அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மேல் நிற்பது போன்ற உணர்ச்சி மேலிட்டது.
"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?" கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ் பொது நூலகர் திருமதி ஆர். நடராஜா (பின்னூட்டம் பார்க்க) விடுத்த உருக்கமான கேள்வி இது.
நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும், ஏன், உலக நாடுகள் எங்ஙனுமிருந்தும், ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.
யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலுத்தியவனாக நிற்கிறேன் நான்.
முன்னர் எத்தனையோ தடவைகளில் என் சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம், சிதைத்த சூன்யமாகி விட்டிருந்தது. இதயமற்றோர் கடந்த ஜூன் மாதம் முதல் நாளிரவு மூட்டிய தீயினால்!
இத்தகு அழிவுகளைப்பற்றி வரலாற்று ஏடுகளிலே வாசித்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் கண்டதில்லை. பண்டைய எகிப்தில் உலகப் புகழார்ந்த அலெக்ஸாந்திரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை நினைத்தேன் ஒரு கணம். எமது நாட்டிலும் பதின்மூன்றாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் பொலனறுவை, கண்டி ஆகிய நகர்களில் அழிக்கப்பட்ட நூலகங்களும் என் எண்ணத்தைத் தொட்டன.
ஊனமுற்ற சுவர்களிலே பயங்கரமான புண்களைப் போல் காட்சியளித்த ஜன்னல்களின் இடைவெளியினூடாக அவ்வேளை திடுமென வீசிய காற்று, என்னை நூலகர் வழங்கிக் கொண்டிருந்த விளக்கத்திற்கு மீட்டு வந்தது. அத்தோடு முற்றாய்க் கரிந்து போன நூல்களின் சாம்பலை அக்காற்று எம் உடம்பின் மீதும் தூவிச் சென்றது.
யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் சிதைவினால் அறிவுலகிற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பின் தன்மையை விளக்குமுன், இந்நூலகத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிய சில தகவல்களை நாமறிந்து கொள்வது அவசியமாகும்.
1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது.
இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடக அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 1-1-1935 இல் வாடி வீட்டிற்குத் தெர்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.
சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டிடடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.
நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல்நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது.
திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு விரைவில் பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.
பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11.10.59இல் அதி விமரிசையாக யாழ் முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.
இக்கட்டடத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தை நாம் சிறப்பித்துக் கூறவேண்டும்.
பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.
மொத்தம் 15,910 சதுர அடிகளைக் கொண்ட யாழ் பொது நூலகம், அளவில் கொழும்பு மாநகர சபையின் பழைய நூலகத்தைவிட விசாலமானது; புதிய நூலகத்திற்கு அடுத்ததாக உள்ளது.
யாழ் மாவட்டத்து, ஏன் வடமாகாணத்து, அனைத்து நூலகங்களுக்குமே இப் பொது நூலகம் தலைமைத்துவம் வழங்கி வந்ததென்றால் அது மிகைக் கூற்றாகாது. மேலும் புதிய மாவட்ட சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இதுவே யாழ் மாவட்ட மத்திய நூல் நிலையமாக இயங்கவிருந்தது.
இந்நூலகத்தின் சிதைவுக்கு முன், பின்வரும் அங்கங்கள் சிறப்பாக இயங்கி வந்தன: நூல் இரவல் வாங்கும் பகுதி, புதின ஏடுகளையும் சஞ்சிகைகளையும் கொண்ட வாசிகசாலை, சிறுவர் நூலகம், உசாத்துணை நூலகம், கருத்தரங்கக் கூடம், கலாபவனம், காரியாலயமும், நூற்சேமிப்பு அறையும்.
பல்லாயிரக்கணக்கான நகர மக்கள், சிறப்பாகக் கல்லூரி மாணவரும், சிறார்களும், சுமார் 95 ஆயிரம் நூல்களைக் கொண்ட இந்த நூலகத்தின் பல்வேறு அங்கங்களிலிருந்தும் பெரும்பயன் பெற்று வந்தார்கள்.
சிதைந்த நூலகத்தின் பின்புற வாயில் ஒன்றின் மூலம் நான் உள்ளே நுழையச் சென்றபோது வெளியே சிதறுண்டு கிடந்த ஓரளவு கரிந்து போன சில அங்கத்துவ அட்டைகளைக் கண்டெடுத்தேன். இந்நூலகத்தில் பின்வருவோர் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு நினைவுச் சின்னங்களான அந்த அட்டைகள் மௌனச் சான்ற பகன்றன. யோகினி பரமநாதன், இராமலிங்கம் சபாரத்தினம், ஏ.ஜே. சக்காஃ, தம்பிராஜா சிவராஜா... இவர்களைப் போன்ற எத்தனை ஆயிரம் வாசகர்கள் தங்கள் அபிமான அறிவுத் தீபம் அக்கிரமாக அணைக்கப்பட்டதை எண்ணி இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள் என்றார் அருகே நின்ற நூலகப் பணியாளர் ஒருவர்.
நூலகத்தின் ஆகக்கூடுதலான நூற் தொகை இப்பிரிவிலேயே இடம்பெற்றிருந்தது. இவற்றின் விபரங்கள் எதையுமே பெற முடியாதவாறு நூற் பட்டியல் பெட்டகமும், நூல் வரவுப் பதிவேடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.
வெளியில் கிடந்து நான் பொறுக்கிய ஒரே ஒரு நூற் பட்டியல் அட்டை எனது நண்பர் "சோமலெ" எழுதிய 'மொரீஷியஸ் தீவு' எனும் நூல் பற்றிய தகவல்களைத் தந்தது.
உசாத்துணைப் பிரிவில் மிகவும் அரிதான விலை மதிக்க வெண்ணாத பெருந் தொகையான நூல்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பிரிவிலிருந்த நூற்தொகை சுமார் 29,500 ஆகும். இவற்றுள் பெருந் தொகையானவை அன்பளிப்பாகப் பெற்றவையாகும். இப்பிரிவில் ஏக காலத்தில் அறுபது வாசகர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாகப் போடப்பட்டிருந்த தனித்தனி மேசைகளும் கதிரைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. இவற்றைப் பயன்படுத்திய அறிவுத் தாகம் கொண்ட அத்தனை வாசகர்களும் இன்று எங்கெங்கு அலைகின்றனரோ, தமது அறிவுத் தேட்டத்திற்கு!
நான் அறிந்தமட்டில் இலங்கையிலேயே மிகச் சிறந்த சிறுவர் நூலகப் பிரிவிலிருந்த 8995 நூல்களையும் முற்றாக இழந்து விட்ட ஆயிரக்கணக்கான பிஞ்சு உள்ளங்கள் எவ்வாறு ஏங்கித் தவிக்கின்றனவோ? மலர்ந்த முகங்கள்டன் கூடிய சிறுவர் சிறுமியரின் கலகலப்பான இந்தப் பிரிவில் சித்திர நூல்களில் சிந்தையை இழக்கவும், இனிக்கும் கதைகள் படித்து இன்புற்றிருக்கவும், நூலக உதவியாளர்கள் கதை சொல்லக் கேட்டு கற்பனை உலகில் சஞ்சரிக்கவும் வரும் அக்குழந்தைகளை எண்ணும் போது எவ்வாறுதான் இந்தப் பிரிவினைச் சிதைக்க அக்கொடியோர் மனமிசைந்தனரோ என்பது எனக்குப் புரியவில்லை.
புதிய ஏடுகளும், பருவ வெளியீடுகளும் வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிக சேதமில்லை. எனினும் , அங்கிருந்த ஏடுகள் அனைத்தும் ஒரு மூலையில் குவித்து தீ மூட்டப்பட்டிருந்தன. இரண்டாவது மாடியில் உள்ள கலாபவனத்தில் உபயோகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த நூல்களைக் கூட அவர்களிட்ட தீ விட்டு வைக்கவில்லை. எஞ்சியதெல்லாம் நூலகரின் அலுவகத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடந்த சேதமுற்ற சிறு நூற்தொகுதியொன்று மட்டுமேயாகும்.
அந்தப் பயங்கர இரவில் நூலகத்தினுள் புகுந்தோரின் நோக்கம் எல்லாம் நூல்களை ஒழித்துக் கட்டுவதொன்று தானென்பது தெட்டத் தெளிவாகியிருந்தது.
யாழ் நூலகத்தில் நான் மேற்கொண்ட இந்த துன்பகரமான மதிப்பீட்டின் முடிவான தீர்ப்பு.
யாழ்ப்பாண பொதுநூலகம் இன்று ஒரு பழங் கதையும் கனவுமாகி விட்டது.
ஆனால் அறிவாலயங்களினதும், அறிவாற்றல் படைத்த மக்களினதும் வரலாறு என்றுமே இவ்வாறு முடிந்ததில்லை.
மதியீனர் செயலால் மறைந்த இந்த அறிவாலயம் மீண்டும் உயிர்த்தெழும் என்பது உறுதி.
யாழ் பொது நூலகத்தில் எரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்களின் சாம்பலிலிருந்து அறிவுலகம் பெருமைப் படக்கூடிய நவநூலகமொன்று உதயமாகி அறிவுக் கதி பரப்பும் நாள் வெகு தூரத்திலில்லை என்பது எனது அசையாத நம்பிக்கையாகும்.
இச்சாட்சியத்தை 19-7-1981 ஆம் ஆண்டு வீரகேசரியில் எழுதியவர் எஸ். எம். கமாலுதீன் அவர்கள். பின்னர் இக்கட்டுரை மூதறிஞர் க. சி. குலரத்தினம் அவர்களின் யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம் (1997) என்ற நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டது.
குறிப்பு: 11-10-1959இல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட யாழ் நூல் நிலையம் 01-06-1981 இரவு அரசு படையினரால் தீ மூட்டி எரிக்கப்பட்டது.
Technorati Tags: Tamil தமிழ்ப்பதிவுகள் தமிழ்
February 06, 2006
Subscribe to:
Posts (Atom)