நாவலரின் இந்தியப் பிரயாணங்கள்
வட்டுக்கோட்டை மு இராமலிங்கம்
பெரியோர்களுட் சிலர்
தமது வாழ்க்கை வரலாற்றைத் தாமே எழுதித் தந்துள்ளனர். சிலர் தம் வரலாற்றைத்
தம்முடன் பழகியோர் எழுதிவிடுமாறு உதவி செய்துள்ளனர். இன்னுஞ்சிலர் தம்மைப்பற்றிப்
பிற் காலத்தவர் எழுதிக்கொள்ளுமாறு குறிப்புக்கால் விட்டுச் சென்றனர். பெரும்பாலார்
தம்மைப்பற்றிப் பிற் சந்ததியார் அறிவதற்கு ஏதுவான அகச்சான்றோ புறச்சான்றோ
தராதுபோயினர். நாவலர் சம்பந்தப்பட்ட மட்டில், அவர்
தாமியற்றிய நூல்களில் தம்மைப்பற்றி அதிகம் கூறவில்லை என்பது பெரியோர் கவலை,
எனினும் கனகரத்தின உபாத்தியாயரால் எழுதப்பட்ட நாவலர் சரித்திரம் (1882)
விஷயக்கிரமம் காலக்கிரமம் வழுவாது எழுதப்பட்ட ஒரு நூல் என நாம் கொள்ளலாம்.
அன்னாருக்கு நான் தலைவணங்குகிறேன்.
பெரும்பான்மையான
சம்பவங்கள் நிகழ்ந்த காலங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவை நிகழ்ந்த
தமிழ் வருஷப் பெயர்களைத் தந்துள்ளார். அவற்றிற்கு எதிரே, ஓரங்களில்,
ஆங்கில ஆண்டுகளைக் குறித்தால் முதலிலிருந்து கடைசி வரை காலக்கிரமம்
விஷயக்கிரமம் வழுவாது அவர் தமது நூலை இயற்றியிருப்பது புலனாகும். சம்பவங்கள்
நிகழ்ந்த காலங்கள் தெரியாதவிடங்களில் வருஷப்பெயர்கள் தரப்படவில்லை. அப்படியான
சம்பவங்களுள் ஒன்று பேர்சிவல் – நாவலர் சென்னைப்பிரயாணம் (ஆறுமுகநாவலர் சரித்திரம்
ed. 11), அதுதான் நாவலரின் முதலாம் இந்தியப் பிரயாணமெனக்
கூறினாரும் அல்லர். பின் நிகழ்ந்த பிரயாணங்களை இரண்டாம், மூன்றாம்,
நாலாம், ஐந்தாம் பிரயாணங்களெனக்
குறிப்பிட்டாரும் அல்லர். ஆனால் அவருக்குப் பின் வந்த சரித்திர ஆசிரியர்களும்
கட்டுரையாளர்களும் நாவலரின் பிரயாணங்களை ஐந்தென அறுதியிட்டு அவற்றைப் பின்வருமாறு
நிரற்படுத்தித் தந்துள்ளனர். (நாவலர் பக், 11).
நாவலர் சரித்திரங்கள் கூறும் பிரயாணங்கள்
பேர்சிவல்
பாதிரியாரவர்களுடன் பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம். அச்சிடுதல் சம்பந்தமாகச்
சென்றது. காலங் குறிக்கப்படவில்லை.
சௌமிய வருஷம் ஆடி மாதம்
(1849) மாணாக்கருட் சிரேட்டராகிய நல்லூர் சதாசிவப்பிள்ளையையுங் கட்டிக்கொண்டு
அச்சியந்திரம் வாங்கச் சென்றது.
ஆனந்தவருஷம் ஐப்பசி மாதம்
(1854) நல்லூர் சதாசிவப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு சிவபூசை எழுந்தருளப்பண்ணச்
சென்றது.
காலயுத்தி வருஷம்
ஆனி மாதம் (1858) புத்தகங்கள் சிறப்பாக அச்சிடத் தனித்துச் சென்றது.
ருதிரோத்காரி வருஷம்
தை மாதம் (1884) சிதம்பரம் வித்தியாசாலை தாபிக்கவும் பிறவிஷயங்கள்
ஒப்பேற்றவும் தனித்துச் சென்றது.
பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம்
பைபிள்
மொழிபெயர்ப்பு அரங்கேற்றம் சம்பந்தமான நாவலரின் முதல் இந்தியப் பிரயாணம் 1847-ம்
ஆண்டை அடுத்ததாயிருக்கும் என்பது பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
அவர்களின் அபிப்பிராயம் (நாவலர் பக். 11) பண்டிதர்
உத்தியோகத்தைத் தான் கீலக வருஷம் புரட்டாதி மாதம் (1848) பரித்தியாகம்
பண்ணியதாகக் கூறிய நாவலர் கூற்று பண்டிதமணி அவர்களை அப்படி நினைக்கச் செய்கிறது
போலும்.
1848- ம் ஆண்டில் அப்பிரவாணம் நிகழ்ந்தது என்பர். கிறிஸ்தவ வேதாகமத்தின் வரலாறு
எழுதிய அத்தியட்சகர் வண. கலாநிதி சபாபதி குலேந்திரன் அவர்கள் (பக். 129) வேதாகம மொழிபெயர்ப்பை பேர்சிவல் பாதிரியார் சுதேச உதவியாளருடன் 1848
யூலாய் மாதத்தில் ஆரம்பித்தாலும், பாகம்பாகமாய்
அச்சிட்டுச் சென்னைக்கு அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மொழிபெயர்ப்புப் பற்றிய
ஆட்சேபனைகள் 1847-ல் யாழ்ப்பாணம் வந்தெட்டியதாலும், யாழ்ப்பாண மொழிபெயர்ப்பை மேற்பார்வையிட்டு அறிக்கைகூற 20-9-1847-ல் யாழ்ப்பாணத்தில் ஒரு கமிட்டியைச் சென்னைச் சங்கம் நியமித்ததாலும்
அத்தியட்சசர் அவர்கள் அப்பிரயாணம் 1848-ல் நிகழ்ந்ததாகக்
கருதுகின்றார் போலும்.
சரித்திரம் கூறாப் பிரயாணம்
சென்ற மாசம்
யாழ்ப்பாணக் கல்லூரி நூல்நிலையத்தில் பழைய உதயதாரகை இதழ்களைப் படித்துக்கொண்டு
போகும் போது 11-6-1846 இதழில் பின்வருஞ் செய்தியைக் கண்டு
திகைப்புற்றேன்.
யாழ்ப்பாணம்
இலக்கண இலக்கியங்களில்
மகா நிபுணர்களாகிய கனம்பொருந்திய மகாஸ்ரீ அருளம்பல முதலியார் குமாரர் அம்பலவாண முதலியாகும் மகாஸ்ரீ ஆறுமுகப் பின்ளை
அவர்களுஞ் சென்னை மாநகரத்திலுள்ள வித்தியாசாலைகளைப் பார்க்கவும் வித்துவான்களைக்
காணவும் இந்த மாதம் 8-ந் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து
பிரயாணப்பட்டார்கள்.
இப்படிக்கு
அவர் நேசன்
பைபிள்
மொழிபெயர்ப்பு அரங்கேற்றத்தோடு சம்பத்தப்பட்ட பிரயாணமோ இது, அல்லது
நாவலர் சரித்திரத்தில் இதுவரை வெளிவராத ஓர் இந்தியப்பிரயாணமோ இது என்பதே என்
வியப்பிற்குக் காரணம்.
பைபிள் மொழிபெயர்க்க
ஆரம்பிப்பதற்கு (ஆடி 1846) ஒரு மாசத்திற்குமுன் (ஆனி 1846) இப்பிரயாணம்
நிகழ்ந்திருப்பதால் நாவலர் சரித்திரத்தில் இதுவரை வெளிவராத ஓர் இந்தியப் பிரயாணம்
இஃது எனக் கொள்ளல் வேண்டும்.
அம்பலவாண முதலியார்
மேற்கூறிய
பிரயாணத்தோடு சம்பந்தப்பட்ட அருளம்பல முதலியரர் குமாரர் அம்பலவாண முதலியார்
யாராயிருக்கலாமென ஆராய்ந்தகாலை ஒர் இடியப்பச் சிக்கலுள் அகப்பட்டேன், அதன்
விளைவே 'ஈழநாடு’ (29-10-1970) இதழில் நான் எழுதிய கட்டுரையாகும்.
அருளம்பல முதலியார்
என்னும் பெயருடன் இருவர் 1800-ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் யாழ்ப்பாணத்தில்
வாழ்ந்திருக்கின்றனர். ஒருவர் தென்கோவை பெரிய அருளம்பல முதலியார், மற்றவர் உடுப்பிட்டி அம்பலவாண முதலியார் குமாரர் அருளம்பல முதலியார்.
தென்கோவை பெரிய அருளம்பல
முதலியார் குமாரர் பெயர் அம்பலவாண பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தெல்லிப்பழையில் வாழ்ந்தவர். மூத்தப்பு என்னும் மறுநாமம் உடையவர். அவர் வாழ்க்கை
வரலாறு சகல தமிழ்ப்புலவர் சரித்திரங்களிலும் கூறப்படுகிறது.
உடுப்பிட்டி, அருளம்பல
முதலியார் குமாரர் பெயர் அம்பலவாண முதலியார். இவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில்
கோப்பாயில் வாழ்ந்தவர். சின்ன அம்பலவாணர் என்னும் மறு நாமம் உடையவர்; (இவருடைய மைத்துனர் நீதிவான் சுப்பிரமணியம் அம்பலவாணர் c. C. S. பெரிய அம்பலவாணர் என அழைக்கப்பட் டார்). தமிழுடன் ஆங்கிலமுங் கற்றவர்.
இவர் வாழ்க்கை வரலாறு நாவலர் பிரபந்தத்திரட்டு (1954) முதற்பாகம்
(பக் 165-166) 'வெகுசனத் துரோகம்' என்னும்
பகுதியிலும் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு (பக். 81 -
98) மயில்வாகன வம்ச வைபவம்' என்னும்
பகுதியிலும், இவரது வம்சாவளி யாழ்ப்பாண வைபவ கௌமுதி (பக். 249-250)
இலும், உதயதாரகை இதழ்களிலும் கூறப்படுகிறது.
அம்பலவாண பண்டிதரின்
தௌகித்திரி (மகளின் மகள்) அம்பலவாண முதலியாரின் மகன் பிறக்டர் அருளம்பல முதலியாரை 1850-ல்
மணந்ததால் இரு குடும்பங்களுக்குமிடையே தொடர்பும் ஏற்பட்டது.
நாவலரின் மேற்கூறிய
பிரயாணத்தோடு சம்பந்தப்பட்டவர் அம்பலவாண பண்டிதரல்லர். அம்பலவாண முதலியாரே என்பது
தெளிவு.
இச் சிக்கலுள் நான்
அகப்பட்டுத் தவித்தபோது அச்சுக்கலை அறுத்துத்தந்த பெருமை உடுப்பிட்டி ஆசிரியர்
திரு. கா.
நீலகண்டன் அவர்களையும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரவர்களின்
புதல்வர்கள் இருவரையும் சாரும்.
நாவலரும் அம்பலவாண
முதலியாரும் ஒன்றுகூடிய காரணத்தை இனி ஆராய்வோம்.
கூட்டுப் பிரயாணம்
உடுப்பிட்டி, அருளம்பல
முதலியார் 1800-ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவரென
முன்னர் கூறினோம். (வல்லிபட்டி, குமாரசுவாமி முதலியார்
இயற்றிய அருளம்பலக்கோவையின் பாட்டுடைத்
தலைவன் அவரே போலும்-ஈழகேசரி 16-8-1936-ம் நூலினை நாம்
பார்க்கதில்லை).
நாவலர்
காலத்திற்குச் சிறிது முன்னர் அருளம்பல முதலியார் உடுப்பிட்டியில் ஒரு
பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். தமிழ், ஆங்கிலம், மருத்துவம், சோதிடம். சங்கீதம் யாவும் இலவசமாகக்
கற்பிக்கப்பட்டன. அருளம்பல முதலியார் இறந்த பின்பு அவர் குமாரர் அம்பலவாண
முதலியார் அப்பள்ளிக்கூடத்தைப் பரிபாலித்து வந்தார்.
1845-ம்
ஆண்டு பேர்சிவல்-நாவலர் உறவு மெலிவுற்றதெனப் பாவலர் சரித்திர தீபகமும் (பக். 32)
உதயதாரகையும் கூறுவன. 1846-ம் ஆண்டு தை மாதம்
முதலாக நாவலர் பின்ளைகளைச் சேர்த்துக் கற்பிக்கத் தொடங்கினார். யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டு உழைத்த அம்பலவாண முதலியாரும்
ஆறுமுக நாவலரும் தாய்நாட்டிலுள்ள வித்தியாசாலைகளைப் பார்க்கவும் வித்துவான்களைக்
காணவும் அவ்வாண்டு ஆனி மாதத்தில் மேற்கூறிய இந்தியப் பிரயாணத்தை மேற்கொண்டனர்
போலும்.
1847-ம்
ஆண்டு மார்கழி மாதம் 31-ந் திகதி வண்ணார் பண்ணைச் சிவன்
கோவிலில் நாவலர் நிகழ்த்திய கன்னிப் பிரசங்க வைபவத்துக்கு இவ் அம்பலவாண முதலியார்
அவர்களே தலைமைதாங்கினரெனவுங் கூறப்படுகிறது.
முடிவுரை
* 1848-ம் வருஷ முற்பகுதியில்...... ஸ்போல்டிங் ஐயரும் பேர்சிவல் ஐயரும்
சென்னையில் நியமிக்கப்பட்டிருந்த உப கமிட்டிக்கு யாழ்ப்பாணத் திருப்புதலைச்
சமர்ப்பிக்குமாறு போயினர். அவர்களுடன் நாவலரும் போனதாகக் காணப்படுகிறது' என்பது அத்தியட்சகர் கூற்று (பக். 129).
* சென்னையில்
நடந்த வேதாகம மொழிபெயர்ப்புக்கு 1848-ம் வருஷம் ஸ்போல்டிங்
பண்டிதருடன் சந்திரசேகர பண்டிதரும் நாமும் போயிருந்தோம்' என்பது
ஆணலட் சதாசிவம் பிள்ளையவர்களின் கூற்று (பா. ச. தீ. ப. 125).
இவ்விரு
கூற்றுக்களும் பர்சிவல் - நாவலர் சென்னைப் பிரயாணம் 1848-ம்
ஆண்டில் நிகழ்ந்த்தென ஐயந்திரிபற அறுதியிட்டு நிலைநாட்டப் போதுமானவை.
1845-ல்
நெலிவுற்ற பெர்சிவல்-நாவலர் உறவு பைபிள் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம் சம்பந்தமாக 1848-ல் வலுவுற்று சென்னையிலிருந்து திரும்பிவந்ததும் துண்டிக்கப்பட்டது
போலும்.
நாவலரின் பண்ணைச்
சிவன் கோயிற் கன்னிப் பிரசங்கம் (31-12-1847) தொடக்கம்
மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயில் பிரசங்கம் (13-3-1848) வரை நாவலர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்ததற்குப் போதிய ஆதாரங்கள் உள.
1848 ஆடியில்
நிகழ்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவிலே நாவலரின் பிரசங்கத்தைக்
கண்டித்து ஒரு பிரசங்கம் செய்யப்படுமென விளம்பரமொன்று வெளிவந்ததெனினும்
அப்பிரசங்கம் நிகழவில்லை. ஆவணியில் வண்ணார்பண்ணை வித்தியாசாலை தாபிக்கப்பட்டது.
புரட்டாதியில் பண்டித உத்தியோகம் பரித்தியாகஞ் செய்யப்பட்டது.
ஆகவே பேர்சிவல்-நாவலர்
இந்தியப் பிரயாணம் 1848 பங்குனிக்கும் ஆடிக்குமிடையில் நிகழ்ந்திருத்தல்
வேண்டும். 1848-ம் வருஷ முற்பகுதியில் என்னும்
அத்தியட்சகரின் கூற்றுடன் இது பொருத்தமுடைத்தாதல் காண்க.
வேதாகம
மொழிபெயர்ப்புச் சம்பந்தமாக சென்னை சென்றவர்களின் நாமாவலியில் சந்திரசேகர பண்டிதரவர்களையும்
ஆணல்ட் சதாசிவம் பிள்ளையவர்களையும் அத்தியட்சகரவர்கள் தமது நூலின் இரண்டாம்
பதிப்பில் சேர்த்துக் கொள்வார்களாக.
கனகரத்தின உபாத்தியாயரின் கைவண்ணம்
கனகரத்தின
உபாத்தியாயரின் காலக்கிரமம் விஷயக் கிரமம் பற்றி முன்னர் கூறினோம். இரண்டொரு
எடுத்துக்காட்டுக்கள் வருமாறு:
(1) கந்தப்பிள்ளையின்
மரணம்
கந்தப்பிள்ளை
(நாவலரின் தந்தை) 1842-ம் ஆண்டு ஆனி மாதம் 2-ந் தேதி
புதன்கிழமை தமது 76-ம் பிராயத்திலே இறந்தார். அவர் பாடத் தொடங்கிவிட்டிருந்த இரத்தினவல்லி விலாசத்தை நாவலர் பாடி
முடித்தார் எனப் பாவலர் சரித்திர தீபகம் (பக். 75) கூறுகிறது. தந்தையார், இறக்கும்போது நாவலருக்கு (1822-1842)
வயது இருபது. பேர்சிவல் பாதிரியாருக்குத்
தமிழ்ப்பண்டிதனாயிருந்த காலம் அது.
தந்தை விட்ட குறையைத் தனயன் பூர்த்திசெய்தான்.
“(நாவலர்க்கு) ஒன்பதாம் வயசாகும்போது. ஆனித் திருமஞ்சன உற்சவ
காலத்தில் இவருடய தந்தையார், ஒரு நாடகம்
பாடிக்கொண்டிருந்த சமயத்தில் கையில் எழுத்தாணியும் சட்டமும் பிடித்தபடியே சடுதியாக
சிவபகமடைந்து விட்டார். அந்த நாடகத்தின் குறையை அப்போதே இவர் பாடி
முடித்தார்.”
என நாவலரின்
தமையனார் புதல்வர் த. கைலாசபிள்ளையவர்கள் தமது ஆறுமுக நாவலர்
சரித்திரத்தில் (பக் 6) கூறக் காண்கிறோம். தகப்பனார்
இறக்கும்போது நாவருக்கு வயது ஒன்பது என கனகரத்தின உபாத்தியாயரும் (1882), பாவலர் சரித்திர தீபகமும் (1886) கூறாததைக் கைலாசபிள்ளையவர்கன் (1916) எங்கிருந்து பெற்றனரோ
தெரியவில்லை. நாவலரின் தகப்பனார் கந்தப்பிள்ளை இறந்த
தினமெனப் பாவலர் சரித்திர தீபகம் குறிப்பிடும் ஆண்டு,
மாதம், தேதி, வாரத்தை மறுத்துரைத்தாரும் அல்லர்.
இவரைப் பின்பற்றிச்
சுத்தானத்த அடிகளாரும் (பக் 23) பண்டிதை திருமதி பொன். பாக்கியமவர்களும் (ப. 2) இது
விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கக் காண்கிறோம்.
பம்பாயிலிருந்து
வெளிவரும் 'பவன் சஞ்சிகை'யின் {Bhavan's
Journal 10-8-1969) விசேடமலரில் கொழும்பு,
திரு. ம. சி சிதம்பரப்பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இந்து சாதனம் (20-11-1970) இதழில் தரப்பட்டுள்ளது.
“பிறக்கும்போதே
மேதாவிலாசம் உடையவராகையினால் இவரது தந்தையார் பாடி அரைவாசியில் விட்டுப்போன ஒரு
நாடகத்தைத் தமது ஏழாம் வயதில் பூர்த்திசெய்தார்."
என மேலும் வயது
இரண்டு குறைக்கப்பட்டிருத்தல் காண்க.
ஆதாரமில்லாக்
கூற்றுக்களை நுழைப்பது உண்மைச் சரித்திரத்துக்கு ஊறுவிளைப்பதாகும்.
(2) சின்னப்பபிள்ளை
நாவலருடன்
ஆங்கிலங்கற்றவர்களுள் இருவராகிய மு. தில்லைநாதபிள்ளையும், சு.
சின்னப்பபிள்ளையும் சைவ சமயத்தின் உண்மையை அறியாதபடியினாலே, கிறீஸ்து
மதத்திலே பிரவேசித்தற்கு உடன்பட்டு, இன்ன கிழமை ஞான ஸ்நானம் பெறுவோம் என்று பேர்சிவல் பாதிரியாருக்கு வாக்குக்கொடுத்திருந்தனர்.
முந்தியவர் பேர்சிவலுடைய ஆங்கில வித்தியாசாலை உபாத்தியாயர். பிந்தியவர் உபாத்தியாயர் உத்தியோகத்தை எதிர்பார்த்து
நின்றவர். இவ்விருவருடைய சமாசாரங்களைக் கேள்வியுற்ற நாவலர் சைவசமயத்தினது உயர்வையும் கிறீஸ்து சமயத்தினது தாழ்வையும் போதித்து அவர்களை
ஞானஸ்நானம் பெறாது செய்தனர்.
ஞானஸ்நானம் பெறாமையினால்
தில்லைநாதபிள்ளை உபாத்தியாயர் உத்தியோகத்தினின்றும்
நீக்கப்பட்டார். சின்னப்பபிள்ளை உபாத்தியாயர் உத்தியோத்தைப் பெறாது விட்டு வியாபார முயற்சியில்
ஊக்கங்கொண்டு கொழும்புக்குப்போயினர். அங்கே அக்காலத்திலே சிவில் உத்தியோகத்தவருக்குள் அதி கெளரவமாயிருந்த மோர்கன் துரையினுடைய சகாயத்தினாலே சுப்பிரீங் கோட்டுத்தரணி
உத்தியோகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் வந்து அதிசமர்த்தரெனப்
பெயர் பெற்றுச் சிறப்புற்று வாழ்ந்து, சிலகாலஞ்
சென்றபின் இறந்தனர் என்பது கனகரத்தின உபாத்தியாயரின் கூற்று.
(பக். 13-15)
இது விவரம்
பின்வரும் யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக்கும்மிப்பாடல்களால் (பக். 22) வலுப்பெறுதல்
காண்க.
“சின்னப்பா
வென்பவர் நியாயம் படிக்கச்
சிறந்த கொழும்பினின்
மோர்க்கனி டஞ்சென்று
நன்னய மாகப்
படித்துத் தரணியில்
நல்லவ ராய்வந்தார்
ஞானப் பெண்ணே.
எத்தனை பேர்தான்
தரணிக ளானாலு
மிவரைத்தான் சோதனை
பண்ணி கொடுத்து
அத்தனை பேரிலும்
நியாய வுணர்ச்சி
பதிக நுணுக்கமாம்
ஞானப் பெண்ணே.”
இது விஷயத்தை
விளக்கக் குறைவினால் சுத்தானந்த அடிகள் (பக். 45) பின்வருமாறு
கூறுகின்றார்.
“சின்னப்பாபிள்ளை
......கொழும்பு சுப்பிரிம்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்)
நியாயதுரந்தரராயிருந்தார்.”
சேர் றிச்சாட் மோர்கன் (Sir Richard F. Morgan) அவர்கள் முதலில் இராணி
அப்புக்காத்தாகவும் பின்னர் நீதியரசராகவும் இலங்கையில் அக்காலத்தில் கடமைபுரிந்த்துவும்,
குருகுல முறையில் சட்டக்கல்வி
பயிற்றப்பட்டதுவும், தரணிமாரில்லாமையால் தமிழ்கற்ற
சிலருக்குப் பயிற்சி அளித்துத் தரணிப்பட்டங்கட்டியதுவும் ஈண்டு நோக்கத்தக்கன.
(3) மத்தியஸ்தர்
மகாலிங்கஐயர்
பேர்சிவல்
பாதிரியாரும் ஆறுமுக நாவலரும் யாழ்ப்பாண மொழிபெயர்ப்பை அரங்கேற்றச் சென்னைக்குச்
சென்ற போது அங்குள்ள மிஷனரிமார்,
பாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி குறைவானதென்றும், செந்தமிழ் பேசுவோர் அரியர் என்றும், யாழ்ப்பாணத் தமிழ்ப் பண்டிதராற் திருத்தப்பட்ட பைபிள்
தமிழகத்துப் பண்டிதர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவர்கள்
பிழையில்லையென்றும், வசன நடை நன்றாயிருக்கிறதென்றும்
சொல்வார்களாயின் அச்சிற் பதிப்பிக்கலாமென்றும் நிபந்தனையிட்டனர். அதற்கு நாவலர்
இணங்கவே, அக்காலத்திற் சென்னையிற் சிறந்த வித்துவானாயிருந்த
மழவை மகாலிங்க ஐயரிடம் மொழிபெயர்ப்பு பார்வைக்கு ஒப்படைக்கப்பட்டது.
“மகாலிங்க
ஐயர் பைபில் முற்றும் வாசித்து, அதிலே
பிழையில்லையென்றும், வசன நடை நன்றாயிருக்கின்றதென்றும்,
இந்தப் பிரசாரம் அச்சிடுதலே தகுதியென்றும் அவர்களுக்குச் சொல்லி. யாழ்ப்பாணத்துத் தமிழையும்
நன்கு பாராட்டி வியந்தனர்''
என்பது கனக ரத்தின
உபாத்தியாயரின் கூற்று (பக். 11-13).
யாழ்ப்பாணத்
திருப்புதலைக் கலைஞர் எவ்வளவு வியந்தபோதிலும், அதை வாங்கி உப்யோகிக்கவேண்டியவர்களுள் வேறு அபிப்பிரவரம் நிலவியது.
தஞ்சாவூர், திருநெல்வேலியிலுன்ள்லவர்களே அக்காலம் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களுள் நாலில்
மூன்று பங்கானவர்கள். அப்பாகங்களிலிருத்த மிஷனரிமார் ஏகமனதாய் யாழ்ப்பாணத் திருப்புதலை
ஏற்க மறுத்தனர். ஆகவே கிறீஸ்துவர்களும் மறுத்தனர். இத்துடன் அத்திருப்புதலின் கதி தீர்க்கப்பட்ட என்பது
அத்தியட்சர் கூற்று (பக். 140).
யாழ்ப்பாண
மொழிபெயர்ப்பு அரங்கேற்றம் பெற்றும் அங்கீகாரம் பெறவில்லை
என்பது அத்தியட்சகர் கருத்து.
“நாவலர்)
பேர்சிவல் என்னும் பாதிரியாருக்குப்
பண்டிதராயிருந்து பைபிள் மொழிபெயர்க்கும் காலத்தில், அந்தப் பைபிள் சென்னபட்டணத்திலும் மொழி
பெயர்க்கப்பட்டுவந்தது”, என்பது கைலாசபிள்ளையவர்களின்
கூற்று (பக் 12).
இரு
மொழிபெயர்ப்புக்கள் ஏககாலத்தில் இருந்தனவென க் கனகரத்தின உபாத்தியாயர் கூறாததை கைலாசபின்ளையர்கள்
எங்கிருந்து பெற்றனரோ தெரியவில்லை.
யாழ்ப்பாண
மொழிபெயர்ப்பு 1846-ல் ஆரம்பிக்கப் பெற்று 1848-ல் முற்றுப்பெற்று, 1850-ல்லச்சேற்றப் பெற்றதும் சென்னை மொழிபெயர்ப்பு 1858-ல் ஆரம்பிக்கப் பெற்று 1869-ல் முற்றப்பெற்று 1871-ல் அச்சேற்றம் பெற்றதும் ஈண்டு நோக்கத்தக்கன. ஒப்புநோக்கிப்
பார்க்க இரு மொழிபெயர்ப்புக்கள் ஏககாலத்தில் இருக்கவில்லை.
அண்மைக் காலத்தில்
வெளிவந்துள்ள நூல்களிலும் கட்டுரைகளிலும் இரு மொழியெர்ப்புக்கள் ஏககாலத்தில்
இருந்ததெனச் சிருஷ்டிக்கப்பட்டிருத்தல் கவலைக்கு
இடமாகின்றது.
(4) நல்லூர்க்
கந்தசாமி கோயில்
“நல்லூர்க் கந்தசாமி கோயில் அதிகாரியாகிய இரகுநாத மாப்பாணருக்கு, பிலவங்க வருஷம்
ஆடி மாதம் (1847) ஒரு
மகோற்சவ தினத்திலே, அக்கோயில் சிவாகமத்துக்கு
விரோதமாக கட்டப்பட்டிருத்தல் தகாதென்றும், சிவதீக்ஷையில்லாத
பிராமணர் பூசை செய்தல் தகாதென்றும் போதித்தார்" என்பது கனகரத்தின உபாத்தியாயர் கூற்று. (ப. 16)
உதயதாரகை (13-8-1846) இதழில் வெளிவந்த பின்வருங் கடிதத்தால் இது வலுப்பெறுதல் காண்க.
விளைவேலியில் நெல்லு
நல்லூரில் திருவிழா
நல்லூர்
கந்தசாமி கோவில் உண்டான நாள் முதல் வருஷத்திற் கொஞ்ச நாளைக்குத்
திருவிழா நடந்து வருகிறதுண்டு, அதில் யாகமென்னும்
சந்நிதியில் ரட்சையென்னும் கறுப்புத் திலகம் சுவாமிக்குச் சாத்திவருவதும், அந்த வழமையைச்
சாத்திரத்திற் சொல்லவில்லை யென்று மறுதலித்து இந்த வருஷம்தான் தானே திருவிழாக்
குருக்களாக வந்து ரட்சையென்னும் திலகம் இதுவரைக்கும் வழங்கிவந்தது தவறென்று நினைத்து அதைத் தள்ளிப்போட்டார். சாத்திரங்களையறியாத தாங்கள் இந்த
நடப்பைப்பற்றி எப்படி எண்ணவேண்டும். முன் நடத்திவந்த
குருக்கள்மாரோ இப்போ நடத்திவரும் வேதக் குட்டிக்குருவினது
செய்கையோ எது சரி யென்று
நினைக்கவேண்டும். சகல சாத்திரங்களையும் கற்றறிந்த
பெரியவர்களே எது சரியென்று சொல்லுங்கள். யாகத்திலே ரட்சை கொடுக்கிறது சாத்திரமல்ல வென்று சொல்லுகிறவர் வேலாயுதம் வைத்துப் பத்து நாளைக்கு அதிகம் திருவிழாப்
பண்ணவேண்டிய சாத்திரமென்ன? திருவிழாவை
வழமைப்படி இருபத்து மூன்று நாளைக்கு நடத்திவருகிறார். யாகத்தில் வழமையாய் நடப்பித்து வந்த ரட்சையென்னும் திலகத்தைச் சாத்திரத்தில் இல்லையென்று தள்ளிப்போட்டதன் காரியமென்ன,
இப்படியிருப்பதினால் எது சரியென் அறிய விரும்புகிறேன்.
இது
கோப்பாயிலிருக்கும் மயில்வாகனம் சரவணமுத்து எழுதித் தந்தபடி சுப்பர் கந்தப்பன்
அச்சுப் போடும்படி கொடுத்தது.
கந்தப்பன்
அக்காலத்தில் (1846) யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் பற்றி நிலவிய அபிப்பிராயம் இது போலும். இதுவும் இது போன்றவையுமே நாவலருக்கும் நல்லூர் கந்தசாமி கோயிலாருக்குமிடையே நடந்த சொற்போர்களுக்குக்
காரணமாம்.
எழுதியவர்: வெள்ளவத்தை திரு. மு. இராமலிங்கம்
"ஈழநாடு" வாரமலர் 24-2-1971 இல் வெளியானதன் மறுபிரசுரம்
மூலம்:நாவலரின் இந்தியப் பிரயாணங்கள் (நூல்)
மு. இராமலிங்கம்
(9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து
எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல்
ஆய்வாளரும் ஆவார். முருகரம்மான் என்ற பெயரிலும் எழுதியவர். மக்கள் கவிமணி
என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இவரைப் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா கட்டுரையைப் படியுங்கள்.