October 13, 2011

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (1874-1966)



சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (சூன் 8, 1874 - ஏப்ரல் 12, 1966) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியில் இருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார்.

வாழ்க்கைக் குறிப்பு:

வைத்திலிங்கம் துரைசுவாமி யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் தமிழ், சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலியார் குடியில் பிறந்தவர். தந்தை ஐயாம்பிள்ளை வைத்திலிங்கம் திருவிதாங்கூர் அரசில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். துரைசுவாமியுடன் கூடப் பிறந்தவர்கள் பொன்னுத்துரை, பொன்னம்மா, விஜயரத்தினம், இரத்தினகோபால், இராஜகோபால் ஆகியோர். கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன் பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். முதலியார் சிற்றம்பலம் சதாசிவம் என்பவரின் மகள் இராசம்மா என்பவரை 1905 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மகேசுவரி, நடேசுவரி, மகேந்திரா, இராஜேந்திரா, புவனேசுவரி, பரமேஸ்வரி, யோகேந்திரா, தேவேந்திரா என எட்டுப் பிள்ளைகள். யோகேந்திரா துரைசுவாமி இலங்கைத் தூதுவராகப் பல உலக நாடுகளில் பணியாற்றியவர்.

அரசியலில்:

சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1921 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இடம்பெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஆறுமுகம் கனகரத்தினத்தை அதிகப்படியான வாக்குகளால் வென்று முழு வட மாகாணத்திற்கும் பிரதிநிதியானார். இதனால் வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இருந்து போட்டியின்றித் தெரிவானார்.

இலங்கைக்குக் கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆணிலப்பதம் எனப்படும் டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் அவர் அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு நடத்தினார். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை.

தம் கொள்கையில் இருந்து வழுவாமல், 1934 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு என இடம்பெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார். பதிலாக யாழ்ப்பாணத்தில் இருந்து அருணாசலம் மகாதேவா, சுப்பையா நடேசன், நெவின்ஸ் செல்வதுரை, ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சபை முதல்வராகத் தெரிவு:

1936 ஆண்டில் இரண்டாவது அரசாங்க சபைக்கான சபை முதல்வர் தேர்வுக்கு பிரான்சிசு டி சில்வா, சி. பந்துவந்துடாவை, வைத்திலிங்கம் துரைசுவாமி ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சில்வா 17 வாக்குகளும், பந்துவந்துடாவை 14 வாக்குகளும், துரைசுவாமி 27 வாக்குகளும் பெற்றனர். இந்நிலைமை அரசியலமைப்பின் 5 (6A) பிரிவின் கீழ் அமையாததனால் குறைந்த வாக்குகள் பெற்றவரின் பெயரை நீக்கி விட்டு ஏனைய இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சில்வாவிற்கு 29 வாக்குகளும் துரைசுவாமிக்கு 29 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, அபயகுணசேகர துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததனால், துரைசுவாமி சபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.

சேர் பட்டம்:

துரைசுவாமி அரசாங்க சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராக துரைசுவாமி தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து சென்றார். அவ்வைபவத்தில் துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.

சமூகப் பணி:

துரைசுவாமி சைவவிருத்திச் சங்கத்திலும், சைவபரிபாலன சபையிலும் தலைவராய் இருந்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரி முதலாம் கலாசாலைகளின் பொது முகாமையாளராகவும் இருந்து சேவை புரிந்துள்ளார்.

பெரியோர் கருத்து:

துரைசுவாமிக்கு யாழ்ப்பாணத்து யோகசுவாமிகளின் அருளும் இருந்துள்ளது. "சுவாமிகள் எனக்கு அடித்து அப்பம் தீற்றிய அற்புதத்தை என்னென்பேன்" என்று துரைசுவாமி அடிக்கடி கூறுவார்.



சிவமணங்கழுது சேர். துரைசுவாமிக்கு, அவர்
மனம் உருகுது அன்பு மிகப் பெருகுது;
தன்னைத் தன்னால் அறியும் தவமும் வாய்ச்சுப் போச்சுது;
தன்னைப்போற் பிறரையும் நேசிக்கலாச்சுது.
உற்றர் பிறந்தார் ஊரார் ஒப்பிடலாச்சுது.
உண்மை முழுதுமென்னும் உறுதியும் வாய்ச்சுப் போச்சுது." - யோகசுவாமி”




சேர். துரைசுவாமி ஆர் நிகருனக்குப் பார் சிவம் எங்கும்!
ஆர் பகை? ஆர் நட்பு?
செய்வது பூசை நினைப்பது மந்திரம், உய்ந்தாய், உய்ந்தாய்.
பலபடச் சொல்வதில் பலன் ஒன்றுமில்லை." - யோகசுவாமி”



சேர் துரைச் சாமி சிவயோகர் மாசீடர்
பார்புரக்கு மன்றப் பழந்தலைவர் - நேர்மைமிகு
சைவத் தமிழர் சனநா யகமுதல்வர்
உய்வைப் புகழும் உலகு." - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை



நன்றி: விக்கிப்பீடியாவுக்காக எழுதியது


உசாத்துணை: க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லாவை வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008

October 09, 2011

ஆறுமுக நாவலரின் திணற அடித்த தமிழ்!

றுமுக நாவலர் ஒருநாள் காலை ஏழரை மணி அளவில் சென்னைக் கடற்கரையில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றிக் கொண்டது. அச்சம்பவம் காரணமாகப் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்தது. நாவலர் சாட்சியாக நீதி மன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


நீதிபதி, ஆறுமுக நாவலரைப் பார்த்து, "தீ விபத்து நடந்தபோது எத்தனை மணி இருக்கும்? நீங்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு ஆறுமுக நாவலர், மறுமொழியாக, தூய்மையான உயர்ந்த ஆங்கிலத்தில் விடை கூறினார். அவர் ஆங்கிலத்தில் விடை கூறியதை நீதிபதி வரவேற்கவில்லை. நாவலரைத் தமிழிலேயே விடை கூறுமாறு பணித்தார்.

உடனே நாவலருக்குச் சினம் வந்துவிட்டது.

"தமிழில் பேசி எல்லோரையும் திணற அடிக்கிறேன் பார்" என்று எண்ணியவராய்,

"அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே
காலேற்றுக் காலோட்டப் புக்குழி''.

என்று விடை சொன்னார்.

ஆறுமுக நாவலர் இவ்வாறு சொன்னதும், நீதிமன்றத்தில் எல்லோரும் திகைத்து விட்டனர். ஏனெனில், யாருக்கும் அவர் பேசிய தமிழ் புரியவில்லை. இந்நிலையில், மொழிபெயர்ப்பாளர் நிலைமை மிகவும் பரிதாபகரமாகப் போய்விட்டது. ஏனெனில், அவர்தான் ஆறுமுக நாவலர் பேசியதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீதிபதிக்குச் சொல்ல வேண்டும்!

ஆறுமுக நாவலர் கூறிய விடை இதுதான்:-

"அன்று சூரியன் வானத்தில் எழுந்து நான்கு நாழிகை இருக்கும்; நான் கடல் ஓரத்தின் அருகே காற்று வாங்கியவாறு உலாவச் சென்றபோது''!

நீதிபதியின் முகத்தில் ஈயாடவில்லை!

நன்றி:- தினமணி

August 06, 2011

யாழ்ப்பாணத்துக் கிணற்றுப் பண்பாடு

யாழ்ப்பாணத்துக் கிணற்றுப் பண்பாடு

பேராசிரியர் அ. சண்முகதாஸ்

நீர் எங்கள் வாழ்வுக்கு இன்றியமையாதது. ஓர் அரசு தன்னுடைய குடிமக்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்கும் பெரிய பொறுப்பினை உடையது. ஆறு, ஏரி, குளம், கிணறு ஆகியன குடிநீர் வழங்குவன.

இலங்கையிலே சிங்கள மக்கள் வாழும் இடங்களிலே ஆறுகள் உண்டு. அவர்களுடைய ஆற்றுப் பயன்பாடு “ஆற்றுப் பண்பாடு' ஒன்றினை உருவாக்கியுள்ளது.

ஆனால், யாழ்ப்பாணம் ஆறில்லா இடம்.

கிணறுகள் பல நீர் வழங்கும் நிலைகளாயுள்ளன. இதனால் இங்கே ஒரு கிணற்றுப் பண்பாடு உருவாகியுள்ளது.


யாழ்ப்பாணம் பண்டைக் காலத்திலிருந்தே வரண்ட இடமாக இருந்துள்ளதாக செவி வழிக் கதைகளாலும் சில இலக்கியச் சான்றுகளாலும் அறிகிறோம். யாழ்ப்பாடி என்ற ஒருவன் யாழ் வாசித்து மணற்றிடர் எனப்படும் இப்பகுதியினைப் பரிசாகப் பெற்றான் என்று ஒரு கதை கூறுகின்றது.

மலை எதுவும் இல்லாத இந்நிலத்திலே ஆறு ஊற்றெடுத்தோட வழியில்லை. நல்ல நீரினை தேக்கி வைத்தே யாழ்ப்பாண மக்கள் பயன்பெற வேண்டியவராயுள்ளனர்.

இயற்கை அன்னை மக்கள் வாழ்வுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து கொண்டேயிருக்கிறாள். உலகளாவிய வகையில் இந்த உண்மையினை நாம் உணரக்கூடியதாயுள்ளது. இவ்விடத்தில் யாழ்ப்பாணத்துப் பூப்பௌதிக அடிப் படையில் நிலத்தின் கீழ் உள்ள பாறைகள் பற்றி நாம் விளக்கமாக அறியும்பொழுது மணற்றிடருக்கு இயற்கை அன்னை குடிநீர் வழங்கச் செய்துள்ள ஏற்பாட்டினை உணர்ந்து மகிழலாம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ்ப் பகுதிகளில் சுண்ணக் கற்பாறைகள் காணப் படுகின்றன. இவை மயோசீன் காலப் பாறைகள் எனப் புவியியலாளர் கூறுகின்றனர். யாழ்ப்பாணச் சுண்ணக் கற்பாறைகள் நன்கு உருவாக்கம் பெற்ற அடையற் பாறைகளாக உள்ளன. இப்பாறைகளூ டாகவே தரைக்கீழ் நீர் மேலே எழுகின்றது.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் கிணறுகள் நிறைந்த நாடாக அமைந்துள்ளது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கடல்வழி பயணித்த வர்கள் இவ்வுண்மையை உணர்ந்துள்ளனர்.

அவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணக் கிணறு கள் பற்றித் தன்னுடைய நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஒவ்வொரு வீட்டிலும் கிணறு அமைக்கும் வழக்கம் உண்டு. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்கள் தோறும் பொதுக்கிணறுகளே அமைக்கப்பட்டன.

பொதுக்கிணறு ஆண் பெண், இளையோர் முதியோர் என்ற வேறுபாடின்றி எல்லோ ரும் வந்து நீர் பெறவும், குளிக்கவும், உடை தோய்க்கவும் பயன்பட்டது. பலர் வந்து ஒரு கிணற்றினைப் பயன்படுத்தும்போது அங்கு செய்திப் பரிமாற்றம் நடைபெற்றது. நகை யாடி மகிழ்ந்தனர். சில வேளைகளில் சண்டைகளும் கூட நடைபெற்றன.

தற்கொலை செய்யவும், கொலைசெய்து பிணத்தைத் தூக்கிப் போடவும் கிணறுகள் பயன்பட்டன. காதலர் சந்திக்கும் இடமாகவும் அமைந்தது. கிணற்று நீர் குளிர்காலத்திலே சூடாகவும், சூடான காலத்திலே குளிராகவும் இருப்ப தால் இந்நீரை எந்நேரம் பயன்படுத்தக் கூடியதாயுள்ளது. எம்முடைய நீர்ப்பயன் பாடு பல சுவையான தன்மைகளை உடை யது. சில கிரியைகளுக்கும் கொண்டாட்டங் களுக்கும் புதுநீர் கொள்வது வழக்கம். தைப் பொங்கல் அன்று காலையிலே பொங்கு வதற்குப் புது நீர் கொண்டுவரும் வழக்கம் உண்டு. இத்தகைய புதுநீர் கிணற்றிலேயே பெறப்பட்டது. இது நீர் வழிபாட்டின் எச்சமாக அமைகின்றது. நீர் வழிபாடு தமிழர்களிடையே பண்டைக்காலத்தி லிருந்து வந்தது. அவ்வழிபாடு மழை நீர், ஆற்று நீர், கடல் நீர் ஆகியவற்றின் தொடர்புடையதாகவே அமைந்தது. கிணற்று நீர் வழிபாடு தொடர்புடையதாக இருந்தமைக்குச் சில சான்றுகள் காட்டலாம்.

கிணறு தோண்டித் தண்ணீர் ஊற்றெ டுத்தவுடன் கிணறு வெட்டியவர்கள் அக்கிணற்றுக்கருகே பொங்கலிட்டு மடை பரப்புவர். இது இன்றும் நிகழ்ந்து வருகிறது.

யாழ்ப்பாணச் சுண்ணக்கற் பாறை காரணமாக சில இடங்களில் வற்றும் கிணறுகளும் சில இடங்களில் வற்றாக் கிணறுகளும் அமைந்துள்ளன. கிணறு வெட்டுபவர்கள் சிலவேளைகளில் மிக ஆழமாக வெட்ட வேண்டிவரும். எப்பொழுது ஊற்றுக்கண் திறந்து நீர்வரும் எனச் சிலவேளை பல நாட்கள் அவர்கள் வருத்தத்துடன் வெட்டு வர். ஆயக்கடவைப் பிள்ளையாரை ஊற்றுக் கண்ணைத் திறந்து வைக்கும்படி பிரம்மஸ்ரீ க. கணேசையர்: ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே கோட்டாலே குத்திக் கூவத்தைக் காட்டிடுவாய் என்று பாடுகிறார்.

கிணறு வெட்டுவதன் முன்னம் நிலையம் எடுக்கும் வழக்கம் உண்டு. நல்ல தண்ணீர் மேல் நிலையில் எங்கே தரைக் கீழ் இருக்கின்றதெனச் சில சிறிய பரிசோதனைகளூடாகக் குறித்துக் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். தம்டைய அருட்சிறப்பாலே இத்தகைய நிலையங்களை இனங்கண்டு கூறும் வழக்கம் யாழ்ப்பாணத்திலே இருந்து வந்துள்ளது. அளவெட்டி கலாநிதி அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்கள் இக்கலையிலே வல்லவர்.

எல்லோரும் வந்து பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துவர் என்று முன்னர் குறிப்பிட்டேன். இவ்வழக்கம் எல்லாக் கிணறுகளிலும் எல்லாக் காலங்களிலும் நடை பெற்றதெனக் கூறடியாது. பொதுக் கிணறுகளில் உயர்ந்த சாதியினர் மட்டுமே தண்ணீர் அள்ள டியும். தாழ்ந்த சாதியினர் அள்ளடியாது. உயர் சாதியினரே தண் ணீரை அள்ளி அவர்களுடைய குடங்களிலே ஊற்றலாம். கரவெட்டிப் பகுதியில் தாழ்ந்த சாதியினர் தமக்கென ஒரு கிணற்றினை அமைத்தபொழுது அக்கிணற்றுக்குள் நஞ்சு கொட்டப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்து மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான கே. டானியல் கிணறு தொடர்பான இக்கொடுமைகளை யெல்லாம் தன்னுடைய “தண்ணீர்' என்னும் நாவலிலே விரிவாகக் கூறுகிறார்.

கிணற்றடி தொடர்பாக யாழ்ப்பாணத்தவரிடையே சில நம்பிக்கைகள் உண்டு. இரவு நேரத்தில் பெண்கள் தனியாகக் கிணற்றடிக்குச் செல்லக்கூடாது என்று ஒரு நம்பிக்கையுண்டு. பொதுக்கிணறு என்ற காரணத்தால் இரவு நேரத்தில் யார் அங்கு வருகிறார்கள் எனக் கூற முடியாது. எனவே பெண்களை அங்கு இரவில் போகாமல் இருக்க வைப்பதற்கு அங்கு இரவில் பேய் உலாவுவதாக அச்சமடையச் செய்வர்.

யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் நல்ல தண்ணீர் இல்லாத கிணறுகளும் இருக்கின்றன. பெரும்பாலும் கோயில்களை அண்டியுள்ள கிணறுகள் நல்ல தண்ணீருடையனவாக அமைகின்றன. மருதமரம் இருக்கு மிடத்தில் நிலத்தின் கீழ் நல்ல தண்ணீர் இருக்குமென மக்கள் நம்புகின்றனர்.
கோயிலை அண்டியுள்ள கிணறு கோயிற் கிணறு என அழைக்கப்படும்.

யாழ்ப்பாணக் கிணறு பற்றி இன்னும் பல செய்திகள் இருக்கின்றன. வகை மாதிரிக்காக மேல்வரும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினைத் தந்த வீரகேசரி நிறுவனத்துக்கு நன்றியும், பாராட்டும், வாழ்த்துக்களும் கூறுகிறேன்.

எழுதியவர்: பேராசிரியர் அ. சண்முகதாஸ்

நன்றி: வீரகேசரி, ஆகத்து 6, 2011

March 25, 2011

பிரமிளின் "உதிர நதி"

உதிர நதி
-பிரமிள்-

அச்சிட்ட எழுத்துக்களின்
அறிவிப்புப் பவனி
ஸ்தம்பிக்கிறது.
செய்தித்தாளில்
பிரதிபலிக்கும்
வாசகமுத்துக்குள்
அலறுகின்றன
ஓராயிரம்
கபாலங்கள்.
அலறும் ஒவ்வொரு
அச்செழுத்திலும்
குரல் பெறுகிறது ஓர் மூதாதை இனம்.
மனித வர்க்கத்தின் மனசாட்சியினுள்
பாய்கிறது அதன்
உதிரநதித்துடிப்பு
நேற்றிருந்த முற்றத்தில்
மழலை விளைத்து இன்று
குற்றியிரில் துடிக்கும்
குழந்தையின் நாளத்தில்
நேற்றைக்கும் முக முந்தி
எகிப்தின் பிரமிட்கள்
எழுமுன்னாடி ஒரு
யுகத்தின் வாசலில்
இமயம் உருகி
எழுகிளை விரித்து
பிரவஹித்த சப்த
சிந்து துடிக்கிறது.
துடித்துக் கொடுங்கோலின்
துப்பாக்கி ரவை மழையில்
கிடந்து வெடிக்கிறது.

மூலம்: நிலம், சனவரி 2001
நன்றி: நூலகம்

January 11, 2011

மூத்த தமிழறிஞர் அரியான்பொய்கை செல்லத்துரை


ஈழத்தின் மூத்த கலைஞரும் படைப்பாளியுமான அரியான்பொய்கை க. செல்லத்துரை அவர்கள் வன்னியின் தொன்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்திய வரலாற்றாய்வாளர். வன்னியின் நாட்டார் இலக்கியங்களை அச்சுவடிவிற்கு கொண்டுவருவதில் இவர் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகித்தவர்.

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வந்த வன்னியின் தொன்மைகளை வெளிப்படுத்தவல்ல படைப்புக்கள், வாகடங்கள், நாட்டார் இலக்கியங்கள், சிந்துநடைக்கூத்துக்கள் ஆகியவற்றைத் துரிதமாக வாசித்தறியும் திறன்கொண்ட அரியான்பொய்கை செல்லத்துரை மிகவேகமாக எழுத்தாணி மூலம் ஓலைச்சுவடியில் எழுதும் ஆற்றலும் பெற்றவர்.

இலங்கையின் வட மாகாணத்தின் வன்னிப் பகுதியில் நெடுங்கேணி, அரியாமடு என்னும் சிறு கிராமத்தில் பிறந்த செல்லத்துரை முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீருற்று எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். இவர் இவ்வாரம் முல்லைத்தீவில் காலமானார்.

வன்னியில் மதங் கொண்ட யானையை அடக்கிய அரியாத்தை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் "வேழம்படுத்த வீராங்கனை" என்னும் முல்லைமோடியில் அமைந்த நாட்டுக்கூத்தை செல்லத்துரை அவர்கள் எழுதி நூலாக்கியுள்ளார்.

வேலப்பணிக்கர் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி:

முல்லைத்தீவுப் பிரதேச மக்களையும், எழுத்தாளர்களையும் வெகுவாகக் கவர்ந்த கதைப்பாடல் இது. பொதுவாகப் பெண்களே ஒப்பாரி சொல்லி அழுவார்கள். ஆனால் வேலப்பணிக்கன் தன் மனைவி அரியாத்தை இறந்தபோது சொல்லி அழுத ஒப்பாரியாக இது திகழ்கிறது. பணிக்கார்மார் எவரும் பிடிக்க முடியாத யானையை அரியாத்தை பிடித்த கதையை இது கூறுகின்றது.

கண்டல் காட்டிலே மதங்கொண்ட கொம்பன் யானையொன்று அழிவு செய்கிறது. சின்னவன்னியன் ஏழு ஊர்ப் பணிக்கர்களை அழைத்து ஆலோசனை செய்கிறான். சபையில் ஒருவன் எழுந்து வேலப்பணிக்கனே இந்த யானையைப் பிடித்துப் கட்டக் கூடியவன் எனக் கூறுகின்றான். பொறாமை கொண்ட இன்னொரு பணிக்கன் “வேலைப்பணிக்கனால் முடியாது : அவன் மனைவி அரியாத்தையால்தான் முடியும்’’ எனக் கேலி செய்கிறான்.

வீடு சென்ற வேலப்பணிக்கன் கவலையுடன் இருப்பதைக் கண்ட அரியாத்தை அவனிடம் அரசசபையில் நடைபெற்ற விவாதத்தை அறிந்து தானே யானை பிடிக்கச் செல்கிறாள். யானையைப் பிடித்து அடக்கி அதன்மேல் ஏறிவந்த அவளுக்கு அரசசபையில் அமோக வரவேற்பு நடைபெறுகின்றது.

வீடு திரும்பும் போது அவள் கால்கள் சோர்வடைகின்றன. உடல் பதறுகின்றது. வீட்டிற்குச் சென்று கணவனின் மடியில் உயிர் துறக்கிறாள். அவளது மரணத்திற்குக் காரணம் தெளிவாகக் கூறப்படவில்லை.

உனக்குப் பேய்தான் பிடித்ததுவோ
என் பேர் பெரிய நாயகியே
தீரமுடை தேவியரே – உனக்குப்
பெல்லிப் பேய் விட்டினமோ

எனப் புலம்புகின்றான் வேலப்பணிக்கன்.

அரியாத்தை தன் கற்பின் திண்மையாலேயே செயற்கரிய செயலளைச் செய்தான் என்று கூறப்படுகின்றது.

கற்புடையாள் நானாகில் - உன்
கையைத்தான் நீட்டுமென்றாள்
அந்த மொழி கேட்டவுடன் - அவ்
யானை கையை நீட்டியதே

அரியாத்தையுடன் வேலப்பணிக்கன் உடன்கட்டை ஏறுவதாகக் கதை முடிகிறது.

இந்தக் கதை எழுத்தாளர்களதும், புலவர்களதும், கற்பனையைப் பெரிதும் கிளறியுள்ளது. முல்லைமணியின் “அவளும் தோற்றுவிட்டாள்’’ என்னும் சிறுகதை இக்கதைப் பாடலை அடியொற்றியது. அ. பாலமனோகரன் குமாரபுரம் நாவலில் ஒரு கிளைக் கதையாகப் பயன்படுத்துகின்றார். குமுழமுனை சி. தெய்வேந்திரம் மதயானையை வென்ற மாதரசி என்னும் நாடகத்தை எழுதி மேடையேற்றியதுடன் அதனை அச்சிட்டு நூலாக்கியுள்ளார்.

நன்றி: நாட்டாரியல் ஆய்வு, ஆய்வரங்கக் கட்டுரைகள் - 2000, நூலகம் திட்டம்.