January 28, 2006

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - நினைவலைகள்

அமரர் சு. வித்தியானந்தன் அவர்கள் மறைந்த நினைவு நாள் சனவரி 21. அதையொட்டியது இந்த நினைவுக்கட்டுரை. கட்டுரையை எழுதியவர் தற்போது சிட்னியில் வசித்து வரும் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்கள்.

மலை ஒன்றினை முழுமையாகக் காணவேண்டுமாயின், தொலைதூரத்திலே போய் நின்று பார்க்க வேண்டும்; வரலாற்று நிகழ்ச்சியை மதிப்பிடக் காலம் செல்லவேண்டும் என்பர் சான்றோர். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை செவ்வனே கோலாகலமாக நடந்து, பத்தாம் தேதி விருந்துபசார விழா இன்வெறியின் விஷமத்தனத்தினால் அவதியுற்று முடிவடைந்தது முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் சூத்திரதாரி பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் தேதி கொழும்பிலே மறைந்தார். இப்போது அம்மாநாடு பற்றியும் அந்தப் 'பார்த்தசாரதி' பற்றியும் நின்று நிதானித்துச் சிந்திப்பது உண்மை வரலாற்றிற்கு உகந்தது என்பதை இக்கால இடைவெளியில் உதிக்கப்பட்ட துணுக்குகளை அறிந்தவர் - கேட்டவர் ஏற்றுக்கொள்வர்.

1960 ஜூலை மாதம் நடைபெற்ற ஐந்தாவது பொதுத்தேர்தலிலே சிறிமா பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இனவெறி அலைகள் அசுரவேகத்தோடு மோதத் தொடங்கின. வடகிழக்கில் ஒத்துழையாமை இயக்கத்தினைத் தமிழரசுக் கட்சியினர் முன்னின்று நடத்தினார்கள். அதனால் கோபமுற்ற அரசு தமிழரசுத் தலைவர்களையும் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் பனாகொடையிலே தடுப்புக் காவலில் வைக்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழருக்கு எதிராகச் சிங்கள இராணுவமும் காவற்படையினரும் கர்ண கொடூரமான செயல்களிலே ஈடுபட்டனர். சிங்கள தேசியவாதத்திற்கு இடதுசாரிகள் உறுதுணையாகினர். 1964 கடைசியிலே ஒரு வாக்கினாலே இடதுசாரி கூட்டாட்சி பாராளுமன்றத்திலே முறியடிக்கப்பட்டது.

1965 மார்ச்சு மாததிலே நடைபெற்ற ஆறாவது பொதுத்தேர்தலிலே டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்று தேசிய அரசினை அமைத்தது. டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை, தமிழ் உபயோகமொழி மசோதா என்பன நம்பிக்கை அளித்தன. ஆயினும் எதிரணியிலே இருந்த முதலாளிகளுடனும் தொழிலாளர் வர்க்கக்கட்சிகளுடனும் பௌத்தத்துறவிகளுடனும் தேசிய அரசு போட்டியிட முடியவில்லை; தேசிய ஒற்றுமை எதனையும் அவர்கள் விரும்பவில்லை.

இக்காலகட்டத்திற்தான் 1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் சனவரி ஏழாம் தேதி உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர். அக்குழுக் கூட்டத்திலே கலந்து கொண்டவர்களிலே பேராசிரியர் தனிநாயக அடிகளார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம் என்போர் ஈழநாட்டினர்.

தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே 'தமிழ் கல்ச்சர்' எனும் சஞ்சிகை மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்பிரல் 16-23 தேதிகளில் நடாத்தப்பட்டது.

கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர் டாக்டர் H. W. தம்பையா. அவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய வி. செல்வநாயகம் கட்டுரை சமர்ப்பித்தபோதும் மாநாட்டிற்குச் செல்லவில்லை. கோலாலம்பூர் மாநாட்டிற்குச் சுமார் ஐம்பது இலங்கைப் பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள். இவர்களிலே சரிபாதிக்கு மேல் பார்வையாளர்கள், மாநாட்டிற்கு எவ்விதமான ஆய்வுகளையும் சமர்ப்பிக்காதவர்கள். இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1967இல் சி. என். அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ் நாட்டிலே அரசாங்கம் அமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் தேதிகளிற் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. சென்னையிலே ஆய்வரங்குகளா ஜனரஞ்சகமான அரங்குகளா சிறந்தோங்கி நின்றன என்று அறுதியிட்டுக் கூறுவது அரிது. ஆயினும் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை நிறுவியமைக்கான காரணங்களும் இலட்சியங்களும் சென்னையிலே அடிபட்டுப்போயின என்று கருதிய ஆய்வாளர் தொகை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாட்டிற்கு இலங்கைக் கிளை பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ். எம். கமாலுதீன் எனும் மூவரையும் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்தது.

1972இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. சோசலிசம் கதைத்த இலங்கை முற்போகு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஐக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தது. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராக உயர்ந்தார். அவருடைய ஆலோசனை வட்டத்திலே இ.மு.எ.ச. முக்கிய இடத்திலே வகித்தது. இந்தக் கட்டத்திலே கே.சி.தங்கராசா குழுவினர் அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று.

1972இலே இலங்கைக் கிளையின் பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள 'சாந்தம்' மனையிலே கூடுவதற்கு முன்பே இரு கட்சிகள் உருவாகிவிட்டன. ஆளுங்கட்சி கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்க இருந்த முகாமைக் குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே நன்குபுலனாயின. இதனால் ஆளுங்கட்சி எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும் பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றதும் அன்று முதல் தொடர்ந்துபல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே சிலாகித்துப் பேசப்பட்டன.

இலங்கை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபை உருவாகியது. எதேசாதிகாரத்தினை எதிர்க்க ஒற்றுமை இருந்தபோதும், புதிய முகாமைச்சபை கருத்து வேறுபாடுகளினால் ஒன்றிணைந்து நிற்கமுடியவில்லை. அரசுடன் ஒத்தூதிய இடதுசாரிகளை அநுமதிக்க இடம் வைக்கக்கூடாது என்று துணிந்தவர்களுக்கு அரசாங்கத்தின் ஏனைய அடிவருடிகளை அப்போது கவனிக்கும் யோசனை இருக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள்..!

H.W.தம்பையா 1966இலே கோலாலப்பூர் மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர், அங்கு அவர் தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலவர்களில் ஒருவராக நியமனம் பெற்றவர். தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினருக்கும் வேண்டியவர். ஆயினும் அவரை இலங்கைக் கிளையின் முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்த போது யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் அரசாங்கத்திற்குச் சார்பாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று 1973 அக்டோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக்குழுக் கூட்டங்களிலே வற்புறுத்திப் பலருடைய கோபத்திற்கும் ஆளாயினார். அவரைத் தலைமைப் பதவியினைத் துறக்கும்படி முகத்திற்கு முன்னே கேட்கும்படி ஆயிற்று. அவரும் 1973 இலே தமது பதவியினைத் துறந்தார். அவர் நன்கொடையாகத் தாம் வழங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுக் கூசவைத்தார். அவருக்கு சிறிமா அரசு வெளிநாட்டுத் தானிகர் பதவி அளித்துக் கௌரவித்தது.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் 5.10.73இலே முகாமைக்குழுவின் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கு அவகாசம் மூன்று மாதம் கூட இல்லை. பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவரை, வி.எஸ்.ரி.யும் யாமும் அழைத்துக் கொண்டு சென்றோம். தலைவர் தனியனாகவே அமைச்சசரைச் சந்தித்தார். அமைச்சர் மூன்று அம்சங்களை முன்வைத்து அவற்றை ஏற்றுக் கொண்டால் மாநாடு வைப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தருவதாகக் கூறினார். அவ்வம்சங்கள்:

1. மாநாடு கொழும்பிலே நடத்த வேண்டும்; மாநாட்டினை பண்டாரநாயக்க மண்டபத்திலே எவ்விதமான சலாருமின்றி நடாத்த அமைச்சர் உறுதி தந்தார்.

2. பிரதமர் சிறிமா மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்;

3. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் வசதியும் உணவு வசதிகளும் முன்வைக்கப்பட்டன.

தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்து விட்டார். அதனால் பேச்சுகே இடமில்லாமற் போய்விட்டது. அமைச்சர் பொறுமையிழந்து 'அபேபலமு' (நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்) என்று சூள்விட்டார். அரசு ஆதரவு தராமல் இருப்பதோடு குந்தகமும் செய்யப்போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இதனால் அசுர வேகத்தில் எல்லா ஒழுங்குகளும் நடந்தன. கடைசி நேரம் மட்டும் நடக்குமா இல்லையா என்ற தயக்கம். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மாநாட்டிற்கு வரவிருந்த பிரதிநிதிகளுக்கு ஆதரவு தரவில்லை; வந்தவர்கள் திருப்பி விடப்பட்டனர். அனால் தலைவர் மனதிலே தயக்கம் எதுவும் இருக்கவில்லை. மாநாட்டிற்கு அரசாதரவு இனத்துவேஷத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டதென்ற கருத்து உலகிலே பரவியபோது, அதனை விரும்பாத அரசு மாநாடு ஆரம்பிப்பதற்கு முத்தினங்களுக்கு முன்பே 'விசா' வழங்கியது.

யாழ்ப்பாணம் தமிழினத்தின் மானத்தைக் காப்பாற்றியது. தலைவர் தலைமையுரையிலே, மாநாடு யாழ்ப்பாணத்திலே நடக்க வேண்டியதற்கான காரணங்களையும், அதன் தகுதியையும் எடுத்துக் காட்டினார். அதனை யாழ்மக்கள் உறுதிப்படுத்தினார்கள். தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகளில் எல்லாம் அலங்கரித்த ஆர்வம் மிக்க மக்கள் அவர்கள்.

தமிழ் மக்களின் பெருமிதத்தினைக் கண்ட இனவெறி கொண்ட கூட்டம் ஆத்திரம் அடைந்தது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10ஆம் தேதி, பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்திலே 'பஞ்சாப்படுகொலை' நடத்திக் காட்டினர். பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் சனவரி 10ஆம் தேதி நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுமிடத்து,

"தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது 1974 சனவரி பத்தாம்தேதிச் சோகம். அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்." என்பர் (S.J.V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Nationalism, 1947-1977).

பேராசிரியர் வித்தியானந்தனுடைய முடிவு திடீரென 1989 சனவரி 21இலே வந்தது. யாழ்ப்பாணவளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத் தொடங்கினார். யாழ்ப்பாணத்திலே மாபெரும் மாநாட்டினைக் கோலாகலமான விழாவாக நடாத்தித் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிப்பினைப் பெற்றிருந்த வித்தியானந்தன் தமக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த அலங்கோலத்தினை எதிர்பார்க்கவே இல்லை. அக்கடைசி நாட்கள் இன்றும் கண்முன்னே தோன்றுகின்றன. அந்த ஆதங்கத்தினை அவருடைய இரங்கற் கூட்டங்களிலே கொழும்பிலே பேசியும் பத்திரிகைகளில் இரங்கல் கட்டுரைகள் அப்போது எழுதியும் ஆற்ற முயன்றோம்.

நன்றி: கலப்பை, சித்திரை 2005 (சிட்னி)

Technorati Tags:

10 comments:

said...

வணக்கம்.
தங்களின் உலகளாவிய தமிழ்த் தொண்டு ...கண்டு பரவசித்தேன்.

நன்றி.

said...

வணக்கம்.
தங்களின் உலகளாவிய தமிழ்த் தொண்டு ...கண்டு பரவசித்தேன்.

நன்றி.

said...

நன்றி யாழ் சுதாகர், உங்கள் வானொலி உலகம் சென்றேன். தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

said...

இந்த இடுகைக்கு நான் இரண்டு காரணங்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.

பொதுவாக வாசிக்கக் கிடைக்காத விதயங்களையும் நமது சரித்திர சம்பந்தமான விதயங்களையும் தருவதற்கு முதலாவது நன்றி.

இரண்டாவது காரணம்: இந்தக் கட்டுரையாசிரியர் என்னுடைய ஒன்று விட்ட பெரியப்பா. :)

-மதி

said...

கட்டுரையை இட்டதுக்கு நன்றி.

said...

மதி, தங்கள் வருகைக்கு நன்றிகள்.

//கட்டுரையாசிரியர் என்னுடைய ஒன்று விட்ட பெரியப்பா//
இனறு சிட்னியில் இருக்கக் கூடிய விர விட்டு எண்ணக்கூடிய தமிழ் அறிஞர்களில் பேராசிரியர் பூலோகசிங்கமும் ஒருவர். நிறைய எழுதுகிறார். அநேகமான இலக்கிய நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு பற்றுபவர். கண்டால் விசாரிக்கிறேன்.

வசந்தன், தங்கள் வருகைக்கும் நன்றிகள்.

said...

வணக்கம்.

இன்றுதான் பார்த்தேன். அருமையான மறக்க முடியாத நிகழ்வுகள்!தங்களிடம் இந்த மாநாட்டுப் புகைப்படங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்திருக்கலாம். எனக்கும் அவை தேவைப்படுகின்றன. உதவுவீர்களா?

said...

வணக்கம்... பேராசிரியர். பூலோகசிங்கம் அவர்கள் எனது நெருங்கிய உறவினர்... அவரது தற்போதைய உடல்நிலை மோசம என அறிகிறேன்.. தயவு செய்து ஏதும் தகவல் கூற முடியுமா.. என்னிடம் எந்த வித தொடர்பு முகவரியும் இல்லை.. முடிந்தால் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி பெற்றுத்தரவும்... நான் அவரது பிறந்த மண் வவுனியாவில் வசிக்கிறேன்....

said...

வணக்கம் மதுரகன், பேராசிரியர் பூலோகசிங்கம் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக தகவல்களை அறிந்து தருகிறேன். உங்கள் மின்னஞ்சலைத் தந்தீர்களானால் தொடர்பு கொள்கிறேன்.

said...

நீண்ட காலதாமதத்திற்கு மன்னிக்கவும்
mathurahan@gmail.com