November 02, 2005

விஞ்ஞான மருத்துவத் தமிழ் முன்னோடி

"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.." - பாரதி.

அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்து முடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக் கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம் புதிய கலைகள், குறிப்பாக, மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவ மத ஊழியருமாவார். யாழ்ப்பாணத் தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவ மத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்றத்தைப் பற்றி அறியவில்லை.

அமெரிக்க மிஷன் ஊழியராக யாழ்ப்பாணம் வந்து ஊழியஞ் செய்த அப்பெருமான், மேனாட்டு மருத்துவக் கலையை நம்மக்களிடையே படிப்படியாக அறிமுகப்படுத்தினார். மானிப்பாயிலே மருத்துவமனை நிறுவி, மருத்துவம் செய்ததுடன் அன்னார் நின்று விடவில்லை. தொடர்ந்து, சுதேசிகளுக்கு மேனாட்டு மருத்துவப் பயிற்சி அளித்தார்.
காலப்போக்கில், தமிழிலே மருத்துவக் கல்வியை ஆரம்பித்தார். ஆங்கில மொழி மூலம் 29 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ்மொழி மூலம் 33 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.


தமிழ் மக்களிடையே பணியாற்றச் செல்கிறேன் என அறிந்தபடியால், வருமுன்பே சிலரிடம் ஓரளவு தமிழ் பயின்றார், வந்தபின், கிரமமாகத் தமிழ் பயின்று, மேனாட்டு மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டார். அதனால், தமிழருக்குக் கிடைத்த மருத்துவ நூல்கள் எத்தனை?
கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் (1857)
மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் (1857)
துருவிதரின் இரணவைத்தியம் (1867)
கிறேயின் அங்காதிபாரதம் (1872)
மனுஷ சுகரணம் (1883)
வைத்தியாகரம் (1872)
கெமிஸ்தம் (1875)
வைத்தியம் (1875)
கலைச் சொற்கள்

இவைதவிர, பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நூல்களும் பதார்த்த சாரம், சிகிச்சம், மருத்துவம் முதலிய வேறுபல சிறு கைநூல்களும் அவரால் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்திலே தமது மிஷ்னரிச் சேவையை ஸ்திரப்படித்திய அமெரிக்க மிஷன் மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819ஆம் ஆண்டிலே தீர்மானித்தது. அதன்படி 1820ஆம் ஆண்டிலே பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் நிறுவப்பட்டது. சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ மத போதனைக்குமென வந்த மிஷனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்ததை இது உணர்த்துகிறது. இறைவனை 'மக்களிலே காணவேண்டும்' என்ற லட்சியத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.

மருத்துவச் சேவையை 1820-களிலே துவக்கி வைத்தவர் டாக்டர் ஸ்டேர். அவரைத் தொடர்ந்து பணியாற்ற வந்தவர் டாக்டர் நேதன் உவாட். அவர் தம் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். இவர் அமெரிக்க நாட்டிலே, மசச் சூசஸ்ட் மாநிலத்திலே "வூஸ்டர்" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியை ஆரம்பித்து பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். அங்குதான் கிறீனின் சாதனை யாவும் இடம்பெற்றன. மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் - இவ்வண்ணம் பல்வேறு முயற்சிகள்.1855ஆம் ஆண்டிலே 'கொலரா' நோயால் பலர் பீடிக்கப்பட்டனர். அவர்களுடன் டாக்டர் கிறீனும் ஒருவர். கிறீனின் சகோதரி, அவரை அமெரிக்கா திரும்புமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் அவரோ, மனவுதியுடன், "தாம் தொடங்கிய தமிழில் மருத்துவம் தரும் பணியை" இடையிலே நிறுத்திவிட்டுத் திரும்புவதற்கு மறுத்துவிட்டார். "எனது 10 ஆண்டுகளையும் இங்கு நிறைவு செய்யவே நான் விரும்புகிறேன்" என்று முடிவாகக் கூறினார்.

தமது பத்தாண்டுச் சேவை முடிந்தபின் அமெரிக்கா திரும்பி ஓய்வுபெற்ற கிறீன், திருமணஞ் செய்துகொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவங் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.

கல்வி வசதி பெற்ற யாழ்ப்பாணத்தவரின் வாழ்க்கை முறை பற்றி கிறீன் என்ன கருதினார்? 1864ஆம் ஆண்டிலே, அவரே கூறுகின்றார்:
"வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனம் ஆகவும், குடிசை வீடாகவும் மாறுகின்றன. எனவே, நான் எண்ணுகிறேன்... ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களை விடக் கிறிஸ்தவ இந்துக்களையே காண ஆசைப்படுகிறேன்." கிறிஸ்தவராதல் என்றால் தேசியத்தை இழப்பதல்ல என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.
"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்." இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 மேனாட்டு வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார். அன்னார் மருத்துவத் தமிழ் எனவும் அறிவியல் தமிழ் முன்னோடி என்றும் தமிழரால் கௌரவிக்கப்படல் தவறில்லையே?

தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamils)" என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.

மூலம்: Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green written by Ambi (R Ambihaipahar)

1st Edition:Colombo November 1998

Technorati Tags:

7 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

நல்ல பதிவு நன்றி. தமிழர்களிடம் இன்றிருக்கிற அதே மனநிலை (தமது மொழியைத் துறக்கவும் அதில் பயில்வதை இழிவாகவும் கருதுதல், தமது தேசிய அடையாளங்களை வெறும் நாகரீகம் கருதி மாற்றிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மை, மக்களிடம் சென்று பணியாற்ற மறுக்கும் மனம்) அன்றும் காணப்பட்டதையும், ஒரு அயல்நாட்டவர் இவற்றை குறிப்பிடுவதும் வியப்புக்குரிய ஒன்று.

said...

அருமையான பதிவு.

தெரியாத விசயங்களை தெரிந்துக் கொண்டேன், நன்றி.

அன்புடன்
பரஞ்சோதி

said...

சேமித்து வைக்க வேண்டிய பதிவு,

சத்தமில்லாது புரட்சி செய்த
அமெரிக்க தழிழனுக்கு....
ஈழத்தில் ஏதாவது நினைவு கல் அல்லது நினைவுச்சின்னம் இருக்கிறதா?..
அறிய தந்தால் மகிழ்ச்சி.

பிகு:(அப்படியே இருந்திருந்தாலும்)படு பாவிகள்!(இலங்கை ராணுவம்) எங்கே விட்டு வைத்திருக்க போகிறார்கள், குண்டு போட்டு தகர்த்திரப்பார்கள். தமிழருக்கு இப்படியும் ஒரு பொற்காலம் இருந்ததை மறைப்பதற்கு.

said...

யாழில் 70 களில் யாழ் இலக்கியவட்ட வெளியீடாக "கிறீனின் அடிச்சுவட்டில்" என்ற ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது.அதில் அவரது ஆரம்பகால மாணவா;களின் புகைப்படம் கூட இருந்ததாக ஞாபகம்.

Anonymous said...

Nalla pathivu...Vaztthukkal!

said...

பின்னூட்டலிட்ட அனைவருக்கும் நன்றி.
கிறீன் அவர்கள் ஸ்தாபித்த மானிப்பாய் மருத்துவ நிலையத்தின் 150ஆவது ஆண்டில் கிறீன் நினைவு முத்திரை ஒன்று 1998 நவம்பர் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா அரசு வெளியிட்டுள்ளது என்று திரு அம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுரதா, தங்கள் தகவலுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்தப் படம் என்னிடம் உள்ளது. முடியுமானால் 'ஸ்கான்' பண்ணி என்னுடைய வலையில் விraiவில் ஏற்றிவிடுகிறேன்.