November 23, 2005

சற்புத்திரர்


நாளை (24/11/2005) ஆறுமுக நாவலர் (1822 - 1879) அவர்களின் குருபூசை தினமாகும். அதனை ஒட்டி இந்த பதிவு. நாவலர் அவர்களின் பால பாடத்திலிருந்து ஒரு சிறு கட்டுரை:
சிசிலி என்னும் தீவிலே எட்னா என்கின்ற பெயருள்ள ஓர் எரிமலை இருக்கின்றது. சிலகாலங்களில் அதன் சிகரங்களிலிருந்து அக்கினி பொங்கி அதன் சாரலிலே பல திசைகளிலுஞ் சிந்துவது வழக்கம். ஒரு காலத்திலே, அந்த மலை மிகவும் அதிகமாக அக்கினியைக் கக்கிற்று. அப்போது, அம்மலையின் பக்கங்களிலுள்ள ஊர்களிலிருந்த சனங்கள் தங்கள் வீடுகளில் அந்த நெருப்புப் பற்றினபடியால், தங்கள் பொருள்களில் விலையேறப்பெற்ற சிற்சில பொருள்களை மாத்திரம் தங்களால் ஆனவரையில் எடுத்துக்கொண்டு, உயிர் தப்பி ஓடினார்கள். அவர்களுள், செல்வர்களாகிய இரண்டு பிள்ளைகள், தங்கள் திரவியங்களிற் சிலவற்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அவர்களுடைய மாதாவும் பிதாவும் முதிர்ந்த வயதினர் ஆதலால், தங்கள் பிள்ளைகளோடு ஓடித் தப்ப முடியாதவர்களாய், அவர்களுக்குப் பின்னே மெல்ல மெல்ல நடந்து போனார்கள். அதுகண்ட பிள்ளைகள் இருவரும், 'நம்மைப் பெற்று வளர்த்த மாதா பிதாக்களைக் காட்டிலும் இந்தத் திரவியங்கள் நமக்குப் பெரியனவா! நம்முடைய ஆஸ்திகளெல்லாம் போனாலும் போகட்டு; மாதா பிதாக்களை இரக்ஷிப்பதே நமக்குக் கடமை' என்று தங்களுக்குள்ளே ஆலோசனை செய்துகொண்டு, கையிலெடுத்த பொருள்களை எறிந்து விட்டு, தனித்தனி தாயையும் தகப்பனையும், தூக்கிக் கொண்டு, அந்த நெருப்புக்கு ஒருவாறு தப்பி ஓடிச் சென்று, ஒரு சௌக்கியமான இடத்தைச் சேர்ந்தார்கள்.

'தந்தை தாய் பேண்' என்னும் நீதிமொழியை அநுசரித்து, இந்தப் பிள்ளைகள் மாதா பிதாக்களைச் சுமந்துகொண்டு போன வழியானது 'சற்புத்திர மார்க்கம்' என்று சொல்லப்பட்டுப் பிள்ளைகளுடைய நீதியாகிய அறிவொழுக்கங்களை இன்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

Technorati Tags:

1 comments:

said...

சரவணன் என்பவன் கண்கள் இல்லாத தன் தாய், தந்தை இருவரையும் இரு தட்டுகளிவைத்து தராசு போல தூக்கிபோனான் அவ்வாறு போகும போது ஆற்றின் ஓரம் வைத்துவிட்டு சுறை குடுக்கையில் தண்ணீர் எடுக்கும் போதுதான் தயரதமன்னன் யாணை என நினைத்து அம்பெய்து கொண்று விடுகிறான்