July 23, 2026

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் - சு. நடேச பிள்ளை

 யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள்

- சு. நடேச பிள்ளை (1895-1965) -

இக்கட்டுரை 1959 கல்கி தீபாவளி மலரில்  இருந்து எடுப்பட்டது.

யாழ்ப்பாணம் இலங்கையைச் சேர்ந்ததாயினும், அதன் வரலாறு தமிழ் மக்கள் வரலாற்றில் ஒரு பகுதியாக இடம்பெறத் தக்கது. யாழ்ப்பாணத்தில் 12-ம் நூற்றண்டு முதல் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளாக ஓர் அரச பரம்பரை நிலைபெற்றிருந்தது. இந்தப் பரம்பரை அரசர்கள் 14-ம் நூற்றாண்டில் இலங்கை முழுவதிலேயும் ஏகாதிபத்தியம் பெற்றிருந்தார்கள். இவர்கள் தங்களை ஆரியச் சக்கரவர்த்திகள் என்று கூறிக் கொண்டபோதிலும் தமிழ் மன்னர்களாகவே விளங்கினார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழைப் பெரிதும் வளர்த்தார்கள். இவர்களில் சிலர் தமிழில் சிறந்த புலமையுடையவர்களாக இருந்தார்கள்.

இவ்வரசர்களுடைய பூர்வீக வரலாறு இராமேசுவரத்தோடு தொடர்புடையதாகும். இவர்கள் சேதுகாவலர் என்ற பட்டம் தரித்திருந்தார்கள். சேதுநாடு இவர்கள் ஆதிக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இவர்களுடைய நாணயங்களில் சேது என்ற சொல் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயங்களில் சில யாழ்ப்பாணத்துப் பொருட்காட்சிச் சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இராமேசுவர ஆலயத்தைப் பழைய காலத்தில் பரிபாலித்து வந்த பிராம்மண வம்சத்தோடும், கலிங்க நாட்டு அரச வம்சத்தோடும் ஆரியச் சக்கரவர்த்திகள் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதவேண்டியிருக்கிறது. 12-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் குலோத்துங்கச் சோழன் நடத்திய கலிங்கப் போர்களில் சிதறுண்ட கலிங்க அரச வம்சத்தைச் சேர்த்த சிலர் இராமேசுவரத்துக்கு வந்து, அங்குள்ள ஆலயத்தைப் பரிபாலித்த பிராம்மணக் குடும்பங்களோடு கலப்புற்றனர் என்று ஊகிக்கப்படுகிறது. கலிங்க நாட்டு அரசர்கள் கங்கை வம்சத்தைச் சேர்ந்தவர்கள். ''ஆரியச் சக்கரவர்த்திகள் இராமேசுவரத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த பிராம்மணர்களின் வழித்தோன்றல்கள்” என்றும். "கங்கை வம்ச அரசர்கள்” என்றும் இவர்கள் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்த பாண்டிமழவன் என்ற ஒரு வேளாளத்தலைவன் மதுரைக்குச் சென்று, அங்கு பாண்டிய மன்னனிடத்தில் அரசகாரியம் பயின்று கொண்டிருந்த ஓர் அரசகுமாரனைப் பாண்டிய மன்னன் ஆதரவுடன் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்து அவனை அரசன் ஆக்கினான் என்று யாழ்ப்பாணச் சரித்திர நூல்கள் வாயிலாக அறிகிறோம். இந்த அரசகுமாரனே யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி ஆவான்.

இவனை அனுப்பிய பாண்டிய மன்னன் காலத்தில் புகழேந்திப் புலவர் அவனுடைய அவைப்புலவராக இருந்தார் என்று தெரிகிறது. இப்புலவர் பின் இலங்கைக்குச் சென்று, கதிர்காமத் தலத்தைத் தரிசித்து, யாழ்ப்பாணத்துக்கு வத்து இவ்வாரிய மன்னனால் சன்மானிக்கப் பெற்றார் என்று அவருடைய செய்யுள்கள் சிலவற்றால் அறியக் கிடக்கிறது. இச் செய்யுள்கள் தமிழ் நாவலர் சரிதை என்ற நூலில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்த ஆரிய அரசன் இவரைப் பாண்டியன் அவையில் முன்னரே அறிந்திருந்தவன் என்று கொள்ளத்தகும். இவ்வாரிய அரசன் இவருக்குச் சில யானைகளைப் பரிசாகக் கொடுத்தான் என்றும், இந்த யானைகளை வாங்குவதற்குத் தமிழ் நாட்டரசர்கள் இவருடைய வாயிலில் காத்திருந்தார்கள் என்றும் இவர் பாடிய செய்யுள் ஒன்று கூறுகின்றது.

   பாவலன் வாசலில் வந்தீபம் வாங்கப் படிபுரக்கும்

  காவலர் நிற்கும் படிவைத்த வாகண்டி ஒன்பதினும்

  மேவலர் மார்பினும் திண்தோளினும் செம்பொன் மேருவிலும்

  சேவெழுதும் பெருமாள் சிங்கை ஆரிய சேகரனே."

 இச்செய்யுளில் "சே" என்பது ஆரியச் சக்கரவர்த்தியின் நந்திக் கொடியையும் “சிங்கை” என்பது அவனது தலைநகரத்தையும் குறிக்கின்றன.

இவ்வாரியச் சக்கரவர்த்தி இறந்ததைக் கேட்டு ஆற்றாது புகழேத்திப் புலவர் பின்வரும் உணர்ச்சி மிக்க செய்யுளைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது.

    ஆசு விதியோ அடலா ரியர்கோமான்

  ஏ எவலரால் இழிந்தநாள்-ஓ.

  தருக்கண் ணிலும் குளிர்ந்த தண்ணவிதத் தாண்ட

  திருக்கண் ணிலும் கடுமோ தீ

 புகழேந்திப் புலவர் ஓட்டக்கூத்தர் காலத்தவர் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு உண்டு. ஒட்டக்கூத்தரிடம் தமிழ் பயின்ற குமாரகுலோத்துங்கச் சோழன் பாண்டியன் மகளை மணம் செய்தபோது, அவளுடன் புகழேத்திப் புலவரையும் அப்பாண்டியன் சோழ அரண்மனைக்கு அனுப்பி வைத்தான் என்று இந்தக் கர்ணபரம்பரை வரலாறு கூறும். இவ்வரலாறு ஓரளவு உண்மையானதென்றே தோன்றுகிறது. இப்பாண்டியன், குமார குலோத்துங்கனுடைய தந்தையாகிய விக்ரம சோழனுக்குக் கலிங்கப் போரில் உதவி செய்த பராந்தக பாண்டியனாக இருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு, இவர்களுடைய காலம் 12-ஆம் நூற்றண்டின் முற்பகுதியாகும். புகழேந்திப் புலவர் யாழ்ப்பாணம் சென்று ஆரியச் சக்கரவர்த்தியிடம் சன்மானம் பெற்ற காலமும் இதுவே என்று சொல்லலாம்.

ஆரியச் சக்கரவர்த்திகள் செகராச சேகரன் என்றும் பரராச சேகரன் என்றும் ஒருவர்பின் ஒருவராகப் பட்டம் வகித்து வந்தார்கள். இவர்களுள் பரராச சேகரன் என்ற பட்டம் தாங்கிய ஒரு மன்னன் காலத்தில் கொடிய பஞ்சம் உண்டானபோது, புதுவையிலிருந்த சடையப்ப வள்ளல் நூற்றுக்கணக்கான படகுகளில் நெல் அனுப்பியதைப் பெற்றுக் கொண்டு அவன் தனது நன்றியை ஓர் அருமையான செய்யுள் வாயிலாக அறிவித்தான்.

இரவுநண்பகல் ‘ஆகிலென்பகல் இருளறாஇர வாகிலென்

இரவியெண்திசை மாறிலென்கடல் ஏழுமேறிலென் வற்றிலென்

மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர் போகிலெநாகிலென்

வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கை காரணமாகவே

கருது செம்பொனின் அம்பலத்திலோர் கடவுள்நின்று நடிக்குமே

காவிரித்திரு நதியிலேஒரு கருணைமாமுகில் துயிலுமே

தருஉயர்த்திடு புதுவையம்பதி தங்குமன்னிய சேகரன்

சங்கரன்தரு சடையன்என்றொரு தருமதேவதை வாழவே.

சடையப்ப வள்ளலுக்குக் கம்பர்கூட இவ்வளவு பெருமை கொடுத்துப் பாடவில்லை. தில்லைநாதனோடும் அரங்க நாதனோடும் சடையப்ப வள்ளல் இந்தக்கவியில் சம இடம் பெறுவதைக் காண்கின்றேம்.

ஆரியச் சக்கரவர்த்திகள் முடிமன்னராக யாழ்ப்பாணத்தை ஆண்டபோதிலும், சேது நாட்டதிபதிகள் என்ற முறையில் பாண்டியருக்கு உட்பட்டு நட்புரிமை பூண்டவர்களாக இருந்தார்கள். பாண்டியர்கள் 13-ஆம் நூற்றண்டில் மைசூர் நாட்டு ஹொய்சளர் என்ற போசலருடன் நடத்திய போர்களில் ஆரியச் சக்கரவர்த்திகள் உதவி புரித்தார்கள். ஓர் ஆரியச் சக்கரவர்த்தி போசலரை வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாண்டியர்களும் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் துனை செய்தார்கள் என்று தெரிகிறது.

13-ஆம் தூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் சிங்களநாடு அவன் ஆட்சிக்குள் வத்தது. பாண்டியநாட்டு மந்திரியாகிய ஆரியச் சக்கரவர்த்தி என்பவன் ஈட்டிய வெற்றி இதற்குக் காரணம் என்று இலங்கைச் சரித்திர நூலாகிய மஹாவம்சம் கூறுகின்றது.

இவ்வாரியச் சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்து அரசர்களில் ஒருவன் என்று திடமாகச் சொல்வதற்கில்லை; அவர்களோடு சுற்றத் தொடர்பு உடையவனாக இருந்தவன் என்று மாத்திரம் நிச்சயமாய்ச் சொல்லலாம். இவனது வெற்றி யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் தென்னிலங்கையில் பின்னர் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணமாய் இருந்தது.

14-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வரோதய ஆரியச் சக்கரவர்த்தி என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவன் காலத்திலே தான் யாழ்ப்பாணம் உச்ச நிலையை அடைந்தது. இலங்கை முழுவதையும் இவன் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டான். இவன் காலத்தில் இயற்றப்பட்ட செகராச சேகரமாலை என்ற சோதிட நூல் இதைத் தெளிவாகக் கூறுகிறது. இந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் வரும் ஒரு செய்யுளினின்று, இவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மூத்த மகனாகிய சுந்தர பாண்டியன் மதுரையினின்று துரத்தப்பட்டபோது அவனுக்கு உதவியளித்தான் என்று அறியக் கூடியதாக இருக்கிறது. இது நிகழ்ந்த காலம் கி.பி.1310-ம் ஆண்டு என்று நிச்சயிக்கலாம்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் இவ்வரோதயனே எல்லா வகையிலும் சிறப்புற்றவன். இவன் பெரிய கொடை வள்ளலாகத் திகழ்ந்தான். இவன் முத்தமிழிலும், வேதாகம புராணங்களிலும் பாண்டித்தியம் பெற்றவன். தக்கண கைலாச புராணத்தை இவன் தமிழ்ச் செய்யுட் காப்பியமாக, அந்தாதித் தொடையில் இயற்றியுள்ளான். இப்புராணம் அறுநூறுக்கு மேற்கொண்ட இனிய செய்யுள்களை உடையது. அவற்றுள் உதாரணமாக இரண்டு செய்யுள்கள் இங்கே காட்டத்தகுவன.

  காப்பீட் டலர்வாய் அலியினங்கள்

    கனிகொண் டசோகின் மலர்பாய

  மீப்பட் டன்னம் மேற்பாய்ந்து

    வெடிக்கும் பலவின் சுளைத்தேனும்

  பூப்பிட் டொழுகும் பசுந்தேனும்

    பொழிந்து பதைக்கும் வானரங்கள்

  கூப்பிட் டயலார்க் குரைப்பவைபோல்

    குயிலும் மயிலும் குரல்காட்டும்

 

  காட்டும் கதலிக் கொழுங்கநியும்

    கமுகின் கனியும் மாங்கநியும்

  கோட்டின் பலவின் சுளைக்கனியும்

    கூட்டிக் கறியின் கொடிவீழ்ந்து

  நாட்டின் கரும்பின் பிணையொடித்து

    நறுநீர் வாவிதோறும் சிதறித்

  தோட்டின் கமலமலர்ப் பொருட்டுத்

    துயில்வண் டெழுப்பும் திருநாடு.

 இவ்வரசன் காலத்தில் செகராச சேகர வைத்தியம் என்ற ஒரு நூலும் இயற்றப்பட்டது.

ஆனால் 14-ம் நூற்றாண்டின் இறுதியில், ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆதிக்கம் தளர்வுற்றது. அக்காலத்தில் இருந்த சிங்கள மன்னனின் மந்திரியாகிய அளகேசுவரன் என்பவன் ஆரியச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து, அவன் அனுப்பிய படைகளோடு போரிட்டு வென்றன். இதற்குப் பிறகு கி. பி. 1450-ம் ஆண்டில் ஆறாம் பராக்கிரமபாகு என்ற சிங்கள அரசன் செண்பகப் பெருமாள் என்ற படைத்தலைவனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினான். அப்பொழுது அங்கு அரசனாயிருந்த கனகசூரிய ஆரியச் சக்கரவர்த்தி போரில் தோற்று தன் நாட்டை இழந்து தென்னிந்தியாவுக்கு வந்தான். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இவன் ஒரு படையைத் தென்னிந்தியாவினின்று திரட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்குச் சென்று போரிட்டுத் தான் இழந்த உரிமையை மீண்டும் பெற்றான்.

கனகசூரிய ஆரியச் சக்கரவர்த்திக்குப் பின் பரராச சேகரன் என்ற அரசன் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கல்வி மறுபடியும் தழைக்க ஆரம்பித்தது. தென்னிந்தியாவிலிருந்து அரிய தமிழ்ச் சுவடிகள் கொண்டுவரப்பட்டன. யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. மிகவும் விரிவான முறையில், பரராச சேகரம் என்ற ஒரு சிறந்த வைத்திய நூல் இயற்றப்பட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசகேசரி என்ற ஒரு புலவர் இக்காலத்தில்தான் இரகுவமிசம் என்ற தமிழ்க் காவியத்தை இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. இது காளிதாசரது வடமொழிக் காவியத்தைத் தழுவியதாகும். இதன் நடை கடினமாக இருந்தாலும் இது பல கற்பனை நயங்களை உடைய ஒரு சிறந்த இலக்கியம் என்று மதிக்கப்படுகிறது. இதிலுள்ள நாட்டுப் படலத்தினின்று இரண்டு செய்யுள்களை இதன் சொல்நயத்துக்கும் பொருள் நயத்துக்கும் உதாரணமாகக் காட்டலாம்.

யல்பி றங்கின பிறங்கிந கண்கள்செங் கமலம்

அயல்பி றங்கின பிறங்கின முகங்களா ரத்தீன்

இயல்பி றங்கின பிறங்கிந வெண்ணகை எண்ணில

வயல்பி ங்கின பிறங்கின மாதரார் வயிறும்

வயல்களில் நாற்று நடுகின்ற பெண்களின் கண்களுக்கு மீன்களையும், முகத்துக்குத் தாமரைகளையும், வெண்பற்களுக்கு முத்துக்களையும் உவமானங்களாக இங்கு பொருத்திக் கூறப்படுகின்றன.

அம்பொன் நூபுரம் அரற்றின அரற்றின அன்னம்

கம்பு கையத் தொலித்தன ஒலித்தன கம்பு

தும்பி கோதையில் தொனித்தன் தொனித்தன கரும்பு

பைம்பொ னார்வயின் கலித்தன கலித்தன பழனம்

அப்பெண்களின் சிலம்புகளும், வளையல்களும் ஒலிப்பதை வயல்களில் அன்னங்களும் சங்குகளும் ஒலிப்பதோடு பொருத்தியும், அவர்கள் கூந்தல்மீது வண்டுகள் ஒலிப்பதை, வயல்களின் பக்கத்தில் வண்டுகள் ஒலிப்பதோடு பொருத்தியும் செய்யுள் வர்ணிக்கின்றது.

பரராச சேகரன் காலத்துக்குப் பின் வந்த அரசர்கள் போர்த்துக்கேயரோடு போராட வேண்டியதாயிற்று, பரராச சேகரன் மகன் கொடுங்கோல் ஆட்சி புரிந்தவனாயினும், போர்த்துக்கேயரை வீரத்துடன் எதிர்த்துத் தன் நாட்டைக் காப்பாற்ற முயன்றான். இவன் காலத்திலிருந்து போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைக் கவர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்து மன்னர்களுக்குத் தஞ்சை நாயக்க அரசர்களுடைய உதவி சில சமயங்களில் கிடைத்த போதிலும், கடைசியில் 1621-ம் ஆண்டில் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் ஆட்சிக்குட்பட்டது.

ஆரியச் சக்கரவர்த்திகள் பரம்பரையில் கடைசி அரசனாக இருந்த எதிர்மன்ன பரராச சிங்கம் என்பவன் தமிழ்ப் புலமை படைத்தவனாயிருந்தான். இவன் காலத்தில் தென்னிந்தியாவிநின்று அந்தகக் கவி அதிவீர ராகவ முதலியார் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் இவ்வரசன்மீது வண்ணக் கவி ஒன்று இயற்றினார். இவருடைய கவித்துவத்தைப் பாராட்டி இவன் அவருக்குப் பல சன்மானங்கள் செய்தான். இவன் அவருக்குப் பொற்கிழி கொடுத்தபோது, தனது வறுமை அகன்றதோடு தனது புகழ் வெற்றி விளக்காக எங்கும் பரந்தது என்று பொருள்பட ஒரு செய்யுளை அவர் கூறினார்.

பொங்குபிடி யின்பந்தம் போயதே என்கவிக்

கெங்கும் விருதுபந்தம் ஏற்றதே - குங்குமம் தோய்

வெற்பந்தம் ஆளபுய வீரபர ராசசிங்கம்

பொற்பந்தம் இன்றளித்த போது

 அரசனும் புலமை உடையவனாக இருந்தபடியால், அவரைப் பாராட்டி இரண்டு கவிகள் கூறிப் புகழ்ந்தான் என்று சொல்லப்படுகிறது.

வீரகன் முத்தமிழ் வீர ராகவன்

வரகவி மாலையை மதிக்கும் போதேலாம்

உரகனும் வாணனும் ஒப்பத் தோன்றினால்

சிரகர கம்பிதம் செய்ய லாகுமே

வீரராகவர் பாட்டைக்கேட்டுத் தலை அசைப்பதற்கு ஆயிரம் தலையுடைய ஆதிசேடனும். கை கொட்டுவதற்கு ஆயிரம் கைகளைப் பெற்ற பரணாசுரனும் வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

இன்னம் கலைமகள் கைம்மீதில் புத்தகம் ஏத்தியந்தப்

பொன்னம் புயப்பள்ளி புக்கிருப்பானென்ன புண்ணியமே

கன்னன் களந்தைக் கவிவீர ராகவன் கச்சியிலே

தன்னெஞ்சம் ஏடெனக் கற்றான் ஒருமுத் தமிழையுமே

வீரராகவ முதலியார் வாய்ப்பாடமாக இராமாவணக் கவிகள் சொல்லிப் பிரசங்கம் செய்தபோது, அரசன் அவர் பிறவிக் குருடராயிருந்தும் தமிழ் கற்றதை வியந்து, கலைமகளையும் அவர் விஞ்சி விட்டார் என்று இந்தச் செய்யுளால் அவரைப் பாராட்டினான்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஆரியச் சக்கரவர்த்திகள் செய்த தொண்டுக்காக அவர்களை மறவாது தமிழுலகம் போற்றுவது கடனாகும்.

இக்கட்டுரை 1959 கல்கி தீபாவளி மலரில்  இருந்து எடுப்பட்டது.


கட்டுரையாளர்: சு. நடேச பிள்ளை (S. Nadesan, 21 மே 1985 - 15 சனவரி 1965) , இலங்கை அரசியல்வாதியும், இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம், மேலவை ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு, நாகப்பட்டணத்தைச் சேர்ந்தவர், சட்டம் பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் சமயம் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்.

சேர் பொன். இராமநாதனும், சேர் பொன். அருணாசலமும் தமிழ்நாடு சென்றிருந்த வேளை அருள்பரானந்த சுவாமிகள் மூலம் இலக்கணம் இராமசாமிப்பிள்ளை குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டு நடேசனைப் பற்றி அறிந்தனர். இராமநாதனுடன் 1923 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார் நடேசன். 1924 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். 1926 ஆம் ஆண்டில் இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார்.

0 comments: