'செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1964ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் அவர்கள். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். அன்றைய தினகரனில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது. அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் (சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான்) அவர் தனது சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
முதன்முதலில் கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 1964 இல் சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். அச்சடித்த சஞ்சிகைகளை தனியே வீதி வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவாராம். "குமுதம், கல்கண்டு, விகடன் எல்லாம் வெளிவருகுது. உன்ரை சஞ்சிகையை யார் வாசிக்கப் போறாங்கள்" என்று தன்னைக் கேட்டவர்களும் உள்ளனர் என்று சுந்தர் சொல்லிச் சிரிப்பாராம். 7 வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார்.
சிரித்திரனை சமூகப் பணிகளில் ஈடுபடவைத்து பயன்படுத்தியது மில்க்வைற் நிறுவனம். மில்க்வைற் க கனகராசா அவர்கள் இவ்வாறு நினைவு கூறுகிறார்: "சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா." க. கனகராசா சுந்தருக்குக் கூறுவாராம், "நான் இறந்தால் மக்கள் மட்டும் தான் அழுவார்கள். மறந்து விடுவார்கள். நீங்கள் இறந்தால் மரங்கள் கூட அழும். அவை நன்றி மறவா".
சிரித்திரன் சஞ்சிகை மூலம் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் இன்று உலகில் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் இப்படிப் பல. அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல் ஆகியன புகழ் பெற்றவை.
இலங்கையில் புதுக்கவிதையை முன்தள்ளி ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு. கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து பிரசுரிப்பார். திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றார்கள்.
"சிரித்திரன் சுந்தரின் மனைவியும் ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது" என்று நினைவு கூருகிறார் திக்குவல்லை கமால்.
அதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார்.
சிரித்திரனின் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றில் சமய உண்மை ஒன்று இங்கு சிரிப்பாக வெளிப்பட்டது. ஒரு கடா ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: "எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே" என்கின்றது.
பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்."
சவாரித் தம்பர், மெயில் வாகனத்தார் எல்லாம் நெஞ்சை விட்டு நீங்காத அற்புதமான பாத்திரங்கள். சவாரித்தம்பரும் அவரது சகபாடியான "சின்னக்குட்டியும்" உறவினர் ஒருவருக்குப் பிள்ளை பிறந்த செய்தி கேடு அங்கு செல்கின்றனர். பிறந்த பிள்ளை பெண்ணா அண்ணா என்று வினவுகின்றனர். பிள்ளை பெற்றவளோ, "ஆயா.. எனக்குப் பிறந்தது "போய் பேபியா, கேர்ள் பேபியா" எனக் கேட்கின்றாள்.
பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலத்தில் வந்த சித்திரம் இன்றும் பொருந்தக்கூடியது:)
ஒரு மத்தியதர வர்க்கத்தின் பொருளியலை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி ஒரு சித்திரம்: ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. "அவள் காதில் என்ன சொன்னாள்? "உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்".
வெளிநாட்டு மோகம் - தாய் தந்தை சோகம். இதனைச் சுட்டிக்காட்டி சுந்தரின் சுவையான பகிடி: "என் மூத்தவன் கனடாவில், நடுவிலான் லண்டனில், இளையவன் துபாயில்.. நான் பாயில்" என்று சவாரித்தம்பர் கூறுகிறார்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனங்கல்லு என்பதை மெயில்வாகனத்தார் வடமராட்சிப் பேச்சு வழக்கில் கூறுகிறார். "தாய் மூன்று மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க".
மக்களை ஏமாற்றி வாய்ச்சவால் வழங்கும் அரசியல்வாதிக்கு அவன் காதருகே ஒலிபெருக்கியை உரத்துப் பேசவைத்து எமலோகத்தண்டனை வழங்கினார் ஒரு கார்ட்டூனில்.
ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம் அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை உண்டு பண்ணியது. முதலில் மித்திரனிலும், பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் 20ஆம் நூற்றாண்டு வாலிப உலகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்."
சிரித்திரன் சுந்தரின் மகுடி பதில்கள் நறுக்கு, வித்துவத்தனம், நகைச்சுவையினூடு கலந்திருக்கும் கருத்தாழம், புதுக் கவிதை போல் முகத்திலறையும் வேகம் நிறைந்திருக்கும். மகுடி பதில்கள் என்ற என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டவர் சுந்தர். இந்நூல் வெளி வந்த போது சிரித்திரனில் ஒரு போட்டி அறிவித்திருந்தார். நூலில் இடம்பெற்ற கேள்வி-பதில்களில் சிறந்த பத்தினைத் தெரிவு செய்து அனுப்பும்படி. இப்போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தது என்பதை இன்று கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பரிசு பத்து ரூபாவை மறக்காமல் அடுத்த வாரமே அம்மாமனிதர் தனது கையொப்பத்தில் காசோலையாக எனக்கு அனுப்பியிருந்தார். இந்நிகழ்வு என்னால் மறக்க முடியாதது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் சிரித்திரன் சுந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிரித்திரனில் வெளிவந்த காலத்தால் அழியாத கேலிச்சித்திரங்களுக்கு யார் நூலுருக்கொடுக்க யாராவது முன்வரவேண்டும். சுந்தரைப் பற்றி மேலதிக தகவல்கள் (பிறந்த தேதி, மறைந்த தேதி உட்பட) தெரிந்தவர்கள் அவற்றைத் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நட்சத்திர வாரத்தில் இது எனது கடைசிப் பதிவு. இந்நேரத்தில் என்னையும் மதித்து என்னை தமிழ்மண நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஒரு வாரகாலமும் எனது பதிவுகளைப் படித்தவர்களுக்கும், படித்ததோடு பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக தவறாமல் தினமும் வந்து குறும்பா மூலம் பின்னூட்டமிட்டு ஊக்குவித்த சுப்பையா அவர்களுக்கு எனது விசேட நன்றிகள். இறுதியாக இந்த நட்சத்திர வாரத்திலே மறைந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.