March 12, 2006

யாழ் நூல் தந்த சுவாமி விபுலாநந்தர்

சுவாமி விபுலாநந்தர் பிறந்து சுமார் 114 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பணியும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இலங்கையில் தமிழ்த் திறனாய்வுத்துறை வளர்ச்சி பெறுவதற்கு முதற்படியை அமைத்துக் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே என்றால் அது மிகையாகாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும். சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார். இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கற்றார். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே. கொழும்பு அரசினர் தொழினுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார் மயில்வாகனனார். அவரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் (சென் பற்றிக்ஸ்) கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், யாழ்ப்பாணத்துக்கு 1917ஆம் ஆண்டில் சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் 'திறவுத் தூய்மை' எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 'யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்' என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை ஈழநாட்டிற்கு அளித்துள்ளது. மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய 'இராமகிருஷ்ண விஜயம்' என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், 'Vedanta Kesari' என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்ஷையின் பரீட்ஷார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் "சுவாமி விபுலாநந்தர்' என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள Almorah என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரத (Prabuddha Bharatha)' என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அங்கு தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது. 1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களை சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது. அவரைத் தொடர்ந்தே பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சதாசிவம் போன்ற அறிஞர்கள் தமிழ்த் துறையை விருத்தி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி அவர்களின் தமிழ் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய "யாழ்நூல்" ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களை தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார். முதல் நாள் விழாவில் திருக்கோயில் வரிசைகளுடன் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தானே ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், அவர் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நாண்மணிமாலை' வித்துவான் அவ்வை துரைசாமிப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது. இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், புரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் "யாழ்நூல்" அரங்கேற்றப்பட்டது. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில், யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த விரிவுரையாகவும், விளக்கமாகவும் அமைந்தது யாழ் நூல்! ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத்தமிழின் அருமையைத் தமிழர் உணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது இந்த நூல். யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் கலந்து கொள்வதற்கு புறப்படும் முன்னர் சுவாமி அவர்கள் உடல் நலம் குன்றி இருந்தார். பயணம் செய்யக் கூடாதென்ற வைத்தியர்களின் ஆலோசனையையும் கேளாது நீண்ட நெடும் நாட்களாக தாம் கண்ட இலட்சியக்கனவை நனவாக்க தமிழர்களின் பழம் பெருமையை எடுத்தியம்ப, மறைந்துபோன யாழிசையைப் பரப்ப பயணமானார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட்டதால், உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தளராத நம்பிக்கையே அவரை வழிநாட்த்தியது. அதனால் கடுமையான நோயின் பாதிப்புக்குள்ளானர். யாழ் நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல், சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாமி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மேல் சமாதி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் சுவாமி அவர்கள் யாத்த: "வெள்ளைநிற மல்லிகையோ? வேறெந்த மாமலரோ? வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப் பூவுமல்ல! வேறெந்த மலருமல்ல! உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!" என்ற உயிர்த்துடிப்புமிக்க கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

19 comments:

said...

விபுலானந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்துக்கு நன்றி.

said...

டிசே, தங்கள் வருகைக்கு நன்றிகள்.

said...

யாழ் நூலை யாத்த விபுலாநந்தர் பற்றித் திருவாசக இசை வெளியீட்டில் வைகோவும் விதந்து புகழ்ந்திருந்தார். தென் தமிழீழத்தின் விடிவெள்ளி இந்த உத்தமனார் தமிழ் உள்ளக்கமலங்களில் வீற்றிருப்பார். பதிவுக்கு நன்றிகள் அண்ணா.

said...

கானா பிரபா, பின்னூட்டத்துக்கு நன்றி.

ஆமாம், விபுலாநந்தர் தென்தமிழீழத்தின் விடிவெள்ளி. தெந்தமிழீழ மறுமலர்ச்சி இயக்கத்தின் பிதாமகர். அவரது பல கட்டுரைகளையும் கவிதைகளையும் (யாழ் நூல் உட்பட) ரசிப்பதற்கு ஆழ்ந்த தமிழ்ப் புலமை வேண்டும். அவரை இளங்கோ அடிகளின் மறு அவதாரம் என்போரும் உள்ளனர்.

said...

நல்லதொரு பயனான முயற்சி. நன்றி
தொடருங்கள்.

said...

இவரின் மொழி பெயர்ப்புக்களை விலாவாரியாச் சொல்லவில்லையே?
சேக்ஷ்பியரிலிருந்து இவர் மொழியெர்த்துள்ளாரல்லவா?

"அஞ்சினர்க்குச் சத மரணம்
அஞ்சாத நெஞ்சத்து
ஆடவர்க்கு ஒரு மரணம்"
இது விபுலானந்தரது வரிகள் தானே?

said...

எல்லாத்தையும் சொன்னியள்; இதைவிட்டுப்போட்டியளே? :-(

said...

சந்திரவதனா, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

வசந்தன்,
//இவரின் மொழி பெயர்ப்புக்களை விலாவாரியாச் சொல்லவில்லையே?//

ஷேக்ஸ்பியரின் நாடக மொழிபெயர்ப்புக்களைப்பற்றித் தொட்டுச் சென்றுள்ளேன். அதைப்பற்றி விலாவாரியாக இன்னுமொரு பதிவு வேண்டுமென்கிறீர்கள். பதிஞ்சாப் போச்சு. கட்டாயம் வந்து வாசிப்பீங்களோ? உங்களுக்காக ஒரு மொழிபெயர்ப்பு:

கீற்ஸ் என்பவரின் ஒரு சிந்தனையான "Beauty is Truth. Truth Beauty - That's all ye know on earth and all ye need to know" என்பதை தமிழில் அடிகளார் எவ்வாறு அழகாகத் தருகிறார் பாருங்கள்:

"அழகே உண்மை, உண்மை அழகென உலகினில் அறிந்தோர் அறிவுபிறவேண்டார்."

நீங்கள் தந்த ஷேக்ஸ்பியரின் வரிகள் எனக்குத் தெரியாது. தங்களிடம் இருந்தால் முழுமையாகத் தாருங்கள்.

ரமணீதரன், தங்கள் வருகைக்கும் அந்தச் சுட்டிக்கும் நன்றி. திருகோணமலையிலிருந்து அருமையான ஒரு வலையை அமைத்திருக்கிறார்கள்.

said...

தொடர்ந்து பயனுள்ள பதிவுகள் கொடுக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

said...

தனி மடல்!

அன்புள்ள கனகு சிறீதர்,
வணக்கம்,

"ஆஸ்திரேலியாவில் தமிழ் மற்றும் தமிழர் வளர்ச்சி" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதத் தொடங்கியுள்ளேன். ஆஸ்திரேலியால் தமிழ்(தமிழர்) வளர்ச்சி என்பது ஈழத்தமிழர்களை சார்ந்துள்ளதாகவே நான் அறிகிறேன். மேலும் அது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பெரிதாக காணக் கிடைக்கவில்லை.

மேலும் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள(சாதித்த) தமிழர்கள் பற்றிய தகவல்களும் எனக்குக் கிடைக்கவில்லை.

மெல்பர்ணில் இருந்து வசந்தன் பல தகவல்களைக் கொடுத்துதவினார்.
தங்களை நேரில் சந்திக்க ஆவல் இருந்தாலும், பணி மற்றும் நேரமின்மை கருதி மடலில் தொடர்பு கொள்கிறேன். தவறாக எண்ணவேண்டாம்.

இலக்கியம் தொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களை தாங்கள் உதவும் பட்சத்தில் எனக்கு கட்டுரை வரைவதற்கேற்ற புரிதல் சற்று மேம்படும் எனக் கருதுகிறேன்.

உதவ இயலுமா?

நன்றி,
அன்புடன்
சத்தியா
satya.ryan@gmail.com

said...

பரஞ்சோதி, தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சத்யா, உங்களுக்கு என்னாலானளவு உதவக் காத்திருக்கிறேன். தனிப்பட்ட மடலில் தொடர்பு கொள்கிறேன்.

said...

யோவ் பொட்டிக்கடை (நல்ல பெயர்தான்)!
உதெல்லாம் உப்பிடிப் பின்னூட்டம் போட்டோ கேக்கிறது. பேசாம அஞ்சல் முகவரியக் கேட்டிட்டு பிறகு அங்க எல்லாத்தையும் வச்சுக்கொள்ளலாமே?

சிறிதரன்,
நீர் எழுதும். நான் வந்து வாசிப்பன்.

said...

/அவரை இளங்கோ அடிகளின் மறு அவதாரம் என்போரும் உள்ளனர்./
உண்மை. என்னைப்பொறுத்த வரையில் அப்படித்தான். படிக்கும்காலத்திலிருந்தே இளங்கோவடிகள் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது அவரது தோற்றம்தான்.
நல்லதொரு முயற்சி. தொடரட்டும்
நன்றி!

said...

ஆம், அஞ்சினர்க்கு சதமரணம் என்ற தொடர் விபுலானந்தரின் பெயர்ப்பு என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.
திரு யோகி (ஆம். அதே யோகரத்தினம் யோகி தான். இப்போது தமிழீழ வரலாற்றுத்துறைப் பொறுப்பாளராயிருக்கிறார்) கவிதை நூல் வெளியீட்டு விழாவொன்றில் இதையும் இதன் மூலத்தையும் எடுத்துக்காட்டி விளக்கியது ஞாபகமிருக்கிறது. (யாப்பு வடிவத்துள் கவிதையை எழுதச் சொல்லி அடிக்கடி ஊக்கப்படுத்திப் பேசும்போதும் இதை எடுத்தாள்வார்)

said...

மலைநாடான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வசந்தன்,
யூலியஸ் சீசர் அரசவை செல்லப் புறப்படும் போது அவரின் மனைவி கல்பூர்ணிமா தான் கண்ட தீக்கனவைக் கூறி அவரை அன்று அரசவை செல்ல வேண்டாம் என்று தடுக்கிறாள். அவ்வேளயில் யூலியஸ் சீசர் எடுத்துக் கூறும் வீரவாசகங்கள் தாம் அவை. விபுலாநந்தரின் மொழிபெயர்ப்பு இதோ:

அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்
தாடவனுக் கொருமரண மவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்
துன்மதிமூ டரைக்கண்டாற் புன்னகைசெய் பவன்யான்.

இன்னலும்யா னும்பிறந்த தொருதினத்தி லறிவாய்
இளஞ்சிங்கக் குருளைகள்யாம் யான்மூத்தோ னெனது
பின்வருவ தின்னலெனப் பகைமன்ன ரறிவார்
பேதுறல்பெண் ணணங்கேயான் போய்வருதல் வேண்டும்

Anonymous said...

"A little bit of Physics + Some Tamil Panditness = Yarl Nool"

இப்படி யார் சொல்லியிருப்பார்கள்? 'மெத்தப் படித்த' எஸ்.பொ. அவர்கள் தான்.

said...

அனானி, அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே, மெத்தப் படித்தவரென்று. டானியல், டொமினிக் ஜீவா போன்றோருக்கு கதைகள் எழுதிக் கொடுத்ததும் தானே என்றும் சொல்லுவாராம்!!

said...

தகவலுக்கு மட்டும்:

யாழ் நூலின் மூன்றாம் பதிப்பை நான் 'மறுமொழி ஊடக வலயத்தின்' வெளியீடாக 2003 ம் ஆண்டு கனடாவில் வெளியிட்டுள்ளேன். விற்றது போக மீதிப் பிரதிகளை கனடா சுவாமி விபுலானந்தர் கழகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.

said...

சிவதாசன், அந்தத் தகவலுக்கு நன்றிகள்.