October 22, 2006

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி! - மேமன்கவி

அண்மையில் காலமான ஈழத்துக் கல்விமானும் பத்திரிகையாளருமான ஏ. ஜே. கனகரட்னா அவர்கள் பற்றிய எனது நினைவுப் பகிர்வு ஒன்றில் ஈழத்துக் கவிஞர் மேமன்கவி அவர்கள் இட்ட பின்னூட்டத்தைத் தனியே ஒரு பதிவாக இங்கு இட்டிருக்கிறேன்.

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி!

ஆளுமைமிக்க ஆகிருதி
ஒன்றின் மரணம் தரும்
மௌனம்-

அது அதன்
உடலின் நிரந்தர உறக்கம்
அதுவே விழிப்பாகி....
விரிந்த மேசையின் பரப்பில்
ஒடுங்கிய புத்தக அடுக்குகளில்
இணைய உலாவிகளின் முடக்கங்களில்
உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது!

"எதற்குமே உரிமைக் கோராத
ஞானம்" பெற்ற
ஆகிருதியின் ஆக்கங்களுக்கே
அது சாத்தியம்.
அதன்-
திறன்களின் மீது
பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும்
புலர்வு
அருகே இருந்த மூளைகளில்....

பேசும் வார்த்தைகள் மௌனமாகிப் போக-
எழுதிய வார்த்தைகள் போல்
வாழ்ந்து போன வாழ்வு
அந்த புலரவின் பிரகாசத்தில்
உரத்து வாசிக்கப்படும்.

"ஏ.ஜே" எனும்
மறையாத ஆளுமை
மிக்க
ஆகிருதியும்
அதுவான ஒன்றுதான்!

- மேமன்கவி

அமரர் ஏ. ஜே. கனகரத்னா விக்கிபீடியாவில்.


October 15, 2006

ஏ.ஜே. பற்றிய நினைவுப்பகிர்வு- கா. சிவத்தம்பி

ஈழத்து இலக்கிய செழுமைக்கு பணிபுரிந்த விமர்சக அறிஞன் ஒருவனின் மறைவு
-பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி-

சென்ற வாரம் ஏ.ஜே.கனகரத்னா கொழும்பில் தனது சகோதரர் இல்லத்தில் காலமானார். நீண்ட காலம் சுகவீனமாக இருந்த அவர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக வந்த பின்னர், தான் விரும்பியபடி யாழ்ப்பாணம் செல்ல முடியாது கொழும்பிலேயே காலமானார். அவரது வேண்டுகோளை நிறைவேற்ற விரும்பிய அவரது குடும்பத்தினர் மிகுந்த அமைதியான சூழலிலே இறுதிக் கடன்களை செய்ய விரும்பினர். உண்மையில் சில நண்பர்களின் வாய்மொழி மூலமாகவே தகவல் பரப்பப்பெற்றது. ஒருவர் மற்றவருக்கு கூறி பரவிய செய்தி தமிழ் வானொலிகளிலும் தமிழ் அச்சு ஊடகங்களிலும் ஆங்கில அச்சு ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்ட ஒரு செய்தியாக மாறிற்று. ஏ.ஜே.கனகரத்னாவின் பணிகள் வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய சமூக பிரக்ஞையே ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏ.ஜே. கனகரத்னாவுக்கு இலங்கையின் தமிழ் இலக்கிய வட்டாரங்களிலும் ஆங்கில இதழியல் வட்டாரங்களிலுமுள்ள தன் மதிப்பின் இயல்பான வெளிப்பாடாகும். ஏறத்தாழ கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துலகில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லையெனினும், அவர் பற்றிய சமூக மதிப்பீடு எத்துணை உண்மையானதாகவும் ஆழமானதாகவுமிருந்தது என்பதை இது காட்டுகின்றது.

தன் திறமைகளை தானே தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள முயன்ற ஒரு நுண்ணிய நெஞ்சினை மிகச் சரியான முறையில் தமிழ் இலக்கிய உலகு மதிப்பிட்டிருந்தது. இந்த சம்பவத்தினால் தெரிய வந்தது. இந்த மதிப்பின் தளமாக அமைந்த அவரது சாதனைகள் யாவை? அவைபற்றிய விபரிப்பில் இறங்குவதற்கு முன்னர் அவர் தொழிற்பட்ட காலம் அந்தப் பணிகளின் வீச்சு பற்றி ஓர் அறிமுக குறிப்பு அவசியமாகின்றது.

ஏறத்தாழ 1960களில் மலரத் தொடங்கிய ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பல்துறைப்பட்ட வளர்ச்சி வரலாற்றில் ஏ.ஜே. கனகரட்னா என்பது ஒரு முக்கியமான பெயராகும். அந்தக் காலத்து வரலாறு எழுதப்படும் பொழுது கரகரத்னாவின் பணிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் அந்த வரலாற்றையே நிறைவு செய்ய முடியாது. அந்த இலக்கிய வளர்ச்சிகளின் முக்கிய உந்து சக்திகளில் ஒருவராக அவர் விளங்கினார்.

இன்று பின்நோக்கி பார்க்கும் பொழுது ஏ.ஜே.கனகரத்னாவின் மிகப் பெரிய பங்களிப்பு, அவர் வளரும் ஈழத் தமிழ் இலக்கியத்தின் செழுமையை ஆங்கிலம் மூலமாக உலகறியச் செய்தார். அதேவேளையில், தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கிய உலகின் வளர்ச்சிகளை தமது எழுத்துகளின் மூலமும் தமது கலந்துரையாடல்கள் மூலமும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்தப் பணியினை, குறிப்பாக இரண்டாவது பணியினை அவர் நடத்திய முறைமை அவரை அக்காலத்தில் நிலவிய இலக்கிய விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாலான ஒருவராக வைத்திருந்தது. உண்மையில் வேறுபடும் கருத்து நிலையினர் ஒவ்வொருவரும் அவரை தம்பக்கத்து ஆள் என்றே கூறிக் கொண்டனர். இதற்கு நல்ல உதாரணமாக அமைவது `மல்லிகை' வழியாக ஜீவாவுடனும் அவரது நண்பர்களுடனும் வைத்திருந்த தொடர்புகளும் எஸ்.பொ., இளம்பிறையுடனும் அவருக்கிருந்த தொடர்புமாகும்.

அவருடைய ஒரே ஒரு பிரசுரமாக இன்றுள்ள `மத்து' கட்டுரைத் தொகுதி எஸ்.பொ.வே முன்னின்று வெளியிட்டிருந்தார். ஆனால், ஏ.ஜே. யோ இந்த சர்ச்சைகளுக்கு அப்பாலானவராய், முகில்களுக்கு மேலேயுள்ள மலை விளக்குப்போல பிரகாசித்துக் கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பாக இப்பொழுது மேல் நாடுகளிலே உள்ள சில இலக்கிய ஆர்வலர்களும் புரவலர்களும் அவரை முற்போக்கு வாதத்தின் எதிர்நிலை விமர்சகராக காட்டுவதில் மிகுந்த சந்தோசப்பட்டனர்.

மேலே கூறியதைப் போல இந்த முகில்கள் அந்த சூரியனை பாதிக்கவில்லை.

பிற்காலத்தில் அவர், குறிப்பாக இளைப்பாறியதன் பின்னர் ஈழத்து இலக்கிய படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்துள்ளார். நண்பர் மு.பொ.வின் `பொறிக்குள் அகப்பட்ட தேசம்' என்ற நீண்ட அற்புதமான கவிதையை அவர் ஆங்கிலத்திலே மொழி பெயர்த்துள்ள முறைமை அந்த மொழியின் பண்பாட்டுக் கூடாக மு.பொ.வின் கருத்தை, கவித்துவத்தை வெளிக்கொணர்வதாகவுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இவருடைய எழுத்துக்கள் ஒன்று சேர்க்கப்படவில்லை. `மத்து' தொகுதியை கொண்டு வந்ததற்காக எஸ்.பொ. போற்றப்பட வேண்டும். அவருடைய தமிழ் எழுத்துகளை தொகுப்பது ஒரு புறமாக, மறுபுறத்தில் அவர் செய்த ஆங்கில மொழி பெயர்ப்புக்களை ஒரு தொகுதியாக்கி பிரசுரிக்க வேண்டுவது அவசியமாகும். கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இத்துறை ஆர்வலர்கள் ஈடுபட வேண்டுமென்பது எனது பெரு விருப்பமாகும்.

ஏ.ஜே.பற்றி வெளிவரவிருந்த மலர் ஒன்று இதுவரை எனது கைக்குக் கிட்டவில்லை. அதற்கு நான் எழுதிய கட்டுரை பற்றியும் பின் தகவல்கள் எதுவுமில்லை.

பரந்து நின்ற ஆலமரம் விழுந்ததன் பின்னர் அது நிறைந்திருந்த இடம் `வெளி'யாக தெரிவதுபோன்று ஏ.ஜே.யின் மறைவு அவருடைய முக்கியத்துவத்தை இப்பொழுது உணர்த்துகின்றது.

ஏ.ஜே.யின் இலக்கிய ஆளுமைக்குள் முக்கியத்துவம் அவரது ஆசிரிய பணிக்கும் உண்டு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 15 வருடங்களுக்கு மேல் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்கும் ஆங்கில போதனாசிரியராக அவர் கடமையாற்றினார். அவரது வகுப்புகளை மாணவர்கள் பெரிதும் விரும்பினர். அவருடைய பிரிவுக்கு சாராதவர்கள் கூட அவரது வகுப்புக்கு செல்வதுண்டு. உண்மையில் அவரது ஆங்கில மாணவர்கள் பலருக்கு அவருடைய இலக்கிய ஆளுமை பற்றித் தெரியாது. அவரையொரு தலைசிறந்த ஆசிரியராக கருதினர். பெரு மதிப்பும் வைத்திருந்தனர். தொழில் நிலையில் அவர் ஆசிரியராகவும் இதழியலாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.

இவருடைய சிறப்புக்கான தளம் இவருக்கு இருந்த ஆழமான ஆங்கில அறிவும் தமிழ் இலக்கிய பரிட்சயமும் ஆகும். தன்னுடைய ஆங்கில அறிவை தமிழிலே தமிழ் நிலைப்பட எடுத்துக் கூறும் ஆற்றல் அவரிடத்து இருந்தது.

இதனால் அவர் வழியாக ஆங்கில இலக்கிய பரிச்சயம் தமிழ் மொழி வழிவந்த எழுத்தாளர்களுக்கு கிட்டிற்று. இந்த எடுத்துரைப்பும் தொடர்பாடலும் இத்துணை நேச நிலைப்பட்டதாகவும் நட்பிறுக்கம் கொண்டதாகவும் அமைந்தமைக்கு காரணம் அவரது ஆளுமையின் இயல்பே ஆகும்.

ஏ.ஜே.கனகரத்னா என்றுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவரல்ல. தன் பாதையிலே போவார். ஆனால், அதற்காக எந்த விதமான புறவெளிப்பாடுகளையும் காட்டிக் கொள்ள மாட்டார்.

அவரிடத்து மிகுந்த அபிமானம் கொண்டவர்களே அவரது நண்பர்களாகினர். மிகச் சிறிய ஒரு தொகையினரே அவரது நண்பர்களாக விளங்கினர். அவருக்காக பல பணிகளைச் செய்தவர்கள், அவரை தமது பெற்றோரைப் போல பாதுகாத்து வந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் அவர்கள், அந்த அளவில் ஏ.ஜே.புண்ணியம் செய்தவரும் கூட. தனி மரமாக நின்ற அவரை கிருஷ்ணகுமார் தம்பதியினர் நன்கு பராமரித்தனர். அவரது மிக நெருங்கிய இன்னொரு நண்பர் ஆங்கிலத் துறையில் கடமையாற்றும் சிவகுருநாதன் ஆவார். சிவகுருநாதன் இல்லாவிட்டால், ஏ.ஜே.எப்பொழுதோ பல்கலைக்கழக பணியைக் கூட விட்டெறிந்திருப்பார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவரை ஆங்கில இலக்கிய துறைக்கான விரிவுரையாளராக நியமிக்க முடியாது போனமை உண்மையில் பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட ஒரு நஷ்டமாகும். நியமன விதிகள் தடை செய்தன. ஆனால், அங்கு ஆங்கில இலக்கியம் கற்பித்த செல்வா கனகநாயகம் முதல் சுரேஷ் கனகராஜா வரை பலர் அவரது ஆங்கில அறிவை மெச்சிப் போற்றியவர்களாவர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏ.ஜே.க்கு இருந்த இந்த இடம் பல அசௌகரியங்களை ஏற்படுத்திற்று. அவருடைய நண்பர்கள் பலர் பேராசிரியர்களாகவும் அவரது புலமையால் பயன் பெற்ற பலர் விரிவுரையாளர்களாகவும் கடமையாற்ற இவர் ஆங்கில போதனாசிரியர் என்ற நிலைக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு உலவி வந்தார். ஏ.ஜே.யிடமிருந்த மிகப் பெரிய பலவீனம் அவர் தன்னைத் தான் மறைத்துக் கொள்வத்றகுப் பயன்படுத்திய பழக்கம் ஆகும். ஏ.ஜே.யின் நீராகார பழக்கம் பிரசித்தமானது. அவர் தன்னை அதற்குள் மறைத்துக் கொண்டாரா அல்லது அது அவரை மறைத்துக் கொண்டதா என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. நான் அறிந்த வரையில் இரண்டுமே நடைபெற்றன. ஆனால், எக்காலத்திலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

`டெயிலி நியூஸ்'ஸில் உதவி ஆசிரியராக இருந்த பொழுது அவருக்கு ஒரு திடீர் பதவியேற்றம் வழங்கப் பெற்றது. அனுபவ பதவியேற்றம் வழங்கப்பெற்றது. அனுபவஸ்தர்களான பல பத்திரிகையாளர்களுக்கு மேலே அவர் நியமிக்கப் பெற்றார். ஏ.ஜே.தான் அந்தப் பதவியை வகிக்க முடியாதென்று கூறினார். இறுதியில் இருந்த பதவியையும் இராஜிநாமா செய்து விட்டு `லேக் கவுஸு'க்கு வெளியே வந்தார்.

ஏ.ஜே.யின் அறிவுப்புலமையில் நிலவிய தன்னடக்கம் மிகப் பெரியது. ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பிலே இத்தகைய ஒருவரைக் காண்பது அரிது.

ஏ.ஜே.க்கும் எனக்கும் மிகுந்த நட்புறவும் புலமை ஊட்டம் பற்றி குறிப்பிடுவது என் நிலையில் முக்கியமாகவே படுகின்றது.

எனக்கு ஏ.ஜே.யை. பேராதனைப் பல்கலைக்கழக காலத்திலிருந்தே (1953-56) தெரியும். அவர் எங்களுக்கு ஜூனியர். ஆங்கிலத்தை சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தார். அக்காலத்து ஆங்கில சிறப்பு மாணவர்கள் சிங்களம், தமிழிலே பேசவே மாட்டார்கள். ஆனால், ஏ.ஜே.முற்றுமுழுதான விதிவிலக்கு. மெய்யியல் சிறப்புத் துறை மாணவர் கனகரத்னத்துக்கும் இவருக்கும் தெரியாத கந்தானை குடிநீர் நிலையங்கள் இல்லையென்றே கூறலாம். அத்தனையும் சுதேசிய மாத்திரமல்ல உள்ளூர் கலப்புத் தயாரிப்புகள். கனகரத்னாவின் உறவுகள் தமிழினை நிராகரிப்பனவாக அமையவில்லை.

இவர் `டெயிலி நியூஸ்'ஸில் கடமையாற்றிய பொழுது ஈழத்து தமிழ் சிறுகதைகளை வழக்கத்திலே மொழி பெயர்க்குமாறு என்னை ஊக்குவித்துள்ளார். டானியலின் `தண்ணீர்'க் கதையை நான் மொழி பெயர்த்தது இப்பொழுதுபோல இருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நான் கடமையாற்ற சென்றதிலிருந்துதான் (1978) அவருடனான எனது உறவு இறுக்கமானது.

நான் ஆங்கிலத்தில் எழுதிய அத்தனை நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்து பார்ப்பதற்கும் மெய்ப்புப் பார்ப்பதற்கும் நான் அவருடைய உதவியையே நாடுவதுண்டு. இதனை நான் எனது நூல்களில் எடுத்துக் கூறியுள்ளேன். உண்மையில் எனது பண்டைய தமிழ் நாடகம் பற்றிய ஆங்கில ஆராய்ச்சி நூலிலே காணப்பெற்ற அச்சுப் பிழைகளை தொகுத்து திருத்தி தந்தவர் அவரே. அது மாத்திரமல்லாமல், ஆங்கில இலக்கியத்தின் அவ்வக்கால வளர்ச்சிகள் பற்றி அவருடன் கலந்துரையாடும் வழக்கத்தினை தவறாமல் மேற்கொண்டிருந்தேன். என்னுடன் அவர் தமது புலமைத்துறைகள் பற்றி மனம் திறந்து உரையாடியதுண்டு. தன்னுடைய விமர்சனங்களையும் வாழ்த்துகளையும் அவர் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் நான் ஏ.ஜே.யை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நமது காலத்தில் புலமைத் தூண்களில் ஒன்றாகவே மதித்து வந்துள்ளேன். போற்றிவந்துள்ளேன். அந்தளவில் நம்மிருவரிடையேயும் ஓர் ஆள்நிலை ஊட்டம் நிலவி வந்தது. நான் கொழும்புக்கு வந்த பின்னர் தடைப்பட்டுப் போயிருந்த அந்த உறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. தொலைபேசியில் பேசிக் கொள்வேன். கடந்த ஒன்றரை மாதங்களாக பேசவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

ஏ.ஜே.யினுடைய அறிவுத் திறத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. அவர் ஐ.சி.ஈ.எஸ்.க்காக பதிப்பித்துள்ள றெஜி சிறிவர்தனாவின் எழுத்து திரட்டின் முதலாம் பாகமாகும். அந்நிறுவனத்தின் பொறுப்பாளரான திரு. தம்பிராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க ஏ.ஜே. அந்தப் பதிப்பு பணியை மேற்கொண்டார். அத்தொகுதிக்கு அவர் எழுதியுள்ள பதிப்பாசிரியர் உரை மிகச் சிறந்ததொன்றாகும். திரு.தம்பிராஜா அவர்களுக்கு ஆங்கில தமிழ் இலங்கை இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது.

அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா என்ற அவரது முழுப்பெயர் விபரம் பலருக்குத் தெரியாத ஒன்றாகும். ஆனால், ஏ.ஜே. என்ற முதலெழுத்துக் குறுக்கமோ எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. இது ஓரளவுக்கு அவரது ஆளுமையின் இயல்பினைக் காட்டுகின்றது. தன்னைப் பற்றி அதிகம் சொல்லாமல் அதேவேளையில் பிறருடைய சுக துக்கங்களில், நலன்களில் அவர் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தார்.

ஏ.ஜே.யை மறப்பது சுலபமே அல்ல. அவரோடு ஊடாடியவர்களுக்கு அது முடியாத காரியம். ஏனென்றால், தான் ஊடாடியவர்களின் ஆளுமைகளில் அவரின் செல்வாக்கு நிறைய உண்டு. தன்னைத்தான் மறைத்துக் கொள்ள விரும்பியவனை, இலக்கிய உலகம் மறக்கவில்லை. இனியும் மறக்காது.

இக்கட்டுரை இன்றைய தினக்குரலில் இருந்து பிரதியெடுக்கப்பட்டது.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கானா பிரபாவுக்கு வழங்கிய நேர்காணலின் ஒலி வடிவம் இங்கே.

மேலும் தகவல்கள்: விக்கிபீடியாவில்

October 11, 2006

ஏ. ஜே. கனகரத்னா காலமானார்


பிரபல கலை இலக்கிய விமரிசகர் ஏ. ஜே. கனகரத்னா அவர்கள் இன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தி இன்று எனது மின்னஞ்சலுக்கு வந்தது. 60கள் முதல் 90கள் வரை ஈழத்து இலக்கியத்தில் வலுவான இடத்தை அடைந்தவர் ஏஜே. குறிப்பாக அவரது மொழிபெயர்ப்புகளும் விமரிசனக்களும் சிறப்பு வாய்ந்தவை. பல ஈழத்து, தமிழக எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பல ஆங்கிலக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்.

யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித்துறையில் கடமையாற்றினார். கடைசி வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்த இவர் கடுமையாக நோய் வாய்ப்பட்ட போது கொழும்பில் தங்கி கடந்த ஒன்றரை வருடகாலம் சிகிச்சை பெற்று வந்தார்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஏஜேயின் "மத்து" கட்டுரைத் தொகுதி பற்றிய பார்வையை யமுனா ராஜேந்திரன் இங்கு பதிந்திருக்கிறார்:
பதிவுகள் இணையத்தளம்

ஏஜேயின் செங்காவலர் தலைவர் யேசுநாதர் கட்டுரை மதியின் தளத்தில் உள்ளது:
செங்காவலர் தலைவர் யேசுநாதர்


விக்கிபீடியாவில்: ஏ. ஜே. கனகரத்னா

சக வலைப்பதிவர்களின் நினைவுப்பதிவுகள்:

October 01, 2006

சிட்னியில் குறுந்தொகை நாட்டிய நாடகம்

அன்பின் ஐந்திணையை ஆராதித்த சங்ககால இலக்கியமான குறுந்தொகை அகத்திணைப் பாடல்கள் அண்மையில் சிட்னியிலும் கன்பெராவிலும் நாட்டிய நாடகமாக ஆனந்தவல்லி அவர்களின் நெறியாள்கையில் அரங்கேறியது. நாடகம் பற்றிய தனது பார்வையை திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் அழகு தமிழில் இங்கு தருகிறார்.



யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாங் கலந்தனவே


உன்னுடைய அன்னையும் என்னுடைய அன்னையும்
ஒருவருக்கு ஒருவர் எப்படிச் சொந்தம்?
உன்னுடைய தந்தையும் என்னுடைய தந்தையும்
எப்படி உறவினர் ஆகினர்?
நீயும் நானும் ஒருவரை ஒருவர்
எப்படி அறிந்தோம்?
செம்மண் தரையிலே விழும் மழைநீர்
அம்மண்ணுடன் இரண்டறக் கலப்பது போல
எமது நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டனவே.

இந்த அழகிய பொருள் செறிந்த பாடலை சங்க இலக்கியமான குறுந்தொகையில் பார்க்கிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழி சிறந்த கவி வளத்துடன் விளங்கியதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. எழுத்து, சொல், யாப்பு, அணி என்ற நான்கு பிரிவுகளுக்குள் ஏனைய மொழி இலக்கண ஆசிரியர் நின்றுவிட, தமிழ் இலக்கண நூலார் மட்டும் யாப்பில் பொருளுக்கும் இலக்கணம் வகுத்தார்கள்.

உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதல். எனவே அதை அகம் என்றும், அகம் அல்லாததைப் புறம் என்றும் இலக்கணம் வகுத்து, அகத்திணை, புறத்திணை என மக்கள் வாழ்க்கையையே பொருளாக அமைத்து, இலக்கியம் படைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்.

அந்தச் சான்றோரின் புலமை நுணுக்கத்தைக் காட்டும் குறுந்தொகை அகத்திணைப் பாடல்கள், லிங்காலயம் ஆனந்தவல்லியால் நாட்டிய நாடகமாக உயிர் பெற்ற போது மனதில் பல எண்ணங்கள் தோன்றின. புராணக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதாபாத்திரங்களையும், கடவுளரையுமே, பரதநாட்டியத்திலே பார்த்துப் பார்த்துப் பழகியவர்களுக்கு, சங்கப் பாடல்களுக்கும் இசை அமைத்து, ஆடல் வடிவம் கொடுக்கமுடியும் என்பது நல்லதொரு சிந்தனையாகத் தெரிந்தது.

தமிழ் மக்களின் வாழ்வில் அகப் பொருள் என்னும் காதல் அல்லது மணவாழ்க்கை, அன்பினைந்திணை எனப்பட்டது. இது புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என தூய காதல் ஒழுக்கங்களாகச் சிறப்பிக்கப்பட்டு, செய்யுளுக்குப் பொருளாக அமைந்தது. பண்டைய தமிழகத்தில் மக்கள் வாழ்ந்த நிலங்களான மலைப்பிரதேசம், காட்டுப் பிரதேசம், நீர் வளமும் நில வளமும் உள்ள வயல்கள், கடற்கரைகள், தண்ணீரற்ற வரண்ட நிலம் என ஐந்து வகையான இயற்கைப் பிரிவுகளுக்கு முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் தாவரப் பெயர்கள் வழங்கப்பட்டன. இவை நாளடைவில் அந்த அந்த இடங்களில் வாழ்ந்த மக்களின் காதலொழுக்கத்தைக் குறிக்க விசேடமாகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு நிலத்தில் எந்த ஒழுக்கம் சிறப்பாக இருந்ததோ அதனை அந்த நிலத்துக்கு உரியதாகக் கொண்டு சங்கச் சான்றோர் பாடல்களைப் பாடினார்கள். இதனால் குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும், நெய்தலுக்கு இரங்கலும், பாலைக்குப் பிரிதலும் காதல் ஒழுக்கங்களாக வந்தன.

மக்களுடைய ஒழுக்கமும், மனோபாவமுமே செய்யுளுக்குப் பொருளாக அமைந்த காரணத்தால், ஒழுக்கத்திற்கே முதலிடம் கொடுத்து இயற்கையின் அழகையும் இணைத்துப் பாடினார்கள். இந்தப் பாடல்கள் புலவர்களின் கூற்றாக அமையாது, தலைவன், தலைவி, தோழி, தோழன், செவிலித்தாய் போன்றோர் பேசுவது போல நாடகத் தன்மையோடு அமைந்திருக்கும். இதனால் அகத்திணைச் செய்யுள்கள், உலகியல் வழக்கத்தையும் நாடக இயல்பையும் கொண்டு அழகுடன் அமைந்திருந்தன.

இந்தவகையில், குறுந்தொகை இலக்கியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அன்பினைந்திணையைக் காட்டும் ஐந்து பாடல்களுக்கு இந்த நடனம் அமைந்திருந்தது. ஆறு பெண்களும், ஒரு ஆணும் மாறி மாறி, தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் என நடனமாடினார்கள். நடன அமைப்பு, பாடல், வர்ணனை என்பன கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தன.

நெய்தல் நிலத்துப் பெண்கள் தண்ணீரில் கால்களை நனைத்து விளையாடிய காட்சி இயற்கையோடு இணைந்து இரசிக்கும்படியாக இருந்தது. தண்ணீரில் தவறி விழுந்த பெண்ணை, தலைவன் காப்பாற்றியதும், அவர்களுக்குள் காதல் அரும்புவதும், தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் சந்திப்பதும், தலைவன் பிரிவால் தலைவி வருந்துவதும், இதனை விரும்பாத தாயார் மகளைக் கண்டிப்பதும் நடனத்தில் அழகாக அமைந்திருந்தன.

தலைவனைப் பிரிந்து வருந்திக் கொண்டிருந்த தலைவிக்கு, தலைவனிட மிருந்து தோழன் நல்ல செய்தியைக் கொண்டுவந்து மகிழ்ச்சியளிக்கிறான். தோழனைப் பார்த்து “நீ உண்மையில் அவனைப் பார்த்தாயா” என்று தலைவி கேட்டதும், “இந்தச் செய்தியைக் கொண்டுவந்த உனக்கு கிடைத்தற்கரிய வெள்ளை யானையையே பரிசாகத் தரவேண்டும"; என்று அபிநயித்ததும் சிறப்பான காட்சி. பரத்தையர் ஒழுக்கத்தைக் கூறும் பொழுது “தலைவன் மீது நான் சுலபமாக மயங்கி விட்டேன். அவன் இப்பொழுது தனது குடும்பத்துடன் சேர்ந்து விட்டானே” என்று பரத்தையாக வருபவர் தன் மீது கோபங் கொள்ளுவதாக உணர்தியது மிகவும் இயல்பாக அமைந்திருந்தது.

Image Hosted by ImageShack.us
சேரன் சிறீபாலன், தான் ஒரு சிறந்த கலைஞர் என்பதைக் காட்டிவிட்டார். தலைவனாகத் தோன்றி, பலவித பாவங்களைக் காட்டியபோது பளிச்சென்று தனித்துவமான முத்திரையுடன் பிரகாசித்தார். நடனமாடிய ஸ்வேதா ராமமூர்த்தி, ஸ்வாதி பத்மநாபன், ஜெனிஃபர் வைட், அபிராமி ஸ்ரீகாந்தா, சாய்பிரியா பாலா, கவிதா சுதந்திரராஜ் என எல்லாப் பெண்களுமே, தனித்தனியாகவும், இணைந்தும் அழகாக ஆடினார்கள். ஆஹார்ய அபிநயமும் அவர்களுடைய நடனத்திற்கு மெருகூட்டியது. ஆனந்தவல்லியின் கற்பனைத் திறமை, அழகிய நடனக் கோர்வைகளும் பார்த்து இரசிக்கும்படி இருந்தன.

பண்டைத் தமிழரின் திருமணமும் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், குறுந்தொகை எழுந்த காலத்தில் தமிழ்ப் பண்பாட்டில் அக்கினி வளர்த்தல், அக்கினியை வழிபட்டு வலம் வருதல் முதலிய ஆரிய வழக்கங்கள் கலந்து பரவாத காலம் என்பதையும் கருத்திற் கொண்டு, இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஐவகை நிலத்திலும் காணப்பட்ட இயற்கை வளங்களைப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக இணைத்தது நல்லதொரு நாடக உத்தியாக இருந்தபோதும் நெய்தலில் தொட்டுக் காட்டியது போல ஐவகை நிலங்களையும் ஆடலின் ஊடாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அசையும் காட்சிகளாலும், அவற்றுக்கான ஒளி அமைப்பாலும், ஆடலில் தோன்றும் பாவங்களையும் பார்க்க முடியாமல் பலதடைவை பார்வையாளரின் கவனம் சிதறிவிட்டது என்றே கூறவேண்டும். ஐவகை நிலத்திற்கே உரிய தாவரம், பறவை, விலங்கினங்களும் பொருத்தமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.

ஐந்து பாடல்களும், துண்டு துண்டாகத் தனித்து நிற்காமல், அவற்றுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தால் மேலும் இரசிக்கும்படியாக இருந்திருக்கும். தலைவன் தலைவி சந்திப்பது, பிரிவது, தாயார் கண்டிப்பது, பிரிந்ததால் இரங்குவது, பின்னர் சேருவது, திருமணம், பரத்தையர் உறவு என்று தொடர்பு படுத்தி இருக்கலாம்.

மறைந்த கவிஞர் A. K. ராமானுஜன் அவர்கள் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றை Interior Landscapes என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஓவ்வொரு காட்சியின் முன்னரும், இடையில் பாத்திரங்கள் வாயிலாகவும், ஆங்கிலத்திலே அவருடைய பாடல் வரிகளைக் கூறியதும், பேசியதும் சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது.

குறுந்தொகைப் பாடல்களுக்கு சீதாராம சர்மா இசை அமைத்திருந்தார். அருணா பார்த்திபன் (பாடல்), கோவிந்தராஜுலு (புல்லாங்குழல்), வரலக்ஷ்மி ஸ்ரீதரன் (வீணை), ரகுராம் சிவசுப்பிரமணியம் (மிருதங்கம்), பாலசங்கர் (தபேலா) ஆகியோர் இசை வழங்கினர். நடனம் முடியும் போது “செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்னும் வரிகள் அமைந்த அழகிய பாடலை இசைத்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

ஓர் இனத்தின் தொன்மைச் சிறப்பை விளக்குவதற்கு அவ்வினத்தின் தொன்மையான இலக்கியத்தைவிட வேறென்ன இருக்கமுடியும், என்ற எண்ணம் மனதை நிறைத்தது.
இவ்வேளையில், ஐவகை நிலங்களுக்கும் உரிய தொன்மையான ஆடல், பண் ஆகியவற்றுக்கான தேடலை தமிழ் அரங்கு இன்று வேண்டி நிற்கின்றது என்பதை உணரமுடிகிறது.

-பராசக்தி சுந்தரலிங்கம்