January 10, 2007

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது. அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்." - பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்



1974 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3 ஆம் நாளன்று யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆமாம், நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்துவதற்கான எற்பாடுகள் அனைத்தும் மிகவும் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டைத் தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மகா நாட்டு மண்டபத்தை இலவசமாக உதவுவதாக முன்னர் அறிவித்திருந்த சிறிமாவோ அம்மையாரின் அரசோ, இப்போது மகா நாட்டு ஏற்பாடுகளையே குழப்பும் எத்தனத்தில் இறங்கியது.

பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டதும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டதுமான வீரசிங்கம் மண்டபத்தினதும் மற்றும் அரசு ஆதரவாளர் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ். திறந்த வெளியரங்கின் உபயோகமும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு முதலில் மறுக்கப்பட்டது. அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் அவ்வாறே மறுக்கப்பட்டன. எனவே, மாற்று ஒழுங்காக தனியார் மண்டபங்களை மாநாட்டு அமைப்பாளர்கள் எற்பாடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

மேலும், மாநாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமையால் பொதுத் தொடர்பு ஊடகங்களான பத்திரிகைகளும், வானொலியும் மாநாடு நடைபெறாது எனும் ஐயப்பாட்டையே தோற்றுவிக்கத் தலைப்பட்டன. அரசு ஏற்படுத்த முனைந்த பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் "1974 , தை 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ். நகரில் இடம்பெறும் எனும் வாசகம் மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் பேரம்பலம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கட்டணம் அறவிடாதே இத் தீவு பூராவும் இருந்த தமிழ் திரைப்படமாளிகைகளின் காட்சிகள் தோறும் அவற்றின் திரைகளில் காண்பிக்கப்பட்டன. அரசின் இருட்டடிப்பு முயற்சி இவ்வாறே வெற்றிகொள்ளப்பட்டது.

அந்நிலையில் செய்வதறியாது திகைத்த அரசு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தீவுக்கு வருகைதந்திருந்த அறிஞர்களையும், பார்வையாளர்களையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே நாடு கடத்தியது. அவ்வாறு நாடு கடத்தப்பட்ட தமிழ் அறிஞர்கள், பார்வையாளர்கள் அவரவர் நாட்டுத் தலைநகரங்களில் வைத்து சர்வதேச பத்திரிகையாளர்களிடம் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவாறு தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்குப் பறைசாற்றினர்.

இருப்பினும், சென்னையில் இருந்தே வருவாரென எதிர்பார்க்கப்பட்ட பார்வையாளரான உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜனர்த்தனன் மட்டும் விதிவிலக்காக நாட்டினுள் பிரவேசிக்க முடிந்தது. மலேயா சென்று சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த டாக்டர் ஜனார்த்தனன், மலையகத் தமிழ் பகுதிகளில் தமது விஜயத்தை முடித்துக்கொண்ட பின்பே யாழ்ப்பாண மாநாட்டை வந்தடைந்தார்.

தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த நாளுக்கு மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த போதே மாநாட்டை நடத்துவதற்கான அங்கீகாரம் அரசினால் வழங்கப்பட்டது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையையே ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன.

யாழ். நகரோ சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் இந்திர விழாக் கோலம் காட்டி நிற்க, 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை மாநாடு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

முடிவடைந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அயல் நாட்டு அறிஞர்களுக்கான வழியனுப்பு விழா மறுநாள் 10 ஆம் திகதி யாழ். திறந்த வெளியரங்கில் நடைபெற்றிருத்தல் வேண்டும். ஏற்பாடுகளின்படி யாழ். திறந்தவெளியரங்கு அதற்கெனத் தயார்நிலையில் இருந்துள்ள போதும், அதன் புறப்படலைகளோ பூட்டப்பட்டிருந்தன. யாழ். மாநகர முதல்வர் ஏ. ரி. துரையப்பாவிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே அரங்கின் புறப்படலைகள் திறக்கப்படும் என்று அரங்கின் காப்பாளர் தெரிவித்திருந்தார். யாழ். மாநகர சபை மேயர் தெரிவு இடம் பெறும் சந்தர்ப்பங்களில் சபை உறுப்பினர்கள் காணாமற் போவது வழமையே. அப்போதோ மாநகர முதல்வரே தலைமறைவாகி விட்டார். அவரது இருப்பிடம் அறியப்படாத நிலையில் வீரசிங்கம் மண்டபத்திலே மேற்படி வழி அனுப்பு விழாவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

வழியனுப்பு விழாவிற்குத் திரண்டு வந்திருந்த ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்களை, மண்டத்தில் உள்ளடக்க இயலாத நிலையில் மண்டபம் முன்பாக அதற்கும் தெருவிற்கு இடைப்பட்ட நிலத்தில் நிறுவப்பட்ட திடீர் மேடையில் வழியனுப்பு விழா ஆரம்பமாக தெருவிற்கு மறுபக்கத்தில் புல்தரையில் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

போக்குவரவுக்குத் தெரு மூடப்பட்டிராத போதும் மேடைக்கும் பொது மக்களுக்கும் இடையே பயணிக்க வேண்டாமென்று இரு புறத்தும் பணிபுரிந்த தொண்டர்களால் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில், ஊர்திகள் யாவும் மாற்றுப் பாதையையே உபயோகித்தன. அதே பாதையால் மோட்டார் சைக்கிளில் வந்த போக்குவரவுப் பொலிஸ் அதிகாரி சேனாதிராஜாவும் பார்வையாளர்களுக்கும் மேடைக்கும் குறுக்கே பயணியாது சுற்று வீதியூடாக யாழ்.பொலிஸ் தலைமையகம் சென்றடைந்தார்.

அதனையொரு சாட்டாக எடுத்துக் கொண்டு, அப்போதுதான் அனுராதபுரத்தில் இருந்து வந்தடைந்த கலகம் அடக்கும் பொலிஸார் பார்வையாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர். வெண்கலக் கடையில் புகுந்த யானைகளின் அட்டகாசம் போன்று, விழா நிகழ்வுகளை அமைதியாக செவிமடுத்து கொண்டிருந்த அப்பாவிப் பொது மக்கள் மீது காரணமின்றி கலகம் அடக்கும் பொலிஸார் குண்டாந்தடியடிப் பிரயோகம் செய்து, வகை தொகையின்றி கண்ணீர்குண்டுகளையும் எய்து உச்சவலு மின் கம்பிகள் அறுந்து விழும்படியாக துப்பாக்கிக் குண்டுகளையும் தீர்த்தனர். சம்பவித்த அசம்பாவிதத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது.

உச்சவிசை மின் கம்பிகளில் சிக்குண்ட ஒன்பது தமிழர் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டனர். யாழ்.மத்திய பஸ் நிலையம் வரை அடித்து விரப்பட்ட மக்கள், ராணி படமாளிகையில் அடைக்கலம் தேட முற்பட்ட போதும் படமாளிகைக்குள்ளேயும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்டன.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கும் ஓர் எத்தனம் மேற்கொள்ளப்பட்டதாயினும், ஒரு கிறீஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்த்தனன் தலைநகர் கொழும்பு சென்றடைய இந்திய தூதுவரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்திர விழாக்கோலம் பூண்டிருந்த யாழ் நகரம், ஒரே நொடிப்பொழுதில் சோகமயமாகியது. முழு யாழ்ப்பாணமும் துக்கம் அனுட்டித்ததனால் அவ்வாண்டு தை முதல் நாளில் எந்தவொரு இல்லத்திலும் பால் பொங்கவில்லை, மாறாகத் தமிழர் உள்ளங்கள்தாம் கொதித்துப் பொங்கின. தமிழாராய்ச்சித் தியாகிகள் நினைவாக நிறுவப்பட்ட ஒன்பது நினைவுத் தூண்கள் இன்றும் யாழ்.வீரசிங்க மண்டபம் முன்பாக மேற்படி அனர்த்தத்தை நினைவுபடுத்துவனவாக அமைகின்றன. இந்த நினைவுச் சின்னத்தை ஸ்ரீலங்கா இராணுவம் பல முறை சிதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் தமிழர்கள் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியைத்தானும் அரசின் தலையீடு இல்லாது தாமே சுதந்திரமாக நடத்தவியலாதவாறு ஒடுக்கப்பட்டு வருதலை, உலகின் மனச்சாட்சிக்கு உறுத்திய முதல் வரலாற்றுப் பதிவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இப்பதிவின் தகவல்கள் திரு. சா.ஆ. தருமரத்தினம் அவர்கள் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. 4வது தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவராக இருந்த மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் பற்றிய எனது முன்னைய பதிவு இங்கே.