May 30, 2014

ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை

யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை சரிதம்

 

இயற்றியது திரு.வி.கலியாணசுந்தரன்


ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை

நூன்முகம்

"அசிந்திய மவ்வியக்த மநந்த ரூபம் சிவம் ப்ரசாந்த மமிர்தம் ப்ரஹ்ம யோநிம்! ததாதி மத்தியாந்த விகீநமேகம் விபும்சி தாநந்தம ரூப மத்புதம்!" "உமா சகாயம் பரமேஸ்வரம் ப்ரபும் த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம்" என்ற தொடக்கத்தனவாக யசுர்வேதாந்தத்தில் பிரதி பாதிக்கப்பட்ட பரசிவனார் நீர்மையைத் தன்னகத்தே சிறிது உடைத்தாம் மேருகிரி முடிகளுள் ஒன்றாய இலங்காபுரிக்கு ஓர் எழில் முகமாய் இலங்கும் யாழ்ப்பாணத்து உதித்துச் செந்தமிழ் நாடு எங்கணும் சென்று புறச் சமயக் கார் இருளைக் கடிந்த சித்தாந்த பானுக்களுள் சிறந்தார் கதிரைவேல் பிள்ளை எனும் காராளரே.  அவர் 1860ஆம் ஆண்டில் தோன்றி 1907ஆம் ஆண்டில் கரந்தனர்.  அப்பெருந்தகைக்குக் கண் இமைபோன்ற கெழுதகை நண்பராய் விளங்கினார் சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையினர்.  அச்சபையார் பச்சமப் புலவகானப் பாவலராம் சைவ சித்தாந்த மகா சரபத்தின் சரிதத்தைக் கத்தியரூபமாய்ச் சுருக்கி வரைய அடியேற்குப் பணித்தனர்.  அப் பணியை மணி எனச் சிரமேல் தாங்கி உஞற்ற என் உள்ளத்து எழும் பேர் அவா என்னைப் பிடர் பிடித்து உந்தியது.

 பிள்ளை அவர்கள் வரலாற்றைச் சிறியேன் வரையத் தொடங்கியதை உணர்ந்த அன்பர்கள் தங்கட்கு மாயாவாத தும்சகோளரி மனமகிழ்ந்து விடுத்த கடிதங்களில் உள்ள கமல பந்தம், மயூர பந்தம், இலிங்கபந்தம், இரத பந்தம், நாக பந்தம், சதுரங்க பந்தம், மயூர பந்தம் முதலிய சித்திரக் கவிகளையும், சிலேடைகளையும் பிற கவிகளையும் சரிதத்தின் இடை இடையே இன்றியமையாத இடங்களில் புனைக்குமாறு அனைத்தையும் எனக்கு அனுப்பினார்; எனினும் அன்னோர் விழைத்த வண்ணம் யான் செய்யாது சரிதத்தையும் சாலவும் சுருக்கினேன்.  எற்றுக்கெனில் அங்ஙனம் இயற்றின் அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் சரிதம் வாரிபோல் பெரிதும் விரிந்து பங்குனி மகத்திற்குள் வெளிவராது; ஆதலால் அக்கவி ரத்னங்களைப் புவியுள்ள கவிஞர்கள் போற்றிப் புகழ்ந்து அணியப் பின்னர் பிரசுரிப்பல்.

 மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராய் இருந்த பிள்ளை அவர்கள் பிரிவாற்றமைக்காகப் பிரபல வித்வ சிரோன்மணிகள் பாடிய பாக்களுள் வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார்க்குக் கிடைத்த கவிகளே இந்நூல் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.  * மற்றைய கவிகளை மகா-ள-ள-ஸ்ரீ புரசை பாலசுந்தரநாயகர் வெளியிடுகின்றார் என்று கேட்டுப் பெரிதும் மகிழ்வு எய்தினேன்.

அறிவினும் கல்வியினும் சிறியேனாய யான் யாத்த இச்சிறுநூலைச் சொல்நயம் உடைய நல்நயப் புலவர்கள் அன்னம் போல் கொள்வார்களாக.

இங்ஙனம்

திரு.வி.கலியாணசுந்தரன்.


* இவற்றுள் திரு.வி.க.கலியாணசுந்தர முதலியார் அவர்கள், கயப்பாகம் - திரு. சதாசிவ செட்டியார் அவர்கள்.  சைவஸ்ரீ ம.தி.பாநுகவி அவர்கள் ஆகிய மூவர் இயற்றிய பிரிவாற்றமைப் பாக்களே இப்பதிப்பில் வெளியிடப் பெற்றுள்ளன.  விரிவுபற்றி முற்பதிப்பில் வெளிவந்துள்ள 19 பெரியார்களின் பிரிவாற்றாமைப் பாடல்கள் விடப் பெற்றன.

சிவமயம்
இந்நூல் ஆக்கியோன் இயற்றிய

கதிரைவேல் சரித்திர சாரம்

எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சொல்லுபய கதிர்காமத் தூநா கப்பர்
    சுதன்கதிரை வேற்குரிசில் தொல்வே ளாளர்
கல்விமிகு நாவலர்மா ணாக்கர் மாட்டுக்
    கலைகள்எலாம் கற்றுணர்ந்து கற்பின் மிக்க
செல்விவடி வாம்பிகையை மணந்து சென்னை
    சேர்தேமா யாவாத திமிரம் ஒட்டி
நல் அரிக்குக் கண்டிகைநீ (று) என்றே நாட்டி
    நவையிறுரைத் தமிழ்ச்சங்க நாதர் ஆகி,            1

புத்தமத இருள்நீக்கிப் புலவ நாதன்
    பொற்சபை கண்(டு) அவ்வவைக்குத் தலைமை பூண்டு
பத்திமுறை யேயருட்பா என்றே நீதி
    பதிவியக்க விதிகாட்டி அப்பா விற்குச்
சத்தியமாய் உற்சவங்கள் இயற்றி ஈங்குத்
    தரணிபுகழ் அவதானம் சதமும் ஆற்றி
சித்தியளி நீலகிரிக் குன்றூர்க்(கு) ஏகிச்
    சிவன் அடிக்கீழ்ச் சேரும்ஒரு சீர்பெற்றாரே.         2

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
கதிரை நாயகன் துணை

சதாவதானம்
ஸ்ரீலஸ்ரீ நா. கதிரைவேல் பிள்ளை அவர்கள்

சரித்திரம்

காப்புதேன்மாமணி திகழும்மலர்த் திருவாரெழில் மருமன்
மான்மாமணி மருகன்சபை மருவும்சிவ கதிரை
வேன்மாமணி சரிதம்சொல விரிநீர் உலகத்தே
வான்மாமணி மழமாஅருள் மலர்த் தாள்பணிந் திடுவாம்.

கடவுள் வாழ்த்து
சிவபெருமான்

ஆனேறும் பெருமானார் அரியேறும் கரியவனார் அளிக ளேறும்
தேனேறும் திருமலரின் திசையேறும் சதுமுகனார் செயல்கள் ஏற
மானேறும் சுரம் அசைய மதியேறும் சடையசைய மன்றில் ஏறும்
வானேறும் கடவுளர்தம் வாழ்த்தேறும் சிவனடியை வணங்குவாமால்

உமாதேவியார்

எத்தேவர் செய்தொழிற்கும் முதற்பொருளாய்
    இலக்குமற இறைவ னார்க்கும்
வித்தாகி இருபொருளை விழைந்தளித்தப்
    பொருளாக விளங்குத் தேவி
சித்தாய பெருமாட்டி சிவகுகனை
    உவந்தளித்த செல்வி என்றும்
சித்தாந்த ஒருமுதல்வி சிவகாம
    சுந்தரிதாள் சிந்தை செய்வாம்.

விநாயகர்

நாரணனார் உருமாற்றி நல்லரவா
    யோகிருந்து நண்ண அன்னோள்
பூரணப்பேர் உருவளித்துப் புகழருளும்
    புண்ணீயத்தைப் புனித மிக்க
வாரணக்கே தனன்வேண்ட வனத்தன்று
    நமையீன்ற வள்ளித் தாய்முன்
வாரணமாய் வந்ததனி அத்துவித
    அரும்பொருளை வணங்கி வாழ்வாம்

சுப்பிரமணியர்

ஒருமயிலை வலத்தானை ஒருமயிலை
    இடத்தானை உருக்கை வேண்டும்
திருமயிலை அளித்தானைச் சீர்மயிலைப்
    பதியானைச் சிந்தை செய்வோன்
தருமயிலைத் தந்தானைத் தமிழ்மயிலை
    வளர்த்தானித் தவிர்த்த தோகைக்
கருமயிலை ஊர்வானைக் கரமயிலைத்
    தரித்தானைக் கருத்துள் வைப்பாம்.

சமயசாரிய சுவாமிகள்

சீர்பூத்த காழிநகர்ச் சிவஞான சம்பந்தர் திருத்தாள் போற்றி
கார்பூத்த கடல்மிதத்த கவின்நாவுக் கரசரது கழல்கள் போற்றி
பேர்பூத்த திருத்தொண்டைத் தொகைவிரித்த பெரியவர்தம் பூந்தாள் போற்றி
ஏர் பூத்த மாணிக்க வாசகனார் இணையடிகள் என்றும் போற்றி

சந்தானாசாரிய சுவாமிகள்

சிவஞான போதம்செய் திருவெண்ணைய்
    மெய்கண்ட தேத்தாள் போற்றி
சிவஞான சித்தியளி சித்தாந்தி
    அருணந்தி சிவன்தாள் போற்றி
சிவஞான மறைஞான திருவாளன்
    செய்யஇணைத் திருத்தாள் போற்றி
சிவஞானப் பிரகாசம் செழித்தஉமா
    பதிக்குரவன் செந்தாள் போற்றி

வித்தியா குரவர்

செந்தமிழ் மணியே போற்றி சிவம்வளர் அரசே போற்றி
இந்தமா நிலத்தில் உள்ளோர்க் கெழிலருட் பாவினுண்மை
தந்திட உற்ற எந்தை சதுரவா சகனே போற்றி
கந்தவேள் சபைக்கு நாத கதிரைவேற் குரவ போற்றி

நூல்

கதிரைவேலர் காசினி கண்டது

    அகண்டாகார நித்த வியாபக அழல்சோதிப் பிழம்பாகிய அமலனுடன் அப்பில் தண்மையென அபேதமாய் இலங்கும் அம்பிகையின் அருளமுது உண்டோன் அருட்பாக்களை அணிந்து ஒளிரும் திருக்கோணவரையும் திருக்கேதீசமும் திகழப் பெற்றது; சிங்காரவேலர் துங்க நற் கோவில்கள் எங்கணும் ஓங்கும் எழிலினை உடைத்து; அமிழ்தினுமினிய தமிழணங்கினுக்கு ஓர் அரும் பீடம்; முத்தமிழ்க் கடலை முழுவதூஉம் உண்ட உத்தமப் புலவர்களுக்கு உற்பத்தித் தலம்; சல நிலவளங்களைச் சாலவும் வகித்ததாய் மிளிரும் இமிழ் திரைப்பரவை சூழ் ஈழநாடு.  அங்கு மேதாஇயர் வாழ் மேலைப் புலோலியிலே, தொன்று தொட்டு நிலவும் தூ வேளாள மரபில் தோன்றிப் புதுச் சந்நிதிப் புனிதவேள் பூங்கோயில் தர்மகர்த்தத்துவம் பூண்டு.  அப்பெருமானுக்கு அல்லும் பகலும் அடிமைத் தொண்டு இயற்றும் அன்பையே இன்பு எனக்கொண்டு ஒழுகும் நாகப்ப பிள்ளை என்பார் நல்லறமாம் இல்லறத்தை நண்ணி நடத்தினார்.  அவர் தமக்கு ஓர் ஆண்மகவு இன்றி தவமணியாம் கதிர்காமக் கதிரைவேற் கடவுள் சந்நிதி அண்மிக் கரு மிகுந்த அருணகிரியார் அருள் திருப்புகழை ஓதினார்.  "கனிந்துருகும் அடியவர்களுக்குக் கருணை சுரக்கும் காங்கேய! எமக்கு ஓர் ஆண் மகவு அருளல் வேண்டும்" என்று இரந்தார்; இல்லம் திரும்பித் தாரணியோர் அனுட்டிக்கற் பாலனவாம் விரதங்களுள் தலைமையுடைத்தாம் சட்டி விரதத்தை அனுட்டித்து வந்தனர்.  இம்மை மறுமைப் பயன்களை எளிதில் ஈய வல்ல இவ்வரிய நோன்பை அவர் உஞற்ற, அ·திற்கு உரிய அறுமுகன் அருளால் அவர் தம் அருமைக் கற்பரசியார்க்குக் கருப்பம் எய்தியது.  பிரசோற்பதி ஆண்டு மார்கழி மதி குருவாரம் 3ஆம் தேதிக்குச் சமமான 1860ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அருள் பூடண உண்மை அவனியில் ஓங்கவும், அகம்பிரமவாத அலகைகள் அழியவும்.  குண்டர்கள் கொட்டம் குறையவும், வேளாளர் மேன்மை விளங்கவும், உண்மை அருட்பா இ·து என உலகு உணர்ந்து உய்யவும் ஒரு மாண்புடைய ஆண்குழவி பிறந்தது.  அக்குழவி கதிரைவேல் கடவுளின் அருளால் காசினி கண்டமையால் அதற்குக் "கதிரைவேல்" என்னும் கவின் நாமம் சூட்டினர் கண்ணுதல் அடியார் பன்னிரு கரத்தனைப் போற்றி வளர்ப்பாராயினர்.

பள்ளியில் அமர்ந்து பண்டிதர் ஆயது

    பிறை என வளரும் பிள்ளைப் பெருமான் பள்ளியில் அமரும் பருவம் பெற்றதை நாகப்பர் கண்டு நனி உவப்பு எய்தித் தம் தவப்பேற்றைச் சைவ வித்தியாசாலையில் அமர்த்தினர்.  அவண் எம் குருநாதர் அம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அங்கை நெல்லிக்கனியென உணர்ந்தனர்.  பின்னர் பிறைமதிசூடிய இறைவன் புரையும் கறை இல் ஆசிரியர்பால் கன்மம் துமிக்கும் தீக்கைகள் பெற்று, நல்லூர் தோன்றிய நாவலர் சீடருள் சிறந்த யாழ்ப்பாணத்து நல்லூர் - மகாவித்துவான் தியாகராசப் பிள்ளையவர்கள் முதலியோர் மாட்டுத் தொல்காப்பியம் ஆதி இலக்கணங்களையும், சங்க நூல்களையும், தருக்க சாத்திரங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும், வடமொழிக் கிரந்தங்களையும் செவ்வனே கற்றுணர்ந்து, நல்லூர்-சதாசிவப் பிள்ளையவர்களான் சந்தேகம் பல தெளியப் பெற்றனர்.  பதினெட்டாண்டுள் பாவலரும் நாவலரும் பரவும் பண்டித சிரோன்மணியாய் எண்திக்கும் ஏத்த இலங்கினர்.

இல்லறமாம் நல்லறம் ஏற்றது

    கற்றோர் மதிக்கும் காளையாம் கதிரைவேல் பெருமான் "இல்லறமே வாழ்வினுக்கும் உயர்கதிக்கும் வித்தும் ஆம் துறவறத்தின் வேரும் ஆம்" என்னும் ஆரணமொழியின் உள்ளக் கிடக்கையைக் கள்ளம் அறக்கற்ற கவிஞர் பெருமான்.  ஆகலான் தம் பதி வந்த கோவிந்த பிள்ளை எனும் குணம் மிக்கோன் கோது இலாத் தவத்து உதித்து, அறிவில் அயன் தேவியையும், கற்பில் வடமீனையும் ஒத்திருந்த வடிவாம்பிகை என்னும் கடிமலர்க்கோதையைக் கனிந்து அளித்தோர் களிப்பக் கலியாணம் செய்து, கோது இலா இல்லறத்தை நீதியுடன் ஆற்றி வந்தனர்.  அவர்க்கு மங்கையர்க் கரசியே இற்றை ஓர் உருக்கொளீஇ வந்தால் ஒப்ப ஒரு பெண்மகவு செனித்தது.  அத்திருக்குழவிக்குச் சிவனாம்பிகை என்னும் சீரிய பெயர் அளித்தனர் கூரிய மதியினர்.

சென்னை சேர்ந்து செந்தமிழ் வளர்த்தது

    செச்சையப்பன் இருதாளை உச்சியில் அணிந்து, பச்சிம புலவகான நகரத்தில் பைந்தொடியோடு இனிது உறைந்த எம்பெருவாழ்வை அநாரிய பாடையில் விழுந்து மதிமயங்கி இருந்த எங்கள் புண்ணியப் பயன்கள் சென்னை அம் பதிக்கு வலித்தன.  சேய இளம் பரிதி எனச் சென்னை சேர்ந்த செவ்வேள் அடியார் செந்நாச் செவிலிகள் செப்பும் ஸ்ரீலஸ்ரீ சபாபதி நாவலரிடம் கெழுதகை நட்பு கொண்டு, அவர்பால் அவஞானம் அழிக்கும் சிவஞான பாடியம் பெற்று, அத்திருப்பாடியத்தின் உண்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்ந்தனர். அது காலை அத்துவித சித்தாந்த போதகாசிரியராய்ப் பிறங்கிய, "வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம்" ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக்கர் அவர்கள் பாலும் அன்பு பாராட்டி வந்தனர்.  மாதொருபாகனாம் வேதநாயகன் பாத பத்மங்களைச் சித்தத்து இருத்திப் பத்தி மலர் தூவிப் பராவும் சிவவேடம் தரித்த தவவேடத்தார் வேண்டுகோள்படிச் சிவ§க்ஷத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரித வசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை முதலியன முதியோர் புகழும் கதிரைவேல் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டன.

    இவையிற்றைக் கண்ட கற்றவரும், நற்றவரும் மற்றவரும் வெற்றிவேல் போற்றும் குற்றம் இலா எம் குரவரை அடைந்து "குருமுனியே! இக்குவலயத்து உற்றால் என விளங்கும் குணக்குன்றே! தமிழ்க்கடலை உண்ட தவப்பேறே! செந்தமிழ் அணங்கினுக்குச் சிறந்த சுதர்கள் பலர் உளரேனும், அவர்கள் அன்னையாம் கன்னிக்கு ஏற்றன ஆற்றினார் இல்லை.  அப்பிராட்டியின் அகம் உவப்ப அரும் பேர் அகராதி ஒன்று ஆக்கல் வேண்டும்" என்று விழைந்து பன்முறை கேட்ப, அவர்தம் விழைவைத் தழைப்பான் உன்னித் தாளாண்மைமிக்க வேளாளர் தமிழ்ப்பேர் அகராதியொன்று தமிழ் நாட்டிற்கு உபகரித்துத் தமிழ்த்தாய்க்குத் தலைமகனாய் இலங்கினர்.  அவ்வகராதியின் அருமையைப்

"பூவில் இடைகடை ஆதிஎழுத்தின் முன்பேருறப் பதித்த பத்தகங்கள்
 யாவும் இடை கடை எனவே யாழ்ப்பாணப் புலோலி நகரினின்மா சீர்த்தி
 பாவுபுதுச் சந்நிதியான் அருட்கதிரை வேற்புலவன் பதித்த மேன்மை
 மேவும் அகராதியிதே முதலதெனற் கிதன்பெயரே விளக்கும் அன்றே"

    என்று தஞ்சை சதாவதானம் பிரமஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் புகழ்ந்தமை காண்க.  பிறரும் ஐயர் மொழியை மணி என அணிந்தனர்.  அதிவீரராம பாண்டியர் அருளிய கூர்மபுராணத்திற்கு உரையும் கண்டனர் கண்டிகை அணிந்த கதிரைவேலர்.  பட்டினத்து அடிகளார் புராணத்தை முன் ஒருவர் முதல் நூல் சிந்தியாது மொழிந்தமையால், அப்புராணத்துள் முதல் நாற்கு முரணாகக் கூறும் பாக்களை நீக்கி முதல் நூல் தழுவிப் பல பாக்கள் பாடிச் சேர்த்து பதிப்பித்தனர்.  அதில் எம்பெருந்தகை இயற்றிய செய்யுள் நடை கச்சியப்ப முனிவர் செய்யுள் நடையைக் கடுக்கும்.

மாயா வாத மருளை மாய்த்தது

    இங்ஙனம் வண்தமிழ்க் கன்னியின் தண்தமிழ்ச் சுதர்களுள் தலைமை வகித்து, முன் அறத்தை முரணாது இயற்றும் வேளையில் சூளை நாயகர் வேளை வணங்கும் வேலைவிளித்து, "கந்தனைக் கருதும் கதிரைவேலே! எமது யாக்கை வீக்குற்ற இக்கால் நாரணன் அறியாக் காரணன் அருளிய ஆரணத்து ஈற்றைப் பூரணமாய் உணரா நாம் பிரமம் என்னும் வேம்பு ஒத்த சோம்பர்கள் சைவ நிந்தனை புரியா நிற்கின்றனர்.  அம் மட்டிகளின் கொட்டம் குறைப்பது உம் கடனாம்" என்ன, அவ்வமுத வாக்கைச் செவிமடுத்த எம் சீரியர் "மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும்" என்னும் நந்தி எம்பெருமான் பந்தம் அறுக்கும் வார்த்தையைச் சிந்தித்துச் சிந்தாதிரிப்பேட்டையில் சிவன்யாம் என்னும் தீக்கரிகள் குழுவில் அரி எனப்புக்குப் பொறித்த வினாக்கட்கு அன்னோர் விடை அளிக்காது அவை கலைத்தனர்.  மற்றொரு நாள் காசிவாசி - மகாவித்துவான் - சித்தாந்த பீடம் ஸ்ரீலஸ்ரீ செந்திநாத சுவாமிகள் அக்கிராசனத்தின் கீழ் மிக்கது ஓர் சபை தக்கவர்களால் சேர்க்கப்பட்டது.  அப்பேர் அவையில் அத்துவிதம் செழிக்க வந்த அறிஞர் தருக்கநெறி பிறழாது சுருக்கமாகக் கடாவிய வினாக்கட்குச் செவ்வன் இறை இறுக்காது விழித்தனர் வேதாந்திகள்.  அதைக் கண்ட அக்கிராசனர் முக்கணன் நாமம் முழக்கி மக்கள் உய்ய வந்த மாதவப் பெருந்தகைக்கு "மாயா வாத தும்ச கோளரி" என்னும் மாண்பட்டம் அளித்தனர்.  இலக்கியம் இலக்கணம் தருக்க நூல்களில் வல்ல புலவர்களும் புலோலிப் பிறந்த புண்ணியனைப் புகழ்ந்தனர்.  அவ்வெற்றியைக் கேட்ட செற்றம் இலா நாயகர்க்கு உற்ற கழி பேர் உவகையை ஈண்டு விரிக்கின் பெருகும்.

ஆரணி சமத்தான வித்துவானாயது

    நான் பிரமம் என்னும் நாகங்கட்கு இடி என இலங்கிய பிள்ளையவர்களின் பெற்றியைக் கேட்ட பெற்றிமிகுந்த ஆரணி அரசர் எமது ஆசிரியப் பெருந்தகையை அழைத்துச் "சைவ மணியே! நம் சமத்தானத்துக்குத் தாங்கள் வித்துவானாய் விளங்கல் வேண்டும்" எனக் களங்கம் இலா உளம் கொண்டு உரைத்தனர்.  அங்ஙனே அவர் அகம் மகிழ "நும் சமத்தானத்திற்கு வித்துவானாய் விளங்குவல்" என வித்தகர் விடை விளம்பப் புளகம் போர்த்தனன் தீர்த்தனைப் போற்றும் ஏந்தல்.  அன்று தொட்டு அச்சமத்தானம் அடைந்து அரசன் சிறார்கட்கும் பிறர்க்கும் அம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிவுறுத்தி வந்தனர்.  அ·து அங்ஙனம் ஆக அவண் போந்து நிதம் அத்துவிதம் எனப் பத்தி அழிக்கும் மாயா வாதத்தை ஓயாமல் போதித்து வந்த ஓர் சாத்திரியாரிடம் பாத்திரம் சிவம் எனப் பணியும் மாயா வாததும்ச கோளரியை வாதிப்பான், மன்னன் விடுப்ப, அத்திருப்பணிக்கு என அவனி தோன்றிய எமது ஐயர் சாத்திரியார் நாத்திகக் கொள்கையை மாத்திரைக்குள் ஒட்டி, அன்னவர்க்கு அத்துவித இலக்கணத்தை அறிவுறுத்தினர்; அ·தை நேரில் கண்ட அரசரால் எம் குருநாதர்க்கு "அத்துவித சித்தாந்த மதோத்தாரணர்" என்னும் அரிய பட்டம் அணியப் பட்டது.

பூதிமாட்சி புகன்ற மேன்மை

    மாயாவாத தும்ச கோளரி, ஆரணி நகர சமஸ்தான வித்துவான், அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் என்னும் பட்டங்களைப் பெற்றுப் பலப்பல இடங்களில் உற்றுப் பிரசங்க மாரி பொழிந்து, சைவ வான்பயிர் ஒம்பச் செய்து வருங்கால் அவர் இயற்றிய  சைவ பூடண சந்திரிகையில், அரிமேல் துயிலும் கரியவன் தரித்தல் கண்டிகை நீறு என்பது ஆழ்வாராதிகள் உள்ளக்கிடக்கை என்றும், அதற்குக் கரியாக.

    கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே யிடும்
    பெரிய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
    உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றோர்க்கு
    அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனிஎன்றுமே.

என்னும் பிரபந்தச் செய்யுளை மேற்கோளாகக் காட்டி மண்குறி இடையில் உண்டாயது என்றும் வரைந்தது முற்றிலும் குற்றம் என்று அழகிய மணவாள இராமாநுஜ ஏகாங்கியாரைத் தலைவராகக் கொண்டு வாதிக்க எழுந்தனர் வைணவர்கள்.  பிள்ளைப் பெருமான் ஏகாங்கியார்க்குப் பின்னிடாது பிரமன் தாதை பூதி அணிந்த புண்ணிய மூர்த்தி எனப் பிரபந்தத்தினின்றும், வண்ண உரைகள் எண்இல காட்டிப் பிரசங்கவாயிலானும் பத்திரிகைவாயிலானும் நிறுவினர்.

    இவ்விவாதம் மூன்று மதிகாலம் நீண்டது.  இறுதியில் சென்னை வேணுகோபால சுவாமி அரங்க மண்டபத்தில், அத்தியாச்சிரம பாலசரஸ்வதி ஸ்ரீலஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் அக்கிராசனத்தின் கீழ் ஈட்டிய மாபெரும் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான வித்துவ ஜனர்களின் முன் அத்துவித சித்தாந்தி வேதாகம மொழியையும் தழுவிக் கண்ணன் கண்ணுதல் அடியார் என்றும், அவர் அக்கமணியையும் அருநீற்றையும் அன்புடன் அணிந்து இன்புடன் ஒழுகுகின்றனர் என்றும் கன்னல் விதானத்தில் கள் மாரி பொழிந்தால் என்ன உபந்நியாச மாரிபொழிந்து, உண்மை அடியவர்களை உவகைக் கடலில் தோய்த்தனர்.  பின்னர் பிள்ளையவர்கள் சைவ பூடண சந்திரிகையில் விட்டுணு விபூதி ருத்திராக்க தாரணர் என்பதற்குப் பல பாசுரங்கள் நாலாயிரப்பிரபந்தத்திலேயே திரட்டிப் புனைத்து அதனை இரண்டாம் முறை அச்சிறுத்திச் சென்னை செங்கான்கடைப் பந்தரில் மகா வித்துவான் புரசை ஸ்ரீமத் பாலசுப்பிரமணிய முதலியார் எம்.ஏ. அவர்களைச் சபாநாயகராய் அமர்த்தி அரங்கேற்றினர்.  இ·துடன் வைணவ விவாதம் முற்றுப் பெற்றது.

    விண்டு மூர்த்தி விபூதி ருத்திராக்க தாரணரே என்று நிறுவி வெற்றி பெற்ற பின்னர் எமது பற்று இலார் பவம் ருசிக்கும் சிவநிசிப் புராணத்திற்குச் சிறந்த விருத்தியுரை விளக்கினர்.  தடங்கருணைப் பெருங்கடலாய இறையுடன் இரண்டறக் கலந்த அடியவர் திருச்சரிதங்களைக் கேட்போர் மனம் கனிந்து உருகப் பிரசங்கித்து வருவாராயினர்.  அது காலை அவர்க்கு ஓர் சேய் உதித்துச் சேய் அடி சேர்ந்தது.  அ·தும் செவ்வேள் அருளாம் எனச் சிந்தித்துச் சித்தாந்தம் செழிக்கச் சிறிதும் தளர்ந்தார் இல்லை.

ஆவினன் குடி யாத்திரை செய்தது

    அரியும், அயனும், அக்கினியும், அவனியரசியும், ஆவும், ஆதித்தனும் அருந்தவம் செய்து அறுசமயக் கடவுளை அருச்சித்துப் பெறுதற்கு அரிய பெரும் பேறு அடையப் பெற்றதும், மலர்தலை உலகில் மன்னும் மரகத மயூரன் மாத்தலங்களுள் தலையாய் மருவுவதும், கலிமிக்க இக்காலத்திலும் கண்டு தொழுவோர்க்கு வேண்டிய வரங்களை அருள வல்லதூஉம் ஆய பழநித்தல புராணத்துக்குப் பதினைந்து தினத்தில் எம் பாவலசிகாமணி விருத்தியுரை வரைந்து பதிப்பிக்கச் செய்தனர்.  அ·தைப் பதித்த் பி.நா.சிதம்பர முதலியார் சிந்தித்த வண்ணம் பழநிப்பதியிலேயே வெளியிடக் கருதிச் சென்னையினின்றும் வெளிக்கிட்டனர் வேலர்.  அவர் ஆவினன் குடியை நாடி வருவதை அவண் இருந்த அந்தணரும், அடியவர் குழாங்களும், அரசாங்க உத்தியோகத்தர்களும் அறிந்து அருளுரை எதிர்கொண்டு அழைப்ப, எம் குருநாதர் அனனவர்களுடன் பன்னிருபுய அசலப் பரமனார் பொன்நிறக் கோயிலைச் சென்னி உற வணங்கித் திருக்கோயிலுள் சென்று பெருமானையும் பெருமாட்டிகளையும் தரிசித்து ஓர் நிலயத்து இருந்தனர்.  மறுதினம் மாயா வாத தும்ச கோளரியால் பழநித்தலப்புராணத்தில் ஓர் சருக்கம் சித்தாந்த நயம் தோன்றப் பிரசங்கிக்கப்பட்டது.  அப்பிரசங்க அமுதைச் செவிமாந்த சிவனடியார்கள் சித்தாந்த மணிக்குப் பரிவட்டம் கட்டிச் சர்வ வாத்தியங்கள் முழக்கத்துடன் அவரைக் கிரிவலம் செய்வித்து, வாழ்த்தி, யோகமூர்த்தி ஆலயத்துக்கு அழைத்துச் சென்று அறுமுகத்து அண்ணலார்க்கு அருச்சனை செய்வித்தார்கள்.  மாதவப் பெருந்தகையும் அகத்து ஒளிரும் குகத்தேவைக் குனிந்து வணங்கிச் சந்நிதி விட்டு முன் இருந்த மந்திரத்தில் தங்கி, அடியவர் வேண்டுகோள்படி அவண் ஐந்து நாள் வகித்து சென்னை நண்ணிச் செவ்வனே வாழ்ந்திருந்தனர்.

மதுரைத் தமிழ்ச்சங்க மாண்புலவராயதும்
புத்தமதப் புன்மை விளக்கியதும்

    பழநித் தலத்திற் பரிவட்டம் தரிக்கப்பெற்ற பண்டிதர் கோமான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த வென்றி வேலரும், தவத்தில் கதித்த அகத்தியனாரும், கணக்காயர் மைந்தரும், கன்னித் தமிழ் வளர்த்த மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவ மணியாய், எப்.ஏ., பி.ஏ., வகுப்புகட்குச் சோதனைக் கர்த்தராய்த் துலங்குங்கால், தூ அடியார் பலர் சேர்ந்து அவர்பால் அணைந்து "அன்பு உருவாய ஐய! சின்னாள் பல் பிணிச் சிற்றறிவினர் ஆய சீவகோடிகள் நிமித்தம் திருவருளையே திருமேனியாகக் கொண்டு, திருமுறைகளை அருளிய சிவபெருமானிடம் தீக்கை பெற்றுச் சிவஞானபோத உண்மை அறிந்து சிவமாய் விளங்கும் திருவாதவூர் ஆதி தினகரர்களால் விலக்கப்பட்ட புத்த இருளில் புண்ணியக் குறைவால் சிலர் நண்ணிப் பித்தம் தலைக்கேறிப் பத்தி நெறி நில்லாது, முத்தி சேர்ந்த முதியோர்களையும், அவர்க்கு அன்பு பூண்டு ஒழுகும் அடியவர்களையும் எள்ளி நகையாடுகின்றனர்; அவர்கட்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி ஆள வல்ல அறிஞர் தேவரீரே அன்றி வேறு யாவர்?" என்று விண்ணப்பித்தனர்.  அவ்வார்த்தைகளைக் கேட்ட ஆரணி நகர சமஸ்தான வித்துவான் அன்று இரவே "புத்தமத கண்டனம் என்னும் ஓர் புனித நூல் இயற்றி, ஆறு தினத்துக்குள் அச்சுவிமானம் ஏற்றி, அனல்பட்ட அத்தியை அங்கம் பூம்பாவை ஆக்கிய அருள் அற்புதம் நிகழ்ந்த திருமயிலாப்பூரிலே, பிரம மகோற்ச்வகாலத்திலே, பிக்ஷ¡டன மூர்த்தி உற்சவத்தன்று அரங்கேற்றம் செய்தனர்; சென்னை இராயப்பேட்டை பெளத்த ஆச்சிரமத்தின் பாங்கர் பெரிய பாளையத்தம்மன் பெரிய மண்டபத்தில் அரியதோர் உபந்நியாசமும் செய்து புத்தமதத்தில் தத்துவம் இன்மையை விளக்கினர்.

வேளாளர் வருணம் விளங்க உரைத்தது

    அடுத்த தினம் சென்னை விடுத்து இறைவன், இறைவி, இளையோன் இவர்களால் புரக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றனர்.  அவண் காராளரை மன்னர் பின்னர் என்றும், அங்ஙனே நிகண்டு கூறுகிறது என்றும், அதனைப் புரட்டி நான்காம் வருணத்தார் என்று அச்சிட்டனர் ஆறுமுக நாவலர் என்றும் கூறும் வருண சிந்தாமணி விடயமாகப் பலப்பல விவாத சபைகள் சேர்ந்தன; அவையிற்றில். காலம் எல்லாம் காமனைக் காய்ந்து சோமசுந்தரனைச் சேர்ந்த சுத்தராம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானை இகழ்ந்தனர் உண்மை உணரார்.  அவ்வசை வாசகங்களைக் கேட்ட அவர் மாணவரின் மாணவராய அருந்தவப் பெருந்தகையார் அங்கயற் கண்ணம்மை மன்றல் மண்டபத்தில், வடமொழியினும் தென் மொழியினும், பிற மொழிகளினும் வல்ல சங்கப் புலவர்கள் ஏங்க "வேளாளர் நான்காம் வருணத்தவரே" என்று சுமார் 6 மணி காலம் உபந்நியசித்து, வைகறை எழுந்து வைகையில் மூழ்கி, அறுபான் நான்கு அருள் ஆடல்கள் புரிந்த அழகனையும், அங்கயற்கண் நங்கையையும் அங்கம்உற வணங்கிச் சென்னை சேர்ந்தனர்.  சேர்ந்ததும் செயற்கு அரிய செய்து சித்தாந்த முத்தி சேர்ந்த சேக்கிழார் ஆதி பெரியோர்கள் திருவருளால் திருவாய் மலர்ந்தருளிய அருள் நூல்கட்கு முரணாக வேளாளரை வைசியர் என வகுக்கும் நூலினும், அதனைச் சிந்தியாதும் கண்ணுறாதும், பண்டிதர்கள் பாடிச் சூடிய சாத்துகவிகளினும் மலிந்து கிடந்த மாசுகளை மணிகடல் சுலவும் மாநில வரைப்பில் உள்ள மற்றவர்கள் கண்டு மனம் மகிழப் பத்திரிகையில் பிரசுரித்தனர்.

புராணம் உரைக்கும் புண்ணியம் ஏற்றது

    அவர் கல்வி ஆற்றலை அறிந்த ஸ்ரீமத் பாலசுப்பிரமணிய முதலியார், எம். ஏ., திருமயிலை - மகாவித்வான் சண்முகம் பிள்ளை முதலிய முதியோர் விழைந்த வண்ணம் வித்தகர் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலை கண்டுணர்ந்த சிவஞான சுவாமிகள் மாணவருள் சிறந்த ஸ்ரீமத் கச்சியப்ப முனிவர் பச்சைமயூரன் அருளால் பாடிய தணிகைப் புராணத்தைத் தனபதிகள் வாழும் கன பதியாம் சென்னைக் கந்தசுவாமி ஆலய வசந்த மண்டபத்தில் பிரதி ஆதிவாரத்தினும், சிந்தாதிரிப் பேட்டை வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையடிவருள் ஸ்ரீமந் வேதாசல முதலியார் விரும்பியபடி விளங்கிழையாள் அருள் பெற்ற பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணத்தையும், கந்தன் அருளால் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிய கந்த புராணத்தையும் முறையே புதவாரத்தினும், சனிவாரத்தினும் பிரசங்கித்து வருவாராயினர்.  இப்பிரசங்க அமுத நறுஞ்சுவையை நுகர்ந்தோர் நூல் ஆராய்ச்சியில் மிகுந்த நுண்ணறிவாளரே.

அருட்பா மேன்மை அவனியில் விளக்கியது

    இவ்வண்ணம் மாயன் இடும் புத்த இருள் விலக்கிய சேய இளம் பரிதியாம் மாயா வாத தும்ச கோளரியின் கீழ்ச் செந்தமிழ் உலகம் மிளிர்வதைக் கண்ட போலிப் புலவர்கள் பொறாமல் பொறாமையால் புதுச்சந்நிதியினைப் போற்றும் புலோலிப் புலவரேற்றின் புகழொளியைச் சிறுக்கப் பல சூழ்ச்சிகள் செய்தும், அவை பயன் இலவாயின.  பின்னர், பிள்ளையவர்களை யாழ்ப்பாணச் சிங்கம் என்றும், சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தியே நம் பந்தம் கழிக்க நாகப்பர் சுதராய் உற்றனர் என்றும், சோமசுந்தர நாயகர்க்குப்பின் சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்தைச் செழிப்போரில்லை என வாடிய எங்கள் உள்ளம் களி துளும்பச் "சோமனார் சென்றார் சூரியனார் தோன்றினார்" என்ற உலகம் உரைப்ப உதித்த கதிரைவேல் என்றும், சைவ சித்தாந்தக் கோட்டையைத் தகர்க்க வரும் புறச்சமயவீரர்களின் சிரங்களைக் கொய்யச் சைவ பூடண சந்திரிகை எனும் வாள் ஆயுதத்தை நமக்கு அளித்த நாயகர் என்றும், பலவாறு போற்றிய பண்டித ரத்னங்கள் வினைவயத்தான் நஞ்சநெஞ்சினர்களாகி "சென்னையில் உள்ளார் பலர் வடலூரரை வள்ளல் ஆகவும் அவர் பாக்களை அருட்பா ஆகவும் கொண்டுள்ளமை யானும், அவரோடு நேரில் வாதித்து அவர் பாக்கள் அருட்பா ஆகாது என நிறுவினர் ஆறுமுக நாவலர் ஆகலானும், அவர் மாணவரின் மாணவர் அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் ஆகலானும், அவர் தொகுத்த அகராதியும் அருட்பா என்பது திருமுறையே என அறைகின்றமையானும், விவாத சபைகள் சேர்த்து இராமலிங்க பிள்ளையையும், அவர் பாக்களையும் மருட் பிரகாச பொள்ளல் என்றும், மருட்பா என்றும் மனம் மகிழ்ந்துரைக்கும் யாழ்ப்பாணிகளைத் தாழ்த்திக் கூறின் எதிர்வேல் இல்லாது உலவும் கதிரைவேல் நம்மைக் கண்டிக்க எழுவர்.  சென்னைச் செல்வர்கள் மாயாவாத தும்ச கோளரிக்கு மாற்றலராய் விடுவர்கள்" என்னும் வஞ்ச யோசனைகளை நெஞ்சில் தாங்கி முல்லா வீதியில் ஓர் சபை சேர்த்து எம் குருநாதனையும் அவர் பரமாசாரியரையும் தூடித்து, இராமலிங்க பிள்ளை பாட்டை அருட்பா என்றும் ஐந்தாம் வேதம் என்றும் அவரை ஐந்தாம் குரவர் என்றும் உபந்நியசித்தனர்.  அக்கரப் பிழை இன்றி அறைய ஆற்றல் இல்லா மக்களை ஓர் பொருட்படுத்திக் கதிரைவேற்பிள்ளை அவர்கள் எதிர்த்தார் இல்லை.  பின்னர் அழுக்காறு உடையார் செந்தமிழ்க் கல்வி நிரம்பப் பெற்ற சித்தாந்த செல்வர்களை கொண்டு திருமுறைகளைத் திருவருட்பா என்போர் தீமையில் சிறந்தோர் என்று பிரசங்கிக்கச் செய்யின் பித்தமதம் எனப் புத்தமதத்தைப் பேசிய புலோலியார் தாமதிக்காது வாதத்திற்கு வருவர் என்று உத்தேசித்து, மகாவித்துவான் ஸ்ரீமத் ஆலால சுந்தரம் பிள்ளை அவர்கள்பால் ஏகி "சுந்தர! புறச் சமயக்களைகளை அறக் களைந்து சொல் அரிதாம் தணிகைப் புராணத்தை நல் இசைப் புலவர் முன் ஞாயிற்றுக்கிழமை தோறும் நன்னயம் ஆகப் பிரசங்கித்து வரும் கதிரைவேலையே வல்லவர் என்று வந்திருக்கின்றார் பலர்.  அவர் இன்னும் சின்னாள் இவண் நிலைப்பரேல் நமது வித்துவப் பட்டங்கள் செத்துவிடும் என்பது சத்தியம்.  திருமுறைகளைத் திருவருட்பா பெயரால் அழைக்கப்படவேண்டும் என்றும் தாங்கள் உபந்நியசிப்பின் கணக்கர் பாக்களைக் கறைப் பாக்கள் எனக் கழறும் கதிரைவேலைத் துதிப்போரும் பிணக்குறுவர்.  சங்கப் புலவரும் தன் நாடு சேர்வர்" என்ற இயம்ப, உரை ஆசிரியர் உற்றுநோக்கிப் "பற்று அறுக்கும் நீற்றை அணியும் நல்தவம் வாய்க்கப் பெற்ற இவர்களே இறை அருள் கொழிக்கும் முறைகட்குக் குறை கூறத் தொடங்குவரேல், சிவநெறியாம் தவநெறியைச் சேரும் புண்ணியம் கைவரப் பெறாக் கைதவர்கள் அருட்பாவை நிந்தியாது ஒழிவரோ! கலியின் வலிமையே வலிமை" என்று உன்னி வந்தவர்கட்கு முகமன் மொழிந்தாற் போல "அருட்பாவின் அருமையை அன்பர்களிக்க உபந்நியசிக்குதும்" என்று இசைந்து சிந்தாரிப்பேட்டையில் பந்தம் ஒழிக்கும் பன்னிரு முறைகளின் மேன்மைகளைப் பண்டிதர் வியக்கப் பிரசங்கித்தனர்.  புண்ணியம் இல்லாப் போலிப் புலவர்கள் தேவார ஆதி திருமுறைகளின் பெருமையையே சுந்தரர் பேசினர் அன்றி வடலூரர் பாக்களின் மாண்பை மனம் மகிழ்ந்து உரைத்தார் இல்லை என்று விசனித்து,

    "இலகா இருள் அலகை போல் இகலே பேசும்
    உலகா யதன்பால் உறாதே - பலகாலும்
    தாம்பிரமம் கண்டவர்போல் தம்மைக்கண்(டு) ஆங்கு அதுவே
    நான்பிரமம் என்பவர்பால் நண்ணாதே - ஊன்தனக்குக்
    கொன்று இடுவது எல்லாம் கொலை அல்ல என்று குறித்து
    என்றும்மற மேதெய்வம் என்றுஎன்று - வென்றிப்
    பொறையே எனும்புத்தன் பொல்லாத புன்சொல்
    மிறையே விரும்பி விழாதே சிறைமேவி
    வாழ்பவர்போல் மண்உலகில் மன்னும் உரோ மம்பறித்துத்
    தாழ்வுநினை யாதுதுகில் தான் அகற்றி - ஆழ்விக்கும்
    அஞ்சும் அடக்கும் அதுமுத்தி என்றுஉரைக்கும்
    வஞ்சஅம ணன்பாழி மருவாதே - செஞ்சொலால்
    ஆதிமறை ஓதிஅதன் பயன்ஒன் றும்அறியா
    வேதியர்சொல் மெய்என்று மேவாதே - ஆதியின் மேல்
    உற்றதிரு நீறும் சிவாலயமும் உள்ளத்துச்
    செற்ற புலையர்பால் செல்லாதே - நல்தவம்சேர்
    வேடமுடன் பூசை அருள் மெய்ஞ்ஞானம் இல்லாத
    மூடருடன் கூடி முயங்காதே - நீட
    அழித்துப் பிறப்பது அறியாது அரனைப்
    பழித்துத் திரிபவரைப் பாராதே"

என்று பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தியருளிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள் அருமைத் திருவாக்கை ஒரு சிறிதும் ஓராது மாயாவாதிகள், வைணவர்கள், புத்தர்கள், வேளாளரை வைசியர் என்போர் ஆகிய இன்னவர்களுடன் கலந்து பன்னிரு திருமுறைகளையும் பராமாசாரிய சுவாமிகளையும் நாவலர் பெருமானையும் தூடித்தனர்.

    சைவத்தின்மேல் சமயம் வேறு இல்லை என்றும், அச்சமய ஆசாரிய சுவாமிகளே ஜெகத் குருக்கள் என்றும், அவர்கள் அருளிய பாக்களே திருவருட்பா என்றும் பிரசங்கவாயிலானும் பத்திரிகை வாயிலானும் புத்தக வாயிலானும் கரதல ஆமலகம் போல் காட்டிய வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகர் அவர்களால் தாபிக்கப்பட்ட சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார் அருட்பா நிந்தையைக் கேட்டுச் சகியாது புலவர் ஏற்றை அடைந்து "நம் சபைத் தாபகரும் தலைவரும் ஆய நாயகர் அவர்கள் நம்பன் அடி நணுகிய பின்னர் நாவல மணியாய தங்களையே தலைவர் ஆகக் கொண்டு உள்ளோம்; சென்னைக் கண் உள்ள சிலர் முன் இரு வினையால் பன்னிரு முறைகளைப் பண்டைக்காலம் தொடங்கிப் பரன் அடியார்களான் வழங்கப்பட்டு வரூஉம் திருவருட்பா என்னும் பெயரால் அழைப்பது பாவம் எனப் பகர்ந்து பாவத்திற்கு ஆள் ஆகின்றனர்.  கற்றோர் அல்லாத மற்றையோர் அவர்தம் பொய் உரைகளை மெய் எனக் கொளாவண்ணம் திருமுறைக்குத் திருவருட்பா என்னும் திருப்பெயர் தொன்றுதொட்டு ஆன்றோர்களால் வழங்கப்பட்டு வருகிறதைப் போதித்தல் வேண்டும்" என வேண்டினர்.  அடியார்க்கு எளியவன் அடியைப் பேணும் மிடி இல்லார் சபையாரை நோக்கி, "அங்ஙனே செய்வல்" என்னும் அரிய விடை அளித்து அன்றுதொட்டு, "அருட்பா என்பது திருமுறையே" என்றும், "மருட்பா என்பது முக்குண வயத்தால் முறை மறந்து அறையும் இக்காலப் புலவர் பாக்களே" என்றும், பசு மரத்து ஆணிபோல் பரத கண்டத்தில், நாட்ட விரதம் கொண்டனர்.  சிந்தாதிரிப்பேட்டையினும் பிற இடங்களினும் கூடிய விவாத சபைகள் தோறும் சென்று சிற்றம்பலத்து ஆடும் பெற்றம் ஊர்தியே அருட்பிரகாச வள்ளல் என்றும், காழியில் தோன்றிக் கணக்கு இலாச் சீவரைக் கரை ஏற்றியகெளணியர் பெருமான் ஆதி கருணை வள்ளல்கள் திருவாய் மலர்ந்து அருளிய திருமுறைகளே திருவருட்பா என்றும், இராமலிங்க பிள்ளை அருட்பிரகாச வள்ளல் ஆகார் என்றும் அவர் பாக்கள் அருட்பா ஆகாது என்றும் ஆரண ஆகம அருள் நூல்களையும் மற்றைய தெய்வீக சாத்திரங்களையும் காட்டிச் சாதித்தனர்.  அவ் உபந்நியாச அமுதைச் செவிமடுத்த புண்ணியர் இன்புற்றார்; பூரியர் துன்புற்றார். ஸ்ரீமத் ஆலால சுந்தரம் பிள்ளை அவர்களும் அருட்பா என்பது திருமுறையே என்று அகமலர்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் அன்பர்கட்குப்  போதிக்கத் தொடங்கி ஆரணி நகர சமத்தான வித்துவானிடம் கெழுந்கை நட்பு பாராட்டினர்.

    ஆலால சுந்தரம்பிள்ளை அவர்களும் எமது ஆசிரியர் பக்கல் நண்ணியதைக் கண்டு ஆலம் அனைய வன்னெஞ்சர்கள் வடலூர்ப் பிள்ளையை வள்ளல் என்றும் ஆவர் பாக்களை அருட்பா என்றும் நாட்ட வேண்டும் என எழுந்த நோக்கத்தை அறவே ஒழித்துக் கதிரைவேற் பிள்ளை அவர்கட்கு இன்னல் விளைவிக்கத் தொடங்கினர்.  பன்னிரு புய அசலங்களையுடைய பகவனாரைச் சென்னியுற வணங்கிச் செந்தமிழ் மாலைசாத்தும் சீரியர்க்குப் பூரியர்கள் புரியும் புன்குறும்புச் செயல்கள் என் செய்யும்? அவைகள் பரிதிமுன்பட்ட பனி எனப் பறந்தன.  திங்கள் அணிந்த சங்கரன் அருளால் தெய்வத் திருவாளர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைகளையே திருவருட்பா வென்றும் மற்றையோர் பாக்கள் மருட்பா என்றும் பெருஞ் சங்கங்களில் சென்று அருஞ் சங்கப் புலவர் செய்த உபந்நியாசசாரங்களைப் பின் வருவார்க்கு உபகரிப்பான் உன்னி வேதாக மோக்த சபையார்கள் அவையிற்றைத் திரட்டி அச்சு விமானம் ஏற்றிப் புத்தகம் ஆக்கி அதற்கு இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்னும் எழில் நாமம் ஈந்து உலகு அன்னை சிகி ஆகிப் புன்னையின் கீழ்ச் சென்னி ஆறு உடையானைச் சென்னியுறத் தாழ்ந்து சிந்தித்து வந்தித்து வழிபடப் பெற்ற மயிலை அம்பதியிலே கபாலீச்சுரத்திற்கு எதிரிலே சித்தாந்த மந்திரம் என்னும் கிருகத்திலே கதிரைவேற்பிள்ளை அவர்களைக் கொண்டு அரங்கேற்றிப் பிரசுரித்தனர்.

    மருட்பா மறுப்பைக் கண்ட மக்களுள் மா தேவன் மலரடியை என்றும் மனம் தாங்கி, மறை ஆகம வழி நிற்கும் மேதாவிகள் ஆனந்த  வாரிதியில் ஆழ்ந்தனர்.  பூர்வ பக்கிகள் "கிணறு வெட்டப் போய் பூதம் புறப்பட்டாற்போல" யாழ்ப்பாணத்தானைத் தாழ்த்த வேண்டி யாம் காதலிப்ப இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாசங்கள் வெளியாயினவே; இவ் வண்ணம் நிகழும் எனக் கனவிலும் கருதவில்லையே; நாம் ஒன்று உன்னநாதன் ஒன்று நினைத்தனனே; என் செய்வது என்று இரங்கி ஏங்கி ஏறு அரும் ஆகுலக் கடலில் ஆழ்ந்தனர்.

    "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி" என்றால் போல வாளா இருந்த வண்தமிழ்க் கதிரைவேலையை வாதத்திற்கு அழைத்து, வடலூரார் மாண்பையும், அவர் பாக்களின் அபிவிருத்தியையும் அழித்தனரே பாவிகள் என்றும் சென்னைப் புலவர்கட்கும் பிறர்க்கும் புலோலிப் புலவன் புகழைக் கெடுக்கக் கருத்து உண்டேல் இராமலிங்கர் பாடலை எற்றிற்கோ இடையில் இழுக்க வேண்டும் என்றும் இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாசம் வெளிவந்ததற்குக் காரணர்கள் சென்னைப் புலவர்களே என்றும் கலியுகத்தில் இவர்கள் கலியாண நாட்டுக் கதிரைவேலை வலிந்து வாதித்தமையால் அன்றோ பன் அரிதாம் பன்னிருமுறைகளின் மேன்மை பார் எங்கணும் பரவியது; யாவும் இறை அருளே ஆகும் என்றும் பலர் பலவிதமாகப் பகரா நிற்கின்றனர்.  சுமார் முப்பதிற்றைந்து வருடத்துக்கு முன்னர் வடலூரில் நடந்தேறிய விடயங்களை இக்காலத்தில் மெய்பித்தல் மிக்க கடினம் என்றும் வழக்கு எடுப்பின் பிள்ளையை வள்ளல் என்போர் மீளா நரகத்திற்கு ஆளாவர் என்று கரையும் கதிரைவேலர் பயந்து கடல் மத்தியிலுள்ள தன் நாடு ஏகுவர்; அல்லது பிள்ளையை வள்ளல் என்றும் அவர் பாக்களை அருட்பா என்றும் ஒத்துக்கொள்வர் என்று யோசித்து விளம்பினர் வேறு சிலர்.  மருட்பா மறுப்பில் (27) இருபத்தேழு விடயங்கள் பொய்யாக வரையப்பட்டுள்ளன என்று 1904ஆம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை டவுன் போலீஸ் கோர்ட்டில் இராமலிங்கம் பிள்ளை தமயன் தனயராய வடிவேற்பிள்ளை அவர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டது.  காலண்டர் நம்பர் 24533-1904, சென்னை ஹைகோர்ட் வாசால நியாய துரந்தர சிங்கங்கள் ஆகிய பிரமஸ்ரீ வி.விசுவநாத சாஸ்திரியார், B.A.B.L., அவர்களும், பிரமஸ்ரீ சாமராவ், B.A.B.L., அவர்களும் கலியில் திருமுறையின் உண்மையை வலியுறுத்த வந்த பெருந்தகைக்காக வாதிப்பான் நீதிபதி முன்னர் நின்று 27 விடயங்களுள் 20 விடயங்கள் இராமலிங்கர் பாக்களில் வெள்ளிடை மலைபோல் விளங்குவதைக் காட்டினார்கள்.  எஞ்சிய ஏழும் போலி அருட்பா மறுப்பு, குதர்க்க ஆரணிய நாச மகா பரசு கண்டனம், இராமலிங்கம் படிற்றொழுக்கம், முக்குண வயத்தான் முறை மறந்து அறைதல், தத்துவ போதினி, தத்துவ விவேசினி, தத்துவ விசாரணி, தினவர்த்தமானி, சுகிர்தவசனி, ஞானபானு, நேட்டிவ் பப்ளிக் ஒபினியன், அற்புதப் பத்திரிகை, வர்த்தமான விமர்சனி, திராவிடப் பிரகாசிகை, பாவல சரித்திர தீபம் முதலிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விளம்பரங்களையும் கொண்டு, வடலூர் மேட்டுப்குப்பத்திற்குச் சென்று இராம லிங்கர் செய்கைகளை நேரில் கண்ட சீரியர்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்டன.  அவ்வழக்கைச் சுமார் ஆதிமாத காலம் விசாரித்த நீதிபதி கனம் அஜீஜுடின் சாயபு பஹதூர் அவர்கள் 1904 ஆம் வருடம் நவம்பர் மாதம்21 ஆம் தேதி ஆகிய கார்த்திகைச் சோமவாரப் புண்ணியத் தினத்தன்று தள்ளி விட்டனர்.  அந்நியாயாதிபதி அவர்களால் எம் குருநாதற்கு மாயாவாத தும்ச கோளரி என்ற பட்டம் உறுதிப்படுத்தப்பட்டது.  அவ்வெற்றியைக் கேட்ட கற்றறிந்த நல்தவர்கள் வரம்பு இலா இறும்பூது எய்தினர்.  சிவனே கதி அவனே பதி எனக் கொண்டு சைவம் வளர்த்த சிவஞான சம்பந்தர் ஆதி திருவருள் செல்வர்கள் செம்மலர்த் தாளை நம்பிய ஸ்ரீமத் ஆனந்த முத்துக் குமாரசுவாமி பக்த ஜன சபையாகும், சைவ சித்தாந்த சங்கத்தாரும், சைவ சமய பக்த ஜன சபையாரும், ஒருங்கு சேர்ந்து ஸ்ரீ முத்துக் குமாரசாமியார் நல் திருக்கோயிலிலே 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எந்தையாம் கந்தவேட்கும், பரமாசாரிய சுவாமிகட்கும் அபிடேக அலங்கார ஆராதனம் செய்து அருட்பாக்களையும் அன்புடன் பூசித்து அழகிய விமானத்தில் எழுந்தருளுவித்து திருவீதி வலம் செய்வித்து அரசாங்கம் ஏறி அருட்பாவின் உண்மை விரித்த அத்துவித சித்தாந்த மதோத்தாரணரைக் கொண்டு திருமுறைகளின் மான்மியத்தைப் பிரசங்கிக்கச் செய்வித்துப் பெறுதற்கு அரிய பெகரும் பேற்றை இம்மையிலே அடைந்தனர்கள்.  அடுத்த ஆதிவாரம் எமது ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்த ஜனசபையின் பிரதம வருடோற்சவத்தன்று சுந்தரேசப் பெருமானார் திருவாலயத் தினின்றும் அடியேம் ஆசிரியரை எதிர்கொண்டு அழைப்பக் கதிரைவேல் பெருந்தகையும் கடையேமை ஒரு பொருட்படுத்தி எங்களுடன் அளவளாவி சபை நிலையம் அடைந்து அக்கிராசனம் வகித்து வருட உற்சவத்தைப் பெருமையாய் நடத்தினர்.  சபைக்காரியதரிசியும் எமது தமையனாரும் ஆகிய திரு.வி.உலகநாத முதலியார் அவர்கள் இயற்றிய திருவருட்பா விஜய நாமாவளி சிவனடியார்க்கு விநியோகிக்கப்பட்டது.  புரசை பரசிவ தமிழ்வேத பாராயண பக்தஜன சபையாரும் 1904ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி பானுவாரம் ஸ்ரீ சங்காதரேசுரர்க்கும் பங்கசாட்சி அம்மையார்க்கும் பரமாசிரிய சுவாமிகட்கும் மகாபிடேகம் அலங்காரம் ஆதி நடத்திப் புண்ணியத் திருவருட்பாக்களைப் புட்பச் சிவிகையில் எழுந்தருளுவித்துத் திருவீதி மகோற்சவம் நடத்தினர்.

    இங்ஙனம் சென்னைச் சிவனடியார் திருக்குழாங்கள் பன்னிருமுறைகட்கும் பத்தியாய் உற்சவம் செய்து பரம ஆனந்தராய்ச் செய்த வந்தன உபசாரங்களையும் பரிசுகளையும் ஏற்ற எம் குருநாதர் அருள் காமக்கொடியின் அம்கயற்கண்கள் களிக்கப் பாதம் தூக்கிப் பாசத்தால் கட்டுண்டு உழலும் பசுக்கள் ஈடேறப்பரமன் பஞ்சகிருத்திய நடம்புரியும் சிதம்பரத்திற்கு ஆரோத்திரா தரிசனத்திற்குச் சென்றனர்.  தில்லைவாழ் அந்தணர் பெருமான்களும் திருமடத்துத் தம்பிரான் சுவாமிகளும் தேவார பாடசாலை ஓதுவார் மூர்த்திகளும் திருவாதிரைத் தரிசனத்திற்காக வந்திருந்த சிவன் அடியார்களும் சிவஞான தீபத்தைக் கண்டு அகம் குளிர்ந்து முகம் மலர்ந்தனர்.  அவ் ஆண்டு ஆரோத்திரா தரிசனத்திற்கு அடுத்த தினம் ஆகிய (24-12-1904) ஆதிவாரம் ஸ்ரீ சமயாசாரிய சுவாமிகட்கு அபிடேக அலங்கார ஆராதனங்கள் செய்து அம்பலப் பாக்களாம் அருட்பாக்களை அன்புடன் பூசித்து அரசு உவாவாகிய அத்தியின் மீது எழுந்தருளப் பண்ணி, கொடி, குடை, சாமரம் ஆதிசர்வ உபசாரங்களுடன் புறப்பட்டு இருமொழித் திருவருட் பாக்கோஷத்தோடு மாடவீதி திருவுலா வந்து திருமுறைகளைக் கஜத்தினின்றும் ஹர நாம கோஷமும் கர தான கோஷமும் திசைகள் தோறும் செவிடுபடச் சீராக இறக்கி, அரச சபையாம் ஆயிரக்கால் மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்தனர்.  அத்தியின் பின்னர் அஞ்செழுத்து ஓதி வந்த அத்துவித சித்தாந்த மதோத்தாரணரை அன்பர்கள் இன்புறுமாறு அருட்பா உண்மையை அம் மண்டபத்தில் உபந்நியசிக்க அந்தண சிகாமணிகள் ஆஞ்ஞாபிக்க அவரும் அன்னவர் ஆணையைச் சிரம்மேல் தாங்கி அருள் நாதன் மகா மண்டபத்தில் சுமார் 8000 அன்பர்கள் மத்தியில் அருட்பா உண்மையை உபந்நியசித்தனர்.  திருமுறை உற்சவம் செய்த பெருமறையோர்களால் எம்பிராற்குப் பூமாலை சூடப்பட்டுப் பட்டுப் பரிவட்டமும் சாத்தப்பட்டது.

    அவ்வருமையைக் கண்ட பெருமையில் சிறந்த நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் தங்கள் தேவை அம் பதிக்குச் சிந்தாமணியை அழைத்துச் சென்று ஸ்ரீ மீனாக்ஷ¢சுந்தரப் பெருமானார் ஆலயத்திலே திருமுறைகட்குத் தில்லையம் பதியில் செய்த வண்ணம் மகோற்சவம் செய்தார்கள்.  அன்று இரவு வென்றிவேல் போற்றும் பிள்ளை அவர்களால் வள்ளல் அருள் மணக்கும் திருமுறை மேன்மை உபந்நியசிக்கப்பட்டது.  இறுதியில் மாயாவாத தும்ச கோளரிக்கு மாலை சாத்திப்பட்டுப் பரிவட்டம் தரித்து மாலை ஒழித்தனர் வணிக மாக்கள்.  அவையிற்றை அகம் மகிழ்ந்து குகன் அடி உன்னி ஏற்றுச் சென்னை அடைந்தனர் செந்நாப் புலவர்.

    தொண்டை நாட்டுச் சிவ தலங்களுள் சிறந்த திருக்காஞ்சிச் சிவநேசத் திருக்கூட்டத்தாரும் சிதம்பரத்தில் இரண்டாம் முறை நடந்தேறிய திருவருட்பா உற்சவம்போல் திருவேகம்பத்தினும் நடத்த வேண்டும் என விழைந்து, நம் குருபால் அணைந்து, "நம்பன் அருளால் நாகப்பர் தவத்து உதித்த நாயகமே! இக்காலத்து மக்களும் இனி வருவோரும் இன்புற்று உய்ய உண்மை அருட்பாக்கள் திருமுறைகளே என்று அரச மன்றம் ஏறி அறிவித்த ஆண்டகையே! செம்மறையோர் அம்பலத்தில் அருட்பா உற்சவம் செய்து ஆனந்தம் அடைந்ததற்குக் காரணராய் இருந்த கதிரைவேல் அரசே! அடியேம் அருட்பா வெற்றியைக் குறித்துத் திருக்காஞ்சியில் மகோற்சவம் நிகழ்த்த மகிழ்ந்துளேம்.  மாதவப் பெருந்தகை ஆண்டு எழுந்தருள வேண்டும் என வேண்டினர்.  வேண்டும் அடியவர்கட்கு வேண்டிய வரங்கள் ஈயும் தாண்டவனை வழிபடூஉம் தாளாண்மை மிக்க வேளாள மணியும் அவர் வேண்டுகோட்கு இணங்கி அயன் ஆதியோர் வாழும் அருங்காஞ்சியை அணைந்தனர்.  கதிரைவேல் பெருமான் காதல் மேலீட்டால் காஞ்சிக்கு வருவதைக் கேட்ட கறைகண்டன் அடியார் கரை இலா இறும்பூது எய்தித் தெருக்கள் தோறும் பூம்பந்தர்களும் தோரணங்களும் நாட்டி வழி பார்த்திருந்தனர்.  அவ் வீதிகள் தோறும் அன்பர்கள் அகம் மகிழச் சென்று அன்னவர்கள் பானுவைக் கண்ட பங்கயம் என முகம் மலர்ந்து செய்த வந்தன உபசாரங்களை ஏற்று ஓர் அன்பர் நிலையம் அடைந்தனர்.  அடுத்த நாள் (22.1.1905) திருக்கூட்டத்தார் ஏகாம்பரப் பெருமானார் ஆலயத்திலே சமயாசாரிய சுவாமிகட்கும் சேக்கிழார் பெருமானுக்கும் அபிடேக அலங்காரம் செய்து அருட்பாக்களை அருச்சித்து ஆலய அரச உவா மீது ஆரோகணிக்கச் செய்தனர்.  யானையும் குமர கோட்டத்துக் கஜமும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் வேழமும் வெண் சாமரம் வீச இராச வீதி நோக்கி நடந்தது.  அந்தணர் வேத ஒலியும் அருந்தவர்கள் அருட்பா ஒலியும் அதர்வேட்டுகளின் முழக்கமும் வாத்திய கோஷமும் திசைகளைச் செவிடுபத்தின.  அவ் உற்சவத் திருக்கோலத்திலே அன்பர்கள் மத்தியில் என்பு அணிந்த இறைவனே என இலங்கினர் எம் குருநாதர்.  இராச வீதியிலே இருகாலும் திருமுறைகளை முறைப்படி பாராயணம் செய்யும் பலப்பல பக்த ஜன சபையார்கள் தத்தம் சபைகட்கு எதிராகத் தந்தி வந்த போது செந்தமிழ் வேத பாராயணத்துடன் யானையை வலம் வந்து யாழ்ப்பாணப் பெருவாழ்விற்குப் பூமாலைகள் சாத்தி நண்ணரிதாம் புண்ணியத்தைக் கண்ணிமைப் பொழுதில் கைவரப் பெற்றனர்.  இவ்வண்ணம் பெருங் கோஷ்டிகளுடன் வருங் கஜங்கள் ஆயிரக்கால் மண்டபத்தை அண்மின.  அந்தணர்கள் அருட்பாவை அத்தியின் நின்றும் பத்தியுடன் இறக்கிச் சபாமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்தனர். கதிரைவேல் பெருந்தகையைக் கண்டு அறியாத எண் இறந்த புண்ணியர்கள் ஆங்கே நண்ணிக் கதிரைவேல் பிள்ளை யாவர் யாவர் என்று ஒருவரை ஒருவர் வினவிய ஒலியே எங்கும் மலியாநின்றது.  அது காலை ஆரியம் வல்ல வீரியர் ஓர் உயர்ந்த பீடத்தின் மீது ஏறிச் சிவ நாம சங்கீர்த்தனம் முழக்க அன்பர்களும் கண்ணாரக் கண்டு துன்பு ஒழித்தார்கள்.  உடனே அருட்பா மான்மியம் ஆசிரியரால் உபந்நியசிக்கப்பட்டது.  உற்சவம் செய்து உற்சாகம் எய்திய உண்மைச் சிவநேயர்களால் இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண விஜய மகாசரபம் முதலிய புத்தகங்கள் பக்தர்கட்கு விநியோகிக்கப்பட்டன.  ஞாபகச் சின்னத்திற்காக நாகப்பர் சுதர்க்கு அரதநம் பதித்த கெளரி சங்கர கண்டி அளிக்கப்பட்டது.  உறையூர் சைவ சித்தாந்த சபையாரும் யாழ்ப்பாணத்து உபயகதிகாம வாசரைத் தம்மூர்க்கு அழைத்துச் சென்று உண்மை அருட்பாக்கட்கு மேற்குறித்த வண்ணம் உற்சவம் செய்து பிள்ளை அவர்கட்குச் சன்மானம் செய்தனர்.  திருவருட்பா விளக்கம் என்னும் ஓர் பிரபந்தமும் இயற்றிப் புனிதர்க்கு உபகரிக்கப்பட்டது.  திருவண்ணாமலை, சீர்காழி முதலிய தலங்கட்குச் சுவாமி தரிசனத்திற்காகப் பரிசனங்களுடன் ஸ்ரீபாலசுப்பிரமணியப் பக்தஜன சபைத் தாபகர் சென்ற காலையில் ஆங்காங்கே அன்பர்கள் அருட்பா உற்சவம் செய்து அருந்தவ மணியை வாழ்த்தினார்கள்.  செந்தமிழ் உலகம் செய்த வந்தனைகளை ஏற்ற செந்தாப் புலவர் சென்னை சேர்ந்து கந்தசுவாமியார் வசந்த மண்டபத்தில் தணிகைப் புராணமும் சிந்தாதிரிப்பேட்டையில் கந்த புராணமும், திருவிளையாடல் புராணமும் பிரசிங்கித்து வந்தனர்.

    அநபாயச் சோழ மகாராசன் செய்த அருட்பா உற்சவப் பெருங்கோலத்தை இக் காலத்து உள்ள மக்கட்குக் காட்டி இணை இலாப் பெரு மகிழ்ச்சி எய்துவித்த பெரியாரைப் பெற்றாரும் உற்றாரும் கற்றத்தாரும் பிறரும் சுதேசத்திற்கு வருமாறு திருமுகங்கள் விடுத்தனர்.  அவையிற்றைச் சென்னை நேயர்கட்குக் காட்டிச் "சில் நாள் நுமைப் பிரிந்து ஏத்துவோர்க்கு எந்நிதியும் அளிக்கும் சந்நிதி வேளைத் தரிசிப்பான் புலோலிக்குச் சென்று மீளுவல்" என இசைத்து அன்னவர்கள் பால் விடைபெற்று, அருந்ததி அனைய கற்பரசியாருடனும் புதல்வர்களுடனும் புறப்பட்டனர்.  இடையில் விடையவர் ஆடும் சிதம்பரம், சீர்காழி, புள்ளிருக்குவேளூர், திருக்கோலக்கா, திருச்செங்கோடு, திருமயிலாடுதுறை திருவாலவாய், திருநெல்வேலி, இராமேச்சுரம் முதலிய திருப்பதிகளில் தங்கி ஆங்காங்கே உள்ள தீர்த்தங்களில் தோய்ந்து மூர்த்திகளைக் கண்டு வணங்கி அடியவர்கள் அன்பின் மேலீட்டால் செய்த பணிகளை மணி என ஏற்று அவர்கள் அகம் மகிழ்ந்து விழைந்த வண்ணம் அத்துவித சித்தாந்த மகோபந்நியாச மாரியைப் பிரம மேகம்போல் பொழிந்து வீணாகான நகரை அடைந்தனர்.  அந்தணரைக் கண்ட அந்தணர்களும், ஆசிரியர்களும் அன்பர்களும் அருட்பா முழக்கத்துடன் எதிர்வரக் கதிரைவேலரும் கண்ணுதல் நாம சங்கீர்த்தனம் செய்து, அவர்களுடன் கலந்து, அவர் உபாசனா மூர்த்தியாம் உபய கதிர்காமப் பெருமான் அருள் கோயிலுள் சென்று உமை மகனை உள்ளத்து இருத்தி வணங்கித் தந்தையார் மந்திரம்  அடைந்தனர்.  பலப்பல சைவ சித்தாந்த திருக் கூட்டத்தினர்கள் தத்தம் கோட்டங்கட்குத் தாளாண்மை மிக்க வேளாளரை உபகாரத்துடன் அழைத்துத் திருவருட்பா உற்சவங்கள் செய்து தீமை ஒழித்தார்கள்.  பற்பல இடங்களில் மாயாவாத தும்ச கோளரியைக் கொண்டு உபந்நியாசங்கள் செய்வித்தார்கள்.  அவ் உபந்நியாசங்களைக் கேட்ட எம் குருநாதரின் குருநாதர்களே "எமது ஆசிரியப் பெருந்தகையாம் நாவலர் பெருமான் பிரசங்க அமுதைச் சுமார் நாற்பது ஆண்டுகளாகச் செவி மடுக்காது வாடிய எங்கட்கு இன்றைய தினம் அ·தை உபகரித்த தடம் கருணைப் பெருங் கடல் ஆயசங்கரன் அருளை எங்ஙனம் வியக்க வல்லோம்" என்று மகிழ்ந்து வியந்து புகழ்ந்தனர் எனின் ஏனைய புலவர்கள் புகழ்ந்தமையை ஈண்டு விரிக்கவும் வேண்டுமோ? "போலி அருட்பாப்பிரபந்தன நிர்க்கந்த கிஞ்சுக கண்டன பிரசண்ட மாருதம் " "சைவ சித்தாந்த மகா சரபம்" என்னும் அரிய பட்டங்கள் பெரியோர்களால் சூடப்பட்டன.

    இணையிலாப் புலவர் பெருமான் ஈழ நாட்டில் வாழுங்கால் வடிவேல் பிள்ளை போலிஸ் நியாயாதிபதி புகன்ற தீர்ப்பு பிழை உள்ளது என்று சென்னை ஹெகோர்ட்டில் அப்பீல் எடுத்தனர்.  அதனைப் பத்திரிகைகளானும் கெழுதகை நண்பர்கள் விடுத்த கடிதங்களானும் அறிந்து சென்னை சேர உன்னினர்.  திடீரென்று விசாரணை தொடங்கினர் அரசாங்கத்து நியாயாதிபதிகளாய கனம் பென்சன் துரை அவர்களும் கனம் மூர் துரை அவர்களும்.  வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார் பிரமஸ்ரீ வி.கிருஷ்ணசாமி ஐயர் அவர்களையும், பிரமஸ்ரீ விஸ்வநாத சாத்திரியார் அவர்களையும் கொண்டு வாதிக்க, சென்னை போலீஸ் கோர்ட் தீர்மானம் குற்றம் அற்றது என்று (21.11.1905) வழக்கைத் தள்ளி விட்டனர் நீதிபதிகள்.  சபையார் உடனே தம் சபாநாயகர்க்குத் தந்தி அடித்தனர்.  இவ் இரண்டாம் முறை வெற்றியைக் கேட்ட ஏதம் இலார் "கதிரைவேல் காட்டில் இருந்தால் என்ன? நாட்டில் இருந்தால் என்ன? வீட்டில் இருந்தால் என்ன? இவ்வழக்கிற்கு அவர் முன்னிலைச் சுட்டே அன்றி மூலகாரணர் அல்லர்; முழுமுதற்பொருளே இவ்வழக்கிற்குப் பிரதிவாதி" என்று உள் எழும் காதல் மீதிட்டால் மொழிந்தனர்.  ஹைகோர்ட்டினும் வெற்றி பெற்றதை அறிந்த கொற்றவர் சமயாசாரிய சுவாமிகள் திருவருளை உன்னி உன்னி ஆனந்த உருவர் ஆயினர்.  சென்னைச் சிவன் அடியார்களைக் காணப் பேர் அவாக் கொண்டு ஈழநாடு விடுத்துத் திருவாவடுதுறை அடைந்து விடையவனை வணங்கித் திரும்புகையில் ஸ்ரீ பண்டார சந்நிதிகள் விழைந்தபடி "சந்தான பரம்பரை" என்னும் அரிய விடயத்தை உபந்நியசித்துப் பரிசும் பெற்றுச் சிதம்பரம் அடைந்து சின்னாள் பலபிணிச் சிற்றறிவினர்கள் உய்வான் கற்றைச் சடை அசையக் கால் தூக்கிக் கருணை நடம் செய்யும் பெரு வாழ்வைக் கண்டு தரிசித்துப் பல்முறை வணங்கிச் சென்னை கண்ணினர்.  பானுவைப் கண்ட பங்கயம் போல பன்னிரு திருமுறை சபையினர் முதலியோர் முகங்கள் மலர்ந்தன.

வாடாவாஞ்சியில் வாழ்ந்த சிறப்பு

    உடல் பொருள் ஆவி மூன்றையும் உத்தமச் சித்தாந்த சைவத்திற்காக அர்ப்பணம் செய்த அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் கந்தநாதன் செந்தாள் மலரை அல்லும் பகலும் சிந்தையில் இருத்திப் பழைய வைதிக சைவப் பிரசங்கங்கள் பல செய்து கொண்டு வாழ்வார் ஆயினர்.  கதிரைவேல் நாவலர் அங்ஙனம் வாழுங்கால் கடைச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட சிலப்பதிகாரத்தைச் செய்த இளங்கோ அடிகள் அச்சங்கப் புலவராய் இருந்து கவியரங்கு ஏற்றிய கோவூர்க் கிழார், கருவூர்க்கிழார், ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியத்திற்கு ஓர் உரை கண்ட ஆசிரியர் சேனாவரையர் முதலிய செந்தமிழ் மணிகள் வதிந்த வாடா வஞ்சியாம் கருவூரிலே கனம் கிளைடன் (Rev. Clyton) துரை அவர்கட்கு ஓர் தமிழ்ப் பண்டிதர் வேண்டிப் பத்திரம் அனுப்பினர்.  அ·து துரை அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.  சென்னைச் சிவநேயர்கட்குப் பல தேறுதல்கள் கூறிக் கார் இழையுடனும் கன்னியுடனும் கருவூரை அடைந்தனர். மூன்று மதிக்குள் எமது சபை இரண்டாம் வருட உற்சவம் நெருங்க அவ் உற்ச்வத்தை உற்சாகமாய் நடத்த அவண் நின்று சென்னை அணைந்து பன்னிரு கரத்தோன் பக்த ஜன சபையின் வருட உற்சவத்தை இனிது நடாத்தி எறிபத்தர் வாழ்ந்த எழில் ஊர்க்கு மீண்டனர்.  உத்தியோக காலம் ஒழிந்த மற்ற காலங்களில் தமிழ் வளர்க்கு பெருமான் சிவஞான பாடியத்திற்குச் சிறந்த குறிப்புரைகள் வரைந்து கொண்டிருந்தனர்.  அ·தும் அன்றி சுப்பிரமணிய பராக்கிரமம் என்னும் ஓர் அரிய நூலும் பெரியரால் ஆக்கப்பட்டது.  சிவஞான சுவாமிகள் பவஞானம் அழிக்கும் வியாக்கியானங்களின் உண்மை கற்றோர்க்கு அன்றி மற்றையோர்க்குத் தெற்றெனப் பயன்படுமாறு எளிதான தமிழ் நடையில் தெளிவு ஆக எழுதினர்.  அ·து யாவர்பால் அடைந்துளதோ அறியேம்; அறுமுகனே அறிவன்.  வேனிற்கால விடுமுறை நாள் உறவே இல்லாளுடன் கல்லா அல்லா நல்லார் கருதும் கதிரைவேற்பிள்ளை சென்னை அடைந்து பன்னிரு திருமுறைத் திருவருட்பாப் பாராயண பக்த ஜனசபையின் பிரதம வருட உற்சவத்தைப் பெற்றியாய் நடாத்தி மருட்பா மறுப்பின் வழக்கில் அவருக்காக வாதித்த வாசால நியாய துரந்தர சிகாமணியாம் விசிவநாத சாத்திரியார் அவர்கட்கு ஞாபகச் சின்னம் ஆகச் சில சன்மானங்கள் செய்து பூவாவஞ்சி எனப் புலவர் புகழ்ந்த கருவூர்க்கு ஏகினர்.

    அத்திருப்பதிக்கண் உள்ள பத்தர் குழாங்கள் பண்டித சிரோன்மணிபால் அணுகி, "இனிக் கரு ஊரா வண்ணம் கருவூரில் வதியம் கண்மணியே! இத்தலமான்மியத்தை எவரும் எளிதில் தெளியுமாறு கத்தியம் ஆகச் செய்ய வேண்டும்" என வேண்டினர்.  அவர் வேண்டுகோளுக்கு இரங்கிய வேள் அடியார் "கரு ஊர் மான்மியம்" என்னும் ஓர் பனுவல் இயற்றிப் பசுபதீச்சுரப் பெருமானார் திருக்கோயில் கும்பாபிடேக  தினத்தில் அரங்கேற்றினர்.  அம் மான்மியத்தில் செம்மான் மருகன் செம் மலர்த்தாளைக் கருதும் கதிரைவேல் கழறிய கவிகள் பல உளவேனும் அவையிற்றுள் இரண்டு சிலேடைச் செய்யுள்களைச் சிவனடியார் களிக்க ஈண்டுக் காட்டுதும்.  எறிபத்த நாயனார்க்கும், கருவூர்க்கும், ஆம்பிரவ நதிக்கும், சிவபெருமானுக்கும், விநாயகக் கடவுளுக்கும் சிலேடை

ஐம்பொருள் சிலேடை

    பரசு கொளலாற் பவானியிட மார்ந்து
    விரவு நலிதீர்த்தலான் மேற்பணியால் வஞ்சி
    யறியத்தம் பத்தத்த னாறுமுனோ னன்ன
    வெறிபத்தன் றாள்பணிவோ மே.

    கும்பாபிடேகத்திற்கும், கருவூர்க்கும், ஆம்பிரவதி யாற்றுக்கும், பசுபதீசப் பெருமானுக்கும், பிரமனுக்கும், திருமாலுக்கும், தமிழ்க்கும், ஆரிய வேதத்திற்கும், தமிழ் வேதத்திற்கும், சமய குரவர்க்கும் சிலேடை.

பதின்பொருட் சிலேடை

    வாரம் வரலால் வருகுவனங் கோடலாற்
    சாரஞ் செறிதலாற் சார்கதியாற் - சீரகரு
    வூரா றரனயன்மா லொண்டமிழ்வே தங்குரவர்
    நேராங்கும் பாபிடேக நேர்.

    இச் சிலேடைச் செய்யுள்களைக் கண்ட கருவூர்ச் சிலேடைச் சிங்கமும் பிள்ளையவர்களை உள்ளில் போற்றியது.  கருவூர்த் தேவர்க்குப் புராண சாரம் செய்யுமாறு வேண்டிய தாண்டவ மூர்த்தியின் அடியவர் களிக்க ஓர் விருத்தமும் செய்தனர்.  கருவூர் கனவான்களும் தனவான்களும் கதிரைவேற்பிள்ளைக்குக் கெழுதகை நண்பர் ஆயினர்.  அலுவல் ஒழிந்த காலம் தவிர மற்றைய காலங்களில் கற்றைச் சடையான் நெற்றியில் தோன்றிய வெற்றிவேல் குகன் தாளை அகம்தாங்கி அவதானப் பழக்கம் செய்து கொண்டு வாழுங்காலை அவர் மனைவியார் வடிவாம்பிகை ஓர் ஆண் மகவு ஈன்று சிவ நாமம் உச்சரித்துக் கொண்டே சச்சிதானந்த சிற்சோதியில் கலந்தனர்.  அ·தும் எ·க வேலன் திருவருள் ஆம் என உன்னிச் சுதையையும் சுதனையும் தம்மைப் பெற்றோர்பால் சேர்க்க வேண்டும் எனத் தீர்மானித்து, யாழ்ப்பாணம் நோக்கினர்.  மத்தியில் திருச்செங்கோட்டில் தங்கி "அரனே அறுமுகன்" என்னும் அரிய உபந்நியாச மாரி பொழிந்தனர்.  அதைச் செவிமடுத்த அடியவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு ஓர் வரம்பு இன்று.  மூன்று நாள் அத்திருப்பதியில் பத்தியாய் இருந்து பின்னர் வேளாளர் வாழும் வீணாகானபுரம் அடைந்தனர்.

    ஆங்கே இருமொழிக் கடலையும் பருகி ஏப்பம் இடும் புலவர் பெருமான்கள் முன்னர் சந்நிதிவேள் ஆலயத்திலும் புலோலி பசுபதீச்சுரப் பெருமானார் ஆலயத்திலும் பிள்ளை அவர்களால் சோடசாவதானமும் அஷ்டதசாவதானமும் செய்யப்பட்டன.  இங்ஙனம் சிவநாதன் அருளால் அவதானம் செய்த தவநாதரைப் புநர் விவாகம் செய்து கொள்ளுமாறு பெற்றோரும் மற்றையோரும் வேண்டினார்கள்.  அன்னவர் முகம் நோக்கி "அன்புடையீர்! யான் சென்னைக்கு ஏகிச் சொல்நயம் உடைய நன்னயச் சிவநேயர்கள் வரம்பு இலா இறும்பூது எய்தும் வண்ணம் சதாவதானம் செய்து மீண்டும் நுங்களைக் காணச் செங்கை வேலன் திருவருள் இருப்பின், புநர் விவாகம் புரிந்து நும்மைப் புளகம் போர்ப்பச் செய்வல்" என்று மொழிய தந்தையும் துணைவரும் குரவர்களும் நாஉலர்ந்து மறுமொழி பகரவும் வாய் எழாது நீர் நிரம்பிய கண்ணுடையர் ஆனார்கள்.

    "முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்
    பொதுவறு திருவொடு பொலிவ ராயினு
    மதியின ராயினும் வலிய ராயினும்
    விதியினை யாவரே வெல்லு நீர்மையார்"

என்ற ஆன்றோர் அமுதத் திருவாக்கின்படி "விதியை மதியிலேன் எங்ஙனம் வெல்லுவேன்.  மாயமாம் வாழ்வை மெய் எனக் கொள்வர் அன்றோ மயங்க வேண்டும்.  முருகன் அருள் விட்டவழி நடக்கும்.  அஞ்சற்க" என்று பல உறுதி மொழிகளை உற்றார் முதலியோர்க்கு உரைத்துக் கொண்டிருந்தனர்.  அதுபோது கருவூர்த் துரை அவர்கள் கதிரைவேல் துரையை நீலகிரிக்குன்று ஊர்க்கு வருமாறு கடிதம் விடுத்தனர்.  யாமும் எமது சபையின் மூன்றாம் வருட உற்சவத்தை முரணாது முற்றுப் பெறுவிக்கச் சென்னைக்கு விஜயம் செய்யுமாறு கடிதம் வரைந்தோம்.  இவ்விரண்டு கடிதங்களையும் தம் கரம் தாங்கி உடன் தோன்றிய உத்தமியை அருகு அழைத்து "அம்ம! எனது புதல்வி ஆய சிவஞானாம்பிகையையும் புத்திரன் ஆய திருநாவுக்கரசையும் நும் செல்வர்கள் போல் பாதுகாத்தல் வேண்டும்.  யான் சென்னை சென்று பின் குன்றூரில் சின்னாள் தங்கி மீளுவல் " என்று உரைத்து அவர் மாட்டுச் சிறுமியையும் சிறுவனையும் ஒப்புவித்துச் செல்வியை நோக்கி திலகவதியே! நின் அருமைச் சோதரன் திருநாவுக்கரசைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவும்.  யான் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையின் மூன்றாம் வருட உற்சவத்தை இனிது நடாத்திச் சதாவதானம் செய்யச் சென்னைக்குப் போகின்றேன் என்று கூறி விடை பெற்று வெளிக்கிட்டனர் வேலர்.

ஐயாற்றைக் கண்டு அறுமுகன் சபை சேர்ந்தது

    தாண்டக வேந்தர்க்குத் தண் கயிலைத் தனிக்கோலத்தைத் தற்பர சிவம் சிற்பரையோடு அருளப் பெற்ற பஞ்சநதத்தைப் பார்க்க பன்னாளாக உள்ளத்து எழும் பேரவா ஆனது பிடர் பிடித்து உந்த மிடி இலார் இடையில் புகைவண்டி விட்டு இழிந்து திருவையாற்றை நோக்கிச் சென்றனர்.  தில்லையில் இரண்டாம் முறை உற்சவம் செய்த நல்லை நாவலர் மாணவரின் மாணவர் வரவைக் கேட்ட வள்ளல் அடியார்கள் வரம்பு இலா இறும்பூது எய்தி, "எங்கள் தவமே தவம்" என்று இயம்பி ஆலய அரசுவாக்கள் மீது பூமாலை, பன்னீர், சந்தனம், பரிவட்டம் முதலியன அமர்த்தி எதிர்வந்து கதிரைவேலற்கு வந்தன உபசாரங்கள் செய்தனர்கள். அவ் அடியவர்களுடன் அகம் பிரம வாதக் கரிகளை அழித்த அரியும் ஐயாற்றுப் பெருமானையும், பெருமாட்டியையும் தரிசித்து ஆனந்த உருவாயது.  பின்னர் சிவ உருவாய விளங்கிய சித்தாந்தச் செல்வர்கள் விழைந்தபடி சைவ சித்தாந்த மகாசரபம் அத்திருத்தல மான்மியத்தை உபந்நியசித்தது.  மீண்டும் ஆலயத்தைக் கண்டு வணங்கி உம்மைச் சிவனடியார்கள்பால் விடை பெற்றுப் புகை வண்டி ஏறிப் புண்ணியர் வாழும் கண்ணியச் சென்னை சேர்ந்தனர்.  அடுத்த நாள் (17.2.1907) வருட உற்சவம் தொடங்கப் பெற்றது.  அன்று காலை குன்றவில் ஏந்திக் குறுநகையால் திரியுரம் எரித்த விரிசடைச் சுந்தரேசர் சுந்தர ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கந்தனாம் எந்தைக்கு அந்தணர்களைக் கொண்டு ஆகம விதி ஒரு சிறிதும் வழாது அபிடேக அலங்காரங்கள் செய்வித்துச் சிங்கார வேலரைத் தங்க விமானத்தில் எழுந்தருளுவித்துத் திருவீதிமகோற்சவம் நடத்தப்பட்டது.  பூதி அணிந்த வேதியர்கள் சிவநாம சங்கீர்த்தனச் சந்தடியும் பலப்பல சைவ சித்தந்த சபைகளின் தமிழ் வேத பாராயண முழக்கமும் வாத்திய கோஷமும் பேட்டை எங்கணும் செவிடுபடுத்தின.  மரகத மயூரன் பின்னர் மறை ஓதி வந்த இறையடியார் குழுவில் கதிரைவேலர் அன்று விளங்கிய மேன்மையை என் என்று விரிப்பேம்? மால் அயன் இந்திரன் மற்றைய வானோர் முனிவர்கள் போற்றக் கயிலையங் கிரியில் வீற்றிருந்தருளும் கங்காதரனே எனக் கண்டோர் கழற இலங்கினர்.  இங்ஙனம் எழுந்தருளிய பெரு வாழ்வைக் கண்ட நம் பேட்டைவாசிகள் கதிரோனைக் கண்ட கமலம் போல் அகம் முகம் மலர்ந்து தத்தம் இல்லங்கள் தோறும் பத்தியாய்க் கதலி விருக்ஷங்களும் கேதனங்களும் பந்தர்களும் தோரணங்களும் நாட்டிப் பூரியர் அல்லாச் சீரியர் புகழும் புனிதக் குரவர்க்குப் பூமாலை சாத்திப் புளகம் போர்த்தனர்.  அன்பர்கட்குச் சர்க்கரை, கற்கண்டு, கனிவகைகள் வழங்கப்பட்டன.  மகோற்சவம் முற்றுப் பெற்றவுடன் வெற்றிவேலர் மாலையை எமது வெற்றி வேலர்க்குச் சூட்டி வாத்தியக் கோஷத்துடனும் திருவருட்பா விஜய நாமாவளி முழக்கத்துடனும் சபாகிருகத்திற்குச் சென்றனர் பால சுப்பிரமணிய பக்தர்கள்.  ஆசிரியர் அறுமுகன் சபை அடைந்து ஓர் அரும் பீடத்தில் அமர்ந்ததும் அவர் அடிகளை முடிமேல் அணிந்தனர்.  மிடி இலா மேதாவிகள்.  பிற்பகல் மகேஸ்வர பூஜை நடந்தவுடன் கூடிய பெருஞ் சபைக்கும் அக்கிராசனம் வகித்து வருட உற்சவத்தைச் செவ்வனே நடாத்தினர்.  அன்று இரவு இராயப்பேட்டைக்கண் உல்ள செல்வர்களை அழைப்பித்து "அன்புடைச் செல்வர்காள்! இன்றையத் தினம் இவண் நடந்தேறிய உற்சவத்தின் மாண்பை யெம்மால் எடுத்து இயம்பற்பாலது அன்று.  இங்ஙனம் பிரதி ஆண்டினும் நடத்த வேண்டியது உம் கடமை.  சபைக்கு மண்டபம், மணி முதலியன இல்லாதிருத்தல் பெருங் குறையாய் உள்ளது.  அவையிற்றை விரைவில் பூர்த்தி செய்து சபைக்கு உபகரிக்க வேண்டுவதூஉ நும் கடமை" என்று மொழிந்து அங்கத்தவர்களை நோக்கி "நான்காம் வருட உற்சவத்திற்கு அக்கிராசனம் வகிப்ப நாயகன் எவரை வித்த்துளனோ அறியேம்" என்று கலங்கும் உளத்தராய்க் கரைந்து சிந்தாதிரிப்பேட்டைக்குச் சென்றனர் கதிசேரன் பிரியாக் கதிரைவேலர்.

சதாவதானம் செய்த மாட்சி

    அடுத்த ஆதிவாரம் (24.2.1907) சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் ஆடக மன்றாடிக் குமரனாம் குன்று ஆடித் திருவடிக்கண் இடையறாய் பேரன்பு வாய்ந்த பிள்ளை அவர்களால் சதாவதானம் செய்யப்படும் என வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார்களால் பத்திரிகைகள் பரப்பப்பட்டன.  அவையிற்றைக் கண்ட அன்பர்கள் 12 மணிக்கே நாடக மண்டபத்திற்கு விஜயம் செய்தனர்.  அம் மகா சபைக்கு அத்தியாச்சிரம பால சரஸ்வதி ஸ்ரீலஸ்ரீ ஞானாந்த சுவாமிகள் அக்கிராசனம் வகித்தார்.  அப்பேர் அவையில் வீற்றிருந்த முத்தமிழ்க் கல்வி நிரம்பப் பெற்ற முதியோர்கள், ஆரியக்கலைகளில் வல்ல சூரியர்கள், ஆங்கில  பாடையில் தேறி வித்தியாப் பட்டங்கள் பெற்ற வக்கீல் சிகாமணிகள், கணித சாத்திரிகள், பூகோள சாத்திரிகள், ககோள சாத்திரிகள், தத்துவ சாத்திரிகள், இன்ஸ்பெக்டர்கள், எட்மாஸ்டர்கள் முதலிய பண்டிதர்கள் அவதானப் பரீக்ஷ¢கர்களாக ஏற்பட்டனர்கள்.  அவ்வித்துவ மணிகள் பொறித்த வினாக்கட்கு மாயா வாத தும்ச கோளரி அவர்கள் வேலுமயிலும் துணை வேலுமயிலுந்துணை என்னும் திருநாமத்தை முழக்கிக் கொண்டு தகுந்த விடைகள் விளம்பினர்.  அவ்விடைகளைக் கேட்ட அவதானச் சோதனைக் கர்த்தர்களும் அக்கிராசனரும் அவதானியைப் புகழ்ந்ததை ஈண்டு வரையப் புகின் நீண்டு விடும் எனக் கருதி விடுக்கின்றாம்.

    அவதானப் பரீக்ஷ¢கர்கள் கடாவிய வினாக்களையும் அவரவர் அபிதானங்களையும் அவைகட்கு அபிதானச் சிங்கம் அளித்த விடைகளையும் இவண் விரிக்கில் பெருகும்.  ஆயினும் அவையிற்றின் ஓர் பாகம் ஆய கவிபேதங்களை மாத்திரம் புவியுள்ளார் களிக்க ஈங்குக் காட்டுதும்.

பரீக்ஷ¢கர்: திருமயிலை வித்துவான் வெள்ளியம்பல உபாத்தி யாயர் குமாரர் சோமசுந்தரம் பிள்ளை அவர்கள்.

வினா: கபாலிக் குளத்தில் பூ சரம் சரமாய் விழக் கொதித்தது சுட்டது எனும் பொருள் தரக் கலித்துறையில் பாட வேண்டும்.

விடை:

    உளத்தில் துயருறும் வானவர் காமனை உந்த அன்னான்
    களத்தில் கரம்உறும் காபாலி முன்ஒரு கன்னல்வில்லால்
    உழக்கச் சரஞ்சர மாப்பூ விழப்பதி ஆலயத்துக்
    குளத்தில் நெருப்புக் கொதித்தது சுட்டது குற்றம் அன்றே.

பரீக்ஷ¢கர்: காஞ்சிபுரம், பி.செ.முருகேச முதலியார் அவர்கள்.

வினா : முருகனுக்கும், நவவீரர்க்கும், காஞ்சிக்கும் சிலேடையாய் "மூ" என்று எடுத்துக் "கு" என முடியும் நேரிசை வெண்பாவாகப் பாடல் வேண்டும்.

விடை:

    மூவாத தன்மையில் மோகத்தை நீக்குதலால்
    காவார வைத்தலால் கண்ணுதலிற் - பூவார
    நிற்றலால் வேன்முருக னேரி னவவீரர்
    சொற்காஞ்சி நேரெனவே சொல்கு.

பரீக்ஷ¢கர்: மயிலை அரங்கசாமி நாயகர்.

வினா: "கோலம்" எனத் தொடங்கி "பார்" என முடியும் ஓர் நேரிசை வெண்பாவில் சைவ சித்தாந்தத்தால் அன்றி முத்தி கிடைக்காது எனும் பொருளை அடக்கிப் பாடவேண்டும்.

விடை:

    கோலஞ்சேர் சைவமெனும் கொள்கை யரங்கப்பேர்
    மேலுமோர் சாமியைச்சேர் மேலவனே - ஞாலமதில்
    சித்தாந்த ஞானம் சிறந்ததன்றி யெவ்வுயிர்க்கும்
    பத்திமுத்தி சேராநீ பார்.

பரீக்ஷ¢கர்: யாழ்ப்பாணத்துத் தெல்லியம்பதி இராசரத்தினம் பிள்ளை அவர்கள்.

வினா: சபா மண்டபப் பெயரும் மாசி கார்த்திகை ஆயிற்று என்றும் பசு புலியைத் தின்றதென்றும் சொல் பொருள் பின் வருநிலை அணி அமைத்து "ச" எனத் தொடங்கி "ஏ" என முடியும் ஆசிரியப்பா ஆகப் பாட வேண்டும்.

விடை:

    சந்தம்ஆர் இலக்குமி விலாசம் என்னும்
    இந்தநன் மண்டபத் திருந்திடும் புலவருள்
    நூலறி தகுதிய நுவலுவ கேண்மோ
    இறும்பூ தன்ன வியலுறூ உம் பல்கால்
    வான்பொய்த் திமம்கடுத் துறுதலா விந்த
    மாசியென் மதியும் கார்த்திகை யாமே
    புலிப்பூண் டுதைமான் பொதுவிக ரத்தால்
    புலிவெளிப் படுத்துப் புலிக்கூட் டடைத்த
    தின்றதோர் புதுமைத் தின்றியல் பறிதியே.

பரீக்ஷ¢கர்: உரையாசிரியர் கா. ஆலாலசுந்தரம் பிள்ளை அவர்கள்

வினா: சிவபெருமானுக்கும் அவதான சபைக்கும், சமுத்திரத்திற்கும் சிலேடையாய் மூன்றாம் அடியில் சைவ சித்தாந்த கருத்துடையதாய் "சங்கப் புலவ" என்று எடுத்து 'ர்' என முடியும் ஓர் நேரிசை வெண்பாவாகப் பாடவேண்டும்.

விடை:

    சங்கப் புலவமணி சார்தலாற் றத்துவத்தால்
    தங்கக் கலை மதியம் சார்தலாற் - றுங்கமதாற்
    பேராற் சதசத் தடக்கலாற் பெம்மானும்
    நேரவையும் வேலையுமே நேர்.

நீலகிரிக்கேகி நீலகண்டர் ஆயது

    சண்முகன் அருளால் சதாவதானம் செய்த சைவ சித்தாந்த மகாசரபம் சீதளத் திருநோக்கத்துடன் நீலச் சிகியோன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நீலகிரிக் குன்றூர்க்கு ஏகி உத்தியோகத்தை ஏற்றுக் கொண்டது.  அத்திருப்பதிக்கண் உள்ள பத்தர்களாம் வித்துவசிரோன்மணி சொக்கலிங்கம் பிள்ளை முதலியோர் "ஈழ நாட்டில் தோன்றி சோழ நாடு முதலிய தமிழ் நாடுகள் வாழத் தெய்வத் திருவருள் கைவந்து கிடந்த சைவ திருவாளர்கள் அருளிய திருமுறைகளின் மாண்பைக் கலி மிக்க இக்காலத்தில் இராசாங்கம் ஏறி வலியுறுத்திய பெருமான் நம் நீலகிரிக்கு எழுந்தருள நாம்  புரிந்த புண்ணியம் என்னோ?" என இசைத்துக் கதிரைவேலர்பால் அணைந்தார்கள்.  அன்னவர்களைக் கண்ட மன்னர் நன்னயமாக "நண்பீர்! சைவ சித்தாந்த சபை ஒன்று தாபித்தல் வேண்டும். அச்சபையில் சைவப் புராணப் பிரசங்கங்கள் நடைபெறல் வேண்டும். இங்கே உள்ள குளிர்காற்று நம் தேகத்திற்குத் தீங்கு நிகழ்த்தும் எனக் கருதுகின்றேம்.  இரண்டு மதிக்குள் இவண் குளிர் முகத்துடன் உலவும் வாயு பகவான் எமக்கு நேயன் ஆவனேல் நுங் கண்முன் சதாவதானம் செய்து காட்டுவல்" என்று இயம்ப, பூதி அணிந்த புண்ணியர்கள், "சோதி போல் தாங்கள் சொற்றபடி இப்பங்குனி மதி கழிந்தவுடன் வருடப்பிறப்பு அன்று அடியேங்கள் ஓர் சபை தாபிக்கின்றேம்.  மத்தியில் இளையான்குடி மாற நாயனார் புராணத்தைப் பிரசங்கிக்குமாறு பிரார்த்திக்கின்றேம்" எனக் கூறினார்கள்.  அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் அவர்கள் வேண்டுகோட்கு இணங்கி பிரசங்கித்து வந்தனர்.  அந் நாயனார் பெருமான் அருமைத் திருப்புராணம் முற்றுப் பெறுவதற்குள் வெம் குளிர் சுரம் எம் குருநாதரைத் தாக்கியது சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் நாவலர் பிரஸிலுள்ள ஸ்ரீலஸ்ரீ சதாசிவப் பிள்ளை அவர்கட்குத் தந்தி அடித்தனர்.  கிளைடன் துரை சிந்தாதிரிப்பேட்டைச் செல்வர்க்குத் தந்தி கொடுத்தனர்.  சுரநோயால் பீடிக்கப்பட்ட அக்காலத்தும் அவரைக் காண வந்த பெரியோர்கட்குச் சிவமான்மியங்களையே எம் குரவன் போதித்தனர் எனின் அன்னவரின் தவப் பெற்றியை அறிவிலி எங்ஙனம் வகுப்பேன், என்றும் நோய் கண்டு அறியார் நோய் கண்ட ஐந்தாம் நாள் தம் நண்பர் ஆய சொக்கலிங்கம் பிள்ளையையும் அவர் தமயனாரையும் அருகு அழைத்து, நடைபெற வேண்டிய இலெளகிக விடயங்களைச் சில பொழிந்து திருவையாற்றில் கயிலாய தரிசனத்தைத் தாண்டவமூர்த்தி காட்டிய காலை தாண்டகவேந்தர் அருளிச் செய்த "மாதர் பிறைக் கண்ணியானை" என்னும் அருட்பதிகத்தை ஓதி அருகு இருந்த அரன் அடியார்களிக்கப் பொருளும் விரித்துப் பராபவ ஆண்டு பங்குனித் திங்கள் 13ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மக நக்ஷத்திரம் கூடிய துவாதசித் திதியிலே அகண்டாகாரப் பொருளாம் சிவத்துடன் இரண்டறக் கலந்தனர்.  தந்தி சமாச்சாரங்கள் தமிழ் உலகு எங்கணும் உலவின.  சென்னைச் சிவநேயர்கள் யாவரும் ஸ்ரீ கபாலீச்சுரப் பெருமானார் கண்டிகையும் திருநீற்றையும் பொருளாகக் கொண்ட அறுபான் மும்மை நாயன்மார்களுடன் திருவீதி வலம் வந்து திருக்கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றும் திருக்கோலத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தகாலை சென்னைக்குக் கதிரைவேலர் கபாலீச்சுரனுடன் கலந்தார் என்ற சமாசாரம் எட்டியது.  கபாலீசா கபாலீசா என்னும் சந்தடி கதிரை வேலா கதிரை வேலா என மாறியது.  தொண்டை நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு, ஈழ நாடு முதலிய நாடுகள் துக்க சாரத்தில் ஆழ்ந்தன.  தகனக்கிரியையும் அத்தி சஞ்சயனமும் குன்றூரில் நடைபெற்றன.  அந்தியேஷ்டி முதலிய கிரியைகள் யாழ்ப்பாணத்திலே நடந்தேறின.  அக்கமணியையும் அருள் நீற்றையும் அன்புடன் அணிந்து பன்னிரு முறைகளைப் பாராயணம் செய்யும் பக்த ஜனசபையார்கள் கதிரைவேற்பிள்ளை அவர்கள் அற்புதத் திருவுருவப் படங்களைத் தத்தம் சபைகளினும் இல்லங்களினும் தாபித்து மெய்ப்பக்தியுடன் பூசித்து வாழ்கின்றார்கள்.

வாழி விருத்தம்

    பன்னிரு முறைகள் வாழ்க பாரினில் அவற்றின் மேன்மை
    சொன்னநற் கதிரை வேலெஞ் சுந்தரக் குரவன் வாழ்க
    அன்னவன் நூல்கள் வாழ்க அருஞ்சபை பலவும் நங்கள்
    பன்னிரு புயத்தோன் பால பகவனார் சபையும் வாழ்க

கதிரை வேற்பிள்ளை அவர்கள் சரித்திரம்

முற்றுப்பெற்றது.

கதிரைவேலன் கழலிணை வாழ்க.

2 comments:

said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள்

said...

சிறப்பான பகிர்வுகள்..
பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..