January 28, 2006

இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்-ஒரு பார்வை

கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் (அனைத்துலக தேடல்) ஒரு பார்வை
-திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் (சிட்னி) -

'கனவான்களே! இந்த ஓலைச்சுவடிகள் சிதைந்து அழிகின்றனவே என்ற கவலை உங்களுக்கு இல்லையா? தமிழ் உங்கள் தாய் என நீங்கள் உணரவில்லையா? இறக்கும் தறுவாயில் உள்ள உங்கள் தாய்க்கு உதவ நீங்கள் ஏன் எதுவும் செய்கிறீர்களில்லை? தேசிய உணர்வு, மத உணர்வு, மொழி உணர்வு என்பவை இல்லாமல் வாழ்தல் பெருமைக்குரிய விசயம் என எண்ணுகின்றீர்களா? தயவு செய்து இதனை ஆழமாகச் சிந்தியுங்கள்".

தமிழ் மக்களை நோக்கி, இப்படி விண்ணப்பம் செய்கிறார் தமிழ் அறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள். இது நடந்தது 19 ஆம் நூற்றாண்டிலே. அவருடைய வேண்டுதலைச் செவிமடுத்த பலர், பண்டைத் தமிழ் செல்வங்களை, ஓலைச் சுவடிகளிலிருந்து மீட்டு அச்சிடுவதற்கு அந்தப் பெருமகனாருக்கு உதவி இருக்கிறார்கள்.

ஒன்றரை நூற்றாண்டு காலத்துக்குப் பின், அந்த அறிஞரின் அறைகூவலுக்கு, கலாநிதி குணசிங்கம் அவர்கள் புத்தூக்கம் அளித்துள்ளார். இன்று, அந்த தமிழ் மகனின் வழியிலே, இவரும் ஒரு 'தமிழ் ஆவணத் தேடலை" ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு, சென்னை, கோவா, லிஸ்பன், நெதர்லாந்து, லண்டன், பாரிஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, அமெரிக்கா எங்கும் இரண்டு வருடகாலம் கலாநிதி குணசிங்கம் அயராது பயணிக்கிறார். அங்கே இருக்கும் நூலகங்கள் ஆவணக் காப்பகங்களிலே தனது தேடலைத் தொடர்கிறார். வாசகர்களாகிய நாமும் அவரோடு சேர்ந்து பயணிக்கிறோம். ஒவ்வொரு நூலகத்திலும் இருக்கும் வரைபடங்கள், கடிதப் பரிவர்த்தனைகள், புதினப் பத்திரிகைகள், மற்றும் பதிவுகள் பலவற்றிலும் இலங்கைத் தமிழ்மக்கள் பற்றிய செய்திகளைக் காண்பித்துக் கொண்டே செல்கிறார். நாமும் அவரோடு சேர்ந்து பார்க்கிறோம்.

ஒரே பிரமிப்பாக இருக்கிறது. எம்மைப் பற்றியும், எமது தாயகத்தைப் பற்றியுமுள்ள உண்மையான பதிவுகள் - மூல ஆதாரங்கள் - எம்மை அதிசயத்தில் ஆழ்த்துகின்றன.

யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததன் மூலம் எமது பாரம்பரியத்தையே சாம்பலாக்கி விட்டதாகக் குதூகலித்தவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றன.

நாம் ஆறுதல் அடைகிறோம். புத்துயிர் பெறுகிறோம். கலாநிதி குணசிங்கம் அவர்களின், இந்தத் தேடல் புத்தகமாக உருவாகிறது. அதுவே "இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" - அனைத்துலகத் தேடல்". உலகெங்கும் பரந்திருக்கும் தமிழினத்துக்கு, இந்நூல் சிறந்ததொரு வழிகாட்டியாகிறது.

எல்லா மனிதருக்கும் ஒரு வரலாறு உண்டு. நாம் இன்னார் என்ற அடையாளத்தை இந்த வரலாற்று உணர்வுதான் எமக்குத் தருகிறது. நீ எங்கே போகிறாய் என்று அறிவதற்கு, நீ எங்கிருந்து வருகிறாய் என்பது உனக்குத் தெரிய வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களிடம் ஒரு முதுமொழி வழங்குவதாகத் தெரிகிறது.

இவ்விடத்தில் கலாநிதி குணசிங்கம் கூறுவது கவனத்திற்குரியது. "இன்றைய நிலையில் காணப்படும் பெரிய குறைபாடு என்னவெனில், எந்தவொரு தொல்லியலாளரோ, வரலாற்றாசிரியரோ, அல்லது சமூக விஞ்ஞான ஆசிரியரோ, அவர் தமிழராக இருந்தாலும் சரி, சிங்களவராக இருந்தாலும் சரி, இலங்கைத் தமிழரின் முழுமையான வரலாற்றை எழுதவில்லை" என்பதுதான். சிங்கள ஆய்வாளருக்கு ஏராளமான ஆதாரங்களும், எல்லா மட்டங்களிலும் அரசாங்க உதவிகளும் உண்டு. ஆனால் தமிழ் அறிஞர்களோ பாரியதடைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

காலாநிதி குணசிங்கம் அவர்கள் ஒரு வரலாற்றாசிரியர் மாத்திரமல்லர்; அவர் ஒரு சிறந்த நூலகரும் ஆவார். எனவே அவர் ஒரு நல்ல ஆய்வாளராகத் தனது தேடலைத் தொடர்கிறார்.கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெளத்த மதம் இலங்கைக்கு வந்தது முதல், அரசன், அரச சபை, பெளத்த மதம் என்பன ஒரு வகைக் கூட்டு அமைப்பாக இயங்கி, தமது வரலாற்றுப் பாரம்பரியங்களை பேணி வந்துள்ளனரென்று அறிகிறோம். ஆனால் தமிழ் மக்களின் வரலாறு அவ்வாறு ஆவணப்படுத்தப்படாதது பெரிய குறையென்ற உண்மையை ஆசிரியர் இத்தேடலின் போது தெளிவுபடுத்துகிறார். எமது நாட்டுத் தமிழறிஞரான தனிநாயகம் அடிகளார் அவர்களே தனது வழிகாட்டி என்று கலாநிதி குணசிங்கம் கூறுகிறார். அடிகளார் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்த பின்னரே தனது தேடல் ஆரம்பித்ததாகக் கூறுகிறார். "ஐரோப்பிய நூலகங்களைத் தேடிச் செல்லத் தயாராக இருக்கும் ஊக்கம் மிகுந்த தமிழ் அறிஞர்களுக்கு, அங்கே மேலும் முக்கியமான, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கண்டுபிடிப்புகள் காத்திருக்கின்றன" என்று அடிகளார் தமது கட்டுரையில் வழிகாட்டுகிறார்.

கி.பி. 1505 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.ஐரோப்பியரான போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும், பிரித்தானியரும், ஒருவர் பின் ஒருவராக எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட 450 வருடகாலத்தில் ஏற்பட்ட அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், தமிழ் மக்களின் வரலாற்றையே மாற்றி விடுகின்றன. ஐரோப்பியர்களின் வர்த்தகச் சுரண்டல்களும், மத மாற்றமும், அரசியல் முறையுமே இன்றைய எமது அவல நிலைக்குக் காரணம் என்பது வரலாற்று உண்மை. இந்த ஐரோப்பியரால் தமிழ்மக்கள் பற்றிய குறிப்புகள் யாவும் பதிவு செய்யப்பட்டு, அவர்களது நூலகங்கள், மற்றும் ஆவணக்காப்பகங்களிலே பேணப்பட்டு வருவதை கலாநிதி குணசிங்கம் அவர்களின் தேடல் முயற்சியின்போது, பார்க்கையில், அவர்கள் தமது சுயலாபத்திற்காகச் செய்த பதிவுகள், இன்று எமக்குச் சாதகமாக இருப்பதை உணரமுடிகிறது. வரைபடங்களும், காணிகள், மக்கள் பற்றிய குறிப்புகளும், சட்டங்களும், போர்களும், வர்த்தகம் பற்றிய செய்திகளும், மத மாற்றம் பற்றிய விபரங்களும் அன்றைய தமிழினத்தின் வரலாற்றைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவற்றிலே முக்கியமானது, ஐரோப்பியர்கள் தாம் ஆதிக்கம் செலுத்திய நிலப்பரப்பின் எல்லைகளை, வரைபடங்களாகப் பாதுகாத்துள்ளமை.லிஸ்பன், நெதர்லாந்து போன்ற இடங்களிலுள்ள ஆவணக் காப்பகங்களிலே இந்த வரைபடங்கள் மிகவும் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருவதாக கலாநிதி குணசிங்கம் அவர்கள் விபரமாகக் கூறுகிறார். போர்த்துக்கேய, டச்சு ஆட்சிக்காலங்களிலே, தனித்தனி இராச்சியங்களாக விளங்கிய சிங்கள, தமிழ் அரசுகளை, பிரித்தானியர், தமது நிர்வாக வசதி கருதி ஒன்றாக்கியதால் ஏற்பட்ட சிக்கல் இன்றுவரை தொடர்வதை இந்நூலில் தெளிவாக அறிகிறோம்.

H. Cleghorn என்னும் பிரித்தானிய சிவில் சேவை அதிகாரியின் பதிவொன்றை இந்நூலிலே பார்க்கிறோம்~மிகவும் புராதன காலத்திலிருந்தே, இருவேறு பட்ட மக்கள், நாட்டை, வெவ்வேறாகத் தமக்குள் பிரித்து உடைமையாக்கிக் கொண்டுள்ளனர். முதலாவதாக, சிங்களவர் நாட்டின் மத்திய பகுதியிலும், தெற்கிலும், மேற்கில் வளவை கங்கையிலிருந்து சிலாபம் வரையில் வாழ்கின்றனர். இரண்டாவதாக மலபார் மக்கள் (தமிழர்) வடக்கு, கிழக்கு மாவட்டங்களை உடைமையாகக் கொண்டுள்ளனர். இந்த இரு தேசியங்களின் மொழி, மதம், பழக்க வழக்கங்கள் என்பன முற்றிலும் வேறுபட்டவையாகும்."

இதே கருத்தை, வடக்கிலே, கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த வணக்கத்திற்குரிய William Howland கூறுவதையும் ஆசிரியர் காட்டுகிறார். "இலங்கையின் தெற்கிலும், மத்தியபாகங்களிலும் சிங்களவர் வசிக்கின்றனர், இவர்கள் வேறு மொழியைப் பேசி, வேறு மதத்தை அனுசரிப்பவர்கள்.தமிழர்களின் சமயம் பிராமணியம். இவர்கள் வட மாகாணத்திலும், மேற்கில் சிலாபம் வரையும், கிழக்கில் மட்டக்களப்பு வரையும் வசிக்கின்றனர்."

இந்தக் காப்பகங்களிலுள்ள வரைபடங்களின் முக்கியத்துவம் பற்றிக் கலாநிதி குணசிங்கம் அவர்கள் கூறுகையில்- "தமிழர் தாய் நிலத்தின் புவியியல் தொடர்பான உண்மை நிலையினை அறியவேண்டின், புவியியல், வரலாற்று ஆய்வாளர்கள், இந்த ஆரம்ப வரைபடத் தொகுப்புகளில் விசேட கவனம் செலுத்துவது அவசியம்."என்கிறார். "அரசியல் கொந்தளிப்பு நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் உள்ளது. அநுரதபுரமும், கிழக்கிலங்கையும், மிகவும் கவனத்துடன் ஆராய்ச்சி செய்யப்பட்டால், தற்போதுள்ள குழப்பநிலை தெளிவாகும்" என்று மேலும் விளக்குகிறார்.

நெதர்லாந்து நாட்டு ஆவணங்களிலே முக்கியமானவை "தோம்புகள்" எனப்படும் காணிப்பதிவுகள். இது ஆட்களின் எண்ணிக்கையையும் காணிகளையும் குறித்த பதிவு அட்டவணையாகும். இதனில் எல்லா மக்களினதும், அவர்களது காணிகளும், அவை அமைந்துள்ள மாகாணம் மாவட்டம், வெவ்வேறாகப் பதியப்பட்டு, ஒரே பார்வையில் கம்பனியின் உடைமைகளின் அளவையும், பரப்பையும் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது- என்னும் பல விபரங்களைப் பார்க்கிறோம்.

150 வருடகால டச்சுக்காரரின் ஆட்சியின்போது, எவ்வாறெல்லாம் வளங்களைச் சுரண்டினார் என்பதும், செல்வம் குவிப்பதற்கு எத்தனை வழிகளில் முயன்றனர் என்பதும் இவற்றின் மூலம் தெரிகிறது.தமிழ் மக்களுடைய காணிகளின் தெளிவான விபரங்கள், மாவட்ட எல்லைகள், விவசாயத்தின் வகைகள், வியாபாரங்களின் விபரங்கள், தொழில்கள், வருமானம், வாழ்க்கை முறை என்பன இவ் ஆவணங்கள் மூலம் தெரியவருகின்றன.உள்ளுர் முறைமைகளை ஆராய்ந்து, இவற்றோடு ஒத்துப்போகும்வகையில், டச்சுககாரர் தமது நிர்வாக முறைகளை அமைத்துக் கொண்ட செய்தியை தேச வழமை பற்றிய பதிவுகளில் ஆசிரியர் காட்டுகிறார். தேச வழமை என்பது யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும், வன்னிப்பிரதேசங்களிலும் பாரம்பரியச் சட்டமாக இருந்தது என்று அறிகிறோம் - ஓர் எழுதாச் சட்டம். "முதுசம், திருமணம், இன்னும் ஏனைய வழிகளில் வந்த குடும்பச் சொத்து, அக்குடும்பத்துக்கு சொந்தமில்லாத வேறு எவராலும் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது" என்பதே தேச வழமையின் பிரதான நோக்கமாக இருந்தது.

இந்த இறுக்கமான அமைப்பு, தமிழர்களின் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பாதுகாத்து வந்ததோடு, தமிழர்களின் பெருத்த குடும்ப முறைமைக்கும் அடிப்படையாக இருந்தது என்றும் ஆசிரியர் விளக்குகிறார்.மேலும் இவ் ஆவணக் காப்பகங்களிலே, ஆட்சியாளருக்கும், அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த கடிதப் பரிவர்த்தனைகள் மூலம் அக்காலத்திய சமூக நிலை பற்றி அறியமுடிகிறது. கலாநிதி குணசிங்கம் அவர்கள், லண்டன் தேசியக் காப்பகத்திலுள்ள, இரு கடிதப் பதிவுகளை முழுமையாகப் பிரசுரித்ததன் மூலம் அக்காலத்தில் நிலவிய சாதிப்பிரச்சனை பற்றிய தெளிவான பார்வையைத் தருகிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் தமது குறைகளை விளக்கி எழுதிய விண்ணப்பம் ஒன்றையும், அதற்கு மறுப்பாக உயர்சாதியினர் எழுதிய கடிதத்தையும் பார்க்கும்போது, அக்காலத்தில் நிலவிய இறுக்கமான சாதி அமைப்புப் பற்றி அறிகிறோம்.

இவற்றைவிட யாழ்ப்பாணத்தில் பெண் கல்வி தொடர்பாகவும் வைத்தியக் கல்வி பற்றியும் பல செய்திகளை அமெரிக்க நூலகங்களிலிருந்து தருகிறார். அச்சு இயந்திரம், காகிதம் என்பவற்றின் வருகையால் பிரசுரிக்கப்பட்ட, நூற்றுக்குமதிகமான பத்திரிகைகள் தேதி வாரியாகப் பல நூலகங்களிலே பேணப்பட்டு வருவதையும் அறியத் தருகிறார். கிறிஸ்தவ மதப் பத்திரிகைகளான உதயதாரகை, கத்தோலிக்கப் பாதுபாவலன், Ceylon Catholic Messenger, Jaffna Catholic Guardian என்பனவும், அவற்றிற்கு மறுப்பாக வந்த சைவ போதினி, சைவ அபிமானி, இந்து நேசன் மற்றும் செய்தித்தாளான வீரகேசரி Times of Ceylon போன்ற பத்திரிகைகள் பற்றியும் அறிகிறோம்.

பலாத்கார மத மாற்றத்தினாலும், ஆட்சியாளர் தமது செல்வத்தைப் பெருக்குவதற்காக மக்களைச் சுரண்டி அவர்களை வறியவர்களாக்கியதாலும் யாழ்ப்பாண மக்கள் பலதடவை வன்னி நோக்கிப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற செய்தியையும் அறிகிறோம்.

"The Spiritual and Temporal Conguest" என்னும் நூலில் போர்த்துக்கேயரான Queros எனபவர் "தமிழ் மக்கள் கரை காணாத்துன்பத்தில் உழல்கின்றனர்" என்ற கருத்துப்படக் கூறுகிறார்.

வன்னிச் சிற்றரசர் பலம் வாய்ந்திருந்ததையும் வன்னிப் பெருநிலம் போர்த்துக்கேய ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்கவில்லை என்பதையும் வன்னிப் புலப்பெயர்வு காட்டுகிறது. இந்த வரலாற்று நிகழ்வுகள் நடந்து 500 ஆண்டுகள் கழிந்து விட்டநிலையிலும், இன்னும் கூட தமிழ்மக்கள் கிட்டத்தட்ட அதே நிலையைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள், என்று கலாநிதி குணசிங்கத்தின் கூற்றில் அவரது சரித்திரப் பார்வையில், மனிதாபிமானத்தையும் உணர முடிகிறது.

இந்நூல் வெறும் நூல்கள், ஆவணங்கள், அவை அமைந்திருக்கும் இடங்கள் என்ற பட்டியல்கள் அல்லாமல், சிறப்பாக ஒப்பு நோக்கில் ஆராய்ந்து எழுதப்பட்டிருப்பது இந்நூலின் பலம் என்றே சொல்லவேண்டும்.ஒரே நூலில் ஆங்கிலத்திலும், தமிழிலும் செய்திகளைப் பதிந்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. எவருக்கும் விளங்கக்கூடிய வகையில், எளிமையான ஆங்கிலத்தில், சுவைபட எழுதியிருப்பதால் எமது இளைய சந்ததியினருக்கு, நல்லதொரு வழிகாட்டியாக இந்நூல் அமையும் என்பதில் சந்தேகமில்லை. நிலக்கிளி அ. பாலமனோகரன் அவர்கள் அழகு தமிழில் இந்நூலை மொழி பெயர்த்திருப்பது, இதற்கு மேலும் மெருகேற்றியுள்ளது.

தனது தேடலுக்கு அன்புக்கரம் நீட்டியவர்களுக்கு நன்றி கூறுகையில், தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் வழியிலேயே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். இவை எமது தேசியச் செல்வங்கள். இலங்கைத் தமிழர் சம்மந்தமான ஆய்வுக்கு மாத்திரமின்றி, தமிழ் அடையாளத்தை நிறுவுவதற்கும் இவை அவசியமானவை. எனவே காலந்தாழ்த்தாது இதனைக் கருத்துக்கெடுத்து ஆவன செய்ய வேண்டும் என சகல தமிழ்ச் சமூகத்தையும் வேண்டுகின்றார்.

தமிழ் மக்களின் வரலாறு பற்றி அண்மையில் வெளிவந்துள்ள நூல்களின் வரிசையில் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் முக்கியமானதொரு இடைவெளியை நிரப்புவதில் வெற்றிகண்டுள்ளது.

"இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி முழுமையானதொரு நூலை உருவாக்குவதில் எனது பங்களிப்பாக இது போன்ற புத்தகத்தை ஆய்வுகளின் அடிப்படையில் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த முப்பது ஆண்டுகளாகவே என்னுள் இருந்தது. ஆனாலும் இந்த இலட்சியத்தை எப்போது ஈட்டப் போகின்றேனோ என்ற கேள்விகளும் உடன் இருக்கவே செய்தன. எத்தகைய சிரமங்கள் மத்தியிலும் எனது கனவை நனவாக்க வேண்டுமென்ற திடமான முடிவுக்கு வந்தேன்" என்று கலாநிதி குணசிங்கம் கூறுவதைப் பார்த்தபோது, அவரது உறுதியும், திடசித்தமும் வியக்கவைத்தது.

இவ்வேளை திரு ஆனா பரராஜசிங்கம் அவர்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் வந்த வாசகம் ஒன்று நினைவில் வருகிறது. (தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படுமேயானால் தமிழர் தமது இலக்கியம், பண்பாடு என்பவற்றோடு அவர்களுக்கே உரித்தான மனவலிமை, திடசித்தப்போக்கு என்பவற்றால், எம்மை அடக்கி ஆள முற்படுவார்கள் என்று சிங்கள மொழிச்சட்டத்தைக் கொண்டு வரும்போது பண்டாரநாயக்கா கூறினார் - Daily News, நவ.8 - 1955).

இந்தத் திடசித்தம்தான் கலாநிதி குணசிங்கத்தின் இந்தத்தேடல் வெற்றியின் இரகசியம்.

இந்நூலை பெற்றுக்கொள்ள: gunasingam@optusnet.com.au

இவ்வாக்கத்தை எழுதியவர்: திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் (சிட்னி)

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம், (யுனிக்கோடுக்கு எழுத்துரு மாற்ற உதவியது: சுரதா டொட் கொம்)

Technorati Tags:

6 comments:

said...

சில நாட்களாக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியாதிருந்தது. இப்போது சரியாகி விட்டதென நினைக்கின்றேன்.

உங்கள் sample பதிவிலும் சொல்லியிருந்தேன்.

நல்ல ஒரு விடயத்தை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்தமையை இட்டு என் நன்றிகள்.

-அன்புடன் இளந்திரையன்

said...

அண்மையில் நடந்த புத்தக வெளியீட்டுக்குச் சென்று புத்தகமும் வாங்கிவந்தேன். இன்னும் படிக்கத் தொடங்கவில்லை.
என்னைப்பொறுத்தவரை மிகச்சிறிய புத்தகமென்ற ஏமாற்ற உணர்வுதான் முதலில் ஏற்பட்டது. ஆங்கிலம் தமிழ் இரண்டையும் சேர்த்து வெறும் 350 பக்கங்களுள் அப்புத்தகம் முடிக்கப்பட்டிருப்பது என்வரையில் ஏமாற்றமே.

வாசித்தால்தான் முழுவிளக்கமடையலாம்.
பதிவுக்கு நன்றி.

said...

பின்னூட்டமிட்ட இளந்திரையன், வசந்தனுக்கு நன்றிகள்.

said...

வசந்தன்

இந்த நூல் ஒரு வரலாற்று நூல் அல்ல, ஈழத்தமிழர் வரலாற்றை எழுதவிரும்புபவர்க்கு ஒரு கையேடாக எங்கெங்கெல்லாம் இந்த ஆதாரவகையறாக்களைத்திரட்டலாம் என்ற நோக்கில் எழுதப்பட்டது. உதாரணத்திற்கு மட்டும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் இடப்பட்டுள்ளன.
நூலாசிரியடன் தனிப்பட்ட முறையில் பேசியவகையிலும் இந்த நூலை படித்த வகையிலும் தெரிந்த தகவல்கள் இவை. இந்த நூலாய்வு இன்பத்தமிழ் ஒலியில் "முற்றத்து மல்லிகை" நிகழ்ச்சியிலும் இடம்பெற்றது.

சிறீ அண்ணா
தங்கள் பதிவிற்கு நன்றிகள்.

said...

இந்த நூல் குறித்து இங்கும் (கனடாவில்) ஒரு வானொலியில் ஒரு நிகழ்ச்சி செய்திருந்தார்கள் என்று எனது அண்ணா ஒருவர் கூறியிருந்தார். மிகுந்த சிரமத்துக்கிடையில் பல ஆவணங்களை/தரவுகளைத் தேடியெடுத்திருக்கின்றார் என்பது பாராட்டக்கூடியது. இப்படியான நிறையப் புத்தகங்கள் தொடர்ந்து வரவேண்டும்.
...
இந்தப் பதிவுக்கு நன்றி.

said...

கானா பிரபா, உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

//மிகுந்த சிரமத்துக்கிடையில் பல ஆவணங்களை/தரவுகளைத் தேடியெடுத்திருக்கின்றார் என்பது பாராட்டக்கூடியது//
டிசே, உண்மை தான். திரு குணசிங்கம் அவர்கள் தமது தேடலை இன்னும் முடிக்கவில்லை. இரண்டாம் கட்டப் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு சுமார் மூன்று வருடங்கள் பிடிக்கும் என்றும் தமது பேட்டியில் குறிப்பிட்டதாக ஞாபகம் (பேட்டி கண்டவர் நமது கானா பிரபா 'இன்பத்தமிழ் ஒலி'க்காக). உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்.