November 26, 2010

ஆறுமுகநாவலர் ஒரு நோக்கு


ஈழத்துத் தமிழினம் தனது பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பண்பாட்டை, பழக்கவழக்கத்தை, கலை, கலாசாரத்தை இழக்க வேண்டிய ஒரு பயங்கரமான சூழலின் போது அவதரித்தவர் தான் நல்லை நகர் தந்த ஆறுமுகநாவலர் பெருமான். ஈழத்தமிழர் தம் சமய வாழ்வில் புகுந்து விட்ட களைகளை நீக்க முயன்றும் புறச் சமய வெள்ளத்திலிருந்து அணை கட்டி காவல் செய்ய முயன்றும் பெரும் தொண்டாற்றியவர்; வெற்றியும் கொண்டவர்.

"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே?'
என்ற சி.வை.தாமோதரம்பிள்ளையின் அழியாக்கூற்றே இதற்கு நற்சான்றாகும்.

அன்னார் நல்லை நகரில் 18.12.1822 அன்று அவதரித்தார். நாவலருக்கு சிறு வயதிலேயே தமிழையும் சைவசமயத்தையும் வளர்த்து அபிவிருத்தி செய்யவேண்டுமென்றும் ஆசை உண்டாகி அது பேராசையாகி அதற்காக எந்த இடர்வரினும் எதிர்கொள்ளும் துணிவும் உண்டாயிற்று.

இக்காலகட்டத்தில் தான் கிறித்தவப் பாதிரியாரான பேர்சிவல் துரையின் நட்பு நாவலருக்குக் கிட்டியது. அந்நேரத்தில் பார்ப்பவர்களுக்கு நாவலரும் பேர்சிவல்துரையும் நேர் விரோத கொள்கையுடையவர்கள். ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் என்றே எண்ணத்தோன்றியது. ஆனால் உண்மை அதுவல்ல; அவர்கள் இருவரும் தத்தம் சமயத்திற்கு விசுவாசமாயிருந்தார்கள். இருவரம் உண்மைச் சமயவாதிகளாக இருந்தமையால் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவில்லை. மாறாக நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். இந்த நட்பு மன ஒருமைப்பாடு ஒரு சைவனுக்கும் ஒரு கிறித்தவனுக்கும் இன்னுமொரு கிறித்தவனுக்கும் இருந்ததில்லை.

நாவலருக்கு பார்சிவல் துரையின் நட்பு கிடைத்த விதம் சுவாரசியமானது. புதுமையானது. ஆங்கிலம் கற்கும் முகமாக நாவலரது 12 ஆவது வயதில் அவர் பார்சிவல் துரையிடம் அனுப்பப்பட்டார். இவ்வாறு ஆங்கிலக் கல்வி கற்கும் போது தமிழ்க் கல்வியை இன்னமும் அதிகமாகக் கற்க வேண்டும் என்ற பேராவலால் அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த சரவணமுத்து புலவரிடத்திலும் சேனாதிராய முதலியாரிடத்திலும் திருக்குறள், நன்னூற் காண்டிகையுரை, இரகுவம்சம், விருத்தியுரை, திருக்கோவையார், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற அரும்பெரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்று மேல்வகுப்புக்கு வந்தபோது ஆறுமுகப் பிள்ளையின் (இதுதான் நாவலருக்குப் பெற்றோர் சூட்டிய இயற்பெயர்) இரு மொழித் திறமை கண்டு வியந்த பார்சிவல் துரை அன்னாரை கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும் மேல் வகுப்புகளுக்கு தமிழ் கற்பிக்கவும் வேண்டிக் கொண்டார். மேலும் பைபிளைத் திருத்தி தமிழில் அச்சேற்றுவதற்கு உதவி புரியுமாறும் அன்புடன் கேட்டுக் கொண்டார்.

அந்த அன்புக் கட்டளையை சிரமேற் கொண்டு பைபிளை தமிழில் எழுதி முடித்தவுடன் அதனை அச்சிடும் பொருட்டு பார்சிவல் துரையுடன் சென்னை மாநகருக்கு வந்தார். அங்கிருந்த பாதிரிமார் நாவலர் தமிழில் தவறு உள்ளதென்று தடை செய்ய முயற்சித்தனர். ஆயினும் சென்னை நகரிலே மிகச் சிறந்த வித்துவானாக இருந்த திரு.மகாலிங்க ஐயர் தமிழ் பைபிளை முற்றாக வாசித்து அதில் பிழையேதும் இல்லையென்றும் அப்படியே அச்சிடலாமென்றும் கூறி நாவலரின் யாழ்ப்பாணத் தமிழைப் போற்றி சிலாகித்துப் பாராட்டினார்.

மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய போது அநேகர் சைவசமயத்திலிருந்து கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறுவதை அறிந்து மனம் வருந்தினார். இந்நிகழ்வு தமது சமயத்திலுள்ள உண்மையை அறியாமலே நிகழ்கின்றது என்பதை அறிந்தார். சைவசமயப்பிரசங்கங்களும் சைவ நூல் வெளியீடுகளுமே மக்களுக்கு உண்மையை உணர்த்தி மதமாற்றத்தை நிறுத்த முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு செயலில் இறங்கினார்.

யாழ்.வண்ணார்பண்ணையில் வள்ளல் வைத்திலிங்கச்செட்டியாரால் கட்டப்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் வசந்த மண்டபத்திலே தமது 25 ஆவது வயதிலே 31.12.1947 அன்று தனது முதலாவது சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இரவில் பிரசங்கம் நடைபெற்றது.

அவரைப்பின்பற்றி அவரது பள்ளி நண்பரான கார்திகேய ஐயரும் சைவப்பிரசங்கங்கள் நடாத்திவந்தார். இவ்விருவரும் வேதாகமங்கள், சிவபக்தி, யாக்கை நிலையாமை, மகளிரொழுக்கம், திருவிழாக்கள், சிவதீட்சை, தர்மம், கல்வி கற்பித்தல், பசுக்காத்தல், பிரபஞ்சமாயை, பேதமை, அறிஞரைத் தழுவி நடத்தல், தீட்சை, கொல்லாமை, கள்ளுண்ணல் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் பிரசங்கங்கள் செய்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள்.

இப்பிரசங்கங்கள் கைமேற்பலனை ஏற்படுத்தின. மதுபானம் அருந்திய பலர் அப்பழக்கத்தைக் கைவிட்டார்கள். மாமிச போசனம் செய்தோர் செய்யாது விட்டார்கள். உருத்திராட்சம் தரியாது ஆலய தரிசனம் செய்தோர் உருத்திராட்சம் தரித்து செவ்வனே தரிசனம் செய்யத் தலைப்பட்டார்கள். பலர் விரதங்கள் அனுட்டிக்க ஆரம்பித்தார்கள். ஆலயப் பக்கமே தலை வைத்துப்படுக்காதவர்கள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடி மனமுருகி ஆண்டவனை வேண்டினார்கள்.

இந்த வெற்றிகளால் களிப்புற்ற நாவலர், நல்ல சமய நூல்கள் குறைவாக இருப்பதையும் இருக்கின்ற நூல்களிலே எழுத்துப் பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இருப்பதனையும் கண்ணுற்று அச்சியந்திர சாலை ஒன்றை நிறுவுதலும் சைவ நூல்கள் வெளியிடுதலும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்களை மீள்பதிவு செய்தலும் சைவமும் தமிழும் தழைத்தோங்க நல்ல வழி என உணர்ந்து செயற்படத் தொடங்கினார்.

அதன் முதற்படியாக தாம் ஸ்தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலையை தமது நம்பிக்கை மிக்க மாணாக்கர் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு தமது பால்ய கால நண்பரான சதாசிவப்பிள்ளையை அழைத்துக் கொண்டு அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கும் முகமாக 1849 ஆம் ஆண்டு சென்னை நகரம் நோக்கிப் புறப்பட்டார்.

சென்னையில் சிலகாலம் தங்கியிருந்த நாவலர் பெருமான் சூடாமணி நிகண்டு உரையையும், சௌந்தர்ய லகரியையும், அச்சில் பதிப்பித்தார். யாழ்.மீண்ட அன்னார் "வித்தியா நுபாலன யந்திரசாலை' என்ற அச்சகத்தை நிறுவி முதல் முயற்சியாக நீதி சாரங்களையும் சைவசமய சாரங்களையும் திரட்டி வசன ரூபங்களாக எழுதி முதற் பாலபாடத்தின் இறுதியிலே ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற நீதி நூல்களையும் இரண்டாம் பால பாடத்தில் அவைகளுக்கு உரையையும் எழுதிச் சேர்த்து அச்சிட்டு வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்கள் அவரால் வெளியிடப்பட்டன. அவற்றுள் "கொலைமறுத்தல்', "திருமுருகாற்றுப்படைஉரை' என்பன குறிப்பிடத்தக்கவை.

நாவன்மை மிக்க இவருக்கு அன்னாரது 27 ஆவது வயதில் 1849 இல் "நாவலர்' பட்டம் கிடைத்தது. நாவலர் பெற்ற பெறுபேறுகள் வெற்றிகள் கண்டு திருப்தியடையவுமில்லை. இறுமாப்போ, பெருமிதமோ கொள்ளவுமில்லை. மாறாக நல்ல ஆசிரியர்களையும் சைவப் பிரசாரகர்களையும் உருவாக்க ஐந்தாண்டுத் திட்டமொன்றை நிறுவினார் திட்டம் வருமாறு: வருடந்தோறும் இருபது மாணவர்களுக்கு ஒழுக்கமும், சைவ அறிவும் தமிழ்ப்புலமையும் போதிக்கப்படும். ஐந்தாம் வருடத்தில் ஐந்து வருடப்பயிற்சி பெற்ற இருபது இளைஞர்கள் இருப்பார்கள். அவர்கள் பயிற்சி முடிந்து வெளியேற அடுத்தவருடம் புதிதாக இருபது இளைஞர் பயிற்சியில் சேருவார்கள்.

பயிற்சி முடிந்த இருபது இளைஞர்களில் ஒரு பகுதியினர் கற்று வல்ல ஆசிரியர்களாக இருப்பார்கள். இன்னுமொரு பகுதியினர் சைவப் பிரசாரகராகவிருப்பர். மிகுதியினர் முக்கிய ஆலயங்கள் தோறும் நியமனம் பெற்று கோயில் பூசை முதலிய அன்றாட கருமங்களை சாத்திர முறைப்படி நடாத்த வழிகாட்டிகளாகவும் உசாத்துணைவர்களாகவும் இருப்பர். மேலும் பெற்றோருடன் அள வளாவி சமய தீட்சை பெற்று சமயாசாரம் உடையவர்களாகத் திகழ வழிவகுப்பர்.

ஆனால் என்னை துரதிர்ஷ்டம்! இத்திட்டம் நிறைவேற முன்னரே அதாவது 5.12.1879 அன்று தனது 57 ஆவது வயதில் பெருமானை எல்லாம்வல்ல இறைவன் தம்முடன் அழைத்துக் கொண்டான். வாழும் போதே அன்னாரை சைவப்பெருமக்கள்"ஐந்தாம் குரவர்' என மனதாரப் பாராட்டி பட்டம் வழங்க எத்தனித்தனர். நாவலர் பெருமான் அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் அந்த முயற்சிகளையும் வன்மையாகக் கண்டித்தார். பேச்சாற்றலுக்கு புகழ் பெற்றதால் "நாவலர்' என்றும் உரை நடையினைக் கையாண்ட திறமையினால் "வசன நடை கைவந்த வல்லாளர்' என்றும் போற்றிப்புகழப்பட்ட நாவலர் பெருமானுக்கு 1971 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது.

நன்றி: தினக்குரல், நவம்பர் 26, 2010

ஆறுமுக நாவலர் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்குங்கள்.

1 comments:

Anonymous said...

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow



(First 2 mins audio may not be clear... sorry for that)

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo




Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

My blog:
http://sagakalvi.blogspot.com/