல் யுத்தம் முடிந்தவுடன் போவர் கைதிகள் பலரும் அன்றைய ஏழாம் எட்வேர்ட் மன்னனுக்கு அடிபணிந்து தென்னபிரிக்கா திரும்பிச் சென்றனர். சிலர் மன்னனுக்கு அடிபணிய மறுத்து இலங்கையிலேயே ஒளித்திருந்தனர். இவர்களில் ஒரு சிலர் பின்னர் தப்பி பர்மா சென்றனர். சிலர் இலங்கையிலேயே தங்கி விட்டனர்.

இப்படித் தங்கியிருந்தவர்களில் ஒருவர் தான் எங்கெல்பிரெக்ட் (Engelbrecht) என்பவர். இவர் பின்னர் யாலை காட்டுப்பகுதிக்கு முதலாவது வார்டனாக (Game Ranger) நியமிக்கப்பட்டார். இவரது கடைசிக் காலங்களில் முதலாம் உலகப் போர் வெடித்திருந்தது. அப்போது ஜேர்மனிய நாசகாரக் கப்பலான எம்டன் இந்து சமுத்திரத்தில் பெரும் நாசங்களைச் செய்து கொண்டிருந்தது. எம்டன் கப்பல் மாலுமிகளுக்கு இரகசிய உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர் கண்டியில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் இக்குற்றச்சாட்டுக்கள் என்றுமே நிரூபிக்கப்படாமல் ஓகஸ்ட் 25, 1922 இல் இறந்தார்.
(இந்த எம்டன் கப்பல் பின்னர் 9 நவம்பர் 1914 இல் அவுஸ்திரேலிய யுத்தக் கப்பலான "எச்.எம்.எஸ் சிட்னி"யினால் கொக்கோஸ் தீவுகளில் மூழ்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் எம்டன் என்ற சொல் வழக்கு இன்றும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்).
இலங்கையில் தங்க நேர்ந்த பல போவர்கள் தமது பென்ஷன் பணத்தை நாட்டின் பல்வேறு கச்சேரிகளில் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாம். போவர்களைத் தமக்குள்ளே ஒன்று கூட விடாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான நடைமுறை இருந்தது. ஒரு சிலர் யாழ்ப்பாணம் வரை சென்று யாழ் கச்சேரியில் பென்ஷன் பெற்றனராம். சிலர் மட்டக்களப்புக்கும் செல்லவேண்டியிருந்தது. இப்படியாக இந்த போவர்கள் காலப்போக்கில் நாட்டின் சிறுபான்மையாயிருந்த பேர்கர் (burghers) சமூகத்துடன் ஒன்றிணைந்தனர். இவர்களின் பெயர்களைக் கொண்டே போவர்களை இன்று அடையாளம் காணக்கூடும்.
குறிப்பு: போவர் யுத்தத்தில் மொத்தம் 75,000 பேர் இறந்தனர். இவர்களில் 22,000 பேர் பிரித்தானிய போர் வீரர்கள், 7,000 போவர் துருப்புக்கள், 28,000 போவர் மக்கள், 20,000 கறுப்பின ஆபிரிக்கர்கள.
31 comments:
சோமிதரன், வணக்கம்.
//இத்தகைய வரால்லற்றுக் குறிப்புகளை இன்னும் எழுதுங்கள் நிறைய பயனுள்ளதாக இருக்கும்//
வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமுதாயத்தின் கண்ணாடி. எனக்குத் தெரிந்தவரையில் பதிகிறேன். நன்றிகள்.
வணக்கம் சிறீ அண்ணா
சுவையான வரலாற்றுத் தகவல்களாக இருந்தது, இப்பொது தான் படித்து முடித்தேன்.
நீங்கள் எம்டன் தான்:-)
வணக்கம் கனக்ஸ் அவர்கட்கு ...நல்லதொரு பதிவு... அறியாத விசயங்களை தந்திருக்கிறீர்கள்....... இலங்கையில் burgers டச்சு வழி வந்தவர்கள் அறிந்திருக்கிறேன்...தென்னாபிரிக்க கைதிகள் பற்றியது புதிய செய்தி.
உள்ளூர் பெண்களுடன் கலந்ததனால், இக்கிராமத்தில் இன்றும் பல வெள்ளைத் தோல், நீலக் கண்களைக் காணலாம் //.
மேலை கூறிய அதே அச்சொட்டான விசயத்தை...ஈழத்தின் வட பகுதியிலுள்ள டச்சு குதிரை லாயம் இருந்த தீவில் இருப்பதாக கூறினதால் ஈழத்து ஒரு எழுத்தாளர் எழுதிய திரைபட வெளியீட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியது ஞாபகம் வருகிறது
//யாழ்ப்பாணத்தில் எம்டன் என்ற சொல் வழக்கு இன்றும் இருந்து வருவதை //
ஓம்.. உண்மை தான் .. திறமைசாலி.,. தந்திரசாலி,..வியூகம் வகுப்பதில் கெட்டிக்காரன் என்று அச்சொல்லுக்கு அர்த்தம் கொள்வார்கள்
அண்மையில் நாசர் நடித்து வெளிவந்த எம்டன் மகன் படத்தில் வரும் எம்டனும் இதே கப்பலைக் கொண்டு வந்ததென்றுதான் நினைக்கிறேன்.
நல்ல பயனுள்ள தகவல்கள்.
பதிவுக்கு நன்றி.
சிறி!
மிக முக்கியமான வரலாற்றுத் தகவலைப் பதிவு செய்திருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.
இந்தப் போர்வார் இனக்கலப்பில் பிறந்த ஒரு பெண் எனக்குப் பள்ளித் தோழியாக இருந்திருக்கிறாள். அவளைப் பறங்கிக்குரங்கு என அடிக்கடி கேலி செய்வதுண்டு. ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் தன்னை ஒரு ஈழத் தமிழ்ப் பெண்ணாகவே அடையாளம் காட்டவே விரும்புவாள். அருமையான ஒரு தோழி
இந்தப்பதிவு, என்னுள் அவளின் ஞாபகத்தை மீளவும் கொணர்ந்திருக்கிறது.
நன்றி!
அண்ணா!
நல்ல தகவல்கள்!
இந்த நீலக் கண்ணுக்கும்;வெள்ளைத் தோலுக்கும் ....இவர்கள் தான் காரணமா???இதற்கு முன் இருந்த காலனித்துவ காலங்களிலே!!கலப்பு...போத்துக்கீயருடன் உருவாகியிராதா????;
யோகன் பாரிஸ்
//யாழ்ப்பாணத்தில் எம்டன் என்ற சொல் வழக்கு இன்றும் இருந்து வருவதை //
ஓம்.. உண்மை தான் .. திறமைசாலி.,. தந்திரசாலி,..வியூகம் வகுப்பதில் கெட்டிக்காரன் என்று அச்சொல்லுக்கு அர்த்தம் கொள்வார்கள்
நல்ல ஒரு பதிவு,
"எம்டன்" என்பது ஜேர்மனியில் இருக்கும் ஒரு துறைமுக நகரம், அங்கிருந்து வருவதாலா? அல்லது அந்த கப்பலுக்கே எம்டந்தான் பெயரோ?, அது ஒரு நீர்மூழ்கி கப்பலென நினைக்கிறேன், திடீர் திடீரென கடலுக்கு மேலே வந்து தாக்குதல் நடத்திவிட்டு மறைந்துவிடும், அதனால்தான் ஊருக்குள் யாருக்கும் பிடிபடாமல் தாக்குதல் நடத்துவவருக்கும்,தப்பு செய்து விட்டு தப்பிப்பவருக்கும் இப்பெயர் சூட்டப்படுகிறது, அப்படியானவர்கள் வரும்போதே "எம்டன்" வாறான் கவனமா இருங்கோ எண்டுவினம். நீ சரியான "எம்டனடா" என்றும் சொல்லுவினம்.
பிறநாட்டுச்சிறைக்கைதிகளையும் அரசுச்சுதந்திரம்வேண்டும் மண்ணின் மைந்தர்களையும் இலங்கையிலே சிறை வைப்பது வழக்காகவே பிரித்தானியர் காலத்திலேயிருந்தது. எகிப்தின் அரபி பாஷா இப்படியாக இலங்கையிலே வைக்கப்பட்டிருந்தார். (இப்போதைய எதியோப்பியாவின் (அந்நேர அபிசீனிய) மன்னர் சலாசி -ராஸ்தபாரியர்களின் 'கடவுள்' எனப் பிற்காலத்திலே கருதப்பட்டவர்- இலங்கையிலே கொழும்பிலே தேநீர்க்கடை வைத்திருந்ததாக வதந்தி தமிழ்நாட்டிலெ அந்நேரத்திலெ நிலவியதாக ரா. அ. பத்மநாபன் தனது ஆரம்பகாலத்துத் தமிழ் இதழ்கள் பற்றி எழுதிய நூலிலே குறிப்பிடுகிறார். இன்னொரு புறம், உலகப்போர்களின்போது, பிரித்தானியாவின் போர்வீரர்களாக வந்து இலங்கையிலே கலந்துபோய்விட்டவர்களைப் (எல்லா நிறத்தவர்களும் உட்பட) பற்றி அங்குமிங்கும் குறிப்புகளைக் காணலாம். (மலேசியர்கள் (முரணாக - (இந்தோனேசியாவைச் சுட்டும்) 'யாவா'க்காரர்கள் எனப் பெயரிடப்பட்டு - நகர்காவலர்களாக அமர்த்தப்பட்டும் இருந்திருக்கின்றனர். இதன் காரணமோ என்னவோதான் இலங்கை இராணுவத்திலே இன்னமும் எண்ணிக்கையிலே அவர்களின் சனத்தொகை வீதத்துக்கு அதிகமாகவே குறிப்பிடத்தக்க அளவுக்குத் 'துவான்'கள் இருப்பதும்) கனகசபாபதி சரவணபவன் (மயூரனின் சித்தப்பா) திருகோணமலை வரலாறு பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னால் திரட்டி வெளியிட்ட நூலிலே இது பற்றி சில குறிப்புகளைத் தந்திருக்கிறார். தவிர, இப்படியாகக் கலந்துபோய்விட்ட ஒரு வீரனினதும் உடற்பெண் (கண்ணம்மா) ஒருவரினதும் காதல் குறித்து, திருகோணமலையைக் களமாகக் கொண்ட கதையொன்று எழுபதுகளிலே வெளிவந்திருந்த ஞாபகம்.
எம்டன் குறித்து அகத்தியர் குழு ஜெயபாரதி (அடிக்கடி தமிழ்நெற்றிலேயும்) விரிவாக 97-98 இலே எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள்.
கானா பிரபா, //நீங்கள் எம்டன் தான்:-)//
!!.
வசந்தன், வருகைக்கு நன்றி. எம்டன் மகன் பார்க்கவில்லை. எம்டன் என்ற சொல்வழக்கு தமிழகத்திலும் இருக்கிறதா?
மலைநாடன், இப்பதிவு உங்களுக்கு நினைவு மீட்டலாக அமைந்து விட்டதா:) உங்கள் நினைவுகளை வந்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
யோகன், வெள்ளை/நீலக் கலப்பு குறிப்பாக ஒரிஜினல் டச்சுக் காரர்களிடம் இருந்து பரவலாக வந்திருக்கலாம். இந்த போவர்கள் வந்தது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே.
நல்ல பதிவு.
தங்கள் பதிவுகளில் இலங்கையின் வரலாறு அறியக் கிடைக்கிறது..
நன்றி.
சாத்வீகன்
கனக்ஸ்,
ந்ல்ல பதிவு. அறிந்திராத பல விடயங்களை இப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
வரலாறு என்றும் வசப்படும் படிக்கும்போது!
வணக்கம் உமக்கு வசப்பட வைத்தமைக்கு!
SP.VR.SUBBIAH
சின்னக்குட்டியர்,
//ஈழத்தின் வட பகுதியிலுள்ள டச்சு குதிரை லாயம் இருந்த தீவில் இருப்பதாக கூறினதால் ஈழத்து ஒரு எழுத்தாளர் எழுதிய திரைபட வெளியீட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியது ஞாபகம் வருகிறது.//
அந்த மேலதிக தகவலுக்கும் வருகைக்கும் நன்றிகள்.
ஈழபாரதி, வாழ்த்துக்களுக்கு நன்றி.
//அது ஒரு நீர்மூழ்கி கப்பலென நினைக்கிறேன், திடீர் திடீரென கடலுக்கு மேலே வந்து தாக்குதல் நடத்திவிட்டு மறைந்துவிடும், அதனால்தான் ஊருக்குள் யாருக்கும் பிடிபடாமல் தாக்குதல் நடத்துவவருக்கும்,தப்பு செய்து விட்டு தப்பிப்பவருக்கும் இப்பெயர் சூட்டப்படுகிறது, அப்படியானவர்கள் வரும்போதே "எம்டன்" வாறான் கவனமா இருங்கோ எண்டுவினம். நீ சரியான "எம்டனடா" என்றும் சொல்லுவினம்.//
சரியான விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த ஜேர்மனிய கப்பலுக்கு எம்டன் என்று பெயர் என்று நினைக்கிறேன். அப்பெயரில் ஒரு துறைமுகமும் உள்ளதா? மேலதிக தகவலுக்கு நன்றிகள்.
வணக்கம் இரமணி, அந்த மேலதிக தகவலைத் தந்து இப்பதிவைச் சிறக்கச் செய்திருக்கிறீர்கள்.
//எம்டன் குறித்து அகத்தியர் குழு ஜெயபாரதி (அடிக்கடி தமிழ்நெற்றிலேயும்) விரிவாக 97-98 இலே எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள். //
ஆரம்பகாலத் தமிழ்.நெற் உறுப்பினராயிற்றே நீங்கள். அந்த நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். அண்மையில் கூட எம்டன் கப்பல் பற்றி அகத்தியத்தில் டாக்டர் ஜெயபாரதி நினைவு மீட்டிருந்தார். இங்கு வந்து அருமையான தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள். தொடர்ந்து வரவேண்டும்.
சாத்வீகன்,
//தங்கள் பதிவுகளில் இலங்கையின் வரலாறு அறியக் கிடைக்கிறது..//
முடிந்தளவு எனக்குத் தெரிந்தவரையில் தருகிறேன். நன்றி,
சுப்பையா அவர்களே,
//வரலாறு என்றும் வசப்படும் படிக்கும்போது!
வணக்கம் உமக்கு வசப்பட வைத்தமைக்கு!//
உங்கள் குறும்பாக்களை மிகவும் ரசித்தேன். தொடர்ந்து வரவேண்டும். மிக்க நன்றிகள்.
கனகசபாபதி சரவணபவன் எழுதிய "வரலாற்றுத் திருகோணமலை" என்னிடம் உள்ளது, பக்கம் 238 இல் திருகோணமலைச் சமூகம் என்ற பிரிவின் கீழ் காப்பிரிகள் பற்றி விரிவாக எழுபதப்பட்டுள்ளது.
அதி வரும் குறிப்புக்களில் சில
"காப்பிரிகள் தென்னாபிரிக்க, மத்திய ஆபிரிக்க பாண்டு இனக்குழுவைக் குறிக்கும்.
டச்சுத் தளபதி வான் கோயன் கருத்துப்படி 4000 காப்பிரிகள் காணப்பட்டனர். 2 வது இராஜசிங்கனின் மெய்ப்பாதுகாவலர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.
கொழும்பில் காப்பிரிகள் செய்த கலகத்தை அடுத்து கலகக்காரக் காப்பிரிகள் கொழும்பு பேரை ஆற்றுக்கரையோரத்தில் சிறை வைக்கப்பட்டார்கள்.
காப்பிரிகள் தொடர்பான பிரித்தானியக் காலனித்துவ ஆவணங்களின் படி முதலாவது பிரித்தானிய ஆளுனர் பிரடரிக் நொத் 500 காப்பிலிகளை மொசாம்பிக்கிலிருந்து 125 ஸ்பானிய டொலருக்கு வாங்கினார்.
இப்படி இவர்களின் வரலாறு நீண்டு செல்கிறது.
காலச்சுவடு வெளியிட்ட வெங்கடாசலபதி தொகுத்த (1900 களிலே வந்த) சிறு கும்மிகளின் தொகுப்பிலே எம்டன் மீதான வெற்றி குறித்த கும்மி ஒன்றும் (1915) அறுபது பாடல்களுடன் உள்ளது.
கச்சேரி என்றால் என்ன அர்த்தம். தமிழில் கச்சேரி என்றால் "இசைக் கச்சேரி","பாட்டு கச்சேரி" என்று தான் அறிவோம் ஆனால் நீங்கள் கூறியுள்ளதன் உண்மையான அர்த்தத்தை சற்று விளக்கமாக எழுதுங்கள்
கானா பிரபா,
அந்தக் காப்பிரிகள் பற்றிய தகவலுக்கு நன்றிகள்.
இரமணி,
//காலச்சுவடு வெளியிட்ட வெங்கடாசலபதி தொகுத்த (1900 களிலே வந்த) சிறு கும்மிகளின் தொகுப்பிலே எம்டன் மீதான வெற்றி குறித்த கும்மி ஒன்றும் (1915) அறுபது பாடல்களுடன் உள்ளது.//
அந்தத் தகவலுக்கு நன்றி.
//கச்சேரி என்றால் என்ன அர்த்தம். தமிழில் கச்சேரி என்றால் "இசைக் கச்சேரி","பாட்டு கச்சேரி" என்று தான் அறிவோம் ஆனால் நீங்கள் கூறியுள்ளதன் உண்மையான அர்த்தத்தை சற்று விளக்கமாக எழுதுங்கள்//
நீங்கள் குறிப்பிடும் இசைக்கச்சேரியை இலங்கையிலும் சுருக்கமாகக் கச்சேரி என்றே குறிப்பிடுவோம். ஆனால் இப்பதிவில் உள்ள கச்சேரி ஒரு அரசாங்க அலுவலகம். (தமிழ் நாட்டில் உள்ள கலெக்டர் ஆபீஸ் போன்றது). சிங்கள மொழியிலும் இது கச்சேரி என்றே பாவனையில் உள்ளது. ஓய்வூதியம், காணி, வீடுகள் சம்பந்தமானவை இங்குள்ளவர்களால் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு முக்கியமான நகரங்களிலும் கச்சேரிகள் உள்ளன. அதைவிட நகரசபை, கிராமசபை போன்றவையும் உள்ளன.
மலைநாடான் மூலம் இந்த இனம், பதிவு குறித்து இங்கு வந்தேன். அறியத்தந்ததற்கு நன்றி
வணக்கம். இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் நல்ல ஒரு வரலாற்று பதிவு.
பெயரிலி
//'யாவா'க்காரர்கள் எனப் பெயரிடப்பட்டு - நகர்காவலர்களாக //
யாழ் குடா நாட்டில் இருக்கும் சாவகச்சேரி எனும் நகரின் பெயர் யாவகர் சேரி (யாவகர் குடியிருந்த இடம்) என்பதன் மருவிய வடிவம் என்பார்கள்.
ரவி,
எனது பழைய பதிவுக்கு வந்து வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள்.
சந்திரன், தங்கள் வருகைக்கும் அந்த "யாவகர்" தகவலுக்கும் நன்றிகள்.
Post a Comment