வி. கனகசபைப்
பிள்ளை
(1955 - 1906)
(அ. மு.
பரமசிவானந்தம்)
தோன்றிய
நாள் தொட்டுத் தெய்வத் தமிழ் மொழியைப் பல்லாற்றானும் ஓம்பி வளர்க்கும் பெரியவர்கள்
அவ்வப்போது தோன்றி, வாழ்ந்து,
தமிழின் வளம் பெருக்கி அதன்
சீரிளமைத் திறங் குன்றா வகையில் தொண்டு செய்து வந்துள்ளனர். எத்தனையோ அறிஞர்தம்
பெயர்கள் நம்மிடை தற்போது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமின்றித் தமிழ் வழங்கும் -
இலங்கை, மலேயா போன்ற
பிற நாடுகளிலும் அன்றும் இன்றும் தமிழ்ப் பயிர் ஓம்பும் புலவர்களும் புரவலர்களும்
வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுள் சிறப்பாக நம் பாராட்டுதலுக் குரியவர்கள்
யாழ்ப்பாணத் தமிழ் மக்களாவர்.
தமிழன்
தன்னைப் பற்றியே பேசிப் பெருமை கொள்ள நினையாதவன். தன்னைத்தான் தாழ்த்திக் கொள்ளும்
பண்பாட்டில் தலை சிறந்தவன். எனவே அவனது பெருமை வாய்ந்த முற்கால வரலாறுகளை யெல்லாம்
அவன் எழுதிவைக்க விரும்பவில்லை. அந்தக் காரணத்தால் ஒருவேளை தமிழனது சென்ற காலச்
சிறப்பு மங்குமோ என்று அஞ்சக்கூடிய நிலை ஏற்பட்டது. பிற நாடுகளெல்லாம் தம் பண்டைப்
பெருமையைக் கூட்டியும் சேர்த்தும் ஏற்றமுற்படும் அதே வேளையில், தமிழன் தனக்கு இயற்கையாக உள்ள
பெருமையை எண்ண மறந்தான். அந்த மறப்பைப்பற்றி உன் சென்ற காலச் சிறப்பு இது - என்று
எடுத்துக்காட்ட முன்வந்த பெருமை இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாழ்ப்பாணப் புலவர்
கனகசபைப்பிள்ளை அவர்களுக்கே உண்டு.
கனகசபைப்பிள்ளை
அவர்கள் தமிழாசிரியர் அல்லர். தமிழ்த்துறையில் பணியாற்றியவருமல்லர். அவர் பணி
அஞ்சலகத்தில் நடைபெற்றது. எனினும் தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற தூய
எண்ணமே அவரை – “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்” - என்ற வரலாற்று நூலை
எழுத வைத்தது. ஆம், அவர் மறைந்து
இன்றைக்கு 45 ஆண்டுகள்
ஆகின்றன. அவர் எழுதிய அந்தப் பெருநூலே அவர்தம் பெருமையை வாழவைக்கின்றது. அவருடைய
வாழ்க்கை வரலாற்றைக்கண்டு பின்நூல் வழிச்சென்று அவர் தொண்டின் சிறப்பை அறியலாம்.
ஏறக்குறைய
இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் கனகசபைப் பிள்ளையின் தந்தையார் விசுவநாதப்பிள்ளை
அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மல்லாகம் என்னும் ஊரிலிருந்து சென்னைக்கு அழைத்து
வரப்பட்டார். ஆங்கிலத் தமிழ்ப் பேரகராதி தொகுத்த மேலைநாட்டுச் செல்வர் வின்ஸ்லோ
பாதிரியார் அவர்கள் விசுவநாதரை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததாகக்
கூறுகின்றனர். பெர்சிவல் பாதிரியாருடன் வந்ததாகவும் கூறுவர்.
விசுவநாதர்
ஆங்கிலத் தமிழ் அறிவு பெற்றவர். எனவே அவருக்கு சென்னைக் கல்வித்துறைத் தலைவர்
அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி கிடைத்தது. வின்ஸ்லோ அவர்தம் ஆங்கிலத் தமிழ்ப்
பேரகராதி வெளிவருவதற்கு அவர் பெரிதும் உதவினார். அத்துடன் விசுவநாதர் தாமே
பள்ளிப்பிள்ளைகளுக்கென சில தமிழ் நூல்களை எழுதிப் புகழ் பெற்றார். சிறந்த தமிழ்ப்
பற்றும் மொழித் தொண்டும் புரிந்த இவ் விசுவநாதரின் அருமை மைந்தரே கனகசபைப் பிள்ளை
அவர்கள்.
25-5-1855-ல்
சென்னை கோமளீசுவரன் பேட்டையில் கனகசபைப் பிள்ளை அவர்கள் பிறந்தார். இளமையிலேயே
பிள்ளையவர்கள் மதிநலம் வாய்ந்தவராக இருந்தனர். இளைஞராய் இருக்கும்போதே இவர் பட்டம்
பெற்றமையின் இவரைப் “பட்டதாரிப் பையன்” என அழைத்தனர். இவருடன் ஆனரபிள் ராமநாதன்,
சர் பொன்னம்பலம் முதலியார் சென்னை
அரசாங்கக் கல்லூரியில் கல்வி பயின்றதாகக் கூறுவர். ஆங்கிலக் கல்லூரியில் பயிலும்
நாளிலேயே பிள்ளை அவர்களுக்குத் தமிழ் மொழியில் தளராக் காதல் உண்டாயிற்று. அன்னைத்
தமிழை தந்தையார் மூலம் நன்கு பயின்றார்.
பி.ஏ.
பட்டம் பெற்றபின் வழக்கறிஞர் பயிற்சிப் படிப்பைத் தொடர்ந்து படித்து முடித்தார்.
அவ்வேளையில் அவருக்கு மணம் ஏற்பாடாயிற்று. அவர் தம் அம்மானாகிய டாக்டர் பொன்னையா
பிள்ளை தம் மகள் செல்லம்மாளை அவருக்குக் கொடுக்க இசைந்தார். அவர் மதுரையில்
பணியாற்றி வந்தார். 1876ல்
பிள்ளை அவர்கள் மணவாழ்வில் புகுந்தார். மணவாழ்வை மேற்கொண்ட பிள்ளையவர்கள் தம்
மாமனார் வீடாகிய மதுரைக்கே சென்றார். அங்கே சிலகாலம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தே
வழக்கறிஞர் பணியில் தொண்டாற்றினார். சிறிது காலம்தான் அங்கே
பணியாற்றியிருந்திருப்பார் போலும். விரைவில் அவர் சென்னையை அடைந்து அஞ்சல் அலுவலகத்தே
தம் பணியினை மேற்கொண்டார். சென்னை மாநில அஞ்சலகத் தலைவர் அலுவலகத்தே (Post
Master General's Office, Madras) அஞ்சல்
நிலைய மேற்பார்வையாளராக அவர் பணி செய்யத் தொடங்கினார். அவர் தம் ஊக்கமும்
உழைப்பும் அவரை மேன்மேல் உயர்த்தி உயர்நிலை மேற்பார்வையாளர் - Supdt. of
Post Offices - பதவிக்கு உரியவராக்கின.
அவர்தம் பணிகள் அவரது தமிழ்த் துறைத் தொண்டுக்குத் துணை செய்தன. தமிழ் நாட்டு ஊர்
தோறும் சென்று பலப்பல அலுவலகங்களைப் பார்வையிடும் பொறுப்பு பிள்ளை அவர்களுக்கு
இருந்தது. அலுவலகங்களைப் பார்வையிட்டதோடு அமையாது, அவ்வவ்வூர்களில் என்னென்ன நூல்கள் ஏட்டுப்
பிரதிகளில் உள்ளன என்று ஆராய்வார் பிள்ளை அவர்கள். டாக்டர் உ.வே. சாமிநாத ஜயர்
அவர்கள் ஏட்டுப் பிரதிகளை அச்சேற்றியகாலம் அது. பிள்ளை அவர்கள் சேகரித்த
பலபிரதிகளை அவருக்குக் கொடுத்து உதவினர். இன்னும் பிள்ளை அவர்கள்
செல்லுமிடமெல்லாம் உள்ள கல்வெட்டுகளையும் பிறவற்றையும் ஆராயும் தொண்டையும்
மேற்கொண்டிருந்தனர். அவர் மேலும் சிலகாலம் வாழ்ந்து, அலுவலகப் பணியிலும் ஓய்வு பெற்று இருந்திருப்பாரானால்,
பல அரிய ஆராய்ச்சி நூல்கள் மூலம்
தமிழ் நாட்டு ஒளியை மங்கா வகையில் தூண்டி விளக்கமுறச் செய்திருப்பார்.
தன்
அலுவலகப் பணியில் சிறிதும் வழுவினாரல்லர் பிள்ளை அவர்கள். அவர்தம் ஆற்றலும்
அமைவும் கருதி அத்துறைத் தலைவர்கள் அவர்தம் தொண்டைப் போற்றினர். தம் இறுதிநாள்
வரையில் பிள்ளை அவர்கள் - அப்பணியிலேயே கருத்திருத்தி வந்தனர். கடைசியாக அவர்கள்
காஞ்சிபுர அஞ்சல் நிலையத்தை மேற்பார்க்கச் சென்றபோது அங்கேயே 21-2-1906 நாளாகிய சிவராத்திரி நாளிலே
மறைந்தார். அவர் தம் துய சிவ நெறியும், கடமை உணர்ச்சியும், அமைதி
உள்ளமும் அவரைக் கற்றார் வாழ் காஞ்சியிலே சிவராத்திரி நாளிலே ஏகம்பன் இணையடிக்கு
உரிமையாக்கின என்றார்கள் அறிஞர்கள்.
கனகசபைப்
பிள்ளை அவர்கள் அறிவைப் போற்றி வளர்த்ததோடமையாது - உடம்பை வளர்த்தேன் உயிர்
வளர்த்தேனே - என்ற மொழிக் கிணங்க நல்ல முறையில் உடம்பைப் பேணி வளர்த்தார்கள்.
இளமையிலேயே நல்ல தேகப்பயிற்சி செய்து திண்ணிய உடலைப் பெற்றவராகி விளங்கினார்கள்.
சில ஆண்டுகள் இவர் வலங்கிமான் சோதிடர் உபதேசத்தால் யோகப் பயிற்சி செய்தார் என்றும்
கூறுவர். இவரது உடற்பொலிவைப் - பரந்த நெற்றி, அகன்ற உருண்டை முகம், குவிந்த கண், பெரிய தலைப்பாகை, கருத்தமீசை, எடுத்த தோற்றம் ஆகிய இவை, பார்த்தவுடனேயே இவர் ஒரு நல்ல தமிழர் என்பதை
எடுத்துக்காட்டுகின்றன - என்று தமிழர் போற்றத் தவறவில்லை. இத்தகைய திண்ணிய உடலும்
நுண்ணிய அறிவும் பெற்ற இவரை, இவரது
தந்தையாரோடு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பணி புரிந்த சி. வை. தாமோதரம்
பிள்ளை அவர்கள் போற்றும் முறை நோக்கத்தக்கது.
“யாழ்ப்பாணத்து
மல்லாகம் விசுவநாதப் பிள்ளை அவர்கள் புத்திரரும் தமிழ்க்கலை விநோதம் தமக்குப்
பொழுது போக்காக உடையவருமான ஸ்ரீ கனகசபைப்பிள்ளை” - என்று தாமோதரம் பிள்ளை அவர்கள்
இவரைப் போற்றித் தம் கலித்தொகை முகவுரையில் 1897-ம் ஆண்டு கூறியிருப்பது அறிந்து இன்புறத் தக்க
தொன்றாகும்.
மேலும்
இவரது – “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்குமுன் தமிழர்” - என்ற நூலைப் பயின்றவராகிய
டாக்டர் வி. ஏ. ஸ்மித் என்னும் வரலாற்று ஆங்கிலப் பேராசிரியர் இந்நூலைப் பயின்ற
காரணத்தால்தான் போலும் – “இந்திய சரித்திரம் தென்னிந்தியாவிலிருந்து தொடங்கி
எழுதப் பெறாத வரையில், அது
முற்றுப் பெற்றதாகாது” - என்று
கூறிச் சென்றனர்.
இவர்
இளமையிலிருந்தே தமிழ்த்துறையில் ஊக்கங்காட்டி உழைத்து வந்தபோதிலும் பிற்றைநாளில்
பெரூக்கங்கொண்டமைக்கு அறிஞர் ஒரு காரணம் காட்டுவர். இவர் தமது 29-வது வயதில் - 1884ல் தம் தந்தையையும் அடுத்த ஆண்டிலேயே
தம் தாயையும் இழந்தார். அத்துடன் அடுத்தடுத்துத் தம் இரண்டு குழந்தைகளை இழக்கும்
நிலையும் ஏற்பட்டது. இப்படிப் பெற்றோரையும் பெற்றாரையும் ஒரு சேரத் தொடர்ந்து
சில்லாண்டுகளில் இழக்க நேர்ந்த கொடுமையே அவர் உள்ளத்தை அழியாத் தமிழன்னையின்
வளர்ச்சித்துறைக்கு செலுத்தியது என்பர். எப்படி யாயினும் அவர் அலுவலுக்கிடையில்
அன்னைத் தமிழுக்கு என்றென்றும் போற்றக்கூடிய வகையில் அவர் ஆற்றிய பணியினை
தமிழ்நாடு உள்ளவரை - ஏன் உலகம் உள்ளவரை - தமிழரால் வரலாற்று ஆசிரியர்களால் மறக்க
முடியாது. இவரது அறிவாற்றலை அன்றைய தமிழகம் போற்றிற்று. கல்வித்துறையில்
இல்லாவிட்டாலும் இவரை அத்துறைக்கு ஈர்த்து பல்கலைக்கழகத்தார் பி .ஏ .எம் .ஏ
பட்டங்களில் தேர்வாளராக்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் இவரது ஈடும் பெருமையும்
கருதி - 1905-ம்
ஆண்டில் அச்சங்க ஆண்டு விழாவிற்கு தலைவராய் வரவேற்றது.
பிள்ளையவர்கள்
தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினர். தமிழில் பல கட்டுரைகள்
எழுதியது போன்றே ஆங்கிலத்திலும் எழுதினார்கள். இருமொழிகளிலும் உள்ள பயன்படுவனவற்றை
மாற்றி மொழிபெயர்த்தனர். இவரது ஆங்கில எழுத்தின் சிறப்பு எட்வர்ட் இளவரசர் இந்திய
நாட்டுக்கு வந்தபோது இவர் ஆங்கிலத்தில் பாடிய வரவேற்புக் கவிகளால் நன்கு
விளங்குமென்பர்.
இவ்வளவு
அரும் பேறாற்றல் பெற்ற பெரியார் பிரிந்து இன்றைக்கு 45 ஆண்டுகள் ஆகின்றன. எனினும் அவர் புகழ் மங்காமல்
உள்ளது. ஏன்? அவர்
எழுதிய "1800 ஆண்டுகளுக்கு
முன் தமிழர்' என்ற
நூலே அவரை என்றும் வாழவைக்கின்றது. ஆம், இனி அந்நூல் வழி அவர் பெருமையைக் காண்போம்.
தமிழர்
தம் பண்டை வரலாறுகளை அறியச் சாதனமாக இருப்பன அக்காலத்து எழுதப்பட்ட இலக்கியங்களே
ஆகும். கடைச்சங்கக் காலமென்று பேசப்படும் இன்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு
முன் எழுந்த இலக்கியங்களை, பத்துப்பாட்டு
எட்டுத் தொகை என்று பாகுபடுத்தினர். அத்துடன் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய
இலக்கியங்களும் எழுந்தன. இவற்றை வெறும் எழுத்தோவியம் என்று மட்டும் எண்ணிய காலம்
ஒன்று இருந்தது. ஆனால் கனகசபைப் பிள்ளை அவர்கள் வெறும் எழுத்தோவியங்கள் எனக்
கொள்ளாது தமிழர் தம் பண்டைப் பெருமையை விளக்கும் வரலாற்று ஓவியங்களாகக் கொண்டனர்.
இந்த இலக்கியங்களின் உறுதுணை கொண்டு அன்றைய தமிழ்நாட்டு வரலாற்றை முதன் முதன்
வெளியிட்ட பெருமை இவருக்கே உண்டு.
தம்
ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகளை அவ்வப்போது 1895க்கும் 1901க்கும் இடையில் - மதராஸ் ரெவியூ - என்ற ஆங்கில
இதழில் வெளியிடலானார் பிள்ளையவர்கள். அவற்றுள் முதற் கட்டுரை வெளியான உடனேயே
அதைப்படித்து, அதன்
ஏற்றத்தைப் புகழ்ந்தவர் பலராவர். அவருள், அக்காலத்துச் சென்னை உயர்நீதி மன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த
சர் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் சிறந்தவர். அவர் பிள்ளை அவர்களை ஊக்கி மேலும் அது
போன்ற பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வர வேண்டினர். அவ்வாறே பிள்ளை
அவர்கள் ஆறு ஆண்டுகளிலும் தொடர்ந்து பல கட்டுரைகள் வெளியிட்டனர். கட்டுரைகள் பல
வெளிவந்தபின், அவை
வெறும் இதழ்களில் சிதறிய கட்டுரைகளாக இருப்பதினும், தொகுக்கப் பெற்றுச் சிறந்த நூலாகப்பெறின் சிறந்த
பயன் நாட்டுக்கும் உலகுக்கும் உண்டு என்றனர் நண்பர். அவர் தம் விழைவையெல்லாம்
நிறைவேற்றவும், தமிழரின்
பண்டைப் புகழ் பாரில் ஓங்கவும் திரு.பிள்ளை அவர்கள் 16-1-1904ல் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் - என்ற நூலை வெளிக்
கொணர்ந்தனர். இந்நூலைத் தன்னை இத் துறையில் தளராவகையில் ஊக்கிய உயர்நீதி மன்றத்
தலைவர் சர் சுப்பிரமணிய ஐயர் அவர்களுக்கே உரிமையாக்கினார்கள். தமிழர் மட்டுமின்றி
எந்நாட்டவரும் இந்நாட்டியல்பை அறிந்து போற்றும்படி ஆங்கிலத்தில் பிள்ளை அவர்கள்
இந்நூலை எழுதித் தந்தது ஒரு பெரும் பேறென்று கொள்ளல் வேண்டும்.
இருபதாம்
நூற்றாண்டின் இடைக்காலத்தில் நிற்கின்ற நமக்கு நம்நாட்டு வரலாற்றை ஆராய்வது அவ்வளவு
கடினமாகத் தோன்றாது. பலர் அத்துறையில் வழிகாட்டியுள்ளனர். வரலாற்று மூலங்கள்
பலப்பலவாகப் பல்கிப் பெருகியுள்ளன. ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழர் தம்
பண்டை வரலாறு இன்னதென ஆராயவேண்டும் என்ற எண்ணமே தோன்றா. அற்றை நாளிலே தாமே முன்னின்று
முயன்று முதன்முதலாக இத் தமிழ் நாட்டு வரலாற்று நூலைக் கொண்டுவந்த கனகசபைப்பிள்
ளையைத் தமிழகம் தலைமேற்கொண்டு போற்றக் கடமைப்பட்டுள்ளது. இதுவரை தமிழக
ஆராய்ச்சியிற் புகுகின்ற யாரும் அந்நூலைப் பற்றிக் கூறாது செல்ல வில்லை. தக்க
சான்றுகளும் மூலங்களும் கிடைக்காத அந்த முன்னைய நாளிலே அவர்கண்ட முடிபுகளில் ஒரு
சில தற்போது முரண்பட்டதாகக் காணப்படினும், பெரும்பாலான கருத்துக்கள் அன்றும் இன்றும் ஒப்பவே ஏற்றுக்
கொள்ளப்பட்டனவாக அமைவது அவர்தம் ஆழ்ந்த ஆராய்ச்சி நிலையினைப் புலப்படுத்துவதாகும்.
பிள்ளையவர்கள்
தம் நூலைப் பதினாறு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றுள் தமிழக நிலப்
பிரிவுகளையும், தமிழகத்தைச்
சுற்றியுள்ள நாடுகளையும், அன்றைத்
தமிழர் அந்நிய நாட்டாரோடு கொண்ட வாணிய வளனையும், அன்று தமிழ் நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களின்
நிலையும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். அவற்றுடன் தமிழ்நாட்டை ஆண்ட முடியுடை
மூவேந்தர்களாகிய சேர, சோழ,
பாண்டியரைப் பற்றியும், அவரை அண்டியும், தனித்தும் வாழ்ந்த சிற்றரசர்களைப்
பற்றியும் குறித்துள்ளனர். மேலும் அக்காலத்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும்,
பிற பண்பாடுகளையும், பிள்ளை அவர்கள் தெள்ளத் தெளியக்
காட்டியுள்ளனர். நூலின் பிற்பகுதியில் அன்று தோன்றிய குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற வாழ்விலக்கியங்களைப் பற்றியும்,
அவை பாடிய புலவர்களைப் பற்றியும்,
பிற புலவர்களைப் பற்றியும், நன்கு ஆராய்ந்துள்ளனர். இறுதியாக
அன்றைய தமிழ்நாட்டுச் சமய நிலைப் பற்றியும் அது வாழ்வோடு பிணைக்கப்பட்ட
விதத்தையும் கூற மறக்கவில்லை பிள்ளை அவர்கள். இவ்வாறு எல்லாப் பொருள்களையும் ஒரு
சேரத் தொகுத்த ஒரு பெரு வரலாற்று நூலைத் தமிழ் இலக்கியங்களையும், அக்காலத்துத் தமிழ் நாட்டுக்கு
வந்து சென்ற பிற நாட்டு அறிஞர்தம் குறிப்புகளையும் கொண்டு முடித்து, இறுதியில் தமிழன் தற்போதுள்ள
நிலையையும், இனியும்
தமிழ்நாடு தன் பண்டைப் பெருமையில் தளராதோங்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்
என்பதையும் கூறி முடிக்கின்றார்கள்.
சிதறுண்ட
தமிழகத்தைச் செம்மைப் படுத்த எண்ணிய கனகசபை பிள்ளை அவர்களின் - தமிழர் 1800
ஆண்டுகளுக்கு முன் - என்ற நூலின்
இறுதி வாக்கியங்கள் இவை.
"தமிழர்கள்
இன்னும் தங்கள் பழைய மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு, அஞ்சாத தற்கெல்லாம் அஞ்சி, அனைத்தும் பொய் என்று வேதாந்த மனப்பான்மை
கொண்டு, வாழ்வை
வெறுத்து வருங்கால வளத்தை கனவு கண்டுகொண்டு மட்டும் இருப்பார்களானால் அவர்கள்
நிச்சயமாக, உலகவாழ்வுப்
பாதையில் எங்கோ பின்தங்கி காட்டுமிராண்டிகளாகத்தான் இருப்பார்கள்.'
ஆனால்
அவர்கள் மேலை நாடும் கீழைநாடும் இணைந்ததால் உண்டான புது நாகரிகத்தைப் பின்பற்றி,
பேராசையின்றி, சாதிமத வேறுபாடுகளைக் களைந்து, ஆண்களோடு பெண்களையும் கல்வித் துறையில்
முன்னேற்றி அவர்களை நல்ல வாழ்வாசிகளாகவும் தாயர்களாகவும் ஆக்கி, அறிவுத்துறையால் அறிவியல் துறையைச்
சீராக்கி, கைத்தொழிற்
கல்லூரிகளை ஓம்பி வளர்த்து குறுகிய மனப்பான்மை கொண்ட சமயத் துறையிலுள்ள மாசுகளைப்
போக்கி செம்மைப்படுத்தி, இந்துசமயமே
கடவுளைக் காட்டும் மெய்ச் சமயம் என்பதை நிலைபெறச் செய்து தலைநிமிர்ந்து வாழத்
தொடங்குவார்களானால் அத் தமிழர்கள் உலகில் முன்னேறும் பல பெருஞ் சமூகங்களிடைத்
தாமும் முன்னேறி ஏற்றமுறுவர்.
அறிவிலும்,
முன்னேற்றத்திலும் மேலோங்கும்
அத்தமிழர் தம் தலைவர்கள் சீர்திருத்தங்களுக்குக் காலம் வரும் என்று காத்திராது,
தாங்களே மற்றவர்களுக்கு
வழிகாட்டிகளாக நின்று, புத்தம்புதிய
வாழ்வுக்கு வேண்டிய வளம் பெருக்கும் நல்ல கருத்துக்களைத் தம்தம் வீடுகளிலும்,
சுற்றிலுமுள்ள சுற்றத்தார்
வீடுகளிலும், ஊர்களிலும்
மெள்ள மெள்ள, வெறும்
ஆவேச உணர்ச்சி வகையிலல்லாது செயல் துறையில் புகுத்தி நாடுவாழ நல்வழி காட்டுவார்களானால்
அவர்தம் அரும் பெயர்கள் தமிழர் தம் வருங் காலத்தில் அவர்தம் இனம் உள்ளவரையில் வழி
வழி யாக நிலை பெற்றிருக்கும் என்பது உறுதி.''
இவையே
கனகசபைப் பிள்ளை அவர்களின் இறுதிமொழிகள். இவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
எழுதப்பெற்றிருப்பினும், இன்றைக்கும்
தமிழர்களுக்கு ஏற்ற உரையாக அமைகின்றன. தமிழர்கள் - சிறப்பாகத் தலைவர்கள் - அவர்தம்
வாய்மொழியைப் போற்றி நடந்து நாட்டை வாழ்விப்பார்களாக.
- நூல்: இலங்கைப் புலவர்கள்
- வெளியீடு: ஒற்றுமை நிலையம், 8 வியாசராவ் தெரு, தியாகராய நகர், சென்னை
- ஆண்டு: 1952
0 comments:
Post a Comment