July 09, 2007

நவாலி நரபலி 1995

அதிகாலை விழிதிறந்த போது
எமன் ஊருக்குள் புகுந்தான்.
அசுரப்பறைவைகள்
இரை தேடி வானத்தில் அலைந்தன.
பீரங்கி பூட்டிய இயந்திர யானைகள்
குருதி வடியும் பற்களுடன் நிலமுழுது வந்தன.


கையில் எடுத்தவை மட்டுமே எடுத்தவையாக
ஊர்துறந்து ஓடியது ஒரு கூட்டம்.
பின்னாற் துரத்தி வந்தன எறிகணைகள்.
வாயுலர்ந்து போனது
நீருக்குத் தவித்தன நாக்குகள்.


ஆயினும் வேகத்தைக் குறைக்கவில்லை கால்கள்.
கூடுகலைந்த குருவிகள் " நவாலி" வந்தடைந்தன.
வரவேற்றது "சென் பீற்றர்ஸ் தேவாலயம்".
இனிக் கொஞ்சம் ஆறலாமென
சுவாசம் சீரானது.
"வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
நானுங்களுக்கு ஆறுதல் தருவேன்" என்றது அசரீரி.


வாருங்கள் என்று அகலத் திறந்து கிடந்தன
தெய்வத் திருச்சபையின் கதவுகள்.
அச்சமில்லை அமருங்களென்று
கட்டளையிட்டது கூரைச்சிலுவை.
"பேதுருவானவரே!
நாம் செய்த தவறென்ன?
ஏனெங்கள் கூடு கலைந்து போனது?
என்றபடி எல்லோரும் ஆறியிருந்த போதுதான்
அது நடந்தது.


இரைச்சலிட்டபடி வந்த கொலைப்பறவை
ஆறுகுண்டுகளைப் பீச்சிவிட்டுப் போக
"ஐயோ!" புழுதி மேகத்துள்ளே
உலகத்தை உலுக்கியது கதறல் உணர்வு
திரும்பிய போது உலகமே இருண்டு கிடந்தது.
குப்பென்றடித்தது பிணவாடை.
நொடிக்குள் நூறு உடல்கள் குதறப்பட்டு
சிதறிக்கிடந்தன அவயவங்கள்.


அந்தச் சதைக் குவியலுக்குள்ளேதான்
ஒரு தாமரைப் பூவும் கிடந்தது.
புழுதி பூசப்பட்டு குருதி வழிந்தபடி
அழகிய கவிதையொன்று கிடந்தது.
பஞ்சுப் பொதி போன்ற பிஞ்சொன்று
பிளந்து கிடந்தது.


கருப்பை வாசல் கடந்து வந்து
ஆறுமாதங்கள் கூட ஆகாத "கற்பகப்பூ"
கருகிக் கிடந்தது.
உலகமெங்கும் அரசோச்சும்
மனித உரிமைகளின் மனச் சாட்சிகளே!
என்ன செய்யும் உத்தேசம்?
ஏவிவிட்ட பாவி இன்னும் இருக்கின்றாள்.
"ரீவி" யில் முகம் காட்டுகின்றாள்.
குளிர்ந்த நிலவின் பெயர் அவளுக்கு
அவளும் கருப்பை சுமந்தவள்.
அடையாளம் தெரிகிறதா?
அவளுக்கு என்ன தீர்ப்பு எழுதுவீர்?


புதுவை இரத்தினதுரை

1995 ஆண்டு ஜூலை 9 இல் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 141 பேர் கொல்லப்பட்டனர். பார்க்க: விக்கிபீடியா கட்டுரை

5 comments:

said...

கோரமான நாளை நினைப்பூட்டியதற்கு நன்றி, சயந்தன் தன்னுடைய நேரடி அனுபவத்தையும் கீழ்க்கண்ட இணைப்பில் எழுதியிருந்தார்.

ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்
http://sayanthan.blogspot.com/2007_03_01_archive.html

என் சொந்த மண் விட்டு விலகிய சில மாதங்களில் நடந்த இந்தக் கோர நிகழ்வில் நண்பனின் சகோதரியும் இறந்த சேதி போன வருசம் ஊருக்கு போன போது தான் தெரிந்தது.

Anonymous said...

நர பலிகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இன்று தான் விடிவு காலமோ!?.

said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகாகவி பாரதியின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
...
பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

said...

தங்கள் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட பிரபா, வெற்றி மற்றும் அநாமதேயர் அனைவருக்கும் நன்றிகள்.

said...

வேதனையான நிகழ்வு. இவைகள் எல்லாம் என்று முடியுமோ! தமிழர் வாழ்வு என்று அமைதி பெறுமோ!