சாவோ சாவோ மன்னன் (கிபி 155–220)சீன தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8.000 சதுர அடி பரப்புள்ள கல்லறைத் தொகுதி ஒன்றில் இம்மன்னின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் ஆன்யாங் என்ற பழம்பெரும் தலைநகரத்திகுக் கிட்டவாக சிகாசூ என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கக் கல்லறைக்குச் செல்வதற்கு 130 அடி பாதை ஒன்றும் உள்ளது.
கல்லறையில் மூன்று மனிதர்களின் உடல்கள் உள்ளன. 60 அகவை மதிப்புடைய ஆண், 50 மற்றும் 25 அகவை மதிப்புடைய இரு பெண்களுடைய உடல்கள் அங்கு காணப்பட்டுள்ளன.
இவை அநேகமாக கிபி 220 ஆம் ஆண்டில் இறந்த சாவோ மன்னனின் உடல் எனவும், 230 ஆம் ஆண்டில் இறந்த அவனுடைய மனைவி, மற்றும் அவர்களின் தாதி ஆகியோருடையதாக இருக்கல்லாம் என தொல்பொருளியலாலர்கள் தெரிவித்துள்ளனர்.
சக்கரவர்த்தி சாவோ சாவோ (155–220) ஒரு கவிஞனாகவும் இருந்திருக்கிறான். ஹான் வம்சத்தின் வீழ்ச்சியின் பின்னர் வடக்கு சீனாவின் பெரும் பகுதியை இவன் கூட்டிணைத்து ஒற்றுமைப்படுத்தியிருந்தான்.
சென்ற ஆண்டு டிசம்பரில் இந்த இடம் அகழ்வாய்வுக்கு உட்படுத்தியதில் இருந்து இங்கு 250 இற்கும் மேற்பட்ட புராதனச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொன், மற்றும் வெள்ளியினாலான பாத்திரங்கள், மற்றும் பொருட்களும் அடங்கும்.
சாவோ காலத்து நிகழ்வுகளைக் குறிக்கும் கல் ஓவியங்களும் சாவோவின் தனிப்பட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
"இதுவரை கிடைக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து இக்கல்லறை சாவோ சாவோவினுடையது என நாம் திட்டவட்டமாகக் கூற முடியும்," என சீன அரசின் கலாச்சார மரபுப் பாதுகாப்புக்கான நிறுவனத்தின் பதில் தலைவர் குவான் கியாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விக்கிசெய்திகளுக்காக எழுதியது.