December 16, 2006

*கூலிக்கு மாரடிப்போர்

அழகு சுப்பிரமணியம் - ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஈழத்தவர். பரிஸ்டர் பட்டம் பெற்றவர். நீண்டகாலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் "இன்டியன் றைற்றிங்" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். தனது கடைசிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்தவர். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். 'The Mathematician' என்ற சிறுகதை 'உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள்' என்ற ஆங்கிலத் தொகுப்பில் (ஹைடல்பேர்க் நகரில் வெளியானது) இடம்பெற்றுள்ளது. இவரது "மிஸ்டர் மூன்" நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியானது.

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் பால்ரர் அலன் அழகு சுப்பிரமணியத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: "இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆங்கில வாழ்க்கைப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையில் இவர் கதைகளை எழுதியுள்ளார்."

இலக்கிய விமரிசகர் கா. சிவத்தம்பி இவ்வாறு கூறுகிறார்: "1920 - 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்."

1915 மார்ச் 15 யாழ்ப்பாணத்தில் பிறந்த அழகு சுப்பிரமணியம் 1973 பெப்ரவரி 15 இல் உடுப்பிட்டியில் காலமானார்.

இவரின் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து "நீதிபதியின் மகன்" என்ற பெயரில் வெளியிட்டவர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தன் அவர்கள். அந்நூலில் இருந்து ஒரு சிறுகதையை எனது நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கூலிக்கு மாரடிப்போர்

அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான்.

பறையொலியும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.

"நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்" என்று தனக்குத்தானே பலமாய்ச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

மணல் ஒழுங்கைகளூடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப்பாதைகளூடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு நடந்தேன்.

"ஓ, அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்படாதை."

சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம். சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்து கொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக் கொண்டிருந்தனர்.

"டேய்! நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே," மாமனார் கோபத்தோடு கத்தினார்.

"இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே, எல்லோரும் அங்கை நடவுங்கோடா."

"எங்களுக்குத் தெரியாது ஐயா! 'நாம்' கோபிக்கப்படாது, நாங்கள் இப்பவே வாறம்" வலைகளைப் போட்டுவிட்டுப் பௌவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.

அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன.

"அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்" என்றார் மாமனார்.

ஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.

"என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்?" மாமனார் பொரிந்து தள்ளினார்.

"நயினார் கோபிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத்தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்" அவர்களில் ஒருத்தி சொன்னாள்.

"மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்?"

"இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர் தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேற ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு."

"சே! கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்?"

"உதிலை கிட்டத்தான் நயினார்"

"எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு"

அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.

"நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவையின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?"

"மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாதேயின்ர செத்தவீட்டுக்கு ரெண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும்? அவ ஆரெண்டு தெரியுமெல்லே" மாமனார் சீறி விழுந்தார்.

"நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்" அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். "சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ."

மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஓடிச் சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவரக்ளுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.

"மடப்பயலே! இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், போலீஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டி அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்?"

அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். "நயினாற்ரை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்தவீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்."

"கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேணுமெண்டு விரும்பிறியோடீ. அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்" கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார்.

"நயினார்! கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்"

அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.

பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம். அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக் கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு 'ஓ...'வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.

பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.

"வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் வளத்தினைச் சொல்லனணை
கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் கதையைச் சொல்லனணை
"

அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர் குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார். மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார். அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.

அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.

அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக 'அலுவல்' பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார்.

நன்றாக வியர்த்துக் களைத்து, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்து வைத்தபோது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப்பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குபுறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருக்ஷையின் பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.

மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை

"ஏழையள் எம்மை விட்டு எங்கை போனாய் ஏந்திழையே
ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய்
எங்கதாயே
"

அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச் சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துத் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் பேல் தலையைப் புதைத்து அழுதார்.

"எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி.." தம்பு உணர்ச்சி வசப்பட்டு ஓலமிட்டார்.

மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.

"அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ?
அசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்
ஓ........
கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா
கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா
ஓ........

வாயைத் திறவன்னம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
உன் வளத்தினைச் சொல்லனம்மா
கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார்
உன் கதையளைச் சொல்லனம்மா."

10 comments:

said...

கூலிக்கு அடித்தாலும் குரலுண்டு, நயமுண்டு
வேலிச்செடி மலரின் மணமுண்டு - போலியல்ல
கூலிமட்டுமே கையிற் கொண்டவர் வாழ்வை
வேலியிடாமற்சொன்ன நல்லோர் வாழ்க!

Anonymous said...

excellent work! read the whole thing word by word. very touchy and well said story. thanks for introducing a nice author.

said...

சுப்பையா அவர்களே,
//கூலிக்கு அடித்தாலும் குரலுண்டு, நயமுண்டு
வேலிச்செடி மலரின் மணமுண்டு - போலியல்ல
கூலிமட்டுமே கையிற் கொண்டவர் வாழ்வை//

அருமையான கவி வரிகளில் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி ஐயா.

said...

ஓசை செல்லா (இணைய நாடோடி) அவர்களே,
//very touchy and well said story//
ஆமாம் அந்த நீதிபதியின் மகன் அழகு சுப்பிரமணியத்தை தமிழுக்கு கொண்டு வந்து தந்த ராஜ ஸ்ரீகாந்தனின் மொழிபெயர்ப்பு அருமையானது. நன்றிகள்.

said...

அழகு சுப்பிரமணியம்.... என்று காத்து வாக்கில் எப்போ கேள்விப்பட்டிருக்கிறன்... சரியான அறிமுகம்... உங்கள் மூலம் கிடைத்தது..... மிக்க நன்றிகள்

said...

கனக்ஸ்,
அருமையான பதிவு. நல்லதொரு கதையை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. உண்மையைச் சொன்னால், உங்களின் நட்சத்திர வாரப் பதிவுகளில் மனதை வருடிய பதிவு இது. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். இந்த கதைப் புத்தகத்தை எங்கு எடுக்கலாம்?

said...

அழகு சுப்பிரமணியம் பற்றி அறிந்திருந்தாலும் இன்றுதான் முழுமையாகவும் சிறுகதை வாயிலாகவும் கண்டேன் , மிக்க நன்றிகள்.

said...

சின்னக்குட்டி,
//அழகு சுப்பிரமணியம்.... என்று காத்து வாக்கில் எப்போ கேள்விப்பட்டிருக்கிறன்//

காத்து வாக்கில் கேள்விப்பட்டதை இன்று முழுமையாக உள்வாங்கியமைக்கு நன்றிகள்.:))

said...

வெற்றி,
//இந்த கதைப் புத்தகத்தை எங்கு எடுக்கலாம்?//

இந்தப் புத்தகத்தை 2003இல் காலஞ்சென்ற ராஜ ஸ்ரீகாந்தன் அவரகள் வெளியிட்டார். எங்கு வெளியிடப்பட்டது போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. விருபாவுக்குத் தெரிந்திருக்கலாம்.

said...

கானா பிரபா,

//அழகு சுப்பிரமணியம் பற்றி அறிந்திருந்தாலும் இன்றுதான் முழுமையாகவும் சிறுகதை வாயிலாகவும் கண்டேன்//

இங்குள்ள உள்ளூர் (ஹோம்புஷ்) வாசிகசாலையில் இருந்து இந்நூலைப் பெற்றேன். எடுத்து வாசித்துப் பாருங்கள். முத்தான 12 கதைகள். நீதிபதியின் மகன், தொலுக்கு முதலி, மலேயா ஓய்வூதியக்காரர், அப்புக்காத்து, மூடும் நேரம் இப்படி அருமையான கதைகள்.