July 09, 2006

பாரதியாரின் யாழ்ப்பாணத்துச் சாமி

கானா பிரபாவின் யாழ்ப்பாணத்துச் சித்தர் பற்றிய நட்சத்திரப் பதிவில்,

//மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது//
என்றவாறு எழுதியிருக்கிறார்.

பாரதியார் குறிப்பிடும் அந்த யாழ்ப்பாணத்துச் சுவாமி யார் என்பதில் பலர் ஐயம் எழுப்பியிருக்கின்றனர். அந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளைப் பற்றி அறிய முன்னர், பாரதியார் அவரைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என முதலில் பார்ப்போம்.

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயும்
கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்,
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல்
மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன், யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி.

இவ்வாறு தான்கண்ட பழகிய அந்த யாழ்ப்பாணச் சாமியைப்பற்றிக் கூறுகிறார். யார் இந்த யாழ்ப்பாணத்தான்?

காலத்தால் அழியாத மனக்கண் நாவலை எழுதிய அ.ந. கந்தசாமி அவர்கள் மகாகவி பாரதியார் "யாழ்ப்பாணத்துச் சாமி" எனக்குறிப்பிடுவது யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு வியாபாரிமூலையைச் சேர்ந்த மோனம் அருளம்பலம் என ஆய்ந்தறிந்தார் (1964).

இவரைப்பற்றிய மேலும் தகவல்களை பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் தனது இந்துக் கலைக்களஞ்சியத்தில் தருகிறார்.

மோனம் அருளம்பலம் வியாபாரிமூலை வேலுப்பிள்ளையின் புதல்வர். மேலைப்புலோலி சைவவித்தியாசாலையிலே கல்வி கற்றிருக்கிறார். இலங்கையின் பல இடங்களில், குறிப்பாக கம்பளை, மட்டக்களப்பு, வியாபாரிமூலை என்று பல இடங்களில் கடை வேலையாளராக வேலை பார்த்துத் தோல்வியுற்றவராக, வாழ்க்கையில் விரக்தியடைந்து, ஊரூராகத் திரிந்து, சொந்தவூர் மீண்டார். அங்கும் நிலைக்காது நாகைப்பட்டினம் சென்றார்.

நாகைப்பட்டினத்தில் நீலலோசனி சந்நிதானத்தில் நிஷ்டை செய்தார். அங்கிருந்து புதுச்சேரி சென்றபோது குவளைக்கண்ணன் மூலம் பாரதியாருக்கு அறிமுகமானார். இதனைப் பாரதியார்:

யாழ்ப்பாணத் தையனை யென் னிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான், பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்;

என்று கூறுகிறார்.

1929இலே யாழ்ப்பாணம் திரும்பியவர் 1930இன் பிற்பகுதியிலே மீண்டும் இந்தியா சென்றார். 1942 இலே யாழ்ப்பாணம் திரும்பியவர் அந்த ஆண்டிலேயே காலமானார். வியாபாரிமூலை வே. சு. சிவப்பிரகாசம்பிள்ளை அவர்களால் சுவாமிகளுக்கு நாகையில் மடம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

அருளம்பலம் சுவாமிகள் ஒரு சிற்றிலக்கியப் புலவர் கூட. நாகை நீலலோசனி அம்மன் மீது தோத்திரம், ஊஞ்சல், தாலாட்டு ஆகியன பாடியுள்ளார். இதனால் அவர் நாகைப்பட்டினம் மௌனசுவாமி எனவும் அழைக்கப்பட்டார். இவற்றைவிட மேலும் சில ஆக்கங்களையும் ஆக்கியுள்ளார்.

அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஈழத்துச் சோமு (நா. சோமகாந்தன்) அவர்கள் தான் பிறந்து வாழ்ந்த வியாபாரிமூலையில் மோனசாமிக்கு விழா எடுத்து நினைவுச் சின்னமும் நிறுவ அரும்பாடுபட்டார் எனவும் சொல்லப்படுகிறது.

15 comments:

said...

கனகஸ் அய்யா,
மிகவும் அருமையான, பயனுள்ள தகவல்கள். இச் சங்கதிகளை நான் இதுவரை அறிந்திலேன். மிக்க நன்றிகள். ஈழத்தின் பழைய வரலாறுகளை தயவு செய்து எழுதுங்கள். என் போன்ற அறியாத பலருக்கும், வருங்கால இளம் தலைமுறைக்கும் மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்.

said...

கனக்ஸ்!

இதுவரையில் நான் அறிந்திராத ஒரு ஈழத்துச் சித்தர் பற்றி அறியத்தந்துள்ளீர்கள். மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி!

said...

வணக்கம் சிறீ அண்ணா
தாங்கள் வாக்களித்தவாறு இவ் அரிய தகவல்களைக் குறுகியகாலத்தில் தந்து எம் போன்றோருக்கு அறியாத பல உண்மைகளைத் தந்தமைக்கு என் நன்றிகள்.

Anonymous said...

பயனுள்ள தகவல்கள் ;மிக்க நன்றி!
யோகன் பாரிஸ்

said...

இவருடைய சமாதி... இன்றும் அல்வாய் வியாபாரி மூலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.

said...

வெற்றி, வரவுக்கு நன்றி, என்னால் முடிந்தளவு பழைய வரலாறுகளைத் தர முயற்சிக்கிறேன். ஊக்கத்துக்கு நன்றி.

அய்யா எல்லாம் தேவையா ஐயா:)))

said...

மலைநாடான், இன்னும் பல ஈழத்துச் சித்தர்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவர்கள். முடிந்தவரை தர முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி!

said...

பிரபா, உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சித்தர்கள் பற்றி எழுதத் தூண்டியமைக்கு.

உங்கள் பதிவுக்கு இணைப்புக் கொடுத்துத்தான் தொடங்கினேன். ஆனால் உங்கள் பதிவில் இணைப்பைக் காணோமே.

said...

பாரிஸ் யோகன், வருகைக்கு நன்றிகள்.

சின்னக்குட்டியர், அந்த மேலதிக தகவலுக்கு நன்றி. உங்கள் பதிவொன்றில் பின்னூட்டமிட முயன்றேன். ஏனோ முடியவில்லை.

said...

என் பதிவில் உங்கள் இணைப்பைக் காணவில்லையே அண்ணா

said...

மிகவும் அருமை!!வாழ்த்துக்கள்!!

said...

மிகவும் அருமை!!வாழ்த்துக்கள்!!

said...

வருகைக்கு நன்றி நடேசன்.

said...

வியாபாரிமூலையான் என்ற நிலையில் உங்கள் கட்டுரை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உங்கள் கட்டுரையின் தகவல்கள் மிகவும் சரியானவை.
பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமி என்பது வியாபாரிமூலை அருளம்பல சுவாமியே என அ.ந.கந்தசாமி நிறுவியபோது அதனையொட்டி ஒரு பெருவிழா நான் சிறுவனாக இருந்தபோது நடைபெற்றது. அதனை ஒழுங்கு செய்தது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். அதன் முக்கியஸ்தர்களில் ஒருவரே ஈழத்து சோமு எனப்படும் நண்பர் நா.சோமகாந்தன்.

said...

டொக்டர் முருகானந்தன் ஐயா, தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது நன்றிகள்.