கலைஞர் கருணாநிதி தொல்காப்பியர் விருது பெறுவதை சாத்தியமாக்கியவர் சி.வை. தாமோதரம்பிள்ளையே!
தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பான தொண்டாற்றியவர்களுக்கு இந்த ஆண்டு (2006) முதல் தொல்காப்பியர் விருது வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்து இதன்படிமுதல் ஆண்டு விருதை பாமரரும் புரிந்து கொள்ளும் இலகு தமிழில் தொல்காப்பிய பூங்கா எழுதிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு வழங்குவதெனவும் முடிவு செய்திருத்தல் தெரிந்ததே!.
சென்னை கலைவாணர் அரங்கில் செப்டெம்பர் 4 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் இஸ்லாமியத் தமிழரும், தமிழ் அறிஞருமாகிய இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இவ்விருதினை வழங்குகிறார். ரூபா ஒரு இலட்சம் ரொக்கமும், தொல்காப்பியர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும், வெள்ளியில் ஆன பட்டயமும் இவ்விருதில் அடங்கும்.
வழக்கமாக தகுதிச் சான்றிதழை எழுத்துக்களில் வடித்துப் பட்டயம் வழங்கும் முறையை மாற்றி ஓவிய வடிவில் பட்டயம் வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமரரும் புரிந்து கொள்ளும் இலகு தமிழில் தொல்காப்பியப் பூங்கா எழுதிய தமிழக முதல்வர் கருணாநிதி இவ்வாறு பாராட்டப்படுவதாக ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம வீரப்பன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஆயினும், இராம வீரப்பன் இங்கு குறிப்பிடத் தவறிய தகவலும் ஒன்றுண்டு. பாண்டிய மன்னன் கைகளுக்கே கிட்டாததாக வழக்கில் இல்லாது அருகிவிட்டதாகக் கருதப்பட்டு வந்த தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைத் தமது அரும் பெரும் முயற்சிகளினால் தேடிக் கண்டடைந்து ஒப்பிட்டுப் பரிசோதித்து மீள்வித்துத் தந்ததுடன், தொல்காப்பியத்தின் ஏனைய பாகங்களுடன் அதனை முழுமையாக நூலுருவில் தந்ததன் மூலம் தொல்காப்பியர் விருது பெறும் நல்வாய்ப்பினை தமிழக முதல்வர் கருணாநிதிக்குச் சாதகமாக்கித் தந்திருப்பவர் தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் என்பதே இராம வீரப்பன் குறிப்பிடத் தவறிய அத்தகவலாகும்.
தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தொல்காப்பியர் விருது வழங்கும் வைபவத்திலேனும் தொல்காப்பியத்திற்கே வாழ்வளித்த தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் தாம் தொல்காப்பிய பூங்கா எழுதியதால் தமிழக முதல்வர் கருணாநிதி சம்பந்தப்பட்ட விருதினைப் பெறுவதையும் சாத்தியப்படுத்தியவர் எனும் தகவல் பகிர்ந்து கொள்ளப்படுமா?
தமிழக முதல்வர் கருணாநிதி தொல்காப்பிய பூங்காவினை எழுதுவதன் மூலம் மேற்படி விருது பெறுதலைச் சாத்தியப்படுத்துவதாக முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்துக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் அறிமுகத் தொடர்பினைத் தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை.தாமோதரர் எங்ஙனம் ஏற்படுத்தித்தந்திருந்தார் எனும் வரலாற்று உண்மை பகிரங்கப்படுத்தப்படுமா?
விருது வழங்கும் நிகழ்வையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதியில் இருந்தேனும் தமிழக முதல்வர்கள் சி.வை.தா.வின் பிறந்த நாட்களில் அன்னாரைக் கௌரவிக்கும் சிறப்புச் செய்தியை வெளியிடும் புதிய வரலாற்றினை தொல்காப்பியப் பூங்கா விருது பெறும் கலைஞர் மு.கருணாநிதி ஆரம்பித்து வைத்தல் வேண்டும்.
சென்னை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் போது தமிழ் வளர்த்த பெரியார்களுக்கு சிலைநிறுவிப் பெருமைப்படுத்திய கருணாநிதி, தாமோதரரை அப்போது தவறவிட்ட குறையைத் திருத்திக் கொள்வதற்கு ஏனைய வேறு வழி கிடையாது. ஆகவே , தாமோதரர் பிறந்த நாளான செப்டெம்பர் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.கருணாநிதி தொல்காப்பியத்தை மீள்வித்துத் தந்த தாமோதரரைப் போற்றும் சிறப்புச் செய்தி வெளியிடுதல் வேண்டும்.
நன்றி: தினக்குரல்
September 03, 2006
Subscribe to:
Posts (Atom)
