July 21, 2019

தெய்வந்துறைத் திருமால் கோயில்


தெய்வந்துறைக்குத் "தேவிநுவரை" (Devinuvara), " டொன்டிறா'' (Dondra) எனப் பல பெயர்களுண்டு. தேவிநுவரை யென்பது பத்தினிதேவி வணங்கப்பட்ட ஸ்தலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலே கயவாகுவென்னும் இலங்கை யரசன் கண்ணகி வணக்கத்தை இலங்கையிற் பல திசைகளிலும் நிறுவிய காலத்தில், இங்குமொரு கோயில் எழுப்பியபடியால் இவ்விடம் தேவிநுவரை யெனப்பட்டது. இவ்விடத்திலேயே விஜயராசன் சந்திரசேகரன் கோயிலைக் கட்டினானென வைபவமாலை கூறும். சைவக் கோயில்களுள்ள இடமானபடியால் அவ்விடம் தமிழில் தெய்வந்துறை யெனப்பட்டது போலும். தேவிநுவரை யென்னும் பெயர் குறைந்து " தேநுவரையெனவாகிய காலத்தில் போர்த்துக்கேயர் தங்கள் நூல்களில் தேனவரை என எழுதியிருக்கின்றார்கள். தெய்வந்துறையென்னும் பெயரே தெயுந்துறையென மருவி டொன்டிறா என்னும் கருத்தில்லாப் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே அக்காலத்தில் பொன்னிரத மூர்ந்து பல்லாயிரம் பக்த கோடிகள் பரவிப் பணிய பார்ப்பவர் கண்களைப் பறிக்கும் அழகுடன் ஸ்ரீவிஷ்ணு பகவான் பவனி வரும் புனிதமான வீதிகள், இப்போது தூர்த்தர் நிறைந்து மோட்டார் இரதங்கள் நிறுத்தும் சாலைகளாக மாறிக்கிடக்கின்றன.

பண்டைய கோவில் வளைவு (படம் உதவி: விக்கிமீடியா)
தேவிநுவரை, தெய்வந்துறையென்னும் பெயர்களின் வரலாறுகளைப்பற்றி மாறுபாடான அபிப்பிராயங்கள் பலவுள. அவற்றுள் ஒன்று கார்த்திகேயக் கடவுள் விண்ணினின்றும் பாற்கடலிலிறங்கி, கருங்கல்லாலான தெப்பமொன்றில் ஊர்ந்து இந்நகரின் கரைசேர்ந்து பின் கதிர்காமம் என்னுமிடத்தில் எழுந்தருளினார் என்பதும், இன்னொன்று பெருமைவாய்ந்த விஷ்ணுவாலயம் அவ்விடத்திலுள்ளமையால் அப்பெயர் பெற்றது என்பதும் ஆம்.

இந்துசமய அறிகுறிகள் கொண்டு இலங்கும் சிங்கள நாடுகளில் இந்நாட்டைப் போல் வேறு நாடுகள் இல்லையெனலாம். இந்து ஆலயங்களும் கிரிவிகாரை யெனப்படும் புத்தவாலயமும் அருகாமையிலமைந்திருக்கும் தன்மையினால் இவ்விரு சமயங்களுக்குமிடையே ஒற்றுமை நிலவியதென்பதும் பக்தர்களெல்லாம் சமயவேறுபாடின்றி இரு ஆலயங்களுக்குஞ் சென்று பகவானைச் சேவித்து வந்தனரென்பதும் அறியக்கிடக்கின்றன. இந்துக் கதைகளும் இந்துக் கொள்கைகளும் நிரம்பி வழியும் இவ்விடத்திலுள்ள கடற்கரையும் இந்துக் கொள்கைகளின்படியே அமைந்துகிடக்கின்றது. இந்நகரத்துச் சரித்திரத்தில், அதன்கண்ணுள்ள விஷ்ணு வாலயத்தின் சரிதையே பெரும்பான்மையும் காணப்படும் இவ்வாலயம், அநேக வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் 2 ம் பராக்கிரமபாகுவின் மருமகனாகிய வீரபாகு என்பவன் சந்தபானு என்னும் மலையாளத்து அரசிளங்குமாரனைப் போரிற் புறங் கண்டபின்பு, தேவபுரிக்கு எழுந்தருளி மேகவண்ணக் கடவுளுக்குப் பல காணிக்கைகள் ஈந்து பரவிப் பணிந்தானென்றும், தேவநகரத்து நீலவண்ணன் ஆலயம் பழுதடைந்து கிடக்கின்றது என்பதைக் கேள்வியுற்ற 2 ம் பராக்கிரமபாகு அங்கு சென்று, தேவருலகம்போல் தோன்றும்படி அவ்வாலயத்தைப் புதுப்பித்து, ஆண்டுதோறும் விழா நடத்துமாறு செய்தானென்றும் மகாவம்சம் கூறுகின்றது.

1344 ம் ஆண்டில் இறாஞ்சியர் என்னுமிடத்திலிருந்து புறப்பட்டு 34 வருஷங்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் பிரயாணஞ் செய்த இபின் பட்டுட்டா என்னும் அராபியப் பிரயாணி இவ்வாலயத்தைப் பற்றிக் கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. தான் ஒரு முஸ்லிமானதால் விக்கிரக ஆராதனைக்குரிய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லையென்றும், ஆயினும் நவரத்தினங்கள் விரவியமைக்கப்பட்ட ஒரு மனுஷனளவு பருமையும் உயரமுமுள்ள ஒரு பொன் விக்கிரகம் அவ்வாலயத்திலிருந்ததென்றும், 1,000 பிராமணரும் யோகிகளும் 500 மகளிரும் அவ்வாலயத்திலிருந்தார்கள் என்றும், குறிப்பிட்டிருக்கின்றான். இவன் இப்பட்டினத்தைத் தினவார் எனக் குறிக்கின்றான். 16 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவ்வாலயத்தின் சிறப்பு உன்னத நிலையை அடைந்திருந்ததாகத் தென்படுகின்றது. சுற்றுக் கிராமங்களெல்லாம் ஆலயத்திற்கு அர்ப்பணஞ் செய்யப்பட்டன. அதன் உன்னதமான கட்டிடங்கள் ஆகாயமளாவின. நாற்புறமும் நறுமணங் கமழும் நந்தவனங்கள் மலிந்து கிடந்தன.

இன்றைய விட்டுணு ஆலய முகப்பு (படம் உதவி: விக்கிமீடியா)

1588 ம் ஆண்டில் 2 ம் இராசசிங்கன் கொழும்பு நகரத்தை முற்றுகையிட்ட காலத்து, இவ்வாலயத்தின் சிறப்பாலும் செல்வத்தாலும், பெரிதும் கவரப்பட்ட போர்த்துக்கேயர் தோம் டீ. சவுசா டி அறான் சேஸ் என்பவனின் தலைமையின்கீழ் அவ்விடத்தை யடைந்து எதிர்ப்பார் ஒருவருமின்றிக் கிடந்த அவ்வாலயத்தை நிர்த்துளியாக்கி யழித்துப் பொன்னும் மணியும் முத்தும் பவளமும் வேண்டுமட்டும் சூறையாடி எஞ்சியவற்றிற்குத் தீமூட்டிப் புனிதமான அவ்விடத்திற் பல்லாயிரம் பசுக்களைக் கொன்று திரும்பினர். சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த சில கருங் கற்றூண்கள் மாத்திரம் போர்த்துக்கேயரின் கொடுங்கோன்மையை விளக்கிக்கொண்டு இன்றும் அவ்விடத்திற் கிடக்கின்றன.

இலங்கைச் சரித்திரமெழுதிய றிபேறோ என்னும் பறங்கியர் இக்கோயிலைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

"நாம் 1588 ம் ஆண்டு இலங்கைத் தீவில் மிக உன்னதமாக விளங்கியதும் சிவனொளிபாத மலைக்கு அடுத்தபடியாக அநேக யாத்திரிகர்களால் தரிசிக்கப்படுவதுமாகிய மிகவும் பிரசித்திபெற்ற தேனவரம் (தேவிநுவரை) என்னும் ஆலயத்திற்குப் போனோம். அதன் கட்டிடமோ மூன்று மைல் சுற்றுச் சஞ்சாரத்துடன் அழகான சிறு கோயில்களும் அதன் பிரதான வாயிலின் மேல் முற்றும் பொன் முலாம் பூசிய செப்புத் தகடுகளால் வேயப்பட்ட ஓர் உன்னத கோபுரமும் இருந்தன. அதன் உள்ளே மேடைகளுடன் கூடிய ஒரு பெரிய சற்சதுரம் உண்டு. அதன் நானா பக்கங்களிலும் வாயில்களிருந்தன. அச் சதுரத்தைச் சுற்றித் திருவிழாக் காலங்களில் உபயோகிக்கப்படும் நறுமலர்களைக் கொண்ட பூச்செடிகள் உண்டாக்கப்பட்டிருந்தன. அங்கோ அநேக அழகான தெருவீதிகளுமிருந்தன. அவ்வீதிகளில் அவ்வாலயத்தின் தொண்டர்கள் முக்கியமாக அக்கோவிலின் சேவைக்கு அர்ப்பணஞ் செய்யப்பட்ட பெண்மணிகள் வசித்தார்கள். அவ்வாலயத்தை யணுகியதும் நாங்கள் ஒரு பயங்கரமான புயலில் அகப்பட்டோம். எம்முடன் சென்ற சிங்களக் காலாட்கள் தங்கள் ஆலயத்தைக் காப்பாற்றும் பொருட்டு அப்புயல் கடவுளால் விடப்பட்டதென்றும் போர்த்துக்கேயர் அவ்வாலயத்தை அணுக்கமாட்டார்களென்றும் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர். அவர்களுடைய மனத்தைச் சீராக்கும் பொருட்டு சேனாதிபதி அக் கட்டிடத்தை அழிப்பதாகச் சத்தியஞ் செய்தான். அவன் மறுநாட்காலை தனது பட்டாளத்தைக் கொண்டுவந்து அக்கோயிலைச் சுற்றியிருந்த அரணையழித்து விட்டுக் கோயிலினுள்ளே புகுந்தான். அங்கே எதிர்க்க ஒருவருமில்லாமல் எல்லோரும் கோயிலை விட்டு முன்னதாகவே வெளியேறிவிட்டனர். நாங்கள் ஆலயத்தின் வாயிலை உடைத்து உள்ளே புகுந்து அங்குள்ள மண்ணினாலும், மரத்தினாலும், செம்பினாலும் ஆக்கப்பட்டுப் பொன் பூசிய ஆயிரக்கணக்கான விக்கிரகங்களையும் சித்திர மாடங்களையும் ஸ்தம்ப வரிசைகளையும் அழித்தோம். ஆனைத்தந்தம், சிறந்த ஆடைகள், கோப்பி, மிளகு, சந்தனக்கட்டை நகைகள், ரத்தினக் கற்கள் முதலிய பொருட்குவியல்களையும் இன்னும் அநேக கோயிற் சாமான்களையும் கொள்ளையடித்து மூட்டைகட்டிக்கொண்டு எஞ்சியவைகளுக்கு நெருப்பு வைத்தோம். அவ்விடத்திற்கு ஒரு பெரிய நிந்தனை செய்யும்பொருட்டுச் சில பசு மாடுகளை வெட்டிக் கொன்றோம். ஏனெனில், அக்குற்றத்தை நீக்க வேண்டுமாயின் அதிக செலவுள்ள கிரியைகள் செய்தாற்றான் நீங்குமென அறிந்தபடியால். இத்துடன் அக்கோயிலிலுள்ள பிரதான விக்கிரகத்தை ஊர்வலங் கொண்டு செல்வதற்கு உபயோகப்படுவதும் ழு மேல் மாடிகளையுடைய கோபுரம் போல் மரத்தால் ஆக்கப்பட்டு வர்ணச் சித்திர வேலைகளும் பொன் பூச்சுமுடையதுமான ஒரு தேரையுமழித்தோம். இதன்பின் சூறைப் பொருட்களுடன் வெலிகாமம் என்னுமிடத்திற்குத் திரும்பி வந்து கொழும்பிலுள்ள சேனாதிபதியின் கட்டளை வரும்வரையில் அவ்விடத்திலே தங்கினோம்.

இதனையிட்டு முத்துத்தம்பிப்பிள்ளை ஆசிரியர் "தேவேந்திரபுரமெனக் காலிக்கப்பாலுள்ள இடத்தில் பொன்மயமான சிகரங்களோடு கூடி உயர்ந்து வானளாவிய கோபுரங்களையும் மூடுபாவுடைய தோரண மண்டபங்களையுடையதாய்க் கடல்மேற் செல்வோர் கண்களைக் கவர்ந்து இலங்கையைச் சிறப்பித்து நின்ற விஷ்ணுவாலயத்தையுங் கைகூசாது இடித்தழித்து விட்டார்கள். அவர்கள் இலங்கையிலுள்ள செல்வத்தைக் கவர்ந்ததுமன்றி, இலங்கையின் செயற்கை யழகெல்லாவற்றையும் அழகைக்கண்டதிசயித்துக் கண்ணினாலானந்தங்கொள்ள அறியாத பிசாசுகள் போல் அழித்து மகிழ்ந்தார்கள்எனக் கூறுகின்றார்.இவ்விதமான கொடுந் தொழில்களைச் செய்வதற்கு அவர்களது சமயாபிமானமும், வைராக்கியமும் மறுசமயத்தவரது வழிபாட்டிற்குரிய கோயில்கள் தம் மதவிரோதமென்ற நம்பிக்கையுமே காரணங்களாய் அவர்களைத் தூண்டிவிட்டனவெனினும், பொருள் அபகரிக்கும் பேராசையே முக்கிய காரணமென்பது மறுக்கொணா உண்மை”' எனத் திரு. செ. இராசநாயக முதலியாரவர்கள் கூறுகின்றனர்.

விசுவகர்மாவினால் செஞ்சந்தனக் கட்டையில் செதுக்கப்பட்ட விக்கிரகமொன்று கடலில் மிதந்துவந்து இந்நகரத்தில் மேற்கரையை அடைந்ததென்றும், அதை எடுக்கச் செய்த முயற்சிகளெல்லாம் பயனில்லாது போகவே அக்காலத்திலிருந்த அரசன் இவ்விக்கிரகத்தைப் பற்றிக் கனவு கண்டு, இவ்விடம் போந்து பயபக்தியுடனும் பல வரிசைகளுடனும் அவ்விக்கிரகத்தையெடுத்துக் குறிக்கப்பட்ட விஷ்ணு வாலயத்தில் நாட்டினானென்றும், போர்த்துக்கீசரால் இவ்விக்கிரகம் சூறையாடப்பட்டுக் கப்பலிற் கொண்டு போகப்பட்டதென்றும், செல்லும் வழியில் கப்பல் உடைந்துவிட, இவ்விக்கிரகம் கடலில் மிதந்து சென்று திரிகோணமலையை யடைந்ததென்றும், இவ்விஷயம் தம்புலா ஆலயத்தின் விசேஷ குருவிற்குக் கனவில் தோன்றவே, அவர் அரசனுக்கறிவித்தன ரென்றும், அரசன் அவ்விக்கிரகத்தைத் தம்புல் ஆலயத்தில் மறுபடியும் நாட்டினான் என்பதும் ஐதீகம். இவ்விக்கிரகத்தை இன்றும் தம்புலா ஆலயத்தில் காணலாம்.

இந்நகரத்தின் கடற்கரையில் ஓர் ஆலயமிருந்ததற்கு அறிகுறிகள் காணப்படுகின்றன. கருங்கற் தெப்ப மூர்ந்துவந்த கதிர்காமக் கடவுள் முதலாக இவ்விடத்திலேயே அடியார்கள் வணங்க வீற்றிருந்தனரென்றும், குறிக்கப்பட்ட கருங்கல் தெப்பமே இவ்விடத்திற் காணப்படும் பயங்கரமான பாறைத் தொடர்கள் என்றும் கூறுகின்றனர்.

1850 ம் ஆண்டில் இலங்கைச் சரித்திரம் எழுதிய எச். ஸி. சேர் (Sir) அவர்கள் இவ்விஷ்ணு கோயிலைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: "முன்னொரு காலத்தில் தெய்வந்துறை யென்னு மிடத்தில் மிகவும் மகத்துவம் பொருந்திய ஓர் விஷ்ணுவாலயம் அமைக்கப்பெற்றிருந்தது. அதன் ஞாபகச் சின்னமாக அவ்வாலயம் இருந்தவிடத்தில் மிக விளக்கமாகவும் ஆழமாகவும் கொத்துவேலை செய்யப்பட்ட மூன்று கற்களாலமைக்கப்பட்ட சதுர வடிவமான வாயிற் பாதையும், அவ்வித சிற்ப வேலைகள் செய்யப்பெற்ற கருங்கற்சாளரச் சட்டங்கள் நான்குமே எஞ்சியுள்ளன. இப்பொழுது இவ்விடத்தில் மண்ணினாற் கட்டப்பட்ட ஆலயமே உள்ளது. ஸ்ரீ ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமே என நம்பும் அநேக விஷ்ணு பக்தர்கள் இவ்விடத்தை ஒரு விசேஷ புண்ணிய ஸ்தலமெனக் கருதி, விஷ்ணு வழிபாட்டிற்காக ஆண்டு தோறும் ஆடிமாசத்தில் ஆயிரக்கணக்காக வந்தடைவார்கள். இவ்வாலயத்திற்கு அருகாமையில் உயர்ந்து வளர்ந்து வளம் செறிந்த பல குலைகள் ஈன்று நிற்கும் தென்னை, கமுகு, வாழை முதலிய மரங்களால் சூழப்பட்ட பல சிற்றில்கட்கிடையே பழுதின்றிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான கற்றூண்கள், நிமிர்ந்து நிற்கும் அழகிய காட்சி காண்போர் கண்களைக் கவர்வதாகும். இக்கற்றூண்களில் பற்பல சரித்திரங்களை விளக்கும் உருவங்கள் பல செதுக்கப்பட்டிருப்பினும், ஸ்ரீ ராம பிரானின் அம்புவில்லோடு கூடிய உருவமே மீண்டும் மீண்டும் காணக் கூடியதாக இருக்கின்றது. இக் கற்றூண்கள் யாவும் முற்காலத்திருந்த விஷ்ணு வாலயத்தின் தூண்கள் என்பதே கோவிற் பூசகரின் கூற்று. தற்காலம் வழிபாடு நடக்கும் விஷ்ணு கோயிலிலிருந்து இருமருங்கும் உயர்ந்த மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் விசாலமான பாதை வழியே கடலோரத்தையடையின், அவ்விடத்தே சிற்ப வேலைகளின்றிக் கிடக்கும் கற்றூண்கள் பலவற்றைக் காணலாம். விஷ்ணுவாலயத்திற்கு அண்மையில் ஒரு புத்தர் கோயிலும் கோபுரமும் உண்டு.
 
தெய்வந்துறை விட்டுணு கோவில் இன்று (படம் உதவி: விக்கிமீடியா)
தெய்வந்துறை நகரின் மனோகரமான இயற்கை வனப்பில் ஈடுபட்டு மாலைக் கதிரவனின் மஞ்சட் கிரணங்கள் நீலக் கடலிற் படிந்து மிளிரும் காட்சியைக் காணும் அவாவுடையோராய் கடலோரத்தை யடைந்தோம். கடலுக்குள் சிறிது தூரத்தில், வெண் திரை அதன்மேல் மோதுததால் நீர் நானாபக்கங்களிலும் தெறிக்கும் ஓர் கற்பாறை கண்ணுக்குப் புலப்பட்டதும், அப்பாறை எப்பெயரால் அழைக்கப்படுவது என்று எம்மோடு கூட வந்த தலைமைப் புத்தகுருவை வினவினோம். அதற்கு அவர்இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஓர் ஆங்கிலேயரின் கப்பல் அப்பாறையில் மோதுண்டு சேதமடைந்ததால், அதனை ஆங்கிலேயரின் கற்பாறை என அழைப்பார்கள் '' என்று அறிவித்தார்கள். அக்கப்பல் எக்காரணத்தினால் இக்கதிக்குள்ளாயிற்று என்று அறிய ஆவலுற்று அவ்விருத்தாந்தத்தை விபரமாக விளம்பும்படி வேண்டிக்கொண்டதும், அவர் மிகவும் உற்சாகத்தோடு சொன்னதாவது:

“18 ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒரு நாள் சூரியன் அஸ்தமிக்குமளவில் ஓர் உன்னதமான கப்பல் அதன் பிரயாணத்திற்குக் காற்றுப் பிரதிகூலமாயிருந்ததனால் இத்துறையில் வந்து நங்கூரமிட்டது. மறுநாள் உதயத்தில் இவ்வூர் மீன்பிடிகாரர் சிலர் தங்கள் வள்ளங்களில் கப்பலிலுள்ளோருக்கு ஆகாரத்திற்கு வேண்டிய மீன், காய்கறி முதலியவற்றை ஏற்றிச் சென்றனர். ஆயினும் ஒரு பாஷை மற்றவர் அறியாராதலால் எவ்வித விற்பனையுஞ் செய்ய முடியாது திரும்பினர். இன்று உச்சிப் பொழுதில் கப்பலிலிருந்த சிலர், ஒரு சிறு படகில் வந்து கரைக்கு வந்து உரத்த சத்தமிட்டதைக் கேட்டு நானும் எனது சீஷரிற் சிலரும் இவ்விடத்தை அடைந்தோம். அவர்கள் புத்தபகவானின் சின்னங்களாகிய எமது நீண்ட உடைகளையும் வழுக்கைத் தலைகளையும் பார்த்துச் சிரித்து எளனஞ் செய்தார்கள். ஆயினும் நான் அவர்களது தாகத்தைத் தணிக்கக்கூடிய பழ வர்க்கங்களை வாழையிலைகளில் வைத்துத் தாழ்மையாகவும் அன்பாகவும் வழங்கினேன். அவர்கள் அவைகளை அதிக ஆவலோடு எடுப்பதுபோன்று எடுத்து எங்கள் தலைமேல் வீசி விட்டு நகைத்தார்கள். நாங்கள் இவர்கள் செய்கைக்கு மிகவும் இரக்கப்பட்டு துக்கத்தோடு எமது கோயிலையடைந்தோம்.

அவர்களும் எம்மைப் பின்தொடர்ந்து கோயிலுக்குள் நுழைந்து ஆராதனை செய்யும் பரிசுத்தமான இடங்களை அசூசிப்படுத்தினார்கள். பின்கோயிற் சுவர்களையும் சிலைகளையும் கதவுகளையும் அவைகளில் செதுக்கப்பட்டிருந்த புத்தபகவானின் உருவங்களையும் அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தபின், எமது இல்லங்கட்குள்ளும் நுழைந்து அவ்விடமுள்ள பொருட்கள் யாவற்றையும் புரட்டிப் பார்த்தார்கள். புத்தபெருமானின் சீடராகிய நாம் மகிழ்ந்து கைக்கொண்ட தரித்திர வாழ்க்கையைப் பார்த்து நகைத்தார்கள். பின்பு யாவரும் தங்கள் கப்பலுக்குத் திரும்பிச் சென்றார்கள். அதைக் கண்டு நாங்கள் மகிழ்வுற்றுக் குறும்புத்தனம் விளைத்த அவர்களினின்றும் எம்மைக் காப்பாற்றியதை நினைத்துப் புத்த பகவானைப் பூக்களால் அருச்சித்தோம்.

தேவிநுவரை புத்தர் சிலை (படம் உதவி: விக்கிமீடியா)


ஆனால், அன்றைக்கே மாலைப் பொழுதில் கோயிலில் வழிபாடு நடக்கும் நேரத்தில் அவர்களில் அநேகர் வந்து ஆலயத்தில் நுழைந்தார்கள். அவர்களின் தலைவன் கோவிற் கதவுகளை இருபுறமும் கூர்ந்து நோக்கியதும் தங்கள் பாஷையில் ஏதோ கட்டளையிட்டான். அவர்களுடைய நோக்கம் யாதோவென்று நான் நினைப்பதற்குள் அவர்கள் கொண்டு வந்த ஒரு பெட்டியிலிருந்த பல நூதனமான ஆயுதங்களின் உதவியால், கோவிற் கதவு, நிலையிலிருந்து கழற்றப்பட்டு பதின்மர் தோள்களில் ஏற்றப்பட்டது. அவர்களின் அக்கிரமச் செய்கை எனது அறிவை மயக்கிவிட்டது. என்னே! தலைமைப் புத்த குருவாகிய எனது முன்னிலையிலேயே எமது பகவானின் கோவிற் கதவு கொள்ளையிடப்பட்டது. அவர்கள் கொண்டு செல்லாவண்ணம் தடை செய்யும்படி எனது சீடருக்குக் கட்டளையிட்டேன். ஆனால் அவர்கள் பெலமுடையோர்களாயிருந்ததால் எனது சீடர்களால் அவர்களோடு சமர் செய்து கதவைக் கைப்பற்ற முடியாது போயிற்று. இனி என்செய்வதென நான் யோசிக்கு முன்னரே கதவு துறைமுகத்திருந்த அவர்களது வள்ளத்தில் ஏற்றப்பட்டது. தாங்கமுடியாத கோபத்தினாலும் துக்கத்தினாலும் அவர்களைச் சபித்துப், புத்தபகவானே அவர்களைத் தக்க முறையில் தண்டியுமென்று பிரார்த்தித்தேன்.

இதற்கிடையில் வள்ளம் கப்பலை நோக்கி விரைவாகச் செலுத்தப் பட்டது. எமது கோயிலின் அழகான கதவு கப்பலில் எற்றப்பட்டதைச் சஞ்சலத்தோடு கரையில் நின்று பார்த்துவிட்டு, இராக்காலமானதால் றுநாட்காலை அதிகாரிகளிடம் முறையிடவேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டு எனது அக்கிரமச் செயலுக்கு அனுமதி அளிக்கமாட்டாரென்பது திண்ணமாயினும், அன்று இரவே அக்கப்பல் அயல்நாடுகளுக்குப் பிரயாணமாய் விடுமோவென்று ஐயுற்றேன். - இவ்வித புண்ணிய தலத்தின் பொலிவைக் கெடுத்த புல்லறிவாளர்களைப் புத்தபகவானே தண்டனை செய்யுமென்று பின்பும் பிரார்த்தித்தேன். அன்று நடுநிசி மேகம் இருண்டு கறுத்தது. இனி நடக்கப் போகுஞ் சம்பவத்தைப் பார்க்க மனம் பொருந்தாதவன் போன்று சந்திரன் மேகக் கூட்டத்திற்குள் மறைந்தான். பிரசண்டமாருதம் எழுந்தது. கடல் கர்ச்சித்தது. காற்று மரங்களை யெல்லாம் முறித்து - வீழ்த்தியது. வாயுபகவானுக்கு அன்றைக்கு சுவாதீனமளிக்கப்பட்டதுபோலத் தோன்றியது. அந்நேரத்தில் கப்பலைப் பற்றி நினைத்தேன். புத்தபகவானின் ஆலயத்தை அவமதித்த கதியை நினைந்து கலக்கமடைந்தேன். பொழுது விடிந்தது. புயல் அடங்கியது. துறைமுகத்துக்குச் சென்று கண்ணுக்கெட்டிய வரையிற் பார்த்தேன். கப்பலின் அறிகுறிகள் - காணப்படவில்லை. கடல் அலைகள் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் ஒரு பிரமாண்டமான அலை ஒரு மரத்துண்டை உருட்டிக் கரையில் தள்ளியது. அன்று நடுப்பகலில் கடற்கரையோரம் முழுவதும் கப்பலின் ஒடிந்த கட்டைகள், இலைகளாலே தள்ளப்பட்டுக் காணப்பட்டன. அந்தோ, புத்த பகவான் அவர்களுக்குத் தகுந்த தண்டனையை அளித்துவிட்டாராகினும் அவருடைய ஊழியனாகிய நான் அவர்களுடைய உற்றார் உறவினர் அவர்களுடைய நல்வரவைத் தூரதேசத்திலிருந்து ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்ததும் துக்கமடைந்தேன். அன்றியும் எமது பகவானின் கோயிலைக் கொள்ளையடித்து அவருடைய அடிமைகளாகிய எம்மையும் நிந்தித்தார்கள் என்னும் கோபத்தினால் அவர்களைச் சபித்தேனே என்று மிக மனோ வேதனையடைந்தேன், இதற்குமேல் சொல்வதற்கில்லை.''

இவ்விதம் அப்புத்தகுரு சொல்லித் தாழ்ந்து வணக்கமிட்டுச் சென்றார். நாங்கள் இச்சரித்திரத்தைக் கேட்டுச் சிறிது மனவருத்தமுற்றோமாயினும் தெய்வந்துறையின் இயற்கை வளப்பத்தின் இன்பக் காட்சியும் கிறிஸ்து மதத்தவர்களால் வருத்தப்பட்ட புத்தகுருவின் அன்பு ததும்பும் சொற்களும் எமக்கு உல்லாசத்தையூட்ட மாத்துறை என்னுமிடத்தை வந்து அடைந்தோம்.

இன்றும் அக்கடற்கரையில் கறளடைந்து கிடக்கும் ஓர் இரும்பு நங்கூரம் அக்கப்பலின் நங்கூரமென அவ்வூரவர்கள் சொல்லுகிறார்கள்.

எழுதியவர்: வெள்ளவத்தை திரு. மு. இராமலிங்கம்

ஸ்ரீ லங்கா சூலை 1960 (நன்றி: நூலகம்.ஓர்க்)
மூலம்: ஈழகேசரி

மு. இராமலிங்கம் (9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல் ஆய்வாளரும் ஆவார். முருகரம்மான் என்ற பெயரிலும் எழுதியவர். மக்கள் கவிமணி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இவரைப் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா கட்டுரையைப் படியுங்கள்.

0 comments: