உடைப்பு
அ. வி. மயில்வாகனன் B. A.
(மறுமலர்ச்சி இதழ் ஏப்ரல் 1946)
சிலாப வட்டாரத்துள்ளே தனித்தமிழ் வழங்குவோர் வாழும் சிற்றிடம் ஒன்றுண்டு. அங்கே, முன்னேவனநாதர் தோன்றிய காலத்திலேயே தமிழர், தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறி விட்டனர். யாழ்ப்பாணத்தவரைப் போலவே அவர்களும் சிங்கள நாட்டாருடன் தொடர்பு வைக்காது தம் மொழிச் சுத்தம், வாழ்க்கைத் தூய்மை முதலியவற்றைப் பாதுகாத்து வந்தனர்; இன்றும் பாதுகாக்கின்றனர். ஆதலினால் இலங்கையின் இப்பகுதியிலே பிரயாணம் செய்யும்போது யாழ்ப்பாண நினைவுகள் தோன்றும்.
படம் நன்றி: தமிழ்நெட்
உடப்பு மனிதர் மிகுசமர்த்தர். உடல் நலம் மிக்குடையார். உயர்ந்த சமயப்பற்றும் சமரசநோக்கும் உடையார். இவர்கள் அன்றாடம் உழைத்து வயிறு நிரப்புபவர்கள். ஆயினும் இவர்களிடம் பணம் இல்லாமலும் இல்லை, கடற்றொழிலாளருக்கு அரசினர் வழங்கும் சலுகைப் பணம், மொத்த மூலதனமாக இவர்களுக்கு வருடாவருடம் கிடைப்பதுண்டு. அதற்குச் சங்கங்கள் கூடி, அக்கூட்டங்களிலே செலவிடு முறையும் பிறவும் ஆராய்வார்கள்.
இந்த நாட்டுப் பணக்காரரின் அடக்கம் யாவும் திரௌபதி அம்மனுக்குப் பூசையும் விழாவும் எடுக்கையில் நன்கு விளங்கும். இங்கு இரண்டேயிரண்டு மேல்வீடுகள் உள்ளன. அவையும் பழைய முறைப்படியே எழுந்த கட்டிடங்கள், கடலை நாலாபக்கத்திலும் என்றும் மோதிக்கொண்டிருப்பினும், நாகரிக அலையோ இங்கு மாமாங்கம் போன்றே அடிக்கும். இவர்களுடைய நிலையியற் பொருட்கள் உடப்பிலன்றிக் கிழக்கே பெரு நிலத்திலேயே உள்ளன, ஆயினும், இவர்கள் தம் நாட்டிலன்றி வேறிடத்தில் வசிப்பதில்லை, கடற்றொழிலுக்கு எங்கும் திரிந்தாலும், சில மாதங்களிலே 'பொருள் வயிற் பிரிந்தார்' திரும்பு முறையில் திரும்பிவிடுவர்.
இவர்கள் பழைய முறையிற் கல்விகற்பர்; நாடகமாடுவர்; பாடுவர், படிப்பர், எங்கள் பழைய காலத்து நாட்டுக்கூத்தைப் பார்ப்பதானால், அதனை அப்படியே வாழைக்குற்றி மேலேற்றிய தீபத்தின் வெளிச்சத்தில் இன்றும் உடப்பிலே காணலாகும். இங்கே பஞ்சபாண்டவரின் பதினெட்டுநாட்போரும் மிக அழகாக நடிக்கப்படும். திரௌபதி துரியோதனனின் மார்பைப் பிளந்து இரத்தமெடுத்துத் தன் கூந்தலிற் பூசி முடிவது பார்க்கப் பயங்கரமாக நடிக்கப்படும்.
விருந்தினரை உபசரிப்பதில் உடப்பு மனிதர் யாழ்ப்பாணத்தவர்க்குப் பின் நில்லார், பலநாட் பழகினும் தலைநாட் பழகியோரைப்போலத் தலையாய அன்பு பாராட்டி உவந்தேற்பர்; அன்பிற் குழைத்த அமுதினையே ஆரவுண்ண உவந்தளிப்பர்; விருந்துவிட்டுச் செல்லும்போது பன்முறை பிரியாவிடையும் தருவர்.
இவர்களுடைய கோயிற் புதுமைகள் சில, எமக்குப் பெரு வியப்புத்தருவன, பதினெட்டு நாளும் கோயிலில் விழா நடக்கும்பொழுது, ஒரு கும்பம் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்விழும்பில் ஒரு வாள் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்படும். அதனை வைக்கும் கோயிற் பூசகர், வேலனாடுபவர்போல் ஆவேசம் கொண்டுதான் அதனை வைப்பர்; அதுவும் அருள்வலியால் நிற்கும், ஆனால், சிறிது நேரத்தில் விழுந்துவிடும். இப்படியே பதினெட்டு நாளும் வாள் வைக்கப்படும். கடைசி நாளில் இவ்வாள் ஓர் இரவும் ஒரு பகலும் சிறு திட்டமாக நிற்கும். இதனை யான் கண்ணாரக் கண்டேன், அந்தக் கடைசித் தினத்தில் இதன் வலிமை உச்சநிலை ஏறிவிடும் என்பது துணிபு. இந்த வாள் தான் பாண்டவரின் போர்முனையில் மேற்செல்வதும், துரியோதனன் மார்பைக் கிழிப்பதும், உதிர இரசம் பருகுவதும்.
படம் நன்றி: விக்கிமீடியா பொது
மற்றது தீமிதிப்பு. கதிர்காமத்தில் பத்தியோடு தீமிதிப்பு நடக்குமென்பர். இங்கே பத்தி இல்லாமலில்லை. அதுவும் உண்டு, ஆனால், இத் தீமிதிப்பைப் பார்த்து நிற்போருக்கு மனத்தில் வேறாகத் தென்படும். நாம் நாளாந்தம் உண்பதுபோலவோ உறங்குவதுபோலவோ இத் தீமிதிப்பு நிகழுகிறது. சிறு பாலர் தொடக்கம் விழுகிறவர் வரை பெண்கள் உட்படப் பலர், பல முறை தீயுட்சென்று மீள்வர். சுமார் 200 பேர் யாதொரு கவலையுமின்றித் தழல்மேற் சென்று வருவதைப்பார்க்க, இது ஒரு போட்டி முறையில் நிகழ்வதுபோலவே தோன்றும்.
படம் நன்றி: விக்கிமீடியா பொது
இங்குள்ளோர்களின் பெயர்களைக் கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். 'உடப்பாத்தி'யர் பெயர் வரிசையிற் சிலவற்றைப் பார்க்கலாம்:
கதிர்காமத்தையா, கதிரம்மை, ஐயாத்தைக்குட்டி, மருந்து விச்சி, சின்னமாமி, அஞ்சிக்குட்டி, பொக்காளி, பூவாய், மோனம்பா, பிச்சைக்காரி, பிச்சைக்காரன், சல்லராக்கு. கனசம்மா, பிச்சைமண்டாடி, சம்மாட்டி, சின்னாத்தாள், அடப்பனாக்குட்டி, சாத்தக்கா, சரவணம், வைரடப்பன், பூவடப்பன், மூக்குத்தி, திமிங்குமுத்து.
இவற்றின் தோற்றம் ஆராய்ச்சிக்கு இடமளிப்பது.
ஏனைய இடங்களைப்போலன்றி உடப்பு நாட்டில் மனிதரின் பெயர்கள் விசித்திரப் பொருளுடையனவாய்க் காணப்படுகின்றன, இவ்வூரவர்கள் தனிப்பட்ட வாழ்வு வாழ்வதே அதற்குக் காரணம்போலும். இவர்களுக்கு இலங்கையிலும் பார்க்க இந்தியத் தொடர்பு கூடிய அளவு முன்பு இருந்ததாயினும் இப்பொழுது அப்படிக் கூறுவதற்கில்லை. என்றாலும் பல்வேறு வித்தியாசங்கள் தோன்றுகின்றன.
நல்லராக்கு, குரிசில், குரிசு, இராக்குரிசு, நல்லராக்குரிசு: இவ்வூர்வாசிகளால் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகின்ற இராக்குரிசு என்ற பெண் தெய்வத்திற்கு முந்தல் என்னுமிடத்தில் ஒரு கோயில் உண்டு. அதற்கு உடப்பு மனிதர் நேர்த்தி செய்வர். தங்கள் பிள்ளைகளுக்கும் நல்ல, முத்து என்னும் அடைகளையும், அப்பன், ஆய் என்னும் விகுதிகளையும் இராக்குடன் கூட்டிச் சூட்டி விடுவர். ஆண் நல்லராக்கப்பன் எனவும் பெண் முத்துராக்காய் எனவும் தோற்றுவர். (ஆய்= ஆய்ச்சி)
மூக்குத்தி: பெற்றார் தம் குழந்தைகள் ஒன்றன் பின்னொன்றாக இறப்பதைக் கண்டு வருந்தி, தம் மூன்றாம் ஆண் குழந்தைக்கு மூக்கிலே குத்தி வடுப்படுத்தினால் குழந்தை இறவாது உயிருடனிருக்கும் என்னும் கொள்கையுடையர். ஆதலின் அப்படிச் செய்து வேறு பெயரும் இடுவர். பின்பு அவர்கள் சந்ததிக்கே, மூக்குக் குத்தாத ஆண்களுக்கும் இப் பெயர் சொந்தமாகி விட்டது.
சம்மாட்டி: சம்மான் + ஓட்டி, சம்மான் என்பது சிறு தோணி அல்லது பாதை. அதனை ஓட்டுபவன் சம்மானோட்டி எனப்பட்டான். இது நெய்தல் நில மக்களுக்குப் பெயராக மாறி இப்பொழுது சாதாரணமாக எல்லோர்க்கும் இடப்படுகிறது.
மண்டாடி: மண்டு+ஆடி.. கடற்றொழில் செய்யும் 20, 30 பேரைக் கொண்ட ஒரு கூட்டத்தாரை மேற்பார்வையிடுவோன் மண்டாடி. அவனுடைய உத்தரவுப்படியே தொழில் நிகழும். இது இப்போது குடும்பப் பெயராகிவிட்டது. இது மன்றாடி (மன்று + ஆடி) = சிவபெருமான் என்றும் பொருள்படலாம்.
நம்பாய்: நம் + அம்பு + ஆய். தேவி வழிபாட்டாளர் சூட்டும் பெயர். அம்பாள் என்னும் பெயர் அம்பாவாகக் குறுகிப் பின் அம்பாய் என்றும் வந்திருக்கலாம்.
ஐயாத்தைக் குட்டி; ஐயன் + ஆத்தை+குட்டி, இது பெண்களுக்கு வழங்கும் பெயர். குட்டி என்பது இப்பாகங்களில் இளம் பெண்களுக்குப் பொதுவாக வழங்கும் பெயர், “எங்கே குட்டி போகிறாய்” என்று இருபது வயதுப் பெண்ணையும் கேட்பார்கள். ஐயாத்தைக் குட்டி என்பது ஐயனைப் பெற்ற தாயாகிய பெண் எனலாகும். இவ்வூரவர்கள் பாண்டவதாசர்கள். ஆதலால் பாண்டவர்களாகிய ஐயம்பெருமாளையும் வணங்குவர்.
பூவடப்பன்: அடப்பன் என்பது நெய்தல் நில மக்களுக்குப் பெயர். பூ, வைரம் முதலியன அடையாக இதனுடன் வரும். பூ+ ஆடு+ அப்பன் = பூவடப்பனாக வந்திருத்தலும் கூடும்,
இவ்வூரவர் இந்தியாவிலும் கடற்கரையோரம் குடியிருந்து, பின் மன்னார், புத்தளம், முந்தல் முதலிய இடங்களில் சிற்சில காலம் தங்கி, ஈற்றில் இங்கு வந்தவர், தமது நிலப்பெயர்களையும் தம்முடன் கொண்டுவந்துள்ளனர். இப்படிப்பட்ட பெயர்களும் கருத்துக்களும் உடப்பு மக்களின் சரித்திரத்தை எழுதும்போது ஆதாரமாக வரக்கூடியன.
எழுதியவர்: அ. வி. மயில்வாகனன் B. A.
1946 ஏப்ரல் மாத மறுமலர்ச்சி இதழில் வெளிவந்தது.
நன்றி: http://www.noolaham.org