இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞான அறிவுக் கொள்கையாளரான கால் பொப்பர் (1902 - 1994) தனது 92 வயதிற் காலமானார். இந்த நூற்றாண்டில் பொப்பரினது சிந்தனையின் ஆளுகைக்குட்படாத அறிவுத்துறையென எதுவுமே இல்லையெனலாம், கலை வரலாறு முதற்கொண்டு மருத்துவம் ஈறாகவுள்ள சமூக, இயற்கை விஞ்ஞானத் துறைகள் அனைத்திலும் பொப்பரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.
விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் தருக்கம் (
The Logic of Scientific Discovery), திறந்த சமூகமும் அதன் எதிரிகளும் - (2 பாகங்கள்) (
The Open Society and its Enemies), வரலாற்று நியதிவாதத்தின் வறுமை (
The Poverty of Historicism), ஊகங்களும் நிராகரித்தலும் (
Conjectures and Refutations), சார்பற்ற அறிவு (
Objective Knowledge) என்பன பொப்பரால் எழுதப்பட்ட பிரதான நூல்களாகும், பெருந்தொகையான கட்டுரைகளையும் பொப்பர் எழுதியுள்ளார், இவற்றில் சில இவரது மாணவர்களால் தொகுக்கப்பட்டு மூன்று நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன, இம் மூன்று நூல்களும் பொப்பரின் முதனூலான விஞ்ஞான கண்டுபிடிப்பின் தருக்கம் என்பதில் முன்மொழியப்பட்ட வாதங்களிற்கு அனுசரணையாகத் தொகுக்கப்பட்டனவையாகும். "முடிவிலாத் தேடல்" (
Unended Ouest) என்ற தலைப்பிலான சுயசரிதையொன்றும் பொப்பரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. இவை தவிர ஜே. சி. ஈசெல்ஸ் என்பாருடன் இணைந்து "உயிரும் அதன் மூளையும்" (
The Self and its Brain) என்றதொரு நூலையும் இவர் எழுதியுள்ளார்.
கால் மார்க்ஸ், சிக்மன்ட் ஃபிராய்ட், ஐயன்ஸ்ரைன் என்ற மூவரதும் கண்டுபிடிப்புகளும் இளமை காலத்தில் தன்னை மிகவும் ஆர்கக்ஷவித்தவையாக இருந்தனவென்று தனது சுயசரிதையில் கூறுகிற கால் பொப்பர், இவர்களில் முதலிருவர்களதும் கொள்கைகளைக் காலப்போக்கில் தான் நிராகரித்து விட்டதாகவும், ஐயன்ஸ்ரைன் மட்டுமே உண்மையான விஞ்ஞான மனப்பான்மையுடைய
சிந்தனையாளராகக் காணப்பட்டாரெனவும் குறிப்பிடுகிறார். சமூகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி சில விதிகளின்படி இயங்குகிறதெனக் கருதிய கால் மார்க்ஸ், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கொள்கையை முன்மொழிந்தார். அதே போல சிக்மன்ட் ஃபிராய்ட் என்ற மருத்துவரும் தன்னிடம் நோயாளராக வந்தோரில் கணிசமான தொகையினர் உளநோயுடையவர்களாகவே இருப்பதைக் கண்டு, அவர்களின் உளநோயைத் தீர்க்கும் வகையில் ‘உளப்பகுப்பாய்வு' என்ற செல்வாக்குப் பெற்ற உளவியற் கொள்கையொன்றை உருவாக்கினார். கால் மார்க்ஸும் , ஃபிராய்ட்டும் தமது கொள்கைகள் உண்மையான விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களே என்பதை நிறுவுவதற்கான தமது ஊகங்களிற்குச் சாதகமான தரவுகளைத் திரட்டுவதிலேயே பெரு முயற்சியுடன் ஈடுபட்டனர். தமது கொள்கைகள் பொய்யாகவிருக்கலாம் என்று அவர்கள் கிஞ்சித்தேனும் சிந்திக்கவில்லை. இதுவே கால் மார்க்ஸும், ஃபிராய்ட்டும் விடுத்த பெருந்தவறென பொப்பர் குற்றம் சாட்டுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி எந்தவொரு விஞ்ஞானக் கொள்கையையும் அறுதியாக நிறுவலாமென கருதுவது தவறானது. மேலும் அது விஞ்ஞான மனப்பான்மைக்கு முற்றிலும் எதிரானதென பொப்பர் குறிப்பிடுகிறார்.
தொலமியின் புவிமையக் கொள்கையை நிராகரித்ததாலேயே கொப்பநிக்கசின் சூரியமையக்கொள்கை சாத்தியமாயிற்று. காலம் வெளி பற்றிய நியூட்டனது கருத்தை நிராகரித்ததாலேயே சார்புக் கொள்கை கண்டு பிடிக்கப்படலாயிற்று. புவிமையக் கொள்கையையோ அல்லது நியூட்டனின் காலம், வெளி பற்றிய கொள்கையையோ அறுதியாக நிறுவப்பட்ட உண்மைகளென விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தால் விஞ்ஞானம் இன்றைய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாது. பழைய கொள்கைகள் நிராகரிக்கப்பட்டதாலேயே புதிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு அதனூடாக விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து வருகிறது.
ஐயன்ஸ்ரைன் தனது கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்படலாமென ஏற்றுக் கொண்டிருந்தார். வானத்தின் தொலைதூரத்திலிருந்து வருகிற ஒளியில் சிவப்பு வரி விலகல் காணப்படுவதேன் என்கிற பிரச்சனைக்கு பாரிய வானத்துப் பொருட்களைக் கடந்துவர நேரிடுவதாலேயே ஒளியானது ஈர்ப்பு விசைக்குட்பட்டு வளைந்து வருகிறது. இதுவே திரிசியக் கோட்டில் சிவப்பு வரி விலகலுக்கு காரணமாயிருக்கலாமென ஐயன்ஸ்ரைன் ஊகித்தார். நீண்ட காலம் வெறும் விஞ்ஞான ஊகமாக இருந்து வந்த இவ்விளக்கம் 1919ல் நிகழ்ந்த பூரண கிரகணத்தின் பொழுது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. திரிசியக்கோட்டில் சிவப்பு வரி விலகலிற்கு ஈர்ப்பு விதி காரணமாக இல்லாதுவிடின் சார்புக்கொள்கையின் பொதுத் தத்துவம் தவறானதாக இருக்குமென ஐயன்ஸ்ரைன் எழுதினார். அவதானிக்கப்பட்ட நேர்வினடிப்படையில் தன்னால் மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கையையே நிராகரிக்கத் தயாராக ஐயன்ஸ்ரைன் இருந்தமையே விஞ்ஞான மனப்பாங்கென்று கூறுகிற பொப்பர் பழைய விஞ்ஞானக் கொள்கைகள் பொய்ப்பிக்கப்படுவதன் மூலம் புதிய கொள்கைகளை நாடி விஞ்ஞான அறிவு வளர்ச்சியுறுகிறதென வாதிடுகிறார்.
விஞ்ஞான ஆராய்ச்சி எப்பொழுதும் பிரச்சனைகளிலிருந்தே ஆரம்பமாகிறது. பிரச்சனைகளிற்கான தீர்வைக் காண வேண்டுமெனின் முதலில் அதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். விளக்கம் தீர்விற்கான முன் நிபந்தனையாகுமென கூறுகிற பொப்பர், விஞ்ஞானத்தின் நோக்கம் திருப்திகரமான விளக்கத்தைப் பெறுதலேயென எடுத்துக்காட்டுகிறார். உண்மையான விளக்கம் என்பதற்குப் பதிலாக திருப்திகரமான விளக்கம் என்ற பதத்தை பொப்பர் பயன்படுத்துவதேன் என ஒருவர் கேட்கலாம். பொப்பருடைய அபிப்பிராயப்படி விஞ்ஞான விளக்கங்கள் கொள்கைகள் அனைத்தும் தற்காலிக ஊகங்களேயாகும். எனவே தற்காலிக ஊகங்களை உண்மையான விளக்கம் என்பதிலும் பார்க்க திருப்திகரமான விளக்கமென்பதே மிகவும் பொருத்தமானதென இவர் கருதுகிறார்.
ஒரு விஞ்ஞானப் பிரச்சனைக்குத் தரப்பட்ட விளக்கம் திருப்திகரமான விளக்கமென எவ்வாறு தீர்மானிக்கலாமென்பதற்கு 'நம்பகத்தன்மையுடையதாயிருக்கிற விளக்கமே’ திருப்திகரமான விளக்கமாகுமென பொப்பர் பதிலளிக்கிறார். இதன்படி இன்று நம்பகத் தன்மையுடையதாகயிருக்கிறதொரு விஞ்ஞான விளக்கம் நாளை தனது நம்பகத் தன்மையை இழந்து விடலாம். இதனிடத்தை புதியதொரு விஞ்ஞான விளக்கம் பெறலாம். இவ்வாறே விஞ்ஞானக் கொள்கைகளும் அவதானிக்கப்பட்ட புதிய நேர்வுகளால் (தகவல்களால்) தம் நம்பகத் தன்மையை இழப்பதுடன் புதிய விஞ்ஞானக் கொள்கைகளிற்கு வழிவிடுவதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. இதுவே 'தவறுகளைக் களைவதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகிறதென’ பொப்பர் குறிப்பிடுவதன் தாற்பரியமாகும்.
தவறுகளை களைவதன் மூலமே விஞ்ஞானம் முன்னேறுகிறதெனில், இவ் வளர்ச்சியில் விஞ்ஞானியின் பங்கென்ன வென்பதற்கு, விஞ்ஞானியானவன் எச்சந்தர்ப்பத்திலும் எவ்விஞ்ஞானக் கொள்கையையும் நிறுவ வேண்டுமென முயற்சித்தல் கூடாதெனவும் மாறாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பொய்ப்பிக்கவே முயலுதல் வேண்டுமெனவும் பொப்பர் வாதாடுகிறார். நிறுவ லிற்குப் பதிலாக நிராகரித்தலை வற்புறுத்துவதன் மூலம் பிரான்ஸிஸ் பேக்கன் என்பவரால் தொடக்கி வைக்கப்பட்டு பாரம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த விஞ்ஞான முறைக்குப் பதிலாக பொய்ப்பித்தற்கோட்பாடு என்ற முற்றிலும் புதியதொரு விஞ்ஞான முறையை பொப்பர் முன்மொழிகிறார்.
பாரம்பரியமாக விஞ்ஞான முறையானது ஒன்றையொன்று தொடரும் ஆறு படிமுறைகளைக் கொண்டதாக எடுத்துக் காட்டப்பட்டது. முதலாவது படி நிலையில் நோக்கலும் பரிசோதனையும், இரண்டாவது படிநிலையில் தொகுத்தறிப் பொதுமையாக்கமும், மூன்றாவது படிநிலையில் கருதுகோள் உருவாக்கமும், நான்காவது படிநிலையில் கருதுகோளை வாய்ப்புப் பார்த்தலும் நடைபெற்று அதனடியாக விஞ்ஞான அறிவு பெறப்படுமெனக் கூறப்பட்டது. பொப்பர் இதற்குப் பதிலாக விஞ்ஞான முறையானது முதலாவது படிநிலையில் எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பமாகிறதெனக் கூறி, அப்பிரச்சனை வழக்கமாக ஏலவேயுள்ளதொரு கொள்கையை அல்லது எதிர்பார்க்கையை மறுதலிப்பதாகவே இருக்க வேண்டுமென்கிறார். இண்டாவது படி நிலையில் மறுதலிக்கப்பட்ட பழைய கொள்கைக்குப் பதிலாகப் புதிதாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கை இடம்பெற வேண்டுமென்றும், மூன்றாவது படிநிலையில் புதிதாக முன் மொழியப்பட்ட கொள்கையிலிருந்து பரிசோதிக்கக் கூடிய தரவுகளை உய்த்தறிதல் இடம்பெறவேண்டுமென்றும், நான்காவது படிநிலையில் பரிசோதனை- அதாவது மறுதலிக்கப்படவேண்டிய கொள்கையை, பெறப்பட்ட புதிய தரவுகளினடிப்படையில் நிராகரிக்க முயற்சிப்பது இடம் பெறவேண்டுமென்றும், ஐந்தாவது படிநிலையில் பழைய விஞ்ஞானக் கொள்கையைா அல்லது போட்டியிடும் புதிய விஞ்ஞானக் கொள்கையா எது ஏற்புடையதெனத் தீர்மானிக்கும் தீர்ப்புச் சோதனை இடம்பெற வேண்டுமென்றும் தனது விஞ்ஞான முறை பற்றிப் பொப்பர் விளக்குகிறார்.
விஞ்ஞான முறை பற்றிய பொப்பருடைய விளக்கம் - அதாவது பொய்ப்பித்தற் கோட்பாடு, தொகுத்தறிதலை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான முறை எதிர்நோக்குகிற பிரச்சனைகளைத் தீர்ப்பதுடன், விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுமெனவும் வாதிடப்படுகிறது.
தொகுத்தறிவு முடிவுகள் நிச்சயமான முடிவுகள் அல்லவென்றும், அவை வெறும் எதிர்பார்ப்புக்களே என்றும் டேவிட் கியூம் என்ற நவீனகால மெய்யியலாளர் எடுத்துக்காட்டினார். இவரது அபிப்பிராயப்படி தருக்க நிச்சயம் தொகுத்தறி முடிவுகளிற்கில்லை. அவை உளவியல்சார் நம்பிக்கையால் விளைந்த எதிர்பார்க்கையே. இவ்வாறு கியூமினால் எடுத்துக்காட்டப்பட்ட விமரிசனத்தை கருத்திற்கொண்ட தற்கால விஞ்ஞான முறையியலாளர்கள் நிகழ்தகவுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொகுத்தறி முடிவுகளின் நிகழ்திறத்தை அதிகரிக்க முயன்றனரெனினும், இம் முயற்சியினால் தொகுத்தறிதலிற்கெதிராக கியூமினால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அகற்ற முடியவில்லை. சான்றுகளின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க நிகழ்திறம் அதிகரித்துச் செல்லுமேயொழிய நிச்சயத்தன்மையை அது ஒரு பொழுதும் எய்துவதில்லை. ஒரு விஞ்ஞானக் கொள்கையை அது உண்மையேயெனக் காட்ட ஆயிரக்கணக்கான சான்றுகளைச் சேகரித்தாலும் அதனை ஒருபொழுதும் அறுதியாக நிறுவமுடியாதென்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொப்பர் இப்பிரச்சனை யிலிருந்து விடுபடுவதற்கு பொய்யாக்கற் தத்துவம் பயனுடையதென எடுத்துக்காட்டினார்.
ஒரு விஞ்ஞானக் கொள்கை ஏற்புடையதேயென நிறுவுதற்கு எத்தனை சான்றுகள் தேவைப்படுமென எவராலும் தீர்மானிக்க முடியாதென்பது உண்மையே. ஆனால் அக்கொள்கை பொய்யானதென நிராகரிப்பதற்கு அக்கொள்கையை மறுதலிக்கும் ஒரு சான்று உளதென்று எடுத்துக்காட்டுவதே போதுமானதென்பதால், விஞ்ஞானக் கொள்கையை நிறுவுதற்குப் பதிலாக நிராகரிக்க முயல வேண்டுமென்று கூறுவதன் மூலம் தொகுத்தறிதலிற் கெதிராக கியூமினால் எடுத்துக் காட்டப்பட்ட பிரச்சனையை பொப்பர் தீர்க்கிறார்.
பொப்பரின் அபிப்பிராயப்படி: விஞ்ஞான அறிவின் முன்னேற்றம் ஏலவேயுள்ள விஞ்ஞானக் கொள்கைகளை மறுதலிப்பதன மூலம் புதிய கொள்கைகள் உருவாதற்கு வழியமைத்துக் கொடுப்பதாலேயே சாத்தியமாகும். பழைய கொள்கைகள் நிராகரிக்கப்படாதவரை புதிய கொள்கைகளிற்கு இடமில்லையென்பதால் விஞ்ஞானிகள் தமது ஆய்வை பொய்யாக்கற் தத்துவத்தினடிப்படையிலேயே செய்ய வேண்டியதாகிறதெனக் கூறியதன் பின்னர், பொய்ப்பிக்கப்படுதலே விஞ்ஞானக்கொள்கைகளின் இலட்சணம் என்ற முடிவிற்கு வருகிறார். பொய்ப்பிக்க முடியாதிருக்கும் விஞ்ஞானக்கொள்கையென இதுவரை காலமும் எந்தவொரு கொள்கையும் இருக்கவில்லை. எனவே பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தலே விஞ்ஞானக் கொள்கைகளின் இயல்பெனறும், எந்தவொரு அறிவுத் துறையிலும் பொய்ப்பிக்க முடியாக் கொள்கைகள் உளதென ஒருவர் வாதிடுவராயின் அவ்வறிவுத்துறை விஞ்ஞானமேயல்ல எனறும் பொப்பர் வாதிடுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி மார்க்சிசம் பொய்ப்பிக்கமுடியாக் கொள்கை எனக் கூறப்படுவதால், அது விஞ்ஞானமல்ல (மார்க்சிசத்திற்கெதிரான பொப்பரின் விமரிசனம் ஏற்புடையதல்ல. மார்க்சிசம் என்றால் என்னவெனத் தான் விளங்கிக் கொண்டதொரு கொள்கையையே பொப்பர் விமர்சிக்கிறார். மார்க்சிசம் நியூட்டனதோ அல்லது ஐயன்ஸ்ரைனினதோ கொள்கைகளைப் போன்றதொரு விஞ்ஞானக் கொள்கையல்லவென்பதையும், அதுவோர் உலக நோக்காகவும், முறையியலாகவுமே இருக்கிறதென்பதையும் பொப்பர் உணரத்தவறிவிட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.) என்ற முடிவிற்கு வருகிறார். இதுபோலவே வரலாறும் விஞ்ஞானமல்லவென்பது அவரது நிலைப்பாடு.
விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தும் தத்துவமாக பொய்ப்பித்தற் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பொப்பர் இதனடிப்படையில் அறிவுக்கொள்கை யொன்றையும் விருத்தி செய்து கொள்கிறார். உண்மை எதுவென எவரும் அறியார், நாம் செய்யக் கூடியதெல்லாம் அறியாமையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்வதே. முடிவிலியாய்த் தொடரும் இப்பயணத்தை அறிவின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையென அழைப்பர். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய இப்பயணம் பிரச்சனை தீர்க்கும் முறையிலமைகிறதென்பது பொப்பரது வாதம். இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்.
P1—> TS —> EE —> P2
அறிதல் முயற்சி எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பமாகிறது. இதனை P1 குறிக்கிறது. TS என்பது முன்மொழியப்பட்ட தீர்வு முயற்சியையும், EE என்பது முன்மொழியப்பட்ட தீர்வில் காணப்படும் தவறுகளைக் களைதலையும் P2 என்பது தவறுகள் களையப்பட்டதன் பின்னர் உள்ள நிலையையும் குறிக்கிறது. P1 உம் P2 உம் சாராம்சத்தில் பிரச்சனைகளேயெனினும், P1 பிரச்சனையின் தொடக்கத்தையும், P முன்மொழியப்பட்ட தீர்வினடிப்படையில் தவறுகள் களையப்பட்ட நிலையையும் அதேசமயம் புதிய பிரச்சனையொன்றின் தொடக்கத்தையும் சுட்டுகிறது.
P1 —> TS —> EE —> P2 —> TS —> EE —> P3
என அறிவானது உண்மையை நோக்கி பிரச்சினை தீர்க்கும் முறையினூடாக வளர்ச்சியடைந்து செல்கிறது. பொதுவாக அறிவுலகத்தையும், குறிப்பாக விஞ்ஞான அறிவையும் பொறுத்தவரையில் முடிவிலியாய்த் தொடரும் இத்தேடலில் பழைய கொள்கைகள் (ஊகங்கள்) நிராகரிக்கப்பட்டு புதிய கொள்கைகள் (ஊகங்கள்) வந்தவண்ணமேயிருக்கின்றன. அறிவும் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. எந்தவொரு அறிவுத் துறையில் எக்கணத்தில் இவ்வளர்ச்சி தடைப்படுத்தப்பட்டு, இருப்பதுடன் திருப்தியடைய நேரிடுகிறதோ அக்கணத்தில் அவ்வறிவுத் துறை விஞ்ஞானம் என்ற அந்தஸ்தை இழந்து விஞ்ஞானமல்லாததாய், சித்தாந்தமாய்ப் போய்விடுகிறது.
ஊகமும் நிராகரிப்புமாக வளர்ந்து செல்வதே விஞ்ஞான பூர்வமான அறிவு என்ற நிலைப்பாட்டிலிருந்து கொண்டு நிர்ணயமில்வாதம் என்ற கோட்பாட்டைப் பொப்பர் முன்மொழிகிறார். நிர்ணயமில்வாதமென்பது நிர்ணயவாதத்திற்கு எதிரானது. இயற்கை விஞ்ஞானங்களிலும், சமூக விஞ்ஞானங்களிலும் நிர்ணயவாத மென்பது ஒரு அதிதக்கொள்கையாக (
Meta theory) அதாவது அறிவைப் பெறுவதற்கு ஆதாரமாயிருக்கின்ற தத்துவமாக எண்ணப்பட்டது. காரணத்தைத் தேடுவதன் மூலம் காரியத்தை விளங்கிக்கொள்ளலாம் என்ற காரணக்கோட்பாடும் நிர்ணயவாதத்தையே ஆதாரமாகக் கொண்டது. நிர்ணயவாதத்தையும் காரணக்கொள்கையையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். அரிஸ்ரோட்டலின் காலத்திலிருந்தே காரணக்கொள்கை அறிவைப் பெறுவதற்கானதொரு திறவுகோலாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவந்தது. நியூட்டனின் விஞ்ஞானமும், நிறை போட்டிப் பொருளாதாரமும், திட்டமிடல் தொடர்பான கொள்கைகளும் உள்பொருளியலடிப்படையில் நிர்ணயவாதமாகவும் அறிவாராய்ச்சியல் அடிப்படையில் காரணக் கொள்கையாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிர்ணயவாதமும் காரணக்கொள்கையும் இயற்கை விஞ்ஞானங்களில் நியதிவாதத்திற்கும் சமூக விஞ்ஞானங்களில் விதிவாதத்தை ஆதரிக்கும் மூடுண்ட சமூக விஞ்ஞானக் கொள்கைகளுக்கும் இட்டுச் செல்லுமென எச்சரித்து, நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறார். இயற்கை விஞ்ஞானங்களில் ஒன்றான பெளதீகத்தில் ‘’குவாண்டும் மெக்கானிக்ஸ்’’ (சக்திச் சொட்டுக் கொள்கை) நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறதென்றும் நிர்ணயமில்வாதம் சமூகவிஞ்ஞானங்களில் குறிப்பாக அரசியலில் திறந்த சமூகத்திற்கு இட்டுச்செல்லுமென்றும் பொப்பர் குறிப்பிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி திறந்த சமூகமே நீதியான சமூகமாகும். பொப்பரின் வழியில் திறந்த சமூகத்தின் பொருளாதாரம் பற்றிச் சிந்தித்த பெருளியலாளர்களில் கயக் (
Hyek) குறிப்பிடத்தக்கவர்.
திறந்த சமூகம் என்பது பொப்பருடைய அபிப்பிராயப்படி விமரிசனத்தை அனுமதிக்கிற, சகிப்புத்தன்மையுடன் தாங்கிக் கொள்கிற சமூகமாகும். சமூகம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இம்மாற்றம் எவரினதும தேவை கருதியோ அல்லது யாதேனுமொரு திட்டத்தின்படியோ நிகழ்வதில்லை. எனவே சமூக நிறுவனங்களை உருவாக்கும் பொழுதும், சமூகம் தழுவிய தீர்மானங்களை எடுக்கும் பொழுதும் அதனோடு தொடர்புடையவர்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாவர். அனைவர்க்கும் நன்மை பயக்குமெனக் கருதும் அரசியற் கொள்கைகள் அனைத்தையும் பொப்பர் நிராகரிக்கிறார். ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதவை இன்னவை என்ற திட்டத்துடன் அரசியலை அணுகுபவர்கள் சமூகத்தை ஆபத்தான பரிசோதனைக்கு உள்ளாக்குபவர்களாவர். விளைவுகளின் பலாபலன்களை முன்கூட்டியே அறியும் வல்லமை மனிதர்க்கில்லை. எதிர்காலத்தின் தேவைகள் பற்றிய இன்றைய கணிப்பீடு ஒருபொழுதும் சரியாக இருக்கமுடியாது.
மனிதனின் அறிவு வளர்ந்துகொண்டே போகிறது. சமூகத்தின் தேவைகளும் மாறிக்கொண்டே போகின்றன. எனவே எதிர்காலத் தேவைகள் எவையாக இருக்கலாமென்று தெரியாத நிலையில் எதிர்காலத்திற்காக நாம் இன்று எவ்வாறு திட்டமிடமுடியுமென பொப்பர் வாதிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி சமூகத்தை முழுமையும் ஒரேயடியாக மாற்ற முயலாது சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். விமரிசனத்தை அனுமதிப்பதன் மூலம் சீர்திருத்தங்களின் நன்மை தீமைகளை அறியமுடிகிறது, திருத்திக்கொள்ளவும் முடிகிறது. மேலும் நடைமுறைப்படுத்தப் பட்டதொரு சீர்திருத்தம் சமுதாயத்திற்கு தீங்கு பயக்குமெனக் கண்டுகொண்டால் குறைந்தளவு இழப்புடன் அதனைச் சீர் செய்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் முழுமையான மாற்றத்தை சமூகம் தழுவி நடைமுறைப்படுத்தும் பொழுது தீமைகளைத் தவிர்ப்பதற்கு சந்தர்ப்பமில்லாது போவதுடன், திருத்திக் கொள்ளவும் இடமில்லாது போய்விடுகிறது. அதிகளவு இழப்புக்களையும் சந்திக்க நேரிடுகிறது.
முழுமையான சமூகம் தழுவிய மாற்றங்களிற்குப் பதிலாக, படிப்படியான சீர்திருத்தக் கொள்கையை முன்மொழிகிற பொப்பர் அதனை எவ்வாறு நடைமுறைப் படுத்துவதென்பதற்கு 'சந்தர்ப்பத்தின் தருக்கம்’ (
Logic of situation) என்ற கோட்பாட்டை முன்மொழிகிறார். எத்தகைய முற்கற்பிதங்களும் இல்லாது புத்திபூர்வமாக, தனித்தனியாக பிரச்சனைகளை அணுகுவதன் மூலம் பொருத்தமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே சந்தர்ப்பத்தின் தருக்கம் என்பதன் தாற்பரியமாகும். முழுமைக்குமான சிபார்சுகள் அவை எக்காலத்திற்குமுரியவை என்றோ கருதாது ஒவ்வொரு சந்தர்ப்பமும் அதற்கேயுரிய சிறப்பியல்புகளுடன் அணுகப்படல் வேண்டும்.
சமூகம் என்றோ பிளோட்டோ முதல் மார்க்ஸ் ஈறாக சமூகம் பற்றிச் சிந்தித்தவர்களெல்லாம் தமது திட்டங்களுக்கியைய சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினர். இவர்களது இவ்விருப்பம் அரசியலில் அதிகாரம் செய்யும் சர்வாதிகாரிகளையே தோற்றுவிக்கும். தாம் விரும்பும் சமூக அமைப்பு எவ்வாறிருக்க வேண்டுமென்பதில் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே. மாற்றத்தை அதிகம் விரும்பாத பழமைவாதிகள், தாராண்மைவாதிகள், சோசலிஸ்டுக்கள் என மாறுபட்ட அரசியலார்வம் கொண்டவர்களை ஒரு சமூகத்திற் காணலாம். இக்குழுக்களின் தன்மை எதுவாயிருப்பினும், அரசியலதிகாரத்தைப் பெறும் பொழுது அவர்கள் தமது அரசியற் திட்டங்களையே நடைமுறைப்படுத்த விரும்புவர். ஒரு திறந்த சமூகத்தில் எதிர்க்கருத்துடையவர்களின் விமரிசனம் ஆட்சியாளர்களை விழிப்புடன் செயற்பட உதவும். முழுச் சமூகத்திற்கும் பொதுவான இலட்சியங்கள் என்ற கருத்தாக்கத்திற்கு திறந்த சமூகத்தில் இடமில்லை. கற்பனாவாத இலட்சியங்களை கொண்ட அரசியலோ முழுச்சமூகத்திற்குமான பொதுநோக்கென ஒன்றை அமுல்படுத்துவதாகக் கூறிக் கொண்டு சர்வதிகாரத்திற்கு வழி வகுக்கிறது.
பாரிய அளவிலான தீவிர புனரமைப்புகள் மிகவும் நீண்ட காலத்தை எடுக்கும். இவ்விடைக்காலத்தில் நோக்கங்களும், இலட்சியங்களும் மாறாமல் தொடக்கத்தில் இருந்தது போலவே இருக்குமென எவரும் எதிர்பார்க்கமுடியாது. நோக்கங்களும் இலட்சியங்களும் மாறமாற, அதற்கேற்ப மாற்றங்களும் எல்லையற்று நீண்டு கொண்டே போகும். முடிவில் துன்பமும் விரக்தியுமே மிஞ்சும். இலட்சிய சமூகம் எப்பொழுதும் இ ல ட் சி ய மா க வே இருப்பதால், அடையமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. மாற்றம் ஒரு பொழுதும் ஓய்ந்து விடுவதுமில்லை, மாற்றமுறாது எதுவும் இருப்பதுமில்லை. எனவே சமூகத்திற்கான மாற்றமுறா திட்டமென்பது அர்த்தமற்றதொன்றென பொப்பர் வாதிடுகிறார். சுதந்திரம் என்றால் என்ன? சமுத்துவம் என்றால் என்ன? சனநாயகம் என்றால் என்ன? என்பது போன்ற வினாக்களிற்கு ஒரு பொழுதும் முடிவான பதிலைக் கூற முடியாது. இத்தகைய வினாக்களிற்குரிய விடை, அடிப்படையில் சாராம்சவாதத்திற்கும் கற்பனா வாதத்திற்குமே இட்டுச் செல்லும். எனவே சமூகப் பிரச்சனைகளை அணுகும் பொழுது “இத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்” , “நீர் என்ன கருதுகின்றீர்?” என பரஸ்பர விமரிசனத்துடன் கூடிய வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படுத்துதல் வேண்டும். விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்படுவது போலவே அரசியலிலும் ஆட்சியாளர்களின் ஊகங்கள் பொய்யாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் விமரிசனத்தை வரவேற்றுச் செயற்படுதல் வேண்டும்.
இறுதியாக வரலாறு பற்றியதொரு குறிப்புடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாமெனக் கருதுகிறேன். 'திறந்த சமூகம் அதன் எதிரிகளும்' என்ற நூலின் இரண்டாம் பாகத்தின் இறுதியில் ‘’வரலாற்றிற்கு யாதேனுமொரு பொருளுண்டா’’ என்றதொரு கட்டுரை உளது. அக்கட்டுரையில் நாகரீகத்தின் வரலாறு, ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் முழுமையான வரலாறு என வரலாற்று அறிஞர்கள் கூறுவதை சுத்தமான அபத்தம் என பொப்பர் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் வரலாற்றை பண்பாட்டுக் கூறுகள் பலவற்றின் வரலாறாக, அரசியல் வரலாறாக, சாதியின் வரலாறாக, சமயத்தின் வரலாறாக வர்க்கங்களின் வரலாறாக பலவகையில் எழுதலாம். அவையனைத்தும் மெய்யான வரலாற்றின் நிரப்புக் கூறுகளாக இருப்பதுடன், வரலாற்றாசிரியர்களின் ஊகங்களாகவே இருக்கின்றன. கடந்த காலம் 'இவ்வாறு தான் இருந்ததென’ கூறுபவன் அக்காலம் பற்றிய தனது விளக்கத்தைத் தருகிறானே ஒழிய உண்மையை கூறுபவனாக ஒரு பொழுதும் இருக்கமாட்டான், அவ்வாறு இருக்கவும் முடியாது.
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா (பெப்ரவரி 2, 1947 - மே 29, 2009)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைப் பேராசிரியர். அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம்,
அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு,
சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.
பண்பாடு 10வது சிறப்பிதழ் ஆனி 1995. வெளியீடு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு
நன்றி: நூலகம்.ஒர்க்
விக்கிப்பீடியாவில் கார்ல் பொப்பர், சோ. கிருஷ்ணராஜா.