March 12, 2006

யாழ் நூல் தந்த சுவாமி விபுலாநந்தர்

சுவாமி விபுலாநந்தர் பிறந்து சுமார் 114 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பணியும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இலங்கையில் தமிழ்த் திறனாய்வுத்துறை வளர்ச்சி பெறுவதற்கு முதற்படியை அமைத்துக் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே என்றால் அது மிகையாகாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும். சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார். இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியங்களைக் கற்றார். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே. கொழும்பு அரசினர் தொழினுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார் மயில்வாகனனார். அவரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் (சென் பற்றிக்ஸ்) கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், யாழ்ப்பாணத்துக்கு 1917ஆம் ஆண்டில் சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் 'திறவுத் தூய்மை' எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 'யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்' என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை ஈழநாட்டிற்கு அளித்துள்ளது. மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய 'இராமகிருஷ்ண விஜயம்' என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், 'Vedanta Kesari' என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்ஷையின் பரீட்ஷார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் "சுவாமி விபுலாநந்தர்' என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள Almorah என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரத (Prabuddha Bharatha)' என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அங்கு தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது. 1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களை சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது. அவரைத் தொடர்ந்தே பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சதாசிவம் போன்ற அறிஞர்கள் தமிழ்த் துறையை விருத்தி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி அவர்களின் தமிழ் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய "யாழ்நூல்" ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களை தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார். முதல் நாள் விழாவில் திருக்கோயில் வரிசைகளுடன் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தானே ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், அவர் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நாண்மணிமாலை' வித்துவான் அவ்வை துரைசாமிப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது. இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், புரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் "யாழ்நூல்" அரங்கேற்றப்பட்டது. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில், யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த விரிவுரையாகவும், விளக்கமாகவும் அமைந்தது யாழ் நூல்! ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத்தமிழின் அருமையைத் தமிழர் உணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது இந்த நூல். யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் கலந்து கொள்வதற்கு புறப்படும் முன்னர் சுவாமி அவர்கள் உடல் நலம் குன்றி இருந்தார். பயணம் செய்யக் கூடாதென்ற வைத்தியர்களின் ஆலோசனையையும் கேளாது நீண்ட நெடும் நாட்களாக தாம் கண்ட இலட்சியக்கனவை நனவாக்க தமிழர்களின் பழம் பெருமையை எடுத்தியம்ப, மறைந்துபோன யாழிசையைப் பரப்ப பயணமானார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட்டதால், உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தளராத நம்பிக்கையே அவரை வழிநாட்த்தியது. அதனால் கடுமையான நோயின் பாதிப்புக்குள்ளானர். யாழ் நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல், சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாமி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மேல் சமாதி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் சுவாமி அவர்கள் யாத்த: "வெள்ளைநிற மல்லிகையோ? வேறெந்த மாமலரோ? வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப் பூவுமல்ல! வேறெந்த மலருமல்ல! உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!" என்ற உயிர்த்துடிப்புமிக்க கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

March 05, 2006

திருக்குறள் விளையாட்டு

அன்றாட வாழ்க்கையில் திருக்குறளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு விளையாட்டு. இது சிட்னியில் 1992 இல் நடந்த 5வது தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் இ.வி.சிங்கன் என்பவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. நீங்களும் விளையாடிப் பார்க்கலாமே.

தம்பி: அக்கா! உனக்குத் திருக்குறள் விளையாட்டு தெரியுமா?

அக்கா: குறள் விளையாட்டா?

தம்பி: தெரியுமா அக்கா! விளையாடுவோமா?

அக்கா: நான் தயார். ஆனால் உனக்குத் திருக்குறளில் இருக்கும் 133 அதிகாரங்களின் தலைப்புகளும் மனப்பாடமாகத் தெரியுமா?

தம்பி: எனக்கு அறத்துப்பாலில் இருக்கும் 38 அதிகாரத் தலைப்புகள் தெரியும்.

அக்கா: அந்த அதிகாரத் தலைப்புகளை வைத்தும் விளையாடலாம். ஆனால் பொருட்பாலும் இன்பத்துப்பாலும் தெரிந்தால் விளையாடுவது இன்னும் இன்பமாக இருக்கும்.

தம்பி: அவைகளைப் படிக்க வேண்டும். மிகவும் கடினமாக இருக்கிறதே!

அக்கா: அப்படிச் சொல்லாதே. படிப்பது கடினம் என்று சொன்னால், படிப்பது இன்னும் கடினமாகப் போய்விடும். படிக்க வேண்டும். படிப்பதைக் கவனமாகப் படிக்க வேண்டும். மனதை விட்டுப் போகாது. நான் ஒரு வழி சொல்கிறேன். அதைப் பின்பற்றிப் பார்.

தம்பி: சரி அக்கா! வழியைச் சொல் கேட்கிறேன்.

அக்கா: திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. இந்த 133 தலைப்புக்களையும் மனப்பாடம் செய்துகொள். 14 நாட்கள் போதும். நாளொன்றுக்குப் 10. அதைப் பாடம் பண்ணுவதற்கு, நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் போதுமானது.

தம்பி: நாள் 1-க்கு 10 நிமிடமென்றால் 14 நாட்களில் திருக்குறள் தலைப்புகள் அத்தனையும் மனப்பாடமாகி விடும் என்று சொல்கிறாயா?

அக்கா: அப்படித்தான்!

தம்பி: அக்கா, விளையாட்டைக் கொஞ்சம் சொல்லு பார்ப்போம்.

அக்கா: தலைப்புகள்: மனைவி, மக்கள், அன்பு, இன்சொல், அறிவு, அமைச்சு, நட்பு, குடி, சூது, பெரியாரைத் துணைக்கோடல், என்றெல்லாம் இருக்கிறது.

தம்பி: ஆமாம், இவைகள் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள தலைப்புகள்.

அக்கா: இப்போது உன் படிப்பைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால்

மூத்தவர்: தம்பி நாற்பதில் எப்படி? (40இல் எப்படி என்றால் தம்பி படிக்கிறானா? என்று பொருள். 40ஆம் அதிகாரம் கல்வி)

இளையவர்: 40 அவனுக்கு உண்டு. நாற்பத்தியொன்று மாதிரித் தெரிகிறானே (41 கல்லாமை அதிகாரம்)

மூத்தவர்: அதுவா, அவனுக்கு 42 இல்லை. அதனாலேயே 41 மாதிரித் தெரிகிறது. (அதாவது, படித்திருக்கிறானா, ஞானமில்லை. அதனாலேயே படிக்காதது மாதிரித் தெரிகிறான்)

தம்பி: ஆமாம் அக்கா. நல்ல சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. 133 தலைப்புகளையும் அறிந்து கொண்டால் உலகத்திலே உள்ள எல்லா சங்கதிகளையும் அதில் வைத்துக் கொண்டே பேசி விடலாம் என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். நாம் இதை நன்றாகப் படித்துவிட்டு இந்த விளையாட்டை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஓர் இயக்கம் அமைத்துப் பரப்ப வேண்டும்.

அக்கா: நல்ல யோசனைதான். அதை நடைமுறையில் செய். முதலில் நீ 133 அதிகாரங்களையும் மனப்பாடம் செய்.

தம்பி: ஆகட்டும் அக்கா, தங்கள் சித்தம் என் பாக்கியம்.

படித்ததில் பிடித்தது.