December 19, 2021

நாவலர் மீண்டும் வரவேண்டும்!

 நாவலர் மீண்டும் வரவேண்டும்!

 - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை -

1985 திசம்பர் 4 "நாவலர் குரல்" இதழில் வெளிவந்த கட்டுரை:

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித்தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் அதேயிடத்தில் இருந்து கொண்டே சொல்லிக்கொண்டே இருப்பாரேயானால், நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும். இவ்வாறு நாவலர் மரபின் கொழுந்தாக வாழ்ந்த தவமுனிவர் பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரகேசரி வாரமலரில் எழுதிய கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிதமணி ஐயா அக் கட்டுரையில் பின்வருமாறு தொடர்கிறார்:

“நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமுண்டா?' என்ற தலைப்பில் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் 13-10-85 ஞாயிறு வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையில் எனது பெயர் பல இடங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில்,

''தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பவனி சென்று தம் இஷ்ட தெய்வத்தின் சந்நிதியிலே தான் திருவாவடுதுறை ஒதுவார்களைக் கொண்டு தேவார பாராயணமும் மாகேசுர பூசையும் நடத்துவித்த தெற்கு வீதியிலே எழுந்தருளி இருந்த நாவலர் பெருமானை - ஐந்தாங்குரவரை - தமிழ்ப் பேரறிஞரை - தேசியத் தலைவரை எந்தவிதமாக அப்புறப்படுத்தினார்கள் என்பதைக் கேட்க இன்று யாரும் இல்லையோ? நாவலர் ஐயாவுக்கு இனியும் இங்கே இடமில்லை என்று எல்லோரும் மௌனம் பூண்டுவிட்டார்களா?

இந்நிகழ்ச்சியை அறிந்த ஒரு பேருள்ளம் திருநெல்வேலியிலே நிச்சயமாக அழுது கொண்டிருக்கும். அவ்வுள்ளம் நாவலர் உள்ளம். இன்றைய நிலையிலே அவ்வுள்ளம் வாய்விட்டு யாது கூறுமோ? நாவலர் பெருமானை எங்களுக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தது அவ்வுள்ளம்" - என்ற பகுதி என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. அதன் காரணமாக யான் சில கருத்துக்களையேனும் வெளியிட வேண்டிய நிலையில் உள்ளேன்.

நாவலர் காவியப் பாடசாலையில் உண்டியும் உறையுளும் பெற்று வளர்ந்தவன், வாழ்ந்தவன் என்ற பாக்கியத்தினால் நாவலர் சிலை திறப்பு விழாவை ஒட்டிய பெருவிழாவைத் தொடக்கிவைக்கும் ஒரு சந்தர்ப்பம் 1969 யூன் 26 இல் எனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதினேன்.

குறித்த விழாவின் தொடக்க உரையில் “நம்மிடம் சிறிதே தவம் இருந்ததனாற் போலும் நாவலர் பெருமானின் ஆத்மசக்தி நமக்கிரங்கி நமக்கு வழிகாட்டும் பொருட்டு, நம் முன்னிலையில் உதயஞ் செய்கிறது. உயர்ந்த இராஜோபசாரங்களுடன் இலங்கைத் தலைநகரிலிருந்து புறப்பட்டு வீதிகள் தோறும் திருவுலாச் செய்து, புஷ்பாஞ்சலிகளும் புகழ்மாலைகளும் பெற்று இங்கே எழுந்தருளியிருக்கிறது.

தமிழரசர்கள் அரசுபுரிந்த யாழ்ப்பாணத்தில் எழுந்தருளியிருக்கிறது. தமிழரசர்களின் இராஜதானியாய் விளங்கியதும் நாவலர் பெருமான் அவதரித்ததும் தமிழ்முருகு அரசு வீற்றிருப்பதுமான நல்லூரை நோக்கி எழுந்தருளியிருக்கின்றது.

நல்லைக் கந்தன் திருவீதியிலே ஆறுமுகப்பெருமானின் திருக்கோயில் நோக்கியவாறே அப்பெருமானை அஞ்சலி செய்து கொண்டே நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் அமர்ந்திருப்பார்.

வேலும் மயிலும் துணை என்கின்ற அருமந்த வாக்கியத்தைக் கந்தபுராணம் முற்றுப் பெறுகின்ற இடத்தில் அமைத்து, கந்தபுராணத்தையும் கச்சியப்பப் பெருமானையும் உச்சிமேல் வைத்துப் பூசிக்கச்செய்த நாவலர் பெருமான் அழகுக்கு அழகுசெய்யும் கலைப் பொக்கிஷமான மணி மண்டபத்தில் நமக்கு என்றும் வழிகாட்டியாய் நம் நோக்கங்கள் முளை கொண்டு வளர அபயம் அளித்து அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

நாவலர் பெருமான் நல்லூர்க் கந்தசாமி கோயில் அமைப்பையும் சில நடைமுறைகளையும் எதிர்த்தவரேயன்றி (ஆறுமுநாவலர் பிரபந்தத்திரட்டு, நல்லூர்க் கந்தசாமி கோயில்) நல்லூர்க் கந்தசுவாமியரை எதிர்த்தவரல்லர். கோயிலாரை வேண்டுமென்றே எதிர்த்தவருமல்லர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் சிலை உருவில், மணி மண்டபத்தில் வீற்றிருந்த நாவலர் பெருமான் நல்லூர் பற்றித் தாம் முன்னர் கூறிய திருத்தங்களை மீண்டும் மீண்டும் அதேயிடத்திலிருந்து சொல்லிக் கொண்டு இருப்பாரேயானால் நாவலர் பெருமான் கூறிய திருத்தங்கள் காலகதியிலேனும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படலாம் என்பதே எனது கருத்தாகும்.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

1985 திசம்பர் 4 நாவலர் குரல்


0 comments: