December 13, 2006

*சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..
இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே
பூமணக்கப் போற பெண்ணே
உன்னழகைக் கண்டவுடன்
கோமணங்கள் துள்ளுதடி
இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

பின்னர் சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை வானொலியில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது போடுவாரகள்.
தமிழில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்குப் புதிய கலைஞர்கள் தோன்றாமையும் தொலைக்காட்சியின் அறிமுகமும் தான் என்கிறார் நித்தி.

அவர் சொன்ன ஒரு சம்பவம்:

"மலேசியாவில் 45வது சுதந்திர தின விழாக் காட்சிகளை மலேசியாவில்
நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம் தமிழ் மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றாதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். எங்கோ பிறந்த பாடல், எங்கெங்கோ சென்று மக்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறது".

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் மதுவிலக்கு மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பான பாடல் நித்தியின் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே".

ரஜனியின் அவசர அடி ரங்கா, எஸ்பியின் சிவரஞ்சனி, விஜயகாந்தின் ரமணா படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இதற்காக நித்திக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை).

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

மகிழ்ச்சியான ஒரு விடயம்: என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.


சின்னமாமி பாடல் வரிகளை வாசித்து விட்டு பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழலும் பெடியெளெல்லாம்
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா
என்மகளை நினைத்து விட்டாய்
இடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே

ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே
ஏனணை மாமி அவளெனக்கு
தெவிட்டாதவள் எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை - சின்ன மாமியே



மக்கள் மயப்பட்டவை நித்தியின் பாடல்கள். எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கப்போகின்றன.

46 comments:

said...

அவரைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்
பாடலை நன்றாக மனதோடு ஒன்றிப் பாடுகின்றார்
அதுதான் அவருக்குள்ள சிறப்பு!
நல்ல பதிவு

said...

பதிவுக்கு நன்றி.

ஆண் குரல், பெண் குரல் எல்லாவற்றுக்குக்கும் ஒருவரே பாடுவது ஒரு குறைதான்.
அந்த நேரத்தில் பாடுவதற்கு (ஒலிப்பதிவின்போது கூட) பெண்கள் யாரும் முன்வரவில்லையா? அல்லது அதைப்பற்றி யோசிக்கவேயில்லையா?

said...

கனக்ஸ்,
இந்த பாடலை 1970 - 1980 நடுவருடங்களில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பப்பிசைப்பாடல்கள் என்ற வரிசையில் இலங்கை தமிழ்வானொலியில் ஒலி ஏற்றுவார்கள்.

இந்தபதிவை படிக்கும் போதே அறிவிப்பாளர்கள் கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், அப்துல் ஹமீது எல்லோரும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

said...

சுப்பையா அவர்களே, பதிவை வாசித்து பாடலையும் கேட்டு பின்னூடமிட்டமைக்கு நன்றிகள். ஏ. ஈ. மனோகரனை (சிலோன் மனோகர்) அறிந்திருப்பீர்கள். தமிழ்ப் படங்களில் நடித்தவர். ஈழத்துப் பொப் பாடகர். நித்திக்குப் பிறகு பாட வெளிக்கிட்டிருந்தாலும் இருவரும் சமகாலத்தவர்கள் என்று சொல்லலாம். நன்றி.

Anonymous said...

//இந்தபதிவை படிக்கும் போதே அறிவிப்பாளர்கள் கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், அப்துல் ஹமீது எல்லோரும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்//
ஓம் அங்கு ஏதாவது பொப் இசை நிகழ்ச்சி நடை பெற்றால்.. உவர்களும் வருவார்கள்...

said...

இலங்கை தமிழ் வானொலியில் இவருடைய பாடல்களை கேட்டிருக்கிறேன்.பாடலை கேட்க தந்ததற்கு நன்றி.

said...

உண்மை! இந்தத் துள்ளிசையால்; ஒரு காலத்தில் கலக்கியடித்தவர்!!நெருக்கியடித்துக் கொண்டு பார்த்த ஞாபகம் வருகிறது.
இவர் இப்போ விரிவுரையாளராக இருக்கிறார் என்பது புதிய செய்தி!!எனக்கு!
யோகன் பாரிஸ்

said...

பழைய நினைவுகள் இனிமையானவை
சின்னமாமியே பாடித்திரிந்த காலங்கள்.

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே
காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்...

இன்னும் சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

சுராங்கனி, இலங்கைக் காகம் நான் என பறந்து போனது காகாகா கககா காகாகா

சிலோன் மனோகர் பாடியதா இது. நினைவில்லை.

காலேஜ் லைப் பைன்
வீ ஆர் நம்பர் நைன்
மேரேஜு ப்ராப்ளமில்லை
லவ்விங் ஆல் தி டைம்

ம்ம்ம்ம்ம்
சின்னக் குழந்தையாகவே இருந்திருக்கணும்:-)

'என் இசையும் என் கதையும்' நூல் வெளிவந்ததும் தெரிவியுங்கள்.

said...

நித்தி அண்ணர் பழகுவதற்கும் மிகவும் இனிமையானவர். கறி பொற் என்ற உணவகத்தை நடத்துகிறார் (மெல்பன் காரன்களுக்காக)

இவரது பாடல்களை மீளவும் சின்னமாமியே 25 ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் சீலன் என்பவரால் லண்டனில் மீள ஒலிப்பதிவு செய்யப்பட்டது, அவ்வளவாக எடுபடவில்லை. இதில் சின்னமாமியே சோகம் கலந்த மெதுவான மெட்டிலும் இருக்கிறது.

வசந்தன் பெண் குரலும் இருந்தால் நல்லது என்றார், பட்டு மாமியே என்ற பாடலை ஏ.ஈ.மனோகரனும், எல். ஆர். ஈஸ்வரியும் பாடி ஒரு வழி பண்ணியிருந்தார்கள், எனவே அந்த முயற்சி இதில் இல்லாதது ஆறுதல்.

நித்தி அண்ணரின் பாடல்களில் எனக்குப் பிடித்தது "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே, காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்".

said...

ரொம்ப நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனியே ஆடி ரசித்தேன். ஈழத்தவர் பாடியதென்று அறிவேன் ஆனால் நித்தி என்று இன்றுதான் தெரியும். அவருடைய அறிமுகத்துக்கு நன்றி.
கல்லூரியிலும் சரி, சுற்றுலாக் காலங்களிலும் சரி இந்த தமிழ் பாப் செம பெப் தான்.
நன்றி!

said...

சிறி!

அருமையான பாடகர் ஒருவரை நட்சத்திரவாரத்தில் அழைத்து வந்திருக்கின்றீர்கள். நன்றி!

தமிழ்பொப்பிசை என்பது அன்றைய பொழுதுகளில் அமர்க்களமாகவும், தனித்துவமாகவும், உருவாகிய இசை. இவ்விசைவடிவத்தின் உயர்ச்சியில் பங்குகொண்டவர்களில், நித்தி, சண்(தற்போது டென்மார்கில் உள்ளார்) மனோகரன், ஆகியோர் முக்கியமானவர்கள். இலங்கையில் தமிழ்பொப்பிசை வளர்ந்தளவுக்கு இன்னமும் கூட தமிழகத்தில் வளரவில்லையென்றே சொல்லலாம்.
நாட்டிலேற்பபட்ட பிரச்சனைகள் இக்கலைவடிவத்தை முற்றாக அழித்து விட்டது.

இதுபோன்றே ஈழத்து மெல்லிசையும் அழிந்துபோனது. ஆயினும் விடுதலைப்பாடல்கள் அதைவேறு ஒரு பரிமாணத்தில் மீட்டுத்தந்திருக்கிறது.

புலத்தில் தமிழ் ரே எனும் புதிய இசைவடிவம் ஒன்றும் இளைஞர்களால் முயலப்பட்டது. ஆனால் விருத்திபெறவில்லை.

பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

ரொம்ப நன்றி இணைப்புக்கு.
இப் பாடலை இயற்றியவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்று நித்தி ஒரு பேட்டியில் சொன்னார்.
ஆந்த் காலத்து ஊர்த் திருவிழாக்களை நினைத்து நெஞ்சு கனக்கிறது.

said...

வசந்தன், //ஆண் குரல், பெண் குரல் எல்லாவற்றுக்குக்கும் ஒருவரே பாடுவது ஒரு குறைதான்.
அந்த நேரத்தில் பாடுவதற்கு (ஒலிப்பதிவின்போது கூட) பெண்கள் யாரும் முன்வரவில்லையா? அல்லது அதைப்பற்றி யோசிக்கவேயில்லையா?//
மன்னிக்கவேண்டும் வசந்தன், கட்டாயம் எடுபட்டிராது. அதைவிட அவரது தொடக்கக் காலத்தில் பெண் குரல்கள் அவ்வளவு இருக்கவில்லையோ?

said...

கோவி கண்ணன், //பப்பிசைப்பாடல்கள் என்ற வரிசையில் இலங்கை தமிழ்வானொலியில் ஒலி ஏற்றுவார்கள்.//

சேவை இரண்டில் கால், அரை மணி நேரம் போடுவார்கள். நித்தியோட ஏ. ஈ. மனோகரன், அமுதன் அண்ணாமலை, மறைந்த எஸ். கே. பரராஜசிங்கம், அமுதன் அண்ணாமலை, முத்தழகு இப்படிப் பலர்.

ஆனால் பலரும் மறந்துவிட்ட திருகோணமலை இரட்டையர் பரமேஸ், கோணேஸ் (உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது). அருமையான பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.

said...

லட்சுமி, இந்தியத் தலைநகரில் இருந்து வந்திருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி.
//இலங்கை தமிழ் வானொலியில் இவருடைய பாடல்களை கேட்டிருக்கிறேன்.பாடலை கேட்க தந்ததற்கு நன்றி.//
இலங்கை வானொலியைப் பற்றிக் கதைத்தால் நேரமே போகாது. அவ்வளவுக்கு அன்று மக்கள் மனதில் நிறைந்திருந்தது. நன்றிகள்.

Anonymous said...

This Song is a Big Hit in my Office. We are all set this our Ring Tone....

said...

எனக்கு பள்ளிக்கூட ஞாபகம் வருது. எங்க சுற்றுலா போனாலும் இந்த பாட்டைத்தான் படிப்பம்.

பதிவுக்கு நன்றி

ஊரோடி பகீ

said...

அருமையான பாடல்.
எங்கோயோ கொண்டுபோய் விட்டீர்கள்.
சின்ன வயதில் பாண்டிச்சேரியில் இருந்தபோது கேட்டது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தில் ஒலித்தது.
பாட்டை கேட்கும்போது பழைய அழகிய இள் வய்து நினைவுகளும் எட்டிப் பார்த்தது.
நன்றி. நன்றி.
பகிர்ந்தமைக்கு நன்றி.

மொழியால், இசையால், கலையால், காவியத்தால் அனைவரும் ஒன்றுபடுவோம் வாருங்கள் உலகத் தமிழர்களே!

Anonymous said...

வணக்கம் கனக்ஸ்.

ஒரு ஈழத்தவர் எண்டால் இந்த விடயத்தினை தொடாமல் பதிவு எழுத முடியாது.அப்படி ஈழத்தவரின் ஒரு
குறிப்பிட்ட வயதினை அடைந்தவர்களின்
வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்திய விடயம் இது.

இது தொடர்பாக நான் சில காலங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு
அத்துடன் சின்னமாமியே பாடலின் இரு வேறு வடிவங்கள் பக்கத்தில் உள்ள
stickam player கேட்கலாம்.

http://karikaalan.blogspot.com/2005_05_08_karikaalan_archive.html

said...

Kanaga
முதலில் நட்சத்திர வார வாழ்த்துக்கள்!
சிங்கப்பூர் வந்திருந்த போது வாங்கிய குறுந்தகடு ஒன்றில் இவரின் பாடல்கள் எனக்கு அறிமுகம்!

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே பாடலில் சில வரிகள் நச் என்று இருக்கும்!
"கடவுள் செய்த பனை மரங்கள் தானேடா
அந்தக் கடவுள் கள்ளை தொட்டதுண்டோ கேளடா"

//என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்//

இது நிசமாகவே மகிழ்ச்சியான ஒரு விடயம் தான்; ஈழத் தகவல்கள் பலவற்றை ஒரு பாடகர் பார்வையில் அறிவது புதிது தானே!

said...

//பலரும் மறந்துவிட்ட திருகோணமலை இரட்டையர் பரமேஸ், கோணேஸ் (உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது). அருமையான பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர்//

மறக்கவில்லை. வெகுவிரைவில் அழைத்து வருகின்றேன்.

said...

கனக்ஸ்,
நல்லதொரு நினைவுமீட்டல் பதிவு.
மிக்க நன்றி.

Oh, பாடலையும் இணைத்ததற்கும் நன்றி.

said...

யோகன்,
//நெருக்கியடித்துக் கொண்டு பார்த்த ஞாபகம் வருகிறது.//
:)

said...

மதுமிதா,
//
சுராங்கனி, இலங்கைக் காகம் நான் என பறந்து போனது காகாகா கககா காகாகா//

இது சிலோன் மனோகர் என்ற ஏ.ஈ.மனோகரன் பாடியது.

//காலேஜ் லைப் பைன்
வீ ஆர் நம்பர் நைன்
மேரேஜு ப்ராப்ளமில்லை
லவ்விங் ஆல் தி டைம்//

யார் பாடியது?

//'என் இசையும் என் கதையும்' நூல் வெளிவந்ததும் தெரிவியுங்கள்.//
கட்டாயம். பதிவே போடலாம்:)

வருகைக்கு நன்றி.

said...

ஊரோடி பகீ,
//எனக்கு பள்ளிக்கூட ஞாபகம் வருது.//

யாழ்ப்பாணத்தில் சென்ட்ரல்-சென் ஜோன்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் இந்தத் துள்ளிசைப்பாடல்களைப் பாடுவார்கள்.

said...

பிரபா,
//வசந்தன் பெண் குரலும் இருந்தால் நல்லது என்றார், பட்டு மாமியே என்ற பாடலை ஏ.ஈ.மனோகரனும், எல். ஆர். ஈஸ்வரியும் பாடி ஒரு வழி பண்ணியிருந்தார்கள், எனவே அந்த முயற்சி இதில் இல்லாதது ஆறுதல்.//

உண்மை. நித்திக்கு ஈடு கொடுத்து பாடியிருப்பார்களா என்பது சந்தேகமே.

said...

மாசிலா,
//மொழியால், இசையால், கலையால், காவியத்தால் அனைவரும் ஒன்றுபடுவோம் வாருங்கள் உலகத் தமிழர்களே!//

நமக்குள்ளே பிரிவினைகளை அகற்றி ஒன்றுபடவேண்டும். நல்ல கருத்து.

said...

பொட்டீக்கடை சத்தியா,
//ரொம்ப நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனியே ஆடி ரசித்தேன்.//
தனிய பைலாப் போட்டீர்களா?

//கல்லூரியிலும் சரி, சுற்றுலாக் காலங்களிலும் சரி இந்த தமிழ் பாப் செம பெப் தான்.//
என்ன இருந்தாலும் அந்த "வன்ஸ் அ பாப்பா" (அன்பே வா) படப் பாடலை மறக்கலாமா சார்?

said...

மலைநாடான்,
//மறக்கவில்லை. வெகுவிரைவில் அழைத்து வருகின்றேன்//
வெகு விரைவில் அழைத்து வாருங்கள் அந்த பரமேசின் "உந்தன் விழி ஒரு முறை பாடலை இங்கு தரவிறக்கலாம்.

said...

கரிகாலன், அந்தப் பாடல் தொடுப்புக்களுக்கு நன்றி.

said...

கண்ணபிரான், வாழ்த்துக்களுக்கு முதற்கண் எனது நன்றிகள்.

//ஈழத் தகவல்கள் பலவற்றை ஒரு பாடகர் பார்வையில் அறிவது புதிது தானே!//
ஆமாம், கட்டாயம் சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கலாம்.

said...

வெற்றி, வருகைக்கு நன்றி.

said...

பின்னூட்டமிட்ட அனானிகளுக்கு நன்றிகள்.

//இப் பாடலை இயற்றியவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்று நித்தி ஒரு பேட்டியில் சொன்னார்.//
அந்தத் தகவலுக்கு நன்றி.

//This Song is a Big Hit in my Office. We are all set this our Ring Tone....
நல்ல ஆபீசாயிருக்கு. எந்த ஊரில:))

said...

நல்ல பதிவு. ஒரு காலத்தில் எங்கள் வீடுகளில் எல்லாம் ஒலித்த குரல்.

இப்படியான பதிவுகள் உண்மையிலேயே என்னை மகிழ்விக்கின்றன.
நித்தி கனகரட்ணம் போன்ற எமது ஈழத்துப் பாடகர்கள் பலர் பற்றிய தகவல்கள்
இணையத்தளங்களில் பெரியளவாக இல்லை. அது என் மனதில் பெருங்குறையாகவே உள்ளது.

எப்போதாவது எல்லாவற்றையும் சேகரிக்க முடிந்தால் சேர்த்து வலையேற்ற வேண்டும் என்ற அவாவும்
என்னிடம் உள்ளது.

இடைப்பட்ட காலத்தில் பல பாடல்களை எழுதிய பாடிய, பல புலம் பெயர்ந்த ஈழத்தவர்களின் தகவல்களும் அதில் சேர்க்கப் பட வேண்டும். மிக அருமையான பாடல்கள் பலதை வானொலியில் கேட்டது மட்டுந்தான். எங்கே அந்த ஒலித்தட்டுக்கள், பேழைகளை வாங்கலாம் என்பது கூட எங்கும் அறிவிக்கப் படவில்லை.

நிற்க மேலேயுள்ள பின்னூட்டங்களில் ஏதாவது பயனான தகவல்கள் இருக்கும். வாசித்துக் கொண்டிருக்க நேரம் ஒத்துழைக்கவில:;லை.

Anonymous said...

உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.
இந்த முகவரிக்கு ஒரு தனி மயில் அனுப்ப முடியுமா?
sgr35@hotmail.com

றேமன்

said...

யான் நீன்ட வருடங்களாக வலை வானில் தேடிக் கொண்டிருந்த நித்தி கனகரத்தினம் பற்றிய மலரும் நினைவலைகளைப் படித்த போது இன்ப அதிர்ச்சி.

அந்தக் காலத்தில் [அதாவது 37 ஆண்டுகளுக்கு முன்பு] இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கப்பலில் அல்லது விமானத்தில் வந்து இறங்கும் போது மில்க் வைட் சோப்,யெலோ லயின் துணி, தேயிலை....இவை எல்லாம் கொண்டு வந்தீர்களா? விற்பனைக்கு உள்ளதா? என்று சிலர் கேட்பார்கள்.

அந்த சமயத்தில்...'சின்ன மாமியே..' ரிகார்டு இருந்தால் கொடுங்கள்....என்ன விலை என்றாலும் கேளுங்கள்...'என்று தலை மன்னாரிலும் ,திருச்சியிலும் பலர் கேட்டதாக...நான் சிறுவனாக இருந்த போது இந்தியா சென்று திரும்பிய பலர் வியப்பொடு சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

எங்கள் மண்ணுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அந்த மாபெரும் கலைஞனை நினைவு கொண்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்
யாழ் சுதாகர்
chennai

said...

சந்திரவதனா,
//எப்போதாவது எல்லாவற்றையும் சேகரிக்க முடிந்தால் சேர்த்து வலையேற்ற வேண்டும் என்ற அவாவும்
என்னிடம் உள்ளது.//
நல்ல பணி. கட்டாயம் செய்ய வேண்டியது. கூட்டாகச் செய்ய வேண்டியது. விக்கிபீடியா இதற்கு ஒரு நல்ல மேடை.

said...

றேமன்,
//உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன்//

நன்றாக நினைவிருக்கிறது. நியூசியில் இருக்கிறீர்களோ. மடல் இடுகிறேன்.

said...

வானொலி உலகம் யாழ் சுதாகர்,
//யான் நீன்ட வருடங்களாக வலை வானில் தேடிக் கொண்டிருந்த நித்தி கனகரத்தினம் பற்றிய மலரும் நினைவலைகளைப் படித்த போது இன்ப அதிர்ச்சி.//

அந்த நன்றிகள் எழுத்தாளர் முருகபூபதியையே சென்றடையவேண்டும். அவருக்கு எனது நன்றிகள்.

//எங்கள் மண்ணுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அந்த மாபெரும் கலைஞனை நினைவு கொண்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.//

நன்றிகள்

said...

ஆகா, என் பள்ளி, கல்லூரி காலப் பருவங்களில் கேடு மகிழ்ந்த இந்த பாடல்களை வெளியிட்ட்மைக்கு நன்றி, சிலோன் மனோகர் பாடல்களையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

அந்த காலத்தில் சிலோன் ரேடியோ அலைவரிசையில் நெடுநேரம் இர்து போன்ற பாடல்களை கேட்டு கழித்து கொண்டிருந்தது மறக்க முடியாத ஒன்னு!

நட்சத்திர வாழ்த்துக்கள்!

said...

some songs can be heard here
Pop 1

Pop 2
AE Manoharan singing Paddu maaiyaa SUCKS BIG TIME.

Pop 3


Pop 4

Pop 5

Pop 6 - Niththy Kanagaratnam

"naangka kudathanayil paal vikkiRathu" tune can be heard in one deva or Vidhayasagar's film song within couple of years. I posted both of them someone's blog few months back. I will find out.

Even 'vikkalu vikkalu vikkalu' (coca cola brownu colorda) in kuNdakka maNdakka is 1:1 copy of a sinhala pop(ular) song.

said...

வெளிகண்ட நாதர்,
வாழ்த்துக்களுக்கு முதற்கண் நன்றிகள்.
//ஆகா, என் பள்ளி, கல்லூரி காலப் பருவங்களில் கேடு மகிழ்ந்த இந்த பாடல்களை வெளியிட்ட்மைக்கு நன்றி, சிலோன் மனோகர் பாடல்களையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!//

உங்கள் வேண்டுகோளை ஏற்று பெயரிலி இரமணி அவர்கள் பல தொடுப்புக்களைத் தந்துள்ளார்கள். உங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

said...

நன்றி பெயரிலி, கனக்ஸ்!

said...

அண்ணாமலை அவர்களே, கருத்துக்கு நன்றி.

said...

Super

said...

Super