சிவத்தலங்களும் திருக்கேதீச்சரமும்
- சேர் கந்தையா வைத்தியநாதன் -
சர்வவல்லமை பொருந்திய முழுமுதற் கடவுளாகிய தனிப்பொருள் ஒன்றைச்
சிவன் என்றும், சத்தியென்றும், மகா விஷ்ணுவென்றும், கணபதியென்றும், சுப்பிரமணியரென்றும், சூரியபகவானென்றும் வழிபடும் ஆறு
பிரிவினர்களும் வேறும் சிலரும் இந்துக்களிடையே உண்டு. இவற்றுள் முதலாவதாக கூறப்பட்டுள்ள
சிவன் வழிபாடு இந்தியாவில் நாற்றிசையும் பரவியுள்ளது. இது மிகவும் தொன்மையானதும்
பிரபல்யமானதும் ஆகும். உலகம் தோன்றிய போதே இச்சிவன் வழிபாடும் தோன்றியது என்பது
ஐதீகம். இமாலயம் தோன்றி தெய்வ ஐதீகங்கள் பலவற்றிற்கு அடையாளமாகத் திகழ்வதற்கு பல
நூற்றாண்டுகட்கு முன்னமே சிவனை வழிபடும் பிரிவினர் பரத, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களில்
வாழ்ந்தனர். நமது இலங்கைத் தீவும் இவற்றுள் ஒரு பகுதியாக விளங்கியது. புதை பொருள்
ஆராய்ச்சியாளரான சர் ஜோன் மார்ஷல் அவர்கள் இந்துநதிப் பள்ளத்தாக்கிலும் ஜோர்ஜ்
கர்பிறே அவர்களும் - மற்றையோரும் மோல்டா, மடகாஸ்கர், கிறீட் முதலிய விடங்களிலும், நடத்திய புதை பொருள்
ஆராய்ச்சியின் விளைவாக ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே சிவன் முழுமுதற் கடவுளாக
வழிபடப்பட்டு வருகிறாரென்ற உண்மை புலனாகிறது. மொகன்ஸோதாறோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள
முத்திரைகள் மூன்று முகங்களை உடைய தெய்வத்தைக் குறிப்பனவாயுள்ளன. இது அதற்குப்
பிந்திய காலத்துக்குரியதாகிய பிரமா, சிவன், விஷ்ணுவாகிய மும்மூர்த்தியைக்
கருதுவதாக இருக்கலாம். ஒரு முக மூர்த்திக்குள்ள சிறப்புப் போன்று கி.மு. 3,000 வருடங்களுக்கு முன்னதாகவுள்ள
மும்முகமூர்த்தியும் சிறப்புடன் விளங்கியது.
இமாலயத்துக்கு வடக்கே 1,008 சிவதலங்களும், இமாலயத்துக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் 1,008 சிவதலங்களும், கன்னியாகுமரிக்குத் தெற்கேயுள்ள கண்டத்தில் 1,008 சிவதலங்களும் இருந்ததாக ஒரு புராணக் கதையுண்டு. மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ள கண்டத்திலே சிறு புள்ளியாகத் திகழ்வதே நமது இலங்கைத் தீவாகும்.
இலங்கையில் சரித்திர காலத்துக்கு முற்பட்ட மிகவும் புராதனமான கோவில்கள் இருந்திருக்கின்றன. இவற்றுள் மன்னார்ப் பகுதியிலுள்ள மாதோட்டத்திலிருக்கும் திருக்கேதீச்சர தலமும், திருகோணமலையிலுள்ள கோணேஸ்வரர் தலமுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் தக்ஷண கைலாசமாகத் திகழ்கின்றன. சமயகுரவர்களால் இவ்விரு தலங்களைப் பற்றி பாடப்பட்டுள்ள திருப்பதிகங்களில் மகாபாரதமும் இராமாயணமும் குறிப்பிடப்படுகின்றன. கோணேஸ்வரரை வழிபட்டு வந்தவன் இலங்கையை அரசுபுரிந்த இராவணன். இராவணனின் மாமனாகிய
மயனால் புராதன திருக்கேதீச்சர ஆலயம் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இராமன் இராவண யுத்தம் முடிந்து அயோத்திக்குத் திரும்பு முன் இராமேஸ்வரத்திலுள்ள ஆலயத்தைக் கட்டினார். இந்தியாவுக்குப் போகுமுன் கேதீஸ்வரரையும் தரிசனம் செய்துவிட்டுச் சென்றான் இராமன்.
மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமாகத் திகழும் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைக்காக இலங்காபுரியை அடைந்த போது திருக்கேதீஸ்வரப் பெருமானைத்தரிசனம் செய்துவிட்டுச் சென்றான் என்பது ஐதீகம். இத்தீர்த்த யாத்திரையின் போது மாதோட்டத்திற்கு அண்மையிலுள்ள ஊரிலிருந்து அரசுபுரிந்த அல்லி
என்னும் இராசகுமாரியையும் சந்தித்து மணம் புரிந்தான் என்பதும் ஒரு பழங்கதை.
அல்லிராணி இருந்து அரசுபுரிந்த கோட்டையை மன்னாரிலுள்ள அரிப்புக் கடற்கரையில்
அழிந்த நிலையில் இப்பொழுதும் காணலாம். பாண்டிய மன்னர்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்
திருக்கேதீச்சர். ஆலயத்திருப்பணி வேலைகள் செய்திருக்கிறார்கள். அப்பொழுது
மகாதுவட்டா என்னும் துறைமுகம் மாதோட்டம் என மாறி விட்டது. கி.மு. மூன்றாம்
நூற்றாண்டிலிருந்து இத்துறைமுகத்தை மகா தித என்றே அழைக்கப்பட்டதாக பெளத்த இலக்கிய
வாயிலாக அறியக் கிடக்கிறது. இராமன், அகஸ்தியர், அர்ச்சுனன் முதலியோர் இத்துறைமுகத்தின் வழியாகவே இலங்கையை
அடைந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரது முடிபாகும். இவ்வழியாகவே கலிங்க
இராசகுமாரனாகிய விஜயனும் அவனது தோழர்களும்
இலங்கையை
அடைந்தனர் என்று கொள்ளலாம். இஃது இப்படியாகின் விஜயனைத் தொடர்ந்து வந்த
உப்பத்தீசன் என்னும் பிராமணன் பூஜை செய்ததாகச் சொல்லப்படும் தலம் திருக்கேதீச்சரமே
அல்லாது வேறு எதுவாகவும் இருக்க முடியாது. ஜம்புக் கோல் எனப்படும் விகாரையும் இதே
இடத்திலேதான் இருந்திருக்கவேண்டும். பிராமின் தீசனின் கொடுங்கோலாட்சியும், பஞ்சமும் முற்றுப் பெற்ற பின்பு திசபூதி பிக்கு அவர்கள்
இந்தியாவிலிருந்து திரும்பி வந்து இவ்விகாரையிலேயே தமது சீவியத்தைக் கழித்தார்.
ஏழாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருஞானசம்பந்த சுவாமிகளும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக்கேதீச்சரத்தைப் பற்றி திருப்பதிகங்கள் பாடியருளியிருக்கின்றார்கள். இத்திருப்பதிகங்களில் மாதோட்டத்தைப் பற்றி வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மருத நிலப் பண்புடன் நீர்வளமும் நிரம்பப் பெற்று செழிப்புடன் விளங்கியதாகவும் கோயில் கொண்டருளியிருக்கும் கேதீஸ்வரமூர்த்தியானவர் இறைஞ்சுவோர்க்கு சிறந்த ஞானத்தையும் கர்மவினையிலிருந்து விடுதலையையும் அருளினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பின் உள்ள இரு நூற்றாண்டுகளிலும் பல விதமான
முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின் றன. கி.பி. 1,028 ம் ஆண்டில் இராஜேந்திர சோழ
மன்னன் காலத்திலும் மாதோட்டம் மிகவும் அழகிய நகரமாகக் காட்சியளித்தது. பத்து சதுர
மைலில் இந்நகரம் அடங்கியிருந்தது. மிகவும் அகலமான வீதிகளும் பிரமாண்டமான மாளிகைகளும்
கூட கோபுரங்களும் நகரை எழில்பெறச் செய்தன. மருத நிலக் காட்சி மனோரம்மியமாக
இருந்தது. நகரைச் சுற்றி செந்நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், களனிகளும், வாவிகளும், - பொலிந்து விளங்கின. நெசவுத் தொழில் பிரதான கைத்தொழிலாக
இருந்தது. இன்று மதுரையும் ஸ்ரீரங்கமும் காட்சியளிப்பது போன்று அன்று கேதீச்சரமும்
காட்சியளித்தது. அங்கிருப்பது போன்று ஏழு பிரகாரங்களையும் ஒவ்வொரு
பிரகாரத்தின் நான்கு பக்கங்களிலும் கோபுரங்களையும் கொண்ட மாபெரும் கோவிலாகத்
திகழ்ந்தது. இவற்றிற்கு ஆதாரமாக கல்வெட்டுகள் உள்ளன. திருக்கேதீச்சர வரலாற்றில்
பதினாறாம் நூற்றாண்டு தொடக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு வரையுமுள்ள காலத்தை
கேதீச்சரத்தின் இருள் காலம் எனலாம். இயற்கையின் நாசகார வேலைகளிலும் கூடுதலாக போத்துக்கேயரும்
அதன் பின்பு வந்த ஒல்லாந்தரும் திருக்கேதீச்சர ஆலயத்தைக் கொள்ளையடித்து
இருந்தவிடம் தெரியாதவண்ணம் ஆலயத்தையும் தரைமட்டமாக்கி விட்டனர். சைவப் பெரியாராகிய
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் முதன் முதலாக 1872 ம் ஆண்டில் தரைமட்டம்
ஆக்கப்பட்ட தலத்தைப் புனருத்தாரணம் செய்ய முற்பட்டார்.
கிறீஸ்தவர்களின்
எதிர்ப்பினாலும் அப்போது உள்ள சைவாபிமானிகளின் ஆதரவின்மையாலும் எடுத்துக் கொண்ட
கருமத்தை நிறைவேற்றாது கைவிடப்பட்டது. சர். வில்லியம் ருவைனாம் என்னும் அரசாங்க
ஏஜண்டு அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் கச்சேரியில் 1893 டிசம்பர் 13 ல் நடைபெற்ற பகிரங்க ஏல விற்பனையின் போது 40 ஏக்கர் காட்டுப்பூமி 3,000 ரூபாவுக்கு யாழ்ப்பாணச் சைவ
மக்களால் வாங்கப்பட்டது. இந்த அரசாங்க ஏஜண்டு அவர்கள் தமது நிர்வாக அறிக்கையில்
திருக்கேதீச்சரத்தின் பண்டைய சிறப்புக்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் கனவு அவர் இறந்து 14 வருடங்களுக்குப் பின்னே
நிறைவேறியது.
தரைமட்டமாக்கப் பெற்ற கோவில் இருந்த இடம் 1894 ஜூன் 13 ல் கண்டுபிடிக்கப்பட்டது. அரசினரிடமிருந்து வாங்கிய காட்டுப் பூமியில் புராதன கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதே பழைய கோவிலிருந்த நிலையத்தைத் தேடிப்பிடிப்பதற்கு உதவியாக இருந்தது. கோவில் அத்திவாரத்துக்காக பூமியை அகழ்ந்த போது சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பு பூஜிக்கப்பட்டு வந்த சிவலிங்கம் இதுவேயாகும். புராதன கோயில் இருந்த சரியான இடம் இதுவேதான் என்று திடமாகக் கூறுவதற்கு இது தக்க ஆதாரமாக விளங்கியது.
தற்போது உள்ள கோவில் 1903 ஜூன் 28 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். புதைபொருள் ஆராய்ச்சிப் பகுதியார் கோவிலுக் கருகாமையில் சில
ஆண்டுகட்கு முன் செய்த ஆராய்ச்சியின் பேறாக அவ்விடத்தில் ஒரு பெரும் நகரம் இருந்ததென்பதை உண்மைப்படுத்த முடிந்தது.
திருக்கேதீச்சர் புனருத்தாரண சபை 1949
ம் -
ஆண்டில் நிறுவப்பட்டது. பொதுமக்களின் ஆதரவினால் கோயிற் கட்டடவேலைகள் துரிதமாக நடைபெற்று
வருகின்றன. இன்னுஞ் செய்ய வேண்டிய தொண்டுகள் பலவுள.
இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள இந்துக்கள் யாத்திரைக்குச் செல்லும் முக்கிய தலங்களுள் - இதுவும் ஒன்றாகும். எனவே இது சிறந்த யாத்திரைத்தலமாக விளங்குமாறு செய்வது சைவ மக்களின் கடமையாகும்.
மூலம்: ஸ்ரீ லங்கா ஆகத்து 1959
நன்றி: noolaham.org
படம்: தி இந்து
சேர் கந்தையா வைத்தியநாதன் (1896-1965), மேலவை உறுப்பினர், அரசியல்வாதி, அமைச்சர். இறுதிக் காலத்தில் திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து கோயில் புனருத்தாரண வேலைகளை அவரே நேரடியாக கவனித்தார். இதற்காக அவர் கோயிலுக்கு அருகாமையிலேயே "கொட்டில்" என ஒரு சிறிய வீடு கட்டி அங்கேயே பெரும்பாலும் தங்கியிருந்தார். நாட்டில் உயர்ந்த பதவி வகித்தவராக இருந்தபோதும் கோயிலில் சாதாரணமாக ஒரு வேட்டியுடனும் துண்டுடனும் தொண்டரோடு தொண்டராக பணி செய்வார்.கோவிலைப் புனரமைத்ததுடன் அதன் அருகாமையில் ஒரு சமஸ்கிருத பாடசாலை ஆரம்பித்து அந்தண சிறுவர்கள் இலவசமாக சமஸ்கிருதம், வேதம் மற்றும் ஆகமங்கள் பயில ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்திலிருந்து சுப்பிரமணிய பட்டர் என்ற சமஸ்கிருத பண்டிதரை குருவாக நியமனம் செய்தார்.
நன்றி: விக்கிப்பீடியா