நாவலர் அவர்கள் படத்தில் ஒரு சந்தேகம்
பண்டிதமணி சி.
கணபதிப்பிள்ளை
பொன்னாவெளி உடையார் வீட்டிலிருந்த படம் மேலே காட்டிய இரு வகைப் படத்திலும் வேறானது. அதனை ஏரம்பையர் படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். அன்றி ஏரம்பையரோடு நன்கு பயின்ற மகாவித்துவான் கணேசையர் அவர்களுக்குங் காட்டினோம். ஏரம்பையர் படத்துக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை; இது ஏரம்பையர் படமே அன்று என்று
தீர்மானித்தார்கள்.
நவாலி திரு. தம்பையா உபாத்தியாயர் அவர்களுக்குத் தொண்ணூற்று மூன்று வயசு; நாவலர் அவர்களைக் கண்டவர்கள். அவர்களுக்குக் காட்டினோம். அவர்கள் ''இது நாவலர் அவர்களின் யதார்த்த மான படமே'' என்று கண்ணீர் சொரிந்து வணங்கினார்கள்.
இந்த நிலையில் பொன்னாவெளியில் கிடைத்த படத்தை நாவலர் அவர்களின் நிழற்படம் என்றே நம்பினோம், பச்சையப்பன் கல்லூரியில் எடுத்த படம் என்றும், உடையார் வீடு பரம்பரையாகச் சொல்லிவரும் வார்த்தையும் நமது நம்பிக்கைக்குப் பெரிதும் உபகாரமாயிருந்தது. பொன்னாவெளியிற் படம் ஒன்றே ஒன்று தான் இங்கு உள்ளதென்றும் கருதியிருந்தோம். ஆனால் இப்பொழுது அதே போன்று மூன்று படம் வண்ணார்பண்ணையில் மூன்று வேறு இடங்களிற் கிடைத்திருக்கின்றன. இன்னும் கிடைக்கலாம். இப் படங்களைப் பிடித்தவர் மானிப்பாயில் உள்ள எஸ். கே. லோட்டன் என்பவர். அவர் பெயர் அப் படங்களின் கரைச் சித்திரத்தில் இருக்கிறது. ஒரு படம் மடிப்பான ஒரு காகிதத்தின் உட்பக்கத்தில் அமைந்திருக்கிறது, எதிர்ப்பாகத்தில் நாவலர் தமையனார்
புத்திரர் மனேஜர் த. கை. அவர்களின் படம் இருக்கிறது. இரு படங்களின் கீழும் இருவர் பெயரும் ஆங்கிலத்திற் பொறிக்கப் பட்டிருக்கின்றன.
லோட்டன் எடுத்த படங்களைக் கண்டதும், பொன்னாவெளியிற் படமும் லோட்டன் எடுத்த ஒரு படத்தின் ஒரு பிரதி என்றே கருதினோம். பின் பொன்னாவெளிப் படத்தோடு ஒப்பிட்டு நோக்கியபோது, லோட்டனுடைய படங்களுக்குப் பொன்னாவெளியில் படம் மூலம் என்று தெரிந்தது, லோட்டன் பொன்னாவெளியிற் படத்தைப் படம் பிடித்துப் பின் பெருப்பித்திருக்கிறார்.
நாங்கள் பொன்னாவெளியிற் படத்தைப் படம் பிடித்தபோது சிறு தவறுதலினால், இருபக்க முழங்கையும் படத்தில் அமையவில்லை. அதே தவறு லோட்டனுக்கும் சம்பவித்திருக்கிறது. இதனால், பொன்னாவெளியில் படம் லோட்டன் எடுத்ததேயன்று என்பது தெளிவு.
ஆகவே ஏரம்பையர் படம், இப்பொழுது வழங்கும் படம், லோட்டன் எடுத்த படம் இந்த மூன்றுக்கும் வேறாய், லோட்டன் எடுத்த படத்துக்கு மூலமாய் விளங்குகின்றது பொன்னாவெளிப்படம். அப்படத்தின் பிரதியாய் லோட்டன் படம் இருந்தும் அது ஏன் பயின்று வழங்கவில்லை? என்பது கேள்வி.
ஏரம்பையர் படத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும், இப்பொழுது வழங்கும் படத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுமான மனேஜர் த. கை. அவர்களே லோட்டன் எடுத்த படப் பிரதிகளைக் கண்டிருக்கலாம். அப்படியானால் லோட்டன் எடுத்தபடம் நிச்சயம் வழங்கியிருக்க வேண்டுமே யென்று மேலும் கேள்வி வலியுறலாம்.
கேள்விகளுக்குச் சந்தேகம் தீர விடையிறுத்துப் பொன்னாவெளியிற் கிடைத்த படத்தை நாவலர் அவர்கள் படம் என்று தாபித்தல் எளிதன்று, அதே சமயத்தில் என்னைப் பொறுத்தவரையில் பொன்னாவெளியிற் படத்தை நாவலர் அவர்கள் படம் அன்று என்று தீர்த்துக்கட்ட முடியாமையும் ஸ்திரப்படுகிறது.
1. தொடக்கத்தில் திரு. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஏரம்பையரை இருத்தி ஒரு படம் அமைத்தார் என்ற சம்பவம், சென்னையில் அமைத்த படம், லோட்டன் எடுத்த படம் எல்லாவற்றையும் ஏரம்பையர் படம் என்று சொல்லவும், நாவலர் அவர்களுக்குப் படமே இல்லையென்று சொல்லவும் வைதுவிட்டது.
2. பெரியவர்கள் படம் பிடிக்க விடுவதில்லை; பெரியவர்களுக்குப் படம் இல்லாமலிருப்பதே நல்லது என்ற ஓர் அபிப்பிராயம் பிரபலஸ்தர்களிடம் குடிகொள்ளுமாயின் உண்மையான படமே வழக்கொழிந்து போவதில் நூதனம் இல்லை. நாவலர் பெருமானுடைய சில உண்மைகள், அவர்களோடு தொடர்பு வைத்தவர்களின் அபிப்பிராய பேதத்தால் மறைந்து போனதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
3. பொன்னாவெளியிற் கிடைத்த படம் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ எடுத்த உண்மையான நிழற்படமாயிருக்க வேண்டும். அல்லது நாவலர் அவர்களை நேரிற் கண்ட சைக்திரிகர் ஒருவரால் ஆக்கப்பட்டு அச்சில் வந்ததாக வேண்டும். இது எனது தனித்த அபிப்பிராயம்,
4. லோட்டன் எடுத்த படப் பிரதிகள் உண்மைப் படத்தின் பிரதிகளாயிருந்தும் வழங்காமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று: நாவலர் அவர்கள் படங்களை யெல்லாம் ஏரம்பையர் படம் என்று சொல்லுகின்ற பரம்பரை வழக்கம்.
இரண்டாவது: பெரியவர்களுக்குப் படம் இல்லாமலிருப்பது நல்லதென்ற அபிப்பிராயம்.
மூன்றாவது: சென்னையில் அமைத்த படம் முழு உருவத்தோடும் ஆராதனைக்கு வைக்கத்தக்க வகையில் வெளி அலங்காரத்தோடும் அமைந்து, பிரபலஸ்தர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு வழங்கத் தொடங்கினமை.
நான்காவது: பொன்னாவெளியில் கிடைத்த படத்திற் கால்களின் கீழ்ப்பாகம் தோன்றாமை. அவ்வாறே லோட்டன் எடுத்த பிரதிகளும் பூரண உருவம் ஆகாமை. (ஆராதிப்பவர்கள் பாதங்களோடு கூடிய பூரண உருவத்தையே விரும்புவார்கள்).
ஐந்தாவது: பொன்னாவெளியில் உள்ளவர்கள் இப்பொழுது வழங்கும் படத்தையும் உண்மையான நிழற் படம் என்று கருதியிருக்க, இங்கே யுள்ளவர்கள் பொன்னாவெளியின் படப் பிரதிகளாகிய லோட்டன் எடுத்த படங்களையும் ஏரம்பையர் படம் என்று கருதியமை.
ஆறாவது: ஆறுமுக நாவலர் சரித்திரத்தில் படத்தைப் பற்றி ஒன்றும் பேசாமை.
'என்றிங்ஙனம் எத்தனயோ காரணங்கள் உண்மையான படம் வழங்காமலிருப்பதற்கு இருக்கின்றன.
பொன்னாவெளி உடையார் நாவலர் அவர்களோடும் இருபது வருடம் வரை தொடர்புபட்டவர்; கல்விமான்; சமயாசாரம் தவறாதவர். அவர் ஒரு போலியான படத்தை வைத்துப் பூசித்திருக்க மாட்டார். லோட்டன் படம் அமைத்த காலம், உடையார் நாவலர் அவர்கள் படத்தைப் பூசிக்கத் தொடங்கிய காலம் இரண்டும் ஆராயப்பட வேண்டும்.
நாவலர் அவர்கள் காலத்தில் நிழற்படம் பிடிக்கும் வழக்கமில்லையென்று சிலர் வாதிக்கின்றார்கள். இது ஒத்துக்கொள்ளக் கூடியதாயில்லை. மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நாவலர் அவர்களுக்கு மூன்றாண்டு முந்தி இறந்தவர்கள். பிள்ளை அவர்களின் நிழற்படம் எடுக்கக்கூடிய தாயிருந்தும், எடுக்கத் தவறி விட்டோமே என்று டக்டர் சாமிநாதையர் அவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றார்கள்.
லோட்டன் எடுத்த படப் பிரதிகள் அபிமானிகளுக்குச் சந்தேகத்தை வருவித்தமையால், பொன்னாவெளியிற் கிடைத்த படத்தை அப்படியே வெளியிடுகின்றோம். அபிமானிகள் லோட்டன் எடுத்த படப் பிரதிகளோடும் இப்பொழுது வழங்கும் படத்தோடும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கக் கடவர்.
சந்தேகம் ஒன்று தோன்றினமையால், நாவலர் அவர்கள் நிழற்பட வெளியீட்டுச் சபை, அபிமானிகளிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தீர்மானித்து விட்டது. அபிமானிகளைப் பணம் அனுப்பாதிருக்கும் பொருட்டும், அனுப்பியவர்களைத் தங்கள் தங்கள் பணத்தை மன்னிப்போடும் ஏற்றுக் கொள்ளும்படியும் சபை அதி விநயத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றது.
பணம் சேகரிக்கும் பத்திரம் பெற்றவர்கள் தயை செய்து பத்திரங்களையும் சேர்ந்த பணத் தொகையையும் தனாதிகாரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம். சேர்ந்த தொகையை, தந்த தந்தவர்களிடம் ஒப்பிக்க முடியுமாயின் ஓப்பித்து அவர்களிடம் பற்றுச் சீட்டுப் பெற்றுப் பணம் சேகரிக்கும் பத்திரத்துடன் அனுப்பி வைக்கும்படி வேண்டுகின்றோம். பணம் உதவிப் பின் ஏற்றுக் கொண்டவர்களின் பெயரும் தொகையும் வெளியிடப்படும்.
பொன்னாவெளியில் கிடைத்த படம்பற்றி எழுந்த சந்தேகம் ஆராயப்படுகின்றது. ஆராய்ச்சி முற்றுப் பெற்றதும் சபை தன் தீர்மானத்தை வெளியிடும்.
சி. கணபதிப்பிள்ளை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் ஞாபகார்த்த சபைத் தலைவர்
சைவாசிரிய கலாசாலை,
திருநெல்வேலி,
5-10-1954.
ஈழகேசரி 17 அக்டோபர் 1954
நன்றி: noolaham.org