பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்கள் உரும்பிராய் கிராமத்தில் சோமசுந்தரம், நல்லம்மா தம்பதியினருக்கு 02-02-1947 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 29-05-2009 ஆம் திகதியன்று தனது வாழ்க்கைப் பயணத்தை நிறுத்திக்கொண்டார்.
அழகான உருவம், தீட்சண்யமான பார்வை, பரந்த ஆழமான உள்நோக்கு இவற்றால் தோன்றும் கருத்துகளும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்தும் மொழியாற்றல், உண்மை பேசும் பண்பு, நடுநிலைநின்று பணியாற்றுதல், நிறுவன ஒழுங்குக்குக் கட்டுப்படுத்தல், எளிமை, அமைதி, பிரச்சினைகளைச் சரியாக இனங்கண்டு அவற்றைப் பல்வேறு கோணங்களிலும் உணர்ந்து பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி விடுவிக்கும் ஆற்றல், காலம், இடம் அறிந்து கருத்தாடும் திறன், இடையறாத வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றின் உறைவிடம் பேராசிரியர் கிருஷ்ணராஜா.
கடந்த மூன்று தசாப்தங்களாக மெய்யியல் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் வரிசையில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாவும் ஒருவர். இலங்கையர்களில் முதல் தரச் சிந்தனையாளர் ஆவார். இவருடைய கருத்துகளும் எழுத்துகளும் சொல்லாடல்களும் இக்காலப்பகுதியின் சிந்தனைப் போக்கையும் தரிசனங்களையும் மாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளன. இவரது வாழ்வியலும் சிந்தனைகளும் எம்முன் திறந்த புத்தகங்களாக உள்ளது.
அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.
1. அழகியல் (1996, மறுபதிப்பு 2008),
2. விமர்சன மெய்யியல், (1989)
3. விமர்சன முறையியல், (1992)
4. 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கொள்கை, (1994)
4. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல், (1995)
5. சைவசித்தாந்தம் மறுபார்வை, (1998)
6. பின் நவீனத்துவம் ஓர் அறிமுகம், (1999)
7. இந்துக் கலைக் கொள்கை ,(2004)
8. சங்ககாலச் சமூகமும் சமயமெய்யியல் சிந்தனைகளும் (2007)
என்னும் நூல்களை வெளியிட்டிருந்தார்.
அவர் ஒரு சிறந்த மெய்யியலாளனாக இருந்ததன் காரணமாகவே இவ்வாறு பல்வேறு துறைகளிலும் தடம்பதிக்கக்கூடிய ஆதரவைப் பெற்றிருந்தார் எனலாம். இவை ஒவ்வொன்றும் அவரின் சிந்தனைப் பாய்ச்சலின் பல்வேறு தளங்களையும் அடையாளப்படுத்தி நிற்பவை.
அவரால் எழுதப்பட்ட அவரின் காலத்தில் நூலுருப் பெறாத மூன்று நூல்கள் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களால் நூலுருப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவை:
1. மெய்யியலாளன் நோக்கில் பண்பாடு
2. ஐரோப்பிய மெய்யியல் வரலாறு
3. மெய்யியல் பிரச்சினைகள் ஓர் அறிமுகம்
என்னும் மூன்று நூல்களுமாகும்.
இதைவிட தர்க்க பானஹ (1988), தர்க்க கௌமுதி (1990) இந்திய மெய்யியல் (கிரியண்ணாவினால் எழுதப்பெற்றது) சிவஞானபோத வசனாலங்காரதீபம் (2003) என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவற்றை விட ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்து சமய கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்துக் கலைக் களஞ்சியத்தின் உருவாக்கத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியவர்.
பேராசிரியர் எந்த ஒரு விடயத்தையும் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கிலும் இயங்கியல் நோக்கிலும் பார்க்கும் முறையியல் நியமத்தைப் பின்பற்றுபவர், எனவே அவருடைய மெய்யியல், சமூகவியல், பண்பாடு, கலை இலக்கியத் தேடல்கள் ஆழமானவை. மறுபுறத்தில் இவரின் புலமைப் பின்புலத்தின் சிறப்பு சமயம், ஒழுக்கம் சைவசித்தாந்தம் ஆகியவற்றில் அவர் காட்டிய ஈடுபாடாகும். சமயக் கிரியைகளையும் சடங்குகளையும் ஆழமாக நோக்கி அவை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கோலங்களையும் சமூகவியல் உண்மைகளையும் இயற்கை கடந்த உண்மைகளையும் அறிந்துகொண்டார். மெய்கண்டாரின் சிவஞான போதத்தை ஐயமறக்கற்றவர். இதனால் அவரால் சைவசித்தாந்த உண்மைகளைப் பல்வேறு கோணங்களிலும் கூர்மையாக நோக்க முடிந்தது.
கிருஷ்ணராஜாவைச் சந்திப்பதும் அவருடன் உரையாடுவதும் தனி அனுபவமாகும். அவர் ஒரு நடமாடும் நூல்நிலையமாக விளங்குவதால் பல அடிப்படைக் கோட்பாடுகளை அறிவதுடன் அவை தொடர்பான வினாக்களை எழுப்பி மேலும் அவை பற்றிய புதிய தேடல்களைச் செய்யவும் எமது சிந்தனையை விரிவுபடுத்தவும் அவ்வுரையாடல் உதவும்.
பேராசிரியரிடம் சோக்கிரட்டீசிடம் காணப்பட்ட உண்மையை நேசிக்கும் பண்பும் உரையாடல் முறையும் சோபிஸ்ட்டுகளிடம் காணப்பட்ட மனித மைய நோக்கும் அரிஸ்ரோட்டலிடம் காணப்பட்ட விஞ்ஞான அணுகுமுறையும் மத்திய கால ஐரோப்பிய மெய்யியலாளர்களிடம் காணப்பட்ட சமய பௌதீகவாதித பார்வைகளும் டேக்காட்டிலும் காணப்பட்ட அறிவை ஐயுற்று உண்மையைத் தேடும் உளப்பாங்கும் ஹெகலிடம் காணப்பட்ட இயங்கியல் அணுகுமுறையும் கால்மாக்ஸிடம் காணப்பட்ட பொருள் முதல் வாதம், இயங்கியல் பொருள் முதல் வாதம் ஆகியவற்றைப் பயன்படுத்திய மனிதவாதச் சிந்தனைகளும் பேர்ட்டன் ரசலின் தர்க்க அணுவாத நோக்கும் விக்கன்ஸ்ரையின், கில்பேர்ட்றைன் போன்றவர்களிடம் காணப்பட்ட மொழிப்பகுப்பாய்வு ஆற்றலும் கால்பொப்பர், சிக்மன்ட் புரொயிட் கான்யுங், லக்கான், தேமஸ்கூன், டெறிடா, பூக்கோளியோத்தர் போன்றோரிடம் காணப்பட்ட பழைய சிந்தனைகளைப் புதிய கோணங்களில் ஆய்வுக்குட்படுத்தும் நுட்பங்களும் இந்தியச் சிந்தனைச் சிற்பிகளிடம் காணப்பட்ட பன்முக இறையியல் நோக்குகளும் உட்பொதிந்து காணப்பட்டன. இவற்றைப் பேராசிரியரின் பேச்சுகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் கண்டு கொள்ளலாம்.
பேராசிரியர் கிருஷ்ணராஜா சுயநலத்திற்குத் தன்னை அடிமையாக்காது பொதுநலம், சமூகநலம் குறித்து தனது கொள்கைகளையும் சிந்தனைகளையும் விரிவடையச் செய்தமையினால் பதவி, பட்டம் என்ற வட்டத்துக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாது யாழ்.
சமூகமும் அதன் மெய்யியல் புலமும் அதன் விரிவாக்கமும் என்ற எண்ணத்துடன் தான் இறக்கும் வரை தொழிற்பட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் இருப்பிற்கும் அதன் விரிவாக்கத்திற்கும் பேராசிரியரின் பங்களிப்பு மகத்தானது. 02.02.2010 ஆகிய இன்றைய தினம் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாவின் பிறந்த தினமாதலால் அவரின் நினைவுகளை மீட்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றது. பேராசிரியர் எழுத்துகளில் சிந்தனைகளின் முக்கியத்துவம் அவரின் நினைவுகளை அகலப்படுத்தும்.
நன்றி: தினக்குரல்
பி.கு: மறைந்த பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா அவர்கள் சோவியத் ஒன்றியத்தில், மொஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் (Moscow State University) தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
February 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment