October 24, 2005

'மோகனாங்கி' முதல் தமிழ் வரலாற்று நாவல்

"ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு சுமார் ஒரு நூற்றாண்டு கால வரலாறுண்டு. சித்திலெப்பையினால் எழுதப்பட்டு 1885ம் ஆண்டு வெளியிடப்பட்ட அஸன்பேயுடைய கதையே ஈழத்தின் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. இந்நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. அஸன்பேயுடைய கதை வெளிவந்து பத்து ஆண்டுகளின் பின்னர் 1895இல் திருகோணமலையைச் சேர்ந்த த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய 'மோகனாங்கி' என்ற நூல் வெளியாயிற்று. இந்நூல் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும் ஒரு சிறு சம்பவத்தைக் கருவாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டதாகும்." ("சி.மௌனகுரு, எம்.ஏ.நுஃமான்").

இந்த 'மோகனாங்கி' நூலைப்பற்றி 'முல்லைமணி' அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் வீரகேசரி வாரஇதழில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளைக் கீழே தருகின்றேன்:

"இந்நாவலில் வரலாற்றுச் சூழல் ஓரளவு இடம்பெற்ற போதும் சொக்கநாதன், மோகனாங்கி ஆகியோருக்கிடையிலான காதல் நிகழ்ச்சிகளும் அது சம்பந்தமான சூழ்ச்சிகளும் சீர்திருத்தக் கருத்துக்களும் மேலோங்கி நிற்கின்றன. நாவல் என்ற பெயருடன் வெளிவந்த போதும் நாவலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டு விளங்கவில்லை. ஆசிரியரால் கையாளப்பட்ட நடை சிற்சில இடங்களில் எளிமையும் பேச்சுவழக்குச் சொற்களும் காணப்பட்டாலும் நாவலிற் பெரும்பகுதி வாசகர் எளிதிற் புரிந்து கொள்ள முடியாத கடின சந்தி விகாரங்களுடன் கூடிய சிக்கல் நிறைந்த நீண்ட வசனங்களையும் கடினமான சொல்லாட்சிகளையும் கொண்டு விளங்குகிறது" (கலாநிதி க.அருணாசலம்). புதியதொரு துறையில் முதன் முதலாக ஈடுபடுபவர்களின் ஆக்கங்களில் சிற்சில குறைபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாததே. பிரதாப முதலியார் சரித்திரமே (1879) தமிழில் முதலில் தோன்றிய சமூக நாவலாகும். சரித்திரம் என்று குறிப்பிடுவதே தற்காலத்தில் உள்ள நாவலுக்குரிய பண்புகளில் உணராத நிலையில் தோன்றிய முதல் நாவல் என்பதை மறுக்க எவரும் துணிய மாட்டார்கள். ஓர் இலக்கிய ஆக்கத்தை விமர்சிப்பவர்கள் அது தோன்றிய காலப்பின்னணியையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஆரம்பகால நாவலாசிரியர்களின் நாவல்களில் காப்பியங்களின் செல்வாக்குப் படிந்திருப்பதைக் கைலாசபதி அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார். மோகனாங்கியிலும் தோன்றிய காலச் சூழ்நிலைக்கேற்ப குறைபாடுகள் இருக்கலாம். செந்தமிழ் வழக்கு மேலோங்கியிருந்த காலத்தில் அவர் அதனைப் பயன்படுத்தினார். 1895இலேயே நாவலின் இடையிடையே எளிமையான பேச்சுவழக்குச் சொற்களை அவர் பயன்படுத்தியுள்ளதை அருணாசலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். வரலாற்றுச் சூழல் நாவலில் இடம்பெறுகின்றது. காதல் நிகழ்ச்சிகளும், சூழ்ச்சிகளும் நாவலில் இடப்பெறத்தகாதவை அல்ல. கல்கியின் நாவல்களிலும் இவை இடம்பெறத்தான் செய்கின்றன.

தமிழ் நாட்டு அறிஞர்களான இரா. தண்டாயுதம், கி.வா.ஜெகநாதன், கோ.வி.மணிசேகரன் முதலானோர் கல்கியே முதலில் சரித்திர நாவலை எழுதினார். அவரே தமிழில் வரலாற்று நாவலின் தந்தை என்க் கூறுகின்றனர். இவர்கள் மோகனாங்கி பற்றி அறியாதிருக்கலாம். அல்லது புதிய இலக்கியவகையொன்றுக்கு ஈழத்தவர் முன்னோடியாகத் திகழ்வதை ஏற்க விரும்பாமல் இருக்கலாம். தமிழ் நாட்டு அறிஞர்களைப் பொறுத்த அளவில் இது ஒன்றும் புதிய விடயம் அன்று. ஆறுமுக நாவலரையும், சி.வை.தாமோதரம்பிள்ளையையும் புறந்தள்ளிவிட்டு உ.வே.சாமிநாதையர் அவர்களே பதிப்புத்துறையின் முன்னோடி என உரத்துக் கூறும் அவர்கள் சரவணமுத்துப்பிள்ளைக்கு கிடைக்கவேண்டிய நியாயமான புகழை இருட்டடிப்புச் செய்ததில் வியப்பில்லை.

மோகனாங்கி நாவலை எழுதிய தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழின் வரலாற்று நாவல்துறைக்கு முன்னோடியாக விளங்கினார் எனச் சோ.சிவபாதசுந்தரம் அழுத்திக் கூறுவது பொருத்தமற்ற தெனக்கூறலாம்' என அருணாசலம் அவர்கள் சொல்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

'கல்கியின் வரலாற்று நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை மோகனாங்கி ஏற்படுத்தவில்லை என்கிறார் அருணாசலம்'. இது அகிலனின் பாவை விளக்கு ஏற்படுத்திய தாக்கத்தை பிரதாப முதலியார் சரித்திரம் ஏற்படுத்தவில்லையென்றோ இன்றைய திரையிசைப் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை திருக்குறள் ஏற்படுத்தவில்லை என்றோ கூறுவதை ஒத்தது. எது தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தியது என்பதல்ல பிரச்சினை, எது முன்னோடி என்பது கேள்வி.

மோகனாங்கி குறிப்பிட்டுக் கூறக்கூடிய வரலாற்று நாவல் என ஒப்புக் கொள்ளும் அருணாசலம் அவர்கள் அதனை முன்னோடி நாவல் எனவும் சரவணமுத்துப்பிள்ளையை வரலாற்று நாவலின் தந்தை எனவும் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.

யார் எப்படிக் கூறினாலும் மோகனாங்கியே தமிழில் முதல் வரலாற்று நாவல் என்பது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மை". இவ்வாறு கூறுகிறார் 'முல்லைமணி' அவர்கள் தமது கட்டுரையில்.

October 08, 2005

சிரித்து + இரன் = சிரித்திரன்




சிரித்திரன் சுந்தரின் மறக்க முடியாத சில நகைச்சுவைகளைப் படிக்க இந்த சுட்டியைத் தட்டுங்கள்.

October 05, 2005

சி. வை. தாமோதரம் பிள்ளையும் உ. வே. சாமிநாதையரும்

டி. ஏ. ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 'தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும். இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்."

சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. அவர்கள் 1887-இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார். ஒரு சமயம் சிந்தாமணியை அச்சிடக் காகிதம் வாங்கக் காசில்லாமல் உ.வே.சா கஷ்டப்படும் போது, சி.வை.தா. தனக்குத் தெரிந்த ஒரு காகித வியாபாரி மூலம் கடனில் காகிதம் ஏற்பாடு செய்து தருகிறார். இருவருக்கும் இடையில் நல்லுறவும் நட்பும் நிலவின என்பதும் சமயம் நேரும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதும் இக்குறிப்புகளிலிருந்து நன்கு விளங்குகின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, சாமிநாதையர் முதுமைப் பருவம் அடைந்தபோது வெளிவந்த அவருடைய 'என் சரித்திரம்' எனும் நூலில், தாமோதரம் பிள்ளையை இழிவு படுத்தும் வகையில் சில செய்திகள் தரப்பட்டுள்ளன என்பது சிலர் கருத்து. 1930ஆம் ஆண்டுக்குப் பின் வெளிவந்த சாமிநாதையர் பதிப்புக்களில் அவருடைய திறமை மங்கிக் காணப்படுவதாகவும், அக்கால அளவில் சாமிநாதையருக்கு முதுமைப் பருவத்தால் அசதியும் மறதியும் தோன்றிவிட்டன என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, 'தமிழ்ச்சுடர் மணிகள்' (சென்னை, 1968) என்னும் நூலில் தெரிவித்துள்ளார். சாமிநாதையர் 1930க்குப் பிறகே தம் சுயசரிதத்தை எழுதத் தொடங்கினார். தம் முதுமை காரணமாகப் பிறர் உதவியுடன் அவர் எழுதி வந்த அக்காலத்தில், அவ்வாறு உதவியவர்களின் மனப்போக்கால் இத்தகைய தவறுகள் அந்நூலில் இடம் மெற்றுவிட்டன' என்பதாக பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் 'தற்காலத் தமிழ் முன்னோடிகள்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: தமிழ் வளர்த்த சான்றோர்கள், சென்னை 1997

October 02, 2005

மதமாற்றம்

'மதமாற்றம்' என்னும் தலைப்பில் எனது சிறிய தந்தையார் அமரர் (அராலியூர்) வெ. சு. நடராசா அவர்கள் 1965-இல் எழுச்சி இதழுக்கு எழுதிய கட்டுரை இது:

1544ம் வருடம் தான் கீழைத்தேசங்களில் மதமாற்றம் உச்சநிலை அடைந்திருந்ததாம். இலங்கையில் குறிப்பாக மன்னார் பகுதி முதலில் போர்த்துக்கேயரின் பாசாங்குக்கு இரையானது. விபரீத முறையில் பல கோணங்களில் இருந்து மொழியையும், மதத்தையும், நாட்டையும் சுரண்டுவதைக் கண்ட, கேட்ட சங்கிலி உள்ளம் குமுறினான். சுய உணர்ச்சி, தாய்மொழிப்பற்று, தேச நன்மை ஆகிய அனைத்தாலும் தூண்டப் பெற்ற சங்கிலி அன்னிய ஆதிக்கத்தை வேரறுக்க எண்ணம் கொண்டான். மதம் மாறிய சிலரை சிரச்சேதம் செய்வித்தான். நாடு பறிபோவதற்கு முதற்படி மதம் மாறிப் போவதே என்று கருதினான் போலும் சங்கிலி. 16ம் நூற்றாண்டில் மேல் நாட்டிலும் கூட தங்கள் மதக் கொள்கையுடன் மாறுபட்டவர்களையெல்லாம் மன்னர்கள் சிரச்சேதம் செய்வித்தனராம். எனவே நாட்டுப் பற்று ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இந்த அரசன் போர்த்துக்கேயரின் விரோதியானான். அவனது செயல் சிந்தனைக்குரியதே.

போர்த்துக்கேயர் பல முறை போர் தொடுத்துப் பணியவைக்க முயன்றனர். தன் சொந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரமன்னன் அடி பணியாததைக் கண்ட பகைவர் நட்புமுறையைக் கையாண்டும் பார்த்தனர். அதுவும் பலனளிக்கவில்லை. திரும்பவும் போர் தொடுத்தனர் போர்த்துக்கேயர். தன்மானத் தமிழ் மன்னனான சங்கிலி தன்னாலான மட்டும் எதிர்த்தான். நல்லூர், கோப்பாய் முதலியவிடங்களில் கடும் யுத்தம் நடந்தது. இரு கட்சியும் வெற்றி கண்டில. எனவே ஓர் உடன்படிக்கை உதயமாயிற்று. அதன் பிரகாரம் சங்கிலியன் மகன் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டான். மன்னாதி மன்னன் மாவீரன் சங்கிலி வேந்தனும் இறுதிச் சொட்டு இரத்தம் இருக்குமட்டும் போராடி மடிய வேண்டியதாயிற்று. இவனுடன் யாழ்ப்பாண அரசும் அஸ்தமனமாயிற்று. இடப அல்லது நந்திக்கொடி இறக்கப்பட்டு அன்னியக் கொடி ஆடத் தொடங்கியது. தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலை சிறந்த வீரன் என்று வர்ணிக்கப்படுகிறான் சங்கிலி. தன் மகனிலும் பார்க்கத் தாய் நாட்டின் விடுதலையே பெரிதென எண்ணிய வீரன் தான் சங்கிலி. யாழ்ப்பாண மக்களின் மனதினின்றும் என்றுமே மறையாத மன்னன் தான் சங்கிலி. மாபெரும் விரோதிகளையெல்லாம் முதிகிட்டோடச் செய்து தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக 44 வருடம் பாடுபட்டவன் தான் சங்கிலி. அவன் ஆண்ட நல்லூர் எங்கே? அவன் அடியடியாக வந்த வீரபரம்பரை எங்கே? சிந்தியுங்கள்.


(எழுதியவர்: அராலியூர் வெ. சு. நடராசா - எழுச்சி - 10.07.1965)