December 17, 2006

*மாமனிதர் சிரித்திரன் சுந்தர் நினைவுகள்

தமிழ் மண நட்சத்திர வாரத்தில் எனது கடைசிப் பதிவு. எனது அபிமான சிரித்திரன் சஞ்சிகை ஆசிரியர் "மாமனிதர்" சி. சிவஞானசுந்தரம் அவர்களின் நினைவாக அவரைப்பற்றிய சில வரிகளும் நீங்களும் சிரித்து மகிழ அவரது ஆக்கங்களிலிருந்து சிலவற்றையும் இங்கு பதிவாக்க முனைந்துள்ளேன்.
'செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1964ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் அவர்கள். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். அன்றைய தினகரனில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது. அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் (சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான்) அவர் தனது சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

முதன்முதலில் கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 1964 இல் சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். அச்சடித்த சஞ்சிகைகளை தனியே வீதி வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவாராம். "குமுதம், கல்கண்டு, விகடன் எல்லாம் வெளிவருகுது. உன்ரை சஞ்சிகையை யார் வாசிக்கப் போறாங்கள்" என்று தன்னைக் கேட்டவர்களும் உள்ளனர் என்று சுந்தர் சொல்லிச் சிரிப்பாராம். 7 வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார்.

சிரித்திரனை சமூகப் பணிகளில் ஈடுபடவைத்து பயன்படுத்தியது மில்க்வைற் நிறுவனம். மில்க்வைற் க கனகராசா அவர்கள் இவ்வாறு நினைவு கூறுகிறார்: "சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா." க. கனகராசா சுந்தருக்குக் கூறுவாராம், "நான் இறந்தால் மக்கள் மட்டும் தான் அழுவார்கள். மறந்து விடுவார்கள். நீங்கள் இறந்தால் மரங்கள் கூட அழும். அவை நன்றி மறவா".

சிரித்திரன் சஞ்சிகை மூலம் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் இன்று உலகில் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் இப்படிப் பல. அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல் ஆகியன புகழ் பெற்றவை.

இலங்கையில் புதுக்கவிதையை முன்தள்ளி ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு. கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து பிரசுரிப்பார். திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றார்கள்.

"சிரித்திரன் சுந்தரின் மனைவியும் ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது" என்று நினைவு கூருகிறார் திக்குவல்லை கமால்.

அதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார்.

சிரித்திரனின் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றில் சமய உண்மை ஒன்று இங்கு சிரிப்பாக வெளிப்பட்டது. ஒரு கடா ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: "எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே" என்கின்றது.

பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்."

சவாரித் தம்பர், மெயில் வாகனத்தார் எல்லாம் நெஞ்சை விட்டு நீங்காத அற்புதமான பாத்திரங்கள். சவாரித்தம்பரும் அவரது சகபாடியான "சின்னக்குட்டியும்" உறவினர் ஒருவருக்குப் பிள்ளை பிறந்த செய்தி கேடு அங்கு செல்கின்றனர். பிறந்த பிள்ளை பெண்ணா அண்ணா என்று வினவுகின்றனர். பிள்ளை பெற்றவளோ, "ஆயா.. எனக்குப் பிறந்தது "போய் பேபியா, கேர்ள் பேபியா" எனக் கேட்கின்றாள்.

பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலத்தில் வந்த சித்திரம் இன்றும் பொருந்தக்கூடியது:)

ஒரு மத்தியதர வர்க்கத்தின் பொருளியலை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி ஒரு சித்திரம்: ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. "அவள் காதில் என்ன சொன்னாள்? "உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்".

வெளிநாட்டு மோகம் - தாய் தந்தை சோகம். இதனைச் சுட்டிக்காட்டி சுந்தரின் சுவையான பகிடி: "என் மூத்தவன் கனடாவில், நடுவிலான் லண்டனில், இளையவன் துபாயில்.. நான் பாயில்" என்று சவாரித்தம்பர் கூறுகிறார்.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனங்கல்லு என்பதை மெயில்வாகனத்தார் வடமராட்சிப் பேச்சு வழக்கில் கூறுகிறார். "தாய் மூன்று மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க".

மக்களை ஏமாற்றி வாய்ச்சவால் வழங்கும் அரசியல்வாதிக்கு அவன் காதருகே ஒலிபெருக்கியை உரத்துப் பேசவைத்து எமலோகத்தண்டனை வழங்கினார் ஒரு கார்ட்டூனில்.

ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம் அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை உண்டு பண்ணியது. முதலில் மித்திரனிலும், பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் 20ஆம் நூற்றாண்டு வாலிப உலகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்."

சிரித்திரன் சுந்தரின் மகுடி பதில்கள் நறுக்கு, வித்துவத்தனம், நகைச்சுவையினூடு கலந்திருக்கும் கருத்தாழம், புதுக் கவிதை போல் முகத்திலறையும் வேகம் நிறைந்திருக்கும். மகுடி பதில்கள் என்ற என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டவர் சுந்தர். இந்நூல் வெளி வந்த போது சிரித்திரனில் ஒரு போட்டி அறிவித்திருந்தார். நூலில் இடம்பெற்ற கேள்வி-பதில்களில் சிறந்த பத்தினைத் தெரிவு செய்து அனுப்பும்படி. இப்போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தது என்பதை இன்று கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பரிசு பத்து ரூபாவை மறக்காமல் அடுத்த வாரமே அம்மாமனிதர் தனது கையொப்பத்தில் காசோலையாக எனக்கு அனுப்பியிருந்தார். இந்நிகழ்வு என்னால் மறக்க முடியாதது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் சிரித்திரன் சுந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிரித்திரனில் வெளிவந்த காலத்தால் அழியாத கேலிச்சித்திரங்களுக்கு யார் நூலுருக்கொடுக்க யாராவது முன்வரவேண்டும். சுந்தரைப் பற்றி மேலதிக தகவல்கள் (பிறந்த தேதி, மறைந்த தேதி உட்பட) தெரிந்தவர்கள் அவற்றைத் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நட்சத்திர வாரத்தில் இது எனது கடைசிப் பதிவு. இந்நேரத்தில் என்னையும் மதித்து என்னை தமிழ்மண நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஒரு வாரகாலமும் எனது பதிவுகளைப் படித்தவர்களுக்கும், படித்ததோடு பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக தவறாமல் தினமும் வந்து குறும்பா மூலம் பின்னூட்டமிட்டு ஊக்குவித்த சுப்பையா அவர்களுக்கு எனது விசேட நன்றிகள். இறுதியாக இந்த நட்சத்திர வாரத்திலே மறைந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

December 16, 2006

*கூலிக்கு மாரடிப்போர்

அழகு சுப்பிரமணியம் - ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஈழத்தவர். பரிஸ்டர் பட்டம் பெற்றவர். நீண்டகாலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் "இன்டியன் றைற்றிங்" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். தனது கடைசிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்தவர். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். 'The Mathematician' என்ற சிறுகதை 'உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள்' என்ற ஆங்கிலத் தொகுப்பில் (ஹைடல்பேர்க் நகரில் வெளியானது) இடம்பெற்றுள்ளது. இவரது "மிஸ்டர் மூன்" நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியானது.

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் பால்ரர் அலன் அழகு சுப்பிரமணியத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: "இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆங்கில வாழ்க்கைப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையில் இவர் கதைகளை எழுதியுள்ளார்."

இலக்கிய விமரிசகர் கா. சிவத்தம்பி இவ்வாறு கூறுகிறார்: "1920 - 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்."

1915 மார்ச் 15 யாழ்ப்பாணத்தில் பிறந்த அழகு சுப்பிரமணியம் 1973 பெப்ரவரி 15 இல் உடுப்பிட்டியில் காலமானார்.

இவரின் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து "நீதிபதியின் மகன்" என்ற பெயரில் வெளியிட்டவர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தன் அவர்கள். அந்நூலில் இருந்து ஒரு சிறுகதையை எனது நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கூலிக்கு மாரடிப்போர்

அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான்.

பறையொலியும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.

"நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்" என்று தனக்குத்தானே பலமாய்ச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

மணல் ஒழுங்கைகளூடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப்பாதைகளூடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு நடந்தேன்.

"ஓ, அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்படாதை."

சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம். சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்து கொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக் கொண்டிருந்தனர்.

"டேய்! நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே," மாமனார் கோபத்தோடு கத்தினார்.

"இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே, எல்லோரும் அங்கை நடவுங்கோடா."

"எங்களுக்குத் தெரியாது ஐயா! 'நாம்' கோபிக்கப்படாது, நாங்கள் இப்பவே வாறம்" வலைகளைப் போட்டுவிட்டுப் பௌவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.

அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன.

"அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்" என்றார் மாமனார்.

ஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.

"என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்?" மாமனார் பொரிந்து தள்ளினார்.

"நயினார் கோபிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத்தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்" அவர்களில் ஒருத்தி சொன்னாள்.

"மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்?"

"இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர் தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேற ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு."

"சே! கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்?"

"உதிலை கிட்டத்தான் நயினார்"

"எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு"

அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.

"நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவையின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?"

"மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாதேயின்ர செத்தவீட்டுக்கு ரெண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும்? அவ ஆரெண்டு தெரியுமெல்லே" மாமனார் சீறி விழுந்தார்.

"நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்" அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். "சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ."

மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஓடிச் சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவரக்ளுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.

"மடப்பயலே! இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், போலீஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டி அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்?"

அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். "நயினாற்ரை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்தவீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்."

"கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேணுமெண்டு விரும்பிறியோடீ. அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்" கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார்.

"நயினார்! கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்"

அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.

பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம். அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக் கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு 'ஓ...'வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.

பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.

"வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் வளத்தினைச் சொல்லனணை
கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் கதையைச் சொல்லனணை
"

அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர் குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார். மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார். அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.

அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.

அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக 'அலுவல்' பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார்.

நன்றாக வியர்த்துக் களைத்து, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்து வைத்தபோது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப்பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குபுறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருக்ஷையின் பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.

மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை

"ஏழையள் எம்மை விட்டு எங்கை போனாய் ஏந்திழையே
ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய்
எங்கதாயே
"

அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச் சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துத் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் பேல் தலையைப் புதைத்து அழுதார்.

"எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி.." தம்பு உணர்ச்சி வசப்பட்டு ஓலமிட்டார்.

மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.

"அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ?
அசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்
ஓ........
கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா
கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா
ஓ........

வாயைத் திறவன்னம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
உன் வளத்தினைச் சொல்லனம்மா
கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
உன் கதையளைச் சொல்லனம்மா."

December 15, 2006

*இசைக்கலைஞர்களின் அங்க சேஷ்டைகள்

கருநாடக இசைக்கலைஞர்கள் சிலர் பாடும்போது அங்க சேஷ்டைகள் செயவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளில் சில ரசிக்கக் கூடியதாக இருக்கும். சில அளவுக்கதிகமாகப் போய் விடும். அனேகமாக சகிக்கவே முடியாதபடி இருக்கும். பெரிய வைத்தியநாத ஐயர் என்னும் பிரபல கருநாடகப் பாடகர் ஒருவர் சிவகெங்கைச் சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தவர். இவரைப் பற்றி உ. வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் சுவையான தகவல்களைத் தருகிறார். தமக்கே உரிய நடையில் நகைச்சுவையும் கலந்து எழுதியுள்ளார்.



பெரிய வைத்தியநாதையரின் சங்கீதத் திறமை மிக்க வன்மையானது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும்போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்குமாம்.

பாடும்போது பல வகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார். ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேட்டைகளும் அதிகரிக்கும்.

நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடுப்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்து விடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகள் உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உற்சாகத்தின் அறிகுறிகள்.

வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார்.

இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம்பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உற்சாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர்வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார்.

இவருக்குப் பொடி போடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு போடுவார். பின்பு கையை உதறுவார். அப்பொடி அருகிலுளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.

இப்படியாக ஒரு நாள் எட்டயபுரம் ஜமீனில் ஒரு பெரிய விருந்து நிகழ்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள். இவருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.

அங்கே வந்திருந்த ஜில்லா சர்ஜன் ஒரு வெள்ளைக்காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டைகள் அதிகப்பட்டன. சர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.

வைத்தியநாதருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவதுபோல் இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரையிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக் கொண்டார்கள்; இவற்றையெல்லாம் சர்ஜன் பார்த்தார்; "சரி, சரி, இவர் பாடவில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட்டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீதமென்று எண்ணி இந்த மனுஷனைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது" என்று எண்ணினார்.

வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும்பித் திரும்பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகாரத்துடன் முடிக்கும் போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல சர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை. தம் கைக்கடியாரத்தை எடுத்தார். கலெக்டரை நோக்கினார். "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்போது இவருக்கு வலிப்பு ஏதோ கண்டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதிகாரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாகவில்லை.

அதிகாரி மெல்ல வித்துவான் அருகில் சென்று பக்குவமாக, இன்னும் சில வித்துவான்கள் பாடவேண்டும். அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். உயர்ந்த சன்மானத்தையும் அளித்தார். ஐயரும் ஒருவாறு தமது பாட்டை முடித்துக் கொண்டு மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

பெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறைகளால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்!

இவ்வாறு குறிப்பிடுகிறார் உ. வே. சாமிநாதையர் அவர்கள்.

உ. வே. சாமிநாதையரும் ஈழத்து சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்கள். இவர்களது உறவு குறித்தும் பின்னர் எழுந்த விரிசல்கள் பற்றியும் முன்னர் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். இது குறித்து மேலதிக சில தகவல்களுடன் முழுமையான பதிவொன்று இடும் எண்ணம் உண்டு.


December 14, 2006

*இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி

அன்று சிலோன் அன்றழைக்கப்பட்ட இலங்கையில் அன்றைய ரயில்வே இலங்கை மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருந்தது. இலங்கை முழுவதையும் ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலை தோட்டங்களுக்கும் மற்றைய ஏற்றுமதிப் பொருட்கள் விளையும் முக்கிய இடங்களுக்கும் கொழும்பை மையமாக வைத்துப் புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில்வே பற்றி சில சுவாரசியமான செய்திகளைப் பகிரலாம் என்றிருக்கிறேன்.


இங்கிலாந்தில் நீராவிப் புகையிரதம் கண்டுபிடிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதலாவது நீராவிப் புகையிரதம் 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து தனது முதலாவது சேவையை ஆரம்பித்தது. இது அன்று அம்பேபுச வரையில் சென்றது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன. இவை அனைத்தும் அகலப் பாதையில் (அதாவது 5 அடி 6 அங்) அமைந்தவை.

முதலாவது குறுகிய (2 அடி 6 அங்) ரயில் பாதை 1900 ஆம் ஆண்டில் மருதானையிலிருந்து அவிசாவளை வரை அமைக்கப்பட்டது. இது அப்போது மட்டுமல்ல இன்றும் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே கருதப்படுகிறது. இப்புகையிரதம் எப்படி இலங்கைக்கு அறிமுகமானது?

இந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் கவர்னராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.

மிக மெதுவாகவே இப்புகையிரதம் செல்லும். இந்தப் புகையிரதப் பாதை பின்னர் 1912 இல் இரத்தினபுரி வரையில் விஸ்தரிக்கப்பட்டது. (நான் தினமும் 153 இலக்க பஸ்சில் பாடசாலைக்குப் போகும்போது இந்தப் புகைவண்டியை தெமட்டகொட புகையிரதக் கடவையில் அநேகமாக சந்திப்பது வழக்கம். ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் காத்து நிற்போம். அவ்வளவுக்கு மெதுவாகச் செல்லும்).

(யாழ்ப்பாணத்தில் ரயில் பாதை அமைக்கும் வேலைகள் 1905 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது)

அன்றைய புகையிரதங்களில் உணவகங்கள் அற்புதமானவை. ஒரு முழுப் பெட்டியே உணவகமாக மாற்றப்பட்டிருக்கும். சமையலறை, இருந்து உண்ண மேசைகள், சீருடை அணிந்த சேவகர்கள்.( 30, 40 களில் Sir Donatus Victoria's Catering Service என்ற நிறுவனமே இந்த உணவகங்களைப் பராமரித்து வந்தது). யாழ்ப்பாண இரவு மெயில் வண்டியில் இந்த உணவகம் மிகவும் பிரசித்தம். மதுபான வகைகள், சிற்றுண்டி வகைகள், தேநீர் அனைத்தும் கிடைக்கும்.


அக்காலத்தில் புகையிரத ஓட்டிகள் பலர் பிரித்தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டனர். நீராவி இயந்திரத்தில் இருந்து ஓட்டுனர் வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் வழமை. (இன்று Thomas The Tank Engine இல் இக்காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்). இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அப்போது எரிவிறகுகளே புகையிரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இலங்கை சரித்திரத்தில் அக்காலத்தில் நடந்த ஒரு பயங்கர ரெயில் விபத்து 1928 இல் மார்ச் 12 இல் நடந்தது. களுத்துறையில் இருந்து 2 மைல் தூரத்தில் கட்டுக்குருந்தை என்ற இடத்தில்.

மாத்தறையிலிருந்து புறப்பட்ட கடுகதி (வழக்கம் போலவே நிறைந்திருந்தது). இதன் ஓட்டுனர் David Henry Cowe. இது இரவு மலைநாட்டு தபால் புகையிரதத்தைச் சந்திக்க வேண்டும். சிவனொளிபாத மலையில் அப்போது விசேடமான நாட்கள். பலர் மூட்டை முடிச்சுகளுடன் யாத்திரை கிளம்பியிருந்தனர்.

எதிரே வந்து கொண்டிருந்தது மருதானையிலிருந்து அளுத்கமைக்குப் புறப்பட்ட புகையிரதம். கொழும்பில் வேலை முடித்து பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன் ஓட்டுனர் Percy Bennet.

மாத்தறை கடுகதி சில நிமிடங்கள் தாமதமாகியதால், அளுத்கமை புகையிரதத்தை லூப் லைனுக்கு மாற்ற முடிவு செய்தனர். புகையிரத நிலையத்தில் Tablet கொடுப்பதில் ஏற்பட்ட சில சிக்கலில் ஓட்டுனர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு புகையிரதத்தை எடுத்துவிட்டார்.

சில நிமிட நேரங்களில் தவறு நடந்து விட்டது புகையிரத நிலைய ஊழியர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டு புகையிரதங்களும் நேருக்கு நேரே மோதிக் கொண்டன. மோதல் சத்தம் மூன்று மைலுக்கப்பாலும் கேட்டதாம். கடுகதியின் எஞ்சின் முற்றாக சேதமடைந்தது. இரண்டு எஞ்சின் ஓட்டுனர்கள் உட்பட 28 பேர் இறந்தனர். 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒரு கொள்ளைச் சம்பவம் 1945 ஜுலை 27 இல் நடந்தது. கொழும்பிலிருந்து தலைமன்னாருக்குப் புறப்பட்ட இரவு தபால் வண்டியில் நடந்த கொள்ளைச் சம்பவம்.
எஸ். செல்லத்துரை என்பவர் கார்டாக (under guard) இருந்தார். அவர் இருந்த பெட்டி எஞ்சினுக்குக் கிட்டவாக இருந்தது. இப்பெட்டியில் நிறைய தபால் பொதிகள் இருந்தன.

நடுநிசி நேரம் கல்கமுவைக்கு சமீபமாக இப்பெட்டிக்குள் புகுந்தனர் கொள்ளையர்கள். பெட்டி முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும், இரத்தக் கறைகளும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இது நடந்தது ஓட்டுனருக்கோ பயணிகளுக்கோ தெரியவில்லை.
புகையிரதம் அநுராதபுரம் வந்த பிறகே விபரீதம் நிகழ்ந்ததைக் கண்டுபிடித்தனர். செல்லத்துரையைக் காணவில்லை. பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு மெயிலின் ஓட்டுனருக்கு, மாகோ வரை மெதுவாக செலுத்தும் படியும் இரண்டு பக்கமும் கவனமாகப் பார்க்கும்படியும். அப்படியே செல்லத்துரையின் சடலம் கல்கமுவையில் பாதைக்குப் பக்கமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அப்பாவி ஓட்டுனரும் அச்சடலத்தை எடுத்து மாகோவுக்குக் கொண்டு சென்றுவிட்டார். (இதனால் கையடையாளங்கள் மற்றும் தடயங்கள் அழிந்துபோனதாக பொலீசார் தெரிவித்தனர்).

ஆச்சரியம் என்னவென்றால் பெரிதாக கொள்ளை எதுவும் போனதாகத் தெரியவில்லை. நான்கு தபால் பொதிகள் ம்ட்டும் திறந்து பார்க்கப்பட்டிருந்தது.அவை யாவும் போலீஸ் அதிகாரிகளின் தபால் பொதிகள். இச்சம்பவம் ஏன் நடைபெற்றது என்பது கடைசிவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்படி சில சம்பவங்களைத் தவிர அன்றைய ரயில் பிரயாணம் அநேகமாக சொகுசானது மட்டுமல்ல மிகவும் பாதுகாப்பானதுமாக இருந்தது. இப்படியாக ஒரு காலத்தில் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து கொண்டிருந்த ரயில்வேயின் இன்றைய நிலை சொல்லத் தேவையில்லை.

(தகவல்கள் பெற்றுக் கொண்டது The Ceylon We Knew வி. வாமதேவன் எழுதிய நூலில் இருந்து)

சிரித்திரன் சுந்தரின் ஒரு பகிடி இந்த நேரம் ஞாபகம் வருகிறது:

கே: தூங்கிக்கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பியது யார்?

மகுடி: அநுராதபுரத்தில் ரயிலில் ஏறிய சிங்களப் பிரயாணி.


December 13, 2006

*சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..
இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே
பூமணக்கப் போற பெண்ணே
உன்னழகைக் கண்டவுடன்
கோமணங்கள் துள்ளுதடி
இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

பின்னர் சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை வானொலியில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது போடுவாரகள்.
தமிழில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்குப் புதிய கலைஞர்கள் தோன்றாமையும் தொலைக்காட்சியின் அறிமுகமும் தான் என்கிறார் நித்தி.

அவர் சொன்ன ஒரு சம்பவம்:

"மலேசியாவில் 45வது சுதந்திர தின விழாக் காட்சிகளை மலேசியாவில்
நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம் தமிழ் மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றாதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். எங்கோ பிறந்த பாடல், எங்கெங்கோ சென்று மக்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறது".

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் மதுவிலக்கு மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பான பாடல் நித்தியின் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே".

ரஜனியின் அவசர அடி ரங்கா, எஸ்பியின் சிவரஞ்சனி, விஜயகாந்தின் ரமணா படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இதற்காக நித்திக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை).

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

மகிழ்ச்சியான ஒரு விடயம்: என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.


சின்னமாமி பாடல் வரிகளை வாசித்து விட்டு பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழலும் பெடியெளெல்லாம்
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா
என்மகளை நினைத்து விட்டாய்
இடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே

ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே
ஏனணை மாமி அவளெனக்கு
தெவிட்டாதவள் எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை - சின்ன மாமியே



மக்கள் மயப்பட்டவை நித்தியின் பாடல்கள். எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கப்போகின்றன.

December 12, 2006

*இலங்கையில் தென்னாபிரிக்க யுத்தக்கைதிகள்

இலங்கையில் தென்னாபிரிக்க யுத்தக்கைதிகள். நிச்சயம் இது இன்றைய சம்பவமல்ல. சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வரலாறு. திரும்பிப் பார்ப்போம்.

தென்னாபிரிக்காவில் 1899 க்கும் 1902 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரித்தானியருக்கும் டிரான்ஸ்வால், ஒரேஞ் சுயாதீன மாநிலம் ஆகியவற்றில் குடியேறியிருந்த டச்சுக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போர் "போவர் யுத்தம்" என அழைக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் டச்சு மக்கள் போவர்கள் (Boers - டச்சு மொழியில் கமக்காரர்) என அழைக்கப்பட்டனர். தமது சுதந்திரத்தைப் பேண முனைந்த போவர்கள் மேல் பிரித்தானியர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். இதனால் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. இந்தச் சண்டைக்கு பிரித்தானியாவுக்கு ஆதரவாக பிரித்தானியக் கொலனிகளான அவுஸ்திரேலியா, இலங்கை ஆகியன தமது துருப்புக்களை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பியிருந்தன.

போவர் யுத்த காலத்தில் தம்மிடம் பிடிபட்ட யுத்தக் கைதிகளை பிரித்தானிய வல்லரசு தமது கொலனி நாடுகளுக்கு நாடு கடத்தியது. அப்படியாக 1900 இல் இலங்கைக்கும் போவர் யுத்தக் கைதிகள் நாடு கடத்தப்பட்டனர். அப்படி அனுப்பப்பட்டவர்களின் 5000 பேரைக் கொண்ட தொகுதி ஒன்று ஓகஸ்ட் 1900 இல் எஸ்.எஸ்.மோஹாக் (SS Mohawk) கப்பலில் இலங்கை வந்திறங்கியது. இவர்கள் இலங்கையில் தியத்தலாவை, அம்பாந்தோட்டை பகுதிகளில் விசேட குடியமர்வுத் திட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டனர். இப்பகுதி Happy Valley Reformatory என அழைக்கப்பட்டது. தியத்தலாவை முகாம் அமைந்திருந்த பகுதி கீழே உள்ள படத்தில் காணலாம்.

இவர்களைப் பராமரிப்பதில் உள்ளூர் அதிகாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். உள்ளூர்ச் சட்டங்களுக்குப் பணிய மறுத்தனர். இதனால் இவர்களுக்கெனத் தனியே தியத்தலாவ, வெலிமடை, அப்புத்தளை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. போவர்கள் உள்ளூர் மக்களுக்கு சட்ட விரோதமாக உருளைக்கிழங்கிலிருந்து சாராயம் வடிக்கும் முறையினைக் கற்றுத்தந்தனர். இது அக்காலத்தில் உள்ளூர் மக்களால் அல சுதிய (அல என்றால் சிங்களத்தில் கிழங்கு, சுதிய என்றால் என்ன??) என அழைக்கப்பட்டது. (இந்த அல சுதியவிலிருந்து பின்னர் கசிப்பு போன்ற பயங்கரக் குடிவகைகளை இலங்கைக் குடிமக்கள் கண்டுபிடிப்பதற்கு அதிகம் சிரமமமிருக்கவில்லை).

தியத்தலாவை முகாமில் இருந்த யுத்தக்கைதிகள் பலரும் பின்னர் ராகமை (Plague Camp), கல்கிசை, உருகஸ்மண்டிய முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த உருகஸ்மண்டிய முகாம் 10 ஏக்கர் காணியில் அமைந்திருந்தது. இம்முகாமில் இருந்தவர்கள் உள்ளூர் பெண்களுடன் கலந்ததனால், இக்கிராமத்தில் இன்றும் பல வெள்ளைத் தோல், நீலக் கண்களைக் காணலாம். தியத்தலாவை முகாமில் யுத்தக்கைதிகளின் அறையொன்றைக் கீழே காணலாம்:


தென்னாபிரிக்காவில் மே 31, 1902 இல் யுத்தம் முடிந்தவுடன் போவர் கைதிகள் பலரும் அன்றைய ஏழாம் எட்வேர்ட் மன்னனுக்கு அடிபணிந்து தென்னபிரிக்கா திரும்பிச் சென்றனர். சிலர் மன்னனுக்கு அடிபணிய மறுத்து இலங்கையிலேயே ஒளித்திருந்தனர். இவர்களில் ஒரு சிலர் பின்னர் தப்பி பர்மா சென்றனர். சிலர் இலங்கையிலேயே தங்கி விட்டனர்.

இப்படித் தங்கியிருந்தவர்களில் ஒருவர் தான் எங்கெல்பிரெக்ட் (Engelbrecht) என்பவர். இவர் பின்னர் யாலை காட்டுப்பகுதிக்கு முதலாவது வார்டனாக (Game Ranger) நியமிக்கப்பட்டார். இவரது கடைசிக் காலங்களில் முதலாம் உலகப் போர் வெடித்திருந்தது. அப்போது ஜேர்மனிய நாசகாரக் கப்பலான எம்டன் இந்து சமுத்திரத்தில் பெரும் நாசங்களைச் செய்து கொண்டிருந்தது. எம்டன் கப்பல் மாலுமிகளுக்கு இரகசிய உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவர் கண்டியில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் இக்குற்றச்சாட்டுக்கள் என்றுமே நிரூபிக்கப்படாமல் ஓகஸ்ட் 25, 1922 இல் இறந்தார்.

(இந்த எம்டன் கப்பல் பின்னர் 9 நவம்பர் 1914 இல் அவுஸ்திரேலிய யுத்தக் கப்பலான "எச்.எம்.எஸ் சிட்னி"யினால் கொக்கோஸ் தீவுகளில் மூழ்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் எம்டன் என்ற சொல் வழக்கு இன்றும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்).

இலங்கையில் தங்க நேர்ந்த பல போவர்கள் தமது பென்ஷன் பணத்தை நாட்டின் பல்வேறு கச்சேரிகளில் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாம். போவர்களைத் தமக்குள்ளே ஒன்று கூட விடாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான நடைமுறை இருந்தது. ஒரு சிலர் யாழ்ப்பாணம் வரை சென்று யாழ் கச்சேரியில் பென்ஷன் பெற்றனராம். சிலர் மட்டக்களப்புக்கும் செல்லவேண்டியிருந்தது. இப்படியாக இந்த போவர்கள் காலப்போக்கில் நாட்டின் சிறுபான்மையாயிருந்த பேர்கர் (burghers) சமூகத்துடன் ஒன்றிணைந்தனர். இவர்களின் பெயர்களைக் கொண்டே போவர்களை இன்று அடையாளம் காணக்கூடும்.

குறிப்பு: போவர் யுத்தத்தில் மொத்தம் 75,000 பேர் இறந்தனர். இவர்களில் 22,000 பேர் பிரித்தானிய போர் வீரர்கள், 7,000 போவர் துருப்புக்கள், 28,000 போவர் மக்கள், 20,000 கறுப்பின ஆபிரிக்கர்கள.

December 11, 2006

*பாரதிக்கு வணக்கம்

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். எனது முதலாவது வலைப்பதிவினை பாரதிக்கு அர்ப்பணித்திருந்தேன். இன்று பாரதி பிறந்த நாளில் எனது முதலாவது நட்சத்திர பதிவைப் பதிவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதை சொல்லத் தேவையில்லை.

இன்று பாரதியார் இருந்தால் அவருக்கு வயது 124 இருக்கும். ஆனால் அவர் வாழ்ந்தது ஆக 39 ஆண்டுகளே. தனது 5வது வயதிலேயே தந்தை கணக்குச் சொல்லிக் கொடுத்த்போது, "கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு" என்று கவிதையிலேயே அடுக்கியவர். அவர் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் கவிஞராக மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த இதழாளனாக, பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். பாரதியாரின் பத்திரிகைத் துறை ஈடுபாட்டை மட்டும் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

இளசைச் சுப்பிரமணியன் 1904 இலிருந்து 1921 வரை ஒரு பத்திரிகையாளராகப் பவனி வந்தவர். 1904, நவம்பரில் சுதேச மித்திரன் இதழுக்கு இரண்டு ஆண்டுகள் துணை ஆசிரியராக பத்திரிகைத் தொழிலை ஆரம்பித்தார். தொடக்கத்தில் மெய்ப்புத் திருத்தல், பின்னர் செய்தி மொழிபெயர்த்தல். இப்படியாக இரண்டாண்டுகள். அதற்கிடையில் சக்கரவர்த்தினி என்ற பெண்கள் மாத இதழில் ஆசிரியரானார். (சக்கரவர்த்தினி இதழின் முன்பக்கத்தில் ஆங்கிலத்தில் Indian Ladies என்றும் அதனையே தமிழில் தமிழ்நாட்டு மாதர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது). "இளமை மணம், சதி, வரதட்சணை, கைம்பெண் கொடுமை, ஆகியவற்றை எதிர்த்தும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளியிட்டார். சுதேச மித்திரனில் எழுத முடியாததை எழுதச் சக்கரவர்த்தினி பயன்பட்டது" (முனைவர் பா. இறையரசன்).

"சக்கரவர்த்தினி"யில் இருந்து விலகிய பாரதி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார். 4-05-1906இல் ஆரம்பமாகியது இந்தியா இதழ். அன்று ஈழத்தில் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த இந்துசாதனம் என்ற இதழ் தனது 1906 ஆம் ஆண்டின் இதழொன்றில் "இந்தியா"வைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தது:

"இந்தியா - இது சென்னைப் பிரமவாதின் அச்சியந்திரசாலையில் வாரத்துக்கொரு முறை 16 பக்கங்கள் கொண்ட 'கிறௌன் போலியோ" சயிஸ் காகிதத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும் ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிகை. பெரிய இங்கிலீஷ் பத்திரிகைகளில் என்னென்ன விஷயங்கள் எழுதப்படுகின்றனவோ அந்த விஷயங்களெல்லாம் இந்தப் பத்திரிகையிலும் எழுதப்பட்டு வருகின்றன. இதனை வாசிப்போருக்கு இராஜாங்க விஷயங்களில் நல்லறிவும் தேசாபிமானமும் உண்டாகும்."

1909 ஜூலை 7 இந்தியா (புதுவை) இதழில் யாழ்ப்பாணத்தில் சீதன வழக்கத்தின் கெடுதி பற்றி பாரதி இவ்வாறு எழுதுகிறார்:

"சிலோன் நாட்டு, கொழும்பு நகரத்து நோறீஸ் றோட்டு 68 நெ. வீடு ஸ்ரீ க.ண.கோ.பாலப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள விளம்பரம் நமது பார்வைக்கு வந்தது. அதில் சீதன வழக்கத்தால் உண்டாகும் கெடுதிகளைப் பல யுக்தி அனுபவங்களால் விளக்கிக் காட்டியிருக்கிறார். இந்த வழக்கத்தால் பெண்கள் கற்புக்கும் புருஷன் ஊக்க முயற்சிக்கும் வெகு சுலபமாய்க் கேடுகள் உண்டாகின்றன என்று நாட்டியிருக்கின்றார். இந்த வியாஸம் 22 பாராக்களில் அடங்கியிருக்கிறது. இதை அவசியம் யாழ்ப்பாணவாசிகள் கவனித்து நடந்தால் மெத்த நலமே."

இந்தியா இதழைத் தொடர்ந்து சென்னை பாலபாரதா (1906), புதுவையிலிருந்து வெளியான இதழ்களான விஜயா (1909), கர்மயோகி (1910), தர்மம் (1910), சூரியோதயம், பாலபாரதா ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார் நமது இதழியல் முன்னோடி சுப்பிரமணிய பாரதி.

பாரதியாருக்கு பாரதி பட்டம் யாரால் வழங்கப்பட்டது என்ற தகவல் எந்த நூலிலும் காணப்படவில்லை. தற்செயலாக குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் பாரதியாரின் பால்ய நண்பனாயிருந்த சோமசுந்தர பாரதியார் பற்றிக் குறிப்பிடும்போது சோமசுந்தரத்துக்கும், சுப்பிரமணியனுக்கும் பாரதி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது ஒரு யாழ்ப்பாணத்துப் புலவர் என்பதைத் தெரிவித்திருந்தார். அவரும் அந்தப் புலவரின் பெயரைத் தரவில்லை. ஆனால் ஒரு யாழ்ப்பாணத்துப் புலவரே இப்பட்டத்தை இருவருக்கும் எட்டயபுரத்து சந்நிதானத்தில் புலவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அறிந்தவர்கள் யாராவது இங்கு வந்து தகவலைப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகையாளர்களைப் பற்றிக் கூறிய கருத்து ஒன்றை இங்கு தருகிறேன். நிருபர் ஒருவரின் கேள்வியும் மகாத்மாவின் பதிலும்:

கே: "பத்திரிகையாளராகிய எங்களுக்கு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலக்கு தருகிறீர்களே, நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம் என்பது உங்கள் எண்ணமா?"

ப: "அப்படியில்லை. பத்திரிகைகளில் நீங்கள் பணி புரிவதே தியாக வாழ்க்கை தான். அதனால்தான் விதிவிலக்கு."

இன்று ஈழத்தில் எத்தனை பேர் பத்திரிகைகளில் பணிபுரிந்து தியாகிகளாக, மாமனிதர்களாக ஆகிவிட்டார்கள். மகாத்மாவின் அந்தக் கூற்று காலத்தால் அழியாததே.

ஆதார நூல்: இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்.