மூன்று கண்கள்
- பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை -
கடவுள் இரண்டு கண்களை மனிதர்களுக்கு அருளியிருக்கின்றார். "எண்சாணுடம்புக்கும் தலையே பிரதானம்.'' இப்படிப்பட்ட தலையிலும் இந்த இரண்டு கண்களுமே மிகப் பிரதானமானவை, கண்ணில்லையாயின் மனிதப் பிறப்பால் பயனேயில்லை. மனிதர்களுக்குள்ளே இரு கண்ணும் பொட்டையானவர்களும், ஒரு கண் பொட்டையானவர்களும், கண்ணிற் பலவகை ஊறுகளை உடையவர்களுமாகப் பலர் இருக்கின்றார்கள். அவரெல்லாம் மனிதப்பிறப்பால் அடையக் கூடிய பலனை இழந்தவர்களும், அப்பயனில் குறைந்தவர்களுமேயாவர்.
மனிதர்களுக்குப் போலத் தெய்வங்களுக்கும் கண்கள் உண்டு. தெய்வங்களுக்கு மூன்று கண்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், மனிதர்களுடைய கண்களுக்குப்போலத் தெய்வங்களுடைய கண்களுக்கு ஊறுகள் வருவதில்லை. தெய்வங்களுக்குள் கண் பொட்டைான தெய்வங்களும் இல்லை. தெய்வங்களுடைய கண்கள் மிகப் பிரகாசமானவை; எத்துணைக் காலங்களிலும் ஒளி மழுங்காதவை; வெகு வெகு தொலையிலுள்ள பொருள்களையும் தரிசிக்கக் கூடியவை. மூக்குக் கண்ணாடி தரிக்கும் வழக்கம் தெய்வங்களுக்கில்லை.
மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் போலக் கல்லூரிகளுக்கும் கண்கள் உண்டு, யாழ்ப்பாணத்திலே ஆங்கில கல்லூரிகள் பல இருக்கின்றன. அக் கல்லூரிகள் ஒரு சிலவற்றிற்குக் கண்களேயில்லை, கண்ணடையாளங் கூட இல்லை. ஒரு சில கல்லூரிகள் ஒரு கண் பொட்டையானவைகள். கருவிழியில் பூப்படர்தல் முதலிய ஊறுகளடைந்து, பார்வையிழந்த கல்லூரிகளும் சில இருக்கின்றன. சுத்தமான இரு கண்கண் படைத்த ஒரு மனிதக் கல்லூரியைக் காண்டல் அரிது. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான கல்லூரிகளின் இயல்பு இங்ஙனமாக, வட்டுக்கோட்டையிலுள்ள ஆங்கில கல்லூரிக்கு மாத்திரம் சுத்தமான மூன்று கண்கள் இருக்கின்றன. அக் கல்லூரி கல்லூரிகளுக்குள் தெய்வத்தன்மை படைத்தது. அது ஒரு தெய்வக் கல்லூரி. அக் கல்லூரியின் மூன்று கண்களும் மிகப் பிரகாசமானவை. நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகள் கழிந்தும் ஒளி மழுங்காதவை; பொய்ம்மை மெய்ம்மைகளின் பேதங்களை உள்ளபடி காணும் சக்திவாய்ந்தவை, காட்ட முயன்றவை.
அந்த மூன்று கண்களுள், முதலாம் கண்:
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள்:-
இவர்கள் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளையின் குமாரர்; 1832ம் ஆண்டு செப்டம்பர் 12 ம் தேதி பிறந்தவர்கள். 1824 ம் ஆண்டில் அமெரிக்கமிஷன் சங்கத்தாரால் வட்டுக்கோட்டையில் செமினரி (சர்வசாஸ்திரசாலை) என வழங்கும் ஒரு ஆங்கில கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. அங்கே உயர்தர சாஸ்திரங்களெல்லாம் தக்க ஆசிரியர்களால் நன்கு கற்பிக்கப்பட்டன. பிள்ளையவர்கள் அக் கல்லூரியில் 1844 ம் ஆண்டு அக்டோடர் மாதம் தமது 12 ம் வயசிற் சேர்ந்து, இருபதாம் வயசு வரை (1852 ம் ஆண்டு செப்டம்பர்) உயர்தர கல்விகளை நன்கு பயின்று அவற்றில் முதன்மையடைந்து, பரிசுகளும் பெற்று வெகு கீர்த்தியடைந்தார்கள். இவர்கள் இளமையில் தமிழ்ப்பாஷைக்குரிய கருவி நூல்களைத் தமது தந்தையாரிடத்தும், மேற்படி கல்லூரியிலும், உயர்தர இலக்கண இலக்கியங்களை, அக்காலத்துப் பிரபல வித்துவாம்சரும் கவிதாசக்தி கைவந்தவருமான சுன்னாகம் முத்துக்குமார கவிராஜ சேகரரிடத்தும் முறைப்படி கற்றுக்கொண்டார்கள். இவர்களுக்குச் சமஸ்கிருதத்திலும் போதிய விற்பத்தியுண்டு.
பிள்ளை அவர்கள் மேலும் ஆங்கிலக் கல்வியில் அபிவிருத்தியடைய விரும்பி 1857 ம் ஆண்டில் முதன்முதல் சென்னைச் சர்வகலா சங்கத்தாரால் நடத்தப்பட்ட பிரவேச பரீட்சையிலும், அடுத்த நான்கு மாசங்களுள் அக்கலாசங்கத்தாரால் நடாத்தப்பட்ட பி. ஏ. பரீட்சையிலும் சித்தியடைந்தார்கள். சென்னைச் சர்வகலாசங்கத்தாரால் முதன்முதல் நடாத்தப்பட்ட பி. ஏ. பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் யாழ்ப்பாணத்தவர் இருவரே. அவர்களுள் ஒருவர் பிள்ளை அவர்கள். 1871 ம் ஆண்டில் நியாயசாஸ்திர (பி. எல்) பரீட்சையிலும் சித்தியடைந்தார்கள்.
பிள்ளை அவர்கள் முதலில் (1853ம் ஆண்டளவில்) கோப்பாய்ப் போதன சக்தி வித்தியாசாலையில் ஒர் ஆசிரியராயும், அதன்பிறகு சென்னையில் பார்சிவல் பாதிரியார் நடாத்திவந்த "தினவர்த்தமானி" என்னுந் தமிழ்ப் பத்திரிகைக்குப் பத்திரிகாசிரியராயும், அதன்மேல் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராயும் 1857 ம் ஆண்டளவில் கள்ளிக்கோட்டையில் இராசாங்க வித்தியாசாலையில் உதவி ஆசிரியராயும், பின்பு சென்னை இராசாங்க வரவு செலவுக் கணக்குச் சாலைத் தலைவராயும், 1871 ம் ஆண்டளவில் நியாயவாதியாயும், 1887 ம் ஆண்டு தொடக்கம் புதுக்கோட்டைச் சமஸ்தான மகாமன்றத்து நீதிபதியாயும் உத்தியோகக் கடமை பார்த்திருக்கின்றர்கள் அன்றி, சென்னைச் சர்வகலாசங்கத்திலும், நியாயசாஸ்திர பரிபாலன சபையிலும் அங்கத்தவராயும், சர்வகலாசாலையாரின் தமிழ்ப் பரீட்சா சங்கத்து அக்கிராசனாதிபதியாயும் இருந்திருக்கின்றார்கள்.
பிள்ளை அவர்களுடைய மனம் பக்தர்களுடைய மனம் போல எந்தெந்தத் துறையிலே எந்தெந்த தொழிலைச் செய்தாலும், அதில் தோயாது மற்றுமொரு துறையில் படிந்து, அதனை இறுகப் பற்றிக்கொண்டிருந்தது. பழைய தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளிலிருந்து செல்லுக்கிரையாகாமல், இராம பாணங்களுக்கு இலக்காகாமல் அவற்றை அச்சுவாகனமேற்றித் தமிழணங்கிற்கு ஒர் அலங்கார விழா எடுக்கவேண்டும் என்பதுதான் அந்தத் துறை. இதனால் பிள்ளையவர்கள் பாரிய குடும்பஸ்தர்களாயிருந்தும், பெரிய உத்தியோகங்கள் வகித்தவர்களாயிருந்தும், அரிதாகக் கிடைக்கும் ஒய்வுநேரங்களைப் பழைய ஏட்டுப் பிரதிகள் தேடுவதிலும், அவற்றைப் பரிசோதனை செய்வதிலுமே கழித்துவந்தார்கள். இவ்விஷயத்தில் அவர்கள்பட்ட கஷ்டங்கள் சொல்லுந்தரமல்ல. சில இடங்களிலே தொடவும் முடியாமல் பழுதடைந்து கறையான் புற்றினால் மூடுண்டு கிடந்த அரிய பழைய ஏட்டுப் பிரதிகளை பிள்ளை அவர்கள் முகத்தில் ஒழுகி ஓடிய கண்ணீர்ப் பிரவாகமே சுத்தஞ்செய்ததாகச் சொல்லுவார்கள்.
அவர்கள் காலத்தில் சங்கத்துச் சான்றோர் நூல்களைப் படிக்கிறவர்கள் இல்லை. அவற்றின் பெயர்களைத் தானும் பிழையறச் சொல்லுகிறவர்கள் கூட இல்லை. அது ஒரு தல புராண காலம். இப்படிப்பட்ட காலத்தில் பிள்ளை அவர்களின் அரிய பெரிய முயற்சியின் பயனாக 1653 ம் ஆண்டளவில் இளமைப் பருவத்திலே நீதிநெறி விளக்க உரையும், 1881 ம் ஆண்டில் வீரசோழியமும், அதனை அடுத்துப்போலும் இறையனார்களவியலும், 1883 ம் ஆண்டில் திருத்தணிகைப் புராணமும் 1885 ம் ஆண்டில் தொல்காப்பியப் பொருளதிகாரமும், 1887 ம் ஆண்டில் கலித்தொகையும், 1889 ம் ஆண்டில் இலக்கணவிளக்கமும், சூளாமணியும், 1891 ம் ஆண்டில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியமும், அதன்பிறகு போலும் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியமும் அச்சுவாகனமேறின. மடாதிபதிகள், வித்துவான்கள், பிரபுக்களெல்லாம் தமிழணங்கின் விழாவை எதிர்கொண்டு வாழ்த்தி வணங்கினர். பிள்ளை அவர்களின் கீர்த்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது.
தொல்காப்பியம் எழுத்ததிகார உரை முன்னமே மழவை மகாலிங்கையர் அவர்களால் அச்சிடப்பட்டது. தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்னும் இருபகுதிகளுமே மிகப் பிரதானமானவை. சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் செய்தவுரை மிகக் காடிந்யமானது. அக்காலத்து வித்துவான்கள், தொல்காப்பியத்தின் தொன்மையையும் அருமை பெருமைகளையும் உணர்ந்திருந்தபோதும் ஈண்டுக் குறிப்பிட்ட பகுதிகளை அச்சிடுதற்கு மிகவும் அஞ்சியிருந்தார்கள். பிள்ளை அவர்களே துணிந்து அப்பகுதிகளை இன்றும் என்றும் உயிரோடு நிலைக்கச் செய்தவர்கள். சொல்லதிகாரம் சேனவரையார் உரை நாவலர் அவர்களைக் கொண்டு பரிசோதித்துப் பிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டன. தொல்காப்பியத்தில் பிள்ளை அவர்கள் கையிடாதிருந்தால் அதன் நிலை அகத்தியத்தின் நிலையை அடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பிள்ளை அவர்கள் அச்சிட்ட நூல்களுள் சில மிக அருகித் தமிழ்நாடு முழுவதிலும் இரண்டொரு பிரதிமாத்திரையாயே இருந்ததுமுண்டு. வீரசோழியப் பதிப்புக்கு ஒரு பிரதி மாத்திரந்தான் ஒருவாறு உதவியதாகப் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அக்கால வித்துவான்களுள் வீரசோழியப் பிரதியைக் கண்டவர்களைக் காணுதலுமரிது. அப்படிப்பட்ட காலத்தில் அந்நூலை உருப்படுத்தி வெளியிட்ட அருமையை வியந்து, வடதேச வித்துனொருவர்,
"இறந்த பூம் பாவை யெலும்பினேச்சம் பந்தர்என்றிங்ஙனம் பாராட்டியிருக்கின்றார்.
சிறந்த பெண்ணாச் செய்தசிறப்பார்-திறம்பலசேர்
தாமோ தரன் வீர சோழியத்தார் சாற்றுருவம்
பூமீதியைந்த தெனப் போற்று."
பிள்ளை அவர்கள் பழைய நூல்களைப் பரிசோதித்து அச்சிட்டதன்றித், தாமாகவும் சில நூல்கள் இயற்றி அச்சிட்டிருக்கின்றார்கள். சூளாமணி வசனம், கட்டளைக் கலித்துறை, இலக்கணம், சைவ மகத்துவம், ஆறாம் ஏழாம் வாசகப் புத்தகங்கள், நட்சத்திரமாலை, ஆதியாகம கீர்த்தனம் முதலியன பிள்ளையவர்களால் இயற்றப்பட்ட நூல்கள்.
இங்ஙனமன்றி, சென்ற தாது வருடத்தில் தமது மாதா பிறந்த ஊராகிய ஏழாலையில், ஒரு தர்ம வித்தியாசாலை தாபித்து, வித்துவ சிகாமணிகளாகிய சுன்னாகம் முருகேச பண்டிதர், குமாரசாமிப் புலவர் என்னுமிருவரையும் உபாத்தியாயர்களாக நியமித்தார்கள். உயரிய இலக்கண இலக்கியங்களும், சருக்க நூல்களும் பிறவும் இலவசமாகக் கற்பிக்கப்பட்டன. தர்க்க சாஸ்திரத்தில் மகா பாண்டித்தியம் படைத்த மகா வித்துவான் சிவானந்தையர் அவர்களும், இலக்கண இலக்கியத் துறையில் பழுத்த மகாவித்துவானான கணேசையர் அவர்களும் மேற்குறித்த வித்தியாசாலையிற் கற்றுத்தேறியவர்கள்.
பழைய நூல்களைப் பதிப்பித்தும், சில நூல்களைத் தாமாக இயற்றியும், சென்னைச் சர்வகலா சங்கத்தில் அங்கமாயிருந்தும், தர்ம வித்தியசாலை தாபித்தும் பிள்ளையவர்கள் தமிழ்ப் பாஷைக்குச் செய்துவரும் செயற்கருந் தொண்டுகளை நோக்கி சென்னை இரசாங்கத்தாரும், மைசூர் புதுக்கோட்டை, திருவனந்தபுரம் முதலிய தென்னட்டு வேந்தர்களும் பிள்ளை அவர்கள் வெளியிட்ட நூல்களைப் பரிபாலித்தும், அவர்கள் எடுக்குங் கருமங்களுக்கு வேண்டிய பொருள் உபகரித்தும், பழைய ஏட்டுப் பிரதிகள் தேடி உதவியும், பலவாறு பாராட்டியும் ஊக்கப்படுத்திவந்தார்கள். இங்ஙனமன்றி, சென்னை இராசாங்கத்தாரால் 1895 ம் ஆண்டில் "ராவ்பகதூர்” என்னும் கண்ணிய பட்டமும் பிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இப்பொழுது பிள்ளையவர்களுக்கு வயசும் முதிர்ந்து உடலும் தளர்ந்துவிட்டது. இவ்வளவோடமையாமல் தீராத குடும்பக் கவலைகளும் சேர்ந்துகொண்டன. இங்ஙனம் இருந்த பழைய நூல்களைப் பரிசோதனம் செய்வதில் சிறிதும் ஆர்வங் குன்றாது, எட்டுத் தொகையில் முன்னமே தாம் அச்சிட்ட கலித்தொகை தவிர, ஏனைய தொகை நூல்களைப் பரிசோதிக்க விரும்பி, முதலில் 'அகநானூறு” என்னுந் தொகைநூலைப் பரிசோதித்துக்கொண்டு சென்னையிலிருந்தார். ஆனால் அது நிறைவேறுமல் நாளுக்கு நாள் சுகங்குன்றி, வரவர நோய் அதிகரித்துவிட்டது. 'இருபதாம் நூற்றண்டு தக்க பெரியோர்களுக்கு உரிய காலமன்று" எனபதைத் தெரிவிப்பவர்கள் போன்று 1901 ம் ஆண்டு 1 ந் தேதி சென்னை மாநகரில் தமிழ் நாடு முழுதும் கண்ணீர் பொழியத் தேகவியோகம் எய்தினர்கள்.
பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தவர்களேயாயினும் அவர்களுக்குக் குந்தியிருக்க ஒரு குடில் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை. தமது வாழ் நாளின் பெரும் பாகத்தைத் தென்னிந்தியாவில் சென்னையிலும் பிற இடங்களிலுமே கழித்தவர்கள். பெரிய உத்தியோகங்களை வகித்திருந்தும் பெரும் பொருள் சம்பாதித்தற்கு வழிகளிலிருந்தும், பெரிய மாடமாளிகைகள் கட்டவேண்டும், பிற சந்ததியாருக்குச் சேகரித்து வைக்கவேண்டும், என்ற எண்ணம் பிள்ளையவர்களுக்கு எட்டுணையும் இருக்கவில்லை. அவர்கள் ஒரு பெரும் பரோபகாரி. யாராவது தமது உதவியை விரும்பினுல் மறுக்கும் வழக்கம் பிள்ளை அவர்களுக்கு இல்லை. அன்றி அடுத்த கணக்கிற் செய்து வைப்பதாகத் தவணையிடுவது மில்லை. ஒவ்வொரு கணப்பொழுதையும் பொன் போற் போற்றியவர்கள பிள்ளை அவர்களே. இதற்குப பல வேடிக்கைக் கதைகளுமுண்டு. இது நிற்க, உடல் பொருள் ஆவி மூன்றனயும் தமிழ் மக்களுக்கு அர்ப்பணம் செய்தவர்களும் பிள்ளை அவர்களே.
பழைய நூல்களைப் பரிசோதித்துச் சுத்தமாக அச்சிடுவதில் இப்பொழுது சிறந்து விளங்கும் திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி மஹாமஹோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர் அவர்களுக்கு அவ்விஷயத்தில் நீந்தக் கற்றுக்கொடுத்தவர்கள் பிள்ளை அவர்கள்தாம், அதனை ஐயரவர்கள் தாம் முதன் முதல் 1887 ல் பதிப்பித்த சீவக சிந்தாமணி முகவுரையில் "இவற்றை (சீவக சிந்தாமணி மூலமும் உரையும்) விரைவிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ஸ்ரீ சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்" என்றிங்ஙனம் பிள்ளையவர்கள் தமக்குத் துணிவு பிறப்பித்தமையைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இன்னும்,
"தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பித்-என்றிங்ஙனம் ஐயரவர்கள் இரங்குவதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
தொல்காப் புகழ்மேவி யுய்த்தபண்பின்-அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யரமோ தரமியம்ப வே."
பிரம ஸ்ரீ வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் பிள்ளையவர்களின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்தவர்கள்; பிள்ளை அவர்களுக்கு ஒரு சரித்திரமும் எழுதியிருக்கிறார்கள்; பிள்ளை அவர்கள்மேல் பல கையறு நிலைச் செய்யுள்களும் செய்திருக்கின்றர்கள். அவற்றுள் ஒன்று இது:-
"காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ
னாமோது செந்தமிழி னன்னூல் பலதொகுத்த
தாமோதரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர்
தாமோ தரமுடையார் தண்டமிழ்ச் செந்நாப்புலவீர்.”
அக்காலத்தில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை அவர்கள், உத்தியோகத்திலும், பிரபுத்துவத்திலும், தமிழ் அறிவிலும், உயிருள்ள பாட்டுக்கள் பாடுவதிலும் மிக்கு விளங்கியவர்கள். வேதநாயகம்பிள்ளை அவர்கள்மீது திருவாவடுதுறை ஆதீனத்து மகா வித்துவான் மீனுட்சி சுந்தாம்பிள்ளை அவர்களே ஒரு கோவைப் பிரபந்தம் செய்திருக்கின்றர்கள்.
இந்த ஒன்றுமே வேதநாகம்பிள்ளை அவர்களின் பெருமையை விளக்கப் போதுமானது. பிரபுவும் தமிழ்ப் பெரும் புலவருமான வேதநாயகம்பிள்ளை அவர்கள்,
என்று பிள்ளை அவர்களைப் பாராட்டியிருக்கின்றர்கள்.
"நீடிய சீர்பெறு தாமோதரமன்ன நீள்புவியில்
வாடிய கூழ்கண் மழைமுகங் கண்டென மாண்புற நீ
பாடிய செய்யுளைப் பார்த்தின்பவாரி படிந்தனன் யான்
கோடி புலவர்கள் கூடினு நின்புகழ் கூறரிதே"
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களும் தாமோதரம் பிள்ளை அவர்களிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள். ஒரு சமயம் சென்னையில் இருந்த வித்துவான்கள் சிலர் அசூயை காரணமாகப் பிள்ளையவர்கள் வெளியிட்ட விளம்பரமொன்றில், பிழைகாட்டப் புகுந்து, சில வினாக்களை வினவியும், யாழ்ப்பாணத்தை இழிவுபடுத்தியும் எழுதியிருந்தார்கள். அப்பொழுது நாவலர் அவர்கள் அவ்வித்துவான்களின் அழுக்காற்றுரைகளை மறுத்து “நல்லறிவுச் சுடர் கொளுத்தல்" எனப் பெயர் தந்து, ஒரு கண்டனமெழுதி அவர்களைத் தலைகுனியவித்தவர்கள். அக்கண்டன வசன பாணங்களுள் ஒரு பாணம் இது:
"இவ்வியல்புடைய நீரா நாணாது தலைநிமிர்ந்து வித்தியா பண்டிதப் பட்டம் பெற்ற ஶ்ரீ தாமோதரம் பிள்ளை அவர்களுடைய விளம்பரத்திலே பிழைகாட்ட வல்லீர்".
"வேதம்வலி குன்றியது மேதகுசி வாகம்
விதங்கள்வலி குன்றி னவடற்
சூதன்மொழி மூவறுபு ராணம்வலி குன்றியது
சொல்லரிய சைவ சமயப்
போதம்வலி குன்றியது பொற்பொதிய மாமுனி
புகன்றமொழி குன்றி யதுநம்
நாதனிணை ஞால மிசை நாடரிய வாறுமுக
நாவல ரடைந்த பொழுதே." - சி. வை. தாமோதரம்பிள்ளை.
மூலம்: Jaffna College Miscellany March 1936
நன்றி: noolaham.org
1 comments:
அருமை
Post a Comment