
தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளிப் பாடலை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த அழகான பாடல் மழலைகள் பாடி அழகாக இசை அமைத்திருக்கிறார் கனடாவிலிருந்து கிரிதரன் அவர்கள். பாடலின் வரிகளை முதலில் பார்ப்போம்:
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நன்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்!
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்! - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்!
வட்டமான பெரும் பூசனிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்! - தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்! - இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே
ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.
பாடலை அழகாகப் பாடிய மழலைகள்: பைரவி (13வ), நீரோ (13வ), ரம்யா (6வ).
பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்:
கத்தரி வெருளி
இந்த மழலைகளின் வேறும் சில பாடல்களைக் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்:
tamilkids.tripod.com/music/
4 comments:
பாடல் கேட்டேன்.
பாடசாலையில் சொல்லித்தரப்படும் மெட்டிலேயே பாடலைப்பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆடிப்பிறப்பு, கத்தித்தோட்டத்து வெருளி எல்லாம் ஒரே மெட்டுத்தானே?
இந்தபாட்டுக்களை ஒலிப்பதிவாக்கி வலைப்பதிவில் இடுவதற்கு கொஞ்சக்காலம் முன்பு முயற்சித்தோம்.
உப்பிடித்தான் சயந்தனும் சிட்னியில உதே பாட்டை தான் பாடித்தாறன் எண்டு சொல்லிப் பாடித்தந்தார்.
தகரங்கள் தட்டி, கத்து கத்தெண்டு கத்தி ஒலிப்பதிவு செய்து தன்ர வலைப்பதிவில போட்டார்.
ஆனாலும் சிலர் பாராட்டுத் தெரிவிச்சது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்தது.
சுந்தரவடிவேலாரின் 'சிறுவர் பாடல்கள்' வலைப்பதிவில் இந்த ஒலிப்பதிவுகளைச் சேர்த்துவிடலாம்.
வசந்தன், வருகைக்கு நன்றி.
//பாடசாலையில் சொல்லித்தரப்படும் மெட்டிலேயே பாடலைப்பாடியிருக்கலாம்//
இது தற்காலத்து புலம்பெயர் குழந்தைகளுக்கு ஏற்ப இசையமைத்துள்ளதாக கிரிதரன் குறிப்பிட்டுள்ளார்.
சயந்தனின் பாட்டைக் கேட்கவில்லை. கேட்டுப்போட்டுச் சொல்லுறன்.
My kind regards to the children who sang the song. I would like to stage this song with action.
கணேஷானந்தன், தங்கள் வருகைக்கு நன்றி. இந்தப் பிள்ளைகள் அழகாகப் பாடி ஆடி நடித்த காட்சிகள் இப்போது சிறுவர் பூங்காவில் கிடைக்கிறது.
Post a Comment