முற்றிப் பழுத்த மொழி நிபுணர் சுவாமி ஞானப்பிரகாசர்
-எம். ரம்போலா மாஸ்கரனேஸ்-
ஞானப்பிரகாசர் தம் பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் பற்றி எழுதுகிறார்: "எடுத்தவுடனே பாட்டு இயற்றுகிற வழக்கம் தீங்குள்ளது என்றதை ஒருநாள் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயரும் நன்றாய்க் கையிலும் மனதிலும் பதிய எனக்குப் படிப்பித்தார். தற்காலம் வட்டுக்கோட்டையில் கல்லூரியில் உப தலைவராயிருக்கின்றவர் மானிப்பாயில் என்னோடுகூட ஒரு வகுப்பில் படித்தவர். இவரும் நானும் சில நாள் சிநேகிதராய் இருந்தோம். பின் 'கடுஞ் சிநேகம் பகை காட்ட' அவர் என்னைப் பேசிப்போட்டார் நான் வகுப்பிலிருந்துகொண்டுதானே அவரது செயலைக் கண்டித்து, ஒரு பாட்டெழுதி நீட்டினேன், அவர் கோபித்துக்கொண்டு எங்களைப் படிப்பித்துக் கொண்டிருந்த மாரிமுத்து உபாத்தியாயரிடம் அதைக் கொடுக்க அவர் "வகுப்பு நேரம் செய்கிற வேலை இதுதானா என்று மிகச் சினந்து கையை நீட்டச் சொல்லிப் பிரம்பினால் ஒரு அடி தந்தார். அவ்வடி எனது விசித்திர வேலைப்பாடுள்ள மோதிரம் தெறித்துப்போகச் செய்து விட்டது.'' இந்த அடிக்குப்பிறகு சுவாமிகள், கவிதை எழுதுவதை அடியோடு விட்டிருக்கவேண்டும். அது ஒரு வகையில் நன்மையாகவே முடிந்தது. கவிதைக் கனவுலகில் உயரப் பறப்பதை விட்டு ஆராய்ச்சித் துறையில் அடித்தளஞ் சென்று ஆக்கவேலை செய்ய அன்று ஆசிரியர் அடித்த அடியல்லவா அடி எடுத்துக் கொடுத்திருக்கிறது.
சுவாமிகள் தம் இளமைப் பருவத்தின் ஒரு சில சம்பவங்களையே குறிப்பிடுகின்றார். ருசிகரமான சம்பவங்கள்; நகைச்சுவை கலந்து வர்ணிக்கிறார். அவற்றைப் படிக்கும்போது ஒரு ஏக்கம் தோன்றும். அவர் தம் சரிதையை ஏனோ விரிவாக எழுதவில்லை என்ற ஏக்கம். தமிழ்த் தாத்தா சுவாமிநாத ஐயரைப்போல நாற்கலைப் புலவர் ஒரு சுயசரிதை வழங்கவில்லையே என்ற வருத்தம்.
43 ஆண்டுகளாக, யாழ்ப்பாணத்து நல்லூரிலே குருத்துவத் திருத்தொண்டு செய்தனர் அதனால் நல்லூர் ஞானப்பிரகாசர் என்று அறியப்பட்டார். ஏழை எளியவரிடையே வாழ்ந்தார் முக்கியமாக அவருடைய முன் மாதிரிகையால் 5000 மேற்பட்டவர்களைத் திருமறையில் சேர்த்தனர் கோவில்களைக் கட்டினார். தம் ஞானப்பிள்ளைகளுக்கு உடையுணவுத் தேவைகளை அளித்தார். கல்வி அறிவூட்டினார். அவர்களை வேத நெறியில் வளர்த்தார். திறமையான வேத போதகர் என மதிக்கப் பெற்றார்.
தேவ ஊழியர் ஞானப்பிரகாசர் மாபெரும் எழுத்தாளர், சரித்திராசிரியர்; பன்மொழிப் புலவர்; முற்றிப் பழுத்த மொழி நிபுணர், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இத்தலி பிரஞ்சு முதலிய 18 மொழிகளை எழுதவும் பேசவும் ஆற்றல் பெற்றிருந்தார். சம்ஸ்கிருத மூலம் பிற ஆரிய மொழிகளை அறிமுகமாக்கிக்கொண்டார். சிங்களத்தின் வழி பாலிய மொழியையும், தீபெத் பர்மிய கூர்க்க மொழிகளையும் தெரிந்தனர். அவர் அறிந்த பிறமொழிகள் இலத்தீன், கிரேக்கம், போர்த்துக்கீஸ், டச்சு, ஜெர்மன். மொத்தத்தில் 70 மொழிகளை அறிந்திருந்தார் என்பர்.
அவர் ஒரு முறை ஜெர்மனிக்கு விஜயஞ் செய்தார். அப்போது அரசாங்கத்தார் அவரது வரவின் ஞாபகார்த்தமாக அவரது படிவம் தாங்கிய தபால் முத்திரை வெளியிட்டுப் பெருமைப் படுத்தினார்கள். இலங்கை அரசியலாரும் அவரை நன்கு கௌரவித்தார்கள். சரித்திரக் கையெழுத்துப் பிரதிகள் குழுவில் அவரை அங்கத்தினராக இலங்கை அரசாங்கம் நியமித்தது.
மொழி ஆக்கத் துறையில் அவரது தனிப் பெரும் சாதனை அவர் அமைத்துத் தந்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி. சுவாமிகளுக்கு முன்பு அத்துறையில் நாட்டஞ் செலுத்தியவர் மிகச் சிலர். தமிழ் லெக்ஸிகன் சென்னை பல்கலைக்கழக அதிகாரத்துடன் வெளியிடப்பட்டது. அதிலுங் கூட சொற்பிறப்பு காட்டப்படவில்லை அதனைத் தொகுத்த அறிஞர்கள் மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா' என்ற தொல்காப்பிய சூத்திரத்தைத் தமக்கு ஆதாரமாகக் காட்டியும் தமிழ் மொழி நூல் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறதென்பதாகக் காட்டியும் சொற்களுக்குக் காரணங் காட்டினாரில்லை. பேச்சுவழக்கில் உள்ள சொற்களை எல்லாம் சேர்த்ததில் குறைவில்லை. அதற்காகப் பொருந்தாப் பொருள் உரைக்கவேண்டுமோ? தமிழர் என்ற சொல்லுக்குப் பொருள் தரும் முறையைப் பாருங்கள் ''தமிழர் n<E tumbler, drinking Cup, விளிம்பில் லாத பாத்திரம்'' எப்படி இருக்கிறது பொருள்? பாத்திரத்தைக் குறிக்கப்பேச்சு வழக்கில் டம்ளர் தம்ளர் என்கிறோம். என்றாலுந்தான் என்ன? இதற்காகவா உணர்வு நிறைந்த நல்ல தமிழரை விளிம்பில்லாத தீர்த்த பாத்திரம் ஆக்கவேண்டும்! இந்த அகராதிக்கு 4,10,000 ரூபாய் செலவு ! 27 ஆண்டு பெரும் உழைப்பு!
ஒரு பல்கலைக்கழகம் மேற்கொள்ளவேண்டிய பெரும் பொறுப்பு வாய்ந்த பணியை, ஒரு ஸ்தாபனம் செய்யவேண்டிய அருந் தொண்டை சுவாமி ஞானப்பிரகாசர் தனி நின்று ஆற்றியிருக்கிறார்கள். சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியின் முதல் மடலின் ஆறு பகுதிகளும் அச்சிடப்பெற்றுள்ளன. இந்த அகராதியைத் தம் வாழ்நாளிலேயே முற்ற முடித்தனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. திராவிட மொழிகளிலுள்ள வேர்ச் சொற்கள் வெற்றொலிகள் அல்ல, அவை அனைத்தும் பொருள் பொதிந்த மெய்ம் மொழிகள் என்பதை நிறுவுகின்றார். தமிழ்ச் சொற்களுக்கு மிக எளிதாக சமஸ்கிருத வேர்ச் சொற்களை மூலமாகக் காட்டுவது ஒரு சம்பிரதாயம். இதையொட்டியே உலகம், கலை, நகுலம் போன்ற பல சொற்களுக்கு சமஸ்கிருதத் தாது காட்டப்பெற்றன. சுவாமிகள் இச்சொற்களுக்கெல்லாம் தமிழ் வேர்ச் சொற்களை ஆராய்ந்து காட்டுகின்றார்.
யோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் கூறுவது போல, நல்லுணர்ச்சியுள்ள தமிழ்ப் பெருமக்கள் இச்சொல் வல்லவனை நினைந்து தமிழ்ப்பணி புரியவேண்டும்.
"தமிழே உலகத் தாய் மொழி என்று
பறையடித்தோதிய பன்மொழிப் புலவன்
சொல்லா ராய்ச்சியும் தொல்லா ராய்ச்சியும்
வல்லவன் பைபிள் வழியே நடப்போன்
மலையும் தேசமே கலையெனக் கொண்ட
ஞானப் பிரகாச நாவலன் இலங்கை
என்றும் போற்றும் எழிலார் வித்தகச்
செல்வனைத் தமிழர் சிந்தித் துநிதம்
புரிக தமிழ்ப்பணி எந்தாய் வாழ்க"
எம். ரம்போலா மாஸ்கரேனஸ்
தமிழ்ப் பேராசிரியர், செயின்ட் யோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
நூல்: தமிழ்த் தொண்டர்கள்
வெளியீடு:1952