December 18, 2005

மகாகவியின் மறக்க முடியாத குறும்பாக்கள்

ஈழத்து மகாகவி அமரர் உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்கள் நான்கினை ஈழநாதன் தனது வலைப்பதிவில் இட்டிருந்தார். மகாகவியின் மறக்கமுடியாத மேலும் நான்கு குறும்பாக்களை இங்கு பதிவிலிடுகின்றேன்:

செல்லம்மா சேலை

நல்லையர் நெக்குருகி நைந்தார்
நம் பெருமான் "வா" என்று வந்தார்
நேரே போய்த் தம் மனைவி
செல்லம்மா சேலையுள் மறைந்தார்.
(பின்னூட்டல் பார்க்க)

சித்தன்

தென்னை மரம் ஏறுகிறான் சித்தன்
என்ன கண்டான் அவ்வழகுப் பித்தன்
தன்னுடையை மாற்றுகிறாள்
கிணற்றடியில் தங்கம்மாள்!
இன்னுமிறங்கானாம் அவ்வெத்தன்.

அத்தி

அத்திக்குத் தூது சென்றாள் உத்தி
முத்து இவளைக் கைப்பற்றி
முத்தி முத்தி மகிழ்ந்தான்!
மெத்தத் தித்தித்த துத்திக்கு அவ்
அத்தி செத்தாள் கத்திக் கத்தி.

வடைக்குள் வண்டு

வண்டு வடைக்குள் இருந்து மேலே
வந்தது. நான் பிய்த்தபடியாலே!
கண்டொரு சொல் பேசாமல்
காற்றில் அது போயினது
நன்றி சொல்லா தெம்மவரைப் போல.

Technorati Tags:

November 23, 2005

சற்புத்திரர்


நாளை (24/11/2005) ஆறுமுக நாவலர் (1822 - 1879) அவர்களின் குருபூசை தினமாகும். அதனை ஒட்டி இந்த பதிவு. நாவலர் அவர்களின் பால பாடத்திலிருந்து ஒரு சிறு கட்டுரை:
சிசிலி என்னும் தீவிலே எட்னா என்கின்ற பெயருள்ள ஓர் எரிமலை இருக்கின்றது. சிலகாலங்களில் அதன் சிகரங்களிலிருந்து அக்கினி பொங்கி அதன் சாரலிலே பல திசைகளிலுஞ் சிந்துவது வழக்கம். ஒரு காலத்திலே, அந்த மலை மிகவும் அதிகமாக அக்கினியைக் கக்கிற்று. அப்போது, அம்மலையின் பக்கங்களிலுள்ள ஊர்களிலிருந்த சனங்கள் தங்கள் வீடுகளில் அந்த நெருப்புப் பற்றினபடியால், தங்கள் பொருள்களில் விலையேறப்பெற்ற சிற்சில பொருள்களை மாத்திரம் தங்களால் ஆனவரையில் எடுத்துக்கொண்டு, உயிர் தப்பி ஓடினார்கள். அவர்களுள், செல்வர்களாகிய இரண்டு பிள்ளைகள், தங்கள் திரவியங்களிற் சிலவற்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அவர்களுடைய மாதாவும் பிதாவும் முதிர்ந்த வயதினர் ஆதலால், தங்கள் பிள்ளைகளோடு ஓடித் தப்ப முடியாதவர்களாய், அவர்களுக்குப் பின்னே மெல்ல மெல்ல நடந்து போனார்கள். அதுகண்ட பிள்ளைகள் இருவரும், 'நம்மைப் பெற்று வளர்த்த மாதா பிதாக்களைக் காட்டிலும் இந்தத் திரவியங்கள் நமக்குப் பெரியனவா! நம்முடைய ஆஸ்திகளெல்லாம் போனாலும் போகட்டு; மாதா பிதாக்களை இரக்ஷிப்பதே நமக்குக் கடமை' என்று தங்களுக்குள்ளே ஆலோசனை செய்துகொண்டு, கையிலெடுத்த பொருள்களை எறிந்து விட்டு, தனித்தனி தாயையும் தகப்பனையும், தூக்கிக் கொண்டு, அந்த நெருப்புக்கு ஒருவாறு தப்பி ஓடிச் சென்று, ஒரு சௌக்கியமான இடத்தைச் சேர்ந்தார்கள்.

'தந்தை தாய் பேண்' என்னும் நீதிமொழியை அநுசரித்து, இந்தப் பிள்ளைகள் மாதா பிதாக்களைச் சுமந்துகொண்டு போன வழியானது 'சற்புத்திர மார்க்கம்' என்று சொல்லப்பட்டுப் பிள்ளைகளுடைய நீதியாகிய அறிவொழுக்கங்களை இன்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

Technorati Tags:

November 20, 2005

மனிதாபிமானமே இவர் மதம்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் 80வது பிறந்த தினம் நாளை (23-11-2005). அதனையொட்டி இந்தப் பதிவு. 24-11-1985 'கல்கி' இதழில் அதன் ஆசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகளை மட்டும் இங்கு தருகின்றேன். சத்ய சாயி பாபா எத்தனையோ அற்புதங்களை சாதிக்கிறார் பார்க்கிறோம், கதை கதையாகக் கூறக் கேட்கிறோம். அவற்றிலெல்லாம் மிகப் பெரிய ஓர் அற்புதம், அவரது தரிசனத்துக்காகக் காத்திருக்கும் மக்களிடையே காணப்படுகிற கட்டுப்பாடுதான். கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யப்போகும் மக்கள் எப்படியெல்லாம் வள வளவென்று பேசி அரட்டை அடிக்கிறார்கள். பகவானைக் கும்பிடும் போது கூட எப்படி 'முருகா' என்றோ 'கோவிந்தா' என்றோ கூவி அழைக்கிறார்கள்! அதே மக்கள் பிரசாந்தி நிலைய வாசலில் எவ்வாறு மணற்பரப்பில் ஊசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவுக்கு அமைதி காக்கிறார்கள்! இந்தக் கட்டுப்பாடு அதிகாரத்தினால் உருவானதல்ல, அன்பினால் தன்னியல்பாக ஏற்பட்டிருப்பது என்பது அற்புதத்திலும் அற்புதம்! எளிய உதாரணங்களால் பெரிய உண்மைகளைக் கூறுகிறார் பாபா என்றால் காரணம், தத்துவார்த்தமாகத் தடபுடல் ஆங்கிலத்தில் அவருக்குப் பேசத்தெரியாது என்பதல்ல. அப்படி பேச எழுத வேண்டிய இடத்தில் செய்வார். ஒரு சமயம் சொன்னார்: 'Duty without love is deplorable; Duty with love is desirable; Love without duty is Divine.' முதல் இரண்டு அம்சங்களை எளிதிலேயே புரிந்து கொள்ள முடிந்தாலும் மூன்றாவது தெய்வீக விஷயத்தை எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதென்ன கடமையில்லாத அன்பு? கடமையச் செய்யாமல் அன்பு மட்டுமே காட்டினால் போதுமா? இது பற்றி பாபாவிடமே கேட்டேன். கருணையோடு விளக்கினார்: "கடமை என்ற உண்ர்வேயின்றி அதையே அன்பு மயமாகிச் செய்துவிடுவதைத்தான் அப்படி குறிப்பிடுகிறேன். உதாரணமாகத் தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமைதான். ஆனால் கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு மயமாகிப் பாலூட்டுகிறாள். தெய்வ நிலைக்கு உயர்கிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்பு மயமாகிச் செய்யக்கூடுமானால் கடமை சுமையாகத் தெரியாது. அந்தப் படி பக்குவத்தை எய்துப் போது நாம் கடவுள் தன்மையை எய்தியவர்களாவோம். புரிகிறதா? கடமை உணர்வு வெளியே இருந்து உள்ளுக்குப் பாய்வது, அன்புணர்வு உள்ளேயிருந்து பிரவகிப்பது!" இன்னொரு பொன்மொழியை உதிர்க்கிறார் பாபா: "நேற்று என்பது நடந்து முடிந்து போன கதை. அதை எண்ணி ஏங்குவதாலோ திருப்தி அடைந்து விடுவதாலோ ஒரு பிரயோசனமும் இல்லை. நாளை என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாது. எனவே, அதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை. ஆனால் நல்ல விளைவுகளை எதிர்நோக்கி இன்று நீ செயல்படுகிறாய் அல்லவா? இந்த நிகழ்காலம்தான் முக்கியம். எனவே இப்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதனை முழுக் கவனத்துடன் அன்பு மயமாகிச் செய்!" "நான் நிகழ்த்தும் அற்புதங்கள் எதுவும் முக்கியமில்லை" என்கிறார் பாபா. "என் அன்பை நீ உணர்கிறாயா? அந்த அன்புதான் இந்த சாதனைகளையெல்லாம் நிறைவேற்றியது. அந்த அன்புதான் நிலையானது." இந்தக் கணத்தில் பாபா எனக்கும் பகவான் ஆனார். மாந்தருக்குள் ஒரு தெய்வம்" என்று தாம் எழுதிய காந்திஜீயின் வாழ்க்கை வரலாற்றுக்குத் தலைப்புத் தந்தார் கல்கி. "காந்தியைத் தெய்வமாக்க வேண்டுமா? என்று சிலர் கேட்கவும், "காந்தியை மனிதர் என்போமானால், நம்மையெல்லாம் என்னவென்று கூறிக்கொள்வது?" என்று திருப்பிக் கேட்டார் கல்கி. அந்த அர்த்தம் பொதிந்த மெலிதான நகைச்சுவை இப்போது எனக்கு நினைவு வந்தது. - கி.ரா. மேலும் வாசிக்க: ஓரே மதம், அது அன்பு மதம்-பாபா Technorati Tags:

November 07, 2005

கந்தபுராணக் கலாச்சாரம்

அந்தக்காலத்து யாழ்ப்பாண கலாச்சாரம் குறித்து நியூசீலாந்து சி. குமாரபாரதி அவர்கள் முன்னை நாள் தமிழ்.நெட் மடலாடும் குழுமத்திற்கு அனுப்பிய கட்டுரையின் ஒரு பகுதி இது. குறிப்பாக யாழ்ப்பாணத்துக் கந்தபுராணக் கலாச்சாரம் குறித்து இலேசான நகைச்சுவையுடன் குமாரபாரதி அவர்கள் கூறியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

-----Original Message-----
From: C.Kumarabharathy
Date: Wednesday, 26 January 2000 15:33
Subject: [tamil] Sources of culture

ஈழத்து வாழ்க்கை முறைகள் எனக்கு ஏன் தெரிய வேண்டும் என்ற ஒருவர் கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்க என்னால் முடியாது. எனது சில நிலைப் பாடுகளை("பெரிய நிலைப்பாடு") சொல்வதற்கு தேவையானதை கையாளுவதுதான் என் இயல்பு. எனது மடல்கள் 21ம் நூற்றாண்டில் வசிக்கும் சாதாரண தமிழன் முகம் கொடுக்கும் அறைகூவல்களை எடுத்தியம்பும் முயற்சி எனபதாக ஒரு நினைப்பு. பல முறை இந்த இலக்குத் தவறியிருக்கிறது. எனது அவதானிப்புகளின் எல்லையுடன் கட்டுரை நிற்க வேண்டும் என்று வரையறுக்கிறேன். ஆனால் வரையறையையும் மீறி எளிமைவாதமாக (oversimplification) சில சமயம் பொதுமைப் படுத்துகிறேன் (generalisation) என்பதும் தெரிகிறது.சமூகவியல் வரலாறு பொருளாதாரம் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பல துறைகளும் சேர்ந்துதான் இவ்வாறு சில பொது முடிவுகளைப் பெற முடியும். பார்த்தீர்களா?

மறைந்த நாவலர் போன்று கையையுயர்த்தி கங்கை கடாரம் கலிங்கம் ஈழம் என்று விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி எண்ணும் தோரணை வந்துவிட்டது.சில வேளைகளில் டி வியில் emotional pscychological and spiritual suffering எனச் சுலபமாகக் கூறிவிடுகிறார்கள். இதெல்லாம் இப்படி அளந்து பாகுபடுத்தி உணர முடிவதை பற்றி ஆச்சரியம்.

சென்ற நூற்றாண்டை இருகூறாக்கி முந்தைய பகுதியை கந்தபுராணக் கலாச்சாரம் என்றும் பிந்தைய பகுதியைக் கிளறிக்கல் கலாச்சாரம் என்றும் வசதிக்காக கூறலாம்.

எந்தவொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பான மனப்போக்குகள, எதிர்பார்ப்புக்கள், மதிப்பீடுகள் இருக்கும். இதைப் பொதுப்படையாக சமுதாய நீரோட்டம் என்று இக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன். இப்படியான பொதுவான மனப்பண்புகள் அக்கலாச்சாரத்தை எப்படியோ வேறுபடுத்தி அதை அடையாளம் காட்டிவிடுகின்றன. இந்தப் பண்புகளைப் பிரதிபலித்து, அவற்றிற்கு வெளி உருவம் கொடுத்துத்தான் கலை, பண்பாடுகள, ஆன்மீகம், அரசியல் என்று ஏற்பட்டுவிடுகின்றன.

பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை பல வகையில் பிரதிநிதிப்படுத்தியவர். யாழ்ப்பாணக் கல்விமுறை வாழ்க்கை முறைகளைப் பிரதிபலித்த ஒரு கடைசித் தனிமரம். சைவம், தமிழ் ஆகிய துறைகளில் பெரும் புலமையெய்தி திண்ணைப் பாடசாலை முறை முலமாக கைமாறு கருதாமல் தனது அறிவாற்றலைப் பலருக்கும் வழங்கியிருக்கிறார். இவரைப் போன்று வேறு பலரும் வாழ்ந்திருக்கிர்கள்.
நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர், மட்டுவில் மகாலிங்கசிவம், மாவை நவநீதகிருஷணபாரதியார் (no relation of mine) ஆகியோர் சிலரின் பெயர்கள் இதை எழுதும் பொழுது ஞாபகம் வருகிறது. ஒரு கட்டுக்கோப்பான கல்வி முறைக்கு வித்திட்டவை இந்தத் திண்ணைப் பாடசாலைக் கல்விமுறைதான். இப்படியான ஒரு அடி அத்திவாரம் இன்றேல் விரைவாக ஆங்கிலக் கல்வி விரிவடைந்திருக்க முடியாது.

இந்தப் பாரம்பரியக் கல்வி முறைதான் அந்நியர் ஆட்சிக் காலங்களிலும் தமிழ் ஒழுக்கம் ஆகியவற்றை ஓரளவுக்கேனும் கட்டிக் காத்தது எனலாம். 300 வருடங்களாக முடிவில்லாது நீண்டு விரிந்து கொண்டு எறித்த கலாச்சாரக் கோடையிலும் யாழ்ப்பாணம் ஒரு பாலைவனமாகாமல் காப்பாற்றியது இக் கல்வி முறைதான்.

இந்திய மரபில் நாங்கள் கேள்விப் படுவது போன்ற குருபக்தி என்ற அளவுக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. யதாரத்தமாகவே மாணவர்கள் ஆசிரியர்கள் மேல் மரியாதை வைத்திருந்தார்கள். ஆசிரியர்களும் குருதட்சணையாகக் மாணவர்களிடம் கட்டைவிரலைக் கேட்கும் அதீத வழக்கமும் இருக்கவில்லை. மாணவர்களைக் கட்டிமேய்த்து சோறு போடும் நிலையில் நமது புலவர்கள் இருந்ததில்லை. மாணாக்கர்களும் முழுக்கவனத்தையும் படிப்பில் செலுத்தும் அளவு வசதி பெற்றிருக்க வில்லை. நடுகை, கதிரடிப்பு, உழவு என்று பல மாதங்களாக தலை மறைவாவதும், பாலபண்டித பரீட்சைச் சமயம் அறிஞர்கள் வீட்டில் முகாமடித்து படிப்பதும் உண்டு.

கல்விக்கு பணப் பரிமாற்றம் கிடையாது. அவரவர்கள் ஊரிலுள்ள பிரசித்தமான பொருட்களை கையுறையாக வழங்குவார்கள்.
ஆறுமுகநாவலர் திணணைப் பாடசாலையாக நல்லூரில் ஆரம்பித்த பொழுது மாணவரும் நாவலரும் வீடுவீடாகச் சென்று அரிசி தண்டிக் கொண்டு வந்து பாடசாலை நடாத்தினார்கள். பிற்பாடு இந்த இயக்கம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாகவும் வேறுபல இந்துக் கல்லூரிகளாகவும் பரிணமித்தது. நாவலர் என்று சொல்லும் பொழுது ஒழுக்கம், கண்டிப்பு, விபூதிப்பட்டை என்பன ஞாபகத்திற்கு வரும். இவரது சைவவினாவிடையில் என்ன என்ன சொல்லிக் கொண்டு எந்தப்பக்கம் பார்த்துக்கொண்டு வளவுக்கிருக்க வேண்டும் என்ற சுகாதார நடவடிக்கைகளுக்குக்கூட விதி செய்திருந்தார் என்றால் எதையும் உறுதியாகச் சொல்லக் கூடியவர் செய்யக்கூடியவர் என்று தெரிகிறதல்லவா?

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலக் கல்வி பரவலாக்கப் படும் சமயம் யாழ்ப்பாணக் கல்வி வளர்ச்சியில் ஒரு திடீர்ப்பாய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு தாவுபலகையாக அமைந்தது திண்ணைப் பாடசாலை என்ற கல்வி முறை.

பண்டிதமணி அக் கால யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை கந்தபுராணக் கலாச்சாரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மாதம் காப்புக் கட்டி விரதமிருந்து ஏதாவது கோவிலுக்குச் சென்று புராணப் படிபபுக் கேட்கும் வழக்கத்தை யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய குறியீடாக அவர் கருதியிருக்கிறார்.

பல தலை முறைகளாக யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஊற்றுக்களாக ஒரு ஞான பரம்பரை இருந்திருக்கிறது.
யோகசுவாமி ஒரு தற்செயல் தனி நிகழ்வன்று. இவர்களை கைலாச குரு பரம்மரை என்பார்கள். இப் பரம்பரையின் ஆதி குரு நந்தி நாதர். திருமுலர் சிவவாக்கியர் ஆகிய சித்தர்கள் இந்த ஆன்மீக மரபில் வந்தவர்கள்தான். வேலையை விட்டுவிட்டு குழப்பத்தில் வந்த யோகரை "தேரடா", என்று கூறி இருத்திவிட்டு ஊர் சுற்றச் சென்றுவிட்டார் அவரது குரு செல்லப்பாசுவாமி. தேரடா என்பதற்கு "இதுதான் தேர்" எனவும் "தேர்ந்து தெரிந்து கொள்" என்றும் பொருள் கொள்ளலாம். செல்லப்பா சுவாமியின் குரு கடையிற் சுவாமி. கடையிற் சுவாமியின் குரு சித்தானைக்குட்டிச்சாமி. இவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளை நம்புவதா? விடுவதா? என்ற ஆச்சரியத்தன்மை இருக்கும். இவ் விஷயத்தை நான் இங்கு வலியுறுத்தப் போவதில்லை. They can look after themselves.

இந்த இடத்தில் பாரதியாரின் குருவரிசையில் வரும் பாடல் ஒன்றைக் குறிப்பிடலாம். அவர் யாழ்ப்பாணச்சாமியைப் பற்றி இப்படிக் கூறுகிறார். பொதுவாகவே சிதம்பரம் பக்கம் யாழ்ப்பாணத் தொடர்பு இருந்தது. கோவில்.

கோவிந்த சாமி புகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்.

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை பற்றி அக நோக்கில் குறிப்பிட்டேன். இக் கலாச்சாரத்தின் புறத்தோற்றமாக அமைந்து அடையாளம் காட்டக்கூடியவை யாவை? அங்கு எழுப்பப் பட்ட கோவில்கள், பாடசாலைகள், மடங்கள், விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் என்ற சமுதாய கூட்டு முயற்ச்சிகளின் விளைவுகளைக் இதன் அடையாளமாகக் குறிப்பிடலாம்.

பழைய யாழ்ப்பாண வாழ்க்கையை இலட்சியப்படுத்தி சொல்வது எனது நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் கட்டுரையின் தோரணை அப்படி அமைந்து விடுகிறது. அதே போன்று சம கால வாழ்க்கை முறையை குறைத்துச் சொல்வதும் நோக்கமல்லவாயினும் இந்த இடத்தில் நின்று பார்க்கும் பொழுது அதுவும் இதே ரீதியில் தான் செல்லும் போல் தெரிகிறது. இது ஒரு பழமை வாதமா? அல்லது உண்மை நிலையா? பழையன எல்லாம் உயர்ந்தது என்றொரு உணர்வு - சென்டிமண்ட் சுலபமாக நாணயமாகக் கூடிய கருத்து என்னிலும் இருக்கிறது போலும்.

அன்புடன்
சிகுமாரபாரதி

Technorati Tags:

November 02, 2005

விஞ்ஞான மருத்துவத் தமிழ் முன்னோடி

"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.." - பாரதி.

அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்து முடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக் கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம் புதிய கலைகள், குறிப்பாக, மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவ மத ஊழியருமாவார். யாழ்ப்பாணத் தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவ மத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்றத்தைப் பற்றி அறியவில்லை.

அமெரிக்க மிஷன் ஊழியராக யாழ்ப்பாணம் வந்து ஊழியஞ் செய்த அப்பெருமான், மேனாட்டு மருத்துவக் கலையை நம்மக்களிடையே படிப்படியாக அறிமுகப்படுத்தினார். மானிப்பாயிலே மருத்துவமனை நிறுவி, மருத்துவம் செய்ததுடன் அன்னார் நின்று விடவில்லை. தொடர்ந்து, சுதேசிகளுக்கு மேனாட்டு மருத்துவப் பயிற்சி அளித்தார்.
காலப்போக்கில், தமிழிலே மருத்துவக் கல்வியை ஆரம்பித்தார். ஆங்கில மொழி மூலம் 29 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ்மொழி மூலம் 33 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.


தமிழ் மக்களிடையே பணியாற்றச் செல்கிறேன் என அறிந்தபடியால், வருமுன்பே சிலரிடம் ஓரளவு தமிழ் பயின்றார், வந்தபின், கிரமமாகத் தமிழ் பயின்று, மேனாட்டு மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டார். அதனால், தமிழருக்குக் கிடைத்த மருத்துவ நூல்கள் எத்தனை?
கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் (1857)
மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் (1857)
துருவிதரின் இரணவைத்தியம் (1867)
கிறேயின் அங்காதிபாரதம் (1872)
மனுஷ சுகரணம் (1883)
வைத்தியாகரம் (1872)
கெமிஸ்தம் (1875)
வைத்தியம் (1875)
கலைச் சொற்கள்

இவைதவிர, பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நூல்களும் பதார்த்த சாரம், சிகிச்சம், மருத்துவம் முதலிய வேறுபல சிறு கைநூல்களும் அவரால் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்திலே தமது மிஷ்னரிச் சேவையை ஸ்திரப்படித்திய அமெரிக்க மிஷன் மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819ஆம் ஆண்டிலே தீர்மானித்தது. அதன்படி 1820ஆம் ஆண்டிலே பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் நிறுவப்பட்டது. சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ மத போதனைக்குமென வந்த மிஷனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்ததை இது உணர்த்துகிறது. இறைவனை 'மக்களிலே காணவேண்டும்' என்ற லட்சியத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.

மருத்துவச் சேவையை 1820-களிலே துவக்கி வைத்தவர் டாக்டர் ஸ்டேர். அவரைத் தொடர்ந்து பணியாற்ற வந்தவர் டாக்டர் நேதன் உவாட். அவர் தம் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். இவர் அமெரிக்க நாட்டிலே, மசச் சூசஸ்ட் மாநிலத்திலே "வூஸ்டர்" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியை ஆரம்பித்து பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். அங்குதான் கிறீனின் சாதனை யாவும் இடம்பெற்றன. மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் - இவ்வண்ணம் பல்வேறு முயற்சிகள்.



1855ஆம் ஆண்டிலே 'கொலரா' நோயால் பலர் பீடிக்கப்பட்டனர். அவர்களுடன் டாக்டர் கிறீனும் ஒருவர். கிறீனின் சகோதரி, அவரை அமெரிக்கா திரும்புமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் அவரோ, மனவுதியுடன், "தாம் தொடங்கிய தமிழில் மருத்துவம் தரும் பணியை" இடையிலே நிறுத்திவிட்டுத் திரும்புவதற்கு மறுத்துவிட்டார். "எனது 10 ஆண்டுகளையும் இங்கு நிறைவு செய்யவே நான் விரும்புகிறேன்" என்று முடிவாகக் கூறினார்.

தமது பத்தாண்டுச் சேவை முடிந்தபின் அமெரிக்கா திரும்பி ஓய்வுபெற்ற கிறீன், திருமணஞ் செய்துகொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவங் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.

கல்வி வசதி பெற்ற யாழ்ப்பாணத்தவரின் வாழ்க்கை முறை பற்றி கிறீன் என்ன கருதினார்? 1864ஆம் ஆண்டிலே, அவரே கூறுகின்றார்:
"வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனம் ஆகவும், குடிசை வீடாகவும் மாறுகின்றன. எனவே, நான் எண்ணுகிறேன்... ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களை விடக் கிறிஸ்தவ இந்துக்களையே காண ஆசைப்படுகிறேன்." கிறிஸ்தவராதல் என்றால் தேசியத்தை இழப்பதல்ல என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.
"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்." இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 மேனாட்டு வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார். அன்னார் மருத்துவத் தமிழ் எனவும் அறிவியல் தமிழ் முன்னோடி என்றும் தமிழரால் கௌரவிக்கப்படல் தவறில்லையே?

தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamils)" என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.

மூலம்: Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green written by Ambi (R Ambihaipahar)

1st Edition:Colombo November 1998

Technorati Tags:

October 24, 2005

'மோகனாங்கி' முதல் தமிழ் வரலாற்று நாவல்

"ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு சுமார் ஒரு நூற்றாண்டு கால வரலாறுண்டு. சித்திலெப்பையினால் எழுதப்பட்டு 1885ம் ஆண்டு வெளியிடப்பட்ட அஸன்பேயுடைய கதையே ஈழத்தின் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. இந்நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. அஸன்பேயுடைய கதை வெளிவந்து பத்து ஆண்டுகளின் பின்னர் 1895இல் திருகோணமலையைச் சேர்ந்த த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய 'மோகனாங்கி' என்ற நூல் வெளியாயிற்று. இந்நூல் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும் ஒரு சிறு சம்பவத்தைக் கருவாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டதாகும்." ("சி.மௌனகுரு, எம்.ஏ.நுஃமான்").

இந்த 'மோகனாங்கி' நூலைப்பற்றி 'முல்லைமணி' அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் வீரகேசரி வாரஇதழில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளைக் கீழே தருகின்றேன்:

"இந்நாவலில் வரலாற்றுச் சூழல் ஓரளவு இடம்பெற்ற போதும் சொக்கநாதன், மோகனாங்கி ஆகியோருக்கிடையிலான காதல் நிகழ்ச்சிகளும் அது சம்பந்தமான சூழ்ச்சிகளும் சீர்திருத்தக் கருத்துக்களும் மேலோங்கி நிற்கின்றன. நாவல் என்ற பெயருடன் வெளிவந்த போதும் நாவலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டு விளங்கவில்லை. ஆசிரியரால் கையாளப்பட்ட நடை சிற்சில இடங்களில் எளிமையும் பேச்சுவழக்குச் சொற்களும் காணப்பட்டாலும் நாவலிற் பெரும்பகுதி வாசகர் எளிதிற் புரிந்து கொள்ள முடியாத கடின சந்தி விகாரங்களுடன் கூடிய சிக்கல் நிறைந்த நீண்ட வசனங்களையும் கடினமான சொல்லாட்சிகளையும் கொண்டு விளங்குகிறது" (கலாநிதி க.அருணாசலம்). புதியதொரு துறையில் முதன் முதலாக ஈடுபடுபவர்களின் ஆக்கங்களில் சிற்சில குறைபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாததே. பிரதாப முதலியார் சரித்திரமே (1879) தமிழில் முதலில் தோன்றிய சமூக நாவலாகும். சரித்திரம் என்று குறிப்பிடுவதே தற்காலத்தில் உள்ள நாவலுக்குரிய பண்புகளில் உணராத நிலையில் தோன்றிய முதல் நாவல் என்பதை மறுக்க எவரும் துணிய மாட்டார்கள். ஓர் இலக்கிய ஆக்கத்தை விமர்சிப்பவர்கள் அது தோன்றிய காலப்பின்னணியையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஆரம்பகால நாவலாசிரியர்களின் நாவல்களில் காப்பியங்களின் செல்வாக்குப் படிந்திருப்பதைக் கைலாசபதி அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார். மோகனாங்கியிலும் தோன்றிய காலச் சூழ்நிலைக்கேற்ப குறைபாடுகள் இருக்கலாம். செந்தமிழ் வழக்கு மேலோங்கியிருந்த காலத்தில் அவர் அதனைப் பயன்படுத்தினார். 1895இலேயே நாவலின் இடையிடையே எளிமையான பேச்சுவழக்குச் சொற்களை அவர் பயன்படுத்தியுள்ளதை அருணாசலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். வரலாற்றுச் சூழல் நாவலில் இடம்பெறுகின்றது. காதல் நிகழ்ச்சிகளும், சூழ்ச்சிகளும் நாவலில் இடப்பெறத்தகாதவை அல்ல. கல்கியின் நாவல்களிலும் இவை இடம்பெறத்தான் செய்கின்றன.

தமிழ் நாட்டு அறிஞர்களான இரா. தண்டாயுதம், கி.வா.ஜெகநாதன், கோ.வி.மணிசேகரன் முதலானோர் கல்கியே முதலில் சரித்திர நாவலை எழுதினார். அவரே தமிழில் வரலாற்று நாவலின் தந்தை என்க் கூறுகின்றனர். இவர்கள் மோகனாங்கி பற்றி அறியாதிருக்கலாம். அல்லது புதிய இலக்கியவகையொன்றுக்கு ஈழத்தவர் முன்னோடியாகத் திகழ்வதை ஏற்க விரும்பாமல் இருக்கலாம். தமிழ் நாட்டு அறிஞர்களைப் பொறுத்த அளவில் இது ஒன்றும் புதிய விடயம் அன்று. ஆறுமுக நாவலரையும், சி.வை.தாமோதரம்பிள்ளையையும் புறந்தள்ளிவிட்டு உ.வே.சாமிநாதையர் அவர்களே பதிப்புத்துறையின் முன்னோடி என உரத்துக் கூறும் அவர்கள் சரவணமுத்துப்பிள்ளைக்கு கிடைக்கவேண்டிய நியாயமான புகழை இருட்டடிப்புச் செய்ததில் வியப்பில்லை.

மோகனாங்கி நாவலை எழுதிய தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழின் வரலாற்று நாவல்துறைக்கு முன்னோடியாக விளங்கினார் எனச் சோ.சிவபாதசுந்தரம் அழுத்திக் கூறுவது பொருத்தமற்ற தெனக்கூறலாம்' என அருணாசலம் அவர்கள் சொல்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

'கல்கியின் வரலாற்று நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை மோகனாங்கி ஏற்படுத்தவில்லை என்கிறார் அருணாசலம்'. இது அகிலனின் பாவை விளக்கு ஏற்படுத்திய தாக்கத்தை பிரதாப முதலியார் சரித்திரம் ஏற்படுத்தவில்லையென்றோ இன்றைய திரையிசைப் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை திருக்குறள் ஏற்படுத்தவில்லை என்றோ கூறுவதை ஒத்தது. எது தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தியது என்பதல்ல பிரச்சினை, எது முன்னோடி என்பது கேள்வி.

மோகனாங்கி குறிப்பிட்டுக் கூறக்கூடிய வரலாற்று நாவல் என ஒப்புக் கொள்ளும் அருணாசலம் அவர்கள் அதனை முன்னோடி நாவல் எனவும் சரவணமுத்துப்பிள்ளையை வரலாற்று நாவலின் தந்தை எனவும் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.

யார் எப்படிக் கூறினாலும் மோகனாங்கியே தமிழில் முதல் வரலாற்று நாவல் என்பது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மை". இவ்வாறு கூறுகிறார் 'முல்லைமணி' அவர்கள் தமது கட்டுரையில்.

October 08, 2005

சிரித்து + இரன் = சிரித்திரன்




சிரித்திரன் சுந்தரின் மறக்க முடியாத சில நகைச்சுவைகளைப் படிக்க இந்த சுட்டியைத் தட்டுங்கள்.

October 05, 2005

சி. வை. தாமோதரம் பிள்ளையும் உ. வே. சாமிநாதையரும்

டி. ஏ. ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 'தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும். இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்."

சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. அவர்கள் 1887-இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார். ஒரு சமயம் சிந்தாமணியை அச்சிடக் காகிதம் வாங்கக் காசில்லாமல் உ.வே.சா கஷ்டப்படும் போது, சி.வை.தா. தனக்குத் தெரிந்த ஒரு காகித வியாபாரி மூலம் கடனில் காகிதம் ஏற்பாடு செய்து தருகிறார். இருவருக்கும் இடையில் நல்லுறவும் நட்பும் நிலவின என்பதும் சமயம் நேரும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதும் இக்குறிப்புகளிலிருந்து நன்கு விளங்குகின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, சாமிநாதையர் முதுமைப் பருவம் அடைந்தபோது வெளிவந்த அவருடைய 'என் சரித்திரம்' எனும் நூலில், தாமோதரம் பிள்ளையை இழிவு படுத்தும் வகையில் சில செய்திகள் தரப்பட்டுள்ளன என்பது சிலர் கருத்து. 1930ஆம் ஆண்டுக்குப் பின் வெளிவந்த சாமிநாதையர் பதிப்புக்களில் அவருடைய திறமை மங்கிக் காணப்படுவதாகவும், அக்கால அளவில் சாமிநாதையருக்கு முதுமைப் பருவத்தால் அசதியும் மறதியும் தோன்றிவிட்டன என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, 'தமிழ்ச்சுடர் மணிகள்' (சென்னை, 1968) என்னும் நூலில் தெரிவித்துள்ளார். சாமிநாதையர் 1930க்குப் பிறகே தம் சுயசரிதத்தை எழுதத் தொடங்கினார். தம் முதுமை காரணமாகப் பிறர் உதவியுடன் அவர் எழுதி வந்த அக்காலத்தில், அவ்வாறு உதவியவர்களின் மனப்போக்கால் இத்தகைய தவறுகள் அந்நூலில் இடம் மெற்றுவிட்டன' என்பதாக பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் 'தற்காலத் தமிழ் முன்னோடிகள்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: தமிழ் வளர்த்த சான்றோர்கள், சென்னை 1997

October 02, 2005

மதமாற்றம்

'மதமாற்றம்' என்னும் தலைப்பில் எனது சிறிய தந்தையார் அமரர் (அராலியூர்) வெ. சு. நடராசா அவர்கள் 1965-இல் எழுச்சி இதழுக்கு எழுதிய கட்டுரை இது:

1544ம் வருடம் தான் கீழைத்தேசங்களில் மதமாற்றம் உச்சநிலை அடைந்திருந்ததாம். இலங்கையில் குறிப்பாக மன்னார் பகுதி முதலில் போர்த்துக்கேயரின் பாசாங்குக்கு இரையானது. விபரீத முறையில் பல கோணங்களில் இருந்து மொழியையும், மதத்தையும், நாட்டையும் சுரண்டுவதைக் கண்ட, கேட்ட சங்கிலி உள்ளம் குமுறினான். சுய உணர்ச்சி, தாய்மொழிப்பற்று, தேச நன்மை ஆகிய அனைத்தாலும் தூண்டப் பெற்ற சங்கிலி அன்னிய ஆதிக்கத்தை வேரறுக்க எண்ணம் கொண்டான். மதம் மாறிய சிலரை சிரச்சேதம் செய்வித்தான். நாடு பறிபோவதற்கு முதற்படி மதம் மாறிப் போவதே என்று கருதினான் போலும் சங்கிலி. 16ம் நூற்றாண்டில் மேல் நாட்டிலும் கூட தங்கள் மதக் கொள்கையுடன் மாறுபட்டவர்களையெல்லாம் மன்னர்கள் சிரச்சேதம் செய்வித்தனராம். எனவே நாட்டுப் பற்று ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இந்த அரசன் போர்த்துக்கேயரின் விரோதியானான். அவனது செயல் சிந்தனைக்குரியதே.

போர்த்துக்கேயர் பல முறை போர் தொடுத்துப் பணியவைக்க முயன்றனர். தன் சொந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரமன்னன் அடி பணியாததைக் கண்ட பகைவர் நட்புமுறையைக் கையாண்டும் பார்த்தனர். அதுவும் பலனளிக்கவில்லை. திரும்பவும் போர் தொடுத்தனர் போர்த்துக்கேயர். தன்மானத் தமிழ் மன்னனான சங்கிலி தன்னாலான மட்டும் எதிர்த்தான். நல்லூர், கோப்பாய் முதலியவிடங்களில் கடும் யுத்தம் நடந்தது. இரு கட்சியும் வெற்றி கண்டில. எனவே ஓர் உடன்படிக்கை உதயமாயிற்று. அதன் பிரகாரம் சங்கிலியன் மகன் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டான். மன்னாதி மன்னன் மாவீரன் சங்கிலி வேந்தனும் இறுதிச் சொட்டு இரத்தம் இருக்குமட்டும் போராடி மடிய வேண்டியதாயிற்று. இவனுடன் யாழ்ப்பாண அரசும் அஸ்தமனமாயிற்று. இடப அல்லது நந்திக்கொடி இறக்கப்பட்டு அன்னியக் கொடி ஆடத் தொடங்கியது. தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலை சிறந்த வீரன் என்று வர்ணிக்கப்படுகிறான் சங்கிலி. தன் மகனிலும் பார்க்கத் தாய் நாட்டின் விடுதலையே பெரிதென எண்ணிய வீரன் தான் சங்கிலி. யாழ்ப்பாண மக்களின் மனதினின்றும் என்றுமே மறையாத மன்னன் தான் சங்கிலி. மாபெரும் விரோதிகளையெல்லாம் முதிகிட்டோடச் செய்து தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக 44 வருடம் பாடுபட்டவன் தான் சங்கிலி. அவன் ஆண்ட நல்லூர் எங்கே? அவன் அடியடியாக வந்த வீரபரம்பரை எங்கே? சிந்தியுங்கள்.


(எழுதியவர்: அராலியூர் வெ. சு. நடராசா - எழுச்சி - 10.07.1965)

September 24, 2005

சுப்பிரமணியன் 'பாரதி'யானது எப்படி?

எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் புதல்வன் சுப்பிரமணியனுக்கும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரத்திற்கும் நெஞ்சார்ந்த தோழமை உருவாகியிருந்தது. ஒருவருக்கொருவர் 'சோமு' என்றும் 'சுப்பையா' என்றும் அழைத்துக் கொள்வர். அரண்மனைக்கு வருகை தருகின்ற தமிழ்ப் புலவர்களின் பாட்டுக்களையும், உரையாடல்களையும் கேட்பதில், பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இருவரும், தமிழ் மொழியின்பால் இளமையிலேயே தணியாத தாகம் கொண்டிருந்தனர். தனியாக அமர்ந்து, தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பேரார்வமும், பெரு விருப்பும் பெற்றிருந்தனர்.

நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக் கல்லூரி மாணவனாக இருந்தார். ஒரு சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் புலவர் ஒருவர் நெல்லைக்கு வருகை புரிந்திருந்தார். ஒரு கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்து, பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு யாழ்ப்பாணத்துப் புலவர் வேண்டினார். கூடியிருந்தோர் தாமியற்றிய பாடல்களிப் புலவரிடம் வழங்கினர். கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களைப் புலவரிடம் அளித்திருந்தனர். எல்லாப் பாடல்களிலும் இந்த இளைஞர் இருவரின் பாடல்களே மிகச் சிறப்புப் பெற்றவையாகக் கருதப் பெற்று, இருவருக்கும் 'பாரதி' என்று பட்டமளித்து மகிழ்ந்தார் யாழ்ப்பாணத்துப் புலவர். சுப்பிரமணியன் 'சுப்பிரமணிய பாரதி' என்றும், சோமசுந்தரம் 'சோமசுந்தர பாரதி' என்றும் அந்த நாள் முதல் அழைக்கப் பெற்றனர்.

ஆதாரம்: தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் - குன்றக்குடி பெரியபெருமாள்