April 06, 2006

யாழ்ப்பாண விருந்து

ண்மையில் நாவுக்குச் சுவையான ஒரு கட்டுரை மல்லிகை ஆண்டு மலரில் வெளிவந்திருந்தது. அன்று யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகளைப் பற்றியது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை இந்தப் பதிவில் தருகிறேன். செல்லக்கண்ணு என்பவர் இதனை எழுதியிருக்கிறார்.

ஒடியல் கூழ் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரசித்தமானது. இது பனையின் வழங்கல். தற்போது பணத்தை அள்ளும் இலக்கோடு சில வர்த்தகர் 'யாழ்ப்பாண விருந்துகளை' ஏற்பாடு செய்கின்றனர். அதில் ஒடியல் கூழ் முக்கியம் பெறுகின்றது. கிழடுகளின் மண்டை ஓட்டுக்குள் மறைந்திருக்கும் அன்றைய நாவைப் பனிக்க வைக்கும் உணவு வகையறாக்கள் இன்னமும் சொந்தங்களைத் தொடருகின்றன.

ஊது மாக் கூழும் அதிலொன்று. நெஞ்சு நோவுக்கு மருந்தாக இதைச் செய்து குடிப்பார்கள். கஞ்சி வகைகளும் உண்டு. பாற் கஞ்சி! சிறுகதைச் சிற்பி வைத்தியலிங்கம் இந்தப் 'பாற் கஞ்சி' என்ற தலைப்பில் சிறுகதையொன்றை எழுதி, அதைத் தனது தொகுப்பினதும் பெயராகச் சூட்டியுள்ளார். கோயில்களில் சித்திரைக் கஞ்சியாக இது வழங்கப்படுகின்றது. 'முருங்கை இலைக் கஞ்சி'யையும் எமது யாழ்ப்பாணத்தவர்கள் குடித்துப் பார்த்தவர்கள். இதே தலைப்பில் அமரர் கே. டானியல் எழுதிய குறுநாவல் ஒன்றும் தினகரனில் வெளியானது.

புளிக் கஞ்சி! இது புளியைக் கரைத்து அரிசியோடு கலக்கி, இறாலும் போட்டு ஆக்குவது. வேறும் சில 'கூடு'களையும் கலப்பார்கள். உறைப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும். காய்ச்சல் முறிந்த பின் நாவில் ஒரு கசப்பு வருவதைச் சகலரும் அறிவர். அத்தகைய சந்தர்ப்பத்தில் அன்றைய அப்பாச்சிகளும், பெத்தாச்சிகளும் அத்தகைய நோயாளிகளுக்கு இந்தக் "கசாயத்தைக்" கொடுப்பர்.

இனி, உப்புக் கஞ்சி! இவர் 'பரம' ஏழை. அரிசியையும் உப்பையும் நீரையும் மட்டும் பாவித்து உண்டாக்குவர். ஏழைகளின் ஆத்ம நண்பன். அவர்களது குறைந்த வருமானத்திற்குத் தோதான சிக்கன உணவு.

துவையல்களென்ற திண்மமான பல வகையறாக்களும் அன்றைய யாழ்ப்பாணத்தாரின் உடல் வாகை உச்சப்படுத்தின. மரவள்ளிக் கிழங்குத் துவையல், இலுப்பைப் பூத்துவையல் இவைகளை அன்றைய யாழ்ப்பாணத்தவர்கள் சிற்றுண்டிகளாக மட்டுமின்றித் தமது மூவேளை உணவுகளில் ஒன்றாகவும் பழக்கப்படுத்தி இருந்தனர்.

உலக நாடுகளனைத்திலும் இன்று, சுத்தமான எள்ளில் வடித்த நல்லெண்ணையின் வாசத்தை நுகரலாம். இந்த நல்லெண்ணெய் இன்று யாழ்ப்பாணத்தாரின் குறியீடாகவும் ஆகிவிட்டது. பூப்பெய்திய இளசுகளுக்கு இதொரு விற்றமின். இந்த எள்ளிலிருந்து பெறப்படுவதுதான் எள்ளுப்பாகு. இப்பொழுது 'போளை' வடிவில் கிடைக்கிறது. ஆனால் அக்காலத்து ஆச்சிமார் அரைத்த மிளகாய்க்கூடுபோல் இதைச் செய்வர். பருத்தித்துறைப் பகுதியில் இதன் புழக்கம் இப்பவும் உண்டு.

இதை வாசித்துப் பொச்சடிக்கும் இன்றைய சந்ததி தாமும் ஒருமுறை இவைகளைச் சுவைக்கக் கூடும். பயப்படவேண்டாம்! என்றோ ஒரு நாள் நிச்சயமாக பெரிய "ஐந்து நட்சத்திர" ஹோட்டல்கள் தம்மிடம் வந்தால் இவைகளைப் பருகலாமென விளம்பரம் செய்யும். முடிந்தால் சென்று சுவைத்துப் பாருங்கள். திரிவுபடுத்தப்படாதிருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான்!

10 comments:

said...

//ஊது மாக் கூழும்//

உந்தக் கூழ் நானறியாதது.
"ஒடியல் மா"க் கூழ்தான் மாறித் தட்டுப்பட்டிட்டுதோ எண்டும் நினைச்சேன்.
நீங்கள் சொல்லிற எள்ளுப்பாகை, எங்கட ஊரில "புண்ணாக்கு" எண்டுதான் சொல்லிறது. (நல்ல மத்தியான வெய்யிலில அம்மம்மா உரலில இடிச்சுச் செய்வா. அப்ப தான் எண்ணெய் பிறக்குமாம்.)வேற சில இடத்தில உதைப் புண்ணாக்கு எண்டு சொல்லி நக்கலடிபட்டதுதான் மிச்சம். நீங்கள் என்னெண்டு சொல்லிறனியள்?

புழுக்கொடியல் செய்யிறது எப்பிடி? எண்டு சோமசுந்தரப் புலவர் பாட்டொண்டு எழுதி வச்சிருக்கிறதை ஒரு புத்தகத்தில பாத்தன்.(என்னடா மணிமேகலைப்பிரசுரத் தலைப்பு மாதிரிக் கிடக்கே எண்டு யோசிச்சா, மணிமேகலைப்பிரசுரம் தான் அவரின்ர பாட்டுக்களைத் தொகுத்திருக்கு)

Anonymous said...

நல்ல தகவலை தந்திருக்கிறீர்கள்.
நன்றி.

இங்கு கனடாவில் பல கடைகளில் கூழ்
வாங்கலாம்.இருந்தாலும் இப்படியான
பல பழங்கால உணவு வகைகள்
அருகிவருவது வேதனைக்குரியதே.

said...

வசந்தன்,
//வேற சில இடத்தில உதைப் புண்ணாக்கு எண்டு சொல்லி நக்கலடிபட்டதுதான் மிச்சம்//
அப்ப உங்களுக்கு இது தான் வேலை போல கிடக்கு. புதுப்புது சொல்லு கண்டுபிடிக்கிறது. 'புண்ணாக்கு' எண்டா ஒரு அர்த்தம் தான் எனக்கு தெரியும். திட்டவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள்.

said...

நல்ல ஓரு ஞாபகமூட்டல் பதிவு.
வசந்தன் ! ஊதுமாக் கூழ், உழுத்தம்மாவும் பனங்கட்டி யும் சேர்த்துச் செய்யப் படுவது. நெஞ்சு நோ, நெஞ்சுச்சளி, என்பவற்றுக்கு அருமருந்து.எங்கள் அம்மம்மா என் குடும்பத்தவர்க்கு நெஞ்சு வருத்தத்துக்கு செய்து தருவா.நல்ல பலன் தரும். நீங்கள் பகிடிக்குச் சொன்னீங்களோ தெரியாது, உண்மையில் எள்ளுப்பாகு வேறு, எள்ளுப் புண்ணாக்கு வேறு. எள்ளு பனங்கட்டி, உழுந்து, என்பன அதீத மருத்துவக் குணங்கொண்ட பண்டங்கள்.
வேம்பு, பிள்ளைக்கற்றாளை, என்பனவற்றுக்கு மேலைத்தேயர் உரிமம் கொண்டாடியது போன்று இவற்றுக்கும் நடக்காமல் இருந்தால் நல்லது.
நன்றி!

said...

கரிகாலன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மலைநாடான், ஊதுமாக்கூழ் குறித்த மேலதிக தகவலுக்கு நன்றி. உளுத்தம்மாக்கூழ் ஊதுமாக்கூழாயிற்றா?

said...

நல்ல கட்டுரை அண்ணா,

நல்ல கூழைத் தேடி சிட்னியெல்லாம் பொச்சடிச்சுக்கொண்டு திரிகின்றேன்:-)

said...

கானா பிரபா உங்கள் வருகைக்கு நன்றி. சிட்னியில ஒரிஜினல் கூழ் கிடைச்சா நீங்கள் அதிஷ்டசாலி தான்:)

said...

இந்த ஒரிஜினல் கூழ் செய்யிற மாதிரி செய்து இங்கை புலத்திலை வசதி இருக்கு தானே நெத்தலி கணவாய் இறால் சின்ன மீன் வகைகளை போட்டுகாய்ச்சி தண்ணியடிக்கை செய்து குடிப்பினம் தூக்கலாயிருக்கும்...

said...

சின்னக்குட்டி, வாங்கோ, உங்கள் வருகைக்கு நன்றிகள்.
//இங்கை புலத்திலை வசதி இருக்கு தானே//
எல்லாத்தையும் பாத்தாச்சு. ஆனா நம்மூரைப் போல வருமா:)

Anonymous said...

body {
background:#aba;
margin:0;
padding:20px 10px;
text-align:center;
font:x-small/1.5em "Trebuchet MS",Verdana,Arial,Sans-serif;
color:#333;
font-size/* */:/**/small;
font-size: /**/small;
}

உங்க இடுகையின் templateல், ஏற்கனவே font் "Sans-Serif" இருக்கின்றது. அதனால் தான் சரியாகத் தெரிகின்றது.

PS:இங்கே மறுமொழி இடுவதற்கு மன்னிக்கவும்