Showing posts with label நாவலர். Show all posts
Showing posts with label நாவலர். Show all posts

December 19, 2021

நாவலர் மீண்டும் வரவேண்டும்!

 நாவலர் மீண்டும் வரவேண்டும்!

 - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை -

1985 திசம்பர் 4 "நாவலர் குரல்" இதழில் வெளிவந்த கட்டுரை:

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித்தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் அதேயிடத்தில் இருந்து கொண்டே சொல்லிக்கொண்டே இருப்பாரேயானால், நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும். இவ்வாறு நாவலர் மரபின் கொழுந்தாக வாழ்ந்த தவமுனிவர் பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரகேசரி வாரமலரில் எழுதிய கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிதமணி ஐயா அக் கட்டுரையில் பின்வருமாறு தொடர்கிறார்:

“நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமுண்டா?' என்ற தலைப்பில் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் 13-10-85 ஞாயிறு வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையில் எனது பெயர் பல இடங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில்,

''தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பவனி சென்று தம் இஷ்ட தெய்வத்தின் சந்நிதியிலே தான் திருவாவடுதுறை ஒதுவார்களைக் கொண்டு தேவார பாராயணமும் மாகேசுர பூசையும் நடத்துவித்த தெற்கு வீதியிலே எழுந்தருளி இருந்த நாவலர் பெருமானை - ஐந்தாங்குரவரை - தமிழ்ப் பேரறிஞரை - தேசியத் தலைவரை எந்தவிதமாக அப்புறப்படுத்தினார்கள் என்பதைக் கேட்க இன்று யாரும் இல்லையோ? நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமில்லை என்று எல்லோரும் மௌனம் பூண்டுவிட்டார்களா?

இந்நிகழ்ச்சியை அறிந்த ஒரு பேருள்ளம் திருநெல்வேலியிலே நிச்சயமாக அழுது கொண்டிருக்கும். அவ்வுள்ளம் நாவலர் உள்ளம். இன்றைய நிலையிலே அவ்வுள்ளம் வாய்விட்டு யாது கூறுமோ? நாவலர் பெருமானை எங்களுக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தது அவ்வுள்ளம்" - என்ற பகுதி என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. அதன் காரணமாக யான் சில கருத்துக்களையேனும் வெளியிட வேண்டிய நிலையில் உள்ளேன்.

நாவலர் காவியப் பாடசாலையில் உண்டியும் உறையுளும் பெற்று வளர்ந்தவன், வாழ்ந்தவன் என்ற பாக்கியத்தினால் நாவலர் சிலை திறப்பு விழாவை ஒட்டிய பெருவிழாவைத் தொடக்கிவைக்கும் ஒரு சந்தர்ப்பம் 1969 யூன் 26 இல் எனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதினேன்.

குறித்த விழாவின் தொடக்க உரையில் “நம்மிடம் சிறிதே தவம் இருந்ததனாற் போலும் நாவலர் பெருமானின் ஆத்மசக்தி நமக்கிரங்கி நமக்கு வழிகாட்டும் பொருட்டு, நம் முன்னிலையில் உதயஞ் செய்கிறது. உயர்ந்த இராஜோபசாரங்களுடன் இலங்கைத் தலைநகரிலிருந்து புறப்பட்டு வீதிகள் தோறும் திருவுலாச் செய்து, புஷ்பாஞ்சலிகளும் புகழ்மாலைகளும் பெற்று இங்கே எழுந்தருளியிருக்கிறது.

தமிழரசர்கள் அரசுபுரிந்த யாழ்ப்பாணத்தில் எழுந்தருளியிருக்கிறது. தமிழரசர்களின் இராஜதானியாய் விளங்கியதும் நாவலர் பெருமான் அவதரித்ததும் தமிழ்முருகு அரசு வீற்றிருப்பதுமான நல்லூரை நோக்கி எழுந்தருளியிருக்கின்றது.

நல்லைக் கந்தன் திருவீதியிலே ஆறுமுகப்பெருமானின் திருக்கோயில் நோக்கியவாறே அப்பெருமானை அஞ்சலி செய்து கொண்டே நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் அமர்ந்திருப்பார்.

வேலும் மயிலும் துணை என்கின்ற அருமந்த வாக்கியத்தைக் கந்தபுராணம் முற்றுப் பெறுகின்ற இடத்தில் அமைத்து, கந்தபுராணத்தையும் கச்சியப்பப் பெருமானையும் உச்சிமேல் வைத்துப் பூசிக்கச்செய்த நாவலர் பெருமான் அழகுக்கு அழகுசெய்யும் கலைப் பொக்கிஷமான மணி மண்டபத்தில் நமக்கு என்றும் வழிகாட்டியாய் நம் நோக்கங்கள் முளை கொண்டு வளர அபயம் அளித்து அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

நாவலர் பெருமான் நல்லூர்க் கந்தசாமி கோயில் அமைப்பையும் சில நடைமுறைகளையும் எதிர்த்தவரேயன்றி (ஆறுமுநாவலர் பிரபந்தத்திரட்டு, நல்லூர்க் கந்தசாமி கோயில்) நல்லூர்க் கந்தசுவாமியரை எதிர்த்தவரல்லர். கோயிலாரை வேண்டுமென்றே எதிர்த்தவருமல்லர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில், மணி மண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித் தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் மீண்டும் அதேயிடத்திலிருந்து சொல்லிக் கொண்டு இருப்பாரேயானால் நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும்.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

1985 திசம்பர் 4 நாவலர் குரல்


March 31, 2020

ஆறுமுக நாவலரின் தன்னலமற்ற சேவை


வாந்தி பேதி நோயினால் மக்கள் திடீர் திரெனெ மடிந்துகொண்டிருந்தபோதுநோய்கண்ட பகுதிகளில் மக்கள் நடமாடவே பயந்து கொண்டிருந்தவேளை அந்தக் கொடிய வாந்தி பேதி நோயினால் பீடிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தார் வேட்டிகட்டி வெண்ணீறணிந்த ஒரு கறுத்த மனிதர்!

ஒரு தேசிய வீரரின் தன்னலமற்ற சேவை

-   வெ. சு. நடராசா -

ஈழநாடு மே 17, 1981

1876ம் ஆண்டளவில் நடந்த நிகழ்ச்சி இது!
யாழ். குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் வாந்திபேதி நோய் பெருமளவில் பரவித் தொல்லை கொடுத்த நேரம். எந்தெந்த நேரத்திலோ க்கள் மாண்டு மடிந்து கொண்டிருந்தனர். கொள்ளை நோயின் பீதியினால் மக்கள் கலக்கத்துடன் காலம் கழிக்கவேண்டியிருந்தது.

அப்போதைய அரசாங்கமும் சும்மா இருக்கவில்லை. நோயைக் கட்டுப்படுத்தத் தனிப்பட்ட சிகிச்சை நிலையங்களை நிறுவி, நோய்கண்ட மக்களை அப்புறப்படுத்திச் சுகாதாரச் சூழலில் வைத்து ஆவன செய்துவந்தது. வாந்தி பேதி நோய் பரவியிருக்கும் பகுதிகளில் நடமாடவே மக்கள் பயந்தனர். இந்த நோய் தொற்றுவியாதி என்று அரசினர் பிரகடனப்படுத்தியுமிருந்தனர். இந்த நோயைக் கட்டுப்படுத்தப் பெருமளவில் ஆட்கள் தேவைப்பட்டும், அரசாங்க அதிகாரிகளே இந்த முயற்சியில் ஈடுபடத் தயங்கினர். தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாது மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவையென முன்வரக்கூடிய உள்ளம் படைத்த தியாகசீலர்களைக் கண்டுபிடிப்பது முயற்கொம்பாகவே இருந்தது.

வேட்டி கட்டி வெண்ணீறணிந்து...

யாழ். நகரத்திலே இந்த நோய் கோரத் தாண்டவமாடிற்று. தகுந்த முன்னெச்செசரிக்கையுடன் நிவாரண முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களில் பெரும் பகுதியினர் திடீர்திடீரென நோய் கண்டு மாண்டுகொண்டு வந்தனர். இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நோயாளியும் அரசினர் தனிப்பட்ட இடத்தில் வைத்துச் சிகிச்சையளித்த கரையூர் (இப்போது குருநகர் பகுதியில் இருந்த) சிகிச்சைச் சாலையில் இருந்தார். அந்த நேரத்தில் வேட்டியுடுத்து, வெண்ணீறணிந்த மனிதர் ஒருவர் அரசாங்க அதிகாரிகள் முன்னின்றார். சுகாதாரப் பொறுப்பை ஏற்றிருந்த அரசாங்க அதிகாரிகள், அந்த மனிதர் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கிறாரோ என ஐயமுற்றனர். அந்த நேரத்தில் அரசினரிடம் உதவிபெற, சுகாதார ஆலோசனைபெற மக்கள் வருவது வழக்கமாக இருந்தது.

உதவி செய்ய அனுமதி கேட்டார்

ந் மனிதர் "என்னால் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யக்கூடுமானால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்' என்றார்.

''உதவியென்றால் எந்த வித்தில், யாருக்கு?" - அதிகாரி கேட்டார்.

நான் யாருக்கும் பயன் கருதாது பணிசெய்யும் பண்புடையவன். தாங்கள் அனுமதியளித்தால் நோய்வாய்ப்பட்டுத் துன்பப்படுவோருக்கு மன மகிழ்ச்சியோடு தொண்டு செய்வேன்" என்றார் அந்த வெண்ணீறணிந்த வேட்டி கட்டிய கறுத்த மனிதர்.

அதிகாரிக்கு ஒரு சந்தேகம்; வாந்திபேதி நோயின் கொடுமையை உணராமல் இந்த மனிதர் உதவிக்கு வருகிறார் போலும்! ஒருவேளை கொள்ளை நோயில் கோரப் பிடியில் சிக்கி இந்தத் தொண்டர் இறக்க நேரிட்டால் அந்தப் பழியை யார் ஏற்றுக் கொள்வது?

"வாந்திபேதி நோய் உமது உயிரையே உறுஞ்சிவிடக்கூடிய அபாயம் நிறைந்தது என்பது - உமக்கு விளங்குமா?" என்றார் அதிகாரி.

வந்த றுத்த மனிதர் புன்னகையோடு உங்கள் சங்கடம் எனக்கு விளங்குகிறது என்னைப்போல் ஒத்த மனித உயிர்கள் நோய் காரணமாக வருந்தி உயிர் விடும் போது - நானும் ஒரு மனிதாபிமானம் படைத்தவன் என்ற முறையில் என்னால் இயன்ற கடமையைச் செய்யலாமென விரும்புகிறேன். என்னுடைய தொண்டின்போது நானே கொள்ளை நோய்க்கு இரையாகி உயிர்விட நேர்ந்தாலும் மக்கள் சேவைதான் பெரிதென மதிக்கிறேன்.

அனுமதி கிடைத்தது

சிகிச்சை நிலையத்துக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரி, அந்த மனிதரை ஏற இறங்கப் பார்த்தார். நெற்றியில் திருநீற்றுக் குறியும், கழுத்தில் உருத்திராக்கமும் தரித்துக் காட்சிக்குப் பெரிய மகான் போலத் தோற்றமளித்த தன்னலமற்ற சமூகத் துறவியை மேலும் வினாவிடைக்குள்ளாக்கிக் கொண்டிருக்க விருப்பம் இல்லாது சிகிசைச் சாலையினுட்சென்று தொண்டாற்ற அனுமதியளித்தார் அந்த உயர் அதிகாரி.
 
நோயாளர் மத்தியிலே தொண்டு செய்யச் சென்றவர், முன்னர் நான் குறிப்பிட்ட நோயாளியையும் கண்டுகொண்டார். அந்நோயாளிக்கும் தொண்டுகள் பல செய்தார். குறிப்பிட்ட நோயாளி தனது மாணவன் என்று அறிந்ததும் அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளித்துத் தேறச்செய்யத் தன்னாலியன்றவற்றை எல்லாம் செய்தும் பலனளிக்காமற் போனதையறிந்ததும் பெரிதும் மனம் வருந்தினார். அம்மாவனின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்தார். வேறு என்ன அவர் செய்ய முடியும்.

அந்தப் பணியை மேற் கொள்ளவேண்டிவந்தவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல, அவர் மது நல்லூர்  நாவலர் அவர்களேதான். தன்னலம் மறந்து பிறர் நலம் பேணும் நாவலர்பெருமான் போல் பெருமகான்களை க்கள் தெய்வமெனப் போற்றுவதில் என்ன தவறு?

நாவலர் போலப் பல தொண்டர்கள் சைவசமயிகளிடத்தில் தோன்ற வேண்டும்.

 அமரர்  அராலியூர் வெ. சு. நடராசா
ஈழநாடு மே 17 1981
நன்றி: http://www.noolaham.org 


வரலாற்றுக் குறிப்புகள்:

1866 - 1867 காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தைப் பெரும் வாந்தி-பேதி நோய்த் தொற்று தாக்கியது. கொலரா விசாரணைக்குழு 1867 மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் வந்தது. இதன் அறிக்கை 1867 ஏப்ரல் 20 இல் வெளியிடப்பட்டது. 1866 அக்டோபருக்கும் 1867 ஏப்ரலுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் 16,298 பேர் கொலராவால் பாதிக்கப்பட்டனர். 10,210 பேர் இறந்திருக்கின்றனர்.

பின்னர் 1876 அக்டோபர் 21 இல் மீண்டும் வாந்திபேதி நோய் யாழ்ப்பாணத்தைத் (குறிப்பாகக் கரையூரில்) தாக்கியது. 1877 ஆரம்பத்தில் பாசையூர், ஊர்காவற்றுறை, அல்லைப்பிட்டி, நவாலி உட்படப் பல இடங்களுக்குப் பரவியது.

1877 சூலை 16 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 1875 இல் 224 பேர் இறந்துள்ளனர். 1876 இல் 826 பேருமாக, 1877 சூன் மாதம் வரை 5,481 பேர் இறந்துள்ளனர்.

கொலராவுக்குப் பின்னர் வட மாகாணத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. 20,000 பேர் வரை இறந்ததாகப் பதிவாகியுள்ளது.

நன்றி: John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, 1923, (2ம் பதிப்பு: 2003)

December 19, 2019

நாவலரின் இந்தியப் பிரயாணங்கள்


நாவலரின் இந்தியப் பிரயாணங்கள்

வட்டுக்கோட்டை மு இராமலிங்கம்


பெரியோர்களுட் சிலர் தமது வாழ்க்கை வரலாற்றைத் தாமே எழுதித் தந்துள்ளனர். சிலர் தம் வரலாற்றைத் தம்முடன் பழகியோர் எழுதிவிடுமாறு உதவி செய்துள்ளனர். இன்னுஞ்சிலர் தம்மைப்பற்றிப் பிற் காலத்தவர் எழுதிக்கொள்ளுமாறு குறிப்புக்கால் விட்டுச் சென்றனர். பெரும்பாலார் தம்மைப்பற்றிப் பிற் சந்ததியார் அறிவதற்கு ஏதுவான அகச்சான்றோ புறச்சான்றோ தராதுபோயினர். நாவலர் சம்பந்தப்பட்ட மட்டில், அவர் தாமியற்றிய நூல்களில் தம்மைப்பற்றி அதிகம் கூறவில்லை என்பது பெரியோர் கவலை, எனினும் கனகரத்தின உபாத்தியாயரால் எழுதப்பட்ட நாவலர் சரித்திரம் (1882) விஷயக்கிரமம் காலக்கிரமம் வழுவாது எழுதப்பட்ட ஒரு நூல் என நாம் கொள்ளலாம். அன்னாருக்கு நான் தலைவணங்குகிறேன்.

பெரும்பான்மையான சம்பவங்கள் நிகழ்ந்த காலங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவை நிகழ்ந்த தமிழ் வருஷப் பெயர்களைத் தந்துள்ளார். அவற்றிற்கு எதிரே, ஓரங்களில், ஆங்கில ஆண்டுகளைக் குறித்தால் முதலிலிருந்து கடைசி வரை காலக்கிரமம் விஷயக்கிரமம் வழுவாது அவர் தமது நூலை இயற்றியிருப்பது புலனாகும். சம்பவங்கள் நிகழ்ந்த காலங்கள் தெரியாதவிடங்களில் வருஷப்பெயர்கள் தரப்படவில்லை. அப்படியான சம்பவங்களுள் ஒன்று பேர்சிவல் – நாவலர் சென்னைப்பிரயாணம் (ஆறுமுகநாவலர் சரித்திரம் ed. 11), அதுதான் நாவலரின் முதலாம் இந்தியப் பிரயாணமெனக் கூறினாரும் அல்லர். பின் நிகழ்ந்த பிரயாணங்களை இரண்டாம், மூன்றாம், நாலாம், ஐந்தாம் பிரயாணங்களெனக் குறிப்பிட்டாரும் அல்லர். ஆனால் அவருக்குப் பின் வந்த சரித்திர ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் நாவலரின் பிரயாணங்களை ஐந்தென அறுதியிட்டு அவற்றைப் பின்வருமாறு நிரற்படுத்தித் தந்துள்ளனர். (நாவலர் பக், 11).

நாவலர் சரித்திரங்கள் கூறும் பிரயாணங்கள்

பேர்சிவல் பாதிரியாரவர்களுடன் பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம். அச்சிடுதல் சம்பந்தமாகச் சென்றது. காலங் குறிக்கப்படவில்லை.
சௌமிய வருஷம் ஆடி மாதம் (1849) மாணாக்கருட் சிரேட்டராகிய நல்லூர் சதாசிவப்பிள்ளையையுங் கட்டிக்கொண்டு அச்சியந்திரம் வாங்கச் சென்றது.
ஆனந்தவருஷம் ஐப்பசி மாதம் (1854) நல்லூர் சதாசிவப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு சிவபூசை எழுந்தருளப்பண்ணச் சென்றது.
காலயுத்தி வருஷம் ஆனி மாதம் (1858) புத்தகங்கள் சிறப்பாக அச்சிடத் தனித்துச் சென்றது.
ருதிரோத்காரி வருஷம் தை மாதம் (1884) சிதம்பரம் வித்தியாசாலை தாபிக்கவும் பிறவிஷயங்கள் ஒப்பேற்றவும் தனித்துச் சென்றது.

பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம்

பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம் சம்பந்தமான நாவலரின் முதல் இந்தியப் பிரயாணம் 1847-ம் ஆண்டை அடுத்ததாயிருக்கும் என்பது பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் அபிப்பிராயம் (நாவலர் பக். 11) பண்டிதர் உத்தியோகத்தைத் தான் கீலக வருஷம் புரட்டாதி மாதம் (1848) பரித்தியாகம் பண்ணியதாகக் கூறிய நாவலர் கூற்று பண்டிதமணி அவர்களை அப்படி நினைக்கச் செய்கிறது போலும்.
1848- ம் ஆண்டில் அப்பிரவாணம் நிகழ்ந்தது என்பர். கிறிஸ்தவ வேதாகமத்தின் வரலாறு எழுதிய அத்தியட்சகர் வண. கலாநிதி சபாபதி குலேந்திரன் அவர்கள் (பக். 129) வேதாகம மொழிபெயர்ப்பை பேர்சிவல் பாதிரியார் சுதேச உதவியாளருடன் 1848 யூலாய் மாதத்தில் ஆரம்பித்தாலும், பாகம்பாகமாய் அச்சிட்டுச் சென்னைக்கு அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மொழிபெயர்ப்புப் பற்றிய ஆட்சேபனைகள் 1847-ல் யாழ்ப்பாணம் வந்தெட்டியதாலும், யாழ்ப்பாண மொழிபெயர்ப்பை மேற்பார்வையிட்டு அறிக்கைகூற 20-9-1847-ல் யாழ்ப்பாணத்தில் ஒரு கமிட்டியைச் சென்னைச் சங்கம் நியமித்ததாலும் அத்தியட்சசர் அவர்கள் அப்பிரயாணம் 1848-ல் நிகழ்ந்ததாகக் கருதுகின்றார் போலும்.

சரித்திரம் கூறாப் பிரயாணம்

சென்ற மாசம் யாழ்ப்பாணக் கல்லூரி நூல்நிலையத்தில் பழைய உதயதாரகை இதழ்களைப் படித்துக்கொண்டு போகும் போது 11-6-1846 இதழில் பின்வருஞ் செய்தியைக் கண்டு திகைப்புற்றேன்.

யாழ்ப்பாணம்
இலக்கண இலக்கியங்களில் மகா நிபுணர்களாகிய கனம்பொருந்திய மகாஸ்ரீ அருளம்பல முதலியார் குமாரர்  அம்பலவாண முதலியாகும் மகாஸ்ரீ ஆறுமுகப் பின்ளை அவர்களுஞ் சென்னை மாநகரத்திலுள்ள  வித்தியாசாலைகளைப் பார்க்கவும் வித்துவான்களைக் காணவும் இந்த மாதம் 8-ந் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பிரயாணப்பட்டார்கள்.
இப்படிக்கு
அவர் நேசன்

பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றத்தோடு சம்பத்தப்பட்ட பிரயாணமோ இது, அல்லது நாவலர் சரித்திரத்தில் இதுவரை வெளிவராத ஓர் இந்தியப்பிரயாணமோ இது என்பதே என் வியப்பிற்குக் காரணம்.

பைபிள் மொழிபெயர்க்க ஆரம்பிப்பதற்கு (ஆடி 1846) ஒரு மாசத்திற்குமுன் (ஆனி 1846) இப்பிரயாணம் நிகழ்ந்திருப்பதால் நாவலர் சரித்திரத்தில் இதுவரை வெளிவராத ஓர் இந்தியப் பிரயாணம் இஃது எனக் கொள்ளல் வேண்டும்.

அம்பலவாண முதலியார்

மேற்கூறிய பிரயாணத்தோடு சம்பந்தப்பட்ட அருளம்பல முதலியரர் குமாரர் அம்பலவாண முதலியார் யாராயிருக்கலாமென ஆராய்ந்தகாலை ஒர் இடியப்பச் சிக்கலுள் அகப்பட்டேன், அதன் விளைவே 'ஈழநாடு (29-10-1970) இதழில் நான் எழுதிய கட்டுரையாகும்.

அருளம்பல முதலியார் என்னும் பெயருடன் இருவர் 1800-ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கின்றனர். ஒருவர் தென்கோவை பெரிய அருளம்பல முதலியார், மற்றவர் உடுப்பிட்டி அம்பலவாண முதலியார் குமாரர் அருளம்பல முதலியார்.

தென்கோவை பெரிய அருளம்பல முதலியார் குமாரர் பெயர் அம்பலவாண பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெல்லிப்பழையில் வாழ்ந்தவர். மூத்தப்பு என்னும் மறுநாமம் உடையவர். அவர் வாழ்க்கை வரலாறு சகல தமிழ்ப்புலவர் சரித்திரங்களிலும் கூறப்படுகிறது.

உடுப்பிட்டி, அருளம்பல முதலியார் குமாரர் பெயர் அம்பலவாண முதலியார். இவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கோப்பாயில் வாழ்ந்தவர். சின்ன அம்பலவாணர் என்னும் மறு நாமம் உடையவர்; (இவருடைய மைத்துனர் நீதிவான் சுப்பிரமணியம் அம்பலவாணர் c. C. S. பெரிய அம்பலவாணர் என அழைக்கப்பட் டார்). தமிழுடன் ஆங்கிலமுங் கற்றவர். இவர் வாழ்க்கை வரலாறு நாவலர் பிரபந்தத்திரட்டு (1954) முதற்பாகம் (பக் 165-166) 'வெகுசனத் துரோகம்' என்னும் பகுதியிலும் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு (பக். 81 - 98) மயில்வாகன வம்ச வைபவம்' என்னும் பகுதியிலும், இவரது வம்சாவளி யாழ்ப்பாண வைபவ கௌமுதி (பக். 249-250) இலும், உதயதாரகை இதழ்களிலும் கூறப்படுகிறது.

அம்பலவாண பண்டிதரின் தௌகித்திரி (மகளின் மகள்) அம்பலவாண முதலியாரின் மகன் பிறக்டர் அருளம்பல முதலியாரை 1850-ல் மணந்ததால் இரு குடும்பங்களுக்குமிடையே தொடர்பும் ஏற்பட்டது.

நாவலரின் மேற்கூறிய பிரயாணத்தோடு சம்பந்தப்பட்டவர் அம்பலவாண பண்டிதரல்லர். அம்பலவாண முதலியாரே என்பது தெளிவு.

இச் சிக்கலுள் நான் அகப்பட்டுத் தவித்தபோது அச்சுக்கலை அறுத்துத்தந்த பெருமை உடுப்பிட்டி ஆசிரியர் திரு. கா. நீலகண்டன் அவர்களையும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரவர்களின் புதல்வர்கள் இருவரையும் சாரும்.

நாவலரும் அம்பலவாண முதலியாரும் ஒன்றுகூடிய காரணத்தை இனி ஆராய்வோம்.

கூட்டுப் பிரயாணம்

உடுப்பிட்டி, அருளம்பல முதலியார் 1800-ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவரென முன்னர் கூறினோம். (வல்லிபட்டி, குமாரசுவாமி முதலியார் இயற்றிய அருளம்பலக்கோவையின்  பாட்டுடைத் தலைவன் அவரே போலும்-ஈழகேசரி 16-8-1936-ம் நூலினை நாம் பார்க்கதில்லை).

நாவலர் காலத்திற்குச் சிறிது முன்னர் அருளம்பல முதலியார் உடுப்பிட்டியில் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். தமிழ், ஆங்கிலம், மருத்துவம், சோதிடம். சங்கீதம் யாவும் இலவசமாகக் கற்பிக்கப்பட்டன. அருளம்பல முதலியார் இறந்த பின்பு அவர் குமாரர் அம்பலவாண முதலியார் அப்பள்ளிக்கூடத்தைப் பரிபாலித்து வந்தார்.

1845-ம் ஆண்டு பேர்சிவல்-நாவலர் உறவு மெலிவுற்றதெனப் பாவலர் சரித்திர தீபகமும் (பக். 32) உதயதாரகையும் கூறுவன. 1846-ம் ஆண்டு தை மாதம் முதலாக நாவலர் பின்ளைகளைச் சேர்த்துக் கற்பிக்கத் தொடங்கினார். யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டு உழைத்த அம்பலவாண முதலியாரும் ஆறுமுக நாவலரும் தாய்நாட்டிலுள்ள வித்தியாசாலைகளைப் பார்க்கவும் வித்துவான்களைக் காணவும் அவ்வாண்டு ஆனி மாதத்தில் மேற்கூறிய இந்தியப் பிரயாணத்தை மேற்கொண்டனர் போலும்.

1847-ம் ஆண்டு மார்கழி மாதம் 31-ந் திகதி வண்ணார் பண்ணைச் சிவன் கோவிலில் நாவலர் நிகழ்த்திய கன்னிப் பிரசங்க வைபவத்துக்கு இவ் அம்பலவாண முதலியார் அவர்களே தலைமைதாங்கினரெனவுங் கூறப்படுகிறது.

முடிவுரை

* 1848-ம் வருஷ முற்பகுதியில்...... ஸ்போல்டிங் ஐயரும் பேர்சிவல் ஐயரும் சென்னையில் நியமிக்கப்பட்டிருந்த உப கமிட்டிக்கு யாழ்ப்பாணத் திருப்புதலைச் சமர்ப்பிக்குமாறு போயினர். அவர்களுடன் நாவலரும் போனதாகக் காணப்படுகிறது' என்பது அத்தியட்சகர் கூற்று (பக். 129).
* சென்னையில் நடந்த வேதாகம மொழிபெயர்ப்புக்கு 1848-ம் வருஷம் ஸ்போல்டிங் பண்டிதருடன் சந்திரசேகர பண்டிதரும் நாமும் போயிருந்தோம்' என்பது ஆணலட் சதாசிவம் பிள்ளையவர்களின் கூற்று (பா. ச. தீ. ப. 125).

இவ்விரு கூற்றுக்களும் பர்சிவல் - நாவலர் சென்னைப் பிரயாணம் 1848-ம் ஆண்டில் நிகழ்ந்த்தென ஐயந்திரிபற அறுதியிட்டு நிலைநாட்டப் போதுமானவை.

1845-ல் நெலிவுற்ற பெர்சிவல்-நாவலர் உறவு பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம் சம்பந்தமாக 1848-ல் வலுவுற்று சென்னையிலிருந்து திரும்பிவந்ததும் துண்டிக்கப்பட்டது போலும்.

நாவலரின் பண்ணைச் சிவன் கோயிற் கன்னிப் பிரசங்கம் (31-12-1847) தொடக்கம் மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயில் பிரசங்கம் (13-3-1848) வரை நாவலர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்ததற்குப் போதிய ஆதாரங்கள் உள.

1848 ஆடியில் நிகழ்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவிலே நாவலரின் பிரசங்கத்தைக் கண்டித்து ஒரு பிரசங்கம் செய்யப்படுமென விளம்பரமொன்று வெளிவந்ததெனினும் அப்பிரசங்கம் நிகழவில்லை. ஆவணியில் வண்ணார்பண்ணை வித்தியாசாலை தாபிக்கப்பட்டது. புரட்டாதியில் பண்டித உத்தியோகம் பரித்தியாகஞ் செய்யப்பட்டது.

ஆகவே பேர்சிவல்-நாவலர் இந்தியப் பிரயாணம் 1848 பங்குனிக்கும் ஆடிக்குமிடையில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். 1848-ம் வருஷ முற்பகுதியில் என்னும் அத்தியட்சகரின் கூற்றுடன் இது பொருத்தமுடைத்தாதல் காண்க.

வேதாகம மொழிபெயர்ப்புச் சம்பந்தமாக சென்னை சென்றவர்களின் நாமாவலியில் சந்திரசேகர பண்டிதரவர்களையும் ஆணல்ட் சதாசிவம் பிள்ளையவர்களையும் அத்தியட்சகரவர்கள் தமது நூலின் இரண்டாம் பதிப்பில் சேர்த்துக் கொள்வார்களாக.

கனகரத்தின உபாத்தியாயரின் கைவண்ணம்

கனகரத்தின உபாத்தியாயரின் காலக்கிரமம் விஷயக் கிரமம் பற்றி முன்னர் கூறினோம். இரண்டொரு எடுத்துக்காட்டுக்கள் வருமாறு:

(1) கந்தப்பிள்ளையின் மரணம்

கந்தப்பிள்ளை (நாவலரின் தந்தை) 1842-ம் ஆண்டு ஆனி மாதம் 2-ந் தேதி புதன்கிழமை தமது 76-ம் பிராயத்திலே இறந்தார். அவர் பாடத் தொடங்கிவிட்டிருந்த இரத்தினவல்லி விலாசத்தை நாவலர் பாடி முடித்தார் எனப் பாவலர் சரித்திர தீபகம் (பக். 75) கூறுகிறது. தந்தையார், இறக்கும்போது நாவலருக்கு (1822-1842) வயது இருபது. பேர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ்ப்பண்டிதனாயிருந்த காலம் அது. தந்தை விட்ட குறையைத் தனயன் பூர்த்திசெய்தான்.

(நாவலர்க்கு) ஒன்பதாம் வயசாகும்போது. ஆனித் திருமஞ்சன உற்சவ காலத்தில் இவருடய தந்தையார், ஒரு நாடகம் பாடிக்கொண்டிருந்த சமயத்தில் கையில் எழுத்தாணியும் சட்டமும் பிடித்தபடியே சடுதியாக  சிவபகமடைந்து விட்டார். அந்த நாடத்தின் குறையை அப்போதே இவர் பாடி முடித்தார்.

என நாவலரின் தமையனார் புதல்வர் த. கைலாசபிள்ளையவர்கள் தமது ஆறுமுக நாவலர் சரித்திரத்தில் (பக் 6) கூறக் காண்கிறோம். தகப்பனார் இறக்கும்போது நாவருக்கு வயது ஒன்பது என கனகரத்தின உபாத்தியாயரும் (1882), பாவலர் சரித்திர தீபகமும் (1886) கூறாததைக் கைலாசபிள்ளையவர்கன் (1916) எங்கிருந்து பெற்றனரோ தெரியவில்லை. நாவலரின் தகப்பனார் கந்தப்பிள்ளை இறந்த தினமெனப் பாவலர் சரித்திர தீபகம் குறிப்பிடும் ஆண்டு, மாதம், தேதி, வாரத்தை மறுத்துரைத்தாரும் அல்லர்.

இவரைப் பின்பற்றிச் சுத்தானத்த அடிகளாரும் (பக் 23) பண்டிதை திருமதி பொன். பாக்கியமவர்களும் (ப. 2) இது விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கக் காண்கிறோம்.

ம்பாயிலிருந்து வெளிவரும் 'பவன் சஞ்சிகை'யின் {Bhavan's Journal 10-8-1969) விசேடமலரில் கொழும்பு, திரு. ம. சி சிதம்பரப்பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இந்து சாதனம் (20-11-1970) இதழில் தரப்பட்டுள்ளது.

பிறக்கும்போதே மேதாவிலாசம் உடையவராகையினால் இவரது தந்தையார் பாடி அரைவாசியில் விட்டுப்போன ஒரு நாடகத்தைத் தமது ஏழாம் வயதில் பூர்த்திசெய்தார்."

என மேலும் வயது இரண்டு குறைக்கப்பட்டிருத்தல் காண்க.

ஆதாரமில்லாக் கூற்றுக்களை நுழைப்பது உண்மைச் சரித்திரத்துக்கு ஊறுவிளைப்பதாகும்.

(2) சின்னப்பபிள்ளை

நாவலருடன் ஆங்கிலங்கற்றவர்களுள் இருவராகிய மு. தில்லைநாதபிள்ளையும், சு. சின்னப்பபிள்ளையும் சைவ சமயத்தின் உண்மையை அறியாதபடியினாலே, கிறீஸ்து மதத்திலே பிரவேசித்தற்கு உடன்பட்டு, இன்ன கிழமை ஞான ஸ்நானம் பெறுவோம் என்று பேர்சிவல் பாதிரியாருக்கு வாக்குக்கொடுத்திருந்தனர். முந்தியவர் பேர்சிவலுடைய ஆங்கில வித்தியாசாலை உபாத்தியாயர். பிந்தியவர் உபாத்தியாயர் உத்தியோகத்தை எதிர்பார்த்து நின்றவர். இவ்விருவருடைய சமாசாரங்களைக் கேள்வியுற்ற நாவலர் சைவசமயத்தினது உயர்வையும் கிறீஸ்து சமயத்தினது தாழ்வையும் போதித்து அவர்களை ஞானஸ்நானம் பெறாது செய்தனர்.

ஞானஸ்நானம் பெறாமையினால் தில்லைநாதபிள்ளை உபாத்தியாயர் உத்தியோகத்தினின்றும் நீக்கப்பட்டார். சின்னப்பபிள்ளை உபாத்தியாயர் உத்தியோத்தைப் பெறாது விட்டு வியாபார முயற்சியில் ஊக்கங்கொண்டு கொழும்புக்குப்போயினர். அங்கே க்காலத்திலே சிவில் உத்தியோகத்தவருக்குள் அதி கெளரவமாயிருந்த மோர்கன் துரையினுடைய சகாயத்தினாலே சுப்பிரீங் கோட்டுத்தரணி உத்தியோகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் வந்து அதிசமர்த்தரெனப் பெயர் பெற்றுச் சிறப்புற்று வாழ்ந்து, சிலகாலஞ் சென்றபின் இறந்தனர் என்பது கனகரத்தின உபாத்தியாயரின் கூற்று. (பக். 13-15)

இது விவரம் பின்வரும் யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக்கும்மிப்பாடல்களால் (பக். 22) வலுப்பெறுதல் காண்க.

சின்னப்பா வென்பவர் நியாயம் படிக்கச்
சிறந்த கொழும்பினின் மோர்க்கனி டஞ்சென்று
நன்னய மாகப் படித்துத் தரணியில்
நல்லவ ராய்வந்தார் ஞானப் பெண்ணே.

எத்தனை பேர்தான் தரணிக ளானாலு
மிவரைத்தான் சோதனை பண்ணி கொடுத்து
அத்தனை பேரிலும் நியாய வுணர்ச்சி
பதிக நுணுக்கமாம் ஞானப் பெண்ணே.”

இது விஷயத்தை விளக்கக் குறைவினால் சுத்தானந்த அடிகள் (பக். 45) பின்வருமாறு கூறுகின்றார்.

சின்னப்பாபிள்ளை ......கொழும்பு சுப்பிரிம்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) நியாயதுரந்தரராயிருந்தார்.

சேர் றிச்சாட் மோர்கன் (Sir Richard F. Morgan) அவர்கள் முதலில் இராணி அப்புக்காத்தாகவும் பின்னர் நீதியரசராகவும் இலங்கையில் அக்காலத்தில் கடமைபுரிந்த்துவும், குருகுல முறையில் சட்டக்கல்வி பயிற்றப்பட்டதுவும், தரணிமாரில்லாமையால் தமிழ்கற்ற சிலருக்குப் பயிற்சி அளித்துத் தரணிப்பட்டங்கட்டியதுவும் ஈண்டு நோக்கத்தக்கன.

(3) மத்தியஸ்தர் மகாலிங்கஐயர்

பேர்சிவல் பாதிரியாரும் ஆறுமுக நாவலரும் யாழ்ப்பாண மொழிபெயர்ப்பை அரங்கேற்றச் சென்னைக்குச் சென்ற போது அங்குள்ள மிஷனரிமார், பாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி குறைவானதென்றும், செந்தமிழ் பேசுவோர் அரியர் என்றும், யாழ்ப்பாணத் தமிழ்ப் பண்டிராற் திருத்தப்பட்ட பைபிள் தமிழகத்துப் பண்டிதர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவர்கள் பிழையில்லையென்றும், வசன நடை நன்றாயிருக்கிறதென்றும் சொல்வார்களாயின் அச்சிற் பதிப்பிக்கலாமென்றும் நிபந்தனையிட்டனர். அதற்கு நாவலர் இணங்கவே, அக்காலத்திற் சென்னையிற் சிறந்த வித்துவானாயிருந்த மழவை மகாலிங்க ஐயரிடம் மொழிபெயர்ப்பு பார்வைக்கு ஒப்படைக்கப்பட்டது.

மகாலிங்க ஐயர் பைபில் முற்றும் வாசித்து, அதிலே பிழையில்லையென்றும், வசன நடை நன்றாயிருக்கின்றதென்றும், இந்தப் பிரசாரம் அச்சிடுலே தகுதியென்றும் அவர்களுக்குச் சொல்லி. யாழ்ப்பாணத்துத் தமிழையும் நன்கு பாராட்டி வியந்தனர்''
என்பது கனக ரத்தின உபாத்தியாயரின் கூற்று (பக். 11-13).

யாழ்ப்பாணத் திருப்புதலைக் கலைஞர் எவ்வளவு வியந்தபோதிலும், அதை வாங்கி உப்யோகிக்கவேண்டியவர்ளுள் வேறு பிப்பிரவரம் நிலவியது. தஞ்சாவூர், திருநெல்வேலியிலுன்ள்லவர்களே அக்காலம் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களுள் நாலில் மூன்று பங்கானவர்கள். அப்பாங்களிலிருத்த மிஷனரிமார் ஏகமனதாய் யாழ்ப்பாணத் திருப்புதலை ஏற்க மறுத்தனர். ஆகவே கிறீஸ்துவர்களும்  மறுத்தனர். இத்துடன் அத்திருப்புதலின் தி தீர்க்கப்பட்ட என்பது அத்தியட்சர் கூற்று (பக். 140).

யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு அரங்கேற்றம் பெற்றும் அங்கீகாரம் பெறவில்லை என்பது அத்தியட்சகர் கருத்து.

நாவலர்) பேர்சிவல் என்னும் பாதிரியாருக்குப் பண்டிதராயிருந்து பைபிள் மொழிபெயர்க்கும் காலத்தில், அந்தப் பைபிள் சென்னபட்டணத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுவந்தது”, என்பது கைலாசபிள்ளையவர்களின் கூற்று (பக் 12).

ரு மொழிபெயர்ப்புக்கள் ஏகாலத்தில் இருந்தனவென க் கனகரத்தின உபாத்தியாயர் கூறாததை கைலாசபின்ளையர்கள் எங்கிருந்து பெற்றனரோ தெரியவில்லை.

யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு 1846-ல் ஆரம்பிக்கப் பெற்று 1848-ல் முற்றுப்பெற்று, 1850-ல்லச்சேற்றப் பெற்றதும் சென்னை மொழிபெயர்ப்பு 1858-ல் ஆரம்பிக்கப் பெற்று 1869-ல் முற்றப்பெற்று 1871-ல் அச்சேற்றம் பெற்றதும் ஈண்டு நோக்கத்தக்கன. ஒப்புநோக்கிப் பார்க்க இரு மொழிபெயர்ப்புக்கள் ஏககாலத்தில் இருக்கவில்லை.

அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள நூல்களிலும் கட்டுரைகளிலும் இரு மொழியெர்ப்புக்கள் ஏககாலத்தில் இருந்ததெனச் சிருஷ்டிக்கப்பட்டிருத்தல் கவலைக்கு இடமாகின்றது.

(4) நல்லூர்க் கந்தசாமி கோயில்

நல்லூர்க் கந்தசாமி கோயில் அதிகாரியாகிய இரகுநா மாப்பாணருக்கு, பிலவங்க வருஷம் ஆடி மாதம் (1847)  ஒரு மகோற்சவ தினத்திலே, அக்கோயில் சிவாமத்துக்கு விரோதமாக கட்டப்பட்டிருத்தல் தகாதென்றும், சிவதீக்ஷையில்லாத பிராமணர் பூசை செய்தல் தகாதென்றும் போதித்தார்" என்பது கனகரத்தின உபாத்தியாயர் கூற்று. (ப. 16)

உதயதாரகை (13-8-1846) இதழில் வெளிவந்த பின்வருங் கடிதத்தால் இது வலுப்பெறுதல் காண்க.

விளைவேலியில் நெல்லு நல்லூரில் திருவிழா

நல்லூர் கந்தசாமி கோவில் உண்டான நாள் முதல் வருஷத்திற் கொஞ்ச நாளைக்குத் திருவிழா நடந்து வருகிறதுண்டு, அதில் யாகமென்னும் சந்நிதியில் ரட்சையென்னும் கறுப்புத் திலம் சுவாமிக்குச் சாத்திவருவதும், அந்த வழமையைச் சாத்திரத்திற் சொல்லவில்லை யென்று மறுதலித்து இந்த வருஷம்தான் தானே திருவிழாக் குருக்களாக வந்து ரட்சையென்னும் திலம் இதுவரைக்கும் வழங்கிவந்தது தவறென்று நினைத்து அதைத் ள்ளிப்போட்டார். சாத்திரங்களையறியாத தாங்கள் இந்த நடப்பைப்பற்றி எப்படி எண்ணவேண்டும். முன் நடத்திவந்த குருக்கள்மாரோ இப்போ நடத்திவரும் வேக் குட்டிக்குருவினது செய்கையோ எது சரி யென்று நினைக்கவேண்டும். சகல சாத்திரங்களையும் கற்றறிந்த பெரியவர்களே எது சரியென்று சொல்லுங்கள். யாகத்திலே ரட்சை கொடுக்கிறது சாத்திரமல்ல வென்று சொல்லுகிறவர் வேலாயுதம் வைத்துப் பத்து நாளைக்கு அதிகம் திருவிழாப் பண்ணவேண்டிய சாத்திரமென்ன? திருவிழாவை வழமைப்படி இருபத்து மூன்று நாளைக்கு நடத்திவருகிறார். யாகத்தில் வழமையாய் நடப்பித்து வந்த ரட்சையென்னும் திலத்தைச் சாத்திரத்தில் இல்லையென்று தள்ளிப்போட்டதன் காரியமென்ன, இப்படியிருப்பதினால் எது சரியென் அறிய விரும்புகிறேன்.
 இது கோப்பாயிலிருக்கும் மயில்வாகனம் சரவணமுத்து எழுதித் தந்தபடி சுப்பர் ந்தப்பன் அச்சுப் போடும்படி கொடுத்தது.
ந்தப்பன்

அக்காலத்தில் (1846) யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் பற்றி நிலவிய அபிப்பிராயம் இது போலும். இதுவும் இது போன்றவையுமே நாவலருக்கும் நல்லூர் ந்தசாமி கோயிலாருக்குமிடையே நடந்த சொற்போர்களுக்குக் காரணமாம்.

எழுதியவர்: வெள்ளவத்தை திரு. மு. இராமலிங்கம்

"ஈழநாடு" வாரமலர் 24-2-1971 இல் வெளியானதன் மறுபிரசுரம்
மூலம்:நாவலரின் இந்தியப் பிரயாணங்கள் (நூல்)


மு. இராமலிங்கம் (9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல் ஆய்வாளரும் ஆவார். முருகரம்மான் என்ற பெயரிலும் எழுதியவர். மக்கள் கவிமணி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இவரைப் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா கட்டுரையைப் படியுங்கள்.